திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பழனிவேல் பாத்திரக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார் அந்தக் கடையின் முதலாளி பழனிவேல். பெரிய மீசையுடனும், கண்டிப்பான முகத்துடனும் இருந்தார்.
சிறிய கடையாக இருந்தாலும் தரமான பாத்திரங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு பெயர் பெற்றது பழனிவேல் பாத்திரக்கடை. நான்கு பேர் வேலைக்கு இருந்தனர். அனைத்து வகையான ஸ்டீல் பாத்திரங்களும் அவரது கடையில் கிடைக்கும்.
அன்று கடைக்கு வேலை செய்பவர்களில் இருவர் விடுப்பு எடுத்திருக்க, கூட்டமும் சற்று கூடுதலாக இருக்க, கல்யாண சீர்வரிசை சாமான்கள் வாங்க என்று வேறு ஆட்கள் வந்திருக்க, ‘அவன் சும்மா தானே இருக்கான். அவனை கூப்பிடுவோம்’ என நினைத்த பழனிவேல் வீட்டிற்கு கைப்பேசி மூலம் அழைத்தார்.
அழைப்பை ஏற்ற தன் மனைவி சந்திராவிடம் “என்ன பண்றான் உன் புள்ள?” எனக் கேட்டார் பழனிவேல்.
“ம்… இன்னும் எந்திரிக்கல”என்றார் சந்திரா.
“ஏன் துரைக்கு இன்னும் விடியலையா? நைட் அடிச்ச சரக்கு இன்னும் போதை தெளியலையா? தண்டச்சோறு… தண்டச்சோறு… எழுப்புடி அவனை முதல்ல” என சத்தம் போட்டார் பழனிவேல்.
சந்திராவுக்கு ஆத்திரமாக வர, “இப்படி கத்தாம விஷயத்தை சொல்லுங்க” என்றார்.
“அவன சொன்னா உனக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்திடுமே… சரி… சரி… அவனை எழுப்பி கடைக்கு வர சொல்லு. வேலையிருக்கு” என்றார் பழனிவேல்.
“சொல்றேன், வருவானான்னு தெரியாது” என்றார் சந்திரா.
“ஏன் துரை வேற எங்கேயும் வேலைக்கு போறாரா? சும்மா தின்னு தின்னு உடம்பை வளர்த்து வச்சிருக்கான்தானே… எல்லாம் இந்த கடையில வர்ற வருமானத்துலதான். மரியாதையா அவன வர சொல்லு” என்றவர் தன் கைப்பேசியை வைத்துவிட்டார்.
பழனிவேல் சந்திரா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் விஜயேந்திரன். காவல் துறையில் துணை ஆய்வாளராக வேலையில் இருக்கிறான். அவனது மனைவி அம்பிகா. பிள்ளைகள் பார்த்திபன், சம்யுக்தா முறையே 4 மற்றும் 2 வகுப்புகளில் படிக்கின்றனர். விஜய் தந்தை சொல் மீறாத பிள்ளை. பழனிவேலின் ஆசைப்படியே அரசு உத்தியோகத்தில் அமர்ந்து விட்டான்.
விஜய்க்கும் 10 வயது இளையவன், பழனிவேலின் இளையமகன் ஆதித்ய வேந்தன். ராஜா மாதிரி மகன்கள் இருக்க வேண்டும் என்று பழனிவேல்தான் தன் பிள்ளைகளுக்கு மன்னர்களின் பெயர் வைத்தார். தன்னுடைய பேரப் பிள்ளைகளுக்கும் அவரே பெயர் வைத்தார்.
பழனிவேலின் தம்பி மாணிக்கவேல் கரூரில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். தம்பியின் மனைவி கல்பனாவும் அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். பெரியவன் ஆனந்த், வனத்துறை அதிகாரி. இளையவன் கார்த்திக், மின்சார வாரியத்தில் நல்ல பணியில் இருக்கிறான். கல்பனாவின் வீட்டில் அனைவருமே அரசுப் பணியில்தான் இருக்கின்றனர்.
பழனிவேலின் தங்கை புவனேஸ்வரியின் கணவர் பத்திரப் பதிவாளர். தனக்கு என்னதான் பாத்திரக் கடையின் மூலமாக நல்ல வருமானம் வந்த போதும் சொந்தங்களுக்கு மத்தியில் தன் தம்பி குடும்பத்திற்கும், தங்கை குடும்பத்திற்கும் இருக்கும் மரியாதை தனக்கு இல்லாதது போல பழனிவேலுக்கு ஒரு எண்ணம்.
எப்படியாவது தன்னுடைய இரு மகன்களையும் அரசு உத்தியோகத்தில் அமர்த்தி விட வேண்டும் என்பது பழனிவேலின் வாழ்நாள் கனவு. பிள்ளைகளின் சிறுவயதிலிருந்தே ‘ படிப்பு… படிப்பு… அரசு உத்தியோகம்… அரசு உத்தியோகம்…’ என்று மந்திரம் போல ஜெபித்தே வளர்த்து வந்தார்.
படிப்பில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் நிறைவே இருக்காது பழனிவேலுக்கு. அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பார். நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் வாய்விட்டு பாராட்ட மாட்டார். “இன்னும் நிறைய மார்க் வாங்கணும்” என்றுதான் சொல்வார்.
பெரியவன் விஜயேந்திரன் தந்தை சொல் மீறாது அவரது கனவை நினைவாக்கி வைத்தான். இளையவன் ஆதித்திய வேந்தனுக்கோ சிறு வயதிலிருந்தே தன் தந்தையின் அதிகப்படியான கண்டிப்பு பிடிக்காது. ஆனாலும் மந்தம் என்று இல்லாது ஓரளவுக்கு நன்றாகவே படித்தான்.
பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் குறைவு எனக்கூறி மீண்டும் அவனைத் தேர்வு எழுத வைத்தார் பழனிவேல். முன்பு பெற்ற மதிப்பெண்களில் 100 மதிப்பெண்கள் குறைவாகவே பெற்று தேர்ச்சி பெற்றான் ஆதித்ய வேந்தன்.
‘மீண்டும் எழுத வைத்தால் என்ன?’ என பழனிவேல் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, “திருப்பி எழுத சொன்னா இந்த முறை ஃபெயில் ஆயிடுவேன் பரவாயில்லையா?” என தன் அன்னையிடம் ஆதி கேட்க, பயந்துபோன பழனிவேல் அவனை ஒரு கலைக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.
கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கல்ச்சுரல்ஸ் என்று கோயம்புத்தூர் சென்றான். சென்ற இடத்தில் ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து பிரச்சனையாகி விட்டது. கல்லூரிக்கு திரும்ப வந்ததும் ஆதியின் தந்தையை அழைத்து விஷயத்தைக் கூற, அனைவர் முன்னிலையிலும் தன் பெல்ட்டால் விளாசிவிட்டார் பழனிவேல்.
அன்றுதான் முதன் முதலில் குடிக்க ஆரம்பித்தான் ஆதித்ய வேந்தன். தன் தந்தை கோபப்பட்டு கத்த, அவரை கோபப்படுத்த வேண்டும் என்றே குடிப்பதை தொடர்ந்தான். அவர் எது சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டி செய்தான். படிப்பிலும் அரியர்ஸ் வைத்தான். மீண்டும் எழுத முயற்சிக்கவே இல்லை. இப்படியாக எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக தன் நண்பர்களுடன் ஊரை சுற்றிக் கொண்டிருக்கிறான் ஆதி.
சந்திரா சென்று ஆதியை எழுப்ப “ஏன் சந்திரா, ராசா நேத்து ராத்திரி லேட்டாதான வந்தான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமே” என்றார் சந்திராவின் மாமியாரும், பழனிவேலின் அன்னையுமான விசாலம்.
அவரை முறைத்த சந்திரா, “எல்லாம் நீங்க கொடுக்கிற இடம்தான், இவன் இப்படி கெட்டுப் போறான்” என்றார்.
“என் ராசா நல்லாதான் இருந்தான். உன் புருஷன் தான் அவனை திட்டித் திட்டியே இப்படி ஆக்கிட்டான். கூறு கெட்டவன்” என தன்னுடைய மகனை திட்டினார் விசாலம்.
விஜய் ஸ்டேஷன் சென்றிருக்க, பிள்ளைகளும் பள்ளி சென்றிருக்க இருவரது உரையாடலை கேட்டுக்கொண்டே அம்பிகா அங்கு வந்தாள்.
“காலையிலேயே என்ன காரசாரமாகப் பேசிகிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள் அம்பிகா. சந்திரா விஷயத்தைக் கூற,
“சரி தானே அத்தை, ஆதி நைட் ரொம்ப லேட்டா தானே வந்தான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என அம்பிகாவும் சொன்னாள்.
“ம்… உன் மாமா கிட்ட ஃபோன் பண்ணி நீயே சொல்லிடேன்” என்றார் சந்திரா.
“ஐயோ நானா…?” என பயந்த அம்பிகா, “செவனேன்னு ஆதி வீட்டுல இல்லைன்னு சொல்லிடுவோமா?” என கேட்டாள்.
“ஏன் பொய் சொல்றீங்க?” என கேட்டவாறே எழுந்து வந்தான் ஆதித்ய வேந்தன்.
தலை கொள்ளா முடியுடனும், முகம் முழுக்க தாடியுடனும், சிவந்த கண்களுடனும் நின்றிருந்த ஆதியை பார்த்த சந்திரா, “ நீ திருந்தவே மாட்டியாடா? ஏண்டா இப்படி உடம்ப கெடுத்துக்குற?” எனக் கேட்டார்.
“நான் என்னமா தப்பு செய்றேன், திருந்த?” என தன் அன்னையிடம் கேட்டவன், “அண்ணி தலை பாரமா இருக்கு. ஏதாவது குடிக்க சூடா எடுத்துட்டு வா” என்றான்.
‘இப்படி குடிச்சீன்னா உடம்பு என்னத்துக்கு ஆகும்டா?” என சந்திரா வாஞ்சையாக கேட்க, அவருக்கு பதில் கூறாமல் “என்ன சாலா… என்ன காலையிலேயே பஞ்சாயத்து…?’ என தன் பாட்டியிடம் கேட்டான் ஆதி.
“ம்… உங்கப்பனுக்கு நீ கடைக்கு போகணுமாம்” என விசாலம் கூற,
“மீசை கூப்பிட்டா நான் போயிடுவேனா? வர முடியாதுன்னு சொல்லு” என்றான் ஆதி. மீசை என்பது தன் தந்தைக்கு ஆதி வைத்த பட்டப் பெயர்.
“ஏதோ வேலை இருக்க போய்தானே உன்னை கூப்பிடுறார். போயேண்டா” என சந்திரா கூறினார்.
“முடியாதும்மா. அந்தாளு சொல்லி எதையும் நான் செய்யமாட்டேன்” என்றான்.
அதற்குள் அம்பிகா சூடாக தேநீர் எடுத்துவர வாங்கி குடித்தவன், “ஏன் அண்ணி உன் புருஷனுக்கு போடுற மாதிரி போட்டுருக்க, ஸ்ட்ராங்காவே இல்லை” என்றான்.
“இல்லையேடா, நல்லா டீ தூள் போட்டு கொதிக்கவிட்டேனேடா” என அம்பிகா கூற,
“இங்க காட்டு நான் பார்க்கிறேன்” என விசாலம் கூற, தலையிலடித்துக் கொண்டார் சந்திரா.
ஆதி எழுந்து வந்ததைப் பார்த்த டாலி ஓடிவந்து அவன் மீது தாவியது. அன்பாக டாலியை தடவிக் கொடுத்தவன் “அம்மா நீ ஒழுங்கா கவனிக்கிறியா இல்லையா? டாலி இளைச்சி போயிட்டே இருக்கு. நான் போய் நல்லி எலும்பு வாங்கிட்டு வரேன். டாலிக்கு சூப்பு வச்சு கொடு” என்றான்.
“டேய் உன் உடம்ப பாருடான்னா நீ நாய பாக்குறியா?” என்றார் சந்திரா.
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? என் டாலியை நாய்ன்னு சொல்லாதன்னு…” என அவரைப் பார்த்து முறைக்க, அங்கிருந்து நகர்ந்தார் சந்திரா.
டாலி ஆதியின் வளர்ப்பு நாய். அவன் 12 ஆம் வகுப்பு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கும் பொழுது மழையில் ஒரு குட்டி நாய், குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க தூக்கிக் கொண்டு வந்து விட்டான். வீட்டிலேயே தான் வைத்து வளர்க்க வேண்டும் என்று அடம்பிடிக்க, பழனிவேல் முடியவே முடியாது என்று மறுத்தார். ஆதி உண்ணாவிரதம் இருக்க, விசாலம் சிபாரிசு செய்து டாலியை வளர்க்க வைத்தார். அன்றிலிருந்து குடும்பத்தில் ஒருவராகி விட்டது டாலி.
ஆதி இப்படித்தான். யாரையாவது பிடித்து விட்டது என்றால் அவர்களை அன்பாலேயே குளிப்பாட்டி விடுவான். பிடிக்கவில்லை என்றால் அவர்களை ஒரு வழியாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்.
விசாலத்திற்கு தன் இறந்துபோன கணவர் ராஜவேலின் சாயலில் ஆதி இருப்பதால் அவன் பிறந்ததிலிருந்தே ஆதி மீது அலாதி பிரியம். வளர வளர ஆதியும் மற்ற பேரப் பிள்ளைகளை விட விசாலத்தின் மீது அதிக அன்புடன் பழக எப்பொழுதுமே விசாலத்திற்கு ஆதி என்றால் ஒரு படி மேல்தான்.
ஆதிக்கு பதினைந்து வயது இருக்கும் பொழுதுதான் விஜய்க்கும் அம்பிகாவுக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது அம்பிகாவை ஆதியின் தூரத்து சொந்தத்தில் அத்தை ஒருவர், “பொண்ணு சுமார்தான் பையனுக்கு ஏத்த மாதிரி இல்லையே” என கூறிவிட வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிட்டான் ஆதி.
அத்தையை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டான். அன்றிலிருந்து அம்பிகாவுக்கும் ஆதியை மிகவும் பிடித்துவிட்டது. அம்பிகாவுக்கு கூட பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. வீட்டிற்கு ஒரே பெண். அம்பிகாவும் ஆதியும் அக்கா தம்பி போலவே பழகலாயினர்.
ஆதி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், விஜய் ஈரோட்டில் பணியில் இருந்தான். அம்பிகாவும் அவனுடன் இருந்ததால், ஆதி தடம் மாறிப் போகும் பொழுது அம்பிகாவால் ஒன்றும் செய்ய இயலாது போனது.
ஆதியை விட பத்து வயது மூத்தவன் விஜய். அதனாலேயே சிறுவயதிலிருந்தே ஆதியுடன் சண்டை எதுவும் போட மாட்டான். அவனிடம் மிகவும் அன்பாகத்தான் நடந்து கொள்வான். விஜய்யின் பிள்ளைகளுக்கு கூட ஆதி என்றால் மிகவும் பிடிக்கும். இப்படி எல்லார் மனதையும் கவர்ந்த ஆதியை கண்டாலே ஆகாது பழனிவேலுக்கு.
இரவில் வீட்டிற்கு வந்த பழனிவேல், “ தண்டச்சோறு இன்னைக்கு எங்க அலையிதுன்னு தெரியல. தறுதலை… தறுதலை…” என திட்டி கொண்டிருக்க, உள்ளே நுழைந்தான் ஆதி. சந்திரா சாப்பாடு எடுத்துவைக்க சாப்பிட அமர்ந்தான்.
“உப்பை கொஞ்சம் தூக்கலா போடு. அப்பவாவது சூடு சொரணை வருதா பார்க்கலாம்” என பழனிவேல் நக்கலாக கூற,
“குடிக்கிற கழிசடையை எல்லாம் திருத்தறதுதான் கட்டிக்கிட்டு வர்ற பொண்ணுங்களுக்கு வேலையா? இவனுக்கு கல்யாணம் ஒன்னுதான் கேடு. ஒரு பொண்ணோட வாழ்க்கையை நானே கெடுக்க மாட்டேன்” என கோபமாக கூறிய பழனிவேலு எழுந்து சென்றுவிட்டார்.
‘ம்… ராசாவுக்கு ஏத்த ராணி எங்க இருக்காளோ?’ என நினைத்து பெருமூச்சு விட்டார் விசாலம்.
ஆதி தன்னுடைய அறையில் போதையின் பிடியில் “நங்கை… தமிழ் நங்கை…” என உளறிக் கொண்டிருந்தான்.