அத்தியாயம் 9
தினசரி வழமை போல மறுநாள் ரங்காவும் மஹதியும் ரேவா அலுவலகம் சென்றனர். முடிந்தவரை ஓர் அறையில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்த்த மஹதி, ரங்கராஜனோடு மொத்த அலுவலகமும் வலம் வருவாள். அனைத்து தொழிலாளர்களும் தனக்கு ஓரளவாவது பரிச்சயமாக வேண்டுமென்பது ஒரு புறம் இருக்க, அப்பாவின் அறைக்கு சென்றால், அவரது நினைவு அலையெனத் தாக்குமே?
சுந்தருக்கோ, ரங்காவுக்கோ இப்படியொரு தொல்லை இல்லை. இருவருக்குமே அவர்களது துறையின் அருகே அவர்களுக்கென தனித்தனி அலுவலக அறைகள் இருந்தது.
மஹதிக்கு அப்படியில்லை, எனவே அப்பாவை நினையாமல் இருக்க இப்படி ஒரு உபாயத்தை கையாண்டாள். ஆனாலும் எத்தனை மணி நேரம் இப்படி அலுவலகத்தை சுற்றிக்கொண்டே இருக்கமுடியும்?
எப்படியாயினும் மதியம் நெருங்குகையில் அங்கே சென்றுதான் ஆகவேண்டும். அப்பாவின் நாற்காலியை காலியாக விட்டு, அதனருகே இவளுக்காக ஒரு மேஜையும் சுழல் நாற்காலியும் போடச்சொல்லி இருந்தாள். ரங்காவும் மஹதியுடன் சென்று மதிய உணவு இடைவேளை வரை சிறிது நேரம் இருந்த பின்னர், அவனது அலுவல்களை கவனிக்கச் செல்வான்.
ஆனால் இன்றோ ரேவா-வின் இயந்திரம் தேவையென்று கேட்ட ஒரு நிறுவனத்தோடு, ரங்கராஜன் கூகிள் மீட்டில் கலந்துரையாடிக் கொண்டிருந்தான் எனவே அவனை விட்டு மஹதி, நிறுவனத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்த இவளது அறைக்குச் சென்றாள்.
சென்ற சில நிமிடங்களிலேயே மஹதியை ஒரு வித வெறுமை ஆக்கிரமிப்பதை அவளால் உணர முடிந்தது. அதை போக்க என்ன செய்வது என்பதறியாமல் அவளது கணினியை உயிர்ப்பித்த நேரம், “குட் மார்னிங் மேம்”, என்ற உற்சாகமான ஆஷுதோஷின் குரல் கேட்டது.
மனம் சட்டென இலகுவாக, அவனது உற்சாகம் மஹதிக்கும் தொற்றியது. நிமிர்த்து வாசலைப் பார்த்தவளுக்கு, அங்கே யாரையும் காணாமல் மூடிய கதவு மூடியபடி இருக்க குழப்பமாக பார்த்தாள். “மேம்,இங்க சைட்-ல பாருங்க”,என்று சொல்லியவாறே, பக்க வாட்டில் இருந்த கதவை தனது முழங்கையால் திறந்துகொண்டு உள்ளே வந்தான் ஆஷுதோஷ்.
ஒரு கையில் பல கோப்புகளும், மற்றொரு கையில் மக் என சொல்லப்படும் பெரிய சைஸ் கோப்பையும் இருந்தது.
அதை மஹதியின் டேபிளில் வைத்து, ”வெல்கம் ட்ரின்க் டு மை பாஸ்”,என்றான்.
“ஹஹ, தேங்க்யூ”
“சொல்லுங்க மேம், எப்படியிருக்கு ரேவா?”
“ப்ரம்மாண்டமா இருக்கு. கொஞ்சம் நெர்வஸா வும்.”
“அதெல்லாம் போகப்போக சரியாயிடும் மேம்”
“எங்க நாலஞ்சு நாளா ஆளைக் காணோம்?”
“ரங்கா சார் சொல்லலியா?அவர்க்கு தெரியுமே?”,என்று சிலநொடி தாமதித்தவன், புருவம் சுருக்கி, “ஒருவேளை சொல்ற நிலைமைல அவர் இல்லியோ? மறுபடியும்..?”, என்று கேள்வியாக பார்த்தான்.
“சேச்சே அப்படியெல்லாமில்ல. நானும் அண்ணாவும் வேற பேசிட்டு இருந்தோம் டிபார்ட்மென்ட்ஸ் எல்லாமும் பாத்தோம். பர்டிகுலரா அவனோட டிபார்ட்மென்ட் பத்தி சொல்லிட்டு இருந்தான். வேற எங்கயும் வெளிய போகல”
“நிஜமாவே ராஜ் ஸாரால பண்ண முடியாத விஷயம்.நீங்க சாதிச்சு இருக்கீங்க மேம்”
“ஹ்ம்ம். அதான் யோசிக்கிறேன்.நா இருக்கிற வரை ஓகே, நா போயிட்டா மறுபடியும் அவனோட பழைய லைஃப் ஸ்டைலுக்கே ரங்கண்ணா போயிடுவானோன்னு பயமா இருக்கு”
“போயிட்டா…ன்னா? எங்க போகப்போறீங்க?”
“என் ஸ்டடீஸ் முடிக்க லண்டன் போயிட்டா.. என்ன பண்ணுவான்னு யோசனை பண்றேன்”
“ஓ!”, என்று யோசனையானவன், “அப்ப இங்க..?”, என்று இழுத்தான்.
“கோர்ஸ் முடிக்க ஜஸ்ட் ஒரு ரெண்டு மாசம்தான் ஆகும். எல்லாமே அல்மோஸ்ட் முடிஞ்சா மாதிரிதான். சோ அது வரைக்கும் சுந்தரண்ணாவையும் ரங்கண்ணாவையும் கம்பெனிய பாத்துக்க சொல்லலாமாங்கிற ஐடியா இருக்கு”,என்ற மஹதி ஆஷுவைப் பார்த்து, “நீங்க என்ன சொல்லறீங்க மிஸ்டர் ஆஷுதோஷ்?”,என்று அவனது அபிப்ராயம் கேட்டாள்.
இதற்கு பதில் சொல்வதற்கு முழுமையாக ஒரு நிமிடம் எடுத்துக் கொண்டான்ஆஷு. அப்போது அவன் முகத்தில் கலவையான உணர்வுகள் வந்து போயின.
“ஹ்ம்ம். என்ன சொல்றது..? சுந்தர் சாரை நீங்க கணக்குல சேர்க்காதீங்க.ஏன்னா, இன்னும் ஒரு மாசத்துக்கு அவரோட பட ரிலீஸ் விஷயமா அவர் ரொம்ப பிசியா இருப்பார். சோ முக்கியமான டெசிஷன் எடுக்கணும்னா மட்டும்தான் ஆபிஸ் வர்றதா சொல்லிட்டு இருந்தார்”
“?”,அப்படியா என்பதுபோல மஹதி பார்க்க,
‘ஆம்’ என்று உறுதியாக தலையசைத்து ஆமோத்தித்தவன், தொடர்ந்து, ”நெக்ஸ்ட் ரங்கா.. அவரைப் பத்தி? மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கறா மாதிரி..”, அப்போது மஹதி குறுக்கே எதோ சொல்ல வர.., கையமர்த்தி தடுத்த ஆஷு, ”இருங்க இருங்க, முடிச்சிடறேன். அவர் உண்மையா திருந்திட்டாலுமே இங்க எல்லா டிபார்ட்மென்ட்ஸ் பத்தியும் அவர்க்கு தெரியுமான்னு கேட்டா.. ப்ச். இல்லன்னு தான் சொல்ல முடியும்”, என்றான்.
இதைக் கேட்டு மஹதி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். “சுந்தரண்ணா என்னவோ அவங்க பட ரிலீஸ்-ல ப்ராப்ளம் இருக்குனு சொன்னாங்களே?”
“எஸ்.. கொஞ்சம் பணம் தேவைப்பட்டது, நா லோன் ரெடி பண்ணி குடுத்தேன்.“
“லோனா?”