உறக்கம் தெளிந்து மஹதி எழும்போது நேரம் இரவு எட்டு மணி. விழித்ததும் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் முழித்தாள். கோவையில் தனது தந்தையின் வீட்டில் இருக்கிறோம் என்று உணர அவளுக்கு சில கணங்கள் ஆயின.
‘என்னை கொஞ்சம் கவனி’,என்று வயிறு சத்தம் போட, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். மாடியில் இருந்து பார்க்க, ஹாலில் பத்திருபது பேர் பேசிக்கொண்டிருந்தனர். பூரிக்காவின் குரலும் அதில் இருந்தது. அண்ணியை காணோம் என்று மனது குறிப்பெடுத்துக் கொண்டது.
செஃப்-கு இன்டெர்க்காமில் அழைத்து, உணவு வேண்டுமென்று சொல்ல நினைத்தவள், வேண்டாம் நேரே போய் அங்கே என்ன தயாராக இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்வோம் என்று நினைத்து கீழே இறங்கினாள்.
இவள் வருவதைப் கவனித்து யாரோ பூர்ணாவிடம் சொல்ல, “மஹி.. இங்க வா”, என்று இவளை அங்கே அழைத்தாள்.
அங்கே சென்று மரியாதை நிமித்தம் உறவினர்களுடன் சில வார்த்தைகள் பேசி, மஹதி மெல்ல நழுவினாள். இவள் கீழே வந்தது தெரிந்தோ என்னமோ, சுந்தர் அழைத்திருந்தான்.
“ப்ச். வா ன்னு சொன்னா வரப்போறேன், இதுல என்ன ஃபார்மாலிட்டி?”
‘இவன் இன்னும் மாறவேயில்லை’,என்று நினைத்துக்கொண்ட மஹதி, ‘ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் விட்டிருந்தால் அப்பா இன்னும் நிம்மதியாக இறந்திருப்பார். ஹ்ம்’, “சரிடா அண்ணா வா”, என்று சொல்லிவிட்டு டைனிங் ஹால் சென்றாள்.
மஹதி வருவதைக் கண்டதும், சமையலறையில் வேலையாக இருந்த ஓரிருவர் எட்டிப் பார்த்தனர். அவள் உணவு மேஜையில் அமர்ந்து கொண்டதும், மத்திம வயதுடைய ஒருவர் அருகே வந்து, “மேம்..?”, என்று கேட்டார்.
மேஜையில் பரத்தியிருந்த கேசரோல்களில் நூடில்ஸ், நான், இடியாப்பம், புலாவ் என்று இருந்தது. கூட வெஞ்சினங்களும்* வகை வகையாக இருந்தது. சாதம் கூட ஹாட் பாக்கின் கண்ணாடி மூடி வழியே தென்பட்டது.
உணவு பரிமாறுவதற்காக நின்ற அம்மனிதரைப் பார்த்து, “அண்ணா வருவாங்க”, என்று சொல்லி, அவன் வரும்வரை தான் காத்திருக்க போவதை குறிப்பறிவித்து, “கெஸ்ட் எல்லாரும் சாப்டாங்களா?”, என்று கேட்டாள்.
“ஹாய்”, மஹதிக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து மேஜையில் அவனுக்கு எதிரே கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பீங்கான் தட்டத்தை திருப்பி வைத்தான்.
“ஹாய்ண்ணா”,
அங்கிருந்த பரிசாரகரைப் பார்த்து, “தாணு. தேங்க்ஸ். இனிமே நாங்க பாத்துக்கறோம்”, என்று ரங்கா சொன்னதும்,அவர் நகர்ந்து விட்டார்.
மளமளவென்று தனக்கும் தங்கைக்குமாக இருவரின் தட்டிலும் உணவு எடுத்து வைத்தான் ரங்கா. குறிப்பாக தங்கைக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்தவனாக பரிமாறினான்.
ரங்காவின் செயல்களில் மலரும் நினைவுகளில் மூழ்கியவளாக மெல்லிய பெருமூச்சுவிட்டு, “போதும்”, என்று சொன்ன மஹதி, கையில் ஒரு விள்ளல் எடுத்து, “ நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு ஒரு மூணு வருஷம் இருக்குமா?”, என்று கேட்டாள்.
சிறு முறுவலுடன், “அதுக்கு மேலேயே இருக்கும்”, என்றான் ரங்கராஜன். பின்னர் தங்கையைப் பார்ப்பதை தவிர்த்து, “அன்னிக்கு அப்பாவும் நம்ம கூட இருந்தார்”, என்றான் அமைதியாக.
அன்றைய நினைவில் மஹதி, ரங்கா இருவரும் சில நொடி ஏதும் பேசாமல் இருந்தனர். துக்கத்தை அழுது கரைப்பது ஒரு வகை என்றால் இப்படி மௌனமாய் மருகுவதும் அதன் வெளிப்பாடே.
சற்று நேரம் பொறுத்து, “சுந்தரண்ணாக்கு அப்பாவோட என்ன பிரச்சனை?”, மஹதி கேட்டாள்.
“அப்பா வில் எழுதினது உனக்கு தெரியுமா?”, என ரங்கராஜன் கேட்டான்.
புருவம் உயர்த்தி, “வில்-ல்லா? யூ மீன் உயில்?”, கேட்டவள் “ம்ஹூம். தெரியாது.”
“அதுதான் ப்ராபளம்”
“ம்ப்ச். அவர் சம்பாதிச்சது, அவர் இஷ்டம். யாருக்கு குடுத்தா சுந்தரண்ணாக்கு என்ன?”, என்றாள் மஹதி.
இது மஹதிக்கு புதிய செய்தி, கொஞ்சம் அதிர்ச்சியானதும் கூட. “ஓஹ்!, ஆனா ஏன்?”, நம்ப முடியாத பாவனையில் கேட்டவள், “ஆனா அண்ணா தான ரொம்ப நாளா அப்பா கூடவே பிசினெஸ் பாக்கறாங்க?”, என்று குழம்பினாள்.
“ஹ்ம். நம்ம நாலு பேருக்கும் எப்பவுமே ஈகுவலா 10% அப்படித்தான் ஓனர்ஷிப் கொடுப்பார். ஆனா, அவரோட வில் படி கம்பெனில அவரோட ஷேர்ஸ் எல்லாம் உனக்கு மட்டுமே தான்னு எழுதி வச்சிருக்கார்.”
“ஏன் அப்படி பண்ணினார்? அப்பா அப்படி பார்ஷியாலிட்டி பாக்கற ஆள் கிடையாதே? அதுவுமில்லாம இப்படி எழுதி வச்சா நமக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வரும்னு கூடவா அவருக்கு தெரியாது?”
மேலும் யோசிக்க திராணியற்றவளாக, “ரங்கண்ணா.. ஹி ஈஸ் நோ மோர்-ங்கிறதையே என்னால ஜீரணிக்க முடில. எங்கயோ முக்கியமான மீட்டிங்-ல இருக்கார். இப்போதைக்கு காண்டாக்ட் பண்ண முடியாம பிளைட் மோட்-க்கு போயிருக்கார்ன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன். அப்படியிருக்கும்போது இதெல்லாம் என்ன?”, என்று சலித்தாள்.
தங்கையை ஆதூரமாகப் பார்த்தான் ரங்கா. இதற்கே குழம்பி நிற்கிறாளே? மேற்கொண்டு சொன்னால்…?, என்று எண்ணி உணவில் கவனமானான்.
“அதான் சுந்தரண்ணா போன்-ல பேசும்போது அப்படி சொன்னாங்களா? நீ இருக்கும்போது நா எதுக்கு ஒப்புக்கு சப்பாணியா.. ப்ளா ப்ளா.. ன்னு?”
“ஹ்ம்ம். அவனுக்கு அப்பா மேல கோபம், வில் பத்தி கேள்விப்பட்டதிலேர்ந்து அவரோட கிளாஷ்.”
“அண்ணாக்கு எப்படி தெரியும்?”
“நம்ம லாயரோட ஜூனியர் இவனுக்கு பிரெண்ட். பெஸ்டீ-ன்னு சொல்ற அளவு க்ளோஸ். சோ.. விஷயம் இவன் காதுக்கு வந்துடுச்சு”
“ம்ம். சரி சுந்தரண்ணா உன்கிட்ட என்ன கேட்டாங்க? நீ எதை மாட்டேன்னு சொன்ன?”
“அப்பாகிட்ட சண்டை போடு-ன்னு சொன்னான். எனக்கு பிடிக்கல, ஏற்கனவே நம்ம எல்லாருக்கும் கம்பெனில ஷேர் இருக்குதானே? எது எப்படி இருந்தாலும் என் சீட்டை எவனும் தொட முடியாது. ஏன்னா மார்க்கெட்டிங் சீப்ங்கிற முறைல எங்க யாரை தட்டினா வேலையாகும்னு எனக்குத்தான் தெரியும். தவிர, அப்பாக்கு தெரியும், யாரை எங்க வைக்கறதுன்னு”, என்றான் ரங்கராஜன்.
அவன் பேச்சின் கடைசி வார்த்தையை பிடித்த தங்கை, “அப்பா மேல அவ்ளோ நம்பிக்கை இருக்கும்போது, அவர் வேண்டாம்னு சொன்ன பொண்ணை தூக்கி போட வேண்டியதுதானே? இன்னும் ஏன் அவங்களையே நினைச்சு குடிச்சு உடம்பை கெடுத்துக்கற?”, என்று அவனது சொந்த விஷயத்தைப் பேசினாள்.
தங்கையை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் கண்டனம் இருந்தது. “மஹி, ஒன்னு தெரிஞ்சிக்கோ. ஸ்வப்னாவை அப்பா வேண்டாம்னு சொல்லல, அவதான் நா வேண்டாம்னு போயிட்டா”, என்றவன் முகம் தெளிவில்லாமல் போக, “சரி விடு. அவளை பத்தி இப்ப எதுக்கு?”, என்று வெறுப்பாக சொன்னான்.
“ஓகே லீவ் இட்”, என்றவள்..”அப்பாவோட ஷேர்ஸ் எனக்கு வர்றதுல அண்ணாக்கு என்ன வருத்தம்?
“கம்பெனியை பொறுத்தவரை நானு சுந்தர் நாங்க ரெண்டு பேரும் எந்த முடிவெடுத்தாலும் அப்பாதான் ஃபைனல் பண்ணனும். இனிமே அப்பா இடத்துல நீ-ங்கும்போது..? ஆபிஸ்ல மத்தவங்க என்ன நினைப்பாங்க-ன்னு தோணும். சொசைட்டி-ல எங்க ரெப்போ என்ன ஆகும்? அதுவுமில்லாம எல்லா ஜெனரல் மீட்டிங்-ல நீ அப்பா இடத்துல இருப்பங்கிறது கண்டிப்பா சுந்தரோட ஈகோவை ரொம்பவே டச் பண்ணும்”, என்ற ரங்கராஜன், தொடர்ந்து..
“எல்லாத்துக்கும் மேல திடீர்னு நீ எங்களைவிட ஐஞ்சு பங்கு பணக்காரியா ஆயிடுவ..”, என்று முறுவலித்தான்.
“ஓஹ்.. கம்..மான் அண்ணா, இப்போ என்னவோ நாம எல்லாம் பரம ஏழையா இருக்கிறா மாதிரி நீ பேசற? உனக்கு ஒன்னு தெரியுமா? முதன்முதல்ல என் அக்கவுண்ட்-ல செவன் ஃபிகர் பாத்தபோது, வாவ் ன்னு ஒரு த்ரில் வந்துச்சு. அந்த ஒரு மாசம் பூரா நாந்தான் ரிச்சி ரிச்-ன்னு ஒரு ஃபீல்-லோட சுத்திட்டு இருந்தேன். பிரெண்ட்ஸ் க்கு பார்ட்டி கூட வச்சேன்”, என்று சொன்னவள், “தென் அடுத்த மாசம்.. அதுக்கடுத்த மாசம்னு பேங்க் பாலன்ஸ் பாக்கும்போது ம்ச்.. அதுல இருக்கறதெல்லாம் நம்பர்ஸ்ன்னு ஆயிடுச்சு”, என தோளைக் குலுக்கினாள் மஹதி.
“எல்லாரும் உன்ன மாதிரி நினைக்க மாட்டாங்க மஹி, முக்கியமா சுந்தரண்ணா அண்ட் அவனோட..”,என்று இழுத்தவனை முடிக்க விடாமல் மஹதியின் குரல் தடுத்தது.
“அதெல்லாம் நா இங்க இருந்தாத்தானே? நா உங்க ரெண்டு பேருக்கும் என்னோட ஷேர்ஸ்-ஸை பிரிச்சு குடுத்துட்டா..?”, என மஹதி இலகுவாக சொல்ல..
அதில் முகம் சுருக்கிய ரங்கராஜன், “மஹி, இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்காத, பொறுமையா ஆற அமர யோசிச்சு எதுவா இருந்தாலும் செய். புரியுதா?, என்று அண்ணனாகக் கடிந்தான்.
ஆம். என்ன விபரம் என்றோ முழுமையாக தெரிந்து கொள்ளாமல் முடிவெடுப்பது தவறுதானே? என்று எண்ணிய மஹதி, “ம்ம். சரிண்ணா”, என்றாள். ஆனால், பிரச்சனையின் நூல் பிடிபட்டுவிட்டதென்று நினைத்தாள். ஆனால் அது புலிவாலாக நீளப்போகிறது என்பதையோ, இவளைப் பிடித்து தன் விருப்பத்திற்கு ஆட்டப்போகிறது என்பதையோ இவள் அறியாள்.
))))))))))))))
வெஞ்சினம்னு பதம் வந்த உடனே எனக்கு இந்த நேரிசை வெண்பா ஞாபகம் வந்தது. உபயம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
கஞ்சி குடியாளே கம்பஞ்சோ றுண்ணாளே
வெஞ்சினங்களன்றும் விரும்பாளே – நெஞ்சுதனில்
அஞ்சுதலை யரவாருக் (கு) ஆறுதலை யாவாளே
கஞ்சமுகக் காமாட்சி காண்.
பொருள் 1:
கஞ்சி அருந்த மாட்டாள்; கம்பஞ்சோறும் உண்ணாள்; காய்கறி முதலிய பதார்த்தங்களும் விரும்ப மாட்டாள்; உள்ளத்தில் (இறையின் மீது) அஞ்சுதல் (அச்சம்) கொண்ட மனிதர்களுக்கு ஆறுதலை அருள்வாள் (கஞ்சமுக) காஞ்சியில் உள்ள அன்னை காமாட்சி.
பொருள் 2:
கஞ்சிக்குடியாள் – காஞ்சிபுரத்தின் தலைவி;
கம்பஞ்சோறுன்னாள் – ஏகாம்பரநாதனுக்குப் படைத்த உணவை எடுத்துக்கொள்ள மாட்டாள், இவளுக்கென இருக்கும் கோவிலில் படைக்கப்படும் நிவேதனங்கள் மட்டுமே இவளது ஆகாரம். காஞ்சியில் காமாட்சியே அனைத்திற்கும் பிரதானம். அவளை சுற்றிக்கொண்டுதான் அனைத்து தெய்வங்களின் உற்சவங்களும், ஆராதனைகளும் நடைபெறும்.
வெஞ்சினங்கள் என்றும் விரும்பாள் – வெம்மையான சினம் கொள்வதில் என்றும் நாட்டமுடையவள் அல்லள்; காஞ்சித்தலைவி தயை ஸ்வரூபமானவள்; நமையாளும் உலகன்னை வேறு மாதிரி இருந்தால்தானே ஆச்சர்யம்?
நெஞ்சில் அஞ்சுதலை அரவார்க்கு ஆறுதலை யாவாள் – ஐந்து தலையுடைய சிவனை ( (தத்புருஷம், அகோரம், சத்யஜோதம், வாமதேவம், ஈசான்யம்) மனதில் வைத்து பூஜிக்கும் மாந்தருக்கு என்றும் ஆறுதலை அளிப்பவள். கணவனின் தொண்டர் தம் தொண்டரன்றோ?
கஞ்சமுக காமாட்சி – தாமரை போன்ற மலர்ந்த முகமுடைய காமாட்சி.