சுந்தரோ, அங்கே மறுகோடியில் சினிமா பிரபலங்களோடு பேசிகொண்டிருக்க, அவன் கையிலும் மதுக்கோப்பை. வீட்டில் பார்ட்டி என்று வந்துவிட்டால் இது ஒன்றும் புதிதல்லதான், ஏன் மாமனார் வரதராஜனே கூட குடிப்பார்தான். ஆனால், இரண்டு கால் கோப்பைகளுக்கு மேல் தொடக்கூட மாட்டார்.
“குடிக்க மாட்டேன்னு சொன்னா விடமாட்டாங்க மருமகளே, அவங்க கண்பார்வைக்கு நாம ட்ரின்க்ஸை சும்மா கைல வச்சிட்டு இருந்தாப் போதும். நீ கவலைப்படாத. எனக்கு என் அளவு தெரியும். ஆனா உன் புருஷன கண்ட்ரோல்ல வைக்க வேண்டியது உன் பொறுப்பு. ஏன்னா, அவனும் சின்னவனை மாதிரி ஆயிடக்கூடாதே?”, இப்படி வரதராஜனே பார்கவியிடம் சொல்லியிருக்கிறார்.
பார்கவிக்கு மஹதியின் கவலை பின்னுக்கு போய், கணவனைப் பற்றிய கவலை வர, அருகேயிருந்த பேரரை அழைத்து, மஹதியை கண்காமித்து, “மேம் ரொம்ப டிஸ்டப்டா இருக்காங்க. வெளியாளுங்க யாரையும் அவங்க கிட்ட அலோ பண்ணாதீங்க. ஓகே?”, என்றுவிட்டு அருகிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு, “குடிக்க சில்லுனு ஒரு லைம் ஜூஸ் கொண்டு வாங்க”, என்று ஆர்டர் செய்தவள் கிட்டத்தட்ட கால்மணி நேரம் தன் கணவனின் செய்கையையும் மஹதியின் நிலைப்பாடையும்  கவனித்தாள்.
கணவனை நோட்டமிட்டவளுக்கு அப்பாடா என்று இருந்தது. காரணம், குடி விஷயத்தில் சுந்தரும் அவனது அப்பாவைப்போலவே என்று பார்கவிக்குப் புரிந்தது. இவள் பார்த்த கால்மணி நேரத்தில் சுந்தரின் கையிலிருந்த கோப்பை காலியாகவுமில்லை, அதை அவன் கீழே வைக்கவுமில்லை.
இதில் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த பார்கவிக்கு மஹதி பற்றி யோசிக்க ஆரம்பித்தாள். தனியே அமர்ந்து என்னதான் யோசித்துக் கொண்டிருக்கிறாள்? போய் கேட்போமா என்றால் பயமாக இருக்கிறது. தன்னை விட சின்னவள்தான்.  ஆனாலும் உலக அறிவு என்று ஒன்று இருக்கிறதே?
இப்போது சுந்தரை அக்கும்பலிலிருந்து விடுவிக்க முடியாது என்பது புரிய, தம்பி முரளியோ, நண்பர்களோடு விருந்துண்ண சென்றவன்,  ‘சினிமா செல்கிறேன் நள்ளிரவு தாண்டித்தான் வருவேன்’ என்று அம்மாவிடம் போனில் தகவல் தந்ததும் பார்கவிக்கு தெரியுமாதலால், என்ன செய்வது என்பது தெரியாமல் கைபிசைந்தபடி மெல்ல உள்ளே சென்றாள்.
அங்கிருக்கும் ஒவ்வொருவரின் கைபேசியிலும் இருக்கும் காமெராவும் பார்கவியை பதட்டத்துக்குள்ளாக்கியது. யாரேனும் மஹி இப்படி கோப்பையோடு இருப்பதை படமெடுத்தால்..? என்ற பயம் தொற்றிக்கொள்ள கலக்கத்தோடு ஹாலுக்கு செல்லும் வழியை அடைந்தாள்.
பார்கவி அண்ணி அப்படி தயங்கி தயங்கி வருவதைப் பார்த்த ஆஷுதோஷ், உடன் பேசிக் கொண்டிருந்தவர்களிடம், “எக்ஸ்க்யூஸ்மி” என்று சொல்லிவிட்டு அவளருகே வந்தான்.
“அண்ணி..?”,என்று மெதுவாக விளிக்க…
“ஆங்..?”, என்று தூக்கிவாரிப்போட திரும்பிய பார்கவி, ஆஷுவைப் பார்த்து பதட்டம் தணிந்தவளாக,”ஆஷு?”, என்று சுற்றுமுற்றும் பார்த்து, “எதாவது முக்கியமான வேலையா இருக்கியா?”,என்று வேகமாகக் கேட்டாள்.
ஆஷு ரேவாவுக்கு உதிரி பாகங்களையும், பாஸ்ட்னர்ஸ் எனப்படும் போல்ட், நட், ஸ்க்ரூ வகையாறாக்கள் உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களின் தலைமை அதிகாரியோடுதான் சற்று நேரம் முன்புவரை பேசிக்கொண்டு இருந்தான். அதிமுக்கியம் என்று சொல்ல முடியாது ஆனால் வெட்டிப்பேச்சுமில்லை.
‘அது பரவால்ல’ என்பது போல தலையசைத்து, “நீங்க சொல்லுங்க”, என்றான்.
“வந்து ஒரு சின்ன ரெக்வஸ்ட்,  மஹி அங்க மூட் அவுட் ஆகி உக்காந்துட்டு இருக்கா. கொஞ்சம் உள்ள கூட்டிட்டு வந்திடறியா?”
‘ஏன்? நீங்க போகவேண்டியதுதான?’ என்பதுபோல கேள்வியாக பார்கவியை பார்க்க, “ம்ப்ச். இவங்க குடும்பத்துக்கே ஒரு குணம் இருக்கு ஆஷு. நல்ல மூட்-ல இருந்தா நாம பேசறதை காது குடுத்து கேப்பாங்க, இல்லன்னு வச்சுக்கோ நாம சொல்றதுக்கு அப்படியே ஆப்போசிட்டா பண்ணிட்டு தான் மறுவேலை பாப்பாங்க”, புகுந்த வீட்டினரின் குணாதியங்களை பற்றி சலித்துக்கொண்ட பார்கவி, கவலையாக, “மஹி, எப்பவும் இப்படி தனியா உக்கார மாட்டா, எங்கம்மா வேற அவகிட்ட என்ன உளறி வச்சாங்கன்னு தெரில. நா போனா, அவங்க மேல இருக்கிற கோவத்தை என்கிட்டே காமிச்சாலும் காமிப்பா. மணி வேற பதினொண்ணுக்கு மேல ஆயிடுச்சு.சோ.. கொஞ்சம் அவகூட பேசி உள்ள மட்டும் கூட்டிட்டு வந்துடேன்”, என்றாள்.
“டோன் வொரி, நீங்க போங்க. நா பாத்துக்கறேன்”, என்று சொல்லி மஹதி இருந்த இடம் நோக்கி சென்றான் ஆஷுதோஷ். அவன் வாழ்க்கை தடமும் இதோ இந்த நிகழ்விலிருந்து மாறப்போகிறது என்பதை அறியாதவனாக..
ஆஷு மஹதியிடம் செல்லும் வழியில் தென்பட்ட பேரரிடம் இருந்து ஒரு மதுக் கோப்பையை கையில் எடுத்துக்கொண்டான். மஹி கையில் இருப்பதாய் பார்த்து விட்டானே? கம்பெனி தருகிறேன் என்று சாதாரணமாக போய் கலந்து கொள்ளலாமே?
ஆஷு தன் வாழ்நாளில் இதுவரை நான்கைந்து முறை மது அருந்தியுருப்பான். கல்லூரி நாட்களில் இருமுறையும், ரேவாவில் இணைந்த பின் இருமுறையும் மது எடுத்துள்ளான். அப்படி ஒருமுறை அதிகமாக போதையை உள்ளே அனுப்ப,   “நம்ம உடம்பு நம்ம கண்ட்ரோல்-ல இல்லன்னா அது என்ன வாழ்க்கை? சொல்லு?”, என்று ராஜ் வருத்தப்பட, அன்றிலிருந்து அவரது பாணியை பின் பற்ற ஆரம்பித்தான்.
மங்கிய இருளில் மஹதியின் டேபிளை நோக்கி வருவது ஆஷு என்று தெரியாமல் பேரர் வழிமறிக்க வர, அருகே வரவும் ஆஷுவின் முகம் தெரிந்ததும், “சார்..மேம்.. பார்கவி மேம்..”,என்று திணறினான்.
“அண்ணிதான் அனுப்பினாங்க. நா பாத்துக்கறேன். நீங்க பஃபே க்ளோஸிங் வேலைய பாருங்க”, என்று உத்தரவிட்டான். காரணம், ஆங்காங்கே கும்பலாக தென்பட்ட தலைகளைத் தவிர வேறு கூட்டம் இல்லை.
சரி என்ற தலையசைத்து நகர்ந்த பரிசாரகன், பெரிய பெரிய குடைகளை மடக்குவது போன்ற மூட்டை முடிச்சை கட்டும் பணியைத் துவங்கினான்.
ஆஷு நிதானமாக மஹதி அருகே சென்று இயல்பாக, “என்ன மேம் கம்பெனி இல்லாம தனியா உக்காந்துட்டு இருக்கீங்க?”, என்றபடியே அவளெதிரே அமர்ந்தான். மஹதி கையில் மதுக்கோப்பையை கண்டவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. சின்ன கோபம்கூட வந்தது. ‘இமேஜைப் பற்றி சிறிதளவு கூட யோசியாமல் இப்படி பொதுவெளியில் மதுக் கோப்பையோடு இருக்கிறாளே இந்தப்பெண்?’
மஹதியோ தனது மோன நிலை கலைத்தவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து, “ப்ச்.”, என்று விட்டு தலைதிருப்பினாள்.
“கேள்விகேட்டா பதில் சொல்லணும்ங்கிற நல்ல பழக்கமெல்லாம் உங்களுக்கு யாரும் சொல்லித் தரலையா?”, என்று கேட்டதும்.. சரவெடியாக பதில்வந்தது.
“ஆமா, நல்ல பழக்கமெல்லாம் எனக்கு சொல்லித்தர்றதுக்கு  யாருமில்ல, அதுக்கென்ன இப்போ?”, அதிகாரமாக சொல்ல..
“ஒண்ணுமில்ல. நீங்கல்லாம் ட்ரின்க்ஸ் பண்ணக் கூடாது. வாங்க உள்ள போகலாம்”
“நோ, ஏன் பண்ண கூடாது? நா பொண்ணுன்னா? பண்ணுவேன். அண்ட் நா இங்கேயிருந்து போமாட்டேன். நீங்க போய் உங்க வேலைய பாருங்க”, என்றவள் கையிலிருந்த பானத்தை மடக்-கென விழுங்க.., பார்கவி அண்ணி சொன்ன ‘செய்யாதன்னா வீம்புக்காவது செய்வாங்க’ இவர்களின் குடும்ப குணம் தெரிந்தது.
மஹியின் செயலில் சற்றே கோபமான ஆஷு, கண்டிப்பான குரலில், “மேம்.. இப்படியே உங்கள போட்டோ எடுத்து நெட்-ல போட்டா ஊர் உலகத்துல உங்கள பத்தி என்ன பேசுவாங்கன்னு தெரியுமா? உங்களுக்காக இல்லேன்னாலும் உங்க ஸ்டேட்டசுக்காவது மரியாதை குடுங்க”, என்று அடிக்குரலில் கடிந்தான்.
விரக்தியாக சிரித்த மஹதி, “ஸ்டேட்டஸ்? எது ஸ்டேட்டஸ்? எல்லாரையும் பத்தடி தள்ளி நிக்க வைக்கற இந்த ஸ்டேட்டஸ் எனக்கெதுக்கு? என்ன பத்தி என்ன பேசறாங்கன்னு உங்களுக்குத்தான் தெரியாது. பார்ன் வித் சில்வர் ஸ்பூன், பிரின்சஸ் ஆஃப் ராஜ் குரூப்ஸ். ஆனா இந்த இளவரசி பொறந்த உடனே அம்மாவை முழுங்குனவ, அதிர்ஷ்டக்கட்டன்னு எல்லாம் பேர் வாங்கி இருக்கான்னு யாருக்காவது தெரியுமா?, நாலாவது பொண்ணு பொறந்தா நாதங்கி வித்து சாப்பிட வேண்டி வரும்னு.. பழமொழி இருக்கு அது எத்தனை பேருக்குத் தெரியும்? ம்ம்?”
“ஊரு? அது என்ன பேசினா எனக்கென்ன? நா பிறந்து கொஞ்ச நாள்லயே எங்கம்மா இறந்துபோனா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? நானா ஆசைப்பட்டேன்? நாலாவதா பொறக்கனும்னு?”, வெற்றுக்குரலில் மஹதி சொல்ல.., ஆஷுதோஷுக்கு  மஹதியின் மற்றொரு பரிணாமம் புரியலானது.
மஹதி கடந்த கால நிகழ்வுகள், அதன் தாக்கங்கள், இன்றைய முரளி அம்மாவின் பேச்சு என்று அனைத்தும் பழைய நினைவுகளை வலிகளை கிளறி விட, அவள் ஒரு உணர்வுக்குவியலாக இருந்தாள். மஹதியின் பேச்சில் இருந்த வலி ஆஷுதோஷ்க்குப் புரிய, மெல்ல தனது இருக்கையை விட்டு எழுந்து அவளருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
அவன் இடம்மாறியதை பார்த்தவள் பின் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.  எங்கோ வெறித்தபடி, “உங்களுக்கு ரேவா-ன்னா அப்பாவோட கம்பெனி பேருனு தான தெரியும்? அப்பா எதுக்கு அப்படி பேரு வச்சாருன்னு தெரியுமா?”, என்று மிருதுவாக கேட்டவள்..  ஆஷுவை நேராகப்  பார்த்து, “ரேவா. ரேவா-ன்னா ரேவதி வரதராஜன். எங்கம்மா..”, மென்னகை பூத்தவளின் முகமும் குரலும் இளக்கமாக இதமாக வந்தது.
“அவ்ளோ அழகா இருப்பாங்க”, சொன்ன மஹதியின் பழுப்பு நிறக் கண்கள் என்னும் கருந்துளையில்  சிக்கி வெளியேற முடியாமல், “ஓஹ்!”, என்ற ஆஷுவுக்கு நெஞ்சடைப்பது போல இருக்க அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
“அப்பா அவங்கள ரேவான்னுதான் கூப்பிடுவார். ஹி லவ்ட் ஹர் வெரி மச். ம்ம். நா பொறந்தப்போ அவங்களுக்கு உடம்புல எதோ காம்ப்ளிகேஷன்.. என்னன்னவோ வைத்தியம்.. எத்தனையோ வேண்டுதல், பணம் தண்ணியா செலவாச்சு. அம்மாவோட எல்லா நகையும் போச்சு. ரேவா-வை தவிர. ஏன்னா இங்க அப்பாவை நம்பி நிறைய எம்ப்ளாயிஸ் இருந்தாங்க. அதோட அம்மாவும் ரேவா-வை விக்கக்கூடாதுன்னு முடிவா சொல்லிட்டாங்க. மத்தபடி வீடு இடம்ன்னு எதுவும் பாக்கியில்லாம எல்லாம் எல்லாம் வித்து அம்மாக்கு ட்ரீட்மெண்ட் பண்ணினாரு. ஆனா.. அம்மா போயிட்டாங்க.”
“போறவங்க என்னமோ ஈஸியா போயிடறாங்க. எங்க பாட்டி, அப்பாவோட அம்மா, பாட்டிம்மா-ன்னு கூப்பிடுவோம், எங்க நாலு பேரையும் பாத்துக்க இங்க வந்தாங்க. அப்போவே பூரிக்காவும், சுந்தரண்ணாவும் ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல தான படிச்சாங்க? . சோ இங்க இருந்தது நானும் ரங்கண்ணாவும்தான்.”
“அவங்க நிறைய பழமொழி சொல்லுவாங்க, ‘நாலாவது பொண்ணு பொறந்தா நாதங்கி வித்து சாப்பிட வேண்டி வரும். வேணாம் கலைச்சிடுடீன்னு ரேவதிக்கிட்ட தலைப்பாடா அடிச்சிகிட்டேனே?, அவளும் போயி, இப்படி வாயிக்கும் வயத்துக்கும் என் பிள்ளை அல்லாட வேண்டியதா போச்சே’ன்னு பேசினது எனக்கு இன்னும் ஞாபகத்துல இருக்கு.”
“அவங்களையும் தப்பு சொல்ல முடியாது, பாவம் வயசானவங்க. எவ்ளோ சேட்டை பண்ணினாலும்  அடிக்கல்லாம் மாட்டாங்க, நாங்க சின்ன பசங்களா? எப்போவும் துறுதுறுன்னு ஓடிகிட்டே இருப்போமா? சோ இயலாமைல சத்தம் போடுவாங்க..”
யாரையும் தவறு சொல்லாத அவளது குணம் ஆஷுதோஷை அசைத்துப் பார்க்க, ‘மதி..’, அவளது வலது கையை ஆதூரமாகப் பற்றினான்.
“ரங்கண்ணா முடிஞ்சவரைக்கும் என்னை அவங்ககிட்ட விடவே மாட்டான், அவன்தான் ஓடிட்டே இருக்கிற எனக்கு சாப்பாடு தருவான். அப்பா..  அம்மாவோட ட்ரீட்மெண்ட்க்கு அலைஞ்சதால,அப்போ கம்பெனி நிலைமை சுமாராதான் இருந்தது. சோ அம்மா போனதுக்கப்புறம் அத சரிபண்ணணும்னு அப்பா ரேவா-ல மூழ்கிட்டாரு. ரெண்டு மூணு வருஷம் அப்படியே போச்சு, பிசினஸ் பிக்கப் ஆக ஆரம்பிச்சது.”
“ஒருநாள் ரங்கண்ணா அப்பாகிட்ட போயி, எங்களை எப்போ அண்ணா படிக்கற ஸ்கூல்ல சேத்து விடுவீங்கன்னு கேட்டான். ஏன்டா இப்போவே போர்டிங் ஸ்கூல் போயி படிக்கணும்னு ஆசையா இருக்கான்னு அப்பா கேட்டாரு. இல்ல டாட், மஹிய தூக்கி வச்சிக்க முடில, அந்த ஸ்கூல்-ன்னா மதர் இல்ல ஆண்ட்டி  பாத்துப்பாங்கன்னு சுந்தர் சொன்னான்னு ரங்கண்ணா சொல்லவும்தான் அப்பாக்கு எங்க நிலைமை புரிஞ்சது. உடனே எங்களை போர்டிங் ஸ்கூல்ல போட்டுட்டார். தென்.. ரேவா-விட க்ராஃப் மேல மேல போக ஆரம்பிச்சது.”