அத்தியாயம் 11 2
ரேவா வில் மறுநாள் காலை மஹதி, “குட் மார்னிங் ஏ டி”, என்று சொன்ன போது, ஏட்டி (ஆஷு) இருந்தது, அவனது அலுவலகத்தில் அல்ல, தொழிற்சாலையில், அதிலும் குறிப்பாக மெஷினிங் எனப்படும் பிரிவில் கையில் இயந்திர பகுதி ஒன்றின் வரைபடத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். 
“ம்ம், மார்னிங்”, தனக்கு காலை வணக்கம் சொல்வது யார் என்று கூட கவனியாது, தீவிரமாக இயந்திர வரைபடத்தில் ஆஷுவின் கவனம் இருந்தது. 
மஹதியுடன் வந்த முரளியாகப்பட்டவன் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தான். ‘நானும் வந்ததுலேர்ந்து பாக்கறேன். மஹதி இந்த கம்பெனி ஓனர், இதோ எதிர்ல இருக்கறவன் ஆஃப்டர் ஆல் சம்பளம் வாங்கற தொழிலாளி. இவன் ஆபீஸ்-ல இல்லன்னதும்,இந்த மஹதி யாராவது பியூனைக் கூப்பிட்டு ஆஷுதோஷை வரவழைச்சிருக்கலாம். அத விட்டுட்டு இவன் இருக்கிற இடத்துக்கே வந்து குட்மார்னிங் சொல்றா.. அதுக்கு இவன் எவ்..ளோ அலட்சியமா பதில் சொல்றான்? யாரு இவன்?  இவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? ஹ்ம்ம்.இருக்கட்டும் பாத்துக்கறேன்’, என்று நினைத்தான். 
ஆனால் மஹதிக்கு அப்படியெல்லாம் இல்லை. ஏட்டி யைப் பொறுத்தவரை வேலையென்று வந்துவிட்டால்,அதைத்தவிர வேறு எதுவும் அவன் சிந்தையில் வராது என்று இவளுக்குத் தெரியுமே? ஒரு வாரமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்? 
அதனால், மீண்டும் ஒருமுறை ஏட்டியிடம் பேச முயற்சித்தாள்.  “மிஸ்டர் ஆஷுதோஷ்”, என்று அழுத்தமாகக் கூப்பிட்டு, அவன் நிமிர்ந்து இவளைப் பார்த்ததும், “மீட் மிஸ்டர் முரளி”, என்று அருகில் நின்றவனை அறிமுகப்படுத்தினாள். 
‘இவங்க எப்ப வந்தாங்க?’ “ஓ ஹாய் மேம்..”, கையில் இருந்த காகிதத்தை அருகே மேஜையில் மீது வைத்துவிட்டு, மஹதியின் அருகே நின்ற முரளிக்கு “ஹலோ”, சொல்லி கை நீட்டினான் ஆஷுதோஷ்.
பதிலுக்கு கைகுலுக்கிய முரளி, “ஹலோ”, சொன்னான்.
முரளியை பார்வையால் எடைபோட்ட ஆஷு, ‘யார்?’ என்பது போல சின்ன புருவ நெறிப்புடன் கேள்வியாக மஹதியைப் பார்த்தான். 
மஹதி, “பிஸி?”, என்று கேட்க..
“யா கொஞ்சம்.. ஒரு க்ராங்க்-ல மூணு எம்மெம் அதிகமா இருக்கு. சரியா செட்டாக மாட்டேங்குது. அதான் எங்க பிரச்னை-ன்னு பாத்துட்டு இருக்கேன்”, என்றவன், மெஷினிங் பிரிவில் வேலை செய்யும் ஒருவனிடம், “செக்ஷன் சூப்பர்வைசர என்னை வந்து பாக்க சொல்லுங்க”, என்று விட்டு அந்த இடம் விட்டு தனது அலுவலகம் நோக்கி நகரத் துவங்க..
“இல்லல்ல வேலை இருந்தா நீங்க பாருங்க, இதோ இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த தான் தேடினேன்.”
“ம்ம் ?”. 
“இவர் முரளி, அண்ணியோட தம்பி, அப்ராட்-ல படிச்சிருக்கார். நம்ம கிட்ட வேலை கத்துக்க வந்துருக்கார்.”
“ஓ!”, சொன்னவன் இப்பொது முழுமையாக முரளியை அளவெடுத்தான். முரளியின் முகத்தில் படிப்புக்களை வடிந்தது. ஆனால் அவனது உடல்மொழியில் இருந்த அலட்சியம்..? ‘ஹ்ம்ம். கொஞ்ச நாள் அலைய விட்டா சரியாயிடுவான்’, ஆஷு நினைத்தான்..
இவர்கள் மூவரும் (மஹி, முரளி, ஆஷு), பேசும்போதே ஆஷு அழைத்த சூப்பர்வைசர் வந்து ஆஷுவைப் பார்ப்பதற்காக நின்றான். 
வந்தவன் வெறுமே நில்லாமல், ஆஷுவோடு பேசும் மஹதியை ஒன்றிரண்டு முறை நோட்டம் விட்டான். அதை கவனித்த ஆஷு, “நீங்க ஆபிஸ் போங்க மேம், நா பாத்துக்கறேன்”, என்று அவளைக் கத்தரித்தான். 
“ஓகே, முரளி கேரி ஆன்”,சொல்லி அவளது அலுவலக கட்டிடத்துக்குச்  செல்லத் துவங்கிய  மஹதி, ஒரு நொடி நின்று “முரளி, லன்ச்-க்கு ஆபீஸ் ரூம்க்கு வந்துடுங்க. அண்ணி சாப்பாடு குடுத்து அனுப்பறேன்னு சொல்லி இருக்காங்க”, சொன்னாள்.  
“நீ சொல்லவே வேணாம் மஹி.எனக்கு சோறு முக்கியம்ன்னு அக்காக்கு தெரியும், போன்லேயே சொல்லிட்டா”, என்று சிரித்தான் முரளி. 
இவர்களது உரையாடலைக் கேட்ட ஆஷுவோ பல் கடித்தான். ‘உறவு லொட்டு லொசுக்கு எல்லாம் அலுவலகத்துக்கு வெளியே தான்.இங்கே ரேவா-விற்குள் வந்தால் அனைவரும் சக தொழிலாளர்களே. 
ஆனானப்பட்ட சுந்தர்ராஜனே அலுவலகத்துக்குள் இருக்கும்போது தனது தந்தையான வரதராஜனை சார் என்றுதான் அழைப்பான். ரங்காவும் அப்படித்தான். இவன் என்னடா என்றால், மஹி, அக்கா என்று வழிந்துக் கொண்டு இருக்கிறான். நல்லவேளையாக இன்னும் ஆஷுதோஷ்ன்  பொறுமையை சோதிக்காமல், மஹதி தனது அலுவலகம் சென்றுவிட, 
அந்த சூப்பர்வைசரிடம் தனது சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டான் ஆஷு.
‘இந்த பகுதியின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏன் இப்படி அளவில் வித்தியாசம் வந்தது?’ என்று ஆஷு விசாரித்துக் கொண்டிருக்க, அவனிடம் வேலை பயில வந்த முரளியோ, அங்கே இருந்த இயந்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். 
ஒரு முறை இருமுறை என ஆஷு முரளியின் கவனத்தை வேலையில் திருப்பியும், பயனின்றி போக.., ஆஷு முகம் கடுத்தான். 
சரி.. வந்த முதல் நாளே எதற்கு இவனைத் திட்ட வேண்டும் என்று எண்ணியதாலோ என்னமோ அமைதி காத்தான்.  
முழுக்க முழுக்க இவனது உழைப்பில் தயாராகும் இயந்திரம் இப்போது அங்குலம் அங்குலமாக உருப்பெற்றுக் கொண்டு இருந்தது. முன்பு வரதராஜன் இருந்த போதே இத்தயாரிப்பிற்கான ஆயத்தங்கள் அனைத்தும் செய்திருந்ததால், உற்பத்தியைத் துவங்குவது ஒன்றும் ஆஷுவுக்குப் பெரிய காரியமாக இல்லை. 
ஆனால், புது இயந்திரத்தின் ஒவ்வொரு இழையிலும் சிறு தவறு கூட  இல்லாமல் இருக்க ஆஷுதோஷ்  ப்ரயத்தனப்பட்டான். அப்படி இருபவனுக்கு முரளியின் கவனக்குறைவு மனக்கசப்பைத் தந்தது.ஆயினும் அதைத் தள்ளி வைத்து, “முரளி, சீ இதான் நாம இப்போ தயாரிச்சிட்டு இருக்கிற மெஷின். டெலஸ்கோபிக் மைனிங் கன்வேயர். ஆபீஸ்க்கு வாங்க இன்னும் இதை பத்தி தெளிவா சொல்றேன். பேஸிக்ஸ் தெரிஞ்சாத்தான் நீங்க பாக்கறது உங்களுக்கு புரியும். இல்லன்னா அது மேல கவனம் வராது”
“யா கண்டிப்பா,ஆனா மாமா தயாரிக்கறது எதுவும் இந்த செக்க்ஷன்-ல இல்லயே?”
“நீங்க இங்க ஏற்கனவே வந்துருக்கீங்களா?”
“ஆங். எங்க அப்பாவோட ஒருதடவை வந்துருக்கேன். ரொம்ப வருஷம் முன்னாடி. சரியா சொல்லனும்னா அக்கா கல்யாணத்துக்கு முன்னாடி, சுந்தர் மாமா இங்க என்ன செய்யறார்? நிஜமாவே அவருக்கு இங்க வேல்யூ இருக்கா?இல்ல வரதராஜன் சாரோட பையன்கிற அட்வான்டேஜ் மட்டும்தானா-ன்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தோம்.”
“ஹ்ம்ம்.”
“வந்து பாத்தபோது இங்க இந்த புது மெஷினலாம் கிடையாது, பெரிய பெரிய ட்ரில் ரிக், அப்பறம் என்னவோ சொல்வாங்களே, ட்ராக்லைனர்ஸ் ன்னு அதெல்லாம் இருந்தது.”
“ஓஹ். அப்டியா? அதெல்லாம் மைனிங் மெஷின்ஸ். ஸ்டாக்ஸ் ப்ளாக்-ல  இருக்கு. ஆர்டர் கிடைச்சதுன்னா உடனே அசெம்பிள் பண்ணி அனுப்ப முடியும். தயாரா இருக்கிற மெஷினெல்லாம் வைக்கறதுக்குன்னு நாலு வருஷம் முன்னாடி தான் அந்த ஸ்டாக்யார்டு காட்டினாங்க. அதனால உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.”
“ஓஹ்.”
“நீங்க எப்ப ஸ்டடிஸ் முடிச்சீங்க?”
“ரெண்டு வருஷம் ஆச்சு, பாரின்-ல நல்ல ஜாப் ஆஃபர்ஸ் வந்தது. ஆனா எனக்கு பிடிக்கல”
“ஓஹோ?”
“கிளம்பலாம்னு இருந்த நேரத்துல அக்காக்கும் மாமாவுக்கும் மனஸ்தாபம் வந்துச்சு. நானே சுந்தர் மாமாகிட்ட நேரே வந்து பேசணும்னு இருந்தேன். வரது மாமா இறந்ததும் ஒரு வகைல நல்லதா போச்சு. அக்கா மாமா ரெண்டு பேரும் ஒன்னாயிட்டாங்க. அப்ப தான் மாமா படம் தயாரிக்கறதா  சொன்னாங்க, நீ கொஞ்சம் போயி கம்பெனிய பாத்துக்கோன்னு அக்கா தொணதொணத்து கிட்டே இருந்தாங்க”
‘என்ன? இவன் வந்து ரேவா-வை பாத்துக்கணுமா? அதை கம்பெனிக்கு சம்பந்தமே இல்லாத பார்கவி சொன்னாங்கன்னு இவன் வந்துருக்கானா? சரிதான்’, “ம்ம்..?”
“மஹதி கிட்ட கேட்டப்போ, ப்ரொடக்ஷன் யூனிட்-ல நம்ம வீட்டு ஆளுங்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாளாம். அதான்..”,என்ற முரளி, அவனுக்கு முன் நடந்து சென்று கொண்டிருந்த ஆஷு திடீரென பிரேக் போட்டாற் போல நிற்கவும், “என்ன?”..என்று குழப்பமாக கேட்டான். 
 “நோ நத்திங்”, “செல் அங்க விட்டுட்டேனோன்னு தோணுச்சு. இல்ல பாக்கெட்ல தான் இருக்கு”, ஆஷு.
அந்த பிரம்மாண்ட தொழிற்சாலையின் இயந்திர தயாரிப்பு பகுதியின் ஒவ்வொரு துறையாக இருவரும் கடந்து வந்தனர். ஆஷுவின் நடையில் மிதமிஞ்சிய வேகம். முரளி அவனுக்கு ஈடு குடுக்க திணறினாலும் நான்கடி பின்னே தான் வர முடிந்தது.
அப்படி செல்லும்போது, இயந்திர தானியங்கி பிரிவு (இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன்) என்னும் பிரிவு வர, “வாவ். இங்க இந்த டிபார்ட்மென்ட் கூட இருக்கா?”, என்று ஆச்சர்யப்பட்ட முரளி நின்று வேடிக்கை பார்த்தான்.
தன் பின்னால் காலடி ஓசை கேட்காததால், நடையின் வேகத்தைக் குறைத்த ஆஷு, மெல்ல திரும்பி முரளி எங்கே என்று பார்த்தான். 
“ஹலோ மிஸ்டர் ஏட்டி, கேன் ஐ ஹாவ் எ லுக்?”, என்று அந்த பிரிவை கை காண்பிக்க, அவனது ‘மிஸ்டர் ஏட்டி’ யிலேயே முழுவதுமாக முரளியின் புரம்திரும்பி இருந்த ஆஷு, “தாராளமா பாத்துட்டு வாங்க, பை தெ வே ஆஷு இல்லன்னா ஆஷுதோஷ்ன்னு கூப்பிடுங்க. ஓகே?”, என்றுவிட்டு விறுவிறுவென தனது அலுவலக அரை நோக்கி நடந்தான்.
உள்ளே சென்றதும், மேஜை மீது கண்ணாடி டம்ளரில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டான். அறையின் வெப்பநிலை 18 டிகிரி என்று காண்பித்தது. ஆனாலும் ஆஷுவிற்கு இன்னமும் மனதிலா உடலிலா என்று பகுத்தறிய முடியாத அளவு புழுக்கம் இருந்தது.  
பின் தனது சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை கழட்டி விட்டவன், காலரை சற்றே தூக்கி விட்டு இருக்கையில் சாய்ந்து கொண்டான். மனம் கொஞ்சம் சமன்பட்டதும், வலது பக்க்கமிருந்த பஸ்ஸரை அழுத்தி, “மேம், கொஞ்சம் என்னோட ரூம்க்கு வர முடியுமா?”, என்றான். 
இது ஏதடா புதிதாய் இருக்கிறது? எப்போதும் ஏதேனும் பேசவேண்டுமென்றால் ஆஷுதான் மஹதியின் அறைக்கு வருவது வழக்கம். ஆனால், பேசியில் அழைத்து கூப்பிடுமளவு என்ன விஷயமாக இருக்கும்?,யோசனையோடு,ஆஷுவின் அறைக்குச் சென்றாள் மஹதி.
“இன்னிக்கு கூட்டிட்டு வந்தீங்களே மிஸ்டர் முரளி?, என்ன படிச்சிருக்கார்?”, ஏட்டியிடம் வழமையாக வரும் ஒரு ‘ஹாய், ஹலோ, ப்ளீஸ் உக்காருங்க’ எதுவும் இல்லை, அர்ஜுனனின் அம்பு போல சரமாரி கேள்விகளை மஹதி எதிர்கொண்டாள். 
பார்கவி அண்ணி எப்போதோ விடுமுறைக்கு வந்திருந்த போது, முரளியை பொறியாளர் என்று சொன்னது நினைவில் இருந்தது. ஆனால் இந்தத் துறை என்று குறிப்பிட்டு சொல்லவில்லையே?, எனவே “என்ஜினீயரிங் தான்”,என்றாள்.   
“ஷ்… என்ஜினீயரிங்-ல என்ன மேஜர்?”, ஆஷுவின் பொறுமை காற்றில் பறந்து சென்றுவிடுவேன் என்று மிரட்டியது. 
“அது.. தெரில.”
“ஒருத்தன் என்ன படிச்சான்னு தெரியாது, அவனோட தகுதி என்னன்னு தெரியாது ஆனா, சொந்தக்காரன் ன்னு ஒரே காரணத்துக்காக வேலைக்கு கூட்டிட்டு வருவீங்க. அதோட அவங்களுக்கு நா டிரெய்னிங் வேற தரணும்னு சொல்லுவீங்க?” 
‘சரிதான் இவன் கோபமாக இருக்கிறான். ஹ்ம்ம்.இந்த முரளி பொறியியலில் என்ன பாடப்பிரிவை எடுத்துக் படித்தான் என்று யாருக்குத் தெரியும்? அண்ணி அண்ணா சொன்னதால், அவன் தகுதியானவன் என்று நினைத்தது தவறோ? தனக்கிருந்த சொந்த குழப்பத்தில் (லண்டன் செல்வதா வேண்டாமா) இதை கவனிக்க மறந்து போனோமோ?’ என்று மஹதி எண்ணினாலும்,”அப்டி இங்க வேலை பாக்க முடியாத மாதிரி முரளி எதை மேஜரா எடுத்தார்?”
“சின்ன கரெக்ஷன் ,இங்க வேலை பாக்க முடியாத மாதிரின்னு நா சொல்லல, எனக்குப் பதிலா என் இடத்துக்கு வர்ற அளவு அல்லது நா பயிற்சி குடுக்கற அளவு அவர் இல்லன்னு தான் சொல்ல வந்தேன்”, என்று நிறுத்திய ஆஷுதோஷ்,” முரளி படிச்சது அநேகமா CSE அல்லது ECE யா இருக்கும்”,என்றான்.
சந்தேகமாக பதில் சொன்னவனைப் பார்த்து தனது ஆள்காட்டி விரலை நீட்டி, “சோ உங்களுக்கே கன்ஃபார்மா அவர் என்ன படிச்சாருன்னு தெரியாது, பட் யூ ஆர் த்ரோயிங் டேன்ட்ரம்ஸ் ஆன் மி?”, என்று கடினமாகவே  கேட்டாள். 
மஹதியின் குரலில் இருந்த குற்றம் சாட்டும் த்வனி ஆஷுவை மேலும் வேகமடைய செய்தது. தனது இருக்கையிலிருந்து விருட்டென எழுந்தவன்,” “மீ? த்ரோயிங் ..? மிஸ். மஹதி வரதராஜன், உங்களுக்கு என்னோட கோபம் எப்படி இருக்கும்னு தெரியாது.”
“இது உங்க தப்பை உங்களுக்குத் தெரியப்படுத்தணும்ங்கிறதுக்காக   கூப்பிட்டு பேசிட்டு இருக்கேன். இந்த இடத்துல நீங்கன்னு இல்ல, ராஜ் இருந்தாலும் இதைத்தான் பண்ணி இருப்பேன். ஏன்னா, இங்க யார் என்ன போஸ்ட்-ல இருக்காங்கன்னு முக்கியமில்லை. அவங்க பொறுப்பை சரியா செய்யறாங்களா அப்டிங்கிறதுதான் முக்கியம்.”
“ஒரு விஷயம் தெரியுமா? உங்க அண்ணன் சுந்தர். அவரே உங்கப்பாவை ஆபீஸ்ல இருக்கும்போது சார்ன்னு தான் கூப்பிடுவார். ரெண்டு பேரும் லன்ச் கூட சேர்த்து ஒண்ணா எடுத்துக்க மாட்டாங்க. அவ்வளவு ஏன், நா இங்க வந்த புதுசுல ரங்கா ராஜோட ரெண்டாவது பையன்னு எனக்குத் தெரியாது. ராஜூம் சரி ரங்காவும் சரி என்கிட்டே அவங்க உறவு முறையை சொல்லல. நா ராஜ் சாரோட வீட்ல இருக்கும்போதுதான் தெரிஞ்சிகிட்டேன். காட் இட்?”, ஆஷு பேசுவது மஹதியின் கண்ணுக்கு சிங்கமொன்று தனது பிடரியை சிலிர்த்தபடி மேஜைக்கு அந்த பக்கத்தில் இருந்து கர்ஜனை செய்வது போல இருந்தது. 
தவிர, ஏட்டி சொல்வது தவறென்றால்  எதிர்த்துப் பேசி வாதாடலாம். நிறுவன நன்மையை முன்னிட்டு பேசுபவனை என்ன செய்வது? 
வேறு வழியின்றி,“எஸ் ஸார்”, சல்யூட் அடிக்காத குறையாக சொன்னாள்.
தலையாட்டி ஆமோதித்த ஆஷு, “உக்காருங்க”, என்றான்.
“இல்ல, என் கேபினுக்கு போறேன்,ஆனா ஒரு சின்ன டவுட்.அவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இல்லன்னா எலெக்ட்ரானிக்ஸ் தான் படிச்சிருப்பாருன்னு எப்படி கெஸ் பண்றீங்க?”
“ரொம்ப சிம்பிள்..  நம்ம பேக்டரில முரளி உள்ள போயி பாக்க நினைச்ச ஒரே டிபார்ட்மென்ட் ஆட்டோமேஷன். சோ ஒண்ணா கம்ப்யுட்டர் இல்லனா எலக்ட்ரானிக்ஸ்-சா இருக்கும்னு நினைச்சேன்.”
“ஓகே ஏட்டி, ஒரு சின்ன வேண்டுகோள். அண்ணா அண்ணி ரெண்டு பெரும் சேர்ந்து என்கிட்டே கேட்ட முதல் விஷயம்ன்னு பாத்தா அது இதான்.  முரளியோட  வேலை. சோ..”, என்று சொன்னவள், ஏட்டியின் முகம் மெல்ல கடினமுறுவதை பார்த்து, “இல்லல்ல, கொஞ்ச நாள் பாருங்க. ஒத்துவரலைனா வேண்டாம்”, என்றாள் அவசரமாக. 
பெருமூச்சு விட்ட ஆஷுதோஷ், “இங்க ஆட்டோமேஷன் செக்ஷன்-ல  இருக்கட்டும், அப்பறம் பாக்கலாம்”
“ம்ம்.”, “ஏட்டி எனக்கு ஒரு டவுட்?  ஒரு ஃபீல்டு-ல ஆழமான அறிவு இருக்கறவங்க, இன்னொரு ஃபீல்ட தெரிஞ்சிக்க முடியாதா என்ன? அதுலயும் எஞ்சினியரிங் அப்டிங்கும்போது, அடிப்படை அறிவு எல்லா எஞ்சினியருக்கும் இருக்கும்தான?”
“அது அப்படியில்ல மேம், கவனிங்க, நம்ம இண்டஸ்ட்ரி உற்பத்தி துறைல கவனம் செலுத்த வேண்டிய இண்டஸ்ட்ரி. இதுல ஆட்டோமேஷனும் தேவைதான் ஆனா, முக்கியம் கிடையாது.காரணம் அதை மட்டும் தனியா டெவலப் பண்ண நிறைய கம்பெனிகள் இருக்கு. இல்லியா?”
இல்ல நிஜமாவே டவுட் வந்துதான் கேக்கறேன்?”
“நல்ல கேள்விதான். உங்களுக்கு ஈஸியா புரியிறா மாதிரி சொல்றேன், ஒரு டெய்லருக்கு ஆரி வொர்க் தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை, ஆனா தெரிஞ்சிக்க நினைச்சா அது சுலபமா வரும். அதுவே வெறும் ஆரி வொர்க்/எம்ப்ராய்டரி மட்டும் பண்ணத் தெரிஞ்ச ஆளுக்கு டெய்லரிங் ஈஸியா  வருமான்னு கேட்டா.. டெடிகேஷன் இருந்தா, நல்லா கவனிங்க மேம், 100% டெடிகேஷன் இருந்தா மட்டும்தான் சாத்தியப்படும்.ஆனா உங்க முரளி எல்லாத்தையும் கத்துக்கற ரகமில்ல.”
“ம்ம்?”, ”நான் எப்படி? கத்துக்கற ரகமா?”, சிரித்தபடி மஹதி கேட்க..
சந்தேகத்தோடு, “ஏன் கேக்கறீங்க?” ஆஷு.
“இல்ல எனக்கு ஓஷன் மைனிங்தான் தெரியும். ஐ மீன் அதான் படிச்சிருக்கேன், அதுல தான் ஆராய்ச்சியும் பண்ணிட்டு இருந்தேன். அதான்..”
“உங்க கேஸ் வேற மேம், உங்களுக்கு ஆரம்பத்துலேர்ந்தே சுரங்கம் பத்தி தெரியும்”, என்று தீவிரமாக ஆரம்பித்த ஆஷுதோஷ், பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவன் போல இருந்த மஹதியின் முகத்தையும்  படபடக்கும் அவளது அடர் பழுப்பு நிற கண்களையும் பார்த்ததும், ஏதேதோ எண்ணங்கள் தலை தூக்க.., மந்தகாசமான குறுஞ்சிரிப்புடன், “எதுக்கும் ரெண்டு நாள் ட்ரெயினிங் தர்றேன், எப்படி கத்துக்கறீங்கன்னு பாத்துட்டு சொல்றேன்”, சொன்னான்.
ஆஷுதோஷின் பதில் முதலில் சாதாரணமாகத் தோன்ற, இயல்பாக சிரித்த மஹதி,  அவனது கண்களில் இருந்த குறுகுறுப்பும், இதழோர சிரிப்பில் தொக்கி நின்ற ரசனையும், ஆஷுதோஷ் சொன்ன வார்த்தைகளில் இருந்த மற்றொரு அர்த்தத்தை அவளுக்கு உணர்த்த, மஹதி தன்னுள் மெல்லிய சலனத்தை உணர்ந்தாள். 
இதில் சிறப்பு என்னவென்றால், முதலில் இயல்பாய் சிரித்த மஹதி, அடுத்து தனது வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரியாமல் இவனை ஊடுருவிய அவளது கண்கள், சில நொடிகளில் இவனது மொழியின் அர்த்தம் புரிந்த திகைப்புடன் விரிந்த அவளது நயனம், என்று மஹதியின் உணர்வுகள் அத்தனையும் ஆஷுவுக்கும் புரிந்தது. 
மெல்லிய சிரிப்புடன், தனது அலைபேசியை எடுத்து “நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…”, என்ற பாடலை ரிங் டோனாக வைத்தான். இவ்ருக்குமே அன்றைய தினம் முழுதும் இந்த இதம் நிலைத்திருந்தது.