நெஞ்சம் பேசுதே 27

              மருத்துவமனையில் இருந்து தன் பிள்ளையுடன் நேரே தன் தாய் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் கோதை. முழுக்க முழுக்க திருமகள் நாச்சியாரின் முடிவு இது. அன்று ஈஸ்வரி “எங்கிட்டே தான் வந்தாகணும்..” என்று சூளுரைத்தபோதே முடிவெடுத்துவிட்டாள் அவள்.

            அன்று இரவே கணவனிடம் பேச, வார்த்தைகள் இல்லாமல் மனைவியைக் கட்டிக்கொண்டு தன் ஒப்புதலை தெரிவித்தான் வாசுதேவன். அதில் இன்னும் ஸ்திரமானவள் அடுத்த நாள் கோதை, மனோகர் இருவரிடமும் பேச, மனோகர் லேசில் ஒப்புக்கொள்ளவில்லை.

             “எங்களைவிட சின்னவங்க நீங்க.. நான் செய்யணும் உங்க ரெண்டு பேருக்கும்.. என் நிலைமை எதுவும் செய்ய முடியல.. இப்போ உன்கிட்ட இருந்து வீட்டையும் வாங்கிப்பேனா..” என்றவன் ஒப்புக்கொள்வதாக இல்லை.

              திருமகள் மீண்டும் வற்புறுத்த “சொல்றதை புரிஞ்சிக்கோ நாச்சியா.. இது உன் வீடு மட்டுமில்ல. ரகுவோட வீடு. நாளைக்கு அவனுக்கு கல்யாணம், குழந்தைன்னு ஆகிட்டா, அவன் எங்கே போய் நிற்பான்.அவனுக்குன்னு இருக்க ஒரே சொத்து அந்த வீடு..”

              “இப்போ நாங்க இருக்க வீடு நல்லாதானே இருக்கு. எங்க ரெண்டு பேருக்கும் அதுவே அதிகம். எங்களைப்பத்தி யோசிச்சு உன்னை குழப்பிக்காத.” என்று முடிந்தவரை பொறுமையாக எடுத்துக் கூறினான் மனோகர்.

                ஆனாலும், திருமகள் “நீங்க என்ன நினைக்கறீங்க மாமா.. எப்போதும் உங்க அம்மா பேசற இடத்திலேயே என் அக்காவை வைக்க போறிங்களா.. அவங்க பார்வையில என் அக்கா ஒன்னுமில்லாம உங்க வீட்டுக்கு வந்தவ. அந்த நினைப்புல தான் இத்தனை இளக்காரமா அவளை ட்ரீட் பண்றாங்க..”

               “என் அக்காவுக்கு அந்த நிலைமை வேண்டாம். என் அப்பா உங்க கல்யாணத்தை செய்து வச்சிருந்தாலும், கண்டிப்பா சீர் செஞ்சிருப்பார் இல்ல.. ஏன், என் மாமாவோட கல்யாணம் பண்றதா முடிவெடுத்தப்போ கூட, சீர் கொடுக்கறதாதான் இருந்தார்..’

                “அந்த சீரை நாங்க எங்க அக்காவுக்கு செய்றதா நினைச்சுக்கோங்க.. அன்னைக்கு சொன்னிங்க இல்ல, உறவு வேணும்னு.. அது உண்மையா இருந்தா, அந்த வீட்டுக்கு போங்க.. என் அக்கா மகன் ஏதோ ஒரு வீட்டுக்கு போகவேண்டாம்.. அவன் தாத்தா வீடு, அவனுக்கு உரிமையான வீடு.. அவன் அங்கே வளரட்டும்..” என்று மறுக்கமுடியாதபடி அவள் வாதிட, மனோகர் பாவமாக வாசுதேவகிருஷ்ணனை பார்த்தான்.

              வாசுதேவன் “எனக்கு திருவோட ஆசை தப்பா தெரியல மனோ. அவளுக்கு எந்த உள்நோக்கமும் இல்ல.. உனக்கு இந்த யோசனை பிடிக்கலைன்னா, இப்போ நீ இருக்க வீட்டுக்கு என்ன வாடகை கொடுக்கறியோ, அதையே ரகுகிட்ட கொடுத்திடு.. நீ சொல்றபடி அவனுக்கு கல்யாணம் ஆகற நேரம் அவனுக்கு வீடு தேவைப்படலாம்..”

            “ஆனா, நீ எப்போதும் இப்படியே இருக்கப்போறது இல்லையே.. உனக்குன்னு வீடு,வாசல்ன்னு வாங்கு. பிறகு நீ உன் வீட்டுக்கு போனா, எங்களுக்கும் சந்தோஷம் தானே..” என்று அவன் பேசும்போதே,

              “நீங்க என்ன சொல்லிக் கொடுக்கறீங்க.. அவ வீட்டுக்கு அவளே வாடகை கொடுப்பாளா..” என்று கோபம் கொண்டாள் திருமகள்.

               “இது ஒன்னுதான் வழி. நீ உன் அக்காவை மட்டும் வச்சு யோசிக்கிற.. அவன் நிலையை பார்க்க வேண்டாமா..? சும்மா எல்லாத்துக்கும் அடம் பிடிக்கக்கூடாது திரு.” என்று வாசுதேவன் அதட்ட,

              “அவளை எதுவும் சொல்லாதீங்க மா..” என்று நிறுத்திவிட்டாள் கோதை.

               வாசுதேவன் அவளை ஒரு பார்வை பார்த்து மனைவியைப் பார்க்க, “உனக்கு நாங்க வேணும்னு நினைச்சா, உன் புருஷனைக் கூட்டிட்டு உன் வீட்டுக்கு போ..” என்று கையோடு கொண்டு வந்திருந்த தங்கள் வீட்டின் சாவியை கோதையின் கைகளில் திணித்துவிட்டு வெளியேறிவிட்டாள் திருமகள்.

              அவள் அடாவடியில் மனோ ‘உங்க நிலைமை ரொம்ப கஷ்டம் வாசுண்ணா..” என்றுவிட, வாசுதேவன் மௌனமாக புன்னகைத்தவன் சிறு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டான்.

              அடுத்த இரண்டு நாட்களும் மனோகர் யோசனையிலேயே இருக்க, திருமகள் அதன்பின் மருத்துவமனைக்கு வரவில்லை.

              உணவு, குழந்தைக்கு, கோதைக்கு தேவையான மற்ற பொருட்கள் என்று அத்தனையும் கணவனிடமே கொடுத்து  அனுப்பி விடுபவள் அவள் தம்பி வந்தபோது கூட அவனுடன் மருத்துவமனைக்கு வரவில்லை. ரகுவரனுக்கும் அத்தனை விஷயங்களையும் திரு கூறியிருக்க, அவனும் தன் பங்குக்கு மனோகரிடம் பேசினான்.

                மூன்று நீண்ட வருடங்களுக்கு பின், கோதையிடம் இயல்பாக பேசியிருந்தான் ரகுவரன். கோதையிடம் சில வார்த்தைகளோடு முடித்துக் கொண்டாலும், அவள் மகனுடன் முழுதாக ஒன்றிப்போனான் அவன். அவனுக்கு தெரிந்தவகையில் குழந்தையின் ஆரோக்கியத்தை பரிசோதித்து திருப்தி பட்டுக்கொண்டவன் அங்கிருந்த மருத்துவர்களிடம் பேசி தெளிவுபடுத்திக் கொண்டான்.

               குழந்தைகளை கையாளவும் கற்றிருக்க, அவன் மருத்துவமனையில் இருக்கும் நேரமெல்லாம் அவன் கையில் தான் இருந்தான் கோதையின் மகன்.

                விசாலம் “கைச்சூட்டுக்கு பழகிட்டா, அவளை நொச்சு பண்ணுவான்டா.. தொட்டில்ல போடு..” என்று அதட்டினாலும்,

               “அவனை தூக்கி வச்சுக்கறதை விட வேறென்ன வேலை அவளுக்கு.. கையிலேயே வச்சுக்கட்டும் என் தங்கத்தை..” என்று கொஞ்சிக் கொண்டான் அவன்.

                கோதையைத் தங்க சொன்னபின் அந்த வீட்டுக்கு செல்ல மனம் வராமல் இரண்டு நாட்களாக விசாலத்தின் வீட்டில் தங்கியிருந்தவன் அன்றுதான் சென்னைக்கு திரும்பியிருந்தான். அன்று காலையில் தான் கோதை வீட்டிற்கு வந்திருக்க, நிதானமாக வீட்டின் ஒவ்வொரு பகுதியாக அளந்து கொண்டிருந்தாள் அவள்.

                விசாலம் “கால் வலியெடுக்கும் கோதை.. ஒரு இடமா உட்கார்.” என்று அதட்டவும், அவர் பேச்சை மீறாமல் அமர்ந்து கொண்டாலும், கண்கள் வீட்டை ஏக்கத்துடன் வருடிக் கொண்டிருந்தது.

                அன்னையும், தந்தையும் நின்ற, அமர்ந்த இடங்கள்… தங்களின் உணவு நேரம், ரகு, திரு, கோதையின் செல்லச்சண்டைகள் என்று ஒவ்வொன்றாக சுழற்றிக் கொண்டிருந்தது அவளை.

                 அத்தனையும் தன்னால் தான் கெட்டுப்போனதோ… என்று வருத்திக் கொண்டவள், “என்னை மன்னிச்சிடும்மா..” என்று நிழற்படமாக இருந்த அன்னை தந்தையிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தாள்.

                 அவள் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை கணித்துவிட்ட திருமகள் “இப்போ எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிருக்க.. நல்லது எதையும் யோசிக்க முடியாதா உன்னால. என்னைக்கோ செஞ்சதுக்கு இன்னைக்கு அழுதுட்டு இருக்கா..” என்றாள் கடுப்புடன்.

                  கூடவே “இப்படி அழுதே பொழுதைக் கரைச்சா, பிள்ளையை யார் பார்க்கிறது..?” என்று சத்தமிட, அதன்பின் தான் சற்று அமைதியானாள் கோதை.

              திருமகள் அன்று இரவு வரை அங்கே இருந்தவள் அன்று இரவு வாசுதேவனுடன் வீடு வர, அடுத்தநாள் காலையில் கோயம்புத்தூர் செல்வதாக கூறினான் வாசுதேவன்.

      ஏன் எதற்கு என்று திரு அத்தனை கேள்விகள் கேட்க, “மார்க்கெட்ல புதுசா ஒரு அரவை மெஷின் வந்திருக்குடி.. அதைப் பார்க்கத்தான் போறேன். விலை படிஞ்சு வந்தா, வாங்க வேண்டியது தான்..” என்றான் அவன்.

           “நீங்களே போகணுமா.. சாரதி அண்ணனை அனுப்பலாம் இல்ல..” என்றவள் கணவனின் நெஞ்சில் தலைவைத்து கட்டிலில் குறுக்காக படுத்திருந்தாள்.

              “அவனும்தான் வர்றான்… இருந்தாலும், நானும் போகணும்..” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.

             “ம்ம்ம்..” என்று சத்தம் வந்தாலும், குரல் ஊடலைக் காட்டியது.

              வாசுதேவன் அவளைத் திருப்பி தனக்கு அருகில் கிடத்தியவன் “காலையில போயிட்டு ராத்திரி வரப் போறேன். அதுக்கு இப்படி இருப்பியா நீ..” என்றவன் பொறுமையாக பேச,

             “போங்க.. போயிட்டு வாங்க.. நான் வேண்டாம்ன்னா சொன்னேன்..” என்று சண்டையிட்டவள் இன்னும் அவனை ஒட்டிக்கொள்ள, சிரித்துக் கொண்டவன் அவளை அள்ளி தன்மீது போட்டுக் கொண்டான்.

              அவன் செய்கை திருவை சற்று குளிர்விக்க, “எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க கோயம்புத்தூர்ல இருந்து..” என்றாள் வாசுதேவனிடம்.

               “என்ன வேணும் என் பால்கோவாவுக்கு..” என்றவன் அவள் கன்னமிரண்டையும் கிள்ளி முத்தமிட,

               “நான் என்ன குழந்தையா..” என்று கோபம் கொண்டாள் மனைவி.

               வாசுதேவன் சிரிப்புடன் “பொசிஷன் சரியா இல்லைடி.” என, அவன் முகத்தை நெருங்கி வந்தாள் திரு.

              கன்னத்தையும் அவனுக்கு வாகாக திருப்பிக் காண்பிக்க, “நீ கொடுடி..” என, அவள் கன்னத்தை கடித்து வைத்தான் வாசுதேவன்.

                திரு தலையசைத்து மறுக்க, “எனக்கு வேணும்..” என்று அவள் இடையில் வாசுதேவனின் கைகள் தாளமிட, “அச்சோ.. கூசுது மாமா..” என்றபடி அவன் மீதே திருமகள் புரள, அவளை கட்டிலில் தள்ளி அவள்மீது சரிந்தவன் “ம்ம்ம்.. கொடு..” என்றான் அதிகாரமாக.

              திருமகள் அதீதமாக மூச்சு வாங்கி கொண்டிருக்க, அதற்குமேல் பொறுமையில்லாமல் அவள் இதழ்களை நெருங்கியவன் இதமாக அவளை முத்தமிட தொடங்க, அவன் மறந்துவிட்டானென அவன் முத்தத்தில் திளைக்க தொடங்கிவிட்டாள் திருமகள்.

            அவள் கிரங்கிய நேரம் அவள் சேலையை வாகாக அவள் மீதிருந்து பிரித்தெடுத்தவன் “திரு..” என்று பிதற்றிக்கொண்டே முன்னேற, மயக்கம் தீர்ந்து விலகும் நேரம் மீண்டும் பிடித்துக் கொண்டான் அவளை.

             திரு “மீண்டுமா..” என்று கண்திறக்க, “ம்ம்ம்..” என்றவன் இதழ்களை குவித்து காண்பிக்க, அவள் இருந்த நிலையில் வெட்கம் தின்றது திருமகளை.

             தன் கைகளைக் கொண்டு அவன் கண்களை மூடியவள் நகரப் பார்க்க, விடாமல் பிடித்து வைத்துக் கொண்டான் வாசுதேவன்.

             “மாமா..” என்றவள் செல்லமாக சிணுங்க, “அநியாயம் பண்ணாத திரு.” என்றான் வாசுதேவன்.

             மேலும் அவளை அணைத்திருந்த கைகளும் விலக, அவனை நகர விடாமல் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் திருமகள். அவன் கேட்டபடியே அவன் இதழிலும் இதழ் பதிக்க, அவள் விலகிய நிமிடம் அவள் முகமெங்கும் முத்தமிட்டு சிவக்க வைத்தான் வாசுதேவன்.

              எப்போது உறங்கினோம் என்பதை அறியாமல் இருவரும் உறங்கியிருக்க, அடுத்தநாள் காலை ஆறுமணி அளவில் தான் விழிப்பு வந்தது வாசுதேவனுக்கு. அடித்துப் பிடித்து தயாரானவன் வேகமாக புறப்பட, அவன் கிளம்பிய நிமிடம் முகம் வாடிப்போனது திருமகளுக்கு.

              இயல்பாக இருப்பது போலவே காட்டிக்கொண்டு அவள் வீட்டைச் சுற்றிவர, மதியம் போல் கோதையின் மகனையும் சென்று பார்த்து வந்தாள். மாலை வரை நேரத்தைக் கடத்தியவளுக்கு அதற்குமேல் முடியாமல் போக, விசாலத்தை அழைத்துக் கொண்டு ஆண்டாளை தரிசிக்க சென்றுவிட்டாள் அவள்.

                இவர்கள் ஆண்டாளை தரிசித்து முடித்து வெளியே வரும் வேளை, இவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தான் சாரதி. விசாலம் அவனைப் பார்த்துவிட, அவனை அழைத்து பேச தொடங்கிவிட்டார் அவர்.

                திருமகள் அவனிடம் எதுவும் கேட்பதற்கு முன்னே “வாசு கோயம்புத்தூருக்கு போறதா சொன்னானேம்மா.. கிளம்பிட்டானா..? ரெண்டு நாளா ஊர்ல இல்லாம போகவும். அவன்கிட்ட பேச முடியல.” என்றான் சாரதி.

               அவனிடம் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் “கிளம்பிட்டாங்க அண்ணா.. நைட் வருவேன்னு சொல்லி இருக்காங்க..” என்றவள் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.

                விசாலமும், அவளும் கோவிலில் இருந்து வீடு வர, அன்று இரவு பத்து மணிபோல் வாசுதேவன் அழைத்துவிட்டான் அவளை.

                “இன்னைக்கு வர முடியாது திரு.. வேலை இன்னும் முடியல.. நாளைக்கு தான் கிளம்புவேன்..” என,

               “ம்ம்ம்ம்.. சரிங்க..” என்றவள் “சாரதி அண்ணா இருக்காங்களா கூட..” என்று கேட்க,

                “இவ்ளோநேரம் இங்கேதான் இருந்தான் திரு. இப்போதான் டிபன் வாங்க வெளியே போயிருக்கான்..” என்றான் வாசுதேவகிருஷ்ணன்..

                 “ஓஓ.. சரி, எனக்கு தூக்கம் வருது மாமா.. வச்சிடறேன்..” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

                  வாசுதேவனுக்கு என்னவோ அவள் பேச்சு இயல்பாக இல்லை என்றுபட, அவளிடம் பேசியது மொத்தத்தையும் ஓட்டிப் பார்த்தான் இப்போது.

                 சாரதியை விசாரித்தது உரைக்க, சட்டென சாரதிக்கு அழைத்தான் வாசுதேவன்.

                எடுத்த எடுப்பில் அவனிடம் “திருவை எங்கேயும் பார்த்தியா..” என்று கேள்வியெழுப்ப,

                 “தங்கச்சியை கோவில்ல பார்த்தேண்டா.. சரியா பேச முடியல.. கிளம்பிடுச்சு..” என்று அவன் கூறி முடித்த நிமிடம் வாய்க்கு வந்தபடி அவனை அர்ச்சிக்கத் தொடங்கிவிட்டான் வாசுதேவன்.

                  பத்து நிமிடத்திற்கு மேலாக திட்டு வாங்கியவன் அதற்குமேல் முடியாமல் அழைப்பைத் துண்டித்துவிட, அதன்பின் தான் ஓய்ந்தான் வாசுதேவன்.

               உடனடியாக அவன் மனைவிக்கு அழைப்பு விடுக்க, அழைப்பை ஏற்கவில்லை திருமகள். நான்குமுறைக்கும் மேல் அவன் விடாமல் அழைக்கவும் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டாள்.

                      “அழுது கொண்டிருப்பாள்..” என்பதே அவனை கடினமாக்க, யோசிக்காமல் அன்னைக்கு அழைத்துவிட்டான்.

         விசாலத்திடம் இரண்டு வார்த்தைகள் பேசியவன் “திரு.. போனை எடுக்கலம்மா.. அவகிட்ட கொடுங்க..” என்றுவிட, நேரே அலைபேசியை எடுத்துச்சென்று மருமகளிடம் நீட்டினார் விசாலம்.

            அவளின் கலங்கிய முகம் பார்த்தவர் “என்னடி..” என,

           அலைபேசி இணைப்பில் இருந்தவன் “நீ போம்மா.. நான் பேசிக்கறேன்..” என்றான் அன்னையிடம்.

           விசாலம் மேற்கொண்டு ஏதும் பேசாமல் சென்றுவிட, தங்கள் அறைக்கதவைத் தாழிட்டு உள்ளே வந்தாள் திருமகள்.

            அப்போதும் கணவனிடம் ஏதும் பேசாமல் அவள் மௌனம் காக்க, “பேசு திரு..” என்றான் வாசுதேவன்.

            “என்கிட்டே பொய் சொல்றவர்கிட்ட எனக்கு எதுவும் பேச வேண்டாம்..”

            “பொய் சொல்லிட்டு வந்திருக்கும்போதே முக்கியமான விஷயம்னு புரியலையா உனக்கு.. நான் வந்தபிறகு என்கிட்டே கேட்காம உட்கார்ந்து அழுவியா..”

             “நான் ஏன் அழணும்.. நான் அழமாட்டேன்.. நிஜமாவே தூங்க தான் போறேன். என்னை தொல்லை பண்ணாதீங்க நீங்க..” என்று அழுத்தமாக கூறியவள் மீண்டும் அலைபேசியை அணைத்துவிட்டாள்.

             ஆனால், அதற்குமேல் உறக்கமும் வரவில்லை. கணவன் உண்மையை மறைத்ததே பெரிதாகத் தெரிய, அவனை திட்டிக்கொண்டே படுத்திருந்தவள் அதிகாலையில் தான் அசந்திருந்தாள்.

              காலை பத்து மணி வரை உறக்கம் தெளியாமல் அவள் உறங்கிவிட, விசாலமும் எழுப்பவில்லை. இரவு எப்போது உறங்கினாளோ என்ற யோசனையில் மருமகளை உறங்கவிட்டிருந்தார் அவர்.

              ஆனால், பத்து இருபதுக்கு வந்து சேர்ந்தவன் தங்கள் அறைக்கதவை படபடவென தட்ட, அவனது அவசரத்தில் வேகமாக உறக்கம் களைந்து எழுந்து அமர்ந்தாள் திரு.

             கதவு மீண்டும் வேகமாக தட்டப்பட்டதில், விரைந்து அவள் கதவைத் திறக்க, அவளைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

             திரு அவன் செயலில் அதிர்ந்து பார்த்திருக்க, அவளை கண்டுகொள்ளாமல் அலமாரியில் இருந்து உடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான் வாசுதேவன்.

                      திரு முகத்தை துடைத்துக் கொண்டு மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொள்ள, சில நிமிடங்களில் வெளியே வந்தவன் அவளை கண்டுகொள்ளாமல் கட்டிலின் மறுபுறம் படுத்துவிட, கொதித்துக் கொண்டு வந்தது திருமகளுக்கு.

           அருகில் இருந்த தலையணையை எடுத்தவள் அதைக்கொண்டே அவனை அடித்து துவைக்க, பட்டென திரும்பி அவள் கையைப் பிடித்தவன் தலையணையைப் பிடுங்கி கொண்டான்.

            திருமகள் கையை விடுவிக்க போராட, அவளை விடாமல் அணைத்து கொண்டவன் “தூங்கு… தூங்கி எழுந்ததும் நானே சொல்றேன்..” என்றபடியே கட்டிலில் சரிய,

            “எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்..” என்றபடியே எழுந்து கொள்ள முயன்றாள் திரு.

           “சரி ஓகே.. தெரிஞ்சுக்காத. ஆனா, நான் ரொம்ப டயர்ட். என்னை தூங்க வை..” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கண்களை மூடிக் கொண்டான். அவன் வார்த்தையை மீறாமல் திரு அமைதியாக, அடுத்த பத்து நிமிடங்களில் நிஜமாகவே உறங்கியிருந்தான் வாசுதேவன்