வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து அவளிடம் விளக்கம் கொடுத்ததே பெரியது.
அதையும் அவள் கண்டுகொள்ளாமல் போக, “இதற்குமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது.” என்று முடிவெடுத்துக் கொண்டவனாக, விரைப்புடன் சுற்றிக் கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அன்றைய விளக்கத்திற்கு பின் இன்றுவரை திருமகளை எந்த வகையிலும் அவன் நெருங்கவே இல்லை. இரவுகளில் கூட அவள் அருகாமை மட்டுமே போதும் என, விரல்களை கூட தீண்டாமல் விரதம் பிடித்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால், அவன் மனைவியோ அவனின் இந்த மாற்றங்களை நான் உணரவே இல்லை என்று பாவனை செய்து கொண்டிருந்தாள். அதுவேறு “அவ்ளோ திமிரா இவளுக்கு..” என்று வாசுதேவகிருஷ்ணனை கொதிக்கவைத்தது.
இவர்களுக்குள் இப்படி ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாலும், கணவன் சொல் தட்டாத மனைவியாக தம்பியை அடுத்தநாளே சென்னைக்கு விரட்டியிருந்தாள்.
“நான் அவனுங்க பக்கமே போகமாட்டேன்க்கா..” என்று தம்பி சத்தியம் செய்தபின்னும் கூட, “நீ இங்கே இருக்கவே வேண்டாம். கிளம்பு சென்னைக்கு.” என்று அவனை அனுப்பி வைத்திருந்தாள்.
அந்த மட்டும் இதையாவது நான் சொல்லி கேட்டுக் கொண்டாளே என்று நக்கலாக நினைத்துக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.
இவர்களுக்கு இடையில் ஊடல் தொடங்கி கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்து போயிருக்க, மாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு நாளை காப்பு கட்டுவதாக இருந்தது. விசாலமும் மருமகள் உதவியுடன் வீட்டை சுத்தம் செய்வது, திருவிழா நேரத்தில் வீட்டில் செய்யவேண்டிய பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கவனிப்பது என்று பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்.
இத்தனை ஆண்டுகள் தன் வீட்டில் ஒரு பெண்பிள்ளை இல்லையே என்று ஏங்கி கொண்டிருந்தவருக்கு இந்த ஆண்டு மருமகள் துணையாக நிற்க அவரைக் கையில் பிடிக்க முடியுமா…
அன்று மருமகளை காத்து தன் கையில் ஒப்படைத்ததற்காக மாகாளியம்மனுக்கு பூக்குழி இறங்குவதாக வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தார் அவர்.
வீட்டிலும் மருமகள் கையால் முளைப்பாரி வளர்க்க திட்டமிட்டிருந்தார். இவரின் அத்தனை திட்டமிடுதலும் திருமகளை அருகில் வைத்துக் கொண்டே நடக்க, அவளும் அத்தையுடன் சேர்ந்து அவரின் தாளத்திற்கு ஆடிக் கொண்டிருக்க, பெரிதும் பாதிக்கப்பட்டவன் வாசுதேவகிருஷ்ணன் தான்.
இந்த மாமியார் மருமகளின் குலாவல்களை எளிதாக கடந்துவிட முடியவில்லை அவனால். அதுவும் ஒரே பிள்ளையாக பெற்றவர்களின் மொத்த அன்பும் தனக்கே தனக்காக என்று உரிமை கொண்டாடி வந்தவனால் இப்போது அன்னை மனைவியை சீராட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது.
அதுவும் அவளை அறைக்குள் தள்ளிய நாள் முதலாக மகனுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டிருந்தார் விசாலம். ராகவன் எப்போதும் போல் பேசினாலும், அன்னையின் புறக்கணிப்பை தாங்க முடியாமல் சுருண்டு கொண்டிருந்தான் வாசுதேவன்.
ஆனால், எதையும் முகத்தில் காண்பிக்காமல் “எனக்கென்ன.. நான் நல்லாதானே இருக்கேன்.” என்ற தோரணையுடன் அவன் சுற்றி வர, “கொழுப்பெடுத்தவன்..” என்று அன்னையும், “இவருக்கு நான் பேசாம இருந்தா கவலையே இல்லையா..” என்று மனைவியும் வறுத்துக் கொண்டிருந்தனர் அவனை.
எப்படியாகினும் திருமகளுடன் ராசியாகிவிட வேண்டும் என்று நெஞ்சம் முழுதும் ஆவல் இருந்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு. ஆனால், மீண்டும் ஒருமுறை அவளிடம் சென்று நிற்க மாட்டேன் என்று வீம்பும் சரிக்கு சரியாக இருந்தது. எப்படி அவளை தன்வழிக்கு கொண்டுவருவது என்று அவன் தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிருக்க, இதோ திருவிழாவுக்கு காப்பு கட்டியானது.
இன்னும் பதினோரு நாட்கள் அவளை நெருங்க முடியாது என்று ஒருபக்கம் வருத்தம் கொண்டாலும், “ஆமா நெருங்கிட்டாலும்.” என்று சலித்து கொண்டது மனது. பின்னே கட்டியணைத்து படுத்தாலும், கண்களை இறுக மூடிக் கொள்பவளிடம் என்னவென்று அவன் எதிர்பார்க்க முடியும்.
வேண்டாம் என்று விலகி இருந்தவன் தான். அவளிடமும் எதையும் எதிர்பார்க்காமல் சுற்றி வந்தவன் தான். ஆனால், வேண்டும் வேண்டுமென்று அவனை விரும்பி வளைத்து சிறைபிடித்துக் கொண்டவள் இன்று விலகி நின்று வேடிக்கையாக விளையாட்டுக் காட்ட, அவள் விலகலை விளக்கி கொள்ள முடியாமல் வெந்து கொண்டிருக்கிறான் வாசுதேவகிருஷ்ணன்.
ஊர் திருவிழாவின் கட்டளைக்காரர்கள் என்பதோடு, திருவிழா கமிட்டி தலைவராக ராகவன் இருக்க, அதைவைத்து ஏகப்பட்ட பொறுப்புகள் அவன் கைவசம் இருக்க, இதில் இவர்கள் குடும்பத்தின் பழக்கமாக அன்னதானம், ஒருநாள் திருவிழா பொறுப்பு என்று அநேக கடமைகள்.
மனைவிக்காக தேடல் மனதோடு ஒதுங்கிக்கொள்ள, நிற்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். இத்தனை கலவரத்திலும் திருமகள் அவன் உணவு நேரங்களை தவற விடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்க “ஆமா.. ரொம்ப அக்கறை.” என்று நக்கல் கலந்த கோபம் கொண்டாலும், அந்த உணவு நேரங்கள் சற்று ஆறுதலானவை வாசுதேவகிருஷ்ணனுக்கு.
இதோ இன்றும் கோவிலில் அமர்ந்து தேருக்கான பூவேலைகள் மற்றும் அலங்காரங்கள் குறித்து மற்றவர்களுடன் அவன் விவாதித்துக் கொண்டிருக்க, சாரதியின் கையில் இருந்த அவன் அலைபேசி அலறியது. சாரதி அழைப்பை பார்க்கவும், ஏற்கும் துணிவு இல்லாமல் வாசுதேவனிடம் நீட்டிவிட்டான்.
அவள் அழைப்பில் வாசுதேவனின் கண்கள் அனிச்சையாக கையில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, நேரம் இரண்டைத் தொட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவளிடம் பேச முடியாமல் அழைப்பைத் துண்டித்து சட்டையில் போட்டுக் கொண்டவன் பேச்சு வார்த்தையை தொடர, அவர்களின் பேச்சு முடிகையில் மணி இரண்டு இருபது.
இதற்குள் நான்கு முறை அழைத்திருந்தாள் மனைவி. அவள் இப்படி விடாமல் அழைப்பது பிடித்து தொலைக்க, வேண்டுமென்றே அழைப்பை ஏற்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். எப்போதும் மதிய உணவுக்கு வீட்டிற்கு செல்பவன் இன்று வேண்டுமென்றே அவர்களின் சர்க்கரை ஆலையில் வந்து அமர்ந்து கொண்டான்.
உடன் சாரதியும் இருக்க, திருமகள் பொறுமையிழந்தவளாக சாரதிக்கு அழைத்து விட்டாள். சாரதி இருவரும் சர்க்கரை ஆலையில் இருப்பதாக தகவல் கூற, அவனிடம் அதற்குமேல் எதையும் கேட்க முடியாமல் வாயை மூடிக் கொண்டாள் திருமகள்.
வாசுதேவகிருஷ்ணன் என்றோ ஒருநாள் “நம் விஷயங்கள் அறையை தாண்டி வெளியே செல்லக்கூடாது..” என்று எச்சரித்திருக்க, இன்று வரை அவன் வார்த்தையை மீறும் துணிவு வரவில்லை அவளுக்கு.
ஆனால், இப்படி தன்னை அலையவிடுபவன் மீது கோபம் பெருக, அழைப்பைத் துண்டித்து பத்து நிமிடங்கள் அப்படியே அமர்ந்துவிட்டாள் உணவுமேசையில்.
இந்த பதினைந்து நாட்களாக அவன் உணவு உண்ணும் நேரம் தான் திருமகள் முழுமையாக அவனை தனக்குள் ஈர்த்துக் கொள்வாள். அவன் பார்வை உணவில் பதியும் நேரங்களில் வஞ்சனை இல்லாமல் அவனை ரசித்துக் கொள்பவள் அவன் நிமிரும் நேரம் உணவை பார்த்து கொண்டிருப்பாள்.
இரவுகளிலும் அவன் உறங்கும் நேரங்களில் தான் அவனை கண்களில் நிறைத்து கொள்வது. ஏற்கனவே உண்பதற்கும், உறங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்கு வருபவன் அவன். இப்போது திருமகளின் முகத்திருப்பலும் சேர்ந்து கொள்ள அவன் வீட்டில் இருப்பது இன்னும் அரிதாகிப் போக, அவன் அருகாமையை எக்காரணம் கொண்டும் தவறவிடமாட்டாள் அவள்.
இன்று அந்த உணவு நேரத்திற்கும் அவன் வெடி வைக்க, கணவன் என்றானவன் மீது கண்மண் தெரியாத கோபம். எப்படியும் அவனைப் பார்த்தே தீர வேண்டும் என்று ஒரு வேகம். நீ என்னை அலட்சியப்படுத்த முடியாது என்று உணர்த்திவிடும் துடிப்பு அவளிடம்.
சமைத்த உணவுகளை அதற்கான டப்பாக்களில் அடைத்து கூடையில் வைத்தவள் தன் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த தனது ஆக்டிவாவில் சர்க்கரை ஆலைக்கு கிளம்பிவிட்டாள்.
அங்கே அவளை வெறுப்பேற்றி அலையவிட்டவன் அவளது சோர்ந்த குரலில் தானும் சோர்ந்து போயிருக்க, பத்து நிமிடங்கள் கூட பொறுக்க முடியாமல் வீட்டை நோக்கி கிளம்பிவிட்டான்.
அவன் வீட்டிற்கு வரவும், விசாலம் “நாச்சியா சோறு கொண்டு வந்தாளே..” என்று தனக்குள் பேசிக் கொள்பவராக விவரம் கேட்க,
“எப்போ கிளம்பினா..” என்று விவரம் கேட்டு நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.
“பத்து நிமிஷம் இருக்கும்..” என்றவர் தன் கையில் இருந்த கணவரின் வேட்டியை உதறி மடிக்க, அவரிடம் கேள்வி கேட்காமல் மீண்டும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் மகன்.
வரும் வழியில் எங்கும் அவளை காணவில்லையே என்று சின்னதாக பதட்டம் தொற்றிக்கொள்ள, “எந்த பக்கம் போயிருப்பா..” என்ற சிந்தனையுடனே தனது வண்டியின் வேகத்தைக் கூட்டினான் அவன்.
சரியாக அதே நேரம் சர்க்கரை ஆலையை நெருங்கியிருந்த திருமகள் நாச்சியார் முரளியால் தடுத்து நிறுத்தப்பட, அவனுடன் இன்னும் இருவர் துணைக்கு நின்றிருந்தனர் இன்று.
திருமகள் அப்படியொன்றும் பயந்து விடவில்லை. அவன் வழியை மறிக்கவும், பட்டென பதறிவிட்டாலும் “வாசுதேவகிருஷ்ணன் பொண்டாட்டி நீ.. உன்னை என்ன செய்திட முடியும் அவனால்.” என்று மனம் உரம் கொடுக்க, வண்டியை நிறுத்தி வண்டியில் அமர்ந்தபடியே அவனை எதிர்கொண்டாள் அவள்.
முரளியும் அவளிடம் அத்துமீறல்கள் எதுவும் செய்யவில்லை. “எப்படியிருக்க திருமகள் நாச்சியார்…” என்று அழுத்தமாக அவள் பெயரை உச்சரித்தவன் குரல் ஏகத்திற்கும் கனிந்து இருந்தது.
“நான் எப்படியிருந்தா உனக்கென்ன. வழியை விடு..” என்று கறாராக திரு எச்சரிக்க,
“அது எப்படி அப்படி சொல்லிட முடியும்.. நடந்தது சரியா நடந்திருந்தா, எனக்கு பொண்டாட்டியா இருந்திருக்க வேண்டியவள் ஆச்சே.. உன்னை விசாரிக்கணும் இல்லையா..” என்று சாதாரணமாக அவன் கூறிவிட,
“பகல் கனவெல்லாம் உனக்கு புதுசு இல்லையே முரளி. உன்னை மாதிரி ஒரு பேடிப்பைய கூட வாழணும்னு விதி இருந்திருந்தா, பஞ்சாயத்துலேயே உசுரை விட்டிருப்பேன்.. “
“யாரடி பேடின்னு சொல்ற..”
“பொட்டச்சி வீட்டுக்குள்ள அவளுக்கே தெரியாம ஒளிஞ்சிட்டு இருக்கவனை வீரன்னு சொல்லி வாழ்த்துவாங்களா..” என்றாள் திரு.
“நான் செஞ்சது அத்தனையும் உனக்காகத்தாண்டி. நீ சரின்னு சொல்லியிருந்தா நான் ஏன் அப்படி நடந்திருக்க போறேன். எல்லாமே உன்னாலதான். நீ மட்டும் என்ன?? சந்தோஷமாவா இருக்க.. உன் அப்பனை கொன்ன குடும்பம் அது. உன்னையும் சும்மா ஒன்னும் கட்டிட்டு போகல..”
“அவனுக்கு கல்யாணமே நடக்காதுன்னு தெரிஞ்சு போகவும் தான் உன்னை வளைச்சுட்டாங்க. இத்தனை நாள்ல உனக்கும் புரிஞ்சிருக்குமே.. அந்த வாசு உன்னையும் உன் தம்பியையும் அடிச்சு விரட்டினதா வேற சொன்னாங்க..” என்று எகத்தாளத்துடன் அவன் வினவ,
“நீ ஆம்பிளை தானா..” என்றாள் திரு. ஏகத்திற்கும் நக்கல் அவள் குரலில்.
“ஏய்..” என்று முரளி அவளை நெருங்க,
“இல்ல… கதை திரிக்கிறதுல பொம்பளை தோத்திடுவா போல உன்கிட்ட.. அதனால தான் கேட்டேன்.” என்றாள் மீண்டும்.
“என்ன உன் புருஷன் ரொம்ப யோக்கியமா.. யோக்கியன் ஏண்டி உன்னை கைநீட்டி அடிச்சான்.. இதுல எங்க அண்ணனுக்கு வேலை வேற வாங்கி கொடுத்திருக்கான்.. என்ன, மொத்தமாக எங்க குடும்பத்தை சிதைச்சுடலாம்ன்னு கணக்கு போட்டு இருக்கானா..” என்று அவன் பேசிக்கொண்டே செல்ல,
“அவரை மரியாதைக்குறைவா இனியும் ஒரு வார்த்தை பேசின, நானே உன்னை கொன்னுடுவேன். மரியாதையா விலகி வழியை விடு.” என்று திரு அதட்ட, அவள் வண்டியில் பொருத்தியிருந்த சாவியை தன் கைகளில் எடுத்துக் கொண்டான் முரளி.
“ஏய்..” என்று திரு கத்த
“தைரியம்தாண்டி உனக்கு.. மூணு ஆம்பளைங்க நிற்கிறோம். கொஞ்சம் கூட பயமில்லாம வாய் குடுத்துட்டு நிற்கிறியே.. இந்த திமிருக்கு தான் உன் பின்னாடி அலைஞ்சுட்டு இருக்கேன் நானும்.” என்று வெட்கமே இல்லாமல் அவன் கூறி வைக்க,
“நீயெல்லாம் ஆம்பளைன்னு நீ மட்டும்தான் சொல்லிக்கணும்.. வழியை விடுடா.. பரதேசி..” என்றாள் திரு.
“ஏற்கனவே ஊருல ஒருத்தனும் மதிக்கிறது இல்ல.. இதுக்குமேல இழக்க ஒண்ணுமே இல்ல. உனக்காவது ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டு போறேனே.” என்றவன் ஒரு குரூர சிரிப்புடன் அவளை நெருங்க, அவன் குணத்தில் அருவருப்பாக உணர்ந்தாள் திருமகள்.
தன்னைத் தொட உயர்ந்த அவன் கையை தட்டிவிடுவதற்காக கூட, அவனைத் தொடுவதாக இல்லை அவள். முகத்தில் அருவருப்பை வெளிப்படையாக காண்பித்தவள் சட்டென பின்னடைய, அவளை எட்டி பிடிக்க முயன்றான் முரளி.
அவன் கையில் சிக்காமல் நகர்ந்து கொண்டவள் “மரியாதையா போயிரு.. வேண்டாத வேலை செஞ்சிட்டு இருக்க நீ.” என்று பேசிக்கொண்டே வேகமாக பின்னே நகர்ந்து கொண்டிருக்க, முரளி ஆணவத்தில் சிரிக்கவும், வாசுதேவனின் வண்டி சத்தம் அவர்களை சமீபிக்கவும் சரியாக இருந்தது.
பட்டென திரும்பி பார்த்தவள் நிம்மதியுடன் இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக்காற்றை வெளியே விட, அசுரவேகத்தில் அவளை நெருங்கியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
மனைவியை வேகமாக கண்களால் தொட்டு மீண்டவன் அவளின் பயந்த முகத்தில் “என்னம்மா..” என்று வேகமாக அவள் கையைப் பிடிக்க, அவன் கனிவில் கண்ணீர் சிந்தியது கண்கள்.
“அவனை கொன்னுடு மாமா..” என்று சிறுபிள்ளையாக அவள் தேம்பியழ, துணைக்கு ஆட்கள் இருந்த தைரியத்தில் அசராமல் நின்று வேடிக்கைப் பார்த்திருந்தான் முரளி.
கண்ணீர் சிந்தியவளை லேசாக அணைத்தபடி பிடித்தவன் “அழாத திரு..” என்று அவளை அதட்டி முரளியை ஆத்திரத்துடன் நோக்க, “என்னை என்ன செய்ய முடியும் உன்னால்..” என்பவனாக நின்றிருந்தான் முரளி.
அந்த பார்வை வாசுதேவகிருஷ்ணனை உசுப்பிவிட, மனைவியை தள்ளி நிறுத்தியவன் எட்டி அவன் கழுத்தைப் பிடித்திருந்தான். அவன் வேகத்தில் முரளியின் கண்கள் கலங்கி சிவந்துவிட, அவன் உடன் வந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் வாசுதேவனின் கரங்கள் அவன் கழுத்தில் இருந்து அகலவே இல்லை.
திருவுக்கு அந்த நிமிடம் வேறெதையும் விட, தங்களின் வாழ்வு பெரிதாக தெரிய முரளியைக் கொன்று விடுவானோ என்று நா உலர்ந்து போனது. வாசுதேவகிருஷ்ணன் இல்லாத வாழ்வை வாழ்ந்துவிட முடியுமா அவளால்.
இவனைக் கொன்று நாங்கள் ஏன் எங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டும் என்று உள்ளுக்குள் அவள் துடிதுடித்த நிமிடம் அவள் துடிப்பை உணர்ந்தவன் போல் முரளியை அந்தரத்தில் இருந்து கீழே வீசியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
வாசுதேவகிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்தது போலவே, ருத்ராகாரமாக நின்றிருந்தவனை ஏறெடுத்தும் பார்க்க முடியாமல் கழுத்து நரம்புகள் இழுத்தது முரளிக்கு. கழுத்தைப் பிடித்துக் கொண்டு அவன் கீழே கிடக்க, அவனுடன் வந்த இருவரையும் ஒரே ஆளாக போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவர்கள் அடி தாங்க முடியாமல் முரளியை அம்போ வென விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க, வாசுதேவகிருஷ்ணனின் பார்வை மீண்டும் முரளியிடம் திரும்பியது.
கீழே விழுந்து கிடந்தவன் முயன்று எழுந்து கொள்ள, அவன்மீது இரக்கம் வர மறுத்தது வாசுதேவனுக்கு. கலங்கிய திருவின் தோற்றம் கண்ணில் நிற்க, கைகள் ஓய்ந்து போகும் வரை அவனை அடித்து ஓய்ந்தவன் முரளியின் இரண்டு கைகளையும் முறித்தபின்பே சற்று ஆறுதல் கொண்டான்.
அப்போதும் அவன் நெஞ்சில் நான்கு மிதி மிதித்து “ஒழுங்கா ஊரை விட்டு ஓடிடு. இல்ல, கொன்னு காளியம்மாவுக்கு பலி கொடுத்திடுவேன்..” என்று கண்கள் சிவக்க உரைத்து, அதே வேகத்தோடு வண்டியை எடுத்தவன் திருவைப் பார்க்க, அவன் பார்வையில் வேகமாக வந்து அவன் பின்னே ஏறி கொண்டாள் திரு.
“என்னோட வண்டி மாமா.” என்று அவள் நினைவூட்ட, அதைக் காதில் வாங்காதவனாக வெகு வேகமாக வண்டியை செலுத்தியவன் அடுத்த ஆறு நிமிடங்களில் வீட்டை அடைந்திருந்தான் மீண்டும்.
“என்ன செய்ய போகிறானோ..” என்று பதட்டத்துடன் திரு கைகளைப் பிசைந்து கொண்டு முற்றத்தில் நின்றுவிட, அவளை நெருங்கிய விசாலத்திடம் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறிவிட்டாள் திரு.
விசாலம் “அவ்ளோ துணிச்சல் வந்துடுச்சா அவனுக்கு.. என்ன செய்யுறேன் பாரு அவனை..” என்று கிளம்ப, அவர் சத்தத்தில் அறையில் இருந்து வெளியே வந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திரு பயந்தவளாக நிற்க, “எதுக்குடி இப்போ நடுங்கிட்டு இருக்க..” என்று அவளிடம் வாசுதேவன் கத்த, அவன் கோபத்தில் உடல் தூக்கிப்போட்டது திருவுக்கு.
அவள் வெகுவாக பயந்து போயிருக்கிறாள் என்பது புரிய, “அவளை ஏன்டா அதட்டுற..” என்று முன்னே வந்த விசாலத்தை பார்வையால் ஒதுக்கியவன் “நீ வா..” என்று மனைவியை அறைக்குள் அழைத்துச் சென்றிருந்தான்.
மகன் மருமகளை சரிசெய்துவிடுவான் என்று விசாலம் பார்த்து நிற்க, அவர்களின் விலகல் இந்த முரளியால் இன்னும் பெரிதாக போவது அப்போது தெரியவில்லை அவருக்கு.