“என்கிட்டே நீங்க நீங்களா இருக்கணும் இல்லையா மாமா..” என்று கண்ணீருடன் திருமகள் கேட்டு அமர்ந்திருக்க, அவளுக்கு உண்மையில் என்ன பதில் கூறுவது என்று புரியாத நிலையில்தான் இருந்தான் வாசுதேவன்.
அவள் கேட்பதில் தவறென்ன என்று அவன் மனம் மங்கைக்கு ஆதரவாக சாய, தவறுகிறோமோ என்று தடுமாறி நின்றான் வாசுதேவகிருஷ்ணன். பேச்சை காரணம் காட்டி அவனை ஏளனம் செய்தவர்களை அலட்சியப்படுத்தத்தான் அவன் பேசாமல் போனது.
ஆனால், இங்கே ஒருத்தி அவன் பேச்சை கேட்கவே தவமிருக்க, கொஞ்சமாக இனித்தது அந்த தருணம். இனிப்பை தந்தவளோடு இணக்கமாகிக் கொள்ள நெஞ்சம் விரும்ப, திருமகள் நாச்சியாரிடம் மெல்ல தலையசைத்தான் வாசுதேவகிருஷ்ணன்.
திரு அவன் தலையசைப்பு புரியாமல் மௌனம் காக்க, “பேசுவோம்.. நமக்குள்ள பேசிக்கலாம்.” என்றான் நிதானம் தவறாமல்.
திரு சந்தேகம் தீராமல் அவன் முகம் பார்க்க, “உடனே உஉன்னை ம்ம்மாதிரி ப்பேச முடியாது.. கொஞ்சம் ப்பொறுமையா ப்பேசுவேன்.” என்றான் தீர்மானமாக
திரு மீண்டும் “சத்தியமா..” என்று கைகளை நீட்ட, “என்ன்னை நம்ப ம்மாட்டியா ந்ந்நீ..” என்று கோபத்துடன் நடுங்கியது வாசுதேவனின் குரல்.
“சரி சரி.. சாரி..” என்று உடனே சமாதானத்திற்கு வந்தவளை அதற்குமேல் எங்கே வாசுதேவன் அதட்ட.
வாசுதேவன் மென்மையாக பெண்ணவளைப் பார்த்திருக்க, மதியம் கோவிலில் இருந்து வாங்கி வந்திருந்த பால்கோவாவை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள் திருமகள்.
வாசுதேவன் “நீ சாப்பிடவே இஇல்லையா..” என,
“அதெல்லாம் முடிஞ்சுது. இது உங்களுக்கு எடுத்து வச்சேன்..” என்று தகவல் கூறிக்கொண்டே, அவன் கையிலிருந்த இனிப்பில் கொஞ்சம் எடுத்து உண்ண, “சசாப்பிடு.” என்று அவளிடமே நீட்டினான் வாசுதேவகிருஷ்ணன்.
“ம்ஹூம்.. நீங்க சாப்பிடுங்க..” என்றவள் அந்த இலையிலிருந்த கோவாவை தன் கையால் எடுத்து ஊட்டிட, வாசுதேவனின் மனம் இன்னிசையாக இசைத்துக் கொண்டது.
மென்மையாக அவன் இதழ் விரிக்க, அவன் இதழில் விரல்கள் உரசும்படி ஊட்டிக் கொண்டிருந்தாள் பெண். அதில் ஆணவன் வன்மையைத் தத்தெடுக்க, அடுத்த வாய் ஊட்டியவளின் விரல்கள் அவன் கட்டுப்பாட்டில் இருந்தது.
அவள் தந்த இனிப்பு இதழில் அப்படியே இருக்க, அவள் கையை சற்று வன்மையாக நெறித்தவன் அவளை நெருங்கியிருந்தான். அவள் கொடுத்த இனிமையை அவளிடம் திருப்பிக் கொடுக்கும் வேகம் மிகுந்து இருந்தது அவனிடம்.
“அச்சோ..” என்ற சிறு சத்தமும் அவனுள்ளே அடங்கிப்போக, சற்றே நீளமான முற்றுகை. தான் உணர்ந்த இனிப்பின் சுவையை அவள் இதழில் தேடியவன் அதன் மென்மையில் அகலாமல் அவ்விடமே அடைக்கலமாகி இருக்க, சிறுபெண் மூச்சுக்கு தவித்துப் போயிருந்தாள்.
“ம்ம்ம்..” என்று அவள் திணற, ஒரு நொடி அவளைவிட்டு விலகியவன் “என்ன..” என்பதாக புருவம் உயர்த்த, அவன் முகம் பார்க்கும் திடமில்லை பெண்ணிடம். அதுவும் கள்ளமொழிகள் பேசிய அவன் கண்களை காணும் துணிவு இல்லாமல், மறுப்பாகத் தலையசைத்து அவள் பார்வையை தாழ்த்திக் கொள்ள, அப்படியே பருகிக் கொள்ளும் ஆவலை நிச்சயம் தூண்டினாள் திருமகள் நாச்சியார்.
பார்வையால் தீண்டியே அவளைப் பற்றிக் கொள்ள செய்தவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொள்ள, இன்னமும் இயல்பாகவில்லை திருமகள். அதுவரை அத்தனைப் பேசிக் கொண்டிருந்தவள் பேசும் மொழி மறந்தவளாக அவன் இருக்கும் பக்கமே திரும்பாமல் அமர்ந்திருக்க, வாசுதேவன் அவளை விடுவதாக இல்லை.
அவளின் சேலை மறைக்காத இடையை பற்றியவன் அவள் வயிற்றில் கைகொடுத்து தனக்கு நெருக்கமாக்கி கொண்டான் திருமகளை.
அவள் உடல் வெளிப்படையாக நடுங்கி கொண்டிருக்க, அவள் தோள்பட்டையில் முகம் பொருத்திக் கொண்டவன் “என்ன மொழி மறந்து போச்சா திருவுக்கு..” என்றான் கேலியாக.
மெல்லிய அவன் தாடை ரோமங்கள் ரவிக்கை மறைக்காத வெற்றுடம்பில் பட்டு இம்சிக்க, உடல் சிலிர்த்தது திருவுக்கு.
“ஏதாவது பேசு திரு.” என்று வாசுதேவன் மீண்டும் அவள் கழுத்தில் இதழ்களால் உரச, “ம்மாமா.” என்று திக்கினாள் பெண்.
வாசுதேவனுக்கு அவளை இப்படி வாய்மூடச் செய்வது பிடித்திருக்க, தன் அணைப்பில் இறுக்கம் காட்டினான். திரு தாங்க முடியாமல் “மாமா..” என்று முனகலுடன் அவன் நெஞ்சில் மொத்தமாக சாய்ந்துவிட, அதற்குமேல் காத்திருக்கவில்லை வாசுதேவகிருஷ்ணன்.
தயக்கங்கள் எல்லாம் தகர்ந்து போக, தன்னவள் இவள் என்ற எண்ணமே அவனை முன்னேற்றியது. அதுவும் திருமகளின் கண்களில் பயமோ, பதட்டமோ தெரிந்திருந்தால் யோசித்து இருப்பானோ என்னவோ. அவள் கண்கள் மொத்தமாக மயங்கியிருக்க, அவன் கண்டுகொண்டது அவளின் அதீத காதலைத்தான்.
அவள் கண்களில் தெரிந்த உணர்வுகள் அவனுக்கும் மயக்கத்தை தருவிக்க, மயக்கம் தீர்க்க அவளையே மருந்தாக்கி கொண்டான். இருவருமே ஒருவரில் ஒருவர் மயங்கி, மயக்கி மயக்கம் தெளிந்து விலகுகையில் நள்ளிரவு கடந்திருந்தது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவன் தான் வாசுதேவகிருஷ்ணன். அந்த கசப்பான அனுபவத்திற்கு பின் திருமணம் என்ற ஒன்றை கனவிலும் நினைத்ததில்லை. அதற்காக கோதை மீது தீராக்காதலா என்றால் அதுவுமில்லை.
ஏதோ ஓர் வெற்றிடம் அவனை மொத்தமாக அடைத்துக் கொள்ள, திருமண உறவை ஏற்கவே மிகுந்த தயக்கம்தான். இன்னொரு பெண்ணின் நிராகரிப்பை தாங்க முடியும் என்று தோன்றாததால், திருமண எண்ணத்தையே ஒதுக்கித்தான் வைத்திருந்தான்.
அன்று கோவில் முன்னே அன்னை தாலி கட்ட சொன்னபோது கூட, பெரிதான தயக்கம் தான். அவளின் மனம் என்ன என்று தெரியாமல் எப்படி இதை செய்ய முடியும்..? அவளுக்கு வேறு கனவுகள் இருந்தால் மொத்தமாக நொறுங்கிவிடாதா..? அவளைக் காயப்படுத்தி விடாதா.? என்று தான் அவன் யோசித்தது.
எங்கும் தன்னைக் குறித்து ஒருநொடி கூட சிந்திக்கவில்லை அவன். இறுதியாக அன்னை உயிரை பணயம் வைக்கவும்தான் பணிந்தது. அப்போதும் அவளுக்கு விருப்பமில்லையெனில் விலகிக் கொள்ள நினைத்தவன் தான்.
ஆனால், தாலி கட்டிய நாள் தொட்டு இன்றுவரை ஏதோ ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருந்த திருமகள் நாச்சியார் அழகாக ஆட்கொண்டிருந்தாள் வாசுதேவகிருஷ்ணனை.
இத்தனை ஆண்டு தவத்தை எண்ணி ஒரே வாரத்தில் முறியடித்துவிட்டாளே.. என்று லேசாக ஆதங்கம் கொண்டாலும், அருகில் அழகாக அயர்ந்து உறங்கிப் போயிருந்த மனைவியைக் காணுகையில் பட்ட வலிகள் அத்தனையும் எங்கோ தூரமாகச் செல்வது போல் ஒரு எண்ணம் எழுந்தது வாசுதேவனுக்கு.
தனது இடது கையில் தலைவைத்து மார்பில் ஒண்டிக் கொண்டிருந்தவளை அவள் உறக்கம் கலையாமல் இரு கைகளால் அணைத்துக் கொண்டவன் அப்படியே உறங்கிப் போயிருந்தான்.
அடுத்தநாள் காலை இருவருக்குமே சற்றுத் தாமதமாகவே விடிய, வாசுதேவகிருஷ்ணன் குளித்து வந்த பின்பும் உறக்கம் தெளியவில்லை திருமகளுக்கு. வாசுதேவன் அருகில் அமர்ந்து அவளை அசைக்க “தூங்க விடுங்க மாமா.. ” என்று அவன் கையைத் தட்டிவிட்டாள் மனைவி.
நேற்றைய இரவின் நினைவில், “உறங்கட்டுமே..” என்று அவளை விட்டுவிட்டவன் தான் தயாராகி வெளியே சென்றுவிட்டான்.
விசாலம் ஏதோ கேட்டதற்கும் முகத்தை பாராமல் தலையசைத்து அவன் சென்றுவிட, மருமகள் அவர் பூஜையை முடித்து வரும் வரை எழவே இல்லை. இப்படி உறங்குபவள் இல்லையே என்று கவலை கொண்டவர் அறையின் வாயிலில் இருந்தே “நாச்சியா..” என்று குரல் கொடுக்க, அவரது குரல் கேட்ட நிமிடம் பதறி எழுந்து அமர்ந்தாள் மருமகள்.
“என்னடி பண்ணுறவ.. உடம்புக்கு எதுவும் முடியலையா.” என்று மீண்டும் குரல் வர,
“குளிச்சுட்டு வரேன் அத்தை.” என்று குரல் கொடுத்தவள் வேகமாக குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் குளித்து வெளியே வந்த நேரம் தான் ராகவன் வீட்டிற்குள் நுழைந்தது. மருமகளின் அந்த சிறிய மாட்டுத்தொழுவம் இப்போது அவர் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.
திருமகள் திருமணம் முடிந்து வந்துவிடவும், “யார் கவனிப்பது.” என்று பேச்சு வர, “நான் பார்க்கிறேன்.” என்று விசாலம் தான் முன்வந்தார்.
ஆனால். “ஊர்ப்பெண்களுக்கு பால் கொடுக்கமாட்டேன்..” என்பதில் அவர் உறுதியாக இருக்க, அவரை விட்டால் தினம் ஒருவரை வம்புக்கு இழுப்பார் என்று புரிந்தது ராகவனுக்கு.
மனைவியின் விருப்பப்படி உள்ளூர்காரர்களுக்கு பால் கொடுப்பதில்லை என்று உறுதியளித்தவர் பால் வியாபாரத்தை மருமகளுக்காக தான் கவனித்துக் கொண்டார்.
பாண்டியம்மாள் இன்னும் மகள் வீட்டிலிருந்து திரும்பியிருக்கவில்லை. அவரிடம் அலைபேசி இல்லாததால் இங்கு நடந்த எதுவுமே இதுவரை அவருக்கு தெரியாது.
அவருக்கு பதிலாக தன் தோட்டத்து வேலை ஆட்களை வாசுதேவன் அனுப்பி வைத்திருக்க, ராகவன் சமாளித்துக் கொண்டிருந்தார் அங்கே.
இப்போதும் காலை நேர வேலைகளை ஒரு பார்வை பார்த்து அவர் வீடு திரும்பியிருக்க, விசாலம் காலை உணவைத் தானே செய்து முடித்திருந்தார்.
திரு ராகவனைக் காணவும், “காஃபி எடுத்துட்டு வரட்டுமா மாமா.” என,
“கொடும்மா.” என்று இருக்கையில் அமர்ந்து கொண்டார் அவர். விசாலம் சமையல் அறையில் இருக்க, மருமகளைக் காணவும் “என்னடி இம்புட்டு நேரமா உறக்கம்.. நல்லாதானே இருக்க.” என்று விசாலம் அக்கறையாக வினவ,
“எனக்கென்ன நல்லாத்தான் இருக்கேன். உன் மகனுக்கு தான் பேய் பிடிச்சுருச்சு.” என்றாள் நக்கலாக
“இந்த வாய் இல்லன்னு வையேன்..” என்று விசாலம் இழுக்க,
“உன் மகனோட குப்பை கொட்ட முடியாது.” என்று பதில் கொடுத்தாள் திரு.
விசாலம் முறைக்க, “சரி விடு.. இதெல்லாம் ஒரு விஷயமா.. மாமா காஃபி கேட்டாங்க அத்தை.. வழி விடு.. வழி விடு.” என்று அவரை நகர்த்தியவள் அடுப்பில் பாத்திரம் வைத்து, பாலை அதில் ஊற்றிக் கொண்டிருக்க, “நாச்சி..” என்று பாசத்துடன் அழைத்தார் விசாலம்.
அவர் குரலில் உருகினாலும், பாலில் கவனமாக இருந்தவள் “என்னத்தை.” என்று கேட்டுக்கொண்டே வேலையைப் பார்க்க,
“ஏதாவது விசேஷமாடி..” என்று மருமகளின் முகத்தை குறுகுறுவென பார்த்தார் விசாலம்.
அவர் கேள்வியில் இவள் கையிலிருந்த பால் குவளை தடுமாற, அடுப்பின் மீது லேசாக சிந்தியது. குவளையை அருகில் வைத்துவிட்டவள் அத்தையிடம் திரும்ப, விசாலம் “அப்படித்தானே..” என்றார் உறுதிப்படுத்திக் கொள்ளும் குரலில்.
அத்தையின் கேள்வியில் வெட்கம் வந்து சேர்ந்து கொள்ள, “என்ன தெரியணும் உனக்கு.. சும்மா அதையும் இதையும் கேட்டுட்டு இருக்க..” என்று செல்லமாக சலித்து கொண்டே திரும்பிக் கொண்டாள் மருமகள்.
“இதுபோதும்டி.. என் ராஜாத்தி..” என்று அவளை திருப்பி நிறுத்தியவர் அவள் முகத்தை வழித்து திருஷ்ட்டி எடுக்க, “என்னத்தை பண்ணிட்டு இருக்க நீயி..” என்று நெளிந்தாள் மருமகள்.
ஆனால், அவளுக்கு எதிர்மாறாக மொத்தமாக உணர்ச்சிவசப்பட்டிருந்தார் விசாலம். மகன் வாழ்வு என்னவாகுமோ என்று அச்சத்திலேயே இருந்தவர் அல்லவா.
இன்று மகனது வாழ்வு சீரானதில் கண்கள் கலங்கி கண்ணீர் நனைத்தது அவரை. “அத்தை..” என்று அதட்டலுடன் அவர் கண்ணீரை துடைத்துவிட்டாள் திருமகள்.
“நல்லா இருக்கணும்டி நீ.. என் மகனோட நூறு வருஷம் வாழனும்.” என்று அவள் கன்னம் தொட்டு அவர் வாழ்த்த, “பேரன் பேத்தி எல்லாம் வேண்டாமா உனக்கு..” என்றாள் விளையாட்டாக
“அதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கு எனக்கு. உன்கிட்ட சொல்றதுக்கு என்ன நாச்சி. என் மகன் வாழாமலே நின்னுடுவானோன்னு ஒவ்வொரு நாளும் அழுதுட்டு இருந்திருக்கேன். அவன் வாழ்க்கை இப்படியாகிடுச்சே ன்னு தான் இன்னும் கோபம். உன் அக்கா செஞ்ச வேலையால மொத்தமும் உங்கமேல திரும்பிடுச்சு..”
“என் பிள்ளை தான் எல்லாமேன்னு வாழ்ந்துட்டேன்டி. அவனைவிட வேறேதும் முக்கியமா தெரியல. என்னை மன்னிப்பியா.. உங்களை அனாதையா விட்டுட்டேனே.” என்றவர் தன்னைமீறி கலங்க,
“ப்ச்.. போதும் அத்தை.. சும்மா உன்னை நீயே வருத்திக்காத.. நான் அதையெல்லாம் இந்த வீட்டுக்கு வந்த அன்னைக்கே மறந்துட்டேன்.”
“ஒரு விஷயம் சொல்லட்டுமா.. அன்னைக்கு வீட்ல என்னை அடிச்சீங்க இல்ல, எப்படி பயந்தேன் தெரியுமா.. உங்க பங்குக்கு நீங்களும் பழி தீர்க்க போறிங்களோன்னு செத்துட்டேன்.. ஆனா, அத்தனைப் பேரையும் அடக்கி என் தம்பி மகள்ன்னு சொன்னிங்களே. அது ஒன்னு போதாதா..?”
“நிச்சயமா அப்பாவும், அம்மாவும் சந்தோஷமா தான் இருப்பாங்க. அப்பாவுக்கு உங்கமேல கோபமெல்லாம் எதுவும் இல்ல. நீங்க பேசலைன்னு வருத்தம் மட்டும்தான் இருந்தது. எனக்கு தெரியும்.”
“அப்பாவை அரிச்சதெல்லாம் கோதையோட கவலை தான். கோதை செஞ்ச காரியத்திலேயே முடங்கிட்டார் மனுஷன். அதோட உடம்பையும் பெருசா அக்கறை எடுத்து கவனிக்காம விட்டுட்டார்.. இதுக்கு நீங்க என்ன செய்ய முடியும். விடுங்க.” என்றாள் பெரிய மனுஷி.
வாழ்க்கையில் அனுபவித்திருந்த வலிகள் அவளைப் பக்குவப்படுத்தி இருக்க, பேச்சும் பண்பட்டதாகவே இருந்தது.
விசாலம் தம்பியின் வளர்ப்பை மெச்சிக் கொண்டார் அந்த நிமிடம். இவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் பாலை கவனிக்காமல் விட, அடுப்பில் பொங்கி வழிந்தது.
அவசரமாக அதை துடைத்து எடுத்தவள் காஃபி வைத்து எடுத்துவர, ராகவன் இவர்கள் பேச்சைக் அரைகுறையாக கேட்டிருந்தவர் அந்த நிறைவிலேயே கிளம்பிச் சென்றிருந்தார்.