நெஞ்சம் பேசுதே 08
வாசுதேவகிருஷ்ணன் குளித்து வெளியே வர, அவனுக்கு முன்பாக அறையை விட்டு வெளியேறினாள் திருமகள். அவனுக்கான உணவை எடுத்து வைத்தவள் உணவு மேசையில் அவனுக்காக காத்திருக்க, அவளிடம் போராட முடியாமல் அமைதியாக உணவை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அவன்.
அவன் சென்றதும் தானும் அமர்ந்து உண்டவள் தனது அறைக்கு சென்று படுத்துவிட, வாசுதேவனின் கைவண்ணத்தால் கன்னம் இன்னும் எரிவது போல் தான் இருந்தது. உடலும் சோர்வை காட்ட, அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.
மாலை விசாலம் வந்து எழுப்பிய பிறகே அவள் எழுந்து அமர, ஒருபக்க முகமே வீக்கம் கண்டிருந்தது. விசாலம் பதறியவராக மருத்துவமனைக்கு அழைக்க, “எதுக்கு..” என்றாள் திருமகள்.
” முகமே வீக்கமா இருக்குடி..லேசா காய்ச்சலும் வச்சிருச்சு.. ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்திடுவோம்த்தா..” என்று அவர் போராட,
“ஹாஸ்பிடல் போயி, என் புருஷன் என்னை அடிச்சிட்டாருன்னு ஊருக்கே சொல்லிட்டு வரணுமா.. போ அத்தை..” என்று மீண்டும் படுத்துக் கொண்டாள் அவள்.
“ஏண்டி இப்படி அடம் பிடிக்கிற.. என் கண்ணு இல்ல. நான் வாசுகிட்ட சொல்லி உன்கிட்ட பேச வைக்கிறேன். இப்போ வாத்தா, டாக்டரை பார்த்திட்டு வந்திடுவோம்.” என்று விசாலம் கொஞ்சலாக கூற,
“நான் எங்கேயும் வரல.. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியாகிப் போகும். போய் உன் வேலையைப் பாரு நீ..” என்று அவரை துரத்திவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள் திருமகள்.
விசாலம் “அப்படி என்னடி அகம்பாவம் உனக்கு..” என்று கத்தியதெல்லாம் காதிலேயே விழாமல் அவள் படுத்திருக்க, சலித்துப் போனவராக தன் மகனுக்கு அழைத்தார் விசாலம்.
வழக்கம் போல் சாரதி போன் எடுக்க “நீ ஏன்டா அவன் போனை எடுத்து தொலையுற.. போன் எடுக்கறதுல என்ன கஷ்டம் அவனுக்கு..” என்று அவனை தன் பங்குக்கு வறுத்தவர் “அவன்கிட்ட கொடேண்டா..” என்று கத்த, அலைபேசி கைமாறியது.
“கண்ணா உன் பொண்டாட்டிக்கு உடம்பு முடியல. நீ அடிச்சு வச்சதுல முகமே வீங்கி போயிருக்கு. ஆஸ்பத்திரிக்கு கூப்பிட கூப்பிட வராம படுத்தே கிடக்கா.. நீ வீடு வந்து சேரு..” என்று அதட்டலாக உத்தரவிட்டவர் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
“என்னவானதோ..” என்று பதறினாலும், “அப்படி என்ன திமிர் அவளுக்கு.. இவ பின்னாடியே அலையணுமா நான்.” என்று கோபமும் எழ, அன்னையின் அழைப்பை அலட்சியமாக புறக்கணித்தவன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு அன்று இரவில் தான் வீடு திரும்பியிருந்தான்.
அப்போதும் திருவின் உடல்நிலை குறித்து எந்த நினைவும் இல்லை அவனுக்கு. உள்ளே நுழையும் மகனைக் கண்ட விசாலம் கோபம் கொண்டவராக, அவன் முகம் பார்க்காமல் தன்னறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்.
வாசுதேவகிருஷ்ணன் அவரைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைய, போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, உடலைக் குறுக்கி உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி.
சிறுகுழந்தை போல் அவள் உறங்கி கொண்டிருந்தது சிரிப்பைக் கொடுத்தாலும், அமைதியாக குளித்து வந்தவன் உணவை மறந்து விட, இப்போது எங்கே படுப்பது என்பதே பெரிய கவலையாக இருந்தது.
அவனது கட்டிலை முழுமையாக அவள் ஆக்கிரமித்து இருக்க, அவள்மீது இருந்தது அவன் போர்வை.
என்னவோ திருமகள் நாச்சியார் முழுமையாக அவனை ஆட்கொள்ள, போர்வைக்குள் குவியலாக உறங்கி கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டே அரைமணி நேரத்திற்கும் மேலாக நின்றுவிட்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அதே நேரம் மாலையிலிருந்து உறங்கி கொண்டிருப்பதாலோ என்னவோ, லேசாக உறக்கம் களைந்து விழித்துப் பார்த்தாள் திருமகள் நாச்சியார். கண்ணெதிரே வாசுதேவன் நின்றிருக்க, அந்த நிலையிலும் லேசாக மலர்ந்தது அவள் முகம்.
சட்டென மலர்ந்த அவள் முகம் வாசுதேவனை குளிர்வித்தாலும், அதைக் காண்பித்துக் கொள்ளாமல் நகர்ந்து கொண்டான் அவன். கட்டிலை இருந்த தலையணையை அவன் எடுக்க, “என்ன மாம் கீழே படுக்கப் போறிங்களா..” என்றாள் திரு.
“இவ வாய் மூடவே செய்யாதா..” என்று எரிச்சலுடன் வாசுதேவன் திரும்ப,
“என் வாயை நீங்க மூடறதெல்லாம் நடக்காத காரியம் மாமா.. வீணா யோசிக்காதிங்க..” என்றிருந்தாள் திரு.
அவள் பேச்சில் வாசுதேவனுக்கு சட்டென புரையேற, கையில் வைத்திருந்த தலையணையை திருவின் மீது வீசினான் அவன்.
“அடிக்காதிங்க மாமா.. ஏற்கனவே பேசவே முடியல வாய் வலிக்குது..” என்று அவள் முகம் சுருக்க,
“மருத்துவமனைக்கு செல்வோமா..” என்றான் சைகையில்.
“எப்படி அடிபட்டிச்சு கேட்பாங்க..”
“பார்த்துக்கலாம் வா..” என்பதாக அவன் மீண்டும் சைகை மொழி பேச,
“இப்போகூட வாயைத் திறந்து பேசமாட்டிங்களா நீங்க.. அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு..” என்று திரு கோபம் கொண்டாள்.
வாசுதேவன் அதற்குமேல் பேசாமல் அவளை கண்டிப்புடன் நோக்க, கையிலிருந்த தலையணையை மீண்டும் அவன் மீதே வீசியவள் “இங்கே என் பக்கத்துல படுக்காதிங்க.” என்று எச்சரித்து தன்னிடத்தில் படுத்துவிட்டாள்.
அதுவரை கீழே படுக்க நினைத்திருந்தவன் அவள் வார்த்தைகளில் “நீ என்னடி என்னை அதிகாரம் பண்றது.” என்று நினைத்தவனாக அவள் அருகில் கட்டிலில் படுத்துவிட்டான்.
திரு சட்டென திரும்பி பார்த்தவள் அவனை முறைக்க, அவன் அத்தனை அருகில் இருப்பது ஒருவிதமாக அவஸ்தைக்குள்ளாக்கியது அவளை. வாசுதேவன் அலட்டிக் கொள்ளாமல் கண்களை மூடிக் கொள்ள, அவனை அப்படியே விட்டுவிட்டால் அவள் திரு இல்லையே.
“இங்கே ஏன் படுத்தீங்க..” என்று மீண்டும் பஞ்சாயத்தை துவக்கினாள் அவள்.
வாசுதேவன் நெற்றிக்கண்ணை திறந்தவனாக கடுமையுடன் நோக்க, “எனக்கு பீவர் இருக்கு.. அதோட நான் தூக்கத்துல நிறைய புரண்டு படுப்பேன்.. நீங்க இங்கே படுக்கக்கூடாது..” என்றாள் திரு.
வாசுதேவனுக்கு அதற்குமேல் அவள் பேச்சை பொறுக்கமுடியாமல் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து தன்னருகில் படுக்க வைத்திருந்தான் அவளை.
“மாமா..” என்று அதிர்ச்சியாக சிறுகுரலில் கத்தியபடியே அவன் அருகில் அவள் விழ, அப்போதுதான் அவள் உடல்சூட்டினை உணர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவள் நெற்றியிலும், கழுத்திலும் கையை வைத்துப் பார்த்தவன் வேகமாக எழுந்துவிட்டான். அவளையும் எழுந்து கொள்ள சைகை செய்ய, “எங்கே கூப்பிடறீங்க..” என்று சட்டமாக அமர்ந்திருந்தாள் திரு.
வாசுதேவன் அவளை முறைத்து அவள் கையைப்பிடித்து எழுப்ப பார்க்க, “நான் ஹாஸ்பிடலுக்கு வரல மாமா..” என்று அறிவித்தாள் திரு.
இத்தனை காய்ச்சலுடன் கொஞ்சமும் அலுக்காமல் அவள் வாயடித்துக் கொண்டிருப்பது அதிசயமாக இருந்தது வாசுதேவனுக்கு. அவளுக்கு அப்படியே நேரெதிர் அவன். காய்ச்சல் தலைவலி என்று எதுவும் வராது. ஆனால், வந்துவிட்டாலும் குறைந்தது பத்து நாட்களுக்காவது படுக்கவைத்து விடும் அவனை.
அந்த நேரங்களில் விசாலம் தான் மாட்டிக்கொண்டு விழிப்பார் மகனிடம்.அப்படிப்பட்டவனுக்கு திருவின் செயல்கள் அதிசயமாகத் தானே இருக்கும்.
ஆனால், அவள் வாய் பேசுவதால் நன்றாக இருக்கிறாள் என்று அர்த்தமாகாதே. உடலின் சோர்வு அவள் முகத்தில் பிரதிபலிக்கிறதே.. ஆனால், வரமாட்டேன் என்று அடம்பிடித்து நிற்பவளை என்ன செய்வது என்று புரியாமல் நின்றவன் தன் தயக்கம் விடுத்து முதல் முறையாக அவளைத் தொட்டு தூக்கியிருந்தான் தன் கரங்களில்.
திருமகள் “மாமா..” என்று வாய்பிளக்க, அவள் பேசியது காதில் விழாதவனாக அவளைத் தூக்கி வந்து காரில் அமர்த்தினான் வாசுதேவன். திருமகள் அதற்குமேல் மறுக்காமல் மௌனமாகிட, மறுபுறம் அமர்ந்து காரை எடுத்தான்.
அவன் நண்பனின் அம்மா அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருக்க, அவரது வீட்டிற்கே அழைத்து சென்றான் திருமகளை.
அந்த மருத்துவர் திருவின் கன்னத்தை பார்த்த நிமிடம் வாசுதேவனை முறைக்க, “சாரி..” என்பதாக கண்களை சுருக்கி கெஞ்சினான் அவன்.
அதற்குமேல் அவனை ஏதும் கேட்காமல் திருமகளுக்கு ஊசியைப் போட்டு, சில மாத்திரைகளையும், கன்னத்தின் வீக்கத்திற்கு ஒரு க்ரீமையும் கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தார். கிளம்பும் சமயம் வாசுதேவன் மீண்டும் “சாரி..” என்று சத்தம் எழுப்பாமல் வாயசைக்க, மெல்ல சிரித்து “ஒழுங்கா கவனிச்சுக்கோ..” என்ற அதட்டலுடனே அவனை அனுப்பி வைத்தார் அவர்.
காரில் ஏறவும், “தெரிஞ்சவங்களா..” என்று திருமகள் கேட்க, ஆமென்பதாக தலையை மட்டும் அசைத்தான் வாசுதேவன்.
அவர்கள் வீடு வந்து சேரவும், மாத்திரைகளைப் பிரித்து அவள் கையில் கொடுத்து தண்ணீரையும் எடுத்து கொடுக்க, “நான் இன்னும் சாப்பிடவே இல்லை..” என்றாள் பாவமாக.
நேரம் பதினொன்றை கடந்துவிட்டிருக்க, “இத்தனை நேரம் சாப்பிடாமல் என்ன செய்தாள்.” என்று நினைத்தவன் அவளை முறைக்க,
“ஏன் முறைச்சுட்டே இருக்கீங்க.. காய்ச்சல் அதிகமா இருக்கவும் தூக்கம் வந்தது.. தூங்கிட்டேன். மாவு இருக்கும். தோசை போட்டுக்கலாம்.” என்று எழுந்து கொண்டவள் சமையல் அறைக்கு சென்றுவிட்டாள்.
இன்று காலையில் வீட்டிற்குள் நுழைந்த கணம் முதல் இந்த நிமிடம் வரை என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கிறாள் என்னை என்று நொந்து போனவனாக கட்டிலில் அமர்ந்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.
ஆனால், அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு தட்டில் இரண்டு தோசையை வைத்து நீட்டியபோது, வாசுதேவகிருஷ்ணனின் ரசனையை உயிர்ப்பித்தாள் திருமகள் நாச்சியார்.
மதியம் வீட்டில் அரைகுறையாக சாப்பிட்டுச் சென்றது தான். இரவு அவன் வீட்டிற்குள் நுழைந்தது முதலாகவே திருவின் பின்னே சுற்றிக் கொண்டிருக்க, உணவெல்லாம் மறந்து போயிருந்தது. இப்போது அவள் தட்டை நீட்டவும், மறுக்காமல் வாங்கி கொண்டவன் அவள்பின்னே வந்து உணவுமேசையில் அமர்ந்து கொண்டான்.
அடுத்தடுத்து அவன் நான்கு தோசைகளை உண்டுமுடித்த பின்பே நிமிர, திருமகள் மீண்டும் அவன் அருகில் தோசையுடன் நிற்கவும், தலையசைத்து மறுத்து எழுந்து கொண்டான். அடுத்து அவளும் சாப்பிட்டு முடிக்கவும் இருவரும் அறைக்கு வர, அவளுக்கான மாத்திரைகளை எடுத்து அவளிடம் நீட்டினான் வாசுதேவகிருஷ்ணன்.
திருமகள் கட்டிலில் அமர்ந்திருக்க, ஏனோ இந்த ஒருநாளுக்கே அவனது இந்த மௌனமொழியும், சைகைகளும் அலுத்துப் போயிருந்தது. எப்போதும் சலசலவென்று பேசிக் கொண்டே இருப்பவள் அவள். அப்படிப்பட்டவளிடம் எதிரில் இருப்பவன் மௌன பரிபாஷைகள் பேசிக் கொண்டிருக்க, இனிக்கவில்லை அவை.
அவன் மாத்திரைகளை நீட்டவும், “எனக்கு இப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கு.. மாத்திரை வேண்டாம்.” என்று அலுப்புடன் கூறியவள் கட்டிலில் படுத்துவிட, அவளின் முகவாட்டம் புரிந்தது வாசுதேவனுக்கு.
ஆனால், என்னவோ அவளிடம் பேசுவதில் அப்படி ஒரு தயக்கம் அவனுக்கு. இப்போது அவள் முகம் வாடுவதும் பொறுக்க முடியவில்லை. அந்த மருத்துவர் கொடுத்த க்ரீமை கையில் எடுத்துக் கொண்டவன் நின்றுகொண்டே அவள் கன்னத்தில் அதை பூசிவிட, விழிகளை மூடியிருந்தவள் உடலில் ஒரு மெல்லிய அதிர்வு.
வாசுதேவகிருஷ்ணன் அதை உணர்ந்தாலும் தன் வேலையை நிறுத்தாமல் தொடர, அவன் விரல்கள் கொடுத்த இதம் சுகமாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை திருமகளால்.
“”பேசமாட்டேன் சொல்லிட்டீங்க இல்ல.. அப்புறம் ஏன் இதையெல்லாம் பண்றிங்க..” என்று அவன் கையைத் தட்டிவிட்டாள் அவள்.
மதியம் தானும் இதையே செய்தோம் என்பதை மறந்தவனாக அவள்மீது கோபம் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். தட்டிவிட்ட அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டவன் அவள் கன்னத்தில் மொத்தமாக அந்த க்ரீமை பூசியபிறகே அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்தான்.
“என்கிட்டே இந்த வேலையெல்லாம் வச்சுக்காதிங்க சொல்லிட்டேன். நீங்க ஏன் எனக்கு இதெல்லாம் பண்ணனும்..” என்று எழுந்து அமர்ந்து அவள் கேள்வி கேட்க, அவளை கண்டுகொள்ளாமல் கையை கழுவி வந்தவன் மாத்திரைகளை எடுத்து அவள்முன் நீட்ட, திருமகள் கட்டிலில் இருந்து இறங்க முயற்சித்தாள்.
அவளை இறங்கவிடாமல் அழுத்தமாக அவள் அருகில் அமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன். மேலும் திருமகள்நாச்சியாரை அமர்த்தலாக ஒருபார்வை பார்த்தவன் மாத்திரைகளை விரித்து காட்டி கண்களால் மிரட்டல் விடுக்க, அவனுக்குமேல் அழுத்தமாக பார்த்திருந்தாள் திருமகள்.
“என்ன ஆனாலும் இதைத் தொடமாட்டேன்..” என்று அவள் விழிகள் உறுதி கூற, அவள் எதிர்பாராத நிமிடம் அவளை அப்படியே பின்னால் சாய்த்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
அவள் சுதாரிப்பதற்குள் கட்டிலில் விழ இருந்தவளை தன் மடியில் கிடத்திக் கொண்டவன் சிறு பிள்ளைக்கு புகட்டுவது போல் மாத்திரையை புகட்டி, தண்ணீரையும் வாயில் சரிக்க, அவன் செயலில் அதிர்ச்சியுடன் விழிகளை அகல விரித்திருந்தாள் திருமகள்.
“விழுங்கு..” என்பதாக அப்போதும் அவன் தலையசைக்க, அந்த நொடியில் மீண்டுவிட்டாள் திருமகள். வாயை இறுக மூடிக் கொண்டு அவன் கையை விலக்கி விட்டவள் கட்டிலில் இருந்து இறங்க, அவள் கையைப் பிடித்து அருகில் அமர்த்தியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.
வாய் மொத்தமும் கசந்து வழிந்தாலும் பிடிவாதம் குறையாமல் அவள் அமர்ந்திருக்க, வாசுதேவனால் அப்படி இருக்க முடியவில்லை. மொத்தமாக ஆறு மாத்திரைகளை அவள் வாய்க்குள் திணித்தது அவன்தானே. எப்படி கசக்கும் என்பதை அறியமாட்டானா..
அவள் பிடிவாதத்தை முன் தோற்றுப் போனவனாக அவள் கையை அவன் விடுவிக்க, குளியலறைக்குள் நுழைந்து வெளியே வந்தவள் மௌனமாக அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு மறுபுறம் சென்று படுத்துக்கொண்டாள்.
வாசுதேவன் சில நிமிடங்கள் அமைதிகாத்தவன் பின் அவள் அருகில் படுக்க, அப்போதும் அசைவில்லை அவளிடம். முகம் திருப்பி படுத்திருந்தவளை மெல்ல தன்புறம் திருப்பியவன் அவள் நெற்றியில் முத்தமிட, கண்கள் கலங்கியது திருமகளுக்கு.
அவளை மெல்ல மிக மென்மையாக அணைத்தவன் அவள் காதில் அத்தனை இனிமையாக “திரு.” என்று இரண்டு எழுத்துகளை உச்சரித்திருந்தான். என்னவோ அந்தநிமிடம் அவன் வார்த்தையும் எங்கேயும் திக்கி கொள்ளாமல் தேனமுதாக திருமகளின் காதுகளில் பாய்ந்தது.
அவன் அழைப்பு புல்லாங்குழலிசையாக அவள் காதில் இறங்க, அவன் அணைப்பை விலக்கியவள் “என்ன சொன்னிங்க..” என்று அவன் முகம் பார்க்க, “நானெங்கே பேசினேன்..” என்பதாக இருந்தது அவன் பாவனை.
ஒன்றுமறியாத கோகுலத்து கண்ணனைப் போல் அவனும் விழிக்க, அவன் கைப்பிடியில் இருந்து விலக முயன்றாள் திருமகள். ஒரே கையால் அவளை அசையவிடாமல் செய்தவன் ஒற்றை விரலை வாய்மீது வைக்க, “நான் பேசுவேன்..” என்றாள் அவன் மனைவி.
“பேசு.” என்பதாக தலையசைத்தவன் அவளை அழகாக தன் அணைப்பில் வைத்துக் கொண்டு கண்களை மூடிவிட, அவன் நெஞ்சில் பதிந்திருந்தது அவளது ஒருபக்க முகம்.
அப்போதும் சந்தேகம் தீராமல் “நீங்க என் பேர் சொன்னிங்க தானே…” என்று அவன் முகம் பார்த்தாள் திரு.
“அப்படியா..” என்பது போல் வாசுதேவன் தலையசைக்க, சட்டென அவன் தாடையில் முத்தமிட்டவள் “தேங்க்ஸ்..” என்றாள் நெஞ்சார்ந்து.
வாசுதேவன் அவள் செயலில் இனிதாக அதிர, அதைப்பற்றிய கவலையற்றவளாக கண்மூடி படுத்துவிட்டாள் அவள்.
கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில் கோதை
ராதை நடந்தாள்.
மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்.
பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும் பாவை
மறந்து தொலைந்தாள்.
நெஞ்சை மூடிக்
கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்.
நெஞ்சின் ஓசை
ஒடுங்கிவிட்டால் நிழலை
கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து
மயங்கிவிட்டாள்….