NNVN-9

அத்தியாயம் 9

நந்தகுமார் காவ்யா திருமண வாழ்வு அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுகொண்டிருந்தது. ஆனால் கீர்த்தியை தவிர வீட்டின் மற்றவர்களுடன் காவ்யாவுக்கு ஏற்பட்ட மனத்தாங்கல் சரி செய்யப்படாமல் வளர்ந்து கொண்டே சென்றது. சமைப்பதில் ஆரம்பித்தது வீட்டு வேலைகள் செய்வதிலும் போட்டி போட ஆரம்பிக்க, காவ்யா யாரையும் எதிர்பார்க்காமல் அவளே செய்து கொண்டாள்.

காவ்யா ஏற்கனவே மேலே படிக்க ஆசைப்பட்டதை நந்தாவிடம் கூறியிருக்க, தொலைதூரக் கல்வி மூலம் எம்பிஏ படிக்க ஏற்பாடு செய்து விட்டான். காவ்யா படிக்க ஆரம்பித்த பிறகு, வீட்டு வேலை, சமையல், படிப்பு என அவளுக்கு பளு அதிகமானது. காலையில் சீக்கிரம் எழுவது இன்னும் கடினமாகவே இருந்தது அவளுக்கு. “கொஞ்ச நேரம் தூங்கு” என்று நந்தா கூறினாலும் கேட்க மாட்டாள்.

காவ்யா கஷ்டப்படுவதை புரிந்துகொண்ட நந்தா வீட்டில் சமைப்பது தவிர மற்ற வேலைகளுக்கு ஆள் வைத்து விட்டான். காவ்யாவுக்கும் வேலைப்பளு குறைந்தது.

“இவ்வளவு நாள் இல்லாமல் தன் பொண்டாட்டிக்கு மட்டும் வேலைக்கு ஆள் வச்சிருக்கான். ஏன் நீ கஷ்டப்படல? அப்பவே ஆள் வச்சானா?” என அதற்கும் சுந்தராம்பாள் சாந்தியிடம் நந்தாவை பற்றி குறை கூறினார். சாந்தி வேலைக்கு ஆள் வைக்க சொல்லியிருந்தாலும் அப்பொழுதே வைத்திருப்பான். அவர் சொல்லவில்லை. காவ்யா சோர்வடைவதை அருகில் கவனித்து பார்த்ததால் வேலைக்கு ஆள் வைத்து விட்டான். ஆனால் சாந்தி நந்தாவை தவறாகப் புரிந்துகொண்டார்.

நந்தாவுக்கு திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியிருக்க, அவன் மூன்று மாதங்கள் ஆன்சைட் வேலை என்று கனடா செல்ல வேண்டியிருந்தது. அவனால் தவிர்க்க முடியவில்லை. அவன் சொன்னதுமே அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் காவ்யா. அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது நந்தாவுக்கு.

“என்ன நீ சின்ன பிள்ளையாட்டம் இப்படி பண்ற? எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நானும் உன்னை மாதிரியே அழுதா என்னவாகும்?” என்றான் நந்தா.

“உங்களுக்கு ஒன்னும் என்னை மாதிரி கஷ்டம் இல்ல. நீங்க நல்லாதான் இருக்கீங்க” என அழுது கொண்டே கூறினாள் காவ்யா.

“என்ன கஷ்டம் இல்ல…..? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதே. உனக்கு தெரியாது காவ்யா…. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து உண்மையான அன்பு கிடைச்சதே இல்லை. நிறைய நிராகரிப்புகள்தான் கிடைச்சிருக்கு. அம்மாவும் என்னை கடமையா பார்த்துக்கிட்டாங்களே தவிர, பெருசா அன்பெல்லாம் என்மேல கிடையாது. என்னால அதை ஃபீல் பண்ண முடியும். எனக்குன்னு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கூட கிடையாது”

“என் வாழ்க்கையில நான் இழந்திட்ட எல்லாமுமா உன்னைதான் நினைக்கிறேன் காவ்யா. எனக்காக வாழுற ஒரு உறவுக்காக நான் எவ்வளவு நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா? அப்படி எனக்கு கிடைச்ச உறவுதான் நீ. நீ….நீ மட்டும்தான் என்னோட சந்தோஷமே. உன்னை பிரியறது எனக்கு மட்டும் கஷ்டமா இருக்காதா? என் வேலை அப்படி. என்னால அவாய்ட் பண்ண முடியல. கொஞ்சம் புரிஞ்சுக்கோ. இப்படி அழுது இன்னும் என்னை கஷ்டப் படுத்தாத” எனக்கூற காவ்யா மிகவும் நெகிழ்ந்து விட்டாள்.

கண்களைத் துடைத்துக் கொண்டவள், “நான் அழ மாட்டேன். நீங்க போயிட்டு வாங்க” எனக் கூற, அவளை அணைத்துக் கொண்டவன், “தட்ஸ் மை கேர்ள், லவ் யூ, லவ் யூ சோ மச் டி” என்றான்.

நந்தா வெளிநாடு சென்றுவிட, காவ்யா தன் அம்மா வீட்டிலும் புகுந்த வீட்டிலும் மாறி மாறி இருந்தாள். தன்னுடைய ஸ்கூட்டர் மூலமே சென்று வந்து விடுவாள். அவள் அம்மா வீட்டிலேயே இருந்தாலும் நந்தா ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனால் நந்தாவுடன் தான் வாழ்ந்த வீட்டில் இருப்பது அவனுடன் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்க, இங்குமங்குமாய் மாறி மாறி இருந்தாள்.

வீட்டின் செலவுகளுக்கு முன்னர் நேரடியாக சாந்தியிடம் பணம் கொடுத்த நந்தா, வெளிநாடு செல்வதற்கு முன் தனது கார்டை காவ்யாவிடம் கொடுத்துச் சென்றிருந்தான். அவள்தான் பணம் எடுத்து சாந்தியிடம் கொடுத்தாள். சாந்தி “இந்த பணம் போதாது” என கேட்க, “என்ன….? குடும்பம் நடத்த தாராளமா இது போதுமே, அப்படி வேற என்ன செலவு?” எனக் கேள்வி கேட்டாள் காவ்யா. சாந்தி குடும்ப செலவு போக தன் பெண்களுக்காக தனியாகவும் சேமித்து வந்தார். நந்தா அவரிடம் கணக்கெல்லாம் கேட்டது கிடையாது. கேட்பதை கொடுத்து விடுவான். இன்று காவ்யா கேள்வி கேட்கவும் சாந்திக்கு பிடிக்கவில்லை.

காவ்யா ‘இன்னும் இரண்டு பெண்கள் திருமணம் நடத்த வேண்டும். தேவையில்லாமல் இவ்வளவு பணம் செலவழித்தால் அவர்களுக்கு எப்படி செய்ய முடியும். சிக்கனமாக இருந்தால்தான் அவர்களுக்கு செய்யமுடியும்’ என நினைத்து கேட்க, ‘நேற்று வந்த இவள் என்ன என்னிடம் கேள்வி கேட்பது’ என நினைத்துக் கொண்டார் சாந்தி. காவ்யாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி செய்துவிட்ட நந்தாவை நினைத்தும் ஆத்திரம் வந்தது.

“நான் இல்லன்னா உன் புருஷன் இந்நேரம் எந்த தெருவில் பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பானோ தெரியாது. நான் கஷ்டப்பட்டு படிக்க வச்சி, வேலைக்கு போக வச்சா, நேத்து வந்த நீ என்கிட்டயே கணக்கு கேட்பியா?” என்றார் சாந்தி.

‘பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தில் கோபமடைந்த காவ்யா, “நீங்க அப்பவே விட்டிருந்தா என் புருஷன் உங்க தயவு இல்லைனாலும் ஏதாவது வேலை பார்த்துகிட்டே படிச்சிருப்பார். எல்லாம் உங்களாலதான்னு பேசுறதை முதலில் நிறுத்துங்க. அவருக்காகத்தான் என் மாமனார் உங்களை கல்யாணமே செய்துகிட்டார். அவர் மட்டும் இல்லைன்னா நீங்களும் எங்கயாவது பிச்சை எடுத்துக்கிட்டுதான் இருக்கணும்”

“என்னமோ நீங்கதான் படிக்க வச்சது மாதிரி பேசுறீங்களே, எப்படி படிக்க வச்சீங்க? அவர் அப்பாவோட பென்சன்லதானே படிக்க வச்சீங்க? உங்களை என் மாமனார் கல்யாணமே செய்துக்கலைன்னா அவர் அப்பா பென்சன்ல யார் தயவும் இல்லாம அவரே படிச்சிருப்பார். இப்படி உங்க கூட எல்லாம் நானும் என் புருஷனும் கஷ்டப்பட வேண்டாம்” என்றாள்.

சாந்திக்கு அவர் கூறியதின் வீரியம் புரியவில்லை. தான் பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பேன் என கூறியதும் புசுபுசுவென கோபம் வந்துவிட்டது. உள்ளேயிருந்து காதில் வாங்கிக் கொண்டிருந்த சுந்தராம்பாளும் வந்துவிட்டார்.

“நீ வர்ற வரைக்கும் இங்கே எல்லோரும் நிம்மதியா இருந்தோம். நீ வந்த….. எங்க நிம்மதியெல்லாம் போச்சு. அப்பா…. என்ன வாய் உனக்கு? சரியான ஜாலக்காரி” என்றார் சாந்தி.

“அதானே ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை ஓட்டின மாதிரி நீ எங்களையே பேசுவியா?” என்றார் சுந்தராம்பாள்.

“யார் ஒண்ட வந்தது….? நானா? நீங்களா? பார்த்துப் பேசுங்க. அவர்கிட்ட தாலிகட்டி முறையோடு உரிமையா வந்தவள் நான். எனக்கில்லாத உரிமை இங்க வேற யாருக்கும் இல்லை” என்றாள் காவ்யா.

“நந்தா வரட்டும், எங்களுக்கு இங்கே உரிமை இருக்கா இல்லையான்னு அவன் வந்து சொல்வான்” என சாந்தி கூற, “அவரே வந்து சொல்வார். நல்லா கேட்டுக்குங்க” எனக் கூறிவிட்டு கோபமாக தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டாள் காவ்யா.

அன்று இரவே நடந்தது அனைத்தையும் நந்தாவிடம் காவ்யா கூறியிருந்தாள். “அவங்க பேசினா பதிலுக்கு நீயும் இப்படி பேசியிருக்க வேண்டாம்” என்றான் நந்தா.

“அது எப்படி? நீங்க பிச்சை எடுப்பீங்கன்னு சொல்றாங்க. கேட்டுக்கிட்டு சும்மா இருக்க சொல்றீங்களா?” என அவனிடமும் கோபப்பட்டாள்.

“முதல்ல இந்த கோபத்தை குறைச்சுக்க காவ்யா. நான்தான் அவங்க கேட்கிற பணத்தை கொடுன்னு உன் கிட்ட சொல்லியிருந்தேனே. நீ ஏன் அவங்ககிட்ட கணக்கு கேட்ட? அதனாலதான் அவங்க அப்படி பேசிட்டாங்க. அதுக்காக அவங்க பேசினது சரின்னு நான் சொல்லலை. பதிலுக்கு நீயும் பேசியிருக்க வேண்டாம்னுதான் சொல்றேன். இந்த பாட்டியை எல்லாம் ஒரு ஆளா மதிச்சி அவங்க கிட்ட ஏன் பதில் பேசுற? அவங்க பேசுறதுக்கு பதில் பேசினா நம்ம தரம்தான் குறைஞ்சு போகும். இதை இப்படியே விடு. நான் பார்த்துக்கிறேன். நான் வர்ற வரை நீ உன் அம்மா வீட்டிலேயே இரு” என்றான் நந்தா.

“தப்பு பண்ற அவங்களை விட்டுடுங்க. என்னையே குறை சொல்லி என் வாயை அடைச்சிடுங்க” என்றாள் காவ்யா.

“நீ உரிமை பத்தி எல்லாம் பேசியிருக்க வேண்டியதில்லை. உனக்கு உரிமை இருக்குன்னா, அவங்களுக்கு செய்யிறது என்னோட கடமை இல்லையா?”

“என் அம்மா இறந்த பிறகு, என்னோட அப்பா முறைப்படி அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு அழைச்சிட்டு வந்தார். எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம், அவரோட பென்சன்ல அவங்களுக்கும் உரிமை இருக்கு. என் அம்மா வீட்டு சொந்தமெல்லாம் என்னை ஏத்துக்க முடியாதுன்னு நிராகரிச்சாங்க. இந்த பாட்டி கூட என்னை கூட வச்சுக்க கூடாதுன்னு சொல்லிச்சு. அம்மா நினைச்சிருந்தா என்னை பார்த்துக்காம விட்டிருக்கலாம். ஆனா என்னை பார்த்துக்கிட்டாங்க. என் வயிரை வாட விடலை. படிப்பையும் தடை செய்யல”

“ஒரு மாற்றாந்தாயா இதை செஞ்சதே பெரிய விஷயம் இல்லையா? அவங்க குடும்ப செலவுக்கு ஆகிறத விட அதிகமா என் கிட்ட பணம் வாங்குறாங்கன்னு தெரியும். தெரிஞ்சுதான் அவங்க கேட்கிறத கொடுக்கிறேன். அத வச்சி என்ன பண்ணிட போறாங்க? வாசுகிக்கும், கீர்த்திக்கும்தான் சேர்த்து வைப்பாங்க. நான் பிச்சை எடுத்துட்டு இருப்பேன்னு உன்கிட்ட சொன்னதால நீ கோவப்படுற. ஆனா இத்தனை வருஷத்துல அவங்க என்கிட்ட அப்படி எதுவும் பேசினது கிடையாது. நீ கணக்கு கேட்கவும் ஏதோ கோவத்தில பேசிட்டாங்க. அதை விட்டுடு. பெருசு பண்ணாத” என்றான் நந்தா.

“என்ன நடந்தாலும் நீங்க அவங்கள விட்டுக்கொடுக்க மாட்டீங்களே? சும்மா எனக்கு அட்வைஸ் பண்ணி காண்ட்டாக்காதீங்க” என சலித்துக் கொண்டாள் காவ்யா.

“புருஷன் நம்மள பிரிஞ்சுப்போய் கஷ்டப்படுறானே. ஆசையா எதுவும் பேசுவோம்னு இல்லாம நீதான் கண்டதையும் பேசிக்கொண்டே இருக்க” என்றான் நந்தா.

“நானே மூட் அவுட்ல இருக்கேன் இதுல ஆசையா என்னத்தைப் பேசுறது?” என அலுத்துக் கொண்டாள்.

“சரி உன் மூட நான் சரி பண்றேன்” என்றவன்

‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் கடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ….
கொடுமை கொடுமையோ….’
என பாடினான்.

“நீங்க இருக்கிறது டொராண்டோதானே. நியூயார்க்ன்னு பாடுறீங்க? இப்போ அங்க பகல் தானே. நைட்ல தானே தூங்குவாங்க, இப்ப போய் உறங்கும் நேரம்ன்னு பாடுறீங்க?” என காவ்யா கேட்க,

“அடியே….. நான் எவ்வளவு ஃபீல் பண்ணி பாடிக்கிட்டு இருக்கேன். அனுபவிக்காம கேள்வியா கேட்குற? வேலையை விட்டுட்டு வந்து உன்கிட்ட பாடிக்கிட்டு இருக்கேன் பாரு…. என்ன சொல்லணும்? நான் பாடல போடி” என நந்தா கூறினான்.

“சரி… சரி… கோச்சுக்காதீங்க. நீங்க பாடுங்க. எனக்கு தூக்கம் வர மாதிரி தெரியல. நான் தூங்குற வரை பாடுங்க” என காவ்யா கேட்க, நந்தா தொடர்ந்து பாடினான். இன்னும் அவன் பாடிக் கொண்டே இருக்க, கேட்டுக்கொண்டே உறங்கிவிட்டாள் காவ்யா. எதிர்முனை அமைதியாக இருக்க, அவள் உறங்கி விட்டாள் என்பதை உணர்ந்து கைப்பேசியை வைத்து விட்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரத்தில் சாந்தியிடம் இருந்து அழைப்பு வந்தது. எடுத்தவன் “என்னமா தூங்காம இன்னும் என்ன பண்றீங்க?” எனக் கேட்டான்.

“இன்னைக்கு உன் பொண்டாட்டி பேசினதுல எப்படி எனக்கு தூக்கம் வரும்?” என ஆரம்பித்தவர், தான் பேசியதை விட்டுவிட்டு, காவ்யா தன்னிடம் கணக்கு கேட்டதையும் அவள் பேசியதையும் கூறினார்.

“இப்பதான் நான் காவ்யாகிட்ட பேசினேன். நீங்க பேசவும் பதிலுக்கு அவளும் கோவமா பேசிட்டா. அவங்க வீட்டில கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்டா. கோவத்துல பட்டு பட்டுனு பேசுவாளே தவிர அவ கெட்டவள் எல்லாம் கிடையாது. அவளை தப்பா எடுத்துக்காதீங்க. இனிமே உங்களுக்கு பணம் நானே அனுப்பிடுறேன். இதை இத்தோடு விடுங்க” என முடித்து விட்டான்.

நந்தா வரும்வரை காவ்யா அவள் அன்னையின் வீட்டில்தான் இருந்தாள். அங்கு நடந்தது கேள்விப்பட்ட காமாட்சி வருத்தப்பட, கருணாகரன் கோபப்பட்டார். அங்கு போய் அவர்களை நன்றாக கேட்பதாகவும் கூறினார். காவ்யாதான் “அவர் வர்ற வரை எந்த பிரச்சினையும் வேண்டாம்” எனக் கூறி தடுத்து விட்டாள்.

வாசுகியின் படிப்பு முடிந்துவிட, விரைவிலேயே அவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றெண்ணி வரன் பார்க்க ஆரம்பித்தார் சாந்தி. அவர் வரன் பார்க்க ஆரம்பித்த அடுத்த நாளே, பிரபுவை கொண்டுவந்து நிறுத்தினாள் வாசுகி. தன்னுடைய சீனியர் என்றும் இருவரும் காதலிப்பதாகவும் கூற சாந்திக்கு கோபம்தான் வந்தது. பின் பிரபுவின் குடும்பம் அவன் வேலை எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு மனதிற்கு பிடித்துப்போக அன்றே நந்தாவிடம் பேசினார்.

நந்தாவும் பையனைப் பற்றி விசாரித்து பிடித்திருந்தால் பேசி முடித்துவிட கூறினான். தான் வந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறி விட்டான்.

பிரபுவின் வீட்டில், ஒரு வாரத்தில் ஆடி மாதம் வருவதால் அன்றே பெண் பார்க்க வர வேண்டும் என்று கூறியிருந்தனர். பெண் பார்க்க வரும் பொழுது, காவ்யா வீட்டில் இல்லையென்றால், அவர்கள் ஏதாவது நினைக்கக் கூடும் என்பதால் நந்தா மூலமாகவே காவ்யாவை வீட்டிற்கு வரவழைத்தார் சாந்தி. நந்தா கேட்டுக் கொண்டதற்காக காவ்யா தன் புகுந்த வீட்டிற்கு சென்றாள்.

பிரபு அவனது பெற்றோருடன் பெண் பார்க்க வந்துவிட்டான். காவ்யாதான் வாசுகியை அழைத்து வந்து காட்டினாள்.

“அதான் என் பையன் பார்த்து ஓகே சொல்லிட்டானே. இதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டிக்குதான்” என சிரித்தார் பிரபுவின் அன்னை.

“எங்களுக்கு இரண்டு பையன் ஒரு பொண்ணு. மூத்த பையனும் லவ் மேரேஜ்தான். கடைசி பொண்ணு பெங்களூர்ல படிச்சுக்கிட்டு இருக்கா. நாங்க காதலுக்கு எல்லாம் எதிரிகள் இல்லை. பசங்க சந்தோஷம்தானே நம்ம சந்தோஷம்” என்றார் பிரபுவின் தந்தை.

‘பரவாயில்லையே நல்ல குடும்பமாகத்தான் இவர்கள் இருக்கிறார்கள்’ என காவ்யா மனதில் நினைக்க, “எங்களுக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம். எங்க மூத்த மருமக நல்ல வசதியான வீட்டுப் பொண்ணு. நல்ல நகைநட்டு போட்டு கல்யாணத்தையும் அவங்களே பண்ணிட்டாங்க. கார் வாங்கி கொடுத்தாங்க. அதே மாதிரி நீங்களும் செய்திடுங்க. ஒரே குடும்பத்தில் ரெண்டு பொண்ணுங்க இருக்கும் போது, அவங்களுக்குள்ள எந்த வேற்றுமையும் இருக்கக்கூடாது பாருங்க, அதனாலதான் சொல்றேன்” என்றார் பிரபுவின் அன்னை.

காவ்யா அதிர்ந்துபோய் பிரபுவை பார்க்க, அவன் அவனது அன்னையின் கூற்றை வழிமொழிவது போல அமர்ந்திருந்தான். சாந்தியை பார்க்க, கர்ம சிரத்தையாக பிரபுவின் அன்னை கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“என் பையன் ரெண்டு நாள்ல வெளிநாட்டிலிருந்து வந்துடுவான். நீங்க சொல்றது மாதிரி எல்லாம் செஞ்சிடலாம். ஆவணி மாசம் முதல் முகூர்த்தத்தில் கல்யாணத்தை வச்சிடலாம்” என்றார் சாந்தி.

“ஆமாம்… ஆவணி முதல் முகூர்த்தத்திலேயே வச்சிடலாம். மண்டபத்தை பத்தி கவலைப்படாதீங்க. என் முதல் சம்பந்திக்கு சொந்தமா ஒரு மண்டபம் இருக்கு. அங்கேயே வச்சிடலாம். நம்ம கிட்ட பணம் வாங்க மாட்டார். ஆனா கொடுக்கலைன்னா நம்ம மரியாதை என்ன ஆகிறது? உங்க பையன் வந்ததும் அட்வான்ஸ முதல்ல கொடுத்திட சொல்லுங்க. நான் இன்னைக்கே தேதியை பார்த்து மண்டபத்தை புக் பண்ணிடுறேன்” என பிரபுவின் தந்தை கூற, மண்டபத்தின் பெயரைக் கேட்ட காவ்யாவிற்கு மயக்கம் வருவது போல தான் இருந்தது.

இவர்கள் மேல் கோபம் வந்தால், எல்லாவற்றையும் தலையாட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த சாந்தி, வாசுகி மீது ஆத்திரம் வந்தது. சுந்தராம்பாள் நல்ல பெரிய இடம் என இளித்து இளித்து பேசிக்கொண்டிருப்பதை பார்க்க காவ்யாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.

பிரபுவின் வீட்டினர் கிளம்பிய பிறகு, “என்ன அத்தை… அவங்க ரொம்ப எதிர்பார்க்கிற மாதிரி இருக்கு. இதெல்லாம் நம்மளால எப்படி செய்ய முடியும்?” எனக் கேட்டாள் காவ்யா.

“நான் நந்தாகிட்ட பேசுக்கிறேன்” என்றார் சாந்தி.

‘இங்க பாருங்க நான் என்னவோ வேணும்னு பேசுறதா நினைக்காதீங்க. வாசுகிக்கு வேற நல்ல இடமா நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி பார்க்கலாம். இவங்க எதிர்பார்க்கிற மாதிரி நம்மளால செய்ய முடியாது. அவர் ரொம்ப கஷ்டப்படுவார். இவங்க பணத்துக்கு ஆசைப்படுற மாதிரி இருக்கு” என்றாள் காவ்யா.

“இல்லாதவங்க தான் பணத்துக்கு ஆசைப் படுவாங்க. அவங்க கிட்ட பணம் எல்லாம் நிறைய இருக்கு. மூத்த மருமகளுக்கு செஞ்ச மாதிரி எனக்கும் செஞ்சாதான் கௌரவமா இருக்கும்ன்னு நினைக்கிறாங்க. இதுல தப்பென்ன இருக்கு?” என்றாள் வாசுகி.

“அவங்க அப்படி நினைக்கிறாங்கன்னா அவங்களுக்கு ஏத்த இடமா பார்த்துக்கட்டும். இவ்வளவு எல்லாம் உன் அண்ணனால செய்ய முடியாது. கஷ்டப்படுவார். வேற நல்ல இடமா பார்க்கலாம்” என்றாள் காவ்யா.

“நானும், பிரபுவும் ஒருத்தரையொருத்தர் விரும்புறோம். நான் அவரைத்தான் கல்யாணம் செய்துப்பேன்” என்றாள் வாசுகி.

“நல்ல காதல்… ஏதோ வியாபாரம் பேசுற மாதிரி, அவர பெத்தவங்க பேசுறாங்க. ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாம அப்படியே உட்கார்ந்து இருக்கார்” என வாசுகியிடம் கூறியவள், “அத்தை இவ்வளவு அவரால் செய்ய முடியாது. ரொம்ப சிரமப்படுவார். நாம கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம். வேற நல்ல இடம் பார்க்கலாம். நீங்க அவ கிட்ட எடுத்து சொல்லுங்க” என்றாள் காவ்யா.

“என்ன கொஞ்ச நாள் போகட்டுமா? நீ மட்டும் அவ வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்ட. என் பேத்திக்கு மட்டும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா? நல்லா இருக்குடி அம்மா உன் நியாயம்” என்றார் சுந்தராம்பாள்.

“உங்களுக்கும் எனக்கும் எந்த பேச்சும் இல்லை. நான் இவங்க கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க ஓரமா போய் உட்காருங்க” என்றாள் காவ்யா.

“அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு. நீங்க மட்டும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. என்னை வெயிட் பண்ண சொல்றீங்க?” எனக் கேட்டாள் வாசுகி.

“என் கதையே வேற. என் அப்பாவுக்கு வயசாயிடுச்சுன்னு எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சுட்டார்.என் வீட்டுக்காரர் வரதட்சணைன்னு ஒரு பைசா என்கிட்ட வாங்கல. எங்க வீட்டில பிரியப்பட்டத தான் செஞ்சாங்க. அப்படி ஏதாவது கேட்டிருந்தா நானே கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்” என்றாள்.

“இங்க பாரு செய்யப் போறது நந்தாதான். அவன் வந்து சொல்லட்டும் முடியாதுன்னு. அதுக்கு முன்னே நீ அபசகுணமா இப்படி பேசாதே” என்றார் சாந்தி.

“அதானே… அண்ணா வந்து சொல்லட்டும். இவங்க மட்டும் வீட்ல யாரும் ஒத்துக்கலன்னாலும் பேசி சம்மதிக்க வச்ச, மனசுக்கு பிடிச்சவங்கள கல்யாணம் பண்ணிக்கலாம். நான் மட்டும் கூடாதா?” என்றாள் வாசுகி.

“உங்க கிட்ட எல்லாம் பேச முடியாது. அவர் வரட்டும் பேசுக்கிறேன். உங்களுக்கு செய்யணும், செய்யணும்னு அவர் கஷ்டத்தை தோளில் ஏத்திகிட்டா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றாள் காவ்யா.

“போதும் நிறுத்துடி. என்ன பண்ண முடியும் உன்னால? நந்தா எப்பவும் எங்களை விட்டு தரமாட்டான். என்னமோ பணத்துக்கு கணக்கு கேட்டு தர மாட்டேன்னு சொன்ன. நீ தரலைன்னா….? அவனே எனக்கு பணம் அனுப்பிட்டான். உனக்காக எவ்வளவு செலவு செய்றான்? கண்டிப்பா எல்லாத்தையும் செஞ்சு என் பொண்ணு கல்யாணத்தையும் நடத்தி வைப்பான். ஏன்னா உன்னை விட நாங்க தான் அவனுக்கு முக்கியம்” என்றார் சாந்தி.

“நீங்க சொல்றத கேட்டா எனக்கு சிரிப்புதான் வருது. என்னை விட அவருக்கு எதுவும் முக்கியம் கிடையாது. அவர் வரட்டும். சீக்கிரம் நீங்க எல்லாரும் புரிஞ்சிப்பீங்க” என்றவள் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சென்று விட்டாள்.