மூன்று வருடங்களாக காவ்யாவின் நினைவுகளால் நிம்மதி இழந்து, உறக்கத்தை தொலைத்திருந்த நந்தகுமார், தன்னுடைய காதல் மனைவியை இன்று கண்டுவிட்டதாலும், இன்ப அதிர்ச்சியாக தனக்கு ஒரு மகன் இருப்பது தெரிந்ததாலும், உற்சாகத்தில் உறக்கம் வராமல் வெளியே நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வானத்தில் மேகம் நிலவைச் சுற்றி நகர்வது போல, அவனது நினைவுகளும் காவ்யாவை சுற்றி நகர்ந்தன.
நந்தா பெண் பார்த்துவிட்டு சென்று ஒரு வாரமாகியிருந்தது. காவ்யாவின் தந்தை பெண் கொடுக்க மாட்டேன் என மறுத்து விட்ட பிறகு என்ன செய்வது என அவனுக்கு தெரியவில்லை. நந்தாவால் காவ்யாவை மறக்க முடியவில்லை.
மனம் அவளையே சுற்றி வந்தது. நந்தா தான் இப்படி ஒரு பெண்ணிடம் பித்தாகிப் போவோம் என கனவிலும் நினைக்கவில்லை. அவன் நெஞ்சத்தில் வந்தமர்ந்து சடுகுடு ஆட ஆரம்பித்தாள் காவ்யா.
‘என்ன இது? சேர்ந்து ஒரு அரை மணி நேரம் பார்த்து பேசியிருப்பியா…? பெரிய அமரக் காதல் மாதிரி…. அவளை மறக்க முடியாதா?’ என மனசாட்சியின் ஒரு குரல் கேள்வியெழுப்ப, ‘காதல். அதுல என்ன அமரக் காதல், காவியக் காதல்? அமரம், காவியம் அப்படின்னு எந்த அலங்காரமும் இல்லாட்டியும் காதல் காதல்தான். அவளை மறக்க முடியாது’ என மனசாட்சியின் மற்றொரு குரல் கூறியது.
முதன் முதலாக ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்பட்ட தன் மனம், அவள் இல்லை என்றானால் வேறு யாரையும் நாடாது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டான். அவள்தான் தன் மனைவி என்று முடிவு செய்து விட்டான். அதை எப்படி செயல்படுத்துவது என்றுதான் அவனுக்கு தெரியவில்லை.
இங்கே காவ்யாவின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது. வெளியில் எங்கு சென்றாலும் தன்னை தொடர்ந்து வருகிறானா, தனக்கு தெரியாமல் எங்காவது இருக்கிறானா என தேட ஆரம்பித்தாள். நொடிக்கொரு முறை தனக்கு எதுவும் அவனிடமிருந்து செய்தி வந்திருக்கிறதா என பார்த்தாள். எதேனும் அழைப்பு வந்தால் அவனாக இருக்குமோ என ஆவலுடன் எடுத்து பார்த்து ஏமாந்து போனாள்.
‘ம்ஹூம்…. இது சரி வராது. இவன் எதுவும் செய்ய மாட்டான். நாமதான் ஏதாவது செய்யணும்’ என முடிவெடுத்து கொண்டாள். அடுத்த நாளே செயல்படுத்தவும் செய்தாள்.
நந்தா அவனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு ‘அவளை சென்று சந்திக்கலாமா, சந்திக்கலாம் என்றால் எங்கே எப்படி சென்று சந்திப்பது, என்ன பேசுவது’ என்றெல்லாம் மனதிற்குள் யோசித்துக் கொண்டிருக்க, அவனைப் பார்க்க காவ்யா என்று ஒரு பெண் வந்திருப்பதாக வரவேற்பிலிருந்து செய்தி வந்தது. உடலெங்கும் புது இரத்தம் பாய, அவளைக் காண ஓடோடிச் சென்றான் நந்தா.
சிவப்பு நிறத்தில் சல்வார் அணிந்திருந்தவள் காத்திருப்போர் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, அங்கிருந்த ஆங்கில வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள். நந்தா அங்கே வரவும், அவனை நிமிர்ந்து பார்த்து, “என்ன சார் என்னை நினைவிருக்கா?” எனக் கேட்டாள்.
“உன்னை தவிர வேறு எதுவுமே எனக்கு நினைப்பில்லை” என சிரித்துக்கொண்டே நந்தா கூற,
“ஓஹோ….. அதனாலதான் என்னை பார்க்க வந்திருக்கீங்க போல” என நக்கலாய் கேட்டாள் காவ்யா.
“வெளியிலே போய் பேசலாமா?” என நந்தா கேட்க, எழுந்து கொண்டவள் “நான் கீழே வெய்ட் பண்றேன். சீக்கிரம் யார்கிட்ட என்ன சொல்லனுமோ சொல்லிட்டு வாங்க” எனக் கூறி சென்றாள். அதிக நேரம் அவளை காக்க வைக்காமல், சில நிமிடங்களில் அவனும் வெளியே வந்தான்.
“என்னோட வண்டியில் உட்கார்ந்து வருவியா? ஆட்டோ இல்லன்னா டாக்ஸி கூப்பிடவா?” எனக் கேட்டான் நந்தா.
இடுப்பில் கைவைத்து முறைத்தவள், “அன்னைக்கு என் கையைப் பிடிச்சீங்களே, அன்னைக்கும் இதேமாதிரி பெர்மிஷன் கேட்க வேண்டியதுதானே, ஏன் கேட்கலை?” கொஞ்சம் கோவமாகவே கேட்டாள். அவள் கோவத்தை ரசித்தவன், அவனது வண்டியை எடுத்து வந்து, “உட்கார்” என்றான். அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
“நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான் நந்தா.
“நீங்க வருவீங்க, அட்லீஸ்ட் என் ஃபோன் நம்பரையாவது கண்டுபிடிச்சு பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஒன்னும் நடக்கல. இதுக்கு மேல எனக்கு பொறுமையில்ல. அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றாள் காவ்யா.
“உங்கப்பாதான் உன்னை கட்டி தர மாட்டேன்னு சொல்லிட்டாரே” என்றான் நந்தா. உக்கிரமாக நந்தாவை பார்த்தவள், “அதானே எங்கப்பாதான் ஒத்துக்கலையே, நான் கிளம்புறேன்” என எழுந்து நின்றாள்.
“உடனே கோவப்படாத, ப்ளீஸ்…. உட்காரு” என நந்தா கெஞ்ச, பெரிய மனது வைத்து அமர்ந்தாள். “ரொம்ப கோவமா இருக்க, நான் ஜில்லுனு ஏதாவது ஆர்டர் பண்றேன். உனக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்?” எனக் கேட்டான்.
“உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே சொல்லுங்க” என்றாள் காவ்யா.
“நான் ப்ளைன் லெமன் ஜூஸ்தான் சாப்பிடுவேன். பரவாயில்லையா?” எனக் கேட்டான். சிரித்தவள், “ஐஸ் போட்டா, போடாமலா?” எனக் கேட்க, “கொஞ்சமா ஐஸ் போட்டு” என்றான். “எனக்கு நிறைய ஐஸ் போட்டு வேணும்?” என சொல்ல, அவளுக்கும் தனக்குமாய் இரண்டு லெமன் ஜூஸ் சொன்னான்.
“அப்புறம் சொல்லுங்க” என்றாள் காவ்யா.
“என்ன சொல்ல?” என நந்தா கேட்டான்.
“பாட்டெல்லாம் பாடி, அப்புறம் கையை வேற பிடிச்சு, மனசே இல்ல விடன்னு டயலாக் எல்லாம் பேசி சின்ன பொண்ணு மனச கெடுத்து வச்சிட்டு, இப்போ உங்க அப்பா பொண்ணு தர மாட்டேங்கிறார், ஆயா பொண்ணு தர மாட்டேங்குறாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?” எனக் கேட்டாள் காவ்யா.
“உங்கப்பா வேற எதுவும் சொன்னா பேசிப் பார்க்கலாம். ஆனா தனிக்குடித்தனம்னு எல்லாம் பேசினா, என்ன அவர்கிட்ட பேசுறது?” எனக் கேட்டான்.
“அவர் கிட்ட பேச வேண்டாம், என்கிட்டயாவது பேசலாம்தானே?” எனக் கேட்டாள்.
“என்ன பேசுறது?”
“நீங்க ஒரு மியூசியம் பீஸ்ங்க” என காவ்யா கூற, சிரித்துக் கொண்டவன், “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் கொஞ்சம் இன்ட்ரோவர்ட் டைப். ஆனா உன்கூட என் வாழ்க்கையை ஈஸியா பகிர்ந்துக்க முடியும்னு தோணுது. உன்னை கண்டிப்பா நல்லா பாத்துக்குவேன். உங்க அப்பா சொல்ற மாதிரி எந்த கண்டிஷனும் இல்லாம என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” எனக் கேட்டான்.
அதற்குள் ஜூஸ் வந்துவிட, அதை இரண்டு வாய் உறிஞ்சியவள், “எனக்கும் கண்டிஷன்ஸ் இருக்கு” என்றாள். நந்தா கேள்வியாய் அவளைப் பார்த்தான்.
“என் அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. அவங்களுக்கு கல்யாணமாகி 10 வருஷம் கழிச்சிதான் நான் பிறந்தேன். ரெண்டு பேருக்குமே வயசாயிடுச்சு. நீங்க அவங்களுக்கு ஒரு மாப்பிள்ளையா இல்லாம மகன் மாதிரி இருக்கணும்” என்றாள் காவ்யா.
“கண்டிப்பா காவ்யா. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே அவங்கள பாத்துக்கலாம். ஆனா அதுக்காக வீட்டோட மாப்பிள்ளையா எல்லாம் வர சொல்லக்கூடாது” என்றான் நந்தா.
“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்” என்றவள், “எனக்கு முன்கோபம் அதிகம், கோவத்துல ஏதாவது பேசிடுவேன் பொறுத்துப் போக முடியுமா?” என கேட்டாள்.
“எனக்கும் கோவம் வரும். முன் கோவம் எல்லாம் வராது. உன் கோவத்தை நான் பொறுத்துக்கிறேன், ஆனா உன் முன்கோபத்தை நீ குறைக்க ட்ரை பண்ணு” என்றான் நந்தா.
“எனக்கு கோவம் வந்தால் என்ன செய்கிறோம்ன்னே தெரியாம அவசரத்துல என்ன வேணா செய்வேன். அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்களா?” எனக் கேட்டாள்.
“அப்படி என்ன செய்வ?” எனக் கேட்டான் நந்தா.
“அது அந்த சமயத்துல என்ன தோணுதோ, அதை செய்வேன். அது இப்பவே எப்படி தெரியும்?” என பதிலுக்கு அவனையே கேள்வி கேட்டாள்.
“ம்….. உன் கண்டிஷன்ஸ் எல்லாம் கொஞ்சம் விவகாரமாகத்தான் போயிட்டு இருக்கு. இதையெல்லாம் பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு நீ சொல்லவே இல்லை” என்றான்.
“அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா?” என பயந்து போய் நந்தா கேட்க, “பிடிச்சிருந்துச்சு, சொல்லலாம்னு நான் நினைக்கும் போது, கையெல்லாம் பிடிச்சிக்கிட்டீங்களா? நெர்வஸ் ஆகி சொல்ல மறந்துட்டேன்” என்றாள்.
“அப்படியா…? உன் கையை நான் பிடிச்சிகிட்டா எல்லாத்தையும் மறந்திடுவியா? இது தெரிஞ்சிருந்தா வந்தவுடனே பக்கத்துல உட்கார்ந்து கையைப் பிடிச்சிருந்திருப்பேனே. நீயும் உன் கண்டிஷன்ஸ் எல்லாத்தையும் மறந்திருப்ப” என நந்தா கூற, “அதனாலதான் பக்கத்துல உட்காராம இங்க வந்து உட்கார்ந்துகிட்டேன்” என்றாள் காவ்யா.
“நீ விவரம்தான். உன் எல்லா கண்டிஷன்ஸ்க்கும் ஓகே” என்றவன், “அதான் ஓகே சொல்லிட்டேனே, இப்ப வந்து பக்கத்துல உட்காரலாம்தானே” எனக் கேட்க, பிகு எதுவும் செய்யாமல் அவனருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய கையை மென்மையாய் பிடித்துக் கொண்டான் நந்தா.
“சீக்கிரம் கல்யாணத்துக்கு நாள் பார்க்க சொல்லுங்க” என காவ்யா கூற, “உங்கப்பா….??” என்றான் நந்தா.
“அவரை நான் பார்த்துக்கிறேன். நான் கேட்டு அவர் எதையும் மறுத்தது இல்லை. உங்களை மட்டும் வேண்டாம்னு சொல்லிடுவாரா?” எனக் கேட்டாள்.
“நீ வரலைன்னாலும் நான் வந்திருப்பேன். என்ன நீ கொஞ்சம் ஃபாஸ்ட்” என்றான் நந்தா.
“ஒரு செல்ஃபி” எனக்கேட்டு, அவனுடன் சேர்ந்து தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். அவனுடைய கைபேசி எண்ணை கேட்டு, அவனுக்கும் அனுப்ப, காவ்யாவின் கைப்பேசியில் சிரித்துக் கொண்டிருந்த காவ்யாவும், நந்தகுமாரும் இப்போது நந்தாவின் கைபேசியிலும் சிரிக்க ஆரம்பித்தனர்.