காவ்யா மற்றும் அர்ஜுனுடன் உள்ளே நந்தா நுழைய, கீர்த்தி “வாங்கண்ணி” என அழைத்தாள். சாந்தியும் “வாம்மா” என அழைக்க, காவ்யாவும் சாந்தியிடம் சம்பிரதாயமாக சிரித்துவிட்டு நந்தாவின் அருகில் போய் நின்று கொண்டாள். நந்தாவை அவனது குடும்பத்துடன் பார்த்த ஆர்த்திக்கு அழுகை வருவது போல இருந்தது, இனியும் தன்னுடைய ஆசை நிறைவேறப் போவதில்லை என்பது தெள்ளத்தெளிவாக அவளுக்கு புரிந்தது.
“இப்போ நிச்சயப் பத்திரிக்கை வாசிங்க” என்றான் நந்தா. நிச்சயப் பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின்னர், கீர்த்திக்கும் நவீனுக்கும் நலங்கு செய்தனர். பின்னர் மதிய சாப்பாடு பரிமாறப்பட்டது. நவீன் குடும்பத்தினர் சென்றபிறகு, காவ்யாவும் கீர்த்தியிடம் சொல்லிக்கொண்டு, சாந்தியிடமும் “நான் கிளம்புறேன்” எனச் சொல்லி கிளம்பினாள்.
காவ்யா இங்கேயே இருப்பாள் என சாந்தி எதிர்பார்த்திருக்க, அவள் கிளம்பவும் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றிருந்தார். நந்தா வெளியில் சென்று கால் டாக்ஸி புக் செய்து விட்டு அதற்காக காத்திருந்தான்.
“நானும் இங்க இருக்கவா? உங்களோடேயே சேர்ந்து கிளம்புறேனே” என்றாள் காவ்யா.
“வேண்டாம் காவ்யா. நீ கோவத்துல ஏதாவது தப்பா பேசினா திருப்பி பிரச்சனையாகும். நானே பாத்துக்கிறேன்” என்றான் நந்தா.
“நான் எதுவும் பேசலை. நீங்க என்ன பேசுறீங்கன்னு பார்க்கவாவது இருக்கேனே”
“ஒன்னும் வேண்டாம். உன்னால பேசாம இருக்க முடியாது. நீ கிளம்பு. நான் ஈவ்னிங் வந்துடுறேன்” என்றான் நந்தா.
அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, கால் டாக்ஸி வந்துவிட, இருவரையும் அதில் அனுப்பி வைத்தான்.
நந்தா உள்ளே வர, வாசுகியின் மாமியார் வீட்டினரும் விடைபெற, “உங்க எல்லார்கிட்டயும் கொஞ்சம் பேசணும். இருங்க” என்றான்.
அவர்கள் அனைவரும் என்ன என்பது போல் பார்க்க, “ஆர்த்தி விஷயமா பேசணும்” என்றான். எல்லோரும் அங்கேயே உட்கார்ந்து விட்டனர்.
“சின்ன பொண்ணு வயசுக் கோளாறுல ஏதாவது தப்பு பண்ணினா, பெரியவங்க எடுத்து சொல்லி புரிய வைக்கணும். அதை விட்டுட்டு, நீ என்ன வேணா செய். அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கிறதா இருந்தாலும் எனக்கு ஒன்னும் இல்லைன்னு இருக்கக் கூடாது” என்றான் நந்தா.
கோபமடைந்த ஆர்த்தியின் அம்மா, “நீங்க உங்க மனைவியோட சேர்ந்து வாழலை. சீக்கிரம் விவாகரத்து ஆகப் போகுதுன்னு உங்க தங்கச்சிதான் சொன்னா. எங்களுக்கு விருப்பமில்லைன்னலும் பொண்ணு ஆசைப்பட்டதால உங்களுக்கும் விவாகரத்து ஆனதுக்கப்புறம் கல்யாணம் பேசலாம்னு இருந்தோம். இதுல என் பொண்ணு என்ன உங்க குடும்பத்தை கெடுத்தா? என் பொண்ணு மேல இப்படி எல்லாம் அபாண்டமா பழி சுமத்தாதீங்க” என்றார்.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள பிரச்சனை வரும்தான். உடனே அவங்க விவாகரத்து வாங்கிடுவாங்கன்னு நினைச்சுடுவீங்களா? எனக்கு கல்யாணம் செய்து கொடுக்கிறது பத்தி நீங்களா முடிவு பண்ணிக்குவீங்களா? என் கிட்ட ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா?” எனக் கேட்டான் நந்தா.
“நாங்களா ஒன்னும் முடிவு பண்ணலை. உங்க தங்கச்சி வாசுகிதான் சொன்னா. நாங்க உங்ககிட்ட பேசுறோம்னு பல தடவை சொல்லிட்டோம். உங்க தங்கச்சிதான் அவ பேசுக்கிறதா சொன்னா” என்றார் ஆர்த்தியின் அம்மா. மற்றவர்கள் ஆமோதிப்பது போல பார்த்திருக்க, சாந்தியாலும் ஒன்றும் கூற முடியாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘நமக்கு எதுவும் சந்தர்ப்பம் கிடைக்குமா? ஏதாவது சொல்லலாமா?’ என எண்ணி வேடிக்கை பார்த்தார் சுந்தராம்பாள்.
“இங்கே வா வாசுகி” என நந்தா அழைத்தான். பயந்துகொண்டே வாசுகி வர, “என்கிட்ட இது சம்பந்தமா நீ என்ன பேசணும்? பேசு” என்றான்.
எச்சில் கூட்டி விழுங்கிய வாசுகி, “நீ அண்ணியை பிரிஞ்சிருக்கவும் உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு நினைச்சேன். ஆர்த்தியும் உன் மேல பிரியப்பட்டதால உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலாம்னு பேசினேன்” என்றாள்.
“இதுக்கு உன்கிட்ட நான் பதில் சொல்லவே இல்லையா?” எனக் கேட்டான். வாசுகி பதில் சொல்லாமல் நிற்க, “என்ன பிரபு இது? உங்க மனைவி என்ன செஞ்சாலும் இப்படித்தான் வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்திருப்பீங்களா?” எனக் கேட்டான் நந்தா.
பிரபுவும் பதில் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்திருக்க, “நான் வாசுகிகிட்ட மட்டுமில்லை, ஆர்த்திகிட்ட கூட தெளிவா, காவ்யாதான் என்னோட மனைவின்னும், எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை அவளோடதான் சேர்ந்து வாழறேன்னும் சொல்லியிருக்கேன். இப்போ உங்க எல்லார் முன்னாடியும் திரும்பவும் சொல்றேன். இந்த நந்தாவோட மனசுலேயும் சரி, வாழ்க்கையிலேயும் சரி, ஒரு பொண்ணுக்கு இடமிருக்குன்னா அது என்னோட காவ்யாக்கு மட்டும்தான்” என்றவன் ஆர்த்தியை நோக்கி முறைத்து,
“நான் தெளிவா எடுத்து சொல்லியும் இந்த ஆர்த்தி என் ஆஃபீஸ்ல இருக்கிற ஒருத்தரை தூண்டிவிட்டு, என் காவ்யாகிட்ட எதுவும் பிரச்சனை பண்ணி, அது மூலமா எங்க ரெண்டு பேருக்கும் சண்டை வரணும்னு பிளான் பண்ணி செய்ய சொல்லியிருக்கா. அவர் நல்லவர். எங்ககிட்ட நேரடியாவே வந்து சொல்லிட்டார். ஒருவேளை கெட்டவரா இருந்து எதுவும் தப்பா செய்திருந்தா என்ன ஆகியிருக்கும்? இதுதான் நீங்க உங்க பொண்ணை வளர்க்கிற லட்சணமா?” எனக் கேட்டான் நந்தா.
பளாரென ஆர்த்தியை அறைந்தான் அவளின் மூத்த அண்ணன் தியாகு. “நான் அப்பவே சொன்னேன். இதெல்லாம் சரியா வராது, நான் மாப்பிள்ளை பார்க்கிறேன்னு. எல்லோரும் அவ இஷ்டத்துக்கு ஆடுனீங்க. என்ன தைரியம் இருந்தா, கிரிமினல் வேலையெல்லாம் பார்ப்பா. எதுலயாவது மாட்டிகிட்டா ஜெயிலுக்குதான் போகணும். நம்ம குடும்ப மானம் என்னாகிறது? எல்லாத்தையும் விட ஒரு பொண்ணா இருந்துகிட்டு இன்னொரு பொண்ணுக்கு கெடுதல் செய்ய நினைப்பாளா?” என கோபமாகக் கேட்டான்.
“அண்ணிதான் அப்படி செய்ய சொன்னாங்க” என அழுது கொண்டே, வாசுகியை கை காட்டினாள் ஆர்த்தி.
நந்தாவுக்கு இது புதிய விஷயம். அதிர்ந்துபோய் வாசுகியைப் பார்த்தான். ‘இவளுக்காக தன்னுடைய மூன்று வருட வாழ்க்கையையே இழந்திருக்க, எத்தனை கெட்ட எண்ணம் இருந்திருந்தால் என் மனைவிக்கே கெடுதல் செய்ய பார்த்திருப்பாள்’ என நினைத்தான்.
“பார்த்தீங்களா…? ஒன்னும் தெரியாத சின்ன பொண்ணை உங்க தங்கச்சிதான் கெடுத்து வச்சிருக்கா. என் புள்ளை அவ தங்கச்சியை கண்டிச்சிட்டான். நீங்க என்ன பண்ணப் போறீங்க?” எனக் கேட்டார் ஆர்த்தியின் அன்னை.
“என்னோட தங்கச்சியா இருந்தா நானும் கண்டிச்சிருப்பேன். ஆனா இனிமே இவ என் தங்கச்சி இல்லை. என் அப்பாவோட இரண்டாவது மனைவியோட மகள் அவ்வளவுதான். இவளுக்கு எல்லாம் செய்கிற கடமை எனக்கு இருக்கு. இவ மேல எந்த உரிமையும் எனக்கு இல்லை” என்றான் நந்தா.
நந்தா பேசியதில் பலமாக மனதில் அடி வாங்கினாள் வாசுகி. சாந்திக்கும் அவன் கூறியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கோவமாக வாசுகியைப் பார்த்து, “ச்சீய் நீயெல்லாம் ஒரு பொண்ணா? அவன் பொண்டாட்டிய பிரிஞ்சு இருக்கான்னு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு நினைச்சேனே தவிர, காவ்யாவுக்கு கெடுதல் செய்யணும்னு நினைக்கலை. உனக்காகதானடி அவன் பொண்டாட்டி கூட சண்டை போட்டிருந்தான். அவன் காவ்யாவோட சேர்ந்து வாழறான்னு தெரிஞ்சும் அவன் பொண்டாட்டிக்கு கெடுதல் செய்ய நினைச்சிருக்கியே… என்ன ஜென்மம் நீ?” என்றார் சாந்தி.
“உனக்கு எங்க அறிவு போச்சு ஆர்த்தி? படிச்ச பொண்ணுதானே நீ? உனக்கு என்ன குறை? ஏற்கனவே கல்யாணம் ஆனவரை விரும்பின. சரி… அவரும் டிவோர்ஸ் ஆகப் போறவர்ன்னு நாங்க சம்மதிச்சோம். அவர்தான் உன்கிட்ட தெளிவா முடியாதுன்னு சொல்லியிருக்காரே. அதுக்கப்புறமும் அவர் மனைவிக்கு யாரையோ விட்டு பிரச்சனை பண்ண சொல்லியிருக்க? அப்படி ஏதாவது பண்ணப் போய் அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகியிருந்தா….? நினைச்சுப் பார்க்கவே நடுங்குது. இப்படி எல்லாம் தேர்ட் ரேட் வேலையெல்லாம் நீ செய்வீயா?” எனக் கேட்டாள் அவளது முதல் அண்ணி.
ஆர்த்தியின் அம்மா அழவே ஆரம்பித்து விட்டார். “டேய் பிரபு இதெல்லாம் உன் பொண்டாட்டியாலதான். உன் தங்கச்சி வாழ்க்கையவே கெடுக்க பார்த்திருக்கா. நீ பாத்துக்கிட்டு சும்மா உட்கார்ந்திருக்கியே. இனியும் இவ உனக்கு வேணுமா? இவளை இங்கேயே தலைமுழுகிட்டு வா, நாம போகலாம்” என்றார் ஆர்த்தியின் அன்னை. வாசுகி அதிர்ந்துபோய் பிரபுவை பார்க்க, பிரபு எப்பொழுதும் போல அம்மாவின் வார்த்தைகளை ஆமோதிப்பது போல அமர்ந்திருந்தான்.
சாந்தியின் தம்பி, “ எங்க பொண்ணு தெரியாம இப்படி பண்ணிட்டு. இனிமே இப்படி எதுவும் செய்யாது. ஒரு குழந்தை வேற இருக்கு. இப்படி எல்லாம் பேசாதீங்க. மன்னிச்சு ஏத்துக்குங்க” என்றார்.
“பிரபு, உங்களைப் பார்த்தாதான் கோவமா வருது. அவ தப்பு செய்யறப்ப தட்டிக் கேட்கவும் இல்லை. அதுவே அவ செய்யறதுக்கு எல்லாம் நீங்க துணை போன மாதிரிதான். இப்ப உங்க அம்மா அவளை விட்டுடணும்னு சொல்லவும் ஒன்னும் சொல்லாம உட்கார்ந்திருக்கீங்க”
“அவளை என்ன நீங்க காதலிச்சீங்க? உண்மையா நீங்க அவ மேல அன்பு வச்சிருந்தா, தப்பு செய்யும் போது செய்யாதன்னு தடுத்து இருக்கணும். உங்களுக்கு தெரியாம தப்பு செஞ்சு மாட்டிகிட்டாலும், நீங்க கண்டிங்க. மத்தவங்கள பேசவிட்டு வேடிக்கை பார்க்காதீங்க. அவளால அதிகம் பாதிக்கப்பட்டது நானும் என் மனைவியும்தான். உங்க தங்கச்சி மேலயும் சரிசமம் தப்பு இருக்கு. மத்தவங்க என்ன சொன்னாலும் அவளை நீங்க கைவிடக் கூடாது” என்றான் நந்தா.
“இப்படி பேசிக்கிட்டே இல்லாம, ஆர்த்திக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். இப்போ கிளம்பலாம் வாங்க. டேய் பிரபு… உன் பொண்டாட்டியையும் அழைச்சுக்கிட்டு வா” என்றான் பிரபுவின் அண்ணன்.
எந்த மாமியார் வீட்டில் தன்னுடைய கை ஓங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இதெல்லாம் செய்தாளோ, இனி அங்கே தான் ஒரு செல்லாக்காசு என்பது புரிந்து மனம் தளர்ந்து பிரபுவுடன் வெளியேறினாள் வாசுகி.
நந்தாவும் கிளம்ப, “இனிமேலாவது காவ்யா கூட, நீ இங்க வந்து இருக்கலாம்தானே நந்தா. நான் காவ்யாகிட்ட வந்து மன்னிப்பு கேட்கிறேன்” என்றார் சாந்தி.
“தவறை உணர்ந்தாலே போதும். மன்னிப்பெல்லாம் வேண்டாம். என்ன இருந்தாலும் வாசுகியும் என் அப்பாவோட பொண்ணு. அவளுக்கும் தாய்வீடுன்னு ஒன்னு வேணும். அவ இங்க வந்து போக இருக்க, காவ்யா அதை எப்படி எடுத்துப்பான்னு தெரியாது. அதோட…. “ என சுந்தராம்பாளை பார்த்தவன்,
“இங்க வந்தா சின்ன சின்ன விஷயமெல்லாம் பெருசாகி பிரச்சனை ஆகிடும். எங்களால நிம்மதியா இருக்க முடியாது. கடைசி வரைக்கும் உங்களுக்கு செய்ய வேண்டியதை நான் செய்வேன். ஆனா காவ்யாவை இங்கே வந்து இருன்னு நான் சொல்லமாட்டேன். அவளோட உணர்வுகளுக்கும் நான் மதிப்பு கொடுக்கணும். நாங்க நிறைய இழந்துட்டோம், இனியும் எதையும் இழக்க விரும்பலை. நாங்க நல்லது கெட்டதுன்னா வர்றோம். மத்தபடி தனியாவே இருந்துக்குறோம்” எனக் கூறிவிட்டு கிளம்பி விட்டான் நந்தா.
நந்தா சென்றதும் தன் தம்பியிடம் சென்ற சாந்தி, “ அம்மா இனிமே உன் கூடவே இருக்கட்டும். அவங்கள நீ பார்த்துக்க நான் மாசாமாசம் பணம் தந்துடுறேன்” எனக் கூற சுந்தராம்பாள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
“இவ்வளவு நாள் ஆதரவாக இருந்த என்னையவே வீட்டை விட்டு வெளியே போக சொல்லுவியா?” எனக் கேட்டார் சுந்தராம்பாள்.
“மனசாட்சியோடு பேசும்மா. யாருக்கு யார் ஆதரவு? நந்தா சொன்னான்ல… ஏதாவது நல்லது கெட்டதுன்னா காவ்யா கூட இங்க வருவேன்னு. அப்ப கூட நீ இருந்தீன்னா ஏதாவது தேவையில்லாத பிரச்சனை வரும். இனிமேலும் நம்மளால அவங்களுக்குள்ள பிரச்சினை வந்துச்சின்னா என் புருஷன் என்னை மன்னிக்கவே மாட்டார். நீ தம்பியோடேயே இரு” எனக் கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார் சாந்தி.
சாந்தியின் தம்பி மனைவி சுந்தராம்பாளை விட அதிக சாமர்த்தியம் நிறைந்தவள். பணம் தருகிறேன் என சாந்தி கூறிவிட்டதால் மறுப்பு எதுவும் சொல்ல வில்லை. ஆனால் மனதிற்குள் ‘இந்த கிழவி வாயை வச்சிகிட்டு சும்மா இல்லாம ஏதாவது சொல்லட்டும், அப்புறம் இருக்கு’ என நினைத்துக் கொண்டார்.
வீட்டிற்கு வந்த நந்தா மிகவும் களையிழந்து காணப்பட்டான். “என்னாச்சுங்க… ஏன் இப்படி இருக்கீங்க? நான் வந்ததுக்கு அப்புறம் எதுவும் பிரச்சினையாகிடுச்சா?” எனக் கேட்டாள் காவ்யா. அர்ஜுன் உறங்கிக் கொண்டிருந்தான்.
ஒன்றும் கூறாமல் சோஃபாவில் அமர்ந்து கொண்டான். அவன் அருகில் வந்தமர்ந்தாள் காவ்யா. அவன் கன்னத்தில் கை வைத்து “என்னங்க… என்னாச்சு?” என்றாள்.
இந்த வாசுகிக்காகத்தானே நான் யுஎஸ் போய், உன்னை 3 வருஷம் பிரிஞ்சி என் மகன் பிறந்தது கூட தெரியாமல் கஷ்டப்பட்டேன். ஆனால் அவ எவ்வளவு மோசமானவ தெரியுமா காவ்யா? ஆர்த்தி ஒன்னும் அவளா போய் தருண்கிட்ட பேசல. இவதான் சொல்லிக் கொடுத்திருக்கா” என்றான்.
“இது ஒன்னும் எனக்கு அதிர்ச்சியா இல்ல. அவ அப்படிப் பட்டவதான். ரொம்ப சுயநலம். பேராசை அதிகம். அவளை விடுங்க. அவளை நினைச்சா நீங்க டல்லா இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“அவளை நினைச்சு இல்ல காவ்யா. என்னை நினைச்சு… எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்? எல்லாருக்கும் செய்யலாம். ஆனா என் சந்தோஷத்தை தொலைச்சி, என் வாழ்க்கையவே இழக்குற அளவுக்கு கடமை கடமைன்னு நீ சொல்றதை கேட்காம விட்டது எவ்வளோ பெரிய தப்பு? அதனால என்னை விட நீதான் அதிகம் கஷ்டப் பட்டிருக்க. நான் உயிரோட இருந்தும் உன்னை எப்படியெல்லாம் தவிக்கவிட்டுட்டேன்?” என கண் கலங்கினான்.
“என் மேலேயும் தப்பு இருக்குங்க. அவசரத்துல நான் பேசினதும், செஞ்சதும் உங்க கோபத்தை அதிகப்படுத்திடுச்சி. நீங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ரொம்ப பிடிவாதமா இருந்தேன். அதனாலதான் கஷ்டப்பட்டேன். எங்க அப்பா வேற எனக்கு நல்லது பண்றதா நினைச்சு நிறைய குழப்பிட்டார். நீங்க திரும்ப வந்ததுக்கப்புறம் கூட உங்களை நிறைய கஷ்டப்படுத்திட்டேன். உங்க மனச ரொம்ப காயப்படுத்திட்டேன். சாரி” என்றாள்.
“போதும் காவ்யா பழசை நாம பேசுறது இதுதான் கடைசியா இருக்கணும். இனிமே நாம இழந்ததை பத்தி பேசாம நம்ம வாழ்க்கையை நமக்காக வாழணும்” என்றான்.
“ம்… ஒரு நிமிஷம் கண்ணை மூடுங்க. உங்க மூட மாத்துற மாதிரி என் கிட்ட ஒன்னு இருக்கு. தர்றேன்” என்றாள் காவ்யா.
“பலமா எதுவோ கிடைக்கப் போகுது போல” எனக் கூறிக்கொண்டே நந்தா கண்களை மூடிக்கொண்டான். சில நிமிடங்களில் கண்களை திறக்கச் சொன்னாள் காவ்யா.
நந்தா கண்களை திறக்க, தொலைக்காட்சியில் பென் டிரைவ் மூலமாக அர்ஜுன் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் பிறந்தது முதல் 2 வயது வரை முதலில் புரண்டு படுத்தது, நடந்தது, பேசியது என அனைத்தையும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் காவ்யா சேமித்து வைத்திருந்தாள். அதுதான் ஓடிக்கொண்டிருந்தது. நந்தாவுக்கு சந்தோஷம் பீறிட்டது. ஆனந்த கண்ணீர் வந்து விட்டது.
இடையில் அர்ஜுனும் எழுந்துவிட அவனை மடியில் அமர வைத்துக் கொண்டே தான் இழந்த தருணங்களை நிழலாக பார்த்து ரசித்தான் நந்தா.
“ இவ்வளவு நாள் ஏண்டி காட்டல?” என குறைபட்டுக் கொண்டான்.
“காட்டக்கூடாததுன்னு எல்லாம் இல்லை. இதையெல்லாம் நான் ரெக்கார்ட் பண்ணி வச்சதே உங்களுக்காகத்தான். எப்ப இருந்தாலும் நீங்க திரும்பி வருவீங்கன்னு தெரியும். நீங்க வந்ததும் அம்மா இறந்துட்டாங்க. நானும் கோவத்தில இருந்தேன். அதான் மறந்துட்டேன்” என்றாள்.
“அர்ஜுனை பார்த்துட்டேன். ஆனா உன்னை பார்க்கலையே… அர்ஜுன் உன் வயித்துல இருந்தப்ப எப்படி இருந்த?” எனக் கேட்டான்.
“அப்போ எதுவும் ஃபோட்டோ எடுக்கல. அப்பா இறந்துட்டார், வீட்டுல சொந்தங்களும் ஆததிரிகல. அதனால எனக்கு வளைகாப்பு கூட செய்யலை” என்றாள் காவ்யா.
நந்தா மீண்டும் சோகமாக, “சும்மா… சும்மா இப்படி மூஞ்சிய தூக்கி வெச்சுக்காதீங்க, நல்லாவே இல்லை. போங்க… எனக்கு டீ போட்டு எடுத்திட்டு வாங்க” என்றாள்.
“நீ இவ்வளவு நேரம் வீட்லதானே இருந்த. நான்தான் லேட்டா வந்தேன். நீ போய் டீ போடு” என்றான் நந்தா.
“இந்த இஞ்சி டீ, துளசி டீ மாதிரி இன்னைக்கு வெங்காய டீ போட்டு ட்ரை பண்ண போறேன்” என கூறிக்கொண்டே காவ்யா எழ, “அம்மா தாயே… நீங்க இங்கேயே உட்காருங்க. நானே போய் போடுறேன்” என எழுந்து சென்றான் நந்தா.
“அப்பப்பா…. ஒரு நல்ல டீ குடிக்க, உன் அப்பாகிட்ட என்னெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு?” என காவ்யா அர்ஜுனிடம் கூற, காதில் விழுந்தாலும் ஒன்றும் கூறாமல் சிரித்துக் கொண்டே சமையலறை சென்றான் நந்தா.
நந்தாவும் காவ்யாவும் முன்னின்று கீர்த்தி- நவீன் திருமணத்தை நடத்தி வைத்தனர். சுந்தராம்பாள் அவர் மகன் வீட்டிற்கு சென்று விட்டார். வாசுகியிடம் காவ்யா பேசுவதே இல்லை. சாந்தி காவ்யாவிடம் மன்னிப்பு கேட்க, “நானும் உங்ககிட்ட அதிகப்படியாக பேசியிருக்கேன். என்னையும் மன்னிச்சிடுங்க” என்றாள் காவ்யா. ஆனால் சேர்ந்து வாழ மட்டும் மறுத்துவிட்டாள்.
ஆர்த்திக்கு திருமணமாகி அவள் கணவருடன் லண்டன் சென்று விட்டாள். வாசுகி எது சொன்னாலும், செய்தாலும் அவளது மாமியார் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்க, எப்பொழுதும் போல பிரபு அவளுக்கு ஆதரவாக பேசாமல் மௌனம் காத்து வாசுகியை எரிச்சல் படுத்திக் கொண்டிருந்தான். அவள் கேட்டாலும், “நீ என்ன செய்தாலும் நான் எதுவும் கேள்வி கேட்கிறேனா? அப்படித்தான் அம்மாகிட்டேயும் கேட்க மாட்டேன்” என்று கூறிவிட்டான். சொத்துக்கள் எதுவும் பிரிக்கப்படாது இருந்ததால், பேராசை கொண்ட வாசுகி தனிக்குடித்தனம் பற்றி யோசிக்கவும் முடியாமல் மாமியார் வீட்டிலேயே இருந்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தாள்.
சுந்தராம்பாளையே மிஞ்சிய அவரது மருமகளிடம் அவரது ஜம்பம் எதுவும் செல்லுபடியாகவில்லை. நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது. மற்றபடி செத்த பாம்பாகி போனார் சுந்தராம்பாள்.
நவீன் பெரிய மருத்துவமனை ஒன்றில் குழந்தை மருத்துவராக பணிபுரிய, கீர்த்தி மகப்பேறு மருத்துவம் படிக்க ஆரம்பித்திருந்தாள்.
“இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்ன்னா… அதுக்கு தகுந்த மாதிரி, நாம பாதுகாப்பா இருந்திருக்க வேண்டாமா?” எனக் கேட்டாள்.
“சரி இனிமேல் பாதுகாப்பா இருக்கலாம்” என்றான்.
அவன் தோளிலேயே அடிக்க ஆரம்பித்தாள். “ ஏண்டி அடிக்கிற?” என நந்தா கேட்க,
“இனிமேல் பாதுகாப்பா இருந்து என்ன பிரயோஜனம்? இங்க பாரு” என கைகளில் எதையோ காட்டினாள் காவ்யா.
அது கருவுற்றிருப்பதை உறுதி செய்யும் சாதனம். இரண்டு சிவப்பு கோடுகள் இருக்க, உடனே எழுந்தமர்ந்த நந்தா, அதை தன் கைகளில் வாங்கிப் பார்த்தான்.
“உண்மையாவா?” எனக் கேட்டான்.
“ஆமாம், இப்பதான் டெஸ்ட் பண்ணினேன்” என்றாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் கலங்கியிருந்தது.
“என்னாச்சுங்க?” என காவ்யா கேட்க, அவளை தன்னோடு அணைத்தவன், “தேங்க்ஸ்டி” என்றான். “எதுக்கு?” எனக்கேட்டாள் காவ்யா.
“எனக்கு இன்னொரு பாப்பாவ கொடுக்கப் போறதுக்கு. அர்ஜுன் பிறந்தப்ப நான் எதையெல்லாம் மிஸ் பண்ணினேனோ, அதையெல்லாம் திருப்பித்தரப் போறதுக்கு” என்றான்.
“இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்ன்னு சொன்னீங்க…?”
“அது அர்ஜுனை வச்சுக்கிட்டு நீ கஷ்டப்படக்கூடாதன்னுதான் அப்படி சொன்னேன். இப்போ தானா வந்ததுக்கு அப்புறம் ரொம்ப சந்தோசமா இருக்குடி. வேலைக்கு ஆள் போட்டுக்கலாம். நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நீ அர்ஜுனையும் குட்டி பாப்பாவையும் மட்டும் பார்த்துக்கோ” என்றான்.
“என்ன இருந்தாலும் உன் புள்ளைங்க மேலதானே உனக்கு அக்கறை?” என குழந்தை போல் கேட்டாள் காவ்யா.
“என்னடி பொறாமையா?” எனக் கேட்டான் நந்தா.
“ஆமாம், இப்பவே உனக்கு அர்ஜுன்தான் என்னை விட முக்கியம். இன்னொன்னும் பொறந்துட்டா நான் உன் கண்ணுக்கே தெரிய மாட்டேன்” என்றாள்.
“என்னடி இப்போ? நீதான் எனக்கு முக்கியம், நீ இல்லைனா நான் இல்லை, உன்னை விட்டா எனக்கு யாரும் இல்லைன்னு வசனம் பேசணும் அவ்வளவுதானே?” என நந்தா கேட்க,
“ம்ம்ம்….” என ஆமோதிப்பாய் தலையாட்டினாள் காவ்யா. அவளை தன் நெஞ்சில் படுக்கவைத்து,
வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும் கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும் உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும் உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம் தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும் தாரமே தாரமே வா வாழ்வின் வாசமே வாசமே நீ தானே தாரமே தாரமே வா எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா…
என்று பாட, நிம்மதியாய் படுத்து நந்தாவின் பாடலில் லயித்திருந்த்தாள் காவ்யா.
கிழக்கு வானில் உதயமான ஆதவன் தன் வெளிச்சக் கரங்கள் கொண்டு பூமியின் இருளை நீக்க ஆரம்பித்தான்.