தனசேகரின் இறுதி சடங்கிற்கு கும்பகோணத்திலிருந்து பூரணியின் வீட்டிலிருந்தும் வந்திருந்தனர். பூரணியின் அப்பா அம்மா, அவரது மூன்று சகோதரர்கள் வந்திருந்தனர். இறுதி சடங்கு முடிந்த பிறகு சுந்தராம்பாள் நந்தகுமாரை அவர்களுடன் அழைத்துச் செல்லுமாறு கூற, பூரணியின் முதல் தம்பியும் அவன் மனைவியும் “எங்க குடும்பத்தை பார்க்கிறதே சிரமமா இருக்கும்போது, இவனை எங்களால் பார்க்க முடியாது” என்று கூறிவிட்டனர்.
“இன்னும் என் இரண்டு பிள்ளைங்களுக்கு கல்யாணம் ஆகல. இவன எங்களோட வச்சிருந்தா நல்ல இடத்தில இருந்து இவனுங்களுக்கு பொண்ணுங்க எப்படி கிடைக்கும்? வயசான நாங்களே இவங்கள நம்பிதான் இருக்கோம். இவன எங்களால வச்சி பார்த்துக்க முடியாது. இவனோட அப்பாவுக்கு தான் பென்சன் வருமே. இந்த வீட்டிலேயும் நந்தாவுக்கு பங்கு இருக்கு. எல்லாம் உங்களுக்குத்தானே வரப்போகுது. நீங்கதான் வச்சி பார்த்துக்கணும்” எனக்கூறி நந்தாவை அழைத்துச் செல்வதை தட்டிக் கழித்தார் பூரணியின் அம்மா.
இந்த உரையாடல்கள் அனைத்தும் 12 வயது நிரம்பிய நந்தகுமாரின் கண்முன்னாலேயேதான் நடந்து கொண்டிருந்தது.
கேட்டுக்கொண்டிருந்த சாந்தி, “அவனை யாரும் பார்த்துக்க வேண்டாம். நானே பார்த்துக்குறேன்” என்றார்.
“நீ சும்மா இருடி, பென்ஷன்….. பொல்லாத பென்ஷன்…… அவர் என்ன கலெக்டர் உத்தியோகத்திலையா இருந்தாரு?சாதாரண கிளார்க் தானே? வர்ற பணத்துல ரெண்டு பொம்பளை பிள்ளைங்கள படிக்க வச்சிக்கிட்டு என் பொண்ணு குடும்பத்தை ஓட்டுறதே கஷ்டம். இதுல இவன வேற எப்படி பாத்துக்க முடியும்?” என்றார் சுந்தராம்பாள்.
“அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு. அவனை இப்படி ஏலம் விடாத. அவன் இனிமே என் பொறுப்புதான். அவர் பென்ஷன் கிடைக்காட்டாலும் நான் அவனை விடமாட்டேன்” என கூறினார் சாந்தி. ‘ஆண் துணையின்றி இருக்கும் வீட்டில் ஆண்மகனாக அவனை தன்னுடனே வைத்துக் கொள்ளலாம்’ என கருதினார் சாந்தி.
சொன்னதுபோலவே செய்யவும் செய்தார் சாந்தி. சாந்தி படித்தது வெறும் தொடக்கக்கல்வி மட்டும்தான். சாந்தி படிக்காததாலும், தனசேகர் குடித்துவிட்டு விபத்தில் சிக்கி இறந்ததாலும், சாந்திக்கு விவரம் ஏதும் இல்லாத காரணத்தால் மேற்கொண்டு எதுவும் முயலாததாலும் அரசு வேலையில் இருப்பவர் இறந்தால் அவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு கிடைக்கும் கருணை அடிப்படையிலான வேலையும் சாந்திக்கு கிடைக்கவில்லை.
பென்சன் தொகையில் குடும்பம் ஓட்டுவது சிரமமாக இருந்ததால் அருகிலிருந்த அச்சகம் ஒன்றிற்கு வேலைக்கு சென்றார் சாந்தி. பிள்ளைகளை பார்த்துக்கொள்கிறேன் என கூறிக்கொண்டு சுந்தராம்பாள் இவர்களோடு வந்து ஒட்டிக் கொண்டார். உண்மையில் தன் மகனின் கஷ்ட ஜீவனத்தில் வாழ்ந்த சுந்தராம்பாளுக்கு மூன்று வேலை சாப்பாடு கிடைப்பதே அரிது. வறுமையில் வாழ முடியாமல் பிள்ளைகளுக்காக என சாந்தியுடன் இருந்து கொண்டார்.
அவ்வப்போது நந்தாவை பார்த்துவிட்டு செல்லும் நந்தாவின் தாய் வீட்டு உறவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வருவதை குறைத்து பின்பு வருவதையே நிறுத்தி கொண்டனர்.
பிள்ளைகள் அரசு பள்ளியில் பயின்றதாலும், பென்சன் வந்ததாலும், சாந்தியும் வேலைக்கு செல்வதாலும் ஓரளவுக்கு உணவு தட்டுப்பாடு இன்றி அவர்களால் வாழ முடிந்தது. நந்தகுமார் படிப்பு ஒன்றையே தனது மூச்சாக கொண்டு படித்தான். பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தான்.
அதற்குப் பிறகு நந்தா பொறியியல் படிக்க ஆசைப்பட, சுந்தராம்பாள் அவனது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு அனுப்ப சாந்திக்கு யோசனை அளித்தார். “ரெண்டு பொம்பளைப் புள்ளைக இருக்கு. நீ இவனையே பார்த்துக்கிட்டு இருந்தா உன் பொண்ணுங்கள எப்படி கரையேத்துவ?” என கேட்டார்.
சாந்தி யோசிக்க, அவரிடம் வந்த நந்தா, “அம்மா என்ன படிக்க வைங்க, நான் நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனா, உங்களையும் தங்கச்சிங்களையும் நல்லா பாத்துக்குவேன்” என்றான்.
“பார்த்துக்குவ, பார்த்துக்குவ. இங்க பாருடி…. நான் சொல்றதை கேளு. நாளைக்கு இவன் படிச்சு வேலைக்கு போனா….உங்களை எல்லாம் அம்போன்னு விட்டுட்டு போய்டுவான். நீ நம்பி ஏமாந்துடாதே” என்றார் சுந்தராம்பாள்.
தன் படிப்பு கனவு சாம்பலாக போகிறது என நந்தகுமார் நினைத்திருக்க, “அவன் மேல படிக்கட்டும். அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ சொல்ற மாதிரியெல்லாம் அவன் நடந்துக்க மாட்டான்” எனக் கூறி நந்தாவின் வயிற்றில் பாலை வார்த்தார் சாந்தி.
உண்மையில் சாந்தி ஒரு சுயநலத்தோடுதான் நந்தாவை படிக்க வைத்தார். அவன் எப்படியும் நன்றாக படிப்பான் என்று அவருக்கு தெரியும். இருக்கின்ற நிலையில் தன் மக்களை நன்றாக வாழ வைக்க முடியாது என நினைத்த சாந்தி, நந்தா படித்து நல்ல வேலைக்கு சென்று சம்பாதித்தால் அதன் மூலம் தன் மக்களுக்கும் நல்ல வாழ்க்கை ஏற்படுத்தித்தர முடியும் என்று நினைத்தே நந்தாவை படிக்க வைத்தார்.
இவர் படிக்க வைக்க முடியாது, போடா என்று விரட்டியிருந்தால், நந்தா ஒன்றும் அப்படியே இருந்திருக்க மாட்டான். எப்படியும் ஏதாவது வேலை பார்த்து தன் படிப்பு கனவை நிறைவேற்றிக் கொண்டிருப்பான். ஆனால், என்னால் சமாளிக்க முடியாது, நீயும் ஏதாவது வேலைக்குப் போ என்று கூறியிருந்தால் அவன் விட்டுச் சென்றிருக்க மாட்டான். சாந்தி மீது உள்ள நன்றி உணர்வால் கண்டிப்பாக ஏதாவது வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருப்பான்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் சாந்தி படிக்க வைத்தது அவர் மீது இன்னும் நன்றியுணர்வை நந்தாவுக்கு ஏற்படுத்தியது. குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல படிப்பு ஒன்றே குறிக்கோளாக நன்றாகப் படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி பணியிலும் சேர்ந்துவிட்டான். அதற்குப் பின்னர்தான் தான் பார்த்து வந்த வேலையை விட்டார் சாந்தி.
வேலையில் இருந்துகொண்டே மேலும் படித்தான். தன் தகுதியை வளர்த்துக் கொண்டான். அவனுடைய திறமைகளுக்கு மதிப்பளிக்கப் பட்டது. விரைவிலேயே நல்ல நிலையையும் அடைந்து விட்டான்.
தாங்கள் இருந்த ஓட்டு வீட்டை இடித்துவிட்டு மாடி வீடாக மாற்றினான். சாந்தியையும் அவர் மக்களையும் பார்த்துக்கொள்வது தன்னுடைய தலையாய கடமை என்றே கருதினான். அவன் வேலைக்கு செல்லும் வரை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கும் சுந்தராம்பாள், வேலைக்கு சென்ற பிறகு, சொகுசாக அவனது பணத்தில் வாழ ஆரம்பித்தார். வாழ்க்கையில் வசதிகள் ஏற்பட்டாலும், அவனுடைய மனம் உண்மையான ஒரு சொந்தத்தை அவனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் நந்தகுமாரின் தாய்வழித் தாத்தா இறந்து விட்டதாக செய்தி வர, சாந்தியுடன் நந்தாவும் கும்பகோணம் சென்றான். நந்தகுமாரின் பாட்டி அவனை பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். துக்கத்தை ஒதுக்க வேண்டாம் என்று சாந்தி சொன்னதால்தான் வந்தான். மற்றபடி வயதான, அவனுடன் பழகியே இராத அந்த தாத்தா இறந்து போனதில் அவனுக்கு அழுகை எல்லாம் வரவில்லை.
இறுதி சடங்கு முடிந்து சென்னைக்கும் வந்து விட்டான். ஒரு மாதம் கழித்து அவருடைய மூத்த தாய்மாமா அவரது மனைவியுடன் வந்தார். தன்னுடைய மகளை அவளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். சாந்தி பயந்தே போனார். ஆனால் நந்தா தெளிவாக அவரிடம் “எனக்கு விருப்பமில்லை” என கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்.
நந்தகுமார் அவன் அன்னையைப் போன்று முகத்தில் தேஜஸ் நிறைந்திருக்கும். அடுத்தவர்களை கவராமல் அவன் ஒரு இடத்தில் இருந்தாலும் தனியே தெரிவான். அவனை தாத்தாவின் இறுதிசடங்கில் பார்த்த பூரணியின் தம்பி மகள் மாலதி, அவன்மீது விருப்பப்பட்டு தன் அன்னையிடம் கூற, அவனும் படித்து விட்டு நல்ல வேலையில் இருப்பதை தெரிந்து கொண்டவர் தன் கணவனுக்கு தூபம் இட சென்னைக்கு வந்துவிட்டனர்.
தாங்கள் சொன்னவுடன் உடனே சம்மதித்து விடுவான் என தப்புக்கணக்கு போட்டு விட்டனர். ஆனால் நந்தகுமார் அத்தனை சீக்கிரம் அவர்கள் செய்ததை மறந்து விடுவானா? அவர்கள் செய்ததை சொல்லிக் காட்டாவிட்டாலும், அவர்களுடன் சொந்தம் ஏற்படுத்திக் கொள்வதை மறுத்து, தான் எதையும் மறக்கவில்லை என்பதை செயலில் காட்டினான்.
இப்படியாக தன் பழைய கால நினைவுகளுடனே கார் ஓட்டிக் கொண்டு வந்தவன், தன் அலுவலகத்தை வந்தடைந்தான். ஆன்சைட் என்று அமெரிக்கா சென்று திரும்பியவன் இன்றுதான் அலுவலகம் செல்கிறான்.
காரை பார்க் செய்துவிட்டு லிஃப்ட்டில் நுழைந்தான். லிஃப்ட் மூடும் தருவாயில், யாரோ மீண்டும் நுழைய முற்பட, லிஃப்ட் கதவு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தவளைப் பார்த்து விட்டு நந்தகுமார் அதிர்ச்சி அடைய, அவனுக்கு சற்றும் குறையாமல் அவளும் அதிர்ந்து நின்றாள்.
வேறு சிலரும் உள்ளே நுழைய, இருவரும் அமைதி காத்தனர். வெளியே அமைதியாக இருந்தாலும் இருவரின் உள்ளங்களும் பேரரவியாய் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன.
நந்தகுமாரின் அலுவலகம் நான்காவது தளத்தில் இருந்தது. லிஃப்ட் மேல் நோக்கி ஒவ்வொரு தளமாக திறந்து மூட, நந்தகுமாரின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்பதுபோல இருந்தது. 4வது தளம் வந்துவிட அவளும் அங்கேயேதான் வெளியேறினாள். அவனுடைய அலுவலகத்திற்குள்தான் சென்றாள்.
உள்ளே நுழைந்த நந்தகுமாரின் கண்கள் ஆவலுடன் அவன் மனதிற்கினியவளைத் தேடத் தொடங்கின. இரண்டு கேபின்கள் தாண்டி மூன்றாவது கேபினில் கணிப்பொறி முன்பு அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்த அதிர்ச்சி அவள் முகத்திலும் பிரதிபலித்தது.
நந்தகுமாரை தெரிந்தவர்கள் சிலர் அவனுக்கு காலை வணக்கம் தெரிவிக்க ஏற்றுக் கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்றான்.
‘இவ இங்கதான் வேலை பார்க்கிறாளா? சென்னையில் இருந்தால் வீட்டை ஏன் வித்துட்டாங்க?’ என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய மேலதிகாரி அழைத்தார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் ஒன்றிற்கு ஹெட்டாக நியமிக்கப்பட்டிருந்தான் நந்தகுமார். அவன் குழுவில் நியமிக்கப்பட்டிருந்த மற்ற நபர்களை அழைத்து அவனுக்கு அறிமுகம் செய்வித்தார். அதில் அவளும் இருந்தாள்.
“மீட் மிஸஸ் காவ்யா” என அவர் அறிமுகப்படுத்த, “ஹலோ” என்றான் நந்தகுமார்.
அவளும் பதிலுக்கு “ஹலோ” என்றாள்.
‘மிஸஸ் காவ்யா’ என்ற அறிமுகத்தில் இவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
அவன் குழுவில் உள்ளவர்களுடன் பிராஜக்ட் பற்றி கலந்துரையாட ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் இருபது நபர்கள் அவன் குழுவில் இருந்தனர். ஒரு மணி நேரத்தில் மீட்டிங் ஹாலில் அனைவரும் இருந்தனர். இப்போது நந்தா, காவ்யா இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீண்டிருந்தனர்.
கலந்துரையாடல் முடிந்து எல்லோரும் வெளியேற, காவ்யாவை மட்டும் இருக்க சொன்னான் நந்தா.
காவ்யா நின்றிருக்க, “எப்படி இருக்க காவ்யா?” எனக் கேட்டான்.
“எனக்கென்ன நல்லா இருக்கேன்” என பதிலுரைத்தாள் காவ்யா. ‘நீ இல்லனாலும் எனக்கு ஒன்னும் குறையில்லை. ரொம்ப நல்லா இருக்கேன்’ என்னும் தொனியில் இருந்தது அவளது பதில்.
“உன்னை தேடிகிட்டு வீட்டுக்கு போயிருந்தேன். என்னாச்சு ஏன் வீட்டை வித்துட்டீங்க?” எனக் கேட்டான் நந்தா.
“என் பர்சனல் விஷயம் உங்களுக்கு எதுக்கு?” என்றாள் காவ்யா. ‘தெரிந்து நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்ற தொனி இருந்தது.
அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன் தானும் கோபப்பட்டு இன்னும் தங்கள் உறவை, ம்… உறவு….இன்னும் இருக்கிறதா என்றால் அவனைப் பொறுத்தவரையில் இருக்கிறது. காவ்யாவின் நிலை என்னவென்று தெரியாது. தங்கள் உறவில் அவளின் நிலை என்னவென்று தெரியாத, தான் அழுத்தமாக இன்னும் நம்பும் தங்கள் உறவை இன்னும் சிக்கலாக்கி கொள்ள விரும்பாமல் இலகுவாகவே பேசினான்.
“எவ்வளவு நாளா இங்க வேலையில இருக்க?” என கேட்டான் நந்தா.
“ஆறு மாசமா” என்றாள் காவ்யா.
“எங்க தங்கியிருக்க?” எனக் கேட்டான்.
“ப்ராஜெக்ட் சம்பந்தமா எதுவும் கேளுங்க சொல்றேன், என் வீட்டு அட்ரஸ் உங்களுக்கு தேவையில்லாதது” என்றாள் காவ்யா.
“ப்ராஜெக்ட் ஹெட் கிட்ட வீட்டு அட்ரஸ் சொல்ல கூடாதுன்னு இல்லை” என்றான் நந்தா.
“சொல்லனும்னு ஒன்னும் இல்லை” என சூடாக பதிலளித்தால் காவ்யா.
“நீ தங்கியிருக்கிற இடம் என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டியா?” எனக் கேட்டான் நந்தா.
“நீங்க என்ன செய்வீங்க, என்ன செய்ய மாட்டீங்கன்னு நான் எதுவும், எப்பவும் நினைக்கிறது இல்ல” என்றாள். ‘உன்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லை’ என்பதை மறைமுகமாக கூறினாள்.
“சரி நீ போ” என நந்தா கூற, காவ்யா விரைவாக அங்கிருந்து நகர “ஒரு நிமிஷம்” என்றான்.
காவ்யா திரும்பிப்பார்க்க “நீ அப்படியே இருக்க, மாறவே இல்லை” என்றான்.
பல்லைக் கடித்துக்கொண்டு அவனை முறைத்து பார்த்தவள் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறான். அவளைத்தேடி வீட்டிற்கு சென்று, அவள் அங்கு இல்லை என அதிர்ச்சியடைந்து அவளை எவ்வாறு கண்டுபிடிப்பது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், அவனது அலுவலகத்திலேயே அவளை பார்த்தது அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் அவளைப் பற்றிய இப்போதைய விவரங்கள் ஏதும் அவன் அறியவில்லை. ‘சீக்கிரமே தெரிந்துகொள்கிறேன், இனி உன்னை விட்டு செல்ல மாட்டேன்’ என நினைத்துக்கொண்டான்.
தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்த காவ்யா, ‘கடைசியில அவன் வேலை பார்க்கிற ஆபீஸ்க்கா வந்தோம்…?? சீக்கிரம் இந்த வேலையை விட்டு வேறு வேலை தேடிக்கொள்ள வேண்டும்’ என முடிவெடுத்து கொண்டாள். வேலையில் இருக்கும் வரை இந்த ப்ராஜெக்ட்டில் இருந்தாவது மாறிக்கொள்ள வேண்டும் என நினைத்தாள். அவள் அருகில் வந்தமர்ந்தாள் ஆர்த்தி.
“என்ன காவ்யா ஒரே யோசனையா இருக்க?” என கேட்டாள்.
“எனக்கு இப்ப என்னை அஸைன் பண்ணியிருக்கிற ப்ராஜெக்ட் வேண்டாம். அதான் எப்படி மாத்திக்கிறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.
“ரியலி… ஐ ஆம் இன்ட்ரஸ்டட் டூ ஜாய்ன் வித் தட் டீம். நீ என் ப்ராஜக்ட் மாறிக்கோ” என மகிழ்ச்சியாக உரைத்தாள்.
“என்ன உனக்கு இவ்வளவு சந்தோஷம்?” என காவ்யா அவளை கேட்க, “ப்ளீஸ் காவ்யா எனக்கு ஹெல்ப் பண்ணுப்பா. அந்த ப்ராஜக்ட் ஹெட் நந்தகுமார் என்னோட ரிலேடிவ் தான். எனக்கு கல்யாணம் பண்ண பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரே டீம்ல இருந்தா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கலாம் இல்ல, அதான்” என்றாள்.
“ம்….ம்… பார்க்கிறேன், சேஞ்ச் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருந்ததுதான். ஆனா பாரு…. இது என்னோட ப்ரொபஷனல் க்ரோத்க்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தோணுது. நான் யோசிச்சு சொல்றேன்” என்றாள் காவ்யா.
“என்ன நீ….? கொஞ்ச நேரம் முன்னாடி அவ்வளவு உறுதியா இது வேண்டாம்னு சொன்னே. இப்ப முடியாதுங்கிற மாதிரி பேசுற?” எனக் கேட்டாள் ஆர்த்தி.
“அப்போ வேணாம்னு தோணுச்சு, இப்ப வேணும்னு தோணுது” என்றாள் காவ்யா. ‘என் இஷ்டம்’ என்பது போலவே இருந்தது அவள் பதில்.
அவளை விநோதமாக பார்த்துக்கொண்டே, ‘நீ இல்லைனா என்ன? இந்த டீம்குள்ள நான் வரத்தான் போறேன்’ என நினைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் ஆர்த்தி.
சிறிது நேரத்திலேயே ஹெ ச் ஆர் ல் தெரிந்த ஒருவர் மூலமாக காவ்யா தங்கியிருக்கும் வீட்டின் முகவரி நந்தாவின் கையில் இருந்தது. காவ்யாவின் கைப்பேசி ஒலி எழுப்ப எடுத்து பார்த்தாள்.
‘வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே’
என்ற குறுஞ்செய்தி வாட்ஸ் ஆப்பில் வந்திருந்தது. யார் அனுப்பி இருப்பது என்பது அவளுக்கு தெரிந்தது. கோபமான எம்மோஜியை பதிலுக்கு அனுப்ப, ‘ ‘இப்பதான் கோவமா பார்க்கிற, சீக்கிரம் சந்தோஷமா பார்க்க வைக்கிறேன்’ என நந்தா பதில் அனுப்பி இருந்தான். அவனது அறையை நோக்கி முறைத்தவள் பதில் அனுப்பாமல் கைபேசியை வைத்துவிட்டாள்.
‘மூன்று வருஷமா நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்? அவ்ளோ சீக்கிரம் நான் உன்னை பார்த்திடுவேனா பார்க்கவே மாட்டேன்’ என மனதில் நினைக்க, அவள் மனசாட்சி, ‘அவ்ளோ சீக்கிரம் பார்க்க மாட்டேன்னா…. கொஞ்சம் லேட்டா அவனை பார்ப்பியா?’ என கேள்வி கேட்டது.
ஒரு நொடி அதிர்ந்தவள், மூன்று வருட காலத்தில் நடந்தவற்றையும், அதற்கு முன் நடந்தவற்றையும் நினைவுகூர்ந்தாள். ‘இல்லை, நான் அவனை பார்க்கவே மாட்டேன். அவன் எனக்கு வேண்டவே வேண்டாம்’ என தனக்குள் சொல்லிக்கொண்டு வேலையில் கவனம் வைக்க முயற்சி செய்தாள்.