NNVN-19

அத்தியாயம் 19

முதல் நாள் இரவின் இனிமையிலேயே கண்விழித்தான் நந்தா. கலைந்த ஓவியமாய் தன் அருகில் படுத்திருந்த காவ்யாவைப் பார்த்து தனக்குள்ளாக சிரித்தவன், அர்ஜுன் எழுந்துவிடும் நேரமாவதை உணர்ந்து, காவ்யாவுக்கு போர்த்திவிட்டு, எழுந்து குளியலறை சென்று வந்தான்.

அவன் திரும்ப வரும் பொழுது நந்தா நினைத்ததுபோலவே அர்ஜுன் எழுந்துவிட, காவ்யாவை தொந்தரவு செய்யாமல் அர்ஜுனை அவனே கவனித்தான். அறையின் கதவை சாத்திவிட்டு, அப்பாவும் மகனும் ஹாலிற்கு வந்து விட்டனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நந்தாவுக்கு விடுமுறைதான்.

காலை உணவை நந்தாவே செய்துவிட்டான். அர்ஜுனுக்கும் ஊட்டி முடித்தான். காவ்யாவுடன் சேர்ந்து சாப்பிடலாம் என காத்திருந்தான் நந்தா. அவள் வரவே இல்லை. அறையை எட்டிப் பார்க்க உறக்கத்திலேயே புரண்டு படுத்தாள் காவ்யா. இப்போதைக்கு எழ மாட்டாள் போலவே என நினைத்து, பசி பொறுக்காமல் அவனே தனியாய் சாப்பிட்டான்.

நேரம் பதினொன்றை தாண்டி சில நிமிடங்கள் ஆகியிருக்க மெல்ல கண் திறந்தாள் காவ்யா. அருகில் நந்தா அமர்ந்திருந்தான். அவனது மடியில் தலை வைத்து மீண்டும் காவ்யா கண்மூட, “ஏய் போதும்டி இது உனக்கே ஓவரா தெரியல. அர்ஜுன் எழுந்து சாப்பிட்டு விளையாடி திரும்பியும் தூங்கிட்டான். நீ என்னடான்னா இன்னும் தூங்குற? எழுந்திருடி” என்றான்.

“இப்பதானே கண் முழிச்சேன்… இருங்க எழுந்திருக்கிறேன்” என சோம்பல் முறித்துக் கொண்டே காவ்யா எழ, “நான் சும்மா இருந்தாலும், என்னை விட மாட்ட போல நீ” என்றான்.

“என்ன…?” எனக் கேட்டாள் காவ்யா.

“இப்படி எக்குத்தப்பா சோம்பல் முறிச்சா மனுஷனுக்கு மூடுமாறுதுடி” எனக் கூற, “போதும் வழியுது… இந்த நேரத்துல அர்ஜுன் ரொம்ப நேரம் தூங்க மாட்டான். சீக்கிரம் எழுந்துக்குவான். போங்க…..எனக்கு சாப்பாடு எடுத்து வைங்க” என அவனை விரட்டி விட்டு குளியலறை புகுந்து கொண்டாள்.

காவ்யா வந்து உணவருந்த, “மதியம் என்ன செய்யட்டும் காவ்யா?” எனக் கேட்டான்.

“எனக்கு மீன் குழம்பு வேணும்” என்றாள்.

“சரி நீ ரெஸ்ட் எடு. நான் போய் மீன் வாங்கிட்டு வர்றேன்” எனக் கூறி சென்று விட்டான்.

அவன் சென்றபின் அர்ஜுனும் எழுந்துவிட காவ்யா அவனுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அழைப்பு மணி ஒலிக்க நந்தாதான் வந்துவிட்டான் என நினைத்து கதவைத் திறந்தாள். வெளியே தருண் நின்று கொண்டிருந்தான்.

இவள் அதிர்ந்துபோய் அவனைப் பார்க்க, “வான்னு சொல்ல மாட்டியா காவ்யா?” எனக் கேட்டான்.

“வாங்க” என உள்ளே அழைத்தாள்.

“நீ என்னைப் பார்த்து பயப்படுற பாரு காவ்யா… செத்துடலாம் போல இருக்கு” என்றான்.

“அப்படியெல்லாம் இல்லை, உட்காருங்க” என்றாள்.

“நந்தா சார் இல்லையா?” எனக் கேட்டான்.

“கடைக்கு போயிருக்கார். வர்ற நேரம்தான்” என்றாள்.

“அவர் வந்ததும் நான் கொஞ்சம் பேசணும். பேசிட்டு போயிடுறேன். அவர் இப்போ வீட்ல இருப்பார்ன்னு நினைச்சுதான் வந்தேன். நான் கீழ வெயிட் பண்றேன். வந்ததும் கால் பண்ணு” என்றான்.

அவன் கூறியது காவ்யாவிற்கு என்னவோ போல் இருக்க, “அவர் வர்ற நேரம்தான். இங்கேயே இருங்க” என்றாள். கதவு திறந்தே இருந்தது.

சில நிமிடங்களில் நந்தா வந்துவிட, தருணைப் பார்த்ததும் முகத்தை கடினமாக்கினான். அர்ஜுன் தருண் மடிமீது அமர்ந்திருக்க, முதல் வேலையாய் தன் மகனை தூக்கிக்கொண்ட நந்தா காவ்யாவை அழைத்தான். காஃபி கோப்பையுடன் காவ்யா வந்தாள்.

“இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்?” எனக் கோபமாக கேட்டான்.

“கோபப்படாதீங்க… நீங்க வந்ததுக்கப்புறம் நம்ம கிட்ட என்னமோ பேசணும்னு சொன்னார். என்னன்னுதான் கேட்போமே” என்றாள் காவ்யா. ‘கொஞ்சம் பொறுமையா இரு’ என கண்களாலேயே காவ்யா கெஞ்ச, நந்தா அமைதியாய் சோஃபாவில் அமர்ந்துகொண்டு அர்ஜுனை தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டான்.

காவ்யா தருணுக்கு காஃபி கொடுக்க, எடுத்துக் கொண்டவன் குடித்துவிட்டு, “நேத்து நைட் பார்ட்டியில ஆர்த்தி என்கிட்ட பேசுனா” என்றான்.

“என்ன பேசினா?” எனக் கேட்டான் நந்தா.

“உங்களுக்கும் காவ்யாவுக்கும் இடையில் பிரச்சனை வர மாதிரி என்னை ஏதாவது பண்ண சொன்னா. அப்படி பண்ணினா நீங்க ரெண்டுபேரும் பிரிஞ்சுடுவீங்க, அப்புறம் அவ உங்களை கல்யாணம் பண்ணிக்குவா, எனக்கும்….. சாரி காவ்யா அவ சொன்னதைதான் சொல்றேன், எனக்கும் காவ்யா கிடைச்சுடுவான்னு சொன்னா” என்றான்.

“எவ்வளவு திமிர் அவளுக்கு? பொண்ணா இருக்கா, கல்யாணம் ஆகலை, அதனால நான் பொறுமையா ஹேண்டில் பண்ணினா எவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்கிறா?” என நந்தா கொதித்தான்.

“அவ பேசினதுல எனக்கு புரிஞ்ச விஷயம் இதுதான். உங்க ரெண்டு பேருக்குள்ள என்னென்ன பிரச்சனைன்னு சரியா தெரியாட்டாலும், காவ்யா பிரக்னண்டா இருந்தது தெரிஞ்சு அவளை நீங்க விட்டுட்டு யு எஸ் போயிட்டீங்கன்னுதான் காவ்யாவுக்கு உங்க மேல கோவம்ன்னு தெரிஞ்சுகிட்டேன்” என்றவன் காவ்யாவை பார்த்து “ நீ நினைக்கிற மாதிரி நந்தா சாருக்கு எதுவும் தெரியாது. அவர் கிட்ட உன் அப்பா சொல்லவே இல்லை” என்றான்.

நந்தாவும் காவ்யாவும் அதிர்ச்சியடைந்து தருணைப் பார்த்தனர். “உனக்கு எப்படி தெரியும்? காவ்யா அப்பாவை முன்னாடியே உனக்கு தெரியுமா?” எனக் கேட்டான் நந்தா.

“நான் ஆரம்பத்திலிருந்து சொன்னாதான் உங்களுக்கு புரியும். நான் ஃபைனல் இயர் படிக்கும்போதுதான் காவ்யாவை பார்த்தேன். பார்த்ததும் பிடிச்சுப் போச்சு. ஒரு நாள் அவ ஃபிரண்டுகிட்ட நான் லவ் மேரேஜ் எல்லாம் பண்ண மாட்டேன் எங்க அப்பா சொல்ற பையனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னதைக் கேட்டேன். அதனால என் காதலை அப்பவே சொல்லாம, அவ படிப்பு முடியுற வரை காத்திருந்து, அவங்க வீட்டில போய் முறையா பெண் கேட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தேன்”

“காவ்யாவோட படிப்பு முடியிற சமயத்தில நான் அப்ராட் போயிட்டேன். திரும்பி வந்து பெண் கேட்கலாம்னு அவ அப்பாவைத் தேடிப் போனா, அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சுருச்சுன்னு சொன்னார். காவ்யா யாரையும் லவ் பண்ணலைன்னு எனக்கு தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரம் அவங்க வீட்டில கல்யாணம் செஞ்சு வைப்பாங்கன்னு நினைக்கவே இல்லை” என்றான்.

தருண் சொல்வதைக் முறைத்துக் கொண்டே கேட்டிருந்தான் நந்தா.

“என்னை பத்தி எல்லாத்தையும் காவ்யா அப்பா தெரிஞ்சி வச்சிகிட்டார். நான் ஏமாற்றத்தோடு போயிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு எதேச்சையா ஒருநாள் காவ்யாவோட அப்பாவை பார்த்தேன். காவ்யாவோட மேரேஜ் லைஃப் நிம்மதியா இல்லைன்னு புலம்பினார். அவர் சொன்னதிலிருந்து எனக்கும் நிம்மதி போயிடுச்சு. ஒருநாள் துணிஞ்சு போய் அவர்கிட்ட காவ்யாவை நான் இன்னும் நேசிக்கிறேன். அவளை நான் நல்லா பார்த்துப்பேன். அவளுக்கு நிம்மதியில்லாத கல்யாண வாழ்க்கையிலிருந்து விடுதலை வாங்கித் தந்து என்னோட சேர்த்து வைங்கன்னு கேட்டேன். என் மேல கோபப்பட்டு திட்டி அனுப்பி வச்சிட்டார்” என்றான்.

“தருண், அப்பா ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணியிருப்பார். எனக்கும் இவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இவர் வீட்டு ஆளுங்களோடதான் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங். அது எல்லா குடும்பத்திலேயும் நடக்கிற மாதிரிதான். மத்தபடி நாங்க சந்தோஷமாதான் இருந்தோம்” என்றாள் காவ்யா.

“என்ன பிரச்சினைன்னு எல்லாம் எனக்கு தெரியாது காவ்யா. நீ நிம்மதியா வாழலைன்னு மட்டும்தான் உன் அப்பா சொன்னார். முதல்ல நான் உங்க அப்பாவ போய் பார்த்தப்போ கோபப்பட்டு அனுப்பி வச்சவர், கொஞ்ச நாள் கழிச்சி அவரே வந்து என்னைக் கூப்பிட்டு பேசினார். உனக்கு டிவோர்ஸ் ஆகப் போகுதுன்னு சொன்னார். நானும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்” என்றான் தருண்.

“எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே உட்கார்ந்துகிட்டு, இதை நீ என்கிட்டயே சொல்லுவ” என நந்தா சீறினான்.

“கோபப்படாதீங்க நந்தா. காவ்யா அப்பா சொன்னத வச்சுதான் காவ்யா கஷ்டப்படுறான்னு நினைச்சுகிட்டேன். டிவோர்ஸ் ஆகப்போகுதுன்னு சொல்லவும், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். மத்தபடி காவ்யா வாழ்க்கையில இடைஞ்சல் ஏற்படுத்துற எண்ணம் எனக்கு இல்லை” என்றான்.

“ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் என்ன சொல்றாருன்னு முழுசா கேட்போம்” என்றாள் காவ்யா.

“சொல்லு” என்றான் நந்தா.

“காவ்யாவுக்கு டிவோர்ஸ் ஆனதும் சொல்றேன்னு சொன்னார். அப்புறம் ஒரு மாசத்துல என்கிட்ட வந்து காவ்யா கன்சீவா இருக்கிறதாவும் அபார்சன் பண்ண ஒத்துக்கலன்னும் சொன்னார். அதுக்கு நான் காவ்யாவோட குழந்தை என்னோட குழந்தையும்தான். குழந்தையோட காவ்யாவை ஏத்துக்குறேன், அபார்ட் பண்ண சொல்லாதீங்கன்னு சொல்லவும் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, என் பொண்ணு ஒரு நல்ல வாழ்க்கையை இழந்துட்டான்னு சொல்லி கண்கலங்கினார்” என தருண் கூற, தன் மாமனாரை முறைக்க முடியாத நந்தா, ஹாலில் மாட்டி இருந்த அவரது புகைப்படத்தை பார்த்து முறைத்தான்.

“அப்புறம் காவ்யா நந்தா சார்கிட்ட அவ பிரக்னண்டா உள்ளதை சொல்ல சொன்னதாகவும், அதை சொன்னா திரும்ப நந்தா சார் வந்து, காவ்யாவிற்கு விவாகரத்து கிடைக்காது, அதனால சொல்லப்போறதில்லை, சொல்லிட்டதா பொய் சொல்லப் போறேன்னு சொன்னார்”

“எனக்கு திரும்ப அப்ராட் போக வேண்டியதா இருந்தது. காவ்யா அப்பாகிட்ட சொல்லிகிட்டுதான் போனேன். நந்தா சார் யு எஸ் போயிட்டார்ன்னும், காவ்யா மனசு மாறுற வரை வெயிட் பண்ணவும் சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டு போனேன். திரும்ப வந்தப்ப காவ்யா குடும்பமே இங்கே இல்லை” என்றான்.

“ஆனா அப்பா உங்களைப் பத்தி என்கிட்ட எதுவுமே சொன்னதில்லை. இப்போ எனக்கு புரியுது. உங்களை மனசுல வச்சுக்கிட்டுதான் அவர் இறக்கிறதுக்கு ஒரு நாள் முன்னாடி கூட என்கிட்ட பேசியிருக்கார்” என்றாள் காவ்யா.

“நீங்க வெளிநாடு போனதுக்கப்புறம் காவ்யா அப்பாகிட்ட பேசவே இல்லையா?” எனக் கேட்டான் நந்தா.

“போன புதுசுல ஒரு ரெண்டு தடவை பேசியிருக்கேன். அங்கேயும், இங்கேயும் டைம் வேறங்கிறதால அடிக்கடி அவர்கிட்ட பேச முடியலை. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி, அவர் நம்பருக்கு ட்ரை பண்ணினேன். போகவேயில்லை” என்றான்.

“காவ்யாவை ட்ரேஸ் பண்ண முடியாம அவளை தேடிக்கிட்டே இருந்தேன். ஒரு நாள் திருப்பியும் அவளை சென்னையிலேயே பார்த்தேன். அவ கிட்ட பேசினதுல இருந்து அவ அப்பா என்னை பத்தி எதுவுமே சொல்லலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். என் ஆஃபீஸ்லேயே வேலையும் வாங்கி தந்தேன். கொஞ்ச நாள் கழிச்சி ப்ரொபோஸ் பண்ணினேன். அவ மறுத்துட்டா. நான் அவ மனசை மாத்த முயற்சி செய்துகிட்டிருக்கும் போதே, வேறு வேலையும் மாறிட்டா”

“காவ்யாவுக்காகத்தான் இங்கே வேலையில சேர்ந்தேன். சேர்ந்த அப்புறம்தான் உங்க கூட சேர்ந்து வாழறான்னு தெரிஞ்சுக்கிட்டேன். சத்தியமா அதுக்கப்புறம் நான் காவ்யாவை கல்யாணம் செய்துக்கனும்ன்னு நினைக்கலை. ஃபிரண்ட்ஸா இருக்கலாம்ன்னுதான் காவ்யாகிட்ட பேசினேன். அதை புரிஞ்சுக்காம காவ்யா என்னை அவாய்ட் பண்ணினா”

“நேத்துதான் உங்க ரெண்டு பேரோட அந்நியோன்னியம் எனக்கு புரிஞ்சது. காவ்யா எனக்கு கிடைக்கலைன்னு வருத்தம் இருந்தாலும், அவ சந்தோஷமா இருக்கான்னு நானும் நிம்மதியடைஞ்சேன். ஆர்த்தி என்கிட்ட பேசினதுக்கப்புறம்தான் உங்க வாழ்க்கையில திரும்பவும் எதுவும் பிரச்சினை வந்துடக் கூடாதுன்னு இன்னைக்கு உங்களை பார்த்து பேசலாம்னு வந்தேன்” என்றான்.

தருண் வந்தபோது இருந்த கோபம் இப்போது நந்தாவுக்கு இல்லை. அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. ‘தருணின் காதல் தூய்மையானது. அவன் மிகவும் நல்லவன். அவனின் செயலில் கெட்ட எண்ணம் எதுவுமில்லை’ என்றெல்லாம் நினைத்த நந்தா,

“சாரி தருண்…. நான் உன்கிட்ட கொஞ்சம் ஹார்ஷா நடந்துகிட்டேன். சாரி…” என்றான்.

“இல்ல சார் உங்க கோவத்துல கூட காவ்யா மேல உங்களுக்கு இருந்த லவ்வைதான் நான் பார்த்தேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குறதை பார்க்கிறப்போ எனக்கும் நிம்மதியா இருக்கு” என்றான்.

“எங்க மேல அக்கறை எடுத்து இந்த விஷயத்தை எங்ககிட்ட சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்றாள் காவ்யா.

“தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். ஃபேஸ்புக்ல என் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்டை அக்செப்ட் பண்ணு” என்று வேடிக்கையாகக் கூறினான் தருண். பின்னர் சிறிது நேரத்தில் தருண் கிளம்ப,

“தருண் ஒரு நிமிஷம்” என அழைத்தாள் காவ்யா.

“என்ன காவ்யா?” எனக் கேட்டான் தருண்.

“சீக்கிரம் உங்க கல்யாண இன்விடேஷன் கொடுங்க” என்றாள்.

சிரித்த தருண், “கண்டிப்பா கொடுக்கிறேன். ஆனா சீக்கிரம் முடியாது. கொஞ்சம் டைம் கொடு” என்றான்.

அவன் சென்றதும், நந்தாவின் தோளில் சாய்ந்துகொண்டு “ சாரி” என்றாள் காவ்யா.

“ எதுக்குடி சாரி. இந்த உண்மை தெரியறதுக்கு முன்னாடியே நீ என்னை நம்பி, என் கூட வாழ ஆரம்பிச்சிட்ட. எதுவும் தெரியறதுக்கு முன்னாடியே என்னை நம்புறேன்னு சொல்லி என்னை ஏத்துக்கிட்ட பாரு…..உன் புருஷனா அப்பதான் ரொம்ப கர்வமா, பெருமையா உணர்ந்தேன்டி” என்றான் நந்தா.

“என் மேல இப்போ கோவம் இல்லையா?” எனக் கேட்டாள் காவ்யா.

“கண்டிப்பா இல்ல காவ்யா. உண்மை தெரியாம உன் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித்தான் கோபப்படுவாங்க. உன் கேரக்டரே அதானடி. இப்பதான் எல்லாம் சரியாகிடுச்சே… அதையெல்லாம் விடு” என்றான்.

“எங்க சரியாச்சு? எவ்வளவு தைரியம் இருந்தா அந்த ஆர்த்தி இன்னும் உன்னை நினைச்சுகிட்டு இருப்பா? தருண்கிட்ட போய் என்னவெல்லாம் சொல்லியிருக்கா? தருண் நல்லவனா இருந்ததால போச்சி. கெட்டவனா இருந்து ஏதாவது கெடுதல் பண்ணியிருந்தா?” எனக் கேட்டாள் காவ்யா.

“குடைமிளகாய் மாதிரி மூக்கு சிவக்கிறது பாரு. என்னை மீறி உங்களை எவனும் எதுவும் செய்ய முடியாது. ஆரத்தி விஷயத்தை விடு நான் பார்த்துக்குறேன். இப்போ மீனை க்ளீன் பண்ணி தா. நான் குழம்பு வைக்கிறேன்” என்றான்.

“எனக்கு க்ளீன் பண்ணத் தெரியாது” என்றாள் காவ்யா.

“சரி நானே க்ளீன் பண்ணி குழம்பும் வச்சிடறேன். இப்ப மட்டும் இல்லை, இனி எல்லா சண்டேஸ்லேயும் நானே மீன் குழம்பு வச்சுத் தர்றேன். அதுக்கு பதிலா நீ என்ன தருவ?” என பேரம் பேசினான்.

“நீங்க என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றாள் காவ்யா.

“பேச்சு மாற மாட்டியே”

“ம்ஹூம்…. கேளுங்கள் தரப்படும்”

“நீ வேலையை விட்டுடுறியா?” எனக் கேட்டான்.

“ஏதாவது ரொமான்டிக்கா கேட்பீங்கன்னு பார்த்தா… வேலையை விட சொல்றீங்க?”

“ப்ளீஸ்டி…. அம்மாவோட அன்பு கிடைக்காமல் நான் ரொம்ப கஷ்டப்படடிருக்கேன். என் பையனுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். நீ ஒன்னும் ஆசைப்பட்டு இந்த வேலைக்கு போகலை. உனக்கும் விருப்பமில்லாமதானே போற? அவன் கொஞ்சம் வளரட்டும். அதுக்கப்புறம் நீ விருப்பப்பட்டா போலாம். இப்ப வேண்டாம்” என்றான்.

“சரி” என ஒத்துக் கொண்டாள் காவ்யா.

“ உடனே ஒத்துகிட்ட? இதுக்கு உன்கிட்ட நிறைய போராட வேண்டியிருக்கும்னு நினைச்சேன்” என்றான் நந்தா.

“எனக்கு மட்டும் அர்ஜுனை விட்டுட்டு போக ஆசையா என்ன? ஆஃபீஸ்ல வேலை பார்த்துட்டே இருந்தாலும் அவன் நினைப்பாவே இருக்கும். நீங்க கேட்காட்டாலும் நானாவே வேலையை விட்டுருப்பேன். நீங்க கேட்டதால இனிமே சண்டே சண்டே எனக்கு மீன் குழம்பு கிடைக்கப் போகுது” என்றாள் காவ்யா.

“இது தெரியாம நானா வந்து வலையில விழுந்துட்டேனா?” என்றான் நந்தா.

“நீங்க என் வலையில் விழறீங்களா? என்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வந்தீங்களோ அன்னைக்கே என்னைதான் உங்க வலையில் விழ வச்சிட்டீங்க” என சிரித்தாள் காவ்யா.

காவ்யா வெங்காயம் தக்காளி நறுக்கிக் கொடுக்க, நந்தா அர்ஜுனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டே, மீனை கழுவி சுத்தம் செய்தான். அர்ஜுன் மீனை கைகளால் தொட்டு, எடுத்து பார்த்து, அவன் மேலேயே போட்டு என விளையாட, “என்ன பண்றான் பாருங்க… அவன் மேல மீன் வாடை அடிக்கும்” என்றாள் காவ்யா.

“விளையாடட்டும் விடுடி. நான் குளிக்க வச்சிக்கிறேன்” எனக் கூறி அவனை விளையாட விட்டான்.

மதியம் சாப்பிட்டு, அர்ஜுனுடன் சேர்ந்து, சிறு தூக்கம் தூங்கி, மாலையில் அவனுடன் விளையாடி என நந்தாவுக்கும் காவ்யாவுக்கும் அன்றைய நாள் மிக இனிமையாக கழிந்தது.

கீர்த்த-நவீன் நிச்சயதார்த்தம் நந்தாவின் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலையிலேயே நந்தா மட்டும் வந்திருந்தான். எளிமையாக இருந்தாலும், குறை எதுவும் இல்லாமல் நந்தா எல்லா ஏற்பாட்டையும் செய்திருந்தான்.

வாசுகியின் வீட்டில் முறைப்படி எல்லோரையும் நந்தா வருமாறு அழைக்க, அனைவரும் வந்திருந்தனர். அவர்களைத் தவிர நவீன் அண்ணன் குடும்பமும், சாந்தியின் தம்பி குடும்பமும் வந்திருந்தனர். சாப்பாட்டுக்கு வெளியில் சொல்லி விட்டான் நந்தா.

ஆர்த்தி அவ்வப்போது நந்தாவை பார்த்துக் கொண்டிருக்க, அவள் தன்னை பார்ப்பதை கவனித்தும் பாராதது போல இருந்து கொண்டான் நந்தா.

வரிசைத் தட்டுகளை எல்லாம் நவீனின் அண்ணி எடுத்து வைத்து நிச்சயப் புடவையை நவீனிடம் கொடுத்து கீர்த்தியிடம் கொடுக்கச் செய்தாள். அவளும் புடவை மாற்றிக்கொண்டு வர, “ நிச்சயப் பத்திரிக்கை வாசிக்கலாமா?” எனப் புரோகிதர் கேட்டார்.

“ஒரு ஐந்து நிமிடம் வெய்ட் பண்ணுங்க” என நந்தா கூற, எல்லோரும் நந்தாவையே பார்த்தனர். யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல் வெளியே சென்றான். அவன் வாசலுக்கு வரவும் கால் டாக்ஸியில் அர்ஜுனுடன் வந்திறங்கினாள் காவ்யா.

“லேட் ஆயிடுச்சா” எனக் கேட்டாள் காவ்யா.

“இல்லை கரெக்ட் டைமுக்குதான் வந்திருக்க” எனக்கூறி அர்ஜுனை வாங்கிக்கொண்டான்.

அர்ஜுனை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மறுகையில் காவ்யாவின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் நந்தா.

கீர்த்தி, நவீன் குடும்பம் தவிர, மற்றவர்கள் ஆச்சரியமாய்ப் பார்க்க, ஆர்த்தியும், வாசுகியும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.