NNVN-17

அத்தியாயம் 17

நந்தகுமாரும் காவ்யாவும் காரிலேயே அலுவலகம் சென்றுவர, தேவகி அர்ஜுனை பார்த்துக்கொண்டார். தருண் காவ்யாவிடம் எதுவும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆர்த்தி அவ்வப்போது நந்தாவை நெருங்க முயற்சித்தாலும், ‘நீ எல்லாம் ஒரு ஆளா?’ என்பது போலதான் நடந்து கொண்டான் நந்தா.

அன்று நந்தாவையும் காவ்யாவையும் சந்திக்கவேண்டும் என்று கீர்த்தி கூற, மாலை வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான் நந்தா. மாலையில் கீர்த்தி மட்டும் வரவில்லை. தன்னுடன் நவீனையும் அழைத்து வந்திருந்தாள். எதற்காக வந்திருக்கிறார்கள் என்பது ஓரளவுக்கு நந்தாவுக்கும் காவ்யாவுக்கும் புரிந்தாலும், அவர்களாக எதுவும் கேட்டுக் கொள்ளாமல் இருவரையும் வரவேற்று அமர வைத்தனர். நவீனை அறிமுகம் செய்து வைத்தாள் கீர்த்தி.

பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, “நானும் உங்க தங்கையும் விரும்புகிறோம்” என கூறிவிட்டான் நவீன். கீர்த்தி பயந்துபோய் நந்தாவைப் பார்க்க, “நான் நினைச்சேன்….. உங்களைப் பத்தி, உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க” என இலகுவாகவே கேட்டான் நந்தா.

“என்னோட பேரண்ட்ஸ் லாஸ்ட் இயர் ஒரு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாங்க. அண்ணா மட்டும்தான். அவர் அவரோட ஃபேமிலியோட பெங்களூரில் இருக்கார். நான் சென்னையில தனியாதான் இருக்கேன். இப்போ பிஜி பீடியாட்ரிக்ஸ் முடிக்கப் போறேன். எனக்கு தனியா இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. கீர்த்தி படிப்பை முடித்ததும் எனக்கு கல்யாணம் செய்து வச்சீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். நான் அவளை நல்லா பார்த்துக்குவேன்” என்றான் நவீன்.

அவன் பேசிய விதம் நந்தாவுக்கு பிடித்திருந்தது. மேலும் அவனுடன் பேசியதில் அவனுக்கு திருப்தியாக இருந்தது. காவ்யாவின் முகத்தைப் பார்த்தான்.

“கீர்த்தியை நல்லா வச்சு பார்த்துப்பீங்களா?” என நவீனிடம் கேட்டாள் காவ்யா.

“கண்டிப்பா சிஸ்டர், கீர்த்தின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான்.

“ரொம்ப பிடிச்சா மட்டும் போதாது. எந்த சூழ்நிலை வந்தாலும், அவளை விடாம நல்லா பாத்துக்கணும்” என்றாள். நந்தா காவ்யாவை முறைக்க அவள் அவனை கண்டு கொள்ளவே இல்லை.

“அவதான் எனக்கு எல்லாம், கண்டிப்பா நல்லா பார்த்துக்குவேன்” என்றான்.

“என்ன கீர்த்தி நீ என்ன சொல்ற?” என கீர்த்தியைப் பார்த்து கேட்டாள் காவ்யா.

“எனக்கும் இவர்ன்னா ரொம்ப இஷ்டம்” என தலை குனிந்துகொண்டே கூறினாள் கீர்த்தி.

“ரொம்ப இஷ்டப் பட்டா மட்டும் போதாது கீர்த்தி. அவரோட சூழ்நிலையை புரிஞ்சிகிட்டு அவருக்கு உறுதுணையாய் இருக்கணும்” என்றான் நந்தா. இப்போது முறைப்பது காவ்யாவின் முறையாகியது.

கீர்த்தியும் நவீனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அண்ணா எனக்கு ஒரு ஆசை” என தயக்கமாய் கூறினாள் கீர்த்தி.

“என்ன கீர்த்தி, தயங்காம சொல்லும்மா” என்றான் நந்தா.

“வாசுகி கல்யாணத்துல மாமாவும் அத்தையும்தான் கன்னிகாதானம் பண்ணி கொடுத்தாங்க. எனக்கு அவங்க வேண்டாம். நவீனுக்கு அவரோட அண்ணா அண்ணி தான் நிற்பாங்க. எனக்கும் அதே மாதிரி நீங்களும் அண்ணியும் சேர்ந்துதான் செய்யணும்” என்றாள்.

“இதை நீ உன் அண்ணிகிட்டதான் கேட்கணும்” என்றான் நந்தா. கீர்த்தி காவ்யாவின் முகத்தைப் பார்க்க, “நீதான் இப்போ சின்ன பொண்ணு இல்லையே, பெரிய டாக்டர் ஆகிட்டியே. அதான் விவரமா எல்லாம் கேட்குற” என்றவள், “உனக்காக உன் அண்ணனோட சேர்ந்து நான் நிற்கிறேன். சந்தோசமா?” எனக் கேட்க கீர்த்தி, நவீனுடன் சேர்ந்து நந்தாவும் முகம் மலர்ந்தான்.

அவர்கள் சென்ற பிறகு காவ்யாவிடம் நந்தா “நீ மாட்டேன்னு சொல்வேன்னு நினைச்சேன்” என்றான்.

“கீர்த்தின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்காகத்தான் சரின்னு சொன்னேன். நீங்க வேற எதுவும் கற்பனை பண்ணிக்காதீங்க” என்றாள்.

“நான் நம்மள பத்தி நிறைய கற்பனை பண்ணி வச்சிருக்கேன். எல்லாமும் சீக்கிரம் நடக்கத்தான் போகுது” என்றான்.

“நீங்க கற்பனை பண்ணிக்கிட்டே இருங்க, நான் போய் சட்னி செய்றேன்” என சென்றாள் காவ்யா.

விளையாடிக்கொண்டிருந்த அர்ஜுனை பார்த்து, “நம்ம ரெண்டு பேரையும் கொடுமைப்படுத்தறதுக்காகவே சட்னி செய்ய போறா உன் அம்மா” என நந்தா கூற, எட்டிப்பார்த்த காவ்யா, “ஓவரா பேசாதீங்க. வேணும்ன்னா நீங்களே வந்து செய்யுங்க” என்றாள்.

“வெங்காயம், பூண்டு, தக்காளி எல்லாம் கட் பண்ணி வச்சிட்டு நீ இந்தப் பக்கம் வா, நானே கெஞ்சுகிறேன்” என்றான்.

“இப்படி மொட்டையா சொன்னா…? எல்லாம் எத்தனை நம்பர்ஸ்ன்னு சொல்லுங்க” என்றாள்.

“உன் அம்மாவை என்னடா பண்ணலாம்?” என அர்ஜுனிடம் கேட்டவன், அவனையும் தூக்கிக்கொண்டு சமையலறை வந்து தேவையானதை எடுத்து வைத்து, “இதெல்லாம் கட் பண்ணி வை” என்றான்.

அவளும் நறுக்கி முடிக்க, அர்ஜுன் நந்தாவை விட்டு இறங்க மறுத்தான். அவனை ஒரு கையில் வைத்துக்கொண்டே சட்னிக்கு வதக்கினான். “இதை மிக்ஸியில் அரைச்சிட்டு , மறக்காமல் தாளிச்சிடு” என்றான்.

“ம்…” என்றவள், “எந்த எண்ணெயில் தாளிக்க நல்லெண்ணெய்யா?கடலை எண்ணெய்யா?” எனக் கேட்டாள்.

“ம்… விளக்கெண்ணெய்” என்றான் நந்தா.

“அது இல்லையே” என காவ்யா கூற, “அதான் நீ இருக்கியே” என நந்தா கூறினான்.

“என்ன? என்னை கிண்டல் பண்றீங்களா?” எனக் கேட்டாள் காவ்யா.

“ஹப்பா…. இப்பவாவது உன் அம்மாவுக்கு புரிஞ்சுதே” என அர்ஜுனிடம் கூறினான் நந்தா.

“நான் விளக்கெண்ணெய்னா… நீங்க வேப்பெண்ணெய்” என்றாள் காவ்யா.

“சட்னியை செய்டி முதல்ல, யார் எந்த எண்ணெய்ன்னு நாம தனியா அப்புறமா ஆராய்ச்சி பண்ணலாம். என் புள்ளைக்கு பசி வந்திருக்கும்” என்றான் நந்தா.

சட்னியை அரைத்துவிட்டு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றியவள், சூடு வருவதற்கு முன்பே கடுகைப் போட்டு விட்டு தள்ளி நின்று கொண்டாள்.

“என்னடி இது? எண்ணெய் காயுறத்துக்கு முன்னாடியே கடுகை போட்டுட்டு அரை கிலோ மீட்டர் தள்ளி நிற்குற?” எனக் கேட்டான் நந்தா.

“ம்…. சூடு வந்தப்புறம் போட்டா என் கையிலேயே வெடிச்சி தெறிக்கும்ன்னு எனக்கு பயம்” எனக் கூறினாள்.

“நீ கூடதான் பட் பட்டுன்னு பேசியே தெறிக்க விடுற? நான் பயப்படுறேன்னா என்ன?” என நந்தா கேட்க, “நீங்களும் என் பக்கத்துல நிக்காதீங்க” என பட்டெனக் கூறினாள் காவ்யா.

“பார்த்தியா எப்படி வாய் வெடிக்குதுன்னு? இருடி சான்ஸ் கிடைக்கட்டும், இந்த வாய வச்சு செய்றேன்” எனக் கூறிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் நந்தா.

அர்ஜுனுக்கு ஊட்டி, இவர்களும் சாப்பிட்டு, எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு உறங்கச் சென்றனர். வழக்கம்போல தன் மகனும் மனைவியும் உறங்கி விட்ட பின் அர்ஜுனுக்கு முத்தமிட்டு காவ்யாவிற்கும் அவள் அருகில் படுத்து முத்தமிட்டான் நந்தா. சரியாக அவன் முத்தமிடும் நேரம் காவ்யா விழித்துக் கொண்டாள்.

“தூங்கிட்டு இருக்கும்போது, எனக்கு தெரியாம இப்படி பண்றீங்களே… வெட்கமா இல்லை உங்களுக்கு?” எனக் கேட்டாள் காவ்யா.

பாவம் போல முகத்தை வைத்துக் கொண்ட நந்தா, “தப்புதான் காவ்யா… பெரிய தப்பு. நீ தூங்கும் போது உனக்கு தெரியாம இப்படி செஞ்சிருக்க கூடாது. நீ முழிச்சிட்டு இருக்கும் போதே இப்படி கொடுத்திருக்கணும்” என்றவன் அவள் முகமெங்கும் முத்தமிட்டான்.

அவனை பிடித்து தள்ளி, “அறிவிலல உங்களுக்கு?” என கோபமாகக் கேட்டாள்.

“சாரிடி அறிவில்லதான் எனக்கு. இல்லன்னா கொடுக்க வேண்டிய இடத்தில கொடுக்காம இப்படி உன்னை கோபப்படுத்துவேனா?” என்றவன் அவளின் அருகில் வாகாக படுத்து, காவ்யாவின் இதழ்களை சிறைப்படுத்தினான். காவ்யா அவனை பிடித்து தள்ள, அவளின் இரு கைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டான்.

நீண்ட முத்தத்திற்கு பின் விலகியவன், “இன்னும் ஏதாவது சொல்லணுமா காவ்யா? சொல்லணும்னா தயங்காம சொல்லு” எனக் குறும்பாக கேட்க, நந்தாவை அடிக்க ஆரம்பித்தாள் காவ்யா.

சிரித்துக்கொண்டே அவள் கைகளை பிடித்து, அவள் அடிப்பதை தடுத்து, “இன்னும் எவ்ளோ நாள்டி என்னை காக்க வைக்கப் போற?” என முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டே கேட்டான். நந்தாவின் முக பாவனையிலும், குரலில் இருந்த ஏக்கத்திலும் காவ்யாவின் உள்ளமும் தடம்புரண்டது. அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்ட காவ்யா மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

“டேய் நந்தா உனக்குதான் அவளைப் பத்தி நல்லா தெரியுமே. அப்புறமும் ஏண்டா உன் மனசை அலைபாய விடுற? ஃபீலிங்ஸே இல்லாத ராட்சசி…” என கூறி விட்டு கண்களை மூடி தூங்க முற்பட்டான். எப்படியோ ஒருவழியாக நந்தா உறங்கிவிட, உறங்காத காவ்யா திரும்பி படுத்து நந்தாவின் நெற்றியில் முத்தமிட்டு அவனை பார்த்துக்கொண்டே படுத்திருந்தாள்.

அடுத்தநாள் தேவகியிடம் அர்ஜுனை ஒப்படைத்துவிட்டு, நந்தாவும் காவ்யாவும் காரில் அலுவலகம் கிளம்பினர். முதல் நாள் இரவு நந்தா ‘இன்னும் எவ்ளோ நாள்டி என்னை காக்க வைக்கப் போற?’என்று கேட்ட கேள்வியே காவ்யாவின் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

“உங்களுக்கு நான் ப்ரக்னண்டா இருந்தது உண்மையிலேயே தெரியாதா?” எனக் கேட்டாள்.

“எத்தனை தடவை சொல்றதுடி?எனக்கு தெரியாது… தெரியாது… தெரியாது….” எனக் கூறினான்.

“அப்புறம் ஏன் அப்பா என்கிட்ட உங்களுக்கு தெரியும்னு சொன்னார்?” எனக் கேட்டாள்.

“நீ கொஞ்சம் விளக்கமா சொல்லு என்ன நடந்துச்சுன்னு? அவர் என்ன சொன்னார்?” எனக்கேட்டான் நந்தா.

“நீங்க பத்து நிமிஷத்துல வெளியில வா, இல்லைனா போயிட்டே இருப்பேன்னு சொன்னீங்க. ஏற்கனவே டிவோர்ஸ் பேப்பர்ல நீங்க சைன் பண்ணின கோவத்துல இருந்த நான் இப்படி நீங்க பத்து நிமிஷம், போயிட்டே இருப்பேன் அப்படி இப்படின்னு சொல்லவும் கோவத்துல வெளியே வரலை. அதுக்கப்புறம் திரும்பி நீங்க வந்து கூப்பிட்டா உங்ககூட வரலாம்னுதான் இருந்தேன்” எனக் கூற வண்டியை பிரேக் போட்டு ஓரமாக நிறுத்தினான்.

“ஆனா நீங்க வரவே இல்லை” என்றாள் காவ்யா.

“அப்போ நான் திரும்ப வந்து கூப்பிட்டிருந்தா என்கூட வந்திருப்பியா?” எனக் கேட்டான்.

“ம்…“ என்றாள்.

“வீம்பு புடிச்சவளே… நீயே என்னைத் தேடி வர்றதுக்கு என்னடி?” எனக் கேட்டான்.

“அதான் வீம்பு புடிச்சவன்னு சொல்றீங்களே, அதான் காரணம்” என்றாள்.

“உன் வீம்பாலா நாம ரெண்டு பேருமே நிறைய இழந்துட்டோம்” எனக் கூறியவன், “சரி சொல்லு… நான் கூப்பிட நீ வரலை. அப்புறம்…?” என்றான்.

“உங்க தங்கச்சி கல்யாணம் நடந்த வாரத்திலதான் நான் டெஸ்ட் பண்ணி கன்சீவ்ன்னு கன்ஃபார்ம் பண்ணினேன். அம்மா அப்பா கிட்ட சொன்னாங்க. அப்பா என்னை அபார்ட் பண்ண சொன்னார்” என காவ்யா கூற, நந்தா காவ்யாவை முறைத்தான்.

“கோபப்படாதீங்க. நீங்க சைன் பண்ணினதும் அப்பா என் வாழ்க்கையை நினைச்சு பயந்து போய்ட்டார். அதான் அப்படி சொன்னார். நான் முடியாதுன்னு மறுத்ததும் அவர் விட்டுட்டார். நான்தான் உங்ககிட்ட சொல்லச் சொல்லி அவரை அனுப்பி வச்சேன்” என்றாள்.

“நீயே என் கிட்ட ஃபோன்ல சொல்றதுக்கென்ன?”

“ஏன் நீங்க ஒரு ஃபோன் பண்ணியிருக்க வேண்டியதுதானே?”

“என்னையே குறை சொல்லு. என்ன சண்டைன்னாலும் உங்க மேல என்ன தப்பு இருந்தாலும், நாங்கதான் இறங்கி வரணும். நீங்க இறங்கி வர மாட்டீங்க அப்படித்தான?”

“ஆமாம். ஆனா இந்த விஷயத்துல என் மேல தப்பு கிடையாது. உங்க மேல தான் தப்பு” என்றாள் காவ்யா.

“ஆமாண்டி என் மேல தான் தப்பு. கதவை உடைச்சிகிட்டு உன்னை தூக்கிட்டு போகாம, உன்கிட்ட கெஞ்சிட்டு நீ வரல்லனதும் உன் அப்பாவோட நக்கலையும் பொறுத்துகக்கிட்டு அப்படியே போனேன் பாரு…. என் மேல தான் தப்பு. நீ மேல சொல்லு” என்றான்.

“நான் உங்ககிட்ட சொல்ல சொன்னதும் வெளியில போயிட்டு வந்தவர், உன் வீட்டுக்காரருக்கு நீ கனசீவா இருக்கிறது தெரியும். பார்ப்போம் என்ன பண்றார்ன்னு சொன்னார். நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தக்கிட்டிருந்தா அடுத்தநாளே நீங்க யு எஸ் கிளம்பி போயிட்டதா அப்பா சொன்னார்” என்றாள்.

“உன் அப்பா யார்கிட்ட சொன்னதா சொன்னார்? என் வீட்ல உள்ளவங்ககிட்டயா? என்கிட்டயா?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் சொல்லலை. உங்களுக்கு தெரியும்னு மட்டும்தான் சொன்னார்” என்றாள்.

“அப்புறம்…..?”

“அப்புறம் நீங்க போயிட்டீங்கன்னு நான் அழுதுட்டே இருந்தேன். நீ அபார்ஷன் பண்ணிடு அவரை விவாகரத்து பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு அப்பா சொல்ல ஆரம்பிச்சிட்டார். நீங்க இப்படியெல்லாம் சொன்னா நான் செத்துப் போவேன்னு மிரட்டினதும் அந்தப் பேச்சை விட்டுட்டார்” என்றாள்.

“ஏன் காவ்யா உன் அப்பா பொய் சொல்லியிருக்க கூடாது? எனக்கு தெரியலைனா நான் வரமாட்டேன். தெரிஞ்சும் வரலைன்னு உன்கிட்ட சொன்னா நீ அபார்ட் பண்ணிக்க ஒத்துக்குவ, வேற கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சிருக்கலாம் இல்லையா?” எனக் கேட்டான்.

“நான் அப்படியும் யோசிச்சு பார்த்துட்டேன். ஆரம்பத்துல அப்படி சொன்னவர், அதுக்கப்புறம் அபார்சன் பத்தி ஒன்னும் பேசலை. தொழில்ல லாஸ் ஆனதுக்கப்புறம் கூட, என் பேரக் குழந்தைக்கு ஒன்னுமே சேர்த்து வைக்கலன்னுதான் வருத்தப்பட்டார். அவர் இறப்பதற்கு முதல் நாள் கூட, திருப்பி தொழில்ல ஜெயிச்சு பழைய மாதிரி வசதியாவேன். நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கணும். இந்த தொழிலை பார்த்துகிட்டு என் பேரக் குழந்தையை நாங்க பார்த்துக்குவோம்ன்னு சொன்னாரே” என்றாள்.

“என்ன சொன்னார்? திருப்பி சொல்லு” என்றான் நந்தா. காவ்யா மீண்டும் கூற, “அதென்ன நாம சந்தோஷமா இருக்க, நம்ம பிள்ளையை அவர் வச்சுப்பாரா?” எனக் கேட்டான்.

“அது பேரக்குழந்தை மேலே உள்ள ஆசையில சொல்லியிருப்பார். ஆனா அர்ஜுனை கண்ணால கூட பார்க்காமல் அதுக்கு முன்னாடியே இறந்துட்டார்” என்றாள்.

பேசி முடித்துவிட்டு மீண்டும் காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான். ஓட்டும்போது யோசித்துக்கொண்டே வந்தவன், அலுவலகம் வந்து விட காரை நிறுத்தினான். காரிலிருந்து காவ்யா இறங்க முற்பட, “காவ்யா அந்த தருணுக்கு நமக்குள்ள பிரச்சினைன்னு எப்படி தெரியும்? “ எனக் கேட்டான்.

“தெரியாது?” என்றாள்.

“நல்லா யோசிச்சு சொல்லு, உன்னை அறியாம நீ அவன் கிட்ட எதுவும் சொன்னியா?” எனக் கேட்டான்.

“நமக்குள்ள பிரச்சினைன்னு நான் யார்கிட்டயும் சொன்னதே இல்லை. நீங்க ஃபாரின்ல இருக்கீங்கன்னு மட்டும்தான் சொல்வேன்” என்றாள்.

“சரி இறங்கு. உன் அப்பா ஏன் அப்படி சொன்னார்ன்னு தெரியலை. ஆனா கண்டிப்பா எனக்கு உண்மை தெரியாது. தெரிஞ்சிருந்தா உன்னை விட்டுட்டு போயிருக்க மாட்டேன். என்ன நடந்துச்சின்னு சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்” எனக்கூறி அவனும் இறங்கி அலுவலகம் சென்றான்.

அலுவலகம் சென்ற பின்னும் காவ்யாவிற்கு வேலை எதுவும் ஓடவில்லை. ‘உண்மை தெரியாது தெரியாதுன்னு இவ்வளவு சொல்றான். நீ அவனை நம்ப மாட்டேங்கிறியே… அவன் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? அவன் பொய் சொல்லலைன்னு உன்னால உணர முடியலையா?’ என அவள் மனசாட்சி கேள்வி எழுப்பியது.

‘உண்மை தெரியாம அவன் போனதாகவே இருக்கட்டும். எப்படி அவன் என்னை விட்டுட்டு போகலாம். அப்போ குழந்தை இருந்தால்தான் என்னோட இருப்பானா?’ என எதிர் கேள்வி கேட்டாள் காவ்யா.

‘அவன் தவறு செய்ததாகவே இருக்கட்டும். உண்மையாக நீ நேசிக்கும் ஒருவன் தவறு செய்துவிட்டு மீண்டும் வந்து மன்னிப்பு கேட்கும் பொழுது உன்னால் மன்னிக்க முடியவில்லை என்றால் அது என்ன அன்பு? நீ கூடத்தான் அவன் கூப்பிடும் போது அவனோடு செல்லவில்லை. உன்னை அவன் மன்னிக்கவில்லையா? உன்னையும் குழந்தையையும் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறானே. அதற்கு ஈடாகுமா உன் நேசம்?’ என மீண்டும் மனசாட்சி கேள்வி கேட்க,

‘நானும் அவன் மீது அன்பு வச்சிருக்கேன். என் உயிருக்கும் மேலாய் அவனை நேசிக்கிறேன்’ என மனசாட்சிக்கு பதில் கூறினாள்.

‘என்ன பிரயோஜனம்? அவனை வார்த்தைகளால் தினம்தினம் குத்திக் கிழிக்கிறாய். மூன்று வருடங்கள் பிரிந்து, பின் உன்னை தேடி வந்த அவனின் மனம் புரியாமல் அவனை தள்ளி வைத்து கொடுமை செய்கிறாய்? இதில் உன் அன்பு எங்கு இருக்கிறது?’ என மனசாட்சி கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல் அனிச்சையாய் அவனுடைய அறையை நோக்கினாள்.

எதற்காகவோ அறையிலிருந்து நந்தா வெளியில் வர, தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காவ்யாவைப் பார்த்து, ‘என்ன’ என்பது போல அவன் கேட்க, ‘ஒன்றுமில்லை’ என்பதாக கண்களாலேயே காவ்யா பதிலளிக்க, மெல்ல சிரித்து விட்டு கடந்து சென்றான் நந்தா.

வேலையை கவனிக்கலாம் என்று கணிப்பொறியைப் பார்க்க, சிரித்த நந்தாவின் முகமே திரையில் தோன்றுவது போல இருக்க, ஒரு நொடி தன் கண்களை மூடினாள் காவ்யா. அவள் கண்களுக்குள்ளும் வசீகரமாய் சிரித்துக் கொண்டிருந்தான் நந்தா.