நன்றாக உறங்கிக்கொண்டிருந்த நந்தா, யாரோ தன் மீசையைப் பிடித்திழுக்க கண் திறந்து பார்த்தான். அர்ஜுன்தான் நந்தாவின் மீசையைப் பிடித்திழுத்து விளையாடிக் கொண்டிருந்தான். “அப்புக்குட்டி எழுந்துட்டீங்களா…? எனக் கேட்டு அர்ஜுனனை தூக்கி தன் நெஞ்சில் உட்கார வைத்துக் கொண்டான். இப்போது இன்னும் வசதியாக “அப்பா பூச்சி… பூச்சி” எனக்கூறி மீசையை பலமாக இழுக்க, மீசை அவன் கையோடு வராததால் மீண்டும் மீண்டும் இழுத்தான்.
“அப்பாக்கு வலிக்குதுடா, இது பூச்சியில்லை, மீசை…. எங்க சொல்லு மீசை” என்றான் நந்தா.
“மீச” என சொல்லிக்கொண்டே மீண்டும் இழுத்தான். “உன்னை…” எனக்கூறி நந்தா அர்ஜுனனுக்கு கிச்சு கிச்சு மூட்ட சிரிக்க ஆரம்பித்தான் குழந்தை. குழந்தையின் சிரிப்பு சத்தத்தில் காவ்யாவும் கண் விழித்துக் கொண்டாள்.
இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல், எழுந்து கெய்சரை ஆன் செய்துவிட்டு, குளியலறை சென்று வந்தாள். அவள் திரும்ப வரும் வரையிலுமே அப்பாவும் மகனும் விளையாடிக் கொண்டுதான் இருந்தனர். அர்ஜுனை நந்தாவிடமிருந்து தூக்கியவள் அவனது லோயரை கழற்றி, டயப்பரை கழற்றினாள்.
“ரெண்டு வயசாகுது இன்னும் ஏன் இதையெல்லாம் போட்டுவிடுற? இவனுக்கு சிரமமா இருக்காதா?” என எழுந்தர்ந்து கொண்டு கேட்டான் நந்தா.
“நைட்ல மட்டும் தான் போட்டு விடுறேன், இல்லைன்னா பெட்லேயே போய்டுவான். அவனுக்கும் தூக்கம் போய் எனக்கும் தூக்கம் கெட்டுடும்” என்றாள்.
“சரி…. இனிமே போடாத. நைட்ல இடையில நானே எழுந்து இவனை ஒரு தடவை பாத்ரூம் போக வைக்கிறேன்” என்றான்.
காவ்யா ஒன்றும் கூறாமல் அர்ஜுனை குளியலறைக்கு அழைத்துச் சென்று பல்துலக்கி விட்டு உடம்பையும் சுடு நீர் கொண்டு கழுவி விட்டாள். தண்ணீரைக் கண்ட அர்ஜுன் உற்சாகமாகி விட்டான்.வாளியில் இருந்த தண்ணீரில் அடித்து விளையாட ஆரம்பித்தான். கதவு மூடப்படாததால் பார்த்துக்கொண்டே வாயிலில் நின்றிருந்தான் நந்தா. காவ்யா ஒரு துண்டில் சுற்றி அர்ஜுனை தூக்கிவர, “என்கிட்டே கொடு” என்று அவனை வாங்கிக்கொண்டான்.
காவ்யா வேறு உடை எடுக்க, நந்தாவே வாங்கி அர்ஜுனனுக்கு அணிவித்தான். “அப்பு விளையாடிட்டு இரு, அம்மா பால் போட்டு எடுத்துட்டு வர்றேன்” என அர்ஜுனிடம் மட்டும் சொல்லிவிட்டு காவ்யா சென்று விட்டாள்.
அவள் பால் கலந்து எடுத்து வரும் வரை குழந்தையையுடனே இருந்தான். துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தான் அர்ஜுன். அவனைப் பார்த்துக்கொண்டே சுற்றும் முற்றும் கவனித்தான். காவ்யா வந்ததும், நந்தா குளியலறை சென்று வந்தான்.
வந்தவன் கையோடு அலமாரியில் இருந்த பெரிய செல்லோ டேப்பை எடுத்து, குழந்தையின் கைக்கு எட்டுமாறு இருந்த ஒன்றிரண்டு பிளக் பாயிண்ட்டுகளை அடைத்தான்.
அர்ஜுன் விளையாடும்போது இடித்துக் கொள்ளாதவாறு, உணவு மேசை, நாற்காலிகள், டீப்பாய் போன்றவற்றை சுவரின் ஓரமாக தள்ளி வைத்தான். ஹாலின் ஒரு பக்கம் அலமாரியின் டிராயர் வெளியே இழுக்கப்பட்டு மூடப்படாமல் இருந்தது. கீழே குனிந்து விளையாடும் அர்ஜுன் எழுந்தால் அவன் தலையில் இடித்துக் கொள்ளும் அபாயம் இருந்ததால், டிராயரின் சாவிகளை காவ்யாவிடம் கேட்டு வாங்கி எல்லாவற்றையும் பூட்டினான்.
காவ்யா பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஒன்றும் அவனிடம் கேட்டுக் கொள்ளவில்லை. காஃபி கலந்து வந்து அவனுக்கு கொடுத்தாள். வாங்கிக் கொண்டவன், “உடம்பு எப்படி இருக்கு?” எனக் கேட்டான்.
“ம்… நல்லா இருக்கேன்” என்றாள்.
“நான் இன்னும் ஃபோர் டேஸ் லீவ் சொல்லியிருக்கேன். ரொம்ப லீவ் எடுக்க முடியாது. நீ என்ன முடிவு பண்ணியிருக்க?” எனக் கேட்டான்.
“இன்னும் ஒன் வீக் நான் லீவ் போடலாம்னு இருக்கேன்” என்றாள்.
“தெரியலை, நல்ல க்ரட்ச் எதுவும் இருக்கான்னு விசாரிக்கணும்” என்றாள். நந்தாவுக்கு முகம் மாறிவிட்டது.
“அர்ஜுன் எப்படிம்மா அங்கெல்லாம் இருப்பான்?” எனக் கேட்டான்.
“இருந்துதான் ஆகணும். முதல்ல கஷ்டப்படுவான். போகப் போக பழகிக்குவான். வேலை பார்க்கிறவங்க நிறைய அம்மாக்கள் அப்படித்தான் குழந்தையை வளர்க்கிறாங்க” என்றாள் காவ்யா.
“அவங்களுக்கு வேலைக்கு போகணும்னு கட்டாயம், அதனால போறாங்க” என்றான் நந்தா.
“எனக்கும் அப்படித்தான்” என்றாள் காவ்யா.
“அதான் நான் வேலைக்கு போறேனே. நீ வேலைக்கு போகக்கூடாதுன்னு எல்லாம் சொல்லலை. குழந்தை கொஞ்சம் வளர்ந்து ஸ்கூல் சேர்ந்த பிறகு, நீ விருப்பப்பட்டா அப்போ போன்னுதான் சொல்றேன்” என்றான்.
“இங்க பாருங்க, நீங்க சொல்றதுக்கெல்லாம் என்னால தலையாட்டிக்கிட்டு இருக்க முடியாது. இன்னும் உங்களோட சேர்ந்து வாழப் போறது பத்தி நான் எந்த முடிவும் எடுக்கல. உங்களுக்கு ஆயிரத்தெட்டு கடமைகள் இருக்கும். அதையெல்லாம் பாருங்க. என் பிள்ளையை நான் வேலைக்கு போனாதான் பார்க்க முடியும். உங்களை நம்பியெல்லாம் என்னால வேலையை விட முடியாது” என படபடவென பொரிந்தாள்.
“இடையில கொஞ்சம் மூச்சு விடுடி. கேப்பே இல்லாம லொட லொடன்னு பேசாத. என்ன இப்போ நீ வேலையை விட முடியாது. அவ்வளவுதானே. விடாத. ஒரு வாரம் லீவ் போடுறீல்ல… அதுக்குள்ள நான் வேற ஏற்பாடு பண்றேன். அர்ஜுனை க்ரட்ச்ல விட முடியாது” என்றான்.
“வேற என்ன ஏற்பாடு பண்ண போறீங்க?”
“இன்னும் யோசிக்கல, இனிமேதான் யோசிக்கணும். நான் கொஞ்சம் வெளியில போயிட்டு வந்துடுறேன். உனக்கு எதுவும் வாங்கணுமா?” எனக் கேட்டான்.
“எனக்கு எதுவும் வேணும்னா நானே வாங்கிக்குவேன். இந்த மூணு வருஷமா நீங்கதான் எனக்கு எல்லாம் வாங்கி கொடுத்தீங்களா?” எனக் கேட்டு விட்டு உள்ளே சென்றுவிட்டாள்.
புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த காமாட்சியை பார்த்து, “நீங்க இருந்தாலாவது இவளை கொஞ்சம் அடக்கி வைப்பீங்க. இப்படி என்னை மாட்டி விட்டுட்டு நிம்மதியா போயிட்டீங்களே” என புலம்பிக் கொண்டே நந்தாவும் வெளியில் சென்றான்.
அவனுடைய உடைமைகளை எடுப்பதற்காக அவனுடைய வீட்டிற்குதான் சென்றிருந்தான். அவன் வந்ததும் காமாட்சியின் இழப்பைப் பற்றி கேட்க வேண்டுமே என விசாரித்தார் சாந்தி. பதிலளித்தவன் தன் அறைக்கு சென்று விட்டான். வாசுகி இன்னும் வீட்டில்தான் இருந்தாள்.
சிறிது நேரத்தில் இரண்டு பெட்டிகளுடன் நந்தா கீழே வர, “என்னப்பா எங்க கிளம்பிட்ட?” எனக் கேட்டார் சாந்தி.
“காவ்யாவோட இருக்கப் போறேன்’ என்றான் நந்தா.
“ஏன் நீ அங்க போற? இது உன் வீடு. காவ்யாவையும் உன் பிள்ளையையும் இங்கேயே அழைச்சுக்கிட்டு வா” என்றார் சாந்தி.
“அவ என் மேல கோவத்துல இருக்கா. இப்போதைக்கு இங்க எல்லாம் வர மாட்டா” என்றவன், “பாட்டியையும் வாசுகியையும் கொஞ்சம் கூப்பிடுங்க” என்றான்.
“என்ன விஷயம் நந்தா?” எனக் கேட்டார் சாந்தி.
“அவங்கள கூப்பிடுங்க, சொல்றேன்” என சோஃபாவில் அமர்ந்து கொண்டான். இருவரையும் அழைத்துக் கொண்டு சாந்தி வந்தார்.
“நான் உங்ககிட்ட இருந்து உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்” என பீடிகையோடு ஆரம்பித்தவன், “உங்கள்ல யாருக்காவது காவ்யா கர்ப்பமா இருந்தது முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டான்.
“அதானே…. நம்மள பத்தி இப்பவும் ஏதேதோ கோள்மூட்டி கொடுத்து அனுப்பியிருக்கா. இவனும் அவ சொல்றத கேட்டுகிட்டு வந்து நம்மளையே கேள்வி கேட்கிறான்” என்றாள் சுந்தராம்பாள்.
“உங்கள இங்க வச்சி பார்த்துக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. வயசுல பெரியவங்களா இருக்கீங்க, போனா போகட்டும்னுதான் இங்க இருக்க விட்டிருக்கேன். தேவையில்லாம இனி என் பொண்டாட்டிய பத்தி ஏதாவது பேசினீங்கன்னா……” என முடிக்காமல் நிறுத்தியவன், தன் கோவத்தை அடக்கி, “தெரியுமா… தெரியாதா…? அதை மட்டும் சொல்லுங்க” என்றான்.
நந்தாவின் இந்த புதிய அவதாரத்தில் மூவருமே அதிர்ச்சியடைந்து பார்க்க, “எதா இருந்தாலும் மறைக்காமல் இப்பவே என்கிட்ட உண்மையை சொல்லிடுங்க. நானா கண்டுபிடிச்சேன்னா, நான் என்ன செய்வேன்னே தெரியாது” என்றான்.
“நந்தா ஏன் இப்படியெல்லாம் பேசுற? எங்களுக்கு நீ சொல்லித்தான் உனக்கு பிள்ளை இருக்கிற விஷயம் தெரியும்” என்றார் சாந்தி.
“அண்ணா நீ ரொம்ப மாறிட்ட, நாங்க எல்லாம் உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் நினைக்கிறோம்” என்றாள் வாசுகி.
“அப்படியா வாசுகி?” எனக் கேட்டான் நந்தா.
“ஆமாம் அண்ணா. உன் வாழ்க்கை இப்படியாச்சே, உனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி நீ நல்லா வாழ்றதை பார்க்கணும்னுதான் நாங்க மெனக்கெட்டு கிட்டு இருக்கோம்” என்றாள்.
“அப்படியாம்மா” என்றான் நந்தா.
“ஆமாம் என் புருஷன் வீட்டுல இல்லாத வசதியா? அவங்களுக்கு ஆர்த்தி ஒரே பொண்ணு. அவளை கல்யாணம் பண்ணிக்க நீ நான்னு க்யூல நிக்குறாங்க. இருந்தும், நான்தான் உனக்காக பேசி ஆர்த்தியை உனக்கு கட்டி கொடுக்க சம்மதம் வாங்கினேன்” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம், நீ எனக்கு இன்னொரு உதவியும் செய்றியா?” எனக் கேட்டான்.
“சொல்லுண்ணா உனக்காக என்ன வேணா செய்வேன்” என்றாள் வாசுகி.
“ஆர்த்திய கட்டிக்க க்யூல நிக்கிறதா சொன்னியே, அவங்கள்ள யாரையாவதையே பார்த்து அந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடு. இல்லன்னா நீ சொல்றது, செய்றது எல்லாம் பாத்துட்டு பிரபுவும் அவர் ஆஃபீஸ்ல இருந்து யாரையாவது ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கப் போறார். நான் போய் நியாயம் கூட கேட்க முடியாது. உங்க தங்கச்சி மட்டும் உங்களுக்கு முதல் பொண்டாட்டி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவதா பொண்ணு பார்க்கிறா….நான் செய்தா தப்பான்னு கேட்பார்” என்றான்.
வாசுகி வாயடைத்துப் போய் நிற்க, “உங்க செலவுக்கு பணம் போட்டு விடுறேன்” என சாந்தியிடம் கூறிவிட்டு இரண்டு பெட்டிகளையும் தள்ளிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
“நந்தாவா இது? என்னம்மா பேசுறான்…..? பார்த்தியா…? திரும்ப அவளை பார்த்ததும் எப்படி மாறிட்டான்னு. இப்பவாவது அவ அங்க இருக்கா, இந்த வீட்டுக்கு வேற வந்துட்டான்னா நம்மளை எல்லாம் இந்த பய கழுத்தை பிடிச்சி வெளியே தள்ளினாலும் தள்ளிடுவான்” என்றார் சுந்தராம்பாள்.
“ஆமாம்மா இன்னும் என் ஓரகத்திக்கு அவங்க வீட்டிலிருந்து எவ்வளவு செய்றாங்க தெரியுமா? எப்பவும் அவங்க கைதான் ஓங்கியிருக்கு. இந்த ஆர்த்தியை அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டா அங்க நான்தான் எல்லாருக்கும் முக்கியமா மாறிடுவேன்”
“அங்க யாருக்கும் அண்ணனுக்கு ரெண்டாம் தாரமா ஆர்த்திய கொடுக்கிறதுல விருப்பம் இல்லை. ஏதோ ஆர்த்திக்கு அண்ணனை பிடிச்சிப்போனதனால வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாங்க. அண்ணன் காவ்யாவ திரும்ப கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டா எல்லாம் பாழாய் போய்டும்” என்றாள் வாசுகி.
“என்னை என்ன பண்ண சொல்றீங்க? நமக்கு செய்யறது பண்றதுல எதுவும் குறை வைக்கிறானா? இல்லைதானே, அப்புறமென்ன?” என்றார் சாந்தி.
“இப்ப எந்தக் குறையும் இல்லை. ஆனா அவ வந்துட்டா எப்படி செய்வான்? அவ செய்ய விடமாட்டா” என்றார் சுந்தராம்பாள்.
“ரெண்டு பேரும் என்னை போட்டு குழப்பாதீங்க” என்று கூறிவிட்டு சாந்தி அகன்று விட்டார். வாசுகியும், சுந்தராம்பாளும் அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தனர்.
பெட்டிகளுடன் நந்தா வீட்டிற்குள் நுழைய, அர்ஜுன் ஓடிவந்து அவன் கால்களை கட்டிக் கொண்டான். “அப்புக்குட்டி….” என அழைத்து அவனை தூக்கி தலைக்குமேல் தூக்கி போட்டு பிடிக்க, உற்சாகத்தில் அர்ஜுன் சிரித்தான்.
“விடுங்க முதல்ல அவனை. குடல் ஏறிக்கப் போகுது. வெளில போயிட்டு வந்துட்டு கைகால் கூட கழுவாம அப்படியே அவனை தூக்குறீங்க” என சிடுசிடுத்தாள் காவ்யா.
“பாருடா உங்க அம்மாவுக்கு உன்னை பார்த்து பொறாமை. அவளை தூக்கி சுத்தாம உன்னை மட்டும் சுத்துறேன்ல அதான்” எனக் கூறி அவனைக் கீழே இறக்கி விட்டு உள்ளே சென்றான்.
இலகுவான உடைக்கு மாறியவன், அவனுடைய துணிகளை கப்போர்டில் அடுக்கி வைக்க ஆரம்பித்தான். “டிஃபன் ரெடியா இருக்கு” எனக் கூறினாள் காவ்யா. துணிகளை அப்படியே விட்டு விட்டு கை கழுவிக்கொண்டு உணவு மேசையில் வந்தமர்ந்தான். பொங்கலும், தேங்காய் சட்னியும் செய்திருந்தாள்.
“நீ சாப்பிடலையா?” எனக் கேட்டான்.
“டைம் என்ன ஆகுது? இன்னுமா சாப்பிடாமல் இருப்பேன்? சாப்பிட்டுட்டேன்” என்றாள்.
“என்ன சாப்பிட்ட? இவ்வளவு பொங்கல் இருக்கு? உன் அம்மாவை நினைச்சி க்கிட்டு ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்ட, வா, வந்து உட்காரு. சாப்பிடு” என்றான்.
“இல்ல நான் சாப்பிட்டுட்டேன் எனக்கு வேண்டாம்” என்றாள்.
‘சரி எனக்கும் வேண்டாம்” என்றான் நந்தா.
“வேண்டாம்னா போங்க” என காவ்யா கூற, நந்தா எழுந்தான். கோவமாக உணவு மேஜைக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவள், தட்டில் பொங்கலை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். சிரித்துக்கொண்டே நந்தாவும் அமர்ந்து சாப்பிட்டான்.
சாப்பிட்டு முடித்ததும் எல்லாவற்றையும் எடுத்து வைத்தவன், “நீ ரெஸ்ட் எடு. மதியம் நான் சமைச்சிடுறேன்” என்றான்.
“இல்ல நானே சமைக்கிறேன். நான் நல்லாதான் இருக்கேன்” என்றாள்.
“சரி நீயே செய், நான் ஹெல்ப் பண்றேன்” என்றான். அப்பொழுதே நேரம் 12 ஆகியிருக்க, அர்ஜுனுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதால் மதிய சமையலை ஆரம்பித்துவிட்டாள் காவ்யா. ஹாலில் அர்ஜுனை உட்கார வைத்து பொம்மைகளையும் எடுத்துப்போட்டு இருவரும் சமைக்க சென்றனர்.
“நீ பாத்திரத்துல வை, நான் வடிக்கிறேன், குக்கர் வேண்டாம்” என்றான். சாம்பார் செய்ய காவ்யா காய் எடுத்து வைக்க நறுக்க ஆரம்பித்தான் நந்தா. அர்ஜுனை ஒருமுறை பார்த்து வந்த காவ்யா பாத்திரங்களை கழுவி வைத்துக் கொண்டிருந்தாள்.
திடீரென அர்ஜுன் அழும் சத்தம் கேட்க, வெளியே ஓடிச் சென்று பார்த்தனர். அர்ஜுன் ஓடி விளையாடும் பொழுது சுவற்றின் மூலையில் நெற்றியில் இடித்துக் கொண்டான் போலும். நெற்றியை பிடித்துக்கொண்டு வீறிட்டு அழுது கொண்டிருந்தான். காவ்யா அவனை தூக்கிக்கொண்டு சமாதானம் செய்ய, நந்தா குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஐஸ் எடுத்து ஒத்தடம் வைத்தான். நெற்றி வீங்கியிருந்தது.
“ஹாஸ்பிடல் போகலாமா?” எனக் கேட்டான் நந்தா.
“இத மாதிரி அடிக்கடி இடிச்சுக்குவான் தான். சரியாகிடும் இதுக்கெல்லாம் ஹாஸ்பிட்டல் வேண்டாம்” என்றாள். நந்தாவை படுக்க வைத்து சமாதானப்படுத்த சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான்.
“நீ முடிஞ்சா சமை, இல்லைனா அர்ஜுனோட இரு. நான் இப்போ வந்துடுறேன்” எனக்கூறி வெளியே சென்றுவிட்டான் நந்தா. தூங்கும் அர்ஜுனுக்கு இருபக்கமும் தலையணைகளை வைத்து விட்டு காவ்யா மீண்டும் சமைக்க சென்றாள்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த நந்தா சுவரின் முனைகளில் எல்லாம் எதையோ ஒட்டிக் கொண்டிருந்தான். “என்ன இது?” எனக் கேட்டாள் காவ்யா.
ஒரு வருஷத்துக்கு முன்ன அர்ஜுனுக்கு டெங்கு ஃபீவர். பிழைக்கிறதே கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார். ஒரு வாரம் ஐசியூல இருந்தான். நானும் அம்மாவும்தான் கஷ்டப்பட்டோம். அந்த ஒரு வாரமும் இப்ப நினைச்சா கூட கதி கலங்குது. அப்பல்லாம் எங்கேயோ காணாம போயிட்டு, இப்ப என்ன பெருசா அவன் மேல அக்கறை?” எனக்கேட்க, அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டான் நந்தா.
“ஏன் காவ்யா நான் உன்னை விட்டுட்டு போன இந்த மூணு வருஷத்துல நீ நிறைய கஷ்டப்பட்டுட்ட. நான் ஒத்துக்குறேன். எந்த கஷ்டம் வந்தப்பவும் என்னை நீ தேடவே இல்லையா?” எனக் கேட்டான்.
“ஏன் தேடாம..? கஷ்டம் வந்தப்ப மட்டுமில்லை. இவனை சுமக்க ஆரம்பிச்ச நாளிலே இருந்து, இவன் என் வயித்தில அசைஞ்சப்ப, எட்டி உதைச்சப்ப எல்லாம் உன்னைதான் தேடினேன். இன்னைக்கு வந்துடுவே, நாளைக்கு வந்துடுவேன்னு எதிர்பார்த்து ஏமாந்து போனேன். என் அப்பா இறந்தப்போ தோள் சாஞ்சுக்க உன்னைதான் தேடினேன். இவன் பிறந்த அன்னைக்கு கூட, என்ன குழந்தைன்னு கூட கேட்காம நீ வந்துட்டியான்னுதான் என் அம்மா கிட்ட கேட்டேன். இப்படி உன்னை எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்து போனதுதான் மிச்சம். நீ வரவேயில்லை” என்றாள்.
“எனக்கு ஒரு ஃபோன் பண்ணியாவது நீ பேசியிருக்கலாம்தானே காவ்யா?” எனக்கேட்டான் நந்தா.
“ரெண்டு பேருக்கும்தானே அவன் பிள்ளை. உனக்கா தோணனும் வந்து பார்க்கணும்னு. கெஞ்சி கூத்தாடி எல்லாம் உன் பிள்ளையை பார்க்க வான்னு உன்னைக் கூப்பிட முடியாது” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
இன்று உயிருடன் இல்லாத தன் மாமனாரிடம் “என்னய்யா பண்ணி வச்சிட்டுப் போன? உன்னையே உன் பொண்ணு நம்பறா. உண்மையை சொல்றேன் என்னை நம்ப மாட்டேங்குறா. உன் பொண்ணும் நானும் நல்லா வாழனும்னு நினைச்சீன்னா ஒழுங்கா மேலே இருந்தே ஏதாவது பண்ணி உண்மை என்னன்னு உன் பொண்ணுக்கு தெரிய வை. அத்தை நீங்களாவது உங்க வீட்டுக்காரர் கிட்ட சண்டைபோட்டு உண்மையை தெரிய வைக்க சொல்லுங்க. இல்லைன்னா உங்க பொண்ணு காலம் முழுக்க என்னை தேள் மாதிரி கொட்டிக்கிட்டே இருப்பா” என புலம்பினான்.