அர்ஜுன் அழும் சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த நந்தகுமார் எழுந்து சென்று பார்த்தான். காவ்யாவை படுக்கையில் காணவில்லை. எழுந்துகொண்ட அர்ஜுன் அவளை காணாமல்தான் அழுது கொண்டிருந்தான். நேரம் 3:30 ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. குளியலறையிலிருந்து சத்தம் வர அங்குதான் இருக்கிறாள் என புரிந்து கொண்டவன் அழும் அர்ஜூனை தூக்கிக் கொண்டான். நந்தா தூக்கியதும் தூக்கக்கலக்கத்தில் இன்னும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் அர்ஜுன்.
“டேய் அழாதடா, உன் அம்மா இங்கதான் இருக்கா, இப்ப வந்துடுவா” என சமாதானம் செய்தான். அர்ஜுன் அவன் முகத்திலேயே அடித்துவிட்டு மீண்டும் அழ, “நீ அப்பாவையே அடிக்கிறியா? உன்னை பார்க்க வரலைன்னு அடிக்கிறியா? அப்பாவுக்கு தெரியாதுடா….. சாரிடா அப்புகுட்டி” என அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் காவ்யா. அவளைப் பார்த்ததும் “அம்மா….” என கூறிக்கொண்டு அர்ஜுன் அவளிடம் தாவ முயல, காவ்யா அவனை வாங்காமல் படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள்.
“அர்ஜுன் அழறான் பாரு காவ்யா. இவனை கொஞ்சம் கவனி” என நந்தா கூற, எந்த பதிலும் சொல்லாமல் படுத்தே இருந்தாள். அர்ஜுனை நந்தா படுக்கையில் விட, அவன் காவ்யா அருகில் சென்று அவள் மீதே படுத்து கொண்டான். காவ்யா குழந்தையை விலக்கிவிட அர்ஜுன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.
“அவன்தான் அழறான்ல காவ்யா…. கொஞ்சம் அவனை சமாதானம் பண்ணு” என நந்தா கூற, பதில் கூறாமலேயே கண்களை மூடிக் கொண்டாள். காவ்யாவை கூர்ந்து நோக்கியவன், ஏதோ தோன்றியவனாய் நெற்றியில் கைவைத்துப் பார்க்க அனலாய் கொதித்தது அவள் நெற்றி.
“என்ன காவ்யா இது…? உடம்பு இப்படி சுடுது… என் கிட்ட சொல்றதுக்கு என்ன…? அப்படி என்னடி வீம்பு உனக்கு?” என அவளிடம் கடிந்து கொண்டவன் அழும் அர்ஜுனை தூக்கிக் கொண்டான்.
“அர்ஜுன் அம்மாவுக்கு ஃபீவர். பாரு உடம்பெல்லாம் சுடுது” என காவ்யாவின் நெற்றியில் கையை வைத்துக் காட்ட “சூடு” என்றான் அர்ஜூன்.
“ஆமாம்… அம்மாக்கு சுடுது, அதனால தொல்லை பண்ணக் கூடாது” என குழந்தையிடம் சொல்ல, இப்போது உறக்கம் கலைந்திருந்த அர்ஜுன், அழுகையை நிறுத்திவிட்டு தன் அன்னையையும் தந்தையையும் மாறிமாறி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
“ஃபீவர் டேப்லெட் ஏதாவது வீட்ல இருக்கா காவ்யா?” எனக் கேட்டான். அவள் கப்போர்டை நோக்கி கையைக் காட்ட, அதைத் திறந்து அங்கிருந்த மாத்திரைகளில் காய்ச்சலுக்கானதை எடுத்தான்.
“அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாம இங்கேயே சமத்தா இரு, அப்பா இதோ வந்திடுறேன் “ எனக்கூறி அர்ஜுனை படுக்கையில் உட்கார வைத்துவிட்டு சமையலறை சென்றான். தண்ணீர் சூடு செய்து எடுத்து வந்து மாத்திரையைப் போட்டுக் கொள்ளும்படி அவளிடம் கொடுத்தான். மறுக்காமல் போட்டுக் கொண்டாள்.
“ரொம்ப முடியலைன்னா சொல்லு காவ்யா, ஹாஸ்பிடல் போகலாம்” என்றான். அவள் பதிலெதுவும் கூறாமல் மீண்டும் படுத்துக் கொண்டாள்.
‘வாயைத் திறந்து ஏதாவது பேசுறாளா பாரு’ என மனதிற்குள் நினைத்தவன் அர்ஜுனைப் பார்த்தான். “என்னடா… உனக்கு தூக்கம் வரலையா?” எனக் கேட்டான்.
“உன்னையும் உங்க அம்மா அவளை மாதிரியே வளர்த்து வச்சிருக்கா. அதே பிடிவாதம்” என்றவன் டேபிளில் இருந்த அவனது பொம்மைகளை அள்ளி வந்து படுக்கையில் போட்டான். “வா…” என நந்தாவையும் அர்ஜுன் அழைக்க, அவனருகில் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தான்.
காவ்யா தூங்கிப் போயிருந்தாள். மெல்ல அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். இப்போது காய்ச்சல் லேசாக விட்டிருந்தது. அர்ஜுனுக்கு தூக்கம் வருவதற்கான அறிகுறியே இல்லை.
“டேய் தூங்கலாம் டா” எனக் கூறி அவனை படுக்க வைக்க மீண்டும் எழுந்தமர்ந்து கொண்டான். அர்ஜுனை பார்த்து சிரித்தவன், “அப்பா சொல்லு… எங்க அப்பா சொல்லு, அப்பா… ” என சொல்லித் தர, அர்ஜுனும் “அப்பா” என அழைக்க அவனை வாரியணைத்துக் கொண்டான் நந்தா. நந்தாவுக்கு உடலெங்கும் சிலிர்த்துப் போனது. நந்தாவின் அணைப்பில் அர்ஜுன் என்ன உணர்ந்தானோ திமிறாமல் அவன் அணைப்பில் ஒன்றிப் போயிருந்தான்.
தனக்கும் காவ்யாவிற்கும் குழந்தை பிறப்பதை பற்றி நந்தாவுக்கும் கற்பனைகள் இருந்தன. காவ்யாவின் கர்ப்பகாலத்தில் அவளையும், பிரசவத்திற்குப் பின்பு குழந்தையையும் எப்படியெல்லாமோ பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தான். எதுவும் முடியவில்லை. பிரசவத்தின்போது காவ்யா தன்னை எவ்வளவு தேடியிருப்பாள் என்று நினைக்கும் போதே, மனதில் வலி பரவியது.
தன் குழந்தை பிறந்த அன்று எப்படி இருந்திருப்பான் என்று கூட தெரியாமல், அவன் தவழ்ந்தது, நடந்தது, முதலில் பேசியது எதையுமே அருகிலிருந்து பார்க்க முடியாமல், ஏன் இப்படி தனக்கு ஆனது? என நொந்து கொண்டான். கண்டிப்பாக காவ்யா கருவுற்றிருப்பது தெரிந்திருந்தால் அவளை விட்டு சென்றிருக்க மாட்டான்.
என்னிடம் ஏன் பேசாமல் விட்டாள் என காவ்யா மீதும் கோபம் வந்தது. ஏதாவது டைம் மெஷின் கிடைத்து மீண்டும் மூன்று வருடங்களுக்கு முன்னால் சென்று விட்டால் எப்படி இருக்கும் என வேடிக்கையாக நினைத்துக்கொண்டான். பெருமூச்சு விட்டுக் கொண்டவன், தன் மகனுடன் விளையாட ஆரம்பித்தான்.
காலையில் காவ்யா கண்விழித்தபோது, காவ்யாவின் இடுப்புக்கு அருகே தலை வைத்து, படுக்கையின் குறுக்கு வாக்கில் நந்தா மல்லாக்க படுத்திருக்க, அவன் மேல் குப்புறப்படுத்து அர்ஜுன் உறங்கிக்கொண்டிருந்தான். அவர்களைச் சுற்றிலும் பொம்மைகள் சிதறிக்கிடந்தன. பார்த்த காவ்யாவிற்கு கண்கள் கரித்துக்கொண்டு வந்தது. அவன் தன் அருகில் இருப்பதை ஒரு நொடி உண்மையா என நினைத்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்.
இன்னும் அவளுக்கு சோர்வாகவே இருந்தது. நேற்று காலையில் வீட்டில் இருந்த தன்னை இப்போது இல்லை என நினைத்து, கண்ணீர் விட்டாள். தன்னுடைய பெற்றோர் இருவருமே இப்போது இல்லை என்ற எண்ணம் அவளை துவளச் செய்தது. தன் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்த பெற்றோரை எண்ணி அவள் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க, கண்விழித்த நந்தா தன் மேல் படுத்திருந்த அர்ஜுனை மெல்ல படுக்கையில் கிடத்தி விட்டு எழுந்து காவ்யாவை பார்த்தான்.
“காவ்யா அழுதழுதுதான் இப்படி உடம்புக்கு முடியாம போயிடுச்சி. திருப்பி அழுதுக்கிட்டே இருந்தா இன்னும் பெருசா உடம்புக்கு வந்துடும். ப்ளீஸ் அழாதே” என்றவன் அவள் கண்களை துடைத்து விட, அவன் கையை தட்டி விட்டாள்.
“சரி நான் துடைக்கல. நீயே கண்ணை தொடைச்சுக்கிட்டு எழுந்திரு. உடம்பு இப்போ எப்படி இருக்கு? நாம ஹாஸ்பிடல் போலாமா?” எனக் கேட்டான்.
காவ்யா பதில் கூறாமலேயே இருக்க, அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான். சூடாகத்தான் இருந்தது. “திருப்பி ஃபீவராத்தான் இருக்கு. வா ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்திடலாம்” என்றான். கேட்டு விட்டு அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
நந்தாவுக்கு சலிப்பாக வந்தது. ‘டேய் ஒரு நாளிலேயே இப்படி சோர்ந்தீன்னா எப்படி? இப்போ அவளுக்கு உடம்பு முடியலை. சரியானதுக்கு அப்புறம்தானே உன்னை இன்னும் வச்சி செய்வா. மனசை தளர விடாதடா. உன்னால முடியும். கமான் மேன்’ என அவனது மனசாட்சி ஆறுதல் கூறி அவனை உற்சாகப் படுத்த, “நீயா வந்தா சரி. இல்லன்னா குண்டுகட்டா தூக்கிட்டுப் போவேன்” என மிரட்டி விட்டு எழுந்து வெளியே சென்றான். நேற்று வாங்கி வந்திருந்த பல் துலக்கியை வைத்து பல் துலக்கிவிட்டு, வீட்டிற்கு வெளியே சென்றான்.
மரக் கதவுக்கு வெளியில் இருந்த இரும்புக் கதவில் ஒரு பை மாட்டியிருக்க அதில் பால் பாக்கெட் இருந்தது. அதை எடுக்க, எதிர் வீட்டுப் பெண்மணி மங்களம் அவனை ஒரு மாதிரியாக மேலும் கீழும் பார்த்தார்.
‘இது வேறவா?’ என்றெண்ணியவன், தன்னை யாரோ என்று நினைத்துக் கொண்டுதான் அவர் பார்க்கிறார் என்பதை உணர்ந்து, “ரொம்ப தேங்க்ஸ. நேத்து என் பையனை நீங்கதான் பார்த்துக்கிட்டீங்க. இல்லனா ரொம்ப கஷ்டமாகியிருக்கும். நான் வெளிநாட்டில் இருந்தப்ப கூட, நீங்க நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கிறதா என் மனைவி சொன்னா. எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்” என்றான்.
உடனே மலர்ந்து சிரித்தவர், “ஓ நீங்கதான் காவ்யா ஹஸ்பெண்ட்டா? அப்பவே நினைச்சேன், என்னடா அர்ஜுன் உங்களை மாதிரியே இருக்கானேன்னு. காவ்யா எப்படி இருக்கா? அவ அம்மா இப்படி திடீர்னு போவார்ன்னு நினைக்கலை. ரொம்ப நல்ல டைப்” என்றார்.
“காவ்யாவுக்கு ஃபீவர். இங்க பக்கத்துல ஏதாவது கிளினிக் இருக்குமா?” எனக் கேட்டான் நந்தா.
“ நம்ம அப்பார்ட்மெண்ட் லேயே ஒரு டாக்டர் குடியிருக்கார். நேத்து கூட வந்து காவ்யா அம்மாவை பார்த்தாரே. இப்ப வீட்லதான் இருப்பார், எனக்கு நல்லா தெரியும் நான் வேணும்னா அவரை கூப்பிடட்டுமா?” எனக் கேட்டார் மங்களம்.
“அவரையே கொஞ்சம் வரச் சொல்லுங்களேன். ப்ளீஸ்…” என்றான் நந்தா.
சரியென்றவர் மருத்துவரை கைப்பேசியில் தொடர்பு கொண்டு வரச் சொல்லிவிட்டு, “அவர் வந்ததும் அழைச்சிட்டு வர்றேன், நீங்க போங்க” என்றார்.
அவருக்கு நன்றியுரைத்துவிட்டு உள்ளே வந்து பார்த்தான். காவ்யா இன்னும் படுக்கையில்தான் இருந்தாள்.
“இந்த அப்பார்ட்மெண்ட்லேயே டாக்டர் இருக்காராமே? அவரை வரச் சொல்லியிருக்கேன். நீ இப்படியே படுத்திருக்கப் போறியா? பிரஷ் பண்ணிட்டு, எதாவது சாப்பிடு. எழுந்திரு” என்றான்.
“எழுந்திரு எழுந்திருன்னா….? எனக்கு மயக்கமா வருது” என்றவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
“அதை சொல்றதுக்கென்ன?” என்றவன் கைத்தாங்கலாய் அவளை எழுப்பினான்.
“விடுங்க, எனக்கு முடியல. மயக்கமா வருது” என்றாள்.
“நான்தான் பிடிச்சிருக்கேனே, நீ ஒன்னும் விழுந்திட மாட்ட. கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிக்கோ” என குளியலறை அழைத்துச் சென்றான். அவன் பிடித்துக்கொள்ள வேகமாக பிரஸ் செய்தவள், “நீங்க கொஞ்சம் வெளியில இருங்க” என்றாள்.
“சொன்னா புரியாதா?” என கத்தியவள், “இப்போ பரவாயில்லை, விழமாட்டேன் சமாளிச்சுக்குவேன்” என்றாள்.
“சரி, கதவை சும்மா சாத்திக்க, லாக் பண்ணாத” எனக் கூறி விட்டு வெளியே வந்தான். அவன் வெளியே சென்றதும் கதவை அடைத்துவிட்டே பயன்படுத்தினாள் காவ்யா.
“சரியான பிடிவாதக்காரி” என முணுமுணுத்துக்கொண்டே படுக்கையை பார்த்தான். அர்ஜுன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். காவ்யா வெளியே வரும்வரை அந்த அறையிலேயே அமர்ந்திருந்தான். வெளியே வந்த காவ்யா மீண்டும் படுக்கையில் படுக்கப் போக, “ஹாலில் சோஃபாவில படுத்துக்கோ. டாக்டர் இங்கே வந்து பார்த்தா அர்ஜுன் முழிச்சிக்கப் போறான். லேட்டாதான் தூங்கினான். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என்றான்.
அவள் அலுப்பாக ஹாலிற்கு செல்லப் போக, அவளை தூக்கிக் கொண்டு போய் சோஃபாவில் படுக்க வைத்தான். பருக சுடுநீர் கொடுத்தான். பாலை காய்ச்ச அடுப்பில் வைத்துவிட்டு, குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தான். ஒரு பாத்திரத்தில் மாவு இருந்தது. வெளியே எடுத்து வைத்துவிட்டு தக்காளி சட்னி செய்ய தயாரானான்.
அழைப்பு மணி ஒலித்தது. சென்று பார்த்தான். மங்களம் மருத்துவருடன் நின்றிருந்தார். அவர்களை உள்ளே அழைத்தான்.
மருத்துவர் காவ்யாவை பரிசோதித்துவிட்டு, ஊசி மூலம் மருந்து செலுத்தினார். வேறு சில மருந்துகளும் எழுதிக் கொடுத்தார். “இந்த இன்ஜெக்ஷன்ல ஃபீவர் குறைஞ்சிடும். 48 ஹவர்ஸ்ல ஃபீவர் சரியாகலைன்னா என்னோட கிளினிக் அழைச்சிட்டு வாங்க. பிளட் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்” எனக் கூறிவிட்டு சென்றார்.
“காவ்யா உன் அம்மாவை நினைச்சு அழுது அழுது இப்படி உடம்பை கெடுத்துக்காதம்மா. கஷ்டப்படாம நல்ல சாவா போயிடுச்சு அவங்களுக்கு. ரொம்ப நாள் கழிச்சி வெளிநாட்டிலிருந்து உன் வீட்டுக்காரர் வந்திருக்கார். குழந்தை இருக்கான். அவங்களை நினைச்சுப் பாரு. மனசை தேத்திக்கோ” என அறிவுரை வழங்கி விட்டு, “இந்த மருந்து சீட்டை இங்க அப்பார்ட்மெண்ட்லேயே ஹெல்ப் பண்ண ஒரு பையன் இருக்கான. அவன் கிட்ட கொடுத்தா வாங்கிட்டு வந்துடுவான். நான் போன் பண்ணி வரச் சொல்றேன்” என நந்தாவிடம் கூறிவிட்டு கிளம்பினார்.
நந்தா நன்றியுரைக்க, “இதுல போய் என்ன இருக்கு? வேற எதுவும் உதவி தேவைப்பட்டாலும் கேளுங்க” எனக் கூறி சென்றார்.
நந்தா பால் எடுத்து வந்து காவ்யாவிற்கு கொடுக்க, “எனக்கு பாலை பார்த்தா வாமிட் வர்ற மாதிரி இருக்கு, வேண்டாம்” என மறுத்தாள். அதற்குள் அர்ஜுன் எழுந்து விட்டான். எழுந்து ஹாலிற்கே வந்து விட்டான். “அம்மா சிச்சா போயித்தேன்” என காவ்யாவின் கையை பிடித்து இழுத்தான். எப்பொழுதும் டயப்பர் போட்டுதான் இரவில் உறங்க வைப்பாள். நேற்று மறந்துவிட உறக்கத்திலேயே ஈரம் செய்து விட்டான் அர்ஜுன்.
“அம்மாவுக்கு உடம்பு சூடா இருக்குல்ல. அப்பா கிட்ட வா” என அவனை அழைத்துச் சென்று அர்ஜுனின் தேவைகளை கவனித்தான். பின் காவ்யாவிற்கு கொண்டு வந்த பாலை இவனுக்கு கொடுக்க, பார்த்துக்கொண்டிருந்த காவ்யா, “சிப்பர்ல கொடுங்க” என்றாள். அப்படியே கொடுக்க அர்ஜுன் தானே வாங்கி குடித்தான்.
அப்பார்ட்மெண்ட் பையன் மருந்து வாங்கிக் கொடுக்க, அவனிடம் 50 ரூபாயை கொடுத்துவிட்டு மருந்தையும், மீதிப் பணத்தையும் வாங்கிக் கொண்டான். அர்ஜுனை ஹாலில் அமர வைத்துவிட்டு, பொம்மைகளை அவனருகில் போட்டுவிட்டு, சமையலறை சென்று இட்லி ஊற்றி, சட்னியும் செய்து முடித்தான்.
காவ்யா அர்ஜுனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். ஊசி போட்ட பின் வியர்த்து காய்ச்சல் விட்டிருந்தது. இட்லியும் சட்னியும் ஒரு தட்டில் எடுத்து வந்து காவ்யாவிடம் கொடுத்தான்.
“சாப்பிட்டுக்கிறியா.. இல்லைனா ஊட்டி விடவா?” என நந்தா கேட்க, அவனை முறைத்துக் கொண்டே தட்டை கையில் வாங்கிக் கொண்டாள். சாப்பிட பிடிக்கவில்லை என்றாலும், உடம்பு நன்றானால்தான் எழுந்து நடமாட முடியும் என்பதால் சாப்பிடத் தொடங்கினாள். காய்ச்சல் இருந்ததால் வாய்க்கசப்பு இருந்தது. சட்னி வாய்க்கு நன்றாக இருக்க, ‘ எப்படி இதெல்லாம் செய்றான்?’ என நினைத்துக் கொண்டே நந்தாவைப் பார்த்தாள்.
“என்ன..? எப்படி சமைக்கிறான்னு நினைக்கிறியா? யுஎஸ் ல வெளி சாப்பாடு எனக்கு பிடிக்கலை. கை சுட்டு, கால் சுட்டு யூடியூப்ல பார்த்து, நானே சமையல் கத்துக்கிட்டு சமைக்க ஆரம்பிச்சுட்டேன்” என்றான்.
“அப்படி யாரு போய் கஷ்டப்பட சொன்னது?” என முணுமுணுத்துக் கொண்டே சாப்பிட்டாள் காவ்யா. அவள் கேட்டது காதில் நன்றாக விழுந்தாலும், பதில் எதுவும் கூறாமல், அவளை அமைதியாக பார்த்திருந்தான். சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே ஒரு பாத்திரத்தில் கை கழுவ வைத்து, மாத்திரை கொடுத்தான். “உடனே படுக்காத, கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு” என்றவன் அர்ஜுனுக்கும் உணவு ஊட்டி விட ஆரம்பித்தான்.
எப்பொழுதுமே அர்ஜுனுக்கு சாப்பாடு ஊட்டுவது மிகுந்த சிரமம்தான். மிகவும் ஆட்டம் காண்பிப்பான். நந்தா அவனை அழகாக சமாளித்து அவன் பின்னாலேயே ஓடி ஓடி உணவை ஊட்டி முடித்தான். பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் காவ்யா. நந்தாவும் உணவருந்தி முடித்தான்.
அர்ஜுனை விளையாட விட்டுவிட்டு காவ்யாவின் அருகில் வந்தமர்ந்தான் நந்தா. “இங்க பாரு காவ்யா, என்னோட சுச்சுவேஷன் உனக்கு நல்லா தெரியும். ரெண்டு பேருமே கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா, பெரிய பிரச்சினை ஆகாம சரி பண்ணியிருக்கலாம். நீ டிவோர்ஸ் பேப்பர் காட்டி பிளாக்மெயில் பண்ணவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. அதுக்கப்புறம் கூட நான் உன்னை கூப்பிட்டேன்தானே? நீதான் வரலை. உன் அப்பா வேற நக்கலா பேசினாரு. எல்லாம் சேர்ந்து நான் ஒரு நிலையிலேயே இல்லை. இங்க இருக்க பிடிக்காம யுஎஸ் போயிட்டேன்”
“ஏற்கனவே நான் நிறைய மிஸ் பண்ணிட்டேன் காவ்யா. சின்ன வயசில அப்பா அம்மா அன்பு கிடைக்கல. வாழ வேண்டிய வயசுல பொண்டாட்டி என்னை புரிஞ்சுக்காம பிரிஞ்சு போயிட்டா. என் பிள்ளை பிறந்தது கூட தெரியாம…” எனும்போது குரல் உடைந்து, பின் தன்னை தேற்றிக்கொண்டு, “என் புள்ள பிறந்தது கூட தெரியாம ரெண்டு வருஷம் அவனோட இருக்கிறதை மிஸ் பண்ணிட்டேன். ஆசையா அவனை தூக்கம் வரும்போது அவன் என்னை பார்த்து பயந்து ஒளிஞ்சானே….. எப்படி இருந்துச்சு தெரியுமா? இனிமேலும் எதையும் நான் இழக்க விரும்பல காவ்யா” எனக் கூறி அவள் கைகளை பிடித்தான்.
“இழந்தது நீங்க மட்டும் இல்லை. நானும்தான். நீங்க யுஎஸ் போனதாலதானே எல்லாம்? நீங்கதானே எல்லாத்துக்கும் காரணம்? இப்போ வந்து என் கையைப் பிடிச்சிகிட்டு ரொம்ப பாவம் போல பேசினா நான் மனசு மாறிடுவேனா? விடுங்க என் கையை” என அவன் கையை உதறினாள்.
தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன், “டேய் உன் அம்மாவுக்கு கல் மனசு. அது தெரிஞ்சும் அவ பின்னாடியே உன் அப்பா சுத்திகிட்டு இருக்கேன். அதான் என்னோட அருமை அவளுக்கு புரியலை” என அர்ஜுனை பார்த்து கூற, ஒன்றும் புரியாமல், “ஹி…ஹி” என சிரித்தான் அர்ஜுன்.
அவன் சிரிப்பில் மனதை தொலைத்த நந்தா, “பார்த்தியாடி… என் பொழப்பு சிரிப்பா சிரிக்கிறது நம்ம புள்ளைக்கு கூட தெரிஞ்சிருக்கு” எனக் கூறி அர்ஜுனை தூக்கிக்கொண்டு அவனனுடைய கள்ளமில்லா சிரிப்பில் தன் மன காயத்திற்கு மருந்து தேடினான்.