முகநூளில் செல்வராணி நிறைய கதைகளுக்கு விமர்சனம் போட்டிருக்க, “ஆத்தி, இவங்க நம்மள விட படிப்புக்காரியா இருப்பாங்க போலருக்கே…” என யோசித்துக் கொண்டே இறுதியாய் அவர் பதிவு செய்திருந்த கதையின் விமர்சனத்தைப் படித்தார்.
“என் மனதை ஆள வா… ம்ம் கதை டைட்டில் நல்லார்க்கு… விமர்சனத்தை படிக்கும்போதே கதையைப் படிக்கத் தூண்டுது… மித்திரன், மாளவிகா பேரே அசத்தலா இருக்கே… இந்த ஆத்தர் கதை நாம எதுவும் வாசிச்சதில்லை… பார்ப்போம்…” என நினைத்தவர் அந்த லிங்கைக் கிளிக்கினார்.
“கொலம்பஸ்… கொலம்பஸ்…” என்று பாட்டோடு கதை தொடங்க வாசிக்கத் தொடங்கியவர் இயல்புபோல் அதில் மூழ்கிப் போனார். நான்காவது எபியை ஓபன் பண்ணும் நேரத்தில் அழைப்புமணி அழைக்க முகத்தை சுளித்துக் கொண்டு எழுந்தவர் கதவை நோக்கி சென்றார்.
“யாரு இந்நேரத்துல இம்சை…” என சொல்லிக் கொண்டே கதவைத் திறக்க வெளியே ஒரு கொரியர் பாய் நின்று கொண்டிருந்தான்.
“மேடம்… டாக்டர் ஜெயந்திக்கு ஒரு கொரியர் வந்திருக்கு… அவங்க வீட்ல இல்ல போலருக்கு… நீங்க வாங்கிக்க முடியுமா…” இதற்கு முன்பு நிறைய தடவை இந்த மாதிரி ஜெயந்தி வீட்டுக்கு வந்த கொரியர், தபாலை சகுந்தலா வாங்கி வைப்பார் என்பதால் அவன் கேட்டான்.
“ஆமாப்பா, அவங்க வெளியூர் போயிருக்காங்க… நான் வாங்கிக்கறேன்…” சகுந்தலா சொல்லவும், வண்டியில் வைத்திருந்த பெரிய கவர் ஒன்றை எடுத்து வந்தான். கொடுத்துவிட்டு கையொப்பை வாங்கிக் கொண்டு அவன் கிளம்ப அந்த பெரிய சைஸ் கவரை, “என்னவா இருக்கும்… பெரிய கவரா இருக்கு…” என யோசித்தவர் அதை வைத்துவிட்டு கடிகாரத்தைப் பார்க்க திக்கென்றது.
“அய்யய்யோ… கொஞ்ச நேரத்துல சிடுமூஞ்சி சுந்தரம் டான்னு டயத்துக்கு சாப்பிட வந்திருவாரே…” எனப் பதறியவர் வேகமாய் அரிசியைக் களைந்து குக்கரில் வைத்துவிட்டு அரிந்த கீரையைக் கழுவினார்.
ஒரு சின்ன குக்கரில் பொடியாக அரிந்த அரைக்கீரை, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய் மூன்று, நசுக்கிய பூண்டு மூன்று பல், சிறிது பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு அடுப்பில் வைத்து 2 விசில் விட்டார்.
அதற்குள் பத்து சின்ன வெங்காயம் உரித்து நீளவாக்கில் அரிந்து கொண்டார். விசில் அடங்கியதும் பருப்பு மத்தால் நன்றாகக் கடைந்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அதோடு அரிந்த வெங்காயத்தையும் பொன்னிறமாகும் வரை வதக்கி குட்டித் தக்காளி ஒன்றைப் பொடியாய் அரிந்து அதையும் சேர்த்து எண்ணெய் பிரியத் தொடங்கியதும் கடைந்து வைத்த கீரையில் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை கடைந்து ஒரு ஸ்பூன் தேங்கா எண்ணெயை ஊற்ற கீரைக் கடைசல் மணத்தது.
கணவர் சுந்தரத்துக்கு தினமும் ஒரு கீரை மதிய உணவுக்கு நிச்சயம் வேண்டும். சமையலை முடித்து சகுந்தலா அடுப்பைத் துடைக்கும்போது கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்க, “நல்லவேளை, முடிச்சுட்டேன்…” என்ற நிம்மதிப் பெருமூச்சுடன் உணவுகளை மேசை மீது அடுக்கினார். அவர் கை கால் அலம்பி சாப்பிட அமர சகுந்தலா பரிமாறினார். தந்தை வருவதற்குள் எழுந்திருந்த அருள் குளித்து பிரஷாய் வெளியே வந்தான்.
“நீயும் சாப்பிட வாடா…” அன்னை சொல்ல, எதிரில் அமர்ந்த மகனைக் கண்டு “சாப்பிட்டு ஆபீஸ் போயிரு…” சுந்தரம் சொல்ல தலையாட்டினான்.
“சகு… ஈவனிங் ஹாஸ்பிடல் போக ரெடியாரு… உனக்கு ஒரு செக் அப் பண்ணிடலாம்…”
“எதுக்குங்க… போன மாசம் தானே ஜெயந்தி டாக்டர் செக் பண்ணாங்க…” என்றார் சகுந்தலா.
“அவங்க செக் பண்ணி என்ன பண்ண… இன்னைக்கு கோவில்ல மயங்கி விழுந்த போல வேற எங்காச்சும் மயங்கி விழுந்தா…” என்றார் எரிச்சலுடன்.
“அது மாத்திரை போடாமயா இருக்கும்…” சகுந்தலா சொல்ல,
“என்னமா, என்னாச்சு… மயங்கி விழுந்துட்டிங்களா…” என்றான் அருள் பதட்டத்துடன்.
“ம்ம்… காலைல கோவிலுக்குப் போனப்ப கிறுகிறுன்னு வந்தது… மயங்கிட்டேன்… என்ன பண்ண… வீட்டுல கூடத்தான் எல்லாரும் கிளம்பினதும் நான் மட்டும் தனியா இருக்கேன்… இங்க நான் மயங்கி விழுந்தா என்ன பண்ணறது… என்னைப் பார்த்துக்க ஹோம் நர்ஸ் ஏற்பாடு பண்ணறீங்களா…” என்றார் கேலியாக.
“முதல்ல உன் மொபைலை வாங்கி வைக்கணும்… எப்பப் பார்த்தாலும் அதையே நோண்டிட்டு கண்ணையும் கெடுத்திட்டு தான் உன்னை கவனிக்க கூட உனக்கு டைம் கிடைக்கறதில்ல… இதுல ஏழு முழத்துக்கு பேச்சு வேற…” சுந்தரம் சொல்லவும் மொபைல் கை மீறிப் போய் விடுமோ என பயந்து வாயை மூடிக் கொண்டார் சகுந்தலா.
“என்னம்மா நீங்க, இவ்ளோ அசால்ட்டா இருக்கீங்க… உங்களை தான் ரெகுலரா காலைல மாத்திரை போடணும், சாப்பிடனும்னு டாக்டர் சொல்லி இருக்காங்களே… மயங்கி விழுந்து ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” என்றவனின் பார்வை கனிவோடு அவர் முகத்தை ஆராய புன்னகைத்தார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடா, அதான் நான் மயங்கினப்ப கடவுளே அனுப்பி வச்ச போல பளீர் வெண்மையோடு ஒரு தேவதைப் பொண்ணு தாங்கிகிட்டாளே…” சகுந்தலா சொல்ல,
“பேய் கூடத்தான் வெள்ளையா இருக்கும்… அதுக்காக வெள்ளையா இருககறவங்க எல்லாம் தேவதையா…” சுந்தரம் கேட்கவும் கடுப்பானார்.
“ஹூக்கும், அவங்கவங்க நினைப்பு போல தான் தோணும்… நல்லது நினைச்சுப் பார்த்தா தேவதை… கெட்டதா நினைச்சா சாத்தானும், பேயும் தான் தோணும்…” என்று அவர் பதிலடி கொடுக்க சுந்தரம் அமைதியாய் உண்டு எழுந்தார்.
“சரி விடுங்க மா… எப்படி இருந்தாலும் என் அம்மாவைக் கீழ விழாம தாங்கிகிட்ட அந்தப் பொண்ணு எனக்கு தேவதை தான்… போதுமா… சரி, நான் ஆபீஸ் கிளம்பறேன்…” சாப்பிட்டு எழுந்தபடி அருள் சொல்ல, “கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்திட்டுப் போடா… அப்பா சொன்னா உடனே ஓடணுமா…” என்றார் சகுந்தலா.
அதைக் கேட்டுக் கொண்டே வந்த சுந்தரம், “உன் பிள்ளை இவ்ளோ நேரம் ரெஸ்ட் எடுக்காம என்ன, டான்ஸ் ஆடிட்டா இருந்தான்… அவனுக்கு வேலை இருக்கு… கிளம்பட்டும்…” என்றவர், “ரெண்டு மூணு கம்பெனிக்கு கொட்டேஷன் அனுப்ப வேண்டிருக்கு… ரெடி பண்ண சொல்லிடு… நாளைக்கு நான் பார்த்திட்டு அனுப்பிடலாம்…” எனவும், “சரிப்பா…” என்றவன் கிளம்பினான்.
மாலையில் கல்லூரி முடிந்த குந்தவை, அவளது தோழி மணிமேகலை அன்று லீவ் எடுத்திருந்ததால் அவளிடம் இருந்த தனது ரெகார்டு நோட்டை வாங்க வேண்டி அவளது ஹாஸ்டலுக்கு சென்றாள்.
அன்னைக்கு அலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி இருந்ததால் சிறிது நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு கிளம்பினாள்.
மாலை இருள் கவியத் தொடங்க, செயற்கை விளக்குகள் வெளிச்சம் சிந்தி இருளை விரட்டிக் கொண்டிருந்தன. பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நின்று கொண்டிருக்க அனைவரின் தலையும் சொல்லி வைத்தது போல் குனிந்து மொபைலை நோக்கிக் கொண்டிருந்தது.
ஒரு பெண் கையில் பாகுடன் நின்று கொண்டிருக்க தெரு விளக்கு வெளிச்சத்தில் தேவதை போலத் தெரிந்தாள்.
“தேவதைகள் கவலைப்படுமா என்ன… இந்தப் பெண் முகத்தில் ஏன் இப்படி ஒரு கவலையும், யோசனையும்…” என நினைத்தபடி குந்தவை அவளை நோக்க நிமிர்ந்தவள் இவள் தனை நோக்குவதைக் கண்டு புன்னகைத்தாள்.
“ஹாய்… தாம்பரம் பஸ் இவிடே வருமா…”
“ம்ம்… நானும் தாம்பரம் தான் போகறேன்… என்னோடவே வாங்க…” என்றாள் அவள்.
“ஓ தேங்க் யூ…” புன்னகைக்க பல்வரிசை பளீரென்றது.
“நீங்க மலையாளியா…”
“ம்ம்… தமிழ் அத்தர வரில்லா…”
“நோ பிராப்ளம்… என் பிரண்டு ஒருத்தி மலையாளி தான்… நாங்க அவளைப் பேச வச்சுட்டு இருப்போம்…”
“ஹோ… குட்டிட பேரேந்தா…” என்றாள் வானதி.
“நான் குந்தவை… நீங்க…”
“குந்தவை இங்கனே ஒரு பேரோ…” யோசித்தவள், “நான் வானதி…” என்றாள்.
“வாவ்… வானதி யா… நீங்க மட்டும் எங்க அம்மா முன்னாடி போயி நின்னா ரொம்ப சந்தோஷப் படுவாங்க…” என்றாள்.
“ஆஹான்… எந்தினா…”
“என் அம்மா சரியான பொன்னியின் செல்வன் கதை பைத்தியம்… அதுல வர்ற காரக்டர்ஸ் பேரு தான் குந்தவை, வானதி எல்லாம்… நீங்க ஒரு மலையாளியா இருந்துட்டு எப்படி வானதின்னு தமிழ் பேரு வச்சிருக்காங்க…” சகஜமாய் பேசத் தொடங்கினாள் குந்தவை.
“ஓ… வானதி தமிழ் பேரானோ… அரயில்லா…”அதற்குள் தாம்பரம் பஸ் வரவும் இருவரும் ஏறிக் கொண்டனர். காலியாய் இருந்த சீட்டில் அருகருகே அமர்ந்து கொண்டனர்.
“வானதி, நீங்க என்ன பண்ணறீங்க…”
“நான் நர்ஸிங் முடிச்சு… ஜோலிக்கு வெயிட்டிங்…”
“ஓ… நைஸ்… நான் B.Tech படிக்கறேன்…”
“ம்ம்… குந்தவை ரெம்ப நல்லோணம் சம்சாரிக்குன்னு… எங்கனே என்ட மலையாளம் மனசிலாவுந்த…” (குந்தவை ரொம்ப நல்லாப் பேசற… எப்படி என் மலையாளம் புரியுது…)
“பாஷை எதுவா இருந்தா என்ன… ஒருத்தரை நமக்குப் பிடிச்சுட்டா அவங்க சைகை கூடப் புரியும்…”
“அய்யடா… அப்போ குட்டிக்கு என்ன இஷ்டாயோ…”
“இப்படி ஒரு அழகான கேரளத்து ஓமனக் குட்டிய யாருக்கு தான் பிடிக்காது… நீங்க ரொம்ப அழகாருக்கீங்க…”
“ஹாஹா… தேங்க் யூ… நீயும் சந்தக்காரி தன்னே…” (நீயும் நல்ல அழகி தான்…) இருவரும் சரளமாய் பேசத் தொடங்க குந்தவைக்கு ஏனோ வானதியைக் கண்டதுமே பிடித்தது. பேசப் பேச மிக மிகப் பிடித்தது.
வானதிக்கும் அப்படியே. ஒரு நல்ல நட்பு இருவருக்குள்ளும் விதைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அமைதியாய் பரந்து
கிடக்கும் வானின்
நிசப்தம் மட்டுமே
நமக்குத் தெரிகிறது…
அதற்குள் தான்
ஆளை மிரட்டும் இடியும்
கண்ணைப் பறிக்கும்
மின்னலும் ஒளிந்து
கொண்டிருக்கிறது…
சில நேரம் பெருமழையாய்
கொடும் சூறாவளியாய்
தனது கோபத்தை
இயற்கை பேசிக் கொண்டு
தானிருக்கிறது…
இயற்கையின் பாஷைகள்
புரியாவிட்டாலும்
உணர முடிகிறது…