சுகம் – 20
“அம்மா தான் யார் இல்லைன்னு சொன்னா?? ஆனா நீ அப்படி நினைக்கலையேடா.. எத்தனை நாள் உன் கல்யாணத்தை நினைச்சு நானும் அப்பாவும் வருத்தப்பட்டு இருப்போம். ஒரு வார்த்தை கூட எங்கக்கிட்ட சொல்ல தோணலையே உனக்கு.. நாங்க என்ன வேண்டாம்னா சொல்லிருப்போம். அப்படி மறைச்சு வச்சு இவ்வளோ தூரம் செய்யனுமா??” என,
“அம்மா ப்ளீஸ்… நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லைமா..” என்றான் கொஞ்சம் பொறுமையாகவே..
“அதை எங்களை நம்ப சொல்றியா சர்வா?? கொஞ்ச நேரத்திற்கு முன்ன நீ தானே சொன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணேன்னு.. காதல் கல்யாணம் எல்லாம் ஒருத்தர் மட்டுமே பண்ணிகிறதா என்ன?? ரெண்டு பேருக்கும் தானே இதில பங்கிருக்கு..
இங்க பாரு சர்வா நீங்க காதலிச்சத நாங்க தப்புன்னே சொல்லலை. எங்க கிட்ட சொல்லிருந்தா நாங்களே சந்தோசமா கல்யாணம் பண்ணி வச்சிருப்போம். ஆனா நாங்க அத்தனை கேட்டும், அதை கடைசி வரைக்கும் சொல்லாம மறைச்சு கல்யாணம் பண்ணனும்னு என்ன இருக்கு ???”
“அம்மா !!!!! போதும்..” என்று கத்தியே விட்டான் சர்வேஷ்…
“போதும்மா ப்ளீஸ் இதுக்கு மேல யாரும் எதுவும் பேசாதிங்கம்மா.. நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி நாங்க காதலிச்சு அதை உங்கக்கிட்ட மறைச்சு, கல்யாணம் பண்ணி அப்படியே நாங்களும் இப்போ சந்தோசமா இல்லைம்மா… முதல்ல அதை புரிஞ்சுகோங்க..” என்று சொன்னவனுக்கு முகமும் குரலும் அப்படியே கசந்து போனது..
இதை கேட்டதும் சோபி விலுக்கென்று நிமிர்ந்து தன் கணவன் முகம் பார்த்தாள்.. அவன் முகத்தில் தெரிந்த வேதனை அவளை இன்னும் வருதம்கொள்ள வைக்க, அது அவள் முகத்தில் அப்படியே பிரதிபலிக்க,
அவளை ஒரு பார்வை பார்த்தவன், “சாரி சுபி.. சொன்னாதான் எல்லாருக்கும் புரியும்…” என்றவன் ஆதியில் இருந்து அந்தம் வரை அனைத்தும் கூறினான், அன்று கடைசியாய் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை தவிர.
அனைத்தையும் கேட்ட பெரியவர்களுக்கு இதெல்லாம் என்ன என்று அதிர்ச்சியாய் தான் இருந்தது.. என்ன சொல்கிறான் என்று சர்வேஷை பார்க்க அவனோ வேதனை படிந்த முகத்துடன் சௌபர்ணிகாவை பார்த்தான்..
சௌபர்ணிகாவோ கண்ணீர் துளிர்க்கும் விழிகளோடு அமர்ந்திருக்க விஸ்வநாதன் தான் “என்ன சர்வா சொல்ற???!!” என்றார் இன்னமும் நம்பமாட்டாமல்..
“இன்னும் என்னப்பா சொல்லணும்.. இப்போ நான் சொன்னது தான் உண்மை போதுமா..” என்றவன்,
“நாங்க நீங்க எல்லாம் நினைக்கிற போல வீட்டுக்குத் தெரியாம லவ் பண்ணி ப்ளான் பண்ணி எல்லாம் இந்த கல்யாணம் நடக்கல.. ஒருவேளை இதெல்லாம் நடக்காம போயிருந்தா நானே வீட்ல பேசிருப்பேன்.. அதுதான் நடந்திருக்கும்.. ஆனா நாங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுல இருக்கிறதை பேசுறதுக்கு முன்ன இந்த கல்யாணம் நடந்திடுச்சு.. எங்களை என்ன பண்ற சொல்றீங்க..
எங்களுக்குள்ளயே இன்னும் எதுவும் சரியாகலை அப்படியிருக்கப்போ உங்க எல்லார் கிட்டயும் வந்து என்ன சொல்ல சொல்றீங்க.. இல்லை என்ன சொல்லிருக்கணும் சொல்றீங்க??” என்று சர்வேஷ் கேட்க அங்கே அத்தனை அமைதி..
இதற்குமேல் யார் தான் என்ன பேசிட முடியும்.. அவர்கள் இத்தனை நேரம் நினைத்தது ஒன்று இப்போது இவன் சொல்வது ஒன்று.. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள மட்டுமே முடிந்தது.. சில நிமிடத்தில் தாங்கள் தங்கள் பிள்ளைகளை தவறாய் நினைத்ததை எண்ணி வருந்தினர். யாருக்கும் முதலில் என்ன சொல்வது என்பது தெரியவில்லை.. ஆனாலும் சர்வேஷ் தான் விடாமல் ஆரம்பித்தான்..
“ஏன் அத்தை, மாமா நீங்களும் இப்படிதான் நினைப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. உங்களுக்கு உங்க பொண்ணை பத்தி தெரியாதா என்ன?? கால்ல அடிபட்டிருக்கு அதை ஒருவார்த்தை யாரும் கேட்கலை ஆனா இதை மட்டும் இப்போ இவ்வளோ நேரம் பேசிருக்கீங்க..” என்று கேட்க,
பரந்தாமன் “இல்ல மாப்பிள்ளை அது.. திடீர்னு கேட்கவும் எல்லாருக்குமே ஒரு மாதிரி ஆகிடுச்சு…” என,
“இவ்வளோ நேரம் எல்லாம் ஏன் சொல்லல ஏன் சொல்லலன்னு கேட்டீங்களே, அந்த ஏன் சொல்லலைனால தான் எங்களுக்குள்ள இப்போ வரைக்கும் பிரச்சனையே. ஏன்னா கல்யாணம் வரைக்குமே நாங்க எங்க காதலை ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கவே இல்லை..
அவ்வளோ கல்யாணத்துக்கு முன்ன ஒரு நாள் நான் சுபிக்கிட்ட கேட்டேன், உனக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலைன்னா சொல்லிடு, நான் ரெண்டு வீட்லயும் பேசுறேன்னு, அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா, என் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது எங்கப்பாவோட முடிவு, என்னிக்குமே அவர் வார்த்தையை நான் மீற மாட்டேன் அப்படின்னு சொன்னா.
அந்த இடத்தில நான்னு இல்லை, வேற யாரா இருந்தாலும் அப்படிதான் அவ சொல்லிருப்பா. அப்புறம் அம்மா நீங்க கேட்டீங்களே தங்கச்சி மேல இருக்க பாசத்தில தான் கல்யாணம் வேண்டாம் சொன்னதா நினைச்சீங்கன்னு. நான் ஸ்ரீக்காக மட்டும் யோசிக்கலை, எல்லாருக்காகவும் தான் யோசிச்சேன்.. லைப்ல இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகனும்னு நினைச்சேன். இப்போதான் மால் ஸ்டார்ட் பண்ணிருக்கோம் இன்னும் ஸ்டேபிள் ஆக நாளாகும்னு நினைச்சேன்..
இதெல்லாம் தான் காரணமே தவிர, நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை. எங்களோட காதலை நாங்களே சொல்லிக்காம இருந்தப்போ உங்ககிட்ட மட்டும் எப்படி சொல்ல முடியும்??? இல்லை நாங்க சொல்லாம விட்டது தான் தப்புன்னா நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம்….” என்று அனைவரின் முன்னும் கையெடுத்து கும்பிட்டான்..
“டேய் சர்வா….” என்றும் “ஐயோ மாப்பிள்ளை…” என்று அனைவரும் பதறிவிட்டனர்..
இத்தனை நேரம் அனைத்தையும் மௌனமாய் பார்த்துகொண்டு இருந்தவள் கடைசியில், ‘பேசியே எல்லாரையும் கவுத்துட்டான்…’ என்று எண்ணினாலும் அவன் பேசிய பேச்சில் துளி அளவு கூட எதுவும் பொய்யில்லை என்று அவளுக்கும் தெரியும்தானே ஆக தன் கணவனை கர்வமாய் காதலாய் தான் பார்த்தாள் சௌபர்ணிகா..
ஸ்ரீ கார்த்திக்கிடம் “டேய் கார்த்திக் தப்பி தவறி நீ எங்க அண்ணனை ரோல் மாடலா எடுக்காதடா.. பாவம் உன் வருங்கால பொண்டாட்டி….” என்று கிண்டல் செய்ய,
“ஹ்ம்ம் லவ்வ சொல்லாமையே லவ் பண்ணிருக்காங்க பாரேன் ஸ்ரீ.. சொல்லாம இருக்க காதலுக்கு தான் வேல்யு அதிகமாம்…” என்று தத்துவம் பேசினான் அவன்..
இருவரும் தங்களுக்குள் இப்படி பேச, பரந்தாமன் பார்வை கார்த்திக் மீது பதியவும் அவன் அப்படியே வாய் மூடிக்கொள்ள, அப்போதும் சௌபர்ணிகா அமைதியாகவே இருக்க,
புனிதா மகளிடம் வந்தவர் “சோபி…” என்றழைக்க, அவளோ அமைதியாய் நிமிர்ந்து பார்த்தாள்..
ஆம் அவளுள் இப்போது ஒரு நிமிர்வு தான் வந்திருந்தது.. இத்தனை நேரம் கூனிகுருகி அமர்ந்திருந்தவள் இப்போ சர்வேஷ் பேசியதில் நிமிர்ந்துவிட்டாள். நிஜம்தானே.. அவர்களுக்குளே எதுவும் சரியாகவில்லை எனும்போது அவள் யாரிடம் என்ன சொல்லியிருக்க முடியும்.. அவளின் எண்ணங்கள் அப்படியே அவளின் முகத்தில் தெரிந்தது..
“சாரிடா அம்மா உன்னை ரொம்ப பேசிட்டேன்…” என்று அவளது கரங்களைப் பற்ற,
“ம்ம்ச் விடும்மா…” என்று அவள் சொன்னதும், “நானும்தான் சோபிம்மா.. நீ பேச வர்றபோ பேசவிடாம நானே என்னென்னவோ நினைச்சிட்டேன்…” என்று மோகனாவும் சொல்ல,
“ஹ்ம்ம் தொண்டை தண்ணி வத்துற அளவுக்கு பேசினது நானு.. இதுல ஆள் மாத்தி ஆள் இவக்கிட்ட வந்து மன்னிப்பு…” என்று சர்வேஷ் நினைக்க, அவன் நினைத்தது அவளுக்கு கேட்டதுவோ என்னவோ,
திரும்பி கணவன் முகத்தைப் பார்த்தவள், பின் ஒன்றும் சொல்லாது, “நான் எதையும் மனசுல வச்சுக்கலை…” என்றாள் பொதுவாய்..
இது பெரியவர்களுக்கு சொன்னதோ இல்லை அவளது கணவனுக்கு சொன்னதோ தெரியாது ஆனால் இப்போதைய நிலையில் அவள் மனதில் எவ்வித குழப்பம் கோபம் எதுவுமில்லை.. ஒரு தெளிவு வந்திருந்தது.. நடந்தவைகளை எண்ணி இனி வரும் நாட்களை நாம் பிரச்னையை கொண்டு செல்ல கூடாது என்று..
போனதெல்லாம் போகட்டும் இனியாவது இனிமையாய் ஒரு வாழ்வை சர்வேஷோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்திருந்தது.. அதனை நினைத்தே சௌபர்ணிகா இதை சொல்ல,
கார்த்திக்கோ “ஹ்ம்ம் எல்லாத்தையும் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு இப்போ சொல்றத பாரேன்…” என்று மெல்ல ஸ்ரீநிதியிடம் சொல்ல,
“இவங்க ரெண்டு பெரும் லவ் சொல்லாம கல்யாணம் பண்ணது கூட ஒருவகைல நல்லதுதான் கார்த்திக்.. கல்யாணம் பண்ணைப்புறம் இத்தனை சண்டை இதுல லவ் வேற பண்ணிருந்தா கேட்டிருக்கவே வேண்டாம்..” என்று ஸ்ரீ சொல்ல,
கார்த்திக் ஸ்ரீநிதி இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்க, “ஸ்ரீ…” என்று மோகனா முறைக்க,
“ம்மா நாங்க ஜோக்கெல்லாம் அடிக்கல.. நாங்களும் அண்ணன் அண்ணி பத்தி தான் பேசினோம்..” என்றவள் என்ன பேசினோம் என்றதையும் சொல்ல, சம்பந்தப்பட்ட இருவர் தவிர மற்றவர்கள் லேசாய் சிரித்துக்கொண்டனர்..
சர்வேஷ் அப்போதும் அமைதியாகவே இருக்க, அவனோடு இனியாவது நல்ல முறையில் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் எண்ணியவளோ, அன்றே அவன் சொன்னதை தான் புரிந்திருந்தால், இன்று அனைவரின் முன்னும் அவன் கை கூப்பி நிற்கும் நிலை வந்திருக்காது என்று எண்ணினாள்.. தன்னால் தான் சர்வா இப்படி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு வந்தது என்று எண்ணும் பொழுதே அவளுக்கு அழுகை மூண்டது..
அவனுக்குமே இதை வெளிப்படையாய் சொல்கையில் எத்தனை வலித்திருக்கும்.. காதல் செய்தேன் சொல்லும் சூழல் அமையவில்லை.. கல்யாணம் செய்தோம் சந்தோசமாய் வாழவில்லை என்று சொல்கையில் எந்த ஆண் மகனுக்குத் தான் பெருமையாய் இருக்கும்.
காலில் அடிபட்ட வழியெல்லாம் காணாமல் போக, மனம் வலிக்க தொடங்கியது.. காதலிக்கும் போதும் சரி, கல்யாணம் நடந்த பின்னும் சரி ஒரு நாள் ஒருபொழுது அவனுக்கு தான் நிம்மதியை கொடுக்கவில்லை என்ற எண்ணம் தோன்ற அவன் முகம் பார்க்கவே முடியவில்லை அவளுக்கு..
அன்னையும், மாமியாரும் மாறி மாறி அவளிடம் சமாதானம் பேச, மாமனாரும் தந்தையும் புன்னகை பூக்க, முயன்று அவர்களுக்கு பதில் கூறி கொண்டிருந்தாள். சர்வேஷோ சௌபர்ணிகாவின் முக மாறுதல்களை தான் கவனித்துகொண்டிருந்தான்..
“என்னாச்சு இவளுக்கு?? நல்லாதானே கொஞ்ச நேரத்துக்கு முன்ன பார்த்தா.. இப்போ ஏன் இப்படி முகம் மாறுது..” என்று யோசிக்கும் பொழுதே ஸ்ரீயும் கார்த்திக்கும் அவன் முதுகை சுரண்டினர்
“ம்ம்ச் என்னங்கடா…. ”
“இவ்வளோ நேரம் சொற்பொழிவு செஞ்சது எல்லாம் போதும்.. இன்னும் எத்தனை நாளுக்கு தான் நோக்கியாவாவே இருக்கிறது, கொஞ்சமாது டச் போனா மாறுங்க மாமா…” என்று கார்த்திக் கிண்டல் செய்ய,
ஸ்ரீயோ “அண்ணா நீ எல்லாம் இனிமே வீட்ல சத்தம் கித்தம் போட்டு பேசிடாத, உன் டெபாசிட் எல்லாம் எப்பவோ காலி… என்ன பாக்குற நீதான் உண்மையை சொல்லி நீயே உன்னை டேமேஜ் பண்ணிட்ட..” என்று கேலி செய்ய,
விட்டால் இவர்கள் எல்லாம் பேசியே சௌபர்ணிகாவிற்கு மீண்டும் தன் மீது கோவம் வர செய்துவிடுவார் என்றெண்ணி “சரி சரி எல்லாம் பேசினது போதும், கொஞ்சம் அவளை ரெஸ்ட் எடுக்க விடுங்க.. டாக்டர் நாளைக்கு வரைக்கும் நடக்கவே கூடாது சொன்னாங்க.. ஆனா அவ நடந்திட்டா.. வலிக்க போது…” என்று பேச்சை மாற்றினான்..
விஸ்வநாதனோ “ஏன் சர்வா சோபிக்கு கால்ல தானே அடி வாய்ல இல்லியே…” என்று சத்தமில்லாமல் அவனை வார அத்தனை நேரம் முகம் கூம்பி இருந்த சௌபர்ணிகாவின் முகத்தில் கூட புன்னகை கீற்று வந்து போனது..
“புருஷன் காரன் எல்லார் முன்னாலையும் டேமேஜ் ஆகுறான் அதை பார்த்து நக்கலா சிரிக்கிற.. எல்லாம் என் நேரம்டி..” என்று நொந்துக்கொண்டாலும் அனைவரிடம் கூறிய பிறகு தான் அவன் மனமே லேசானதாய் உணர்ந்தான்..
அதன் பின் நேரம் போனது தெரியவில்லை.. அனைவரும் பேசி முடித்து உண்டு முடித்து என்று நேரம் கடக்க, ஒருவழியாய் சௌபர்ணிகா வீட்டினர் அனைவரும் கிளம்பவும் தான் சர்வேஷ் அறைக்கு வந்தான்..
கிளம்புவதற்கு முன்னே இவளைப் பார்க்க உள்ளே வந்த புனிதா, “சோபி.. நீ மனசுல எதுவும் வச்சு குழப்பி வாழ்க்கைய கெடுத்துக்காத…” என்று வருந்த, அவளுக்கு இப்போது சிரிப்புதான் வந்தது..
“என்ன டி சிரிக்கிற.. மாப்பிளை உன் மேல எவ்வளோ அன்பா இருக்கார்.. நீ ஏன் இப்படி நொண்டி சாக்கு எல்லாம் பிடிச்சு சண்டை போட்டிருக்க..” என, அவளோ இன்னமும் பலமாய் சிரித்தாள்..
“சோபி…” என்று புனிதா பல்லைக் கடிக்க, அதே நேரம் பரந்தாமனும் உள்ளே வர, சௌபர்ணிகா சிரிப்பை அடக்கிக்கொண்டாள்..
“பார்த்து இரு சோபி.. உனக்கு நாங்க சொல்ல வேண்டியது இல்லை…” என்று பரந்தாமன் சொல்ல,
“சரிங்கப்பா…” என்று தலையை மட்டும் ஆட்டினாள்..
புனிதாவோ வருத்தமாய் மகளின் முகம் பார்க்க, “என்னம்மா.. இப்போ நீ பீல் பண்றது தான் பகீர்னு இருக்கு…” என்றாள் அவரை இலகுவாக்க.
“அதில்லடி.. நீ.. நீ வேணும்னா உடம்பு சரியாகுற வரைக்கும் அங்க வந்து இருக்கியா???” எனும்போதே சர்வேஷ் உள்ளே வந்திட்டான் அவளுக்கு மாத்திரைகளை எடுத்துக்கொண்டு..
புனிதா இக்கேள்வியை கேட்டதுமே சர்வேஷும் சரி, சௌபர்ணிகாவும் சரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “என்ன சோபிம்மா…” என்று புனிதா மேலும் கேட்க,
பரந்தாமன் “இல்ல புனிதா.. எல்லாம் சரியாகட்டும்.. அப்புறம் வரட்டும்…” என்று சொல்ல, அவர் சொன்ன ‘எல்லாம்..’ என்ற வார்த்தை எதை குறிக்கிறது என்று இளம் ஜோடிகளுக்கு புரியாமல் இல்லை..
சர்வேஷ் மாத்திரைகளை நீட்ட அவளும் மௌனமாய் வாங்கி வாயில் போட்டுக்கொள்ள அடுத்த இரண்டு நிமிடங்களில் புனிதாவும் பரந்தாமனும் கிளம்பிட, அவர்களை வழியனுப்பிவிட்டு வந்தான் சர்வேஷ்..
சௌபர்ணிகா உறங்காமல் வெறுமெனே படுத்திருக்க, பார்த்தவன் ஒன்றும் பேசாது உடைகளை மாற்றிவிட்டு வந்து படுக்க, அவளோ ஏதாவது பேசுவான் என்று அவனைப் பார்த்து திரும்பிப் படுக்க, அதை கவனித்தவனோ, “இப்போ உனக்கு நிம்மதியா சுபி ???” என்றான்..
“என்ன நிம்மதியா ???”
“இல்லை இதை தானே எதிர்பார்த்த ??”
“என்ன எதிர்பார்த்தேன் ???”
“எல்லார் முன்னாடியும் நான் உன்னை லவ் பண்ணதை சொல்லனும்னு தானே நீ ஆசை பட்ட.. அதான்…. ”
“என்ன அதான் ???”
“என்ன டி காமடி பண்றியா ??? இப்போ கூட நீ என்னை புரிஞ்சுக்க மாட்டியா ?? இன்னும் நான் என்னதான் செய்யணும்னு எதிர் பார்க்குற??” என்று பொறுமையாக ஆரம்பித்தவன் சீர,
அப்போதும் அவனை அசராமல் பார்த்தவள், “ஹ்ம்ம் இன்னும் இன்னும் லவ் பண்ணனும்னு எதிர் பார்க்கிறேன்.. செய்வீங்களா??” என்று அவள் தலை சரித்து கேட்ட விதத்திலேயே சர்வேஷிற்கு கிறுகிறுத்து போனது..
“ஏய் சுபி என்ன சொல்ற???” என்றபடி சர்வேஷ் வேகமாய் எழுந்தமர,
“ஹ்ம்ம் எவ்வளவோ சொல்லனும்னு ஆசைதான். ஆனா இப்படி கேள்வியா கேட்கிறவங்க கிட்ட என்னத்த சொல்ல ???” என்றாள் சலுகையாய்..
“ம்ம்ச் சும்மா பீடிகை போடாம பேசு சுபி..”
“ஐயோ !! நான் எங்க பீடி குடிச்சேன்…. கடவுளே..” என்று நெஞ்சில் கை வைத்து முகத்தில் அதிர்ச்சி பாவம் காட்டியவளை இப்பொழுது முறைத்து பார்த்தான் சர்வா..
“சரி சரி முறைக்காதீங்க.. இவ்வளோ நேரம் டென்சனா இருந்தீங்களா அதான் கொஞ்சம் கூல் பண்ணலாமேன்னு…” என்று விளையாட்டு போல் பேசியவள் பின் “சாரிங்க…” என்றாள் குரலே எழும்பாமல்..
“என்ன சுபி எதுக்கு சாரி… நீ எதுவும் வொரி பண்ணாத..” எனும்போதே அவளும் எழுந்து அமர,
“காலை நீட்டி உட்காரு.. வலிக்க போது..” என்றவன் அவள் நீட்டும் முன்னரே அவனே அவளது கால்களை பிடித்து “மெல்ல” என்றபடி நீட்டிவிட்டான்.
அவ்வளவு தான் முகத்தை மூடி தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட்டாள் சோபி.. இவ்வளவு நேரம் பதிலுக்கு பதில் பேசியவள் திடீரென்று அழவும் சர்வேஷ் என்ன செய்வது என்று புரியாமல் பார்க்க, ஆனால் அந்நேரம் பார்த்து அவனது மனது சரியாய் தவறான ஒன்றை நினைத்தது..
“சாரி உனக்கு அடி பட்டதுனால தான் உன்னை தொட வேண்டியதா போச்சு.. இனிமே அப்படி பண்ண மாட்டேன்.. அழாத…” என்று விலகி அமர,
இவன் என்ன சொல்றான் என்று அவனை பார்த்தவள் சரியாய் அவனது எண்ணத்தை அறிந்து இனியும் பேசாமல் இருந்தால் தவறு என்றெண்ணி அவனது கைகளை பிடித்து தன்னருகே அமர வைத்தாள்..
“விடு சுபி.. நீ தூங்கும்மா.. நம்ம பேசி பேசி பிரச்சனை தான்..” என்றவன் தள்ளிப் போக, “ம்ம்ச் இன்னிக்கு பேசித்தான் ஆகணும்..” என்றாள் பிடிவாதமாய்..
‘என்னடா இது..’ என்று பார்த்தவன் “சரி சொல்லு..” என,
“நான் அழுதா உங்களுக்கு எப்பவுமே இப்படித்தான் தோணுமா ???” என்றாள் மொட்டையாய்..
“என்ன தோணுச்சு எனக்கு ??”
“பின்ன ஏன் இப்படி சொன்னீங்க ??”
“நான் என்ன மா சொன்னேன் ??” சலிப்பும் வேதனையுமாய் அவன் குரல்..
“ம்ம்ச் போதுங்க.. அன்னிக்கும் இப்படிதான் என்னை பேசவே விடாம நீங்களா பேசிட்டு போயிட்டீங்க… இன்னிக்கும் நீங்களா என்னத்தையோ நினைச்சு இப்படி சொல்றீங்க…. கொஞ்சம் என்னையும் பேச விடுங்க…” என,
‘இல்லைனாலும் இவ பேசவே மாட்டா…’ என்றெண்ணியபடி “சொல்லு..” என்றான்..
“அன்னிக்கு நான் ஏன் அழுதேன் தெரியுமா ???”
“ஏன் ???”
“அது வந்து… ”
“சரி நீ வந்து போன கதை எல்லாம் யோசிச்சு சொல்லு. எனக்கு துக்கம் வருது…” என்று மெத்தையில் சாய,
ஆனால் அவளும் எதிர்பாரா விதமாய் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.. அவனுக்கு அதிர்ச்சிதான்.. ஆனாலும் எதுவும் கேட்காமல் அவளை அணைத்துகொண்டான்..
“நான் ஒண்ணும் அன்னிக்கு நீங்க என்னை ஹக் பண்ணதுக்காக அழல..” அவளே பேசட்டும் என்று அவன் அமைதியாய் இருக்க அவளோ “ம்ம்ன்னு சொல்லுங்க அப்போதான் மேல சொல்வேன்… ” என்றாள் சிறுமி போல்..
“இது வேறயா…” என்றவன் “ம்ம் சொல்லு சுபி…. ” என,
“இல்லை நான்தான் முதல் நாள் நமக்குள்ள எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டு, அன்னிக்கு நீங்க ஹக் பண்ணதுமே ஐ…” என்றவள் பேச்சை நிறுத்த,
“யூ ??!!!”
“ஐ…. ஐ லாஸ்ட் மை கண்ட்ரோல் சர்வா… அதான் அழுகை வந்தது மத்தபடி உங்களை பிடிக்காம எல்லாம் இல்லை…” என்று அவள் கூறி முடிக்கவில்லை
“வாட் ???!!!!!” என்று கேட்டபடி அவன் மீண்டும் எழுந்தமர்ந்தான்…. வேண்டுமென்றே அவளும் “நத்திங்” என்று கூறி உதடு சுளித்தாள்..
“ஹேய் சுபி… சொல்லு சொல்லு.. அப்போ.. அன்னிக்கு.. நீ..” இப்போது வார்த்தைகளை தேடுவது அவன் முறையானது.. அவனது திணறலை சில நொடி ரசித்தவள், அவனது கரங்களை பிடித்துக்கொண்டு
“என்னிக்குமே என்னால உங்களை வெறுக்க முடியாது, விலகவும் முடியாது.. அந்த நேரத்துல எனக்கு அப்படி ஒரு எண்ணம், நிறைய சந்தோசங்களை இழந்துட்டோம்னு ஒரு கோவம்.. ஆனா அதை நினைச்சே இப்போ வாழ்கைய கெடுத்துட்டு இருக்கேன்னு போக போக புரிஞ்சுகிட்டேன்.. கல்யாணம் ஆன நாளில இருந்து நீங்க என்கிட்ட பாசமா தான் இருக்கீங்க. அதை நான் தான் புரிஞ்சுக்காம விட்டேன்.
இன்னிக்கு எல்லார் முன்னாடியும் நீங்க கை கூப்பி நிக்கும் போது, நான்.. நான் அப்படியே உடைஞ்சு போயிட்டேன் தெரியுமா ?? எல்லாமே என்னாலதான.. எல்லாரையும் போல நம்ம வாழ்கைய நல்லபடியா ஆரம்பிச்சு இருந்தா இன்னிக்கு உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காதுல.. எல்லாமே என்னால தானங்க…” என்று மீண்டும் வருத்தமாய் பேசியவளுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர்.
அவள் பேசுவதை எல்லாம் பொறுமையாய் கேட்டவனுக்கு அவள் அழுகையை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை… என்றுமே அவனால் அவளது கண்ணீரை காண இயலாது என்றே தோன்றியது. அன்றும் அப்படிதானே அவள் கண்ணீரை கண்ட வேதனையை வெளிபடுத்த தெரியாமல் கோவமாய் கொட்டிவிட்டான்
“ஸ்ஸ்… என்ன சுபி இது அழுதுட்டு.. ப்ளீஸ் அழாத… எனக்கு நீ அழுதாவே என்னவோ பண்ணுது சுபி.. அது எனக்கே புரியாம தான் அன்னிக்கு ரொம்ப கோவமா ரியாக்ட் பண்ணிட்டேன்.. நானும் ரொம்ப பேசிட்டேன் தான்.. உன் பக்கமும் நியாயம் இருக்கும்னு யோசிக்கல..
நான் என்னோட காதலை கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட சொன்னா சர்ப்ரைஸா இருக்கும்னு நினைச்சேன் சுபி. ஆனா உன் மனசில இவ்வளோ ஏக்கம் இருக்கும்னு நான் நினைக்கல.. ஐம் சாரிடா..” எனவும் தன் விரல் கொண்டு அவன் வாயை மூடினாள் சௌபர்ணிகா..
“ப்ளீஸ்.. நீங்க எல்லார்கிட்டவும் கேட்டதெல்லாம் போதும்.. என்கிட்ட ஏன் சாரி சொல்றீங்க..” என,
“சரி வேறென்ன சொல்ல..” என்றான் உரிமையாய்..
அவளுக்கும் என்ன சொல்வது என்று தெரியாது அவன் முகம் பார்க்க, அவன் பார்வையும், அவன் குரலும் அவனது எண்ணத்தை அவளது இதயத்திற்கு கடத்த, அவளையும் அறியாமல் பார்வை தாழ்ந்து அவன் நெஞ்சிலே முகம் பதித்து கொண்டாள்.. அவள் நிலை உணர்ந்தவனோ அவளை சீண்டும் பொருட்டு
“ஓய்!! பேச்சு பேச்சா தான் இருக்கணும்.. கேட்டதுக்கு பதில் சொல்லு..” என்றான் மிரட்டலாய்..
“வாத்தியார் புத்தி உங்களை விட்டு போகுதா?? எப்ப பாரு கேள்வி தான்…. நீங்க கேட்டுக்கிட்டே இருங்க.. எனக்கு தூக்கம் வருது..” என்று அவள் பிகு செய்ய,
வேண்டாம் என்று கூறியும் சர்வேஷ் பிடிவாதமாய் கொடுத்த மாத்திரையும், அவனது அணைப்புமே சௌபர்ணிகாவின் கண்களை சொருக செய்தன..
சர்வேஷும் அதை உணர்ந்தே இருந்தான்.. இப்பொழுது தான் அனைத்தும் சரியாகி உள்ளது.. இன்றே வேறு எதையும் தொடங்க வேண்டாம். இயல்பாய் நடக்கும் போது நடக்கட்டும் என்றெண்ணி அவளை அணைத்தது போலவே படுத்தவனை உறக்கமும் அணைத்துக்கொண்டது..