அத்தியாயம் இருபத்தி நான்கு:

வீடு வந்து சேர்ந்த போது இருவருக்குமே மிகவும் சந்தோஷமான மனநிலைமை……

சந்தியாவின் மனம் மிக அமைதியாக இருந்தது….. ஏதோ ஒன்று குறைவது போல, தான் வெற்றியை இந்த திருமணத்தை நோக்கி அவனால் விலக முடியாத படி தள்ளி விட்டு விட்டோமோ என்று இருந்த மனநிலைமை இப்போது இல்லை…… 

அகத்தின் சந்தோசம் முகத்திற்கு இன்னும் ஜொளிப்பை கொடுக்க தேவதையாய் மிளிர்ந்தாள்.  

வீடு வந்தவர்கள் உணவருந்தும் வரை காத்திருந்து, மீனாட்சி அவர்களுக்கு திருஷ்டி சுற்றி போட்டார்.

“ஏற்கனவே அவளுக்கு உடம்பு சரியில்லை, கொஞ்ச நாளைக்கு வெளில கூப்பிட்டுக்கிட்டு சுத்தாதடா, கண்ணு படும்”, என்றார்.

“அம்மா! அவங்க தோணி துலங்கி இன்னைக்கு தான் வெளில போனாங்க! நீ ஆரம்பிக்காத!”, என்றான் ஞானவேல்.

“உங்களுக்கு என்னடா தெரியும், கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது”, என்றார் பெரியவராக……. “என் மருமக எவ்வளவு அழகுடா”, என்றார்.

ஞானவேலும் அதை உணர்ந்தான்……. சந்தியா மிகவும் அழகு…… அதுவும் இந்த உடைகளில் அவள் அந்த வீட்டிற்கே பொருந்தவில்லை. அவர்கள் நிச்சயம் சந்தோஷமாக இருக்க வேண்டும்…. எதுவும் நிர்பந்தமாக இருக்க கூடாது, தன்னால் எதுவும் குளறுபடி நடந்திருக்கக் கூடாது என்று மனம் பிரார்த்தித்தது,    

வெற்றியை அவன் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் வெற்றிக்கு படிப்பு இல்லையே…. அது ஒரு குறை தானே…. தமிழே வெற்றிக்கு தடுமாற்றம்….. இதில் ஆங்கிலம் எல்லாம் ஏது……

சந்தியாவின் வாழ்க்கை முறை மாறி விட்டதே….. வெளிநாட்டு வாழ்க்கை வேறல்லவா….         

அவனானால் வெற்றியின் முகத்தை ஆராய, எப்போதும் போல தான் இருந்தான். சந்தியாவின் முகம் மிகவும் அமைதியாக நிர்மலமாக இருந்தது.

“இவங்க சந்தோஷமா இருக்காங்களா? இல்லையா? தெரியலையே!”, என்று ஞானவேல் தான் மிகவும் கவலைப் பட்டு போனான்.     

அவன் கவலைகள் அவசியமற்றது என்று தெரிவிப்பது போல வெற்றியோ சந்தியாவோ எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

இருவருமே மனதளவில் மிகவும் பக்குவப்பட்டவர்கள்.

ஞானவேல் தங்களை பார்வையால் அளப்பதை பார்த்த வெற்றி, “இன்னாடா”, என்றான்.

“ஒன்னுமில்லை”, என்று ஞானவேல் சொல்ல,

“சும்மா சொல்லுடா!”, என்று வெற்றி அதட்ட….

சந்தியா அருகில் இல்லாததை உறுதி செய்துக் கொண்டு, “நீயும் சந்தியாவும் சந்தோஷமா இருக்கீங்க தானே. எதுவும் அவங்களுக்கு உன்னை பிடிக்காம இல்லையே”, என்று கேட்டே விட்டான்.

வெற்றி ஞானவேலை முறைக்கவும்……. ஞானவேலுக்கு எதற்கு வெற்றி முறைக்கிறான் என்று தெரியவில்லை.

“என்ன வெற்றி?”,

“என்ன தப்பு பண்ற நீ…… யோசி!”, என்றான் கடுமையான குரலில்…..

அப்போதும் ஞானவேலுக்கு புரியவில்லை…. வெற்றியின் இந்த கடுமை ஏதோ பெரிய தவறென்று காட்ட…….

“எனக்கு தெரியலை வெற்றி, சொல்லு”, என்றான்.

“என்ன பேசின? யோசி! அது நான் சொல்லி வரக் கூடாது, உனக்கு தானே வரணும்!”,

“என்ன பேசினேன்? நீயும் சந்தியாவும்……”, என்று சொல்ல ஆரம்பித்தவன்…… நாக்கை கடித்து, “அண்ணி…….”, என்றான்.

வெற்றி ஒரு பார்வை பார்க்கவும்,  

“நிஜமா, சாரி! அது இவ்வளவு நாளா சொன்ன பழக்க தோஷத்துல வந்துடுச்சு, மாத்திக்கறேன்!”, என்றான்.

இதற்கு மேல் ஞானவேலுக்கு தெரிய வேண்டியது என்ன? “இவன் ஓகே! ஆனால் சந்தியா இல்லையில்லை, அண்ணி!”, என்று இப்போது சந்தியாவை ஆராய……

“இப்போ எதுக்குடா அவளை பார்க்குற,  அவகிட்ட உன்னால ஒன்னும் தெரிஞ்சிக்க முடியாது! போய் வேலையை பாருடா…..! அவ காதல் கதையை என்கிட்டே சொல்லும்போது உனக்கு சொல்றேன்”, என்றான்.

“என்ன காதலா?”, என்று ஞானவேல் அதிர,

ஞானவேல் கவலையானதை பார்த்தவன், அதை போக்கும் பொருட்டு,  “என்னை தாண்டா!”, என்று வெற்றி காலர் தூக்க,

வெற்றியின் குதூகல முகத்தை பார்த்த ஞானவேலுக்கும் ஒரு உற்சாகம் தொற்ற…..

“உனக்கு இவ்வளவு ஏத்தம் ஆகாதுடா”, என்றான் கிண்டலாக. 

“அட, நிஜமா……”,

“கல்யாணமே முடிஞ்சிடுச்சு, இப்போ எதுக்கு பில்ட் அப்….. அண்ணி உன்னை லவ் பண்ணினாங்களா, இரு கேட்கறேன்”, என்றவன்…

உடனே, “அண்ணி”, என்று சத்தமும் கொடுத்து விட….

அவன் கூப்பிட்ட வேகத்திற்கு சந்தியாவும் உடன் மீனாட்சியும் வர…. அதற்குள் வெற்றி ஞானவேலின் வாயை  பொத்தியிருந்தான்.

ஞானவேல் விடுபட முயற்சிக்க முடியவில்லை….

சந்தியா வெற்றியை பார்த்த பார்வை, கடற்கரையில் நடந்ததை ஞாபகப்படுத்த, வெற்றிக்கும் புன்னகை…..

அண்ணனையும், தம்பியையும் இப்படி வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த மீனாட்சி அழவே ஆரம்பித்து விட்டார்.

எங்கே மகன்கள் இருவரும் தனித்தனியாக நின்று விடுவரோ என்று இந்த ஒரு வருட காலமாக கவலையில் இருந்தவர்….. இப்போது இருவரும் விளையாடிக் கொள்வதை பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டு அழுதுவிட…

மகன்கள் இருவரும் அம்மாவிடம் ஓடினர்…. “என்னமா நீ?”, என்று கேட்க…. அப்படியே சோபாவில் அமர்ந்து கொண்டார்.

“இன்னா கிழவி நீ ,காபரா பண்ற”, என்றான் வெற்றி.

“என்ன மொழி இது”, என்று நினைத்த சந்தியா அவனை பார்த்தாள்.

“மா, என்ன இது?”, என்று ஞானவேலும் அதட்ட.. “போங்கடா, உங்களுக்கு என்னடா தெரியும், என் மனசு வேதனை!”, என்று அழுகையோடே சிரித்தார். 

“மா, நீ போய் தூங்கு!”, என்று வெற்றி சொல்ல, ஞானவேல் அதற்குள் போய் மீனாட்சியின் படுக்கையை தட்டி, விரிப்பை சரி செய்தான்…..

“சந்தியா அம்மாக்கு கொஞ்சம் பால்!”, என்று வெற்றி சொல்ல……

சந்தியா போய் பால் சுட வைத்து எடுத்து வந்த போது, வெற்றி அம்மாவின் பக்கத்தில் அமர்ந்திருக்க, அம்மாவின் காலடியில்  ஞானவேல் அமர்ந்திருந்தான்.    

சந்தியா பால் கொடுக்க… “எனக்கு வேண்டாம்டா, சொன்னா கேளுங்கடா! ஒரு காபியாவது குடுங்க”, என்று கெஞ்ச….

“இப்போ நீ அழுததுலயே பீ பீ அதிகமாகியிருக்கும், இதுல காபி எல்லாம் கிடையாது…”,

“பீ பீ இருந்தா காபி குடிக்கக் கூடாதுன்னு எவன்டா சொன்னான்”, என்று மீனாட்சி சண்டையிட….

சந்தியா அவர்களின் சண்டையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்… மூன்று பெண்களை பெற்ற தங்களின் அம்மாவை பெண்களான தங்கள் கூட இப்படி கவனிப்பதில்லை, ஆண்மக்கள் எப்படி கவனித்துக் கொள்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீனாட்சி உறங்க ஆரம்பித்ததும் தான், அவர்கள் மக்கள் அந்த ரூமை விட்டு வெளியில் வந்தார்கள்….

ஞானவேல் சமயம் கிடைத்ததும், “பாருங்க அண்ணி, இவன் பெரிய கப்சா விட்டுட்டு திரியறான்…. நீங்க அவனை காதலிச்சீங்கன்னு……  நான் சொன்னதுனால தானே நீங்க இதை பத்தி யோசிக்கவே ஆரம்பிச்சீங்க”, என்று ஞானவேல் சொல்லவும்….

வெற்றியின் புறம் பார்த்தாள், “உங்களுக்கு இது தெரியுமா”, என்பது போல..

வெற்றி வேறு வழியில்லாமல், “தெரியும்”, என்று பார்வையால் உணர்த்த…

“சொல்லுங்க அண்ணி! இவன் சும்மா பீலா தானே விடுறான்…”,  

“அது கப்சாவும் இல்லை, பீலாவும் இல்லை, உண்மை!”, என்று சந்தியா சொல்ல……

“நிஜமாவா?”, என்றான் ஞானவேல்.

“ம்”, என்று சந்தியா சொல்லி நிற்காமல் சென்றுவிடவும்,  ஞானவேலுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

“டேய், எட்றா”, என்றான் வெற்றியை பார்த்து.

“என்னடா”,

“போடாங், எனக்கு இப்போ பார்ட்டி பண்ணியே ஆகணும்…..”,

“எதுக்கு?”,

“ஆமாம், உன் கல்யாணத்துக்கு நான் எவனையும் கூப்பிடலை. என் பசங்க எல்லோரும் அண்ணன் கல்யாணத்துக்கு கூப்பிடாத அளவுக்கு எப்போடா நீ கஞ்சபய ஆனன்னு கேட்கறாங்க….”,

“நீ மூஞ்ச தூக்கி வெச்சிக்கிட்டு சுத்திட்டு இருந்தா, நான் எவனைக் கூப்பிடுவேன் ஒழுங்கா பணத்தை எடு!”,

“முதல்ல நான் பார்ட்டி பண்ணனும், எடு, எடு, பணம் எடு….”,

“டேய்! நேரம் ஆகிடுச்சு! இப்போ எங்க போவ! எல்லாம் அடுத்த வாரம் சனிக்கிழமை போ! முழு செலவும் என்னோடது!”, என்று வெற்றி சொல்ல,

“டேய் அண்ணா, எப்போ இருந்துடா நீ இவ்ளோ நல்லவன் ஆன”,

“இப்போயிருந்து தான்”, என்றான் சிரிப்புடன் வெற்றி…..

“அட்லீஸ்ட் ஒரு பப்காவது பசங்களோட இப்போ எனக்கு போகணும்! பணத்தை எடு!”,

“ஏண்டா? உன் கிட்ட பணமில்லையா?”, என்று வெற்றி கிண்டலடிக்க,

“மகனே, என் பணமெல்லாம் செலவு செய்ய தான் முடியும். இப்படி பார்ட்டி எல்லாம் பண்ண முடியாது…. நீ எடு……”,

 

பாக்கெட்டில் கை விட்டு, வந்த பணத்தை எடுத்து வெற்றி நீட்டவும்.

“தேங்க்ஸ் ப்ரோ…. நீ வீடு பூட்டிக்கோ, என்கிட்டே சாவி இருக்கு”, என்று ஞானவேல் கிளம்பிவிட……

இப்போது சந்தியாவை எதிர்கொள்ள வெற்றிக்கு தயக்கமாக இருந்தது.

எல்லாவற்றையும் பூட்டி சரி பார்த்து அவன் ரூமிற்குள் போக….. சந்தியா கீழே படுத்திருந்தாள்.         

“மேல எழுந்து படு சந்தியா!”,

“இல்லை, இப்போ எனக்கு உடம்பு சரியாகிடுச்சு, நீங்க படுங்க….!”,

வெற்றி பதில் பேசவில்லை, உடை மாற்ற தொடங்கினான். சந்தியா கண்மூடி உறங்க முயல…..

சிறிது நேரத்தில் அவளை அப்படியே தூக்கினான் வெற்றி…… சந்தியா திமிறவெல்லாம் இல்லை……     

 அவனையே விடாமல் பார்த்தாள்….. “சாரி”, என்றான்.

எதற்கு என்று சந்தியா கேட்கவில்லை……

பிறகு அவளைக் கட்டிலில் விட….. உறங்காமல் அமர்ந்து கொண்டவள்… “அப்போ நான் உங்க கிட்ட அன்னைக்கு ஐ லவ் யூ சொன்ன மாதிரி இருந்தது, அப்போ நான் சொன்னேன் தானே…..”,

“ம்”, என்றான்……..

“அப்போ அதுக்கப்புறம் தான் உங்ககிட்ட இந்த மாற்றங்களா”, என்றாள் கண்களில் சிறிது வலியோடு.

“நீ இப்படிக் கேட்டுடக் கூடாதுன்னு தான் நான் நீ பேசினதை தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்கலை…… பாரு! நீ நான் நினைச்சு மாதிரி கேட்டுட்ட….”,

சந்தியா புரியாத பார்வை பார்க்க….

“எனக்கு உன் மேல கோபம் இருந்தது உண்மை தான், எதுக்கு கோபம், உன் வாழ்க்கை நல்லா இருக்கணும், நீ நல்ல, படிச்ச, பெரிய வேலைல இருக்குற மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சிகணும், அதை புரிஞ்சிக்காம என்கிட்டே சொல்லாம கொள்ளாம போயிட்ட இதுக்கு தான் கோபம்”,   

“ஆனா அதுக்காக கல்யாணம் ஆன பிறகு அப்படியே கோவத்தை காட்டுவனா… நீ என் மனைவி தான், உடனே இல்லைனாலும் அடுத்த நாள் இருந்து உன்கிட்ட நல்லா நடக்க தான் நினைச்சேன்”,

“அப்போ தான் நீ இப்படி  சொன்னியா….. அதை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா நான் உன்கிட்ட நல்லா நடந்துகிட்டாலும் நான் சொன்னதுனலா தானேன்னு நீ நினைப்பன்னு தான் சொல்லை….”,

“ஐயோ! எவ்ளோ அறிவு உங்களுக்கு? எவ்வளோ யோசிச்சிருக்கீங்க….., ரொம்ப நல்லவங்க நீங்க”, என்றாள் நக்கலாக அவன் விளக்கங்களை கேட்டு…….

“நீ….. நீயேன்…… என்கிட்டே சொல்லலை”,

“எப்படி சொல்வேன்! தோழி, தோழின்னு சொல்றவர் கிட்ட உங்களை பிடிச்சிருக்குன்னு எப்படி சொல்ல முடியும்….. அதுவும் அது தானான்னு எனக்கே சரியா தெரியாத போது…..”,

“எப்போ தெரிஞ்சது”, என்றான் புன்னகையுடன்…..

“ப்ச், உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆன போது தான் மனசை என்னவோ செஞ்சது. என்னவோ மிஸ் பண்ணிட்ட மாதிரி ஒரு ஃபீல் அப்போ கூட இது லவ்ன்னு தெரியலை…. அப்புறம் நீங்க அகல்யா கிட்ட பேசி மாப்பிள்ளை பார்க்க சொல்லவும்…. அவ என்னை பேசவும்…. இங்க கீர்த்தனா கல்யாணம் போது எல்லாம் அதையும் இதையும் சொல்லவும்….”,

“எங்கயாவது போனா போதும்னு இந்த இடத்தை விட்டு போயிட்டேன்…”,

“அங்க ஊருக்கு போன பிறகு எப்பவும் உங்க ஞாபகம் தான்…. முடியவேயில்லை…. அப்போவே உங்களை பார்க்கணும் போல ஒரு வெறி…”,

“ஆனா கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கீங்க…. அதை விடவும் கல்யாணத்துக்கு கேட்டு வேண்டாம்னு சொல்லியிருக்கீங்க, எப்படி வருவேன்……”,

“வள்ளிம்மா என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க…. என் மனசை தெரிஞ்சிக்கிட்டதும் அவங்க தான்…..”,

“எப்படி தெரிஞ்சிக்கிட்டாங்க……”,

“அதுவா!”, என்று புன்னகையுடன் சொன்னாள், “அக்கௌண்ட்ஸ் எழுதும் போது புது பேனா எடுத்து ஒரு பேப்பர்ல சரியா எழுதுதான்னு எழுதி பார்த்துட்டு, அப்புறம் எழுதினேன், அப்போக் கண்டுபிடிச்சாங்க…..”,

வெற்றி புரியாமல் பார்க்கவும், “உங்க பேரை அத்தனை தடவை எழுதி வெச்சிருந்தேன்”,

“அப்புறம் ரமணன் சாருக்கு போன் செஞ்சு உங்களை பத்தி பேசியிருப்பாங்க போல…. அது கூட எனக்கு தெரியாது…..”,

“அப்புறம் ஒரு நாள் நீங்க வந்தீங்க….. என்னை பார்க்காத மாதிரி போனீங்க, என்னால தாங்கவே முடியலை….”,

“அப்புறம் கல்யாணம் ஆகிடிச்சு…. ஆனா சென்னை விட்டு வந்த நாளா உங்களை நினைக்காம நான் இருந்ததேயில்லை…. எப்போ இது நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது….. ஆனா எனக்கு புரிஞ்சது அங்க இருந்து வந்த அப்புறம் தான்…….”,

“அப்போவும் எனக்கு ஒரு மாதிரி தான் இருந்தது. உங்களை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்துல தள்ளிட்டனோன்னு, அந்த குற்ற உணர்சில தான் அன்னைக்கு மாடில உங்க கிட்ட பேசி, அதை நினைச்சு காய்ச்சல் வந்து….”,

“உங்க மடில படுத்து எனக்கு தெரியாம சொல்லிட்டேன்.. சொன்னதும் எனக்கு தெரிஞ்சது…… ஆனா நீங்க இல்லைன்னு சொன்னதும் ஒரு குழப்பம்”, என்று முழுமையாக சொல்ல…..

எதற்கு என்று தெரியாமல், “சாரி”, என்று வெற்றி சொல்லி அவளை ஆதரவாக அணைத்துக் கொள்ள…….

மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் சந்தியாவின் விழிகளில் இருந்து பொழிய ஆரம்பித்தது….

“ஏய், எதுக்கு அழற?”, என்று வெற்றி அவளை விலக்கிக் கேட்கவும்,

“சொல்லத் தெரியலை, ஆனா ரொம்ப பயந்து இருந்தேன், இனிமே எனக்கு வாழ்க்கையே இல்லாத மாதிரி ஒரு நினைப்பு…. எதுக்குடா இருக்கணும் நம்மன்னு கூட சில சமயம் அங்க ஊர்ல இருந்த போது தோணும்… எங்கம்மாவை நினைச்சிக்குவேன், என் குடும்பத்தை நினைச்சிக்குவேன். ரியல்லி, உங்களை எனக்கு எப்போ இருந்து அவ்வளவு பிடிச்சதுன்னு தெரியலை..”,

“இங்க இருந்து போனதுக்கு அப்புறம் தான் நான் உங்களை இவ்வளவு விரும்பறேன்னு எனக்கே தெரிஞ்சது….. ஒரு மாதிரி ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தேன்…. யார் கிட்ட என்ன பேசறேன்னு கூட தெரியலை….”,

“வரா மேடம் கிட்ட என்ன சொன்னேன், ஏன் இங்க அவங்கம்மா கிட்ட கொண்டு வந்து விட்டாங்க, எதுவும் ஞாபகத்துல இல்லை……”,

“ரொம்ப நாள் கழிச்சு உங்க கல்யாணம் நின்ன போச்சுன்னு தெரிஞ்ச பிறகு தான் கொஞ்சம் நார்மல் ஆனேன்..”,    

“நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருந்தீங்க, என்ன செஞ்சிருப்பேன் சொல்லவே தெரியலை…..”, என்று அவள் கலங்கி சொல்லவும்……….

 

திரும்பவும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்….. “இவ்வளவு காதலா தன் மீது”, என்று இருந்தது…..

வெகு நேரம் அழுதாள்….. 

வெற்றிக்கு என்ன சமாதானம் சொல்வது என்று கூட தெரியவில்லை….

வார்த்தைகளால் சொல்ல முடியாததை, அணைப்பின் மூலம் காட்டினான்.

அப்போதும் வெற்றி தான் அணைத்துக் கொண்டிருந்தான்…. சந்தியா அவனுள் அடங்கி இருந்தாள் தான்….. ஆனால் அவள் அணைக்கவில்லை.. மனதால் மட்டுமே இந்த காதல், வேறு உணர்வுகள் அவளுள் இல்லை…..

ஆதரவு தேடும் குழந்தையாக அவன் மீது படர்ந்திருந்தாள்.

தன்னுடைய தோழமை, தனக்கு ஏதாவது என்றால் உடனே வருவான் என்ற நம்பிக்கை, தன்னுடைய அக்கறை அவள் மீது,  இப்படி சில செய்கைகள் ஆழமாக அவள் மனதில் பதிந்து அது தன் மீது காதலாக மாறியிருக்கும் என்று வெற்றிக்கு தோன்ற தொடங்கியது.

இதைத் தாண்டி வேறு உணர்வுகள் இன்னும் அவள் மனதில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்பது வெற்றிக்கு திண்ணம்.

வெற்றி மீது இருந்து கொண்டே தலையைத் தூக்கி அவன் முகத்தை பார்த்து, “உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கா, உண்மையா சொல்லணும்!”, என்றாள்.

“அது சொல்ல தெரியலை…. ஆனா உன்னை தவிர இனிமே யாரையும் எனக்கு பிடிக்காது, அது எனக்கு நல்லா தெரியும்!”, என்று சந்தியாவின் நெற்றியில் இதழ் பதிக்க.

மீண்டும் அவன் அணைப்பில் வாகாக முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“இப்போ என்மீது நீ இப்படி சாஞ்சிருக்கிறது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!”, என்று சொல்லவும், லஜ்ஜையில் இன்னும் அழுத்தி முகம் புதைக்க….. 

சிறிது சிறிதாக வேறு உணர்வுகள் வெற்றியிடம் ஓங்க ஆரம்பிக்க.

சிறிது நேரம் சந்தியா ஆசுவாசப்பட விட்டவன்…. 

மெதுவாக கொஞ்சும் குரலில், “ஏன் டீச்சரம்மா? எனக்கு பர்த்டே கிஃப்ட் ஒன்னும் கிடையாதா…..”, என்றான்….

வாய் வார்த்தையை உரைக்க… கைகள் வேறு பணியில் இருந்தன. மெல்ல குரலின், பேதமும் விரலின் பேதமும் சந்தியாவிற்கு புரிய….. மெல்லிய நடுக்கம் அவளுள்…

வெற்றி உணர்ந்தாலும் சிறிதும் பின்வாங்கவில்லை….. “என்ன கிஃப்ட் குடுக்கறீங்களா”, என்று குரல் கேட்டாலும், கைகள் பணியினை செவ்வனே செய்ய…. உணர்வுகள் தூண்டி விடப்பட….. அந்த புது வித உணர்வு….. உடலில் மெல்லிய சிலிர்ப்பு…… அதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கி சந்தியா மெல்லிய புது வித மயக்கத்துக்கு போக ஆரம்பித்தாள்.

தெரிந்திருந்தும், அறிந்திராத, உணர்ந்திராத புது வித மயக்கம் சந்தியாவினுள்.  

“என்ன கிஃப்ட் கிடைக்குமா கிடைக்காதா…”, பதில் சொல்லும் நிலையில் சந்தியா இருந்தால் தானே….

“குடுக்கலைன்னா, நான் எடுத்துக்குவேன்”, என்ற வெற்றியின் வார்த்தைக்கு எந்த பதிலும் இல்லை…..

“சந்தியா…..”, என்ற அவனின் அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லை….. தொடருவதா? விடுவதா? என்ற க்ஷ்ண நேர தவிப்பு வெற்றியினுள். விலகி சந்தியாவின் முகம் பார்க்க…… அது முழுவதுமாக மயக்கத்தை காட்ட….

தயக்கங்களுக்கு முழுவதுமாக விடை கொடுத்தான் வெற்றி…… சந்தியா முழுவதும் அவனின் கட்டுப்பாட்டுக்குள்…. மீள முடியாத மயக்கம்…..

 

மனதில் சுகம் மலரும் மாலை இது                                                                       மான்விழி மயங்குது…… இதழில் கதை எழுதும் நேரமிது……    

காலை எப்பொழுதும் போல சந்தியாவிற்கு விடிய, வெற்றி அருகில் இல்லை..

“என்னடா இவன்? இன்னைக்குக் கூட சீக்கிரம் எழுந்து போயிட்டான். இவன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை….”, கே கே என்பதற்கு இன்னும் புதிதாக ஒரு விளக்கத்தை வைத்து, செல்லமாக, “கே கே”, என்று மனதிற்குள் சொல்லி, வெற்றியைப் பற்றிய நினைவுகளை மனதில் அசை போட்டுப் படுத்திருந்தாள்.  

புது அனுபவத்தினால் உண்டான பரவசம் முகத்தில் தெரியாமல் இருக்க வெகுவாக பிரயர்தனப்பட்டு, குளித்து வந்து கடவுளின் முன் சந்தியா தீபம் ஏற்ற… பரபரப்பாக உள்ளே வந்தான் வெற்றி……

“கமிஷனர் சார் அப்பா, அம்மா, வராம்மா எல்லாம் வர்றாங்க”, என்றான்…. வெற்றியின் வீடு பரபரப்பாக….

“போய் முதல்ல ஷர்ட் போடுங்க”, என்று சந்தியா அதட்டிக் கொண்டே அவர்களை வரவேற்க விரைந்தாள்.

வராவின் கை பிடித்து நடந்து வந்தவரை, “தாத்தா!”, என்று விரைந்து பற்றிக் கொண்டாள்.

“வள்ளிம்மா வாங்க, வாங்க, சார் வரலையா மேடம்…. தேஜஸ்வினி எங்க”, என்று வராவை நோக்கிக் கேட்க……

“அவ அவங்கப்பாவோட பைக்ல வர்றா…. நாங்க கார்ல வந்துட்டோம்”, என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…..

ரமணன் அவனின் ஹார்ட்லி டேவிட்சனில் வர…… தேஜஸ்வினி…. அவன் பின்னே, அவளை பிடிக்க ஸ்ருதி, அவளை பிடிக்க ரோஹித் என்று பெரிய பட்டாளத்தோடு வந்தான்.

அவன் பைக் நிற்கவும்……. பயிற்சி செய்யும் பையன்கள் எல்லாம் கமிஷனர் என்றவுடன் ஆர்வம் காட்டி அருகில் வந்தனர்…..

வெற்றி விரைந்து வந்து, “வாங்க சார்”, என்று முகமன் வைக்க…… ரோஹித் இறங்கி, “வணக்கம் மாஸ்டர்!”, என்றான்.

ஸ்ருதியை வெற்றி இறக்கி விட, அவளும், “வணக்கம் மாஸ்டர்”, என்றாள்.

இது சிலம்பம் கற்றுக் கொடுத்த போது வந்த பழக்கம்….. அடுத்து தேஜஸ்வினியை தூக்க முயன்று கையைப் பக்கத்தில் வெற்றி கொண்டு சென்ற போதே, “வீல்…”, என்று தேஜூ கத்த, வெற்றியே ஒரு அடி பின்வாங்கினான்.

சிரித்த ரமணன், “இன்னும் அவளுக்கு உன்னைத் தெரியாதில்லை….. உன் வீட்டம்மாவை கூப்பிடு”, என்றான்…..

“சந்தியா”, என்று வெற்றி குரல் கொடுக்க… அதற்குள் ஸ்ருதி சொல்லி, தேஜூவின் கத்தல் கேட்டு சந்தியா வந்திருந்தாள்…..

“ஹேய், தேஜூக் குட்டி!”, என்று தூக்க கையை நீட்ட அவளிடம் தாவினாள் தேஜஸ்வினி.

அவளைத் தூக்கிக் கொண்டு சந்தியா உள்ளேப் போக……. தன்னுடன் பேச இளைஞர்கள் ஆர்வமாய் இருப்பதைப் பார்த்த ரமணன்….

“நீங்க கன்டினியு பண்ணுங்க, ஜஸ்ட் உள்ள போயிட்டு வந்து மீட் பண்றேன்”, என்று சொல்ல…  

அவர்கள் சென்றதும் தான் பைக்கை விட்டு இறங்கிய ரமணன், வெற்றியை பார்த்து, “என்ன கண்டுபிடிச்சியா, இல்லையா”, என்றான்.

வெற்றி புரியாமல் பார்க்கவும், “இன்னும் கண்டுபிடிக்கலியா”, என்றான்.

ரமணன் சொல்ல வருவது புரிய….. “கண்டுபிடிச்சிட்டேன்”, என்றான் வெற்றி.  

வெற்றியின் தோளில் தட்டிய ரமணன்….. “எஸ், சந்தியாக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருந்ததால தான் இந்த கல்யாணம்……. வரா சொன்னா நான் செய்வேன்! ஆனா வரா சொன்னாங்கறதுக்காக மட்டும் செய்ய முடியாது இல்லையா….”,

“புரிஞ்சதா!”,

“புரிந்தது!”, என்பது போல தலையாட்டினான் வெற்றி.

“ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ வெற்றி! நாம எவ்வளவு தான் வலிமையான மனசு உடையவங்களா இருந்தாலும், நமக்கு ஏதாவது வீக்னெஸ் இருக்கும்……”,

“இப்போ என்னை எடுத்துக்கோ, என்னோட பெரிய வீக்னெஸ் வரா…… வராவோட எந்த விஷயம்னாலும் எல்லா செயல்களும் என்னை மீறி இருக்கும்……”,

“அது மாதிரி தான் சந்தியாவும், ரொம்ப தைரியமான பொண்ணு, ஆனா அவளோட வீக்னெஸ் நீ, உன்னை ரொம்ப விரும்பறா..”,

“புரிஞ்சு நடந்துக்கோ… நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி”,  

“கண்டிப்பா சார்….”,   என்றான் முகம் மலர்ந்து வெற்றி.

“அவ என்னோட வாழ்க்கையில கிடைச்ச பெரிய பொக்கிஷம்…”, எனவும், தான் சரியாகத் தான் செய்திருக்கிறோம் என்று ரமணன் வீட்டினுள் போக வெற்றி அவனை பின்தொடர்ந்தான்.