“உள்ள வாங்க என்னோட செல்லப் பொண்டாட்டி. இந்த வீட்டை நல்லாப் பாத்து உங்களுக்கு பிடிச்சிருக்கானு சொல்லுங்க. அப்புறம் இது யார் வீடுன்னு சொல்றேன்”, என்று சிரிப்புடன் சொன்னான்.
வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு “அழகா இருக்கு பிரபா. பர்னிச்சர் எல்லாம் வாங்கிப் போட்டா சூப்பரா இருக்கும்”, என்றாள் அர்ச்சனா.
“சரி வா முதல்ல சாப்பிடலாம்”, என்று சொல்லி அங்கிருந்த டேபிளில் எடுத்து வைத்தான். அவன் உணவுப் போட்டலங்களைப் பிரித்ததும் அர்ச்சனா அவனுக்கும் அவளுக்கும் எடுத்து வைத்து பரிமாறினாள். இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிடுவது அவ்வளவு சந்தோஸமாக இருந்தது இருவருக்கும்.
உணவை முடித்து விட்டு தோட்டத்தில் வந்து அமர்ந்தார்கள். அங்கிருந்த ஊஞ்சலைக் கண்டு குதுகளித்தவள் அதில் ஏறி அமர்ந்து கொண்டாள். இப்போது மாலை மூன்று மணி தான். வெயில் அடித்துக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும் சுற்றி இருந்த மரங்களால் அந்த இடம் குளுமையாக நிழலாக தான் இருந்தது.
“இந்த இடம் ரொம்ப அழகா இருக்குல்ல பிரபா”, என்று விரிந்த கண்களுடன் கேட்க “ஆமா”, என்று சொன்னவனுக்கும் இன்று இந்த இடம் இன்னும் அழகாக இருப்பது போல தான் தோன்றியது.
“இது யார் வீடு பிரபா? இப்பவாது சொல்லுங்களேன்”
“இது வரைக்கும் என்னோட வீடு. இனி நம்ம வீடு”
“அப்படியா? வீடு ரொம்ப அழகா இருக்கு. சூப்பரா கட்டிருக்கீங்க. இங்க யாரும் வந்தது இல்லையா? நாம தான் பர்ஸ்ட் டைம் வரோமோ?”
“ஆமா, இந்த வீடு கட்டிருக்குற விஷயம் எங்க வீட்ல யாருக்குமே தெரியாது”
“வாட்? என்ன சொல்றீங்க? இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டினது யாருக்கும் தெரியாதா?”
“ஆமா, எனக்கு இப்படி தனிமையா ஒரு வீடு கட்டணும்னு தோணுச்சு. எல்லா வொர்க்கும் முடிஞ்ச பிறகு வீட்ல சொல்லணும்னு நினைச்சேன். அப்புறம் கல்யாணம் பத்தி பேசினாங்க. சரி நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எல்லார்க் கிட்டயும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். ஆனா அப்பா கிட்ட ஒரு தடவை சொன்னேன். ஆனா அப்பா அதை பெருசா எடுக்கலை. சும்மா சொல்றேன்னு நினைச்சிருப்பாங்க போல? இங்க சுத்தி இருக்குற சில வீடுகள்ள நம்ம கம்பெனில வேலை பாக்குறவங்களும் தங்கி இருக்காங்க. என்னைக்காவது ஆஃபிஸ்ல வொர்க் அதிகம் இருந்தா இங்க வந்து ரெஸ்ட் எடுக்கலாம்னு தோணுச்சு. அதான்”
“இவ்வளவு நாள் கழிச்சு வீட்ல சொன்னா எல்லாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா?”
“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு? எங்க அம்மா அப்பாவுக்கு எங்க சந்தோஷம் தான் முக்கியம். இதுல தப்பா நினைக்க எதுவும் இல்லை?”, என்று சொல்ல அதற்கு மேல் அதைப் பற்றி பேசி அந்த நேர இதத்தைக் கெடுத்துக் கொள்ள மனதில்லை என்பதால் அதைப் பற்றி பேசாமல் “ஆமா இங்க உள்ள மரம் எல்லாம் பெருசா இருக்கு எப்படி?”, என்று கேட்டாள்.
“சின்னதா இருக்குற மரம் எல்லாம் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது வச்சது தான். ஆனா இந்த மரம் எல்லாம் பழசு. இதை வெட்ட வேண்டாம்னு சொல்லிட்டேன். வீடு கட்டிருக்குற இடத்துலயும் நிறைய மரம் இருந்தது. அதை வெட்டி வீட்டுக்கு தேவைக்கு யூஸ் பண்ணிக்கிட்டோம்”, என்றான்.
பின் வீட்டைப் பற்றி அவள் பல சந்தேகங்களைக் கேட்க அவன் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து “சரி நேரம் ஆச்சு. கடைக்கு போகலாமா? உனக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு தான் அத்தைக் கிட்ட சொல்லி கூட்டிட்டு வந்தேன்”, என்றான்.
“கொஞ்ச நேரம் கழிச்சு போகலாமா? ஒரு அரை மணிநேரம்”, என்று கெஞ்சலுடன் கேட்டாள் அர்ச்சனா.
“ஏன்?”
“எனக்கு இந்த இடத்தை விட்டு போகவே மனசு இல்லை பிரபா. அதுவும் இந்த ஊஞ்சல் சான்ஸே இல்லை. ரொம்ப அமைதியா நல்லா இருக்கு. அப்புறம் உங்க பக்கத்துல இருக்கும் போது கிடைக்கிற இந்த தனிமை கடைக்கு போனா இருக்காதே?”
“நீ என்ன என் பக்கத்துலயா இருக்க? தள்ளித் தானே இருக்க?”, என்று அவன் மையலுடன் கேட்க அவள் முகம் சிவந்தது. அவளைக் காதலாகப் பார்த்தான் பிரபாகரன்.
“நானா உங்களை தள்ளி உக்காரச் சொன்னேன்? ஊஞ்சல்ல தான் இவ்வளவு இடம் இருக்கே? நீங்களும் உக்காந்து ஆடலாம்”, என்று அவள் எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல “பக்கத்துல வர ஆசை தான். ஆனா பயமா இருக்கு”, என்றான்.
அவனை வியப்பாக பார்த்தவள் “ஏன்?”, என்று கேட்டாள் .
அவள் அருகே சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவன் “இல்லை அத்தை என்னை நம்பி அனுப்பிருக்காங்க. நீயும் என்னை முழுசா நம்பி என் கூட இவ்வளவு தூரம் வந்துருக்க. அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தணும்ல? தனிமையா வேற இருக்கோமா? கிட்ட வந்தா என்னல்லமோ செய்யத் தோணும்”, என்று அவன் சொல்ல சட்டென்று தன்னுடைய கையை நீட்டி தன்னுடைய தளிர் கரத்தால் அவன் வாயை மூடி விட்டாள். அவளே அவளுடையை செய்கையில் திகைத்து தன்னுடைய கரத்தை விலக்கிக் கொள்ள முயல அவன் கரங்கள் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டது.
அடுத்த நொடி இருவருமே பேச்சு மறந்தது போல மௌனமாகி விட்டார்கள்.
“பிளீஸ் விடுங்க”, என்று அவள் நடுக்கத்துடன் சொல்ல அவளுடைய கையை விட்டுவிட்டான். ஆனாலும் இருவருக்கும் சற்று படபடப்பாக தான் இருந்தது.
“சாரி அர்ச்சனா. இது வரைக்கும் நான் இப்படி எல்லாம் இருந்தது இல்லை. இந்த மாதிரி பீலிங்க்ஸ் எல்லாம் தோணினதே இல்லை. இன்னைக்கு தான் என்னவோ புதுசா இருக்கு”, என்று சொன்னான். அவள் அமைதியாக இருந்தாள். அவனை நிமிர்ந்து பார்க்கவே சங்கடமாக இருந்தது.
இருவருக்கும் கிடைத்த தனிமை சற்று அவஸ்தையைக் கொடுக்க “போகலாமா?”, என்று கேட்டாள் அர்ச்சனா.
“இப்ப தான் கொஞ்ச நேரம் கழிச்சு போகணும்னு சொன்ன?”
“அப்ப சொன்னேன், இப்ப போகணும்னு தோணுது”
“கொஞ்ச நேரம் பேசலாம். பிளீஸ்”, என்று சொல்ல அவளும் வேறு ஒன்றும் சொல்ல வில்லை. அமைதியாக இருந்தாள். அவளுடைய அமைதி அவனை பாதிக்க “என் மேல கோபமா?”, என்று கேட்டான்.
அவள் அவனை குழப்பமாக பார்க்க “இல்லை உன் பெர்மிசன் இல்லாம உன் கையை பிடிச்சதுக்கு கோபமான்னு கேட்டேன்? அதான் போகணும்னு சொன்னியா?”, என்று கேட்டான்.
“அபத்தமா உளறாதீங்க. அப்படின்னா கார்ல வரும் போது உங்க தோள்ல சாஞ்சேன். இப்பவும் உங்க வாயை நான் தான் மூடினேன்., அதுக்கு உங்களுக்கு கோபமா?”
“அது எல்லாம் இனிமையான தருணம். அதுக்கு எப்படி கோபப் படுவேன்”
“அப்ப நான் மட்டும் எப்படி கோபப் படுவேன்?”
“அப்ப உடனே போகணும்னு ஏன் சொன்ன?”
“ஏன்னு உங்களுக்கு தெரியாதா?”
“தெரியலையே? சொல்லு”
“ஐயோ ஒண்ணும் இல்லை. இப்ப என்ன கையை பிடிக்கணும் அதானே?”, என்று சொன்னவள் அவனுடைய கரத்தை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டாள்.
தன்னுடைய கைகளுக்குள் அவன் கரங்கள் அடங்கி இருப்பது சிறு குறுகுறுப்பைத் தந்தது அவளுக்கு. சில நொடிகள் கழித்து அவன் கரத்தை விட்டுவிட்டாலும் அவளது இதயம் படபடத்தது.
இரண்டு கரங்களையும் இறுக மூடிக் கொண்டு தனக்குள் ஏற்படும் நடுக்கத்தை குறைக்க முயன்றாள்.
“சரி வா போகலாம். நான் கதவை பூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.
அவளும் தன்னுடைய ஹேன்ட்பேகை எடுக்க வீட்டுக்குள் சென்றாள். கதவைப் பூட்டுவதற்கு முன் “அர்ச்சனா”, என்று அழைத்தான்.
“ம்ம்”, என்ற படி அவனைப் பார்த்தவள் அவன் பார்வையில் இருந்த ஏதோ ஒன்றில் தலை குனிந்தாள்.
“உன்னை ஒரு தடவை இறுக்கமா கட்டிக்கணும்னு தோணுது. செஞ்சிக்கவா?”, என்று கேட்க அவள் முகம் செவ்வானமாக சிவந்தது.
இப்படிக் கேட்டால் அவள் எப்படி பதில் சொல்வாளாம்? அமைதியாக நின்றாள். வெட்கத்துடன் கூடிய அவளது அமைதி சிறிது தைரியமளிக்க அவளை நெருங்கி வந்தவன் அவளை இழுத்து தன்னுடைய நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டான்.
அவளும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். படபடப்பு இருந்தாலும் அடுத்த கட்டத்துக்கு இருவரும் செல்ல வில்லை. சிறிது நேரம் கழித்து மனமில்லாமல் அவளை விட்டு விலகியவன் “வா போகலாம்”, என்று சொல்லி விட்டு வெளிய நடந்தான்.
அவன் கண்ணியத்தை எண்ணி மனதுக்குள் வியந்தவள் சந்தோசமாகவே வெளியே வந்தாள். அவன் கதவைப் பூட்ட அவள் காருக்கு சென்றாள்.