அத்தியாயம் பதினொன்று:

ரீவர்வியு மிர்றர் வழியாக ராஜி செந்திலின் கண்கள் சந்தித்தது சில நொடிகளே. உடனேயே செந்திலின் கண்கள் விலகிவிட்டது.

ராஜி பயணம் முழுவதும் அவ்வபோது அவனை பார்த்தாலும் பின்பு செந்திலின் கண்கள் ராஜியின் புறம் திரும்பவேயில்லை. ராஜிக்கு அவன் வேண்டுமென்றே தான் பார்க்காமல் இருக்கிறான் என்று நன்கு புரிந்தது.

இங்கே இருப்பதே இரண்டு பேர்……….. அதெப்படி சாதாரணமாக கூட பார்க்காமல் இருக்க முடியும். இவன் வேண்டுமென்றே என்னை தவிர்க்கிறான். அப்போது எதற்கு இவன் என்னிடம் காதல் சொன்னான் என்ற தலையாய சந்தேகம் எழுந்தது ராஜிக்கு.

செந்தில் அதற்குள் அவள் காலேஜ்ல கொண்டு வந்து சேர்த்துவிட்டான். அவள் இறங்கும் பொழுது, “சாயந்தரம் எத்தனை மணிக்கு வரணும்”, என்றான்.

“ஏன்? என் காலேஜ் எத்தனை மணிக்கு விடும்னு உனக்கு தெரியாதா? காலேஜ் விடும்போது இங்க வந்து நின்னது எல்லாம் மறந்து போச்சா”, என்றாள்….. தான் அவனை சீண்டுகிறோம் என்று புரிந்தாலும் அவள் அப்படிதான் பேசினாள்.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதா உனக்கு………… அதிகப்பிரசிங்கிதனத்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்து வெச்சிருக்கியா”,  என்றான் செந்தில்.

“நான் நடந்ததை தான் சொன்னேன்”,

“அதான் என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டியே….. அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசற”,

“நான் பிடிக்கலைன்னு சொன்னா…….. நீ சொன்னது இல்லைன்னு ஆயிடுமா”,

“அதுக்கு நான் ரொம்ப வருத்தப்படறேன்னு அன்னைக்கே சொல்லிட்டேன். மறுபடியும் எத்தனை முறை அதை சொல்வ………”,

“ஆங்……….”, என்று இழுத்தவள்…….. “எனக்கு தோணும்போது எல்லாம் சொல்வேன்”,

“ப்ச்! உன்னைத் திருத்த முடியாது……… எத்தனை மணிக்கு வரட்டும்”,

“நாலு மணிக்கு வா………”, என்று அவள் சொல்லி முடித்ததும் உடனே வண்டியை கிளப்பிக் கொண்டு சென்றான்.

அதற்குள் தோழி ஒருத்தி அவளை பார்த்துவிட்டு நெருங்கி வர………… செந்திலை கட்டாயமாக பின்னுக்குத் தள்ளினாள்.

கிளாஸ் போய் அமர்ந்த பின்பு அப்பாவின் செய்கை ஞாபகத்துக்கு வந்தது. செந்தில் இருந்தவரை அந்த ஞாபகம் இல்லை……… இப்போது அது தாக்க, அதை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தாள்.

காலையில் ராஜியும் செந்திலும் காலேஜ் கிளம்பி சிறிது நேரத்திலேயே…….. ஆகாஷ் போன் செய்தான் அண்ணாமலைக்கு.

நேற்றிலிருந்து ராஜி போன் செய்வாள் செய்வாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவள் போன் செய்வதாக காணோம் என்றவுடன் ஒருவேளை இன்னும் அண்ணாமலை வீட்டில் விஷயத்தை சொல்லவில்லையோ என்று நினைத்து அவருக்கு அழைத்தான்.

“வீட்ல விஷயத்தை சொன்னீங்களா……… இல்லையா?”, என்றான்.

அவன் எதை பற்றி கேட்கிறான் என்று புரிந்தவுடனே, “சொல்லிட்டேன்”, என்றார் அண்ணாமலை.

பிறகு ஏன் ராஜி தன்னிடம் பேசவில்லை?……… தான் அவ்வளவு சொல்லியும்…….. எப்படியும் கோபமாக தான் இருப்பாள் என்று தெரியும்…. தானாக அவளிடம் பேசினால் தான் போல என்று நினைத்தவன்………. “ராஜி இருந்தா குடுக்கறீங்களா, நான் அவ கிட்ட பேசணும்”, என்றான். 

“அவ காலேஜ் போயிட்டா”, என்றார்.

“என்ன காலேஜ் போயிட்டாளா? எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது…….. அதை பற்றி தெரிந்த அதிர்ச்சியில் வீடு அல்லோலகல்லோலப்படும் என்று நினைத்தால் அவள் காலேஜ் போய்விட்டாளா”, என்று நினைத்தவன்…….

“என்ன நடக்குது அங்க”, என்றான் அண்ணாமலையிடம்……. “ஒண்ணும் பிரச்சனையை ஆகலையா”,

“பிரச்சனை தான் இருந்தாலும்……… அவங்க அவங்க அவங்கவங்க வேலையை பார்க்கிறாங்க”, என்றார்.

“அக்கா சண்டை போடலை”, என்றான்.

அவன் அனிதாவை பற்றி கேட்கிறான் என்று நினைத்த அண்ணாமலை…………. “அவ எனக்கு போனே பண்ணலையே……….. வீட்ல சம்மதிச்சப் பிறகு பேசுங்கன்னு சொல்லிட்டாளே”, என்றார்.

பல்லைக் கடித்த ஆகாஷ்……….. “நான் தேவிகா அக்காவை பத்தி கேட்டேன்”, என்றான்.

“சண்டைப் பிடிச்சா”, என்றார்.

“அது யாருக்கு தெரியாது”, என்று மனதிற்குள் பேசியவன்………. “அப்புறம் என்ன பண்ணினாங்க”,

“ஒண்ணும் பண்ணலை”, என்றார்.

“என்னடா இது? வீட்ல பிரளயமே வெடிச்சிருக்கும்……….. இந்தாளை வீட்டை விட்டே துரத்தி இருப்பாங்க இல்லை, அவங்க போக முயற்சி செய்வாங்க………. இந்தாளு டென்சனா இருப்பாருன்னு பார்த்தா………. இவன் கூலா ஒன்னுமே நடக்கலை, என் பொண்டாட்டி சமைக்கறா……… பொண்ணு காலேஜ் போயிருக்கான்னு சொல்றான். என்னடா நடக்குது………”, என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

“ராஜி உங்ககூட சண்டை போட்டாளா”,

“அவ என்கிட்டே பேசவே இல்லை”,

“அப்போ உங்களுக்கும் எங்கக்காக்கும் கல்யாணம்?”,

“நடக்கும்”,

“அவங்க சம்மதிக்கலைன்னா”,

“சம்மதிக்கலைன்னாலும் நடக்கும்”,

“அதுக்கு அனிதா ஒத்துக்க மாட்டாளே”,

“ரொம்ப நாள் தள்ளி போட முடியாது……. உங்கக்கா கிட்ட பேசு ………அவ சம்மதத்தை வாங்கு”, என்றார்.

“அவ உங்ககிட்ட சம்மதம் வாங்க சொன்னா………. நீங்க அவளையே திரும்ப கன்வின்ஸ் பண்றீங்க”, என்றான் காட்டமாக…….

“என்ன பேசற நீ? யாரவது புருஷன் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சம்மதம் கொடுப்பாங்களா……….. இது எங்கயாவது நடக்குமா ?அவங்களை மீறி தான் கல்யாணம் பண்ற மாதிரி இருக்கும் போல”, என்றார்.

“நான் கல்யாணம் பண்ணிகிறேன்னு தானே சொல்றேன்……… அப்புறம் எதுக்கு உங்கக்கா இங்க உள்ளவங்க சம்மதம் வேணும்னு அடம் பிடிக்கிறா…….”,

“ஏன்னா அவ செய்யறது தப்புன்னு அவளுக்கு தெரியும்….”,

“இனிமே தெரிஞ்சி என்ன ஆகப்போகுது…… எனக்கென்னவோ தேவிகா ஒத்துக்குவான்னு தோணலை”, என்றார்.    

ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்து நின்றுவிட்டது போல இருந்தது ஆகாஷிற்கு….  

“என்ன செய்வது”, என்று தெரியவில்லை.

அவன் ஊருக்கு கிளம்ப இன்னும் இருபது நாட்களே இருந்தன. அதற்குள் நிச்சயம் அனிதாவின் திருமணத்தை முடித்தாக வேண்டும்.   

“ராஜி வந்தவுடனே எனக்கு போன் பண்ணி குடுக்கறீங்களா”, என்றான்.   

“சரி”, என்று அவனிடம் சொல்லி போனை வைத்தார்……

ஆகாஷ் இப்போதும் அவரிடம் செந்திலை பற்றி அவன் ராஜியை பற்றி பேசித்திரிவதை சொல்ல மறந்தான்.

அண்ணாமலைக்கு அனிதாவிடம் பேசவேண்டும் போல தோன்ற அவளுக்கு அழைத்தார். நேற்றிலிருந்து பலமுறை அழைத்துவிட்டார் அவள் எடுப்பதாக காணோம். இப்பொழுதும் எடுக்கவில்லை.

“ப்ச்! இவ என்னை வாழவும் விடமாட்டா……. சாகவும் விடமாட்டா……..”, என்று கோபமாக முணுமுணுத்தார்.   

அங்கே போன் பேசி வைத்தவுடனே ஆகாஷ் சென்று நின்ற இடம் அனிதா தான்.

அவனை பார்த்தவள், “என்ன ஆகாஷ்”, என்றாள்.

அவன் பதில் எதுவும் பேசாமல் தன் அக்காவையே பார்த்துக்கொண்டிருந்தான். “என்ன குறை இவளுக்கு……….. அழகில்லையா…….. பணமில்லையா……. அந்தஸ்து இல்லையா……… ஏன் அந்த அண்ணாமலையை போய் ஆசைப்பட்டாள்……. இப்போது அவருடைய குழந்தைக்கும் தாயாகி நிற்கிறாள்…….. கணவர் இறந்தவுடன் இரண்டாம் திருமணம் செய்துகொள் என்று எத்தனை முறை எத்தனை விதமாக எத்தனை பேர் சொல்லியிருப்போம். கேட்டாளா……..”,

“எனக்கு என் குழந்தை நந்தன் மட்டும் போதும்”, என்று உறுதியாக மறுத்துவிட்டு இப்படி சில வருடங்களாக இந்த அண்ணாமலையிடம் மயங்கி நிற்கிறாளே……

மயங்கி இருக்கிறவள், தப்பும் செய்கிறோம் என்ற மன உளைச்சலில் உடம்பையும் கெடுத்துக்கொள்கிறாளே………..

ஆம்! அண்ணாமலையுடன் வாழ்க்கை அனிதாவிற்கு எந்த அளவு சந்தோஷத்தை கொடுத்ததோ அந்த அளவுக்கு மன வேதனையையும்  கொடுத்தது.

தான் தப்பு செய்கிறோம் என்ற நினைவுகள் அவளுக்கு மன உளைச்சலை கொடுக்க மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானாள்……. 

அது mental stress and depression ஆக மாற……. அவள் ஒரு ஆரம்பகட்ட மன நோயாளி ஆகும் நிலையில் இருந்தாள். விட்டால் அதற்க்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆகாஷிற்கு தெரியும்……. இதிலிருந்து அவளை அவன் வெளிக்கொணர்ந்தே ஆகவேண்டும்.  

அதற்காக அவள் சிகிச்சையிலும் இருக்க……….. அவனை பார்த்துக்கொண்டிருக்கும் கண்கள் ஜீவனற்று தெரிந்தன.

“எப்படியாவது அவளுடைய வாழ்க்கையை நான் சீர்ப்படுத்தியே ஆகவேண்டும்……….”,

“என்னடா என்னை பார்த்துகிட்டே நின்னுட்டு இருக்க?”, என்று புன்னகைக்க முயன்றாள் அனிதா……………. புன்னகை வரவில்லை……….        

இவளுக்கு என்ன பார்த்து அண்ணாமலையிடம் பிடித்தம் வந்தது……… அதுவும் அடுத்தவளின் கணவன் என்று தெரிந்தபிறகும்….. 

“சாப்டிட்டியா”, என்றான்……

“இல்லை! இன்னும் சாப்பிடலை”,

“ஏன்? காலைல பத்துமணியாக போகுது”,

“சாப்டா வாமிட் வருது”, என்றாள்.

“பரவாயில்லை அனி வாமிட் வந்தாலும் சாப்பிடு……… இப்படியிருக்கும் போது சாப்பிடாம இருக்கக் கூடாது”, என்றான் கனிவாக.

“சரி! சரி!”, என்று தலையாட்டிவிட்டு அப்படியே அமர்ந்திருந்தாள். நைட்டியில் இருந்தாள்……… உடை மாற்றவில்லை…….. தலை சீவவில்லை………… அவனின் கண்களுக்கு அவனின் அக்கா கலைந்த ஓவியமாக தான் தெரிந்தாள்.  

“வா நீ! சாப்பிடலாம்!”, என்று அவளின் கையை பிடித்து எழுப்பிக்கொண்டு போனான். “சாப்பிட்டுட்டு ட்ரெஸ் சேஞ் பண்ணி நீட்டா இருக்குற…… இப்படி இருக்கக்கூடாது”, என்று சொல்லிக்கொண்டிருந்த போதே………. அவள் போன் அடித்தது……… அவள் எடுக்கவில்லை.

மறுபடியும் மறுபடியும் அடித்தும் அவள் எடுக்கவில்லை……….

“யாரு”, என்றான் ஆகாஷ்……..

“அவங்க பண்றாங்க”, என்றாள் அனிதா…… 

“எடுக்க வேண்டியது தானே”,

“இல்லை…… நான் எடுக்கலை”, என்றாள்.

“இருக்கிற உறவையும் மேல மேல சிக்கல் ஆக்கிக்காத”,

“அவரோட மனைவி இன்னும் எங்க கல்யாணத்துக்கு சம்மதம் கொடுக்கலையே”,

“அவங்க மனைவி சம்மதம் கேட்டா பழகினீங்க…….. இல்லையே இப்போ மட்டும் எதுக்கு எதிர்பார்க்குற”,

“பார்த்தியா நீயும் என்னை குத்திக்காட்டற”, என்று அழ ஆரம்பிக்க…….

அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு…….. “ப்ச் விடு! உடனே அழ ஆரம்பிக்காத………. என்ன செய்யறதுன்னு பார்க்கலாம்”, என்று அவளை சமாதானப்படுத்தியவன்……….. அவளை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்தான்.

“நந்து எத்தனை மணிக்கு ஸ்கூல் கிளம்பினான்”, என்று பேச்சை மாற்றினான்.

கல்லூரியில் இருந்த ராஜ ராஜேஸ்வரிக்கு மாலைவரையிலும் அவள் நினைக்கக்கூடாது என்று நினைத்தாலும் வீட்டின்  நினைவுகளே அவளை ஆக்கிரமித்து.

கூட இருந்த தோழிகள் கூட கேட்டனர், “ஏன் ராஜேஸ்வரி ஒரு மாதிரி டல்லா இருக்க?”, என்று……..

“இல்லையே! நான் நல்லா தானே இருக்கேன்”,

“நீ நல்லா இருந்தா இதுவரைக்கும் லெக்சரர்ஸ் பார்த்து கமெண்டா அடிச்சு தள்ளியிருப்ப……… இன்னைக்கு வாயே திறக்கலை……. என்ன ஆச்சு?”,

“லேசா வயிறு வலி……….. அதனால கூட இருக்கும்”, என்று தோழிகளின் வாயை அடைத்தாள்.

மாலை இவள் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது செந்தில் சுமோவுடன் இருந்தான்.

அவள் வந்து ஏறி அமர்ந்ததும் வண்டி கிளம்பியது. காலையில் இருந்து தன் தந்தையின் செய்கையை பற்றி……….. தன் அம்மாவின் எதிர்காலத்தை பற்றி………. இது மற்றவர்களுக்கு தெரிய வரும்போது அதனால் ஏற்படும் விளைவுகள்……….. இப்படியே யோசித்துக்கொண்டு இருந்ததினால் அவளுக்கு மிகுந்த களைப்பாக இருந்தது.

விஷயம் கேள்விப்பட்ட போது கூட தைரியமாக எதிர்கொள்ள முடிந்த அவளால்…………. இப்போது அதைப்பற்றி நினைக்க நினைக்க மனது ஆறவில்லை.

அவளும் எதுவும் செந்திலிடம் பேசவில்லை, அவனும் பேசவில்லை. இருந்தாலும் அவளின் முகம் பார்த்தே செந்திலுக்கு தெரிந்தது……….. அவள் அப்செட்டாக இருக்கிறாள் என்று.

“என்ன ஆயிருக்கும் காலேஜ்ல லெக்சரர் யாரவது திட்டிட்டாங்களா?………. இல்லை பிரிண்ட்ஸ் யாரோடையாவது சண்டையா?”, என்று அவளையே தான் கவனித்துக்கொண்டு வந்தான்.

அவன் தன்னை கவனிக்கிறான் என்று கூட கவனிக்கவில்லை ராஜி. காலையில் அவளுக்கு இருந்த மனநிலை இப்போது இல்லை. வெளியே வெறித்த படி பார்த்து வந்தாள். அவளின் பார்வை செந்திலை அசைத்தது……..

அவளை பார்த்த தினத்தில் இருந்து அப்படி செந்தில் அவளைப் பார்த்ததே இல்லை. என்ன பிரச்சனை என்று கேட்க வேண்டும் போல இருந்தது……….. இருந்தாலும் அவள் எதாவது இடக்காக பேசுவாள் என்பதால் அமைதி காத்தான்.

சிறிது நேரத்தில் உறங்கியே விட்டாள்.

வண்டி வந்து வீட்டின் முன் நின்றபோது கூட உறக்கம் கலையவில்லை.

“யப்பா! சரியான கும்பகர்ணியா இருப்பா போல”, என்று நினைத்துக்கொண்டே……… “ராஜி”, என்று அழைத்தான்.

அதற்கும் அசையவில்லை……. மறுபடியும், “ராஜி”, என்று சத்தமாக அழைக்க………. அது சற்று வேலை செய்தது. உறக்கம் கலைந்து எழுந்து மலங்க மலங்க விழித்தாள்.

இன்னும் அவள் உறக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வரவில்லை என்றுணர்ந்தவன்……….. “ராஜி வீடு வந்துடுச்சு”, என்றான்.    

சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அப்போதுதான் தான் காரில் உறங்கிவிட்டது உறைத்தது.

வெளியே நின்றிருந்த அண்ணாமலை அவள் இறங்குவதற்கு வந்து கார் கதவை திறந்துவிட……….. அந்த பக்கம் இறங்காமல் அதற்கு எதிர்ப்பக்கமாக இறங்கினாள்.

இதை பார்த்த செந்திலுக்கு புரிந்துவிட்டது இவளுக்கு அண்ணாமலைக்கும் தான் சண்டை போல……….. காலையிலும் எதுவும் சொல்லாமல் வந்தாள்……. இப்போது அவள் இறங்குவதற்கு அவர் கதவை திறந்துவிட்டாலும் ஒன்றும் சொல்லாமல் போகிறாள் என்று.

அண்ணாமலை மேல் பிரச்சனையை இருக்கும் என்று சற்றும் செந்தில் நினைக்கவில்லை………… “என்ன பெண்ணோ?”, என்று ராஜியை பற்றி குறையாக நினைத்துக்கொண்டே வண்டியை நிறுத்தப் போனான்.

ராஜியின் செய்கையில் அண்ணாமலை அப்படியே நின்றுவிட்டார்………. ராஜி தன்னிடம் சண்டை போடுவாள்……… தன்னைத் திட்டுவாள்………… கண்டிப்பாக அதை தன்னால் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும்…….. அவள் முன் தான் கூனிக்குறுகி நிற்கப் போறோம் என்று நினைத்துக்கொண்டு இருந்தார்.

ஆனால் ராஜியின் இந்த புறக்கணிப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. அது இன்னும் கடுமையாக தாக்கியது.   நேற்று வரை அவரிடம் அப்படி செல்லம் கொஞ்சிய மகள் இன்று தன்னை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. ஒரு பொருட்டாய் கூட மதிப்பதில்லை.

தேவிகாவும் இவரிடம் கோபமாக இருக்கிறார் தான். நேற்று இருந்து வார்த்தைகள் சாட்டையாய் சுற்றி சுற்றி வருகிறது தான். அது கொடுக்காத வலியை இந்த புறக்கணிப்பு அதிகம் கொடுத்தது.

அந்த வலி அவரின் இயலாமை அவருக்கு ஒரு கோபத்தையும் கொடுக்க ஆரம்பித்தது.

அவர் இங்கே கோபத்தோடு அமர்ந்திருந்த போது அனிதாவிடமிருந்து போன் வந்தது.

அவர் பேசுமுன்பாகவே, “சாரி, சாரி, சாரி”, என்றாள்.

போன் எடுக்காததற்கு சாரி கேட்கிறாள் என்று நன்கு புரிந்தது அண்ணாமலைக்கு…….

அவர் அமைதியாகவே இருக்க…….. “அக்கா கிட்ட பேசிணீங்களா”, என்றாள்.

“எதை பத்தி”,

“ஆகாஷ் ராஜி கல்யாண விஷயமா”,

“உன் தம்பி நம்ம கல்யாண விஷயமா பேசுங்கன்னு சொல்றான்…… நீ அவன் கல்யாண விஷயமா பேசுங்கன்னு சொல்ற……… நான் எதைக் கேட்கட்டும் சாவடிக்கிறீங்க ரெண்டு பேரும்……..”,

“இங்க இன்னொருத்தி என்னை வார்த்தையாலேயே கொல்றா…….. என் பொண்ணு என்கிட்ட பேசாமயே கொல்றா……. நான் என்ன தான் பண்றது”,

“இதெல்லாம் நம்ம எதிர்பார்த்ததுதானே”,

“எதிர்பார்த்ததுதான் இருந்தாலும் தாங்க முடியலை”, என்றார் குரல் உடைந்து போனவராக……….

“எனக்கென்னவோ ரெண்டு கல்யாணத்துக்கும் தேவி சம்மதிக்கவே மாட்டான்னு தான் தோணுது”,

“ஆகாஷ் ரொம்ப நல்ல பையன்! ராஜியை அவனுக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்”,

“அது கூட இருந்து பார்த்த உனக்கும் எனக்கும் தெரியும்………. ஆனா தேவி…….. அவன் உன் தம்பின்ற ஒரே காரணதுக்காகவே ஒத்துக்க மாட்டா”,

“பட் யு நோ? ஆகாஷ் இஸ் எ பெஸ்ட் சாய்ஸ் ஃபார் எனி கேர்ள்”,

“ஆனா அது இவளுக்கு புரியாது”

“புரியவைங்க…… நீங்க தானே நம்ம உறவு அவ திருமணத்தை அவ திருமண வாழ்க்கையை பாதிக்கும்னு கவலைப்பட்டீங்க…. ஆகாஷ் அவளை நல்லா பார்த்துக்குவான்…….”,

“இப்போதைக்கு நம்ம கல்யாணம் தான் முக்கியம் அனி…….. இல்லைனா உன் வயிறு காட்டிக்கொடுத்திடும். முதல்ல நம்ம அதை பத்தி ஒரு முடிவெடுப்போம். யோசிச்சுப்பார் உங்கப்பாவுக்கு எவ்வளவு பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும்……….. அதை விட நந்தா அவனுக்காகவாவது நம்ம உறவுக்கு சமுதாயத்துல ஒரு அங்கீகாரம் ஏற்படுத்திக்கணும்…..”

“ரெண்டுமே அக்கா கைல தான் இருக்கு……. அவங்ககிட்ட பேசுங்க”, என்று சொல்லி போனை வைத்தாள் அனிதா…………

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ஆகாஷிடம் இருந்து மூன்று மிஸ்டு கால்கள் வந்துவிட்டன……..

அவன் ராஜியுடன் பேசுவதற்கு தான் அழைப்பானாயிருக்கும் என்று நினைத்துக்கொண்டே போனை எடுத்தார் அண்ணாமலை.

“அனிதா தான் பேசிட்டு இருந்தா”, என்று அவனிடம் விளக்கமும் கொடுத்தார்.

“ராஜி வந்துட்டாளா”, என்றான் ஆகாஷ்.  

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தா……… நான் செந்திலை தான்  வண்டியை எடுத்துட்டு போய் கூட்டிட்டு வர சொன்னேன்”, என்று அவர் சொன்னதுதான் தான் தாமதம் ஆகாஷிற்கு செந்திலின் செய்கைகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து அவனை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

“என்ன சொல்றீங்க”, என்று கோபமாக கேட்டான் ஆகாஷ்.

அவன் எதற்கு கோபப்படுகிறான் என்று புரியாத அண்ணாமலை…….. “ஏன், என்ன விஷயம்?”, என்றார் அவனின் கோபத்தை உணர்ந்து.

“அவன் ஊர் பூரா நம்ம பொண்ணை பத்தி தப்பா பேசிட்டு திரியறான்…… நீங்க அவன் கூடவே அனுப்பியிருக்கீங்களே”, என்றான்.

“என்ன? என்ன சொல்ற ஆகாஷ்?”, என்றார் பதட்டமாக அண்ணாமலை.

“ஆமா! இப்போ என்னன்னு கேளுங்க! அவனும் உங்கபொண்ணும் காதலிக்கறதாவும் ராஜி அவனோட ஆளுன்னும் பேசிட்டு திரியறான். உங்க ஊரு டீக்கடைக்காரன் என்கிட்டே சொல்றான்…….. ஒரு நாள் உங்க ஊருக்கு வந்த எனக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு……….. அந்த ஊர்லயே இருக்குற உங்களுக்கு தெரியலை”,

“என்ன ராஜி காதலிக்கிறாளா”, என்றார் அதிர்ச்சியாக……  

“இல்லையில்லை”, என்று அவசரமாக மறுத்தவன்……….. “ராஜிக்கு அந்த மாதிரி எல்லாம் எந்த எண்ணமும் இல்லை எனக்கு நல்லா தெரியும்…….. இந்த பையன் தான் சொல்லிட்டிருக்கான்”,

“முதல்ல அவனை கூப்பிட்டு கண்டீங்க……….. அவனை வேலையை விட்டு அனுப்புங்க………… இன்னும் அவன் அங்க இருக்கிறது நல்லது இல்லை”,

அண்ணாமலைக்கு மிகுந்த அதிர்ச்சி………. செந்தில் அப்படியெல்லாம் செய்யக்கூடியவன் போல அவருக்கு தெரியவில்லை………….. ஆனால் ஆகாஷ் நன்றாக தெரியாமல் சொல்ல மாட்டான்.

மனதிற்குள் கோபம் ஏற ஆரம்பித்தது….. என்ன நம்பிக்கை துரோகம் என்று யோசிக்க வைத்தது…… இவரின் நம்பிக்கை துரோகம் இவருக்கு நினைவிற்கு வரவில்லை………

கோபத்தோடு சீனியப்பனை அழைத்தார்…….    

கீழே நிறைய ஆட்கள் இருந்ததினால் அவரால் பேசமுடியவில்லை அவரை மேலே அழைத்துக்கொண்டு போனார்.

“எங்க உங்க பையன்”, என்றார்.

அவரின் குரலிலேயே ஏதோ சரியில்லை என்று சீனியப்பனுக்கு புரிந்தது…….. “அவன் இப்போதான் ராசிபுரத்துக்கு சரக்கு கொண்டு போய் இருக்கான்”,

அண்ணாமலையின் முகம் கோபத்தில் ஜொலித்தது. அவர் முயன்று கோபத்தை கட்டுபடுத்தி நின்றார்.

“ஏங்க என்ன விஷயம்”, என்றார் சீனியப்பன்.

“உங்க பையன் ஊருக்குள்ள ராஜியும் அவனும் காதலிக்கறதா சொல்லிட்டு திரியறான்”, என்று எந்த பீடிகையும் இல்லாமல் பட்டென்று விஷயத்தை உடைத்தார்.

“இல்லைங்க செந்தில் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். அதுவும் ராஜி நான் வளர்த்த பொண்ணு……….. அவளை பத்தி அப்படியெல்லாம் சொல்ல மாட்டான்”, என்றார் நிச்சயமாக…..

“இல்லை! எனக்கு ரொம்ப தெரிஞ்ஜவங்க சொன்னாங்க………. விஷயம் பொய்யா இருக்க வாய்ப்பேயில்லை”.

“ராஜி………..”, என்று அவளை சத்தம் போட்டு கூப்பிட்டார் அண்ணாமலை…..

ராஜிக்கு அவரின் குரல் கேட்டாலும் அவள் வெளியே வரவில்லை.

அவரின் குரலுக்கு என்னவோ ஏதோவென்று பதறி தேவிகா தான் வெளியே வந்தார்.

“ராஜியை கூப்பிடு”, என்று கர்ஜித்தார் அண்ணாமலை.

மற்றவர் முன் கணவனை விட்டுகொடுக்க பிடிக்காமல்……. என்ன விஷயம் என்று தெரியாமல் ராஜியை கூப்பிட்டார்.

அவள் வெளியே வந்ததும் அண்ணாமலை அவளிடம்……… “செந்தில் உன்கிட்ட ஏதாவது வம்பு பண்ணினானா”, என்றார்.

ராஜிக்கு ஒன்றும் புரியவில்லை………. சீனியப்பன் வேறு நின்று கொண்டு இருந்தார். ராஜிக்கு செந்திலை பற்றி தப்பாக சொல்ல முடியவில்லை. அவளுக்கு என்ன தெரியும் செந்தில் டீக்கடையில் பேசி அதை விசாரிக்க கேட்கிறார்கள் என்று…..

“இல்லை”, என்று சிறிதும் தயக்கம் இல்லாமல் சொல்லி விட்டாள்…….

அவள் என்ன சொல்லபோகிறாள் என்று ஆர்வமாக அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த சீனியப்பன் அப்போது தான் நன்றாக மூச்சே விட்டார்.

சீனியப்பனிடம் திரும்பிய அண்ணாமலை, “ஒரு வேளை அவளுக்கு தெரியாம கூட இருக்கலாம். அவனும் இவளும் காதலிக்கறதா இவ அவன் ஆளுன்னு தான் சொல்லியிருக்கான்”, என்றார்.

கேட்ட தேவிக்காவுக்கு மிகுந்த அதிர்ச்சி என்றால்…….. “அந்த லூசு யார்கிட்ட அப்படி சொல்லி வெச்சிருக்கோ தெரியலையே………. அது இவங்களுக்கு எப்படி தெரிஞ்சது தெரியலையே”, என்று தான் ராஜிக்கு தோன்றியது……..

“அவன் வரட்டுங்க…….. அவன்கிட்டயே விசாரிக்கலாம்”, என்றார் சீனியப்பன்.

“எவனாவது செஞ்சதை ஒத்துக்குவானா”,

“அவன் கிட்ட கேட்போம்……….. அவன் ஒத்துக்கலைன்னா யார் சொன்னதா சொன்னாங்களோ அவங்களை பிடிப்போம்”, என்றார்.

இருவரும் செந்திலின் வரவுக்காக காத்திருந்தனர். மற்ற வேலை செய்பவர்களை எல்லாம் அன்று சீக்கிரமாகவே அனுப்பி விட்டனர்.

செந்தில் வரும்போது எட்டு மணியாகி விட்டது. அசோக்கும் அவனோடு இருந்தான். செந்தில் அசோக்கை………. “நீ வெளியவே இருடா………. ஒரு பத்து நிமிஷத்துல பணக்கணக்கை முடிச்சிட்டு வந்துடறேன்”, என்று சொல்லி அவனை வெளியே நிறுத்தி போனான். வசூல் செய்த பணம் எண்பதாயிரம் அவனிடம் இருந்தது.

உள்ளே நுழைந்தால் வீடே அமைதியாக இருந்தது.

அண்ணாமலையும் சீனியப்பனும் இவனை எதிர் நோக்கி காத்திருந்தனர்.

“என்னப்பா எல்லோரும் அதுக்குள்ள போயிட்டாங்க………. வேலையெல்லாம் முடிஞ்சதா”, என்று கேட்டுகொண்டே அவர் அருகில் வந்தான் செந்தில்.

இவனின் சத்தம் கேட்ட தேவிகாவும் ராஜியும் கூட கீழே வந்தனர். அவர்கள் இருவரும் கூட வரவும் செந்திலுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஏதோ சரியில்லை என்று தோன்ற………. அவன் அங்கே இருந்த மீன் தொட்டி அருகில் நின்றுகொண்டான்.

சீனியப்பன் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்………. “நீ ராஜியை காதலிக்கிறேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கியா”, என்றார்.

“பகீர்”, என்றது செந்திலுக்கு………… அவன் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை…….. ராஜி தான் சொல்லியிருப்பாளோ என்று அவளின் முகத்தை பார்க்க………. அவள் இல்லை என்று கண்களாலேயே சொன்னாள்.

இருவருக்குள்ளும் ஏதோ பார்வை பரிமாற்றம் என்று அங்கிருந்த அனைவருமே உணர்ந்தனர்.

அது அண்ணாமலையின் கோபத்தை ஏகமாய் தூண்டிவிட……… அவர் வாய் பேச ஆரம்பிக்கும் முன்னரே……..

செந்திலின் தயக்கம் சீனியப்பனுக்கு தன் மகன் அப்படிதான் சொல்லியிருப்பனோ என்ற பதட்டத்தை கொடுக்க………. “பதில் சொல்லுடா”, என்று கோபமாக கர்ஜித்தார்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று பளிச்சென்று பதில் சொல்வதை விட்டு……. அது அப்பா……. இல்லை……… அது வந்து……… என்று செந்தில் தடுமாறினான்………. சட்டென்று பொயுரைக்க அவனுக்க வரவில்லை.  

அந்த தயக்கம் அவன் ஏதோ செய்திருக்கிறான் என்று காட்ட……….. அண்ணாமலை அவன் பக்கம் நெருங்க…… சீனியப்பன் இப்படி ஒரு செயலை மகனிடமிருந்து எதிர் பார்க்காதவர் அவனை ஓங்கி அறைந்தார்…….

செந்தில் தந்தையின் செய்கையில் அப்படியே திகைத்து நிற்க……. அண்ணாமலை வேறு அவனின் பக்கத்தில் நெருங்க……. அவரும் அவனை அடித்துவிடுவாறோ என்று பதறிய ராஜி……..

“அப்படியெல்லாம் எதுவுமில்லை”, என்று அவர்களின் நடுவில் போக……..

தன்னிடம் பேசாத மகள் யாரோ ஒருவனுக்கு பரிந்து வருவது பிடிக்காமல்……… “நீ இதுல தலையிடாதா”, என்று கூறிக்கொண்டே  ஒரு வேகத்தில் அருகில் வந்த அவளை தள்ளி  இழுத்துவிட……..

தந்தையின் செயலை சிறிதும் எதிர்பார்க்காத ராஜி தடுமாறி விழப்போனாள். அவள் விழப்போனது மீன் தொட்டியின் மேல்….. அது அவளின் அழகு முகத்தை பதம் பார்க்க காத்திருக்க………

அவளையே பார்த்துக்கொண்டிருந்த செந்தில் க்ஷண நேரத்தில் நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து ஒரு கையால் அவளைப் பற்றி மீன் தொட்டி மேல் விழாமல் இழுத்து விட்டான்….. அவன் இழுத்துவிட்ட வேகத்தில் ராஜி போய் கீழே விழுந்தாள்.

ஆனால் அவளை வேகமாக இழுத்து விட்ட அவனால் பேலன்ஸ் செய்ய முடியவில்லை. அவளை இழுத்துவிட்ட வேகத்தில் அவன் அதன் மேல் விழ போக….. விழாமல் இருக்க அனிச்சை செயலாக கை முன்னே நீள…….

அவனே எதிர்பாராமல் அவனின் கை மீன் தொட்டியை உடைத்துக்கொண்டு உள்ளே போனது……..

உள்ளே போனது தான் போனது………. அதோடு விட்டிருந்தால் காயங்கள் கம்மியாக இருந்திருக்கும், அவன் அந்த வேகத்திலேயே கையை இழுக்க உடைந்த கண்ணாடி துண்டுகள் சரசரவென்று அவனின் கையை குத்தி கிழித்தது……. எல்லாம் ஆழமாக கிழிக்க….. அவன் கையின் ரத்த நாளங்கள்…….. நரம்புகள்……. தசைகள்………. வெகுவாக  சேதமாகின……….   

ஏதோ பைப்பை திறந்து விட்டது போல ரத்தம் பீச்சியடிக்க துவங்கியது…… அவனின் இடது கை முழுவதும் கண்ணாடி துகள்கள் ஏறியிருந்தது……….

“அம்மா”, என்று வலியில் துடித்த அவனின் அலறல் வெளியே நின்ற அசோகிற்கு கேட்டு அவன் என்ன ஏதென்று உள்ளே ஓடி வரும்போதே……… அவனை விட அதிகமாக கத்தினாள் ராஜி…… “ஐயோ ரத்தம் வருதே”, என்று……

அதையும் விட சீனியப்பன், “செந்திலு”, என்று கத்திக்கொண்டே அவன் கையை பிடிக்க ஓடினார்.

எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்வை பார்த்து தேவிகாவும் அண்ணாமலையும் அப்படியே சமைந்து நின்றனர்……….. இது தங்களின் மகளின் முகத்தில் நிகழ்ந்து இருந்தால்??????????.

அந்த நேரத்திலும் ராஜி அவன் அருகில் போய்விடுவாளோ என்று எச்சரிக்கையாக அண்ணாமலையின் கைகள் அவளின் கைகள் பிடித்துக்கொண்டது.

அவளால் தன் தந்தையிடம் இருந்து கைகளை விலக்கவே முடியவில்லை….. “விடுங்க, விடுங்க”, என்ற அவளின் கதறலோ கெஞ்சலோ சற்றும் பயனளிக்கவில்லை.

அருகில் வந்த சீனியப்பனாலும் செந்திலின் கைகளை பிடிக்க முடியவில்லை. கண்ணாடி துண்டுகள் அங்கங்கே சொருகியிருந்தன. அதற்குள் உள்ளே ஓடி வந்த அசோக், “என்னடா செந்திலு”, என்று பதட்டமாக அவனருகில் வந்து அவனின் கையிலிருந்த ஒரு பெரிய கண்ணாடி துண்டை எடுக்க இன்னும் ரத்தம் அதிகமாக பீச்சியது. செந்திலுக்கு வலியில் உயிர் போனது.

அண்ணாமலை நிலைமையை உணர்ந்து……. “வண்டியை எடுத்துகிட்டு அவனை சேலம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடுங்க”, என்றார்.

வேகமாக சென்று அசோக் வண்டியை எடுத்துவர……. அந்த இரவு நேரத்தில் செந்திலையும் சீனியப்பனையும் ஏற்றிக்கொண்டு காற்றை விட வேகமாக வண்டியை செலுத்திக்கொண்டு போனான் அசோக்.

ரத்தம் அதிகமாக போக..போக… ரத்தம் போனதாலோ இல்லை பயத்தினாலோ செந்தில் மயக்கத்திற்கு போனான்…….