“தாராளமா வாம்மா. நான் யாருக்காச்சும் கொடுத்திடலாம் கொஞ்ச நாள் கழிச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன். நீ பார்த்தா நான் என்ன வேணாம்ன்னா சொல்லப் போறேன். ஆனா இந்த வேலை உனக்கு தெரியாதேம்மா”
“கத்துக்கறேன்ப்பா. உங்க வேலையை கத்துக்கறேன். எனக்கு அந்த வேலைப்பத்தி முழுசா தெரியாது தான். எனக்கு எப்படி வேலை வாங்கணும்ன்னு தெரியும்ப்பா… என்னை நம்புங்க”
“சரிம்மா நீ எப்போ வர்றே??”
“நாளைக்கே நல்ல நாள் தான்ப்பா கோவிலுக்கு போயிட்டு நேரா வந்திடறேன்”
“இப்போ நல்லா தான்ப்பா இருக்கேன். என்னை நிரந்தரமா பேஷன்ட் ஆக்கிடாதீங்க” என்றாள்.
“நீ வேலைக்கு வரவேணாம்ன்னு நான் சொல்லலைம்மா. நீ கண்டிப்பா வா ஆனா கொஞ்சம் உனக்கு சரியாகட்டும்” என்று முடித்தார் அவர்.
“சரிப்பா”
“அக்கா எங்கேம்மா??”
“அவ ரூம்ல இருக்காப்பா”
“இவ இங்க வந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகுது. மாப்பிள்ளை ஒரு தரம் கூட வந்து பார்க்கவே இல்லை” என்று மகளிடம் இவர் சொல்லிக் கொண்டிருந்த நொடி ஆதித்யன் உள்ளே நுழைந்தான்.
“வந்திட்டேன் மாமா” என்றவாறே.
“வாங்க வாங்க… இப்போ தான் நயனாகிட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்று மரியாதை நிமித்தம் எழுந்து நின்று வரவேற்றார் அவர்.
“நயனா” என்று சின்ன மகளை பார்க்க “வாங்க மாமா, இப்போ தான் உங்களுக்கு இங்க வர வழி தெரிஞ்சுதா” என்றாள் அவள்.
“என் வேலை அப்படி நயனா” என்றவன் “ஒரு காபி கிடைக்குமா??”
“கண்டிப்பா உங்களுக்கு இல்லாததா ஆனா நாங்க உங்களை வெறும் காபியோட அனுப்பறதா இல்லை. இருந்திட்டு தான் போகணும்”
“நீ சொன்னாலும் நானும் கிளம்பறதா இல்லை. திங்கள்கிழமை இங்க இருந்தே நேரா ஆஸ்பிட்டல் போகற பிளான் தான் ஓகேவா… இப்போ காபி தரலாமா??”
“இதோ வர்றேன் மாமா” என்றவள் மெதுவாய் எழுந்து காலை தாங்கி தாங்கி நடந்துச் சென்றாள்.
‘இவ கஷ்டப்பட்டுட்டு இருக்கா. அவ எங்க போனா??’ என்ற எண்ணம் தான் ஓடியது ஆதிக்கு. இருந்தும் ஒன்றும் கேட்கவில்லை அவன்.
“நயனா அக்காவை வரச்சொல்லு” என்று அவன் எண்ணத்திற்கு விடையளித்தார் போன்று இளவரசன் சொல்லிட “ஓகேப்பா” என்று குரல் கொடுத்தாள் நயனா.
அவள் சென்ற சில நொடிகளிலேயே அவசர அவசரமாக எழுந்து வந்திருந்தாள் விலோசனா. கணவனை அங்கு கண்டதும் கண்களில் முழுதும் அவனை நிரப்பிக்கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.
அவளை திரும்பி பார்க்காவிடினும் ஆதியின் உள்மனது சொல்லியது விலோசனா தன்னை பார்க்கிறாள் என்று. அவள் வந்ததை உணர்ந்திருந்தான் அந்த கொலுசொலியில்.
“வாங்க…” என்ற குரல் உள்ளே சென்றிருந்தது.
“உள்ளே கூட்டிட்டு போம்மா விலோ” என்றார் தந்தை.
ஆதியோ “காபி குடிச்சுட்டு போறேன் மாமா…”
“ப்ரெஷ் ஆகிட்டு வாங்க மாப்பிள்ளை. அப்போ சூடா குடிக்க நல்லா இருக்குமே” என்றிட அதற்கு மேல் மறுத்து சொல்ல தோன்றாமல் எழுந்திருந்தான்.
விலோசனா முன்னே செல்ல இவன் அவள் பின்னோடே சென்றான். தோளில் சுமந்திருந்த பையை அறையில் வைத்துவிட்டு அவன் டவலை தேட அதை எடுத்து நீட்டினாள் அவன் மனைவி.
ஒன்றும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டவன் குளியலறை புகுந்துக் கொண்டான். ஆதி இந்த பிரிவை வேண்டுமென்றே தான் விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.
விலோசனாவின் பேச்சும் செயலும் அவனை அந்த முடிவிற்கு கொண்டு வந்திருந்தது. ஒரே வீட்டில் எப்படி விலகி இருப்பது என்று யோசித்த வேளையில் தான் நயனாவிற்கு ஆக்சிடென்ட் ஆனது.
அவளுக்கு துணைக்கு நிச்சயம் ஒரு பெண் துணை தேவை. அதனால் தன் மனைவியை யோசிக்காமல் அங்கே சென்று விட்டு வந்திருந்தான்.
அது நிச்சயம் நல்ல பலனையே அவனுக்கு தந்திருந்தது. அவனில்லாத நாட்கள் அவளுக்கு முதலில் ஒன்றும் தோன்றாமல் இருந்திருந்தாலும் இரண்டு நாட்களுக்கு பின் அவனையே மனம் சுற்றி சுற்றி வந்தது. ஆதி அவளுக்கு போன் செய்து கூட பேசுவதில்லை.
சந்தியா தான் தினமும் அவளுக்கு அழைப்பார். அல்லது அவள் அவருக்கு அழைப்பாள். ஆதிக்கு அழைக்க அவளுக்கு பயம் மருத்துவமனையில் அவன் போனை எடுக்காததே உணர்த்தியது அவள் மீதான அவன் கோபத்தை.
அவளை விட்டுச் சென்ற அன்று வந்து சென்றவன் தான் அதன் பின் இன்று தான் வந்திருக்கிறான். அவன் வரமாட்டானா என்று ஏங்கி இருந்தவளுக்கு இதோ அவன் தரிசனம் இன்று.
அவள் அறையை விட்டு செல்லவில்லை. அவனுக்காக காத்திருந்தாள். குளியலறையில் இருந்து வெளியில் வந்த ஆதி ஒரு புருவசுளிப்புடன் அவளை ஏறிட்டவன் பின் அவளை கண்டுக்கொள்ளாமல் டிரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று தலையை வாரினான்.
அவளை தாண்டிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டான். விலோசனாவிற்கு தன்னிடம் ஒன்றும் பேசாமல் செல்லும் ஆதியை கண்டு கண்ணில் நீர் நிறைந்தது.
கோபம் வேறு வந்தது நான் என்ன பண்ணேன் என்கிட்டே பேசாம போனா என்ன அர்த்தம் என்று வேறு நினைத்தாள்.
அவன் பேச வந்த போதெல்லாம் அவனை பேசவிடாமல் செய்தவள் அவள் என்பதை சுலபமாய் மறந்து ஆதியை குற்றம் சாட்டிக் கொண்டாள்.
இரவு அறைக்கு வந்த போதும் ஆதி அப்படியே தானிருந்தான். எதுவாக இருந்தாலும் இனி நீ தான் வரவேண்டும் என்பது போல இருந்தது அவன் செயல். அது சம்மந்தப்பட்டவளுக்கு புரிய வேண்டுமே.
இருவருக்கும் இடையில் மொழி போய் மௌனங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தது. ஆதி படுத்ததும் உறங்கிவிட விலோசனாவிற்கு தூங்கா இரவாக இருந்தது.
ஆதி காலையிலேயே செங்கதிருக்கு அழைத்துவிட்டான். “சொல்லு ஆதி”
“உன்னை நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சுட்டு இருக்க??”
“நான் தான் சொன்னேன்லடா புரிஞ்சுக்கோ ஆதி” என்று மறுத்த கதிர் ஆதிக்கு புதியவனாக தெரிந்தான்.
எப்போதும் ஆதி அழுத்தி சொல்லும் ஒரு விஷயத்தை மறுத்து கதிர் பேசியதேயில்லை. இன்று பேசுகிறான் அதுவே மற்றவனுக்கு வித்தியாசத்தை கொடுத்தது.
“கதிர்” என்றான் அழுத்தி.
“ஆதி ப்ளீஸ் நான் வரலை”
“இங்க பாரு நான் உன்னோட வெட்டியா பொழுது போக்க கூப்பிடலை. உன் வேலை பத்தி பேசத்தான் கூப்பிடுறேன். அதுக்கு ஒரு சொல்லுஷன் கொடுக்கத் தான் கூப்பிட்டுறேன்” என்றான் நீண்ட விளக்கமாக.
கதிருக்கு அதற்கு மேல் மறுப்பது உசிதமாக படவில்லை. அமைதியாக இருந்தான். “என்ன கதிர்??” என்று அவன் அன்னை கேட்க மகன் ஆதி சொன்னதை பற்றிச் சொல்ல “போயிட்டு வா கதிரு. ஏதோ உன் வேலை விஷயமா தானே” என்று அவர் அனுமதி கொடுக்க “அம்மாவை அக்கா வீட்டில விட்டு வர்றேன் ஆதி” என்றான் நண்பன்.