Advertisement
அத்தியாயம்.6
திருமணம் முடிந்து ஒருவாரம் கழித்து அன்று காலையில் தான் இரண்டு குடும்பமும் சென்னைக்கு மதுமதியை அழைத்துக்கொண்டு சூர்யாவின் வீட்டுக்கு வந்தனர். சூர்யாவுக்கு வேலை இருந்ததால் இரண்டு நாளுக்கு முன்பாகவே சென்னை வந்து விட்டான்.
மதுமதியை முறையாக கொண்டு வந்து விட இரண்டு குடும்பமும் காலையில் தான் சென்னை கிளம்பி வந்திருந்தனர்.
அவர்கள் வந்ததும், “வாங்க!” என்று கேட்டதோடு சரி அப்போதே ஆபிஸ் கிளம்பி சென்று விட்டான் சூர்யா.
அதை மதுமதியின் பிறந்த வீட்டு ஆட்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ராஜரத்தினத்துடன் பேசிக் கொண்டிருந்தனர்.
சூர்யாவின் அம்மா அப்பாவிற்கும் அவர்களின் மனநிலை புரியத் தான் செய்தது. அவர்களுமே மகன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை. இதற்கு நேற்றே அவர்கள் வருகை அவனுக்கு சொல்லியிருந்தனர். அப்படி இருந்தும் அவன் கிளம்பி சென்றதில் அவருக்கும் கோபம் தான்.
“உன்னோட தம்பிக்கு போன் பண்ணுடி. அவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்.” என்றார் சூர்யாவின் அம்மா.
“அவன் போன் எடுக்க மாட்டேங்கிறான் ம்மா.” என்றாள் ரம்யா.
“இவனால உங்க அப்பா வேற என்ன முறைச்சிட்டே இருக்காரு. இவன் ஏன்டி இப்படி பண்றான்?”
“அதான் எனக்கும் தெரியலம்மா. அழகு அத்தை, ராகவேந்திரன் மாமாவோட முகமே சரியில்லை.” அவளும் கவனித்ததை கூறினாள்.
“எனக்கு உன்னோட தம்பியை நினைச்சா பயமா இருக்கு டி. கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள எனக்கென்னனு பொண்டாட்டிய விட்டு கிளம்பி வந்துட்டான். சரி நாமளா கொண்டு வந்து விடுவோம்னு வந்தா அவ்வளவு தூரம் சொல்லியும் வீட்ல இருக்காம வேலைக்கு கிளம்பி போயிட்டான். இவன நம்பி எப்படி அந்த புள்ளைய இங்க விட்டுட்டு போறது.” அவரின் புலம்பலை கேட்டு கடுப்பானவள்,
“ம்ம் இப்ப வந்து புலம்புங்க. அன்னைக்கு அவன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லும்போது கேட்டுருந்தா இந்த பிரச்சனையே வந்துருக்காதுல.” என்றுவிட்டாள்.
“என்னடி நீயும் இப்படி பேசற?” அவர் குரலே உள்ளே சென்றுவிட்டது.
“பின்ன வேற எப்படி பேசறது. அவன பத்தி தெரிஞ்சும் கல்யாணம் செஞ்சு வச்சிட்டு உடனே சரியாகனும்னு நினைச்சா எப்படிம்மா? அவன் இவ்வளவு பொறுமையா இருக்கிறதே எனக்கு அதிசயமா இருக்கு. நீ தேவை இல்லாம பேசி அவன் கோபத்தை தூண்டி விட்டுடாத. அது மதுவுக்கு தான் பிரச்சினை.” நடப்பதை பற்றி சரியாக கூறினாள்.
“என்னடி என் வயித்துல புளிய கரைக்கற?” பயந்து போய் பேசினார்.
“நா உண்மை தான் ம்மா சொல்றேன். இனி தானே ரெண்டு பேரும் தனியா இருக்க போறாங்க. அவங்களே ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க டைம் குடு. எல்லாம் சரியாகும்.” என்றாள். “என்னமோ சொல்ற. நல்லது நடந்தா சரி.” அரை மனதாக சொல்லி சென்றார்.
அறையில் மதுமதியின் ட்ரெஸ்களை எடுத்து வைக்க உதவிக் கொண்டிருந்த சீதா, “மது சூர்யா தம்பிக்கும் உனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை தானே? அவர் உன்கிட்ட நல்லாத்தானே பேசறாரு?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லையே அண்ணி. அவங்க நல்லாத்தான் பேசறாங்க.” என்றாள்.
“நீ எங்ககிட்ட எதாவது மறைக்கறியா மது?” அவளை தன் பக்கம் திருப்பி கண்களை பார்த்து கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும் பொய் சொல்ல முடியாமல், “பிரச்சினை இல்லைன்னு சொல்ல மாட்டேன் அண்ணி. ஆனா அது நீங்கள் நினைக்கற அளவுக்கு எல்லாம் பெருசு இல்லை. நானே சரி பண்ணிடுவேன்.” அவள் குரலில் இருந்த உறுதி சீதாவிற்கு நம்பிக்கையை அளித்தது.
சூர்யா வரும் வரை அனைவரும் அங்கு தான் இருந்தனர். மாலை ஆறு மணி க்கு மேல் தான் சூர்யா வீட்டுக்கு வந்தான்.
மகனை பார்த்ததும் ராஜரத்தினம், “உன்னோட மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க? ஆபிஸுக்கு லீவு போடுடான்னு நேத்தே சொன்னேன் தானே! நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்டா எங்களுக்கு என்ன மரியாதை.” வந்ததும் வராததுமாக அவனை பிடித்து வைத்து திட்ட ஆரம்பித்து விட்டார்.
ஏற்கனவே களைத்து போய் வந்திருந்தவனை நிறுத்தி வைத்து எல்லார் முன்னிலையிலும் திட்டியதில் சூர்யாவுக்கு கோபம் சுர்ரென்று ஏறியது. மற்றவர்கள் இருந்ததால் அதை அடக்கிக் கொண்டு, “வேலை இருந்துச்சுப்பா.” நிதானமாக பதில் அளித்தான்.
“என்னடா பெரிய வேலை. ஒருநாள் லீவு போட்டா குடியா முழுகிப் போயிடும். உனக்காக இங்க இத்தனை பேர் காத்துட்டு இருக்கோம். அந்த நினைப்பு உனக்கு துளியாவது இருக்கா?” அவனே பொறுமையாக இருக்கனும் என நினைத்தாலும் அவர் அவனின் கோபத்தை ஏத்தி விட்டு கொண்டிருந்தார்.
மகன் முகத்தை வைத்தே அவன் கோபத்தில் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட சாந்தி “விடுங்க அதான் வந்துட்டான்ல. நீ போ சூர்யா.” அனுப்ப முயன்றார்.
“எல்லாம் நீ குடுக்கற செல்லம் தான்டி. எதாவது வாய் திறந்து பேசறானானு பாரு. ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி விட்டுட்டு வந்துட்டோமேங்கிற அக்கறை துளியாவது இவனுக்கு இருந்தா இப்படி போவானா.”
“போச்சு போச்சு அப்பா அவன பேச வைக்காம விடமாட்டார் போலம்மா. எதாவது பேசி அவன உள்ள அனுப்பு.” மெல்ல அம்மாவின் காதில் கூறினாள் ரம்யா.
ரம்யா சொல்லி வாய் மூடவில்லை. “இப்ப உங்களுக்கு நான் என்ன பதில் சொல்லனும் சொல்லுங்க.” அப்பாவின் பேச்சில் கொஞ்ச நஞ்சம் இருந்த பொறுமையும் பறந்துவிட கேட்டுவிட்டான் சூர்யா.
“எங்கிட்டையே எதுத்து பேசுவியா நீ? ஏன்டா லீவு போடலைன்னு கேட்டா திமிரா பேசற?” அவரும் பதிலுக்கு கத்தினார்.
பிரச்சினை பெரிதாக ஆகிவிடுமோ என்று நினைத்த ராகவேந்திரன் தான் இடையில் புகுந்து “அதான் சூர்யா வேலை இருந்துச்சு னு சொல்றான்ல மாமா விடுங்க. நீங்க வாங்க நாம கொஞ்சம் வெளிய போயிட்டு வருவோம். ஒரே இடத்துலே இருக்கறது ஒருமாதிரி இருக்கு.” என கூறி அவரை வெளியே அழைத்து சென்றுவிட்டான்.
அதுவரை கோபத்தை அடக்கிக் வைத்து கொண்டு நின்றிருந்த சூர்யா கையில் இருந்த லேப்டாப் பேக்கை சோபாவில் தூக்கி போட்டு விட்டு வேகமாக உள்ளே சென்றான்.
சாந்தி, “என்ன மது நின்னுட்டு இருக்க. அவன் கூட போ.” என்றதும், வேறு வழி இல்லாமல் அவன் பின்னால் சென்றாள் மதுமதி.
“இப்ப எதுக்கும்மா மதுவ அனுப்புன? அவன் அப்பா மேல இருந்த கோபத்தை எல்லாம் உன்னோட மருமக மேல காட்டப்போறான்.” என்றாள்.
“நான் எல்லாம் தெரிஞ்சு தான் அனுப்புனேன். இத சாக்கா வச்சாவது ரெண்டும் பேசிக்கட்டும். நீ பேசாம இரு.” என்றுவிட்டார்.
அறைக்கு வந்தவன் இருந்த கோபத்தை கதவில் காட்டிவிட்டு உள்ளே வந்தவன், “இன்னும் சின்ன பையன் மாதிரியே நிக்கவச்சி கேள்வி கேட்டுட்டு இருக்கார். நானும் பொறுத்து பொறுத்து போனா ரொம்ப தான் ஓவரா பண்றாரு. இந்த கல்யாணத்த ஏன் பண்ணிக்கிட்டோம்னு நானே எரிச்சல்ல இருக்கேன். அது புரியாம இவர் வேற கண்டவங்க முன்னாடி நிக்க வச்சி கேள்வி கேக்கறாரு.” இருந்த கடுப்பில் மனதில் இருப்பதை வாய்விட்டு கூறிவிட்டு திரும்பியவன் அங்கு நின்றிருந்த மனைவியை கண்டதும் அதிர்ந்து விட்டான்.
‘அடேய் சூர்யா உனக்கு வாய்ல தன் டா சனி இருக்கு.’ என நினைத்துக் கொண்டான்.
அவன் பின்னால் வந்த மது அவன் பேசியதை கேட்டதும் அப்படியே நின்று விட்டாள். அவன் சொன்ன அந்த கண்டவங்க முன்னாடி என்ற வார்த்தை அவளை மேலும் காயபடுத்தியது.
அவன் பார்க்கவும், “சாரி! அத்தை சொன்னதுனால என்னால மறுக்க முடியலை.” என்றுவிட்டு வெளியே செல்ல போனாள்.
அவள் வெளியே போவதை உணர்ந்ததும் எட்டி அவள் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
பிடித்திருந்த கையை அவள் பார்த்ததும் உடனை எடுத்துக் கொண்டவன் “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதான் தப்பா எடுத்துக்காத.” என்றான்.
வேறு எதுவும் பேசாமல் அவனை பார்த்து, ‘பேசுங்க’ என்பதை போல கைகளை கட்டிக் கொண்டு நின்றாள்.
“எல்லாத்துக்கும் சாரி! நா கோபத்துல தான் அப்படி பேசிட்டேன்.” மன்னிப்பு கேட்டான். ஆனால் அவளோ “அவ்வளவு தானே நா போகட்டுமா?” என்று கேட்டாள்.
அதிலையே அவனுக்கு புரிந்தது. அவள் இன்னும் கோபமாக தான் இருக்கிறாள் என்று. அதற்கு மேல் அவனுக்கும் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியாததால்
“சரி நீ போ.” என்றுவிட்டான். உடனே அவளும் வெளியே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் டவலுடன் பாத்ரூமிற்கு சென்றவன் பிரஸ் அப் செய்துவிட்டு சாட்ஸ் டீசரட் போட்டு கொண்டு வெளியே வந்தான்.
அவனை பார்த்ததும் அழகம்மை மகனிடம், “ராகவா அந்த பணத்தை மாப்பிள்ளைகிட்ட குடு.” என்றார்.
அவனும் சில கத்தை பணத்தை எடுத்து சூர்யாவிடம் கொடுத்தவன், “குட்டிமாவுக்கு வேற வைக்கறதுக்கு நாங்க குடுக்குற சீர். இங்கையே எல்லா பொருளும் இருக்குறதால பணமா தரோம்.” என்றான்.
சூர்யா அதை வாங்காமல், “இதெல்லாம் நாங்க கேக்கவே இல்லையே! இப்ப இது எதுக்கு?” என்றான்.
Advertisement