நேச சிறகுகள்!

4

பவானி சிந்தாமணி நிறத்தில் பட்டு புடவை அணிந்திருக்க, சிம்புள் தங்க ஆரம் ஒன்றை அவள் கழுத்தில் அணிவித்தார் பார்வதி.

“அத்த சுடிதார் போட்டுக்குறேனே…?” என இறுதி முறையாக கேட்டும் பார்வதி பெரிதாக தலை ஆட்டினார்.

“வம்பு பண்ணாத பவானி… இதெல்லாம் நம்ம பாரம்பரியம்… புடவைல தான் பொண்ணுங்க லக்ஷ்மி கடாக்சமா இருப்பாங்க. நீயே கண்ணாடில பாரு… என் கண்ணே பட்டுடும் போல! வர போற மாப்ள இன்னிக்கே உன்னை தாலி கட்டி தூக்கிட்டு போக போறான்!”  என்று திருஷ்டி கழிக்க, பவானிக்கு என்னவோ போல் இருந்தது.

எப்பொழுதும் போல் ஏதாவது நடந்து இந்த சம்பந்தமும் கை விட்டு போகும் என நினைத்து இருந்தாள். ஆனால், அதுவே இன்று பெண் பார்க்கும் படலம் வரை வந்திருக்க, பவானி கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.

அவள் அலைபுறுதலை கண்ட பார்வதியும், கன்னம் பற்றி, “என்னடி… ஏன் ஒருமாதிரி இருக்க…?” என கேட்க, பவானி தெரியவில்லை என்றாள்.

“உனக்கு இதுல விருப்பம் இல்லையா…?”

பார்வதி தயங்கி தயங்கி கேட்டு விட்டார். அவர் வயதுக்கு தெரியாதா… அதிலும் பவானி அவர் தூக்கி வளர்த்த பெண்.

“இல்ல அத்த… கொஞ்சம் டென்சனா இருக்கு அவ்ளோ தான். இவ்ளோ தூரம் வரும்ன்னு எதிர்பார்க்கல… வழக்கம் போல இதுவும் நின்னுரும்ன்னு நினைச்சேன்!” என்று சொல்ல, இருந்தும் அவளிடம் ஒரு தயக்கம்.

பவானி மென்மையான குணம் கொண்டவள். தனக்கு ஒன்று பிடிக்கா விட்டாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் தனக்கும் பிடித்ததாகவே காட்டி கொள்வாள். அது அவளோடு பழகும் அனைவருக்குமே தெரியும். ஆனால் அனைத்து நேரத்திலும் இது சரி வராது என யாரும் அவளிடம் சொன்னதே இல்லை.

அவளும் தன்னை மாற்றி கொள்ளவில்லை. இதனாலே பல நேரங்களில் மனமுடைந்து போய் விடுகிறாள்.

“பவானி… வாழ்க்கைல நாம நினைச்ச மாதிரி எதுவும் நடக்கலைன்றதுக்காக கடைசி வரைக்கும் அப்படியே இருக்கும்ன்னு முடிவு பண்ணிட கூடாது. இது உனக்கான மாற்றமா இருக்கலாம். நீ நினைச்சு பார்க்காத அளவுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கலாம். மேலும், அத்த உனக்கு கெடுதல் நினைப்பேனா… உன் மாமாவ விட்டு நானே மாப்பிள்ளையா பத்தி நல்லா விசாரிக்க சொன்னேன். அவன் தங்கி இருக்க இடத்துல இருந்து வேலை பார்க்குற இடம் வரைக்கும் எல்லாம் கேட்டுட்டு வந்தாச்சு. ரொம்ப ரொம்ப நல்ல பையனாம். குடி, சிகரெட்டுன்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கவர்மென்ட் வேலையா இருந்தாலும் லஞ்சமும் வாங்க மாட்டானாம். கை சுத்தமாம்… ஆனா என்ன!” என்றவர் இழுக்க, பவானி என்னவென பார்த்தாள்.

அஞ்சனமிட்ட விழிகளில் தெரிந்த பீதியை கண்டு பார்வதி சிரித்து விட்டார்.

“பயப்படாதடி… பையன் கலகலன்னு யார்கிட்டையும் பேச மாட்டானாம். அதை சொல்ல வந்தேன். மத்தபடி உனக்கு பொருத்தமா இருப்பான். நீயே பாரு… பின்னாடி வந்து சூப்பர் பையன சூஸ் பண்ணி இருக்கீங்க அத்தன்னு எனக்கு தாங்க்ஸ் சொல்லுவ!”

“ஓஹோ… அதையும் பார்க்கலாம்!” என பவானி சிரித்து விட, பார்வதி இன்னொன்றும் சொன்னார்.

“உன் அக்காவுக்கு இதுல சம்மதமே இல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து எதையாவது பேசி உன் மனசை கலைக்க பார்ப்பா… காது கொடுத்து கேட்காத. அமைதியா இருந்துரு…!” என சொல்லி முடிக்கவில்லை… புயலென உள்ளே வந்தாள் காயத்ரி.

தங்கை அழகாய் ரெடியாகி இருப்பதை கண்டு கண்ணில் அனல் பறந்தது. “எல்லாருமா சேர்ந்து என் தங்கச்சி லைபஃயே கெடுக்க போறீங்க… அத்த இதுல நீங்களும் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுறது தான் ரொம்ப வருத்தமா இருக்கு… மாப்பிள்ள போடோ பார்த்தேன்… பவானிக்கும் அந்த பையனுக்கும் எப்படி செட் ஆகும்ன்னு நினைக்கிறீங்க? கருப்பா கருப்பன சாமி மாதிரி நெடு நெடுன்னு இருக்கான். அவனுக்கும் பவானிக்கும் கொஞ்சம் கூட மேட்ச்சாவே இருக்காது. கவர்மென்ட் மாப்பிள்ளைன்னோன என் தங்கச்சி பாழங்கெணத்துல விழணுமா?  நீங்களே அம்மாகிட்ட சொல்லுங்க அத்த…. நமக்கு இப்பவும் டைம் இருக்கு!”

பார்வதி காயத்ரியின் ஆட்டத்தை கண்டு சிறிதும் தடுமாறவில்லை. மாறாக,

“இப்போ என்ன பண்ண முடியும் காயு… மாப்ள வீட்டுகாரங்க பக்கத்துல வந்துட்டாங்க. இனிமேல் வேணாம்ன்னு சொன்னா, மனஸ்தாபம் ஆகிடும். விடு… இது பொண்ணு பார்க்குற விஷயம் தான… இன்னிக்கேவா எல்லாத்தையும் முடிவு பண்ண போறோம்? எல்லாம் பேசணும், பவானிக்கு மாப்ளைய பிடிக்கணும். மாப்பிள்ளைக்கு பொண்ணை பிடிக்கணும்… ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வரணும்!” என்று அடுக்க, காயத்ரி யோசித்தாள்.

பவானியும் காயத்ரியிடம், “அத்த சொல்றது தான் கரெக்ட்!” என்று இழுக்க, “சரி… வந்து பார்த்துட்டு போகட்டும். ஆனா நீ பிடிக்கலைன்னு சொல்லிடு பவானி. அம்மா ப்ரைன்வாஸ் பண்ண பார்ப்பாங்க ஆனா நான் பார்த்துக்குறேன்!” என வெளியே செல்ல, பார்வதி தோள்பட்டையில் முகத்தை இடித்து கொண்டார்.

“இந்த பையன வேணாம்ன்னு சொல்லிட்டு அவ பார்த்து வச்சிருக்க அறை கிழவனை கட்டிக்காவா… சுந்தரி சொன்னது தான் சரி. இவ ரொம்ப மாறிட்டா பவானி!” என பார்வதி அத்தை சொல்ல, அவளுக்கும் வருத்தமாக இருந்தது. அப்பொழுது, “பவா சித்தி…!” என காயத்ரியின் ஐந்து வயது மகள் ஓடி வர பவானி முகம் மலர்ந்தாள்.

அந்த வீட்டின் குட்டி இளவரசி அவள். ‘ஆரியா!’ என்று ராகவன் பெயர் வைத்திருந்தான்.

“பையன் பேர் மாதிரி இருக்கே மாமா?” என பவானி கேட்டதற்கு,

“இங்கிலீஷ்ல சொல்றப்போ பேன்சியா இருக்கும் பவானி. பாப்பாவ நான் பாரின்ல படிக்க வைக்க பிளான் பண்ணி இருக்கேன்!” என்றிருந்தான். ஆனால் அவனை தவிர்த்து யாருக்கும் அந்த பெயர் பிடிக்காமல், ரியா என சுருக்கி விட்டார்கள்.

“ரியா குட்டி… வாங்க வாங்க….!” என பவானி முகம் மலர்ந்து சிறியவளை தூக்கி கொள்ள, குழந்தையோ பவானியின் காதில் இருந்த குடை ஜிமிக்கியை ஆட்டி பார்த்து,

“சித்தி உனக்கு கல்யாணமா?” என்றது.

“ஆமாடி தங்கம்… உன் சித்திக்கு கல்யாணம் ஆக போகுது… இன்னிக்கு நீ சித்தப்பாவ பார்க்கலாம்!” என பார்வதியும் குழந்தையை கொஞ்ச, “யாரோட சித்தப்பா?” என்றாள் ரியா புரியாமல்.

“உன்னோட சித்தப்பா தாண்டி… உன் சித்தியோட வீட்டுகாரர்!” என்று சொல்ல,

“ஓ… ஆனா சித்தப்பா எங்க?” என்றாள் குழந்தை யோசனையாக.

“இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு…!” என பார்வதி கண்ணடிக்க, சுந்தரி அவசரமாக உள்ளே வந்தார்.

“பார்வதி மாப்ளை வீட்டுகாரங்க வந்துட்டாங்க…!”

“நல்லது நல்லது. நான் வரேன்!” என்ற பார்வதி,

“எல்லாம் உன் மனசு போல நடக்கும் பவானி… இந்த சம்பந்தம் நிச்சயமா முடியும்!” என சொல்லி விட்டு செல்ல சுந்தரியும் மகளை ஆசை தீர பார்த்து வெளியே சென்றார். பவானிக்கு படபடப்பாக இருந்தது. வயிற்றில் ஏதோ உருளுவது போல் இருக்க, ரியாவை கட்டி கொண்டாள்.

ரியா அவள் கன்னத்தை அளந்து, “சித்தி நீ அழகா இருக்க!” என்று சொல்ல, பவானிக்கு உச்சி குளிர்ந்து போனது. குழந்தைகள் பொய் சொல்லாதே…

“தாங்க்ஸ்டி பட்டு… நீயும் டால் மாதிரி இருக்க!” என்று ரியாவிடம் கவனத்தை திருப்பியவள் அடிக்கடி வெளியில் இருந்து கேட்ட சத்தத்தை அரைகுறையாக கவனித்தாள். சிறிது நேரத்தில் கவியரசு வந்து,

“பவானி வா…!” என அழைக்க, பவானிக்கு கைகள் வேர்த்தது. ரியாவை கவியரசு வாங்கி கொள்ள அவன் பின்னால் அமைதியாக சென்றாள். ஹாலில் ஆறு ஏழு பேர் அமர்ந்து இருக்க, பவானியால் அனைவரையும் கவனிக்க முடியவில்லை.

பொதுவாக வணக்கம் சொல்லி விட்டு தன் அக்காவின் அருகே நின்று கொள்ள, ரியா விளையாட்டாக ஒரு வேலையை பண்ணி வைத்தாள்.

“இதுல யாரு என் சித்தப்பா…?”

அவள் கவியரசிடம் கேட்டு விட, பார்வதி பக்கென சிரித்து விட்டார். அவரை போலவே எல்லாருக்கும் சிரிக்க காயத்ரிக்கோ மகளை பார்த்து எரிச்சலாக வந்தது.

“சும்மா இருடி…!” என்றவள் அதட்டல் போட, “விடும்மா சின்ன குழந்தை தானே?” என்றார் மாப்பிள்ளையின் அம்மா விஜயா.

“இதோ இவரு சித்தப்பா…!” என்றவர் தன் மகனை வேறு கைகாட்டி விட, அதிலே அவர்களுக்கு இந்த சம்மதம் மிகவும் பிடித்திருக்கிறது என சொல்லாமல் சொல்லி விட்டார். ரியா மாப்பிள்ளையை பார்த்து சிரிக்க, விஜயா பவானியை அருகே அழைத்து அமர வைத்து கொண்டார்.

“சென்னைல இருக்க ஆர்.ஆர்.எஸ் காலேஜ்ல தான் படிச்சியாமே… உங்க பார்வதி அத்த சொன்னாங்க. என் பையனும் அங்கதான் படிச்சான்!” என்றவர் கூற, பவானிக்கு வியப்பு.

“அப்படியா..?” என்றவள் கேட்க, “ஆமாம்மா பிஏ, எம்ஏ ரெண்டும் அங்க தான் முடிச்சான். கோல்ட் மெடலிஸ்ட் என் பையன்!” என பெருமையாக சொல்ல, பவானி மனதில் வேகமாக கணக்கு பண்ணினாள்.

‘யாரா இருக்கும்… நம்ம படிச்ச காலேஜ்ன்னா நமக்கு தெரியாம இருக்காதே…?’ என்றவள் கேசுவலாக மாப்பிள்ளை இருந்த பக்கத்தில் பார்க்க, “நாங்க எவ்ளோ சொல்லியும் கேட்காம எகனாமிஸ் தான் படிப்பேன்னு ஒத்த காலுல நின்னான்!” என விஜயா அதன் பின்பு சொன்னது எல்லாம் பின்பாடல் போல் கேட்க, மாப்பிள்ளையானவனை பார்த்து இமைக்க மறந்தாள் பவானி.

அங்கு ஒரு வாரத்திற்கு முன்பு யாரை பார்த்து தடுமாற்றம் அடைந்தாளோ அவனே அமர்ந்து இருக்க, அன்று தாடியை மழித்து பார்மல் உடையில் கண்ணில் ஒட்டி கொள்வது போல் அத்தனை அழகனாக வந்திருந்தான்.

கவிரசோடு பேசி கொண்டிருந்தவன், அவன் கையில் இருந்த ரியாவை பார்த்து புன்னகிக்க அப்படியே அவன் பார்வை பவானி பக்கம் திரும்பியது. இருவர் விழிகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, இருந்தும் பவானியால் பார்வையை மாற்ற முடியவில்லை.

அன்று அவள் முகத்தில் கண்ட அதே அதிர்ச்சியையும் படபடப்பையும் மீண்டும் பார்த்தவன், சபையில் பொதுவாக சொல்லி விட்டான்.

“பவானி கூட தனியா பேசணும்!”

அவன் சொன்னது காதில் விழுகிறது. ஆனால் எல்லாம் கனவாக இருக்குமோ? என பவானி சந்தேகித்து நாசுக்காய் கையை கிள்ளி பார்த்து கொள்ள, இது உண்மை தான் என்பது போல் ஐந்து நிமிடத்தில் அவன் முன்னால் தனியாக நின்று கொண்டிருந்தாள்.

இருவருக்கும் ஸ்பேஸ் கொடுத்து மாடிக்கு அனுப்பி வைத்திருக்க, பவானி எதிரில் நின்றவனை தவிர்த்து அனைத்தையும் பார்த்தாள்.

‘ஐயோ என்ன பேச போறாரோ… ஒருவேள கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிடுவாரோ… இல்ல என்னைய பிடிக்கலைன்னு சொல்லிடுவாரோ… வேற ஏதாச்சும் லவ் இருக்குமோ…?’ என கண்டதும் மனதில் ஓட அதில் ஒன்று கூட நல்லவிதமாக இருக்கவில்லை.

“தென்….!”  என்றவன் ஆரம்பிக்க, பவானிக்கு மேலும் ஜெர்க் ஆனது.

“நான் யாருன்னு உனக்கு தெரியும் அப்படி தான…?” என்றவன் புருவம் உயர்த்த பவானிக்கு என்ன பதில் சொல்வது என விளங்கவில்லை.

தெரியும் என்று ஒற்றை வார்த்தையில் மனதில் இருப்பதை சொல்லிட முடியுமா?  இல்லை நீ தான் என் கனவு காதலன் என ஆசையை கொட்டிட முடியுமா? சில நிமிடங்கள் தடுமாறியவள், தொண்டையை செருமி கொண்டு,

“தெரியும்… காலேஜ்ல பார்த்து இருக்கேன். உங்கள எல்லாரும் பீம்ன்னு சொல்லுவாங்க அப்படி தான்… பொதுவா தெரியும்!” என்று கூற,

“ரைட்… ஆனா இன்னிக்கு நான் தான் வரேன்னு உனக்கு தெரியாதுல?” என்றவன் சரியாக கேட்டு விட, பவானி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆம் என்றால் ஏதாவது நினைத்து கொள்வானோ என தயங்க, அவனே சொல்லி விட்டான். “தெரியுது… உன் முகமே காட்டி கொடுத்துருச்சு. பர்ஸ்ட் யாருன்னே தெரியாம எப்படி இதுக்கெல்லாம் சரின்னு சொன்ன…?” மிகவும் பாயன்ட்டான கேள்வி. ஆனால் அதற்கும் பதில் தகிடுதத்தோம் தான்.

“வீட்ல சொன்னாங்க… அவங்க பார்த்தா சரியா தான் இருக்கும்!” என்றாள் பவானி கீழே பார்த்து கொண்டு.

அவள் உடல் மொழி, ரியாக்சனை எல்லாம் பார்த்து அவனுக்கு தான் மேலும் மேலும் குழப்பமானது.

“என்னைய பிடிக்கலயா….?” டைரக்டாக அவன் கேட்டு விட, பவானி வேகமாய், “அப்படி எல்லாம் இல்ல!” என்றாள். அவனையாவது பிடிக்காமையாது… பவானியின் மனம் அறிந்த யாராவது கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.

“அப்பறம் என்னை பார்த்தா பேய் மாதிரி இருக்கா….?”

அவன் கேள்வி எல்லாம் குதர்க்கமாகவே இருக்க, பவானி விழித்தாள். “எதுக்கு இப்படி எல்லாம் கேக்குறீங்க…?” என இழுக்க,

“அப்பறம் எதுக்கு என்னை வில்லன் மாதிரி பார்க்குற… அன்னிக்கு ஹோட்டல்க்கு முன்னாடி நாம பார்த்து இருக்கோம்ல?” என்றவன் கேட்க, பவானி வியப்பாய்,

“உங்களுக்கு நியாபம் இருக்கா…?” என்றாள்.

“இல்லாமையா கேக்குறேன். ஏன் என்னை எப்போமே பயந்த மாதிரியே பார்க்குற…?” என்றவன் சீரியஸாக கேட்க, பவானி  சிரித்து விட்டாள்,

“பயந்த மாதிரியா… ஐயோ நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க… எனக்கு உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருந்துச்சு. அதான் அன்னிக்கு அப்படி பார்த்தேன்!” என்று சமாளிக்க, அவன் இன்னும் சந்தேகமாக பார்த்தான்.

“சரி இன்னிக்கு ஏன் கீழ அப்படி பார்த்த… ?”

“அது… அன்னிக்கு உங்கள பார்த்தேன்ல… அதான் இன்னிக்கு ஷாக் ஆகிடுச்சு!” என்க,

“சரி என்னோட பேராவது தெரியுமா?” என்றான் ஆதங்கமாக.

“பீம்ன்னு தான் உங்கள காலேஜ்ல எல்லாரும் சொல்லுவாங்க.. உங்க பேரே பீம் தானா?” என்றவள் அருமையாக ஒரு கேள்வியை கேட்டு வைக்க, அவன் மார்புக்கு குறுக்கே கையை கட்டி விட்டான். அவனால் இப்படியும் ஒரு பொண்ணா என நம்பவே முடியவில்லை.

ஒருவேளை நடிக்கிறாளோ என்று பார்த்தாலும் அப்படியும் தெரியவில்லை.

“என்னோட பேரே பீம் இல்ல…இட்ஸ் அ நிக் நேம். என் உண்மையான பேரு வம்சி…!” என்றவன் தெளிவாக சொல்ல, பவானி உடனே,

“உங்களுக்கு சூட் ஆகுற நேம் தான் பீம்!” என்று விட்டு, அவன் தன்னை விசித்திரமாக பார்ப்பதை கண்டு நாக்கை கடித்து கொண்டாள்.