மொழி பொய்த்த உணர்வுகள் – 24
இந்தமுறை மாப்பிள்ளை வீட்டினர், மாப்பிள்ளையோடு பெண்பார்க்க வந்திருந்தனர். சௌபியின் வீட்டிலும் நெருங்கிய உறவினர்கள் சிலர் வந்திருக்க, அவர்கள் பக்கமும் இருபது பேருக்கும் மேல் வந்திருந்தனர்.
மேகவண்ணத்தில் பளீர் வெள்ளையிலான முழுக்கை காட்டன் சட்டையில் ருத்ரன் பிரகாசமாக இருந்தான். ஆவல் அதிகரிக்க ஜன்னல் வழியே அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌபி. கர்மசிரத்தையோடு மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்து கொண்டிருந்தவனை விழிகளில் நிரப்பியவள், யாரும் கவனிக்கும் முன்னர் தன்னிடம் சென்று சமர்த்தாய் அமர்ந்து கொண்டாள். அனைவரும் உள்ளே வரும் அரவமும், அதைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அரவமும் அவள் காதில் விழத்தான் செய்தது. எப்பொழுது தன்னவனை காண்போம் என்னும் ஆவலோடு காத்திருந்தாள்.
‘ருத்ரன் என்னவெல்லாம் பார்வையால் பேசுவான்? கூச்சம் விடுத்து அவனை நிமிர்ந்து பார்க்க முடியுமா?’ ஏதேதோ சுகமான கற்பனைகள் முட்டி மோதி அவளுள் மேலெழுந்து நிற்க, அதற்குள் அனைவருக்கும் காஃபி தருவதற்காக அவளை ராகிணி அழைத்தாள்.
இத்தனை நேரமிருந்த பரவசமெல்லாம் போய், பதற்றம் வந்துவிட்டது. அவள் ஒவ்வொருவருக்காய் காஃபி பருக தந்து கொண்டே வர, ருத்ரனை நெருங்கும் சமயம்… அவன், தனக்கு அருகே நின்று கொண்டிருந்த ராகிணியை நோக்கி, “சிஸ்டர்…” என அழைத்தான்.
திடீரென கேட்ட அழைப்பில் பதறிய ராகிணி, அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்பதற்காக செல்ல, அவளது பதற்றத்தில், “ரிலாக்ஸ்…” என ருத்ரன் மென்மையாக சிரித்துவிட்டு, “எனக்கு கொஞ்சம் லெமன் ஜூஸ் கிடைக்குமா?” என கேட்டான்.
இதை சற்றும் எதிர்பாராதவள், “கண்டிப்பாங்க அண்ணா. இப்போ கொண்டு வந்துடறேன்” என பதில் சொல்லி முடிக்கும் போது சௌபி அவர்கள் இருவரின் அருகில் வந்திருந்தாள்.
“அண்ணாக்கு ஜூஸ் கேக்கறாங்க பரணி. நீ மத்தவங்களுக்கு தந்துடு, அவருக்கு காஃபி வேணாம்” என மெதுவாக ராகிணி கூறிவிட்டு செல்ல, அவனது புறக்கணிப்பு யாருக்குமே வெளிப்படையாக தெரியவில்லை. ஏன் சௌபியுமே அதை உணரவில்லை தான். அவள் மற்றவர்களுக்கு தரவென்று அவனை கடந்து சென்று விட்டாள். கடைக்கண்ணால் பார்க்க கூட வெட்கம் தடுத்தது.
அதற்குள் ராகிணி பழச்சாறுடன் வந்துவிட, அவளே தன்னிடம் தந்துவிடுவாள் என்று தான் ருத்ரன் எதிர்பார்த்தான். ஆனால், அவளோ சௌபியை நோக்கி சென்றாள். சௌபியிடமிருந்த ட்ரேயை வாங்கிக்கொண்டு பழச்சாறை தந்து விடுவாள். சௌபி தன்னிடம் வந்து தருவாள் என பார்த்துக் கொண்டிருந்த ருத்ரனுக்கு புரிந்தது.
அதில் அவனுக்கு பிடித்தமில்லை, சௌபியை தவிர்ப்பதற்காக கைப்பேசியில் அழைப்பு வந்ததைப் போன்று எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் சென்றுவிட்டான். அவன் மனம் என்ன எதிர்பார்க்கிறதென்றே அவனுக்கு புரியவில்லை. அவனாக ஆசைப்பட்ட பெண், அவன் பெரிதும் எதிர்பார்த்த திருமணம்… ஆனாலும் அவனால் அகமகிழ முடியவில்லை, முழு ஈடுபாடு காட்ட இயலவில்லை. சௌபியின் செய்கைகளால், புறக்கணிப்பால், கண்டுகொள்ளாமையால் வந்த கடுஞ்சினத்தை, அவள்மீது நேரடியாக காட்ட முடியாமல் விலகி நின்று காட்டினான்.
கையில் பழச்சாறு வாங்கிய சௌபி அவனை தேடி விழிகளை சுழற்ற, “அண்ணாக்கு உன்கிட்ட எதுவும் பேச வேண்டி இருக்கும் போல… அதான் வீட்டுக்கு பின்னாடி போயிட்டாரு. நீ போய் இந்த ஜூஸ் தந்துட்டு பேசிட்டு வந்துடு” என ராகிணி கூற, சௌபிக்கு வெட்கத்தில் முகம் சிவந்து விட்டது.
பேராவலுடனும், கொள்ளை ஆனந்தத்துடனும், நிறைந்து ததும்பும் ஆசையோடும், எல்லையில்லா நாணத்தோடும்… அவள் கட்டியிருந்த புடவை நுனியை பிடித்தபடி மெல்ல நடந்து வீட்டின் பின்பக்கம் சென்றாள். ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் அருகே நின்றபடி, ருத்ரன் கைப்பேசியை ஆராய்ந்து கொண்டிருக்க, இவளது வருகையை அவளின் கொலுசு நிச்சயம் அவனுக்கு அறிவித்திருக்கும். ஆனாலும் அவன் அசையவே இல்லை.
ஏற்கனவே தயக்கத்தில் இருந்தவள், இப்பொழுது தனிமையில் பேச்சு வருவதற்கே தடுமாற, அவனை அழைப்பது சாத்தியமே இல்லை என புரிந்து, வேறு வழியின்றி அவன் முன் சென்று நின்றாள். தயங்கி தயங்கி, வெட்கம் பூசி நிமிரக்கூட முடியாமல் தலையை குனிந்தபடியே, பழச்சாறை அவனிடம் நீட்ட… முகத்தை திருப்பிக் கொண்டவன், உள்ளே நடக்க தொடங்கினான்.
இப்பொழுது தான் அவளுக்கு அவனது புறக்கணிப்பே உரைத்தது. ‘என்னவாயிற்று?’ என சிந்திக்க கூட நேரமில்லாமல்… வேகமாக அவனை பின் தொடர்ந்தவள், “ஏங்க ஒரு நிமிஷம்” என்க, தேங்கி நின்றானே அன்றி திரும்பவில்லை.
அதற்குள் அவன் முன் வந்து நின்றவள் “ஜூஸ் கேட்டீங்களே…” என மீண்டும் பழச்சாறை நீட்ட, “உன்கிட்ட கேட்கலையே” என்றவன் அவளைக்கடந்து விடுவிடுவென உள்ளே சென்று விட்டான். ‘என்ன பதில் இது? என்னிடம் கேட்கவில்லையா?’ என எண்ணியவள் கலங்கி போனாள்.
‘என்னவாயிற்று?’ என புரியாமல் குழப்பத்துடன் சௌபி வீட்டினுள் நுழைய, ருத்ரன் அவளுடைய அண்ணனிடமும், மற்ற உறவினர்களிடமும் இன்முகமாக பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இப்பொழுது அவனைப் பார்த்தால் கோபமாக இருப்பவன் போல, துளியும் தெரியவில்லை. ஆனால், தன்னிடம் காட்டிய கோபமும் பொய்யில்லை. அவனது செய்கையில் மிகவும் குழம்பி போனாள்.
‘என் மேல மட்டும் என்ன கோபம்?’ என எண்ணங்கள் சுழல, அவளுக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை. அவனது செய்கையில், புறக்கணிப்பில், முகம் கூட பார்க்க மறுக்கும் பிடிவாதத்தில் அவளுக்கு அழுகையே வரும்போல இருந்தது. இந்த எண்ணங்களே அவளை அதற்குள்ளாக சோர்வடைய வைத்துவிட்டது. கிளம்பும் வரையிலும் அவன் இவளை கவனித்தது போல கூட தெரியவில்லை. இவள் தான் அவன் முகம் பார்த்து நின்றாள்.
அவனது ஒற்றை பார்வை கூட அவளை மீட்டெடுத்து விடும். ஆனால், அது கூட அவனிடம் பஞ்சமாகி போக இவளுடைய வேதனையும், தவிப்பும் அதிகமானது. அவன் கிளம்பும் நேரம் வந்துவிட மனதின் பாரம் தாங்காமல், இவள் அவசரமாக கைப்பேசியை தேடி எடுத்தாள்.
இத்தனை நாட்கள் அவனது டிபியை மட்டும் வருடிய அவளது கரங்கள் முதன்முறை அவனுக்கான குறுஞ்செய்தியை அனுப்பியது. கிளம்பி வெளியே நின்றிருந்தவனை ஜன்னல் வழியாக பார்த்தபடி, “என்ன ஆச்சு?” என்னும் குறுஞ்செய்தி இவள் அனுப்பி இருக்க, அவன் இவளது செய்தியை பார்ப்பது தெரிந்தது.
ருத்ரனோ மிக சாதாரணமாக பார்த்து விட்டு அதை கண்டுகொள்ளாமல் எதிரில் இருப்பார்களின் பேச்சில் மீண்டும் கவனம் செலுத்தினான். முகம் விழுந்துவிட, “என் மேல கோபமா?” என இவள் அடுத்த செய்தியை அனுப்பினாள். ம்ம் ஹ்ம்… பார்த்தான் ஆனால் பதில் எதுவும் அனுப்பவில்லை.
இவளுக்கு மிகவும் பதற்றமாகி விட்டது. இந்த நேரடி புறக்கணிப்பை தாளவே முடியவில்லை. பொதுவாகவே அவனது பாராமுகம் அவளை வருத்தும், அதை தாங்கும் மனவலிமை அவளிடம் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் இன்றையதினம் மிகவும் முக்கியமான தினம். இன்று போய் அவன் கோபித்துக் கொண்டால்? அவனுக்காக பார்த்து பார்த்து தயார் செய்து கொண்ட தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் சென்றால்? என்ன சுயசமாதானம் செய்தும் அவளால் தாளவே முடியவில்லை. மனபாரம் தாங்காமல் அவனுக்கு போன் செய்து விட்டாள். ஓயாமல் மணி அடிக்க, அதை கையில் எடுத்தவன், இவள் பெயரைப் பார்த்ததும் நொடியும் தாமதிக்காது சைலண்ட்டில் மாற்றிவிட்டு… அங்கிருந்து கிளம்ப தயாராய் இருந்த உறவினர்களை வழி அனுப்பிக் கொண்டிருந்தான். எஞ்சி இருந்தது ருத்ரனின் குடும்பமும், அவனின் பெரியப்பா குருநாதன் குடும்பமும் தான்.
ருத்ரன் தன்னிடம் பேசப்போவதில்லை என்று காலம்தாழ்த்தி புரிந்து ஓய்ந்து போனவள், பேசாமல் சென்று தொய்ந்து படுக்கையில் அமர்ந்து கொண்டாள். காலையில் இருந்த மனநிலைக்கு முற்றிலும் வேறாக தளர்ந்து போய் அமர்ந்திருந்தாள். தலைவலி வேறு படுத்த, ஜன்னல்களை மூடியவள், உடைமாற்ற கதவையும் மூடும் சமயம் எஞ்சி இருந்தவர்கள் அவளிடம் விடைபெற வந்தனர்.
அத்தனை கோபத்தையும் சுமந்து கொண்டு எப்படி ருத்ரனால் மற்றவர்களிடம் இயல்பாக இருக்க முடிந்ததோ? ஆனால், சௌபியால் தனது மனசோர்வை மறைக்க முடியாமல் தோற்றாள். அனைவரும் விடைபெற்று சென்றதும், அவளது வாடிய வதனத்தை கண்ட காவேரி அக்கறையாய் விசாரிக்க, “ஒன்னும் இல்லைங்க அத்தை. லேசா தலைவலி” என்று சொல்லும்போதே அவளுக்கு கண்கள் கரித்தது.
“என்னடா ரொம்ப வலிக்குதா? கண்ணெல்லாம் கலங்கிடுச்சே. திருஷ்டி பட்டிருக்கும். இல்லாட்டி காலையில எப்படி இருந்த? இப்போ இவ்வளவு வாடுவியா? சரி போயி ரெஸ்ட் எடுடா. உங்க அம்மாவை சுத்தி போட சொல்லறேன்” என்று அக்கறையாக கூறிவிட்டு கிளம்பி விட்டார்.
மகனிடம் வந்தவர், “சௌபரணி கிட்ட சொல்லிட்டியா? சொல்லலைன்னா சொல்லிட்டு வா. நம்ம கிளம்பலாம்” என்றார். “பரவாயில்லை மா. கிளம்பலாம்” என்றவனை காவேரி விசித்திரமாக பார்க்க, “அம்மா எல்லாரும் கலாய்ப்பாங்க… வாங்க” என புன்னகையோடு சமாளித்தான்.
“அதுக்கில்லைப்பா சௌபிக்கு…” ‘தலைவலி’ என சொல்ல வர, “நான் போன்ல பேசிக்கறேன் நீங்க வாங்க மா” என பேச விடாமல் அழைத்து சென்றுவிட்டான். அவன் கிளம்பி செல்லும் வரையும் ஏக்கமாக வாசலையே பார்க்க மனமில்லாமல், அறையை அடைத்து உடைகளை மாற்றிவிட்டு படுக்கையில் சரிந்தாள் சௌபி. மனமும், தலையும் பாரமாய் இருக்க, தலையணையை நனைத்தபடியே சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
காவேரி சாந்தாமணியிடம் “சௌபரணிக்கு தலைவலி போல. சோர்ந்து தெரியறா. மறக்காம சாயந்தரம் சுத்தி போட்டுடுங்க” என சொல்லிவிட்டு சென்றதினால், சாந்தாமணி மகள் உறங்கட்டும் யாரும் தொல்லை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எந்தவித இடையூறும் இன்றி சௌபி உறங்கிக்கொண்டிருந்தாள்.
ருத்ரேஸ்வரன் இரவு உறங்குவதற்காக தன்னறையில் ஆயத்தமாக, காவேரி அவன் அறைக்கு வந்தார். “சௌபரணிகிட்ட பேசிட்டயாப்பா?” என காவேரி கேட்க, முதலில் அதிர்ந்து தடுமாறியவன், பின்னர் தன் தடுமாற்றத்தை மறைக்கும் பொருட்டு சுவரைப்பார்த்து திரும்பி நின்று, “பேசிட்டேன் மா” என பதில் தந்தான்.
“இப்போ தலைவலி எப்படி இருக்கு?” என காவேரி பொதுவாக கேட்க, “தலைவலின்னு நான் எப்போ உங்ககிட்ட சொன்னேன் மா?” என ருத்ரன் பதில் கேள்வி கேட்டான். அவனை வித்தியாசமாய் பார்த்தவர், “நிஜமாவே பேசுனியா?” என ஆராய்ச்சியாக கேட்க, “பேசிட்டேன்னு எவ்வளவு தடவை சொல்லறது மா” என சற்று எரிச்சல் குரலில் மொழிந்தான் மகன்.
இப்பொழுது தான் காவேரிக்கு சந்தேகமே வந்தது. மற்றவர்களிடம் நன்றாக பேசினான். சௌபரணியிடம் பேசினானா? என நினைவடுக்குகளில் தேட, எந்த பதிவும் கிடைக்கவில்லை. ருத்ரனையே ஏக்கமாக பார்த்தபடி நின்றிருந்த சௌபியின் தோற்றமும், கிளம்பும்போது பார்த்த கலங்கிய விழிகளுமே காவேரிக்கு நினைவில் வர ருத்ரன் எதற்காகவோ கோபமாக இருக்கிறான் என்று மட்டும் விளங்கியது.
அதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் பேசாமல், “சௌபரணிக்கு போன் பண்ணி குடு ஈஸ்வர் பேசிக்கறேன்” என்க, “நம்பர் தரேன் உங்க போன் பேசிக்கங்க” என இவன் புறக்கணித்தான்.
“சும்மா குடுடா. என் போன் என் ரூம்ல இருக்கு. புள்ளை வேற தலைவலியில கண்ணு கலங்கி நின்னுச்சு. இப்போ எப்படி இருக்குன்னு மட்டும் கேட்டுட்டு போயிக்கறேன். மீதியை ரூம்ல போயி பேசிக்கறேன்” என அவனையே பார்த்தபடி காவேரி கேட்க,
‘ஓ அப்ப தலைவலி அவளுக்குதானா? என்னவோ இருந்துட்டு போகட்டும்’ என விட்டேரியாக எண்ணினாலும், அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. எதுவும் பேசாமல் கைப்பேசியை எடுத்து அவள் எண்ணை அழுத்தி தாயிடம் தந்தவனின் முகம் சற்று சோர்ந்து தான் போயிருந்தது.