மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்ற இருவரில் ஒருவர் அவன் வண்டியை ஓட்ட முடியாது போனதில் அவனது வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு வந்து அவனது வீட்டில் விட, மற்றொருவர் ஆட்டோவில் அவனை அழைத்துக் கொண்டு வந்தார்.
வீடு வந்ததும் அவனைக் கைத்தாங்கலாக இருவரும் அவனது வீட்டிற்குள் அழைத்துப் போக, பூட்டி இருந்த வீடே அவர்களை வரவேற்றது.
“தம்பி! வீட்ல யாரும் இல்லைங்களா?! வீடு பூட்டி இருக்கே?!” என்று ஒருவர் கேட்க, அவனுள் அதிர்வு!
‘எங்க போனா இவ?!’ என்று.
“தம்பி!” என்று அவர் மீண்டும் அழைக்க,
“அ ஆமாம்! எல்லோரும் ஊருக்குப் போயிருக்காங்க!” என்றவன், தன்னிடம் எப்போதும் அவசரத்திற்கென இருக்கும் மற்றொரு சாவி கொண்டு கதவைத் திறந்தான்.
அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அமர வைத்தவர்கள், “கவனமா இருங்க தம்பி! நடக்கவே ரொம்ப சிரமப் படுறீங்க! வீட்டுலயும் யாரும் இல்லை! போன் பண்ணி விவரம் சொல்லுங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு!” என்றுவிட்டு வந்தவர்கள் கிளம்ப,
“ரொம்ப நன்றிங்க” என்றான்.
“பரவாயில்லை ப்பா ஜாக்கிரதையா இருங்க” என்று சொல்லிக் கிளம்பினர் இருவரும்.
உதவி செய்ய வந்தவர்கள் கிளம்பியதும், தன் கைபேசியை எடுத்தவன் அவளுக்கு அழைக்காமல், ரவியின் எண்ணிற்கு அழைத்தான்.
“உங்கக்கா வீட்டுக்கு வந்துட்டாளா?” என்றான்.
“ஹான் இப்போதான் மாமா வந்துச்சு!” என்றதும்,
“சரி” என்று அவன் போனை வைத்துவிட,
“அக்கா மாமா போன் பண்ணாரு! நீ அவர்கிட்ட சொல்லிட்டு வரலையா?!” என்று ரவி கேட்க,
“ஹ அது” என்று அவள் திணற,
“என்னடி ஆச்சு?!” என்றார் செல்லம்மா கலக்கமாய்.
“ஒண்ணுமில்லைமா!” என்றவள், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பிரச்சனையையும் பற்றிச் சொல்லாமல்,
“டேய்! ரவி பீசு கட்டிடியா?!” என்றாள் கவனத்தை திசை திருப்பும் வண்ணம்.
“ஏய்! நான் என்ன கேக்குறேன் நீ என்ன பேசிக்கிட்டு இருக்க?!” என்று செல்லம்மா அவளை சத்தம் போட,
“தாராளமா வரலாம்! ஆனா உன்னை வேணும்னு கட்டிக்கிட்டு போனாரே, அவரோட வந்திருந்தா பரவாயில்லை! இப்படி தனியா வந்து நின்னா என்ன அர்த்தம்?!” என்று செல்லம்மா கத்த,
“ம்! இனிமே தனியாதான் இருக்கப் போறேன்னு அர்த்தம்!” என்று தேனு அவர் தலையில் இடியை இறக்க, பளீரென்று அவள் கன்னத்தில் அறை விழுந்தது.
“என்னடி வாய் நீளுது! இப்படி தனியா இருக்கவா கட்டிக் கொடுத்தேன்! கிளம்பு உன் புருஷன் வீட்டுக்கு! நானும் வரேன். அன்னிக்கு வீராப்பா கட்டிக்கிட்டு போனாரு, உங்களைவிட அவளை நல்லா பார்த்துப்பேன்னு சொல்லி! இன்னி வரைக்கும் அன்னிக்கு நான் ஒருவார்த்தை சொல்லிட்டேன்னு கல்யாணம் ஆன பிறகு கூட நம்ம வீட்டுப்படி மிதிக்கலை! அவருக்கு அவ்ளோ புடிவாதம் இருந்தா என் பொண்ணு வாழ்கையைக் காப்பாத்துறதுல எனக்கு எவ்ளோ புடிவாதம் இருக்கும்” என்று செல்லம்மா எகிற,
தாயின் கையை எடுத்துத் தன் தலை மீது வைத்தவள், “என்மேல சத்தியமா நீ அவர்கிட்ட இது பத்தி எதுவும் கேட்கக் கூடாது! என்னை எப்படிக் காப்பாத்திக்கணும்னு எனக்குத் தெரியும்! இதையும் மீறி நீ அவர்கிட்டயோ, அவங்க வீட்லயோ பேசிதான் ஆகணும்னா நான் யார் கண்ணுலயும் படாத எங்கயாச்சும் போய்டுவேன்” என்று அவள் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்ல, செல்லம்மா கதிகலங்கிப் போனார்.
“பாவிமக இதுக்குத்தான் அப்போவே பெரிய இடம் வேண்டாம், நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி கட்டிக் கொடுப்போம்னு அடிச்சுக்கிட்டேன். இன்னிக்கு நான் பயந்த மாதிரியே ஆகிப் போச்சே!” என்று அவர் புலம்ப ஆரம்பிக்க,
“யம்மா தயவு செஞ்சு சும்மா இருக்கியா?!” என்று கத்தினாள் அவன் மீது இருந்த கோவத்தை எல்லாம் தாய் மீது கொட்டி.
“என்னடி! சும்மா இரு, சும்மா இருன்னுகிட்டு?! கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகலை! அதுக்குள்ள இப்படி தனியா வந்து நிக்குறியேடி?!” என்று கண்ணீர்விட,
“எம்மா நீ அழாம இருக்கிறதா இருந்தா நானிங்க இருக்கேன். இல்லைன்னா” என்றவள் எழுந்து விடுவிடுவென்று தன் உடைமைகளை வைத்து எடுத்து வந்திருந்த பையைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்ப,
அவள் கையிலிருந்த பையைப் பிடுங்கிப் போட்டவர், “நான் பேசலடி! எதுவும் பேசலை! எதுவும் பேசலை!” என்று தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
வேணுகோபாலன் எப்போதும் போல் குடியின் உபயத்தில் நன்கு உறங்கிக் கொண்டிருக்க, ரவியும் என்ன செய்வது என்று புரியாமல் பார்த்திருந்தான்.
*****
‘ச்சே! எப்போ நான் வேணாம்னு நீ வீட்டை விட்டே போயிட்டியோ, நீயும் எனக்கு வேண்டாம்டி!’ என்று முடிவெடுத்திருந்தான் அவனும் அந்நொடிகளில்.
அதீத கோபம் இருவரையுமே அவரவர் பக்கத்தின் நியாயத்தை மட்டுமே யோசிக்க வைத்து முடிவெடுக்க வைத்தது.
நாட்கள் நகர, நகர, அவன் தன்னைத் தேடி வரவில்லை என்று அவளுக்கும், அவள் ஒரு போன் கூட செய்யவில்லை என்று அவனுக்கும் கோபம் அதிகரித்ததே ஒழிய, கொஞ்சமும் குறையவில்லை!
இதில் அவரவர் வீட்டினர் வேறு இருவரையும் படுத்தி எடுக்க, தொந்தரவு தாளாமல் அவள் ஆட்டோ ஓட்டக்கூடாது என்று அவன் சொன்னதில்தான் பிரச்சனை ஆரம்பித்தது என்று தேனு செல்லம்மாவிடம் வாய்க்கு வந்ததை உளற,
“ஏன்டி அவர் சொல்றதுல என்ன தப்பிருக்கு?! அவ்ளோ பெரிய அந்தஸ்துல இருக்க மனுஷனோட பொண்டாட்டி ஆட்டோ ஓட்டுறதை எப்படி அவரால ஏத்துக்க முடியும்?! இப்போ நீ ஆட்டோ ஒட்டிதான் உங்க குடும்பம் நடக்கணுமா?!” என்று செல்லம்மா கத்த ஆரம்பித்துவிட்டார் இதுவரை மாப்பிள்ளை மீது இருந்த கோபமெல்லாம் போய்!
“எங்க குடும்பம் நடக்க வேணாம்! ஆனா இந்த வீட்டு மானம் போவக் கூடாதுல்ல!” என்ற தேனு,
“எல்லாம் எனக்குத் தெரியும்! அலமு அக்கா வந்து சத்தம் போட்டுட்டுப் போனதும், இந்தப் பையன் காலேஜு பீசு கட்ட முடியாத பரீட்சை எழுத விட மாட்டேன்னு சொன்னதும்! அதனால்தான் நான் மறுபடியும் ஆட்டோ ஓட்டுறேன்னு சொன்னேன்” என்றாள்.
இது எப்படி அவளுக்குத் தெரியும் என்பது போல் அவர் ரவியை முறைக்க,
“நான் சொல்லலைம்மா” என்றவன், கூடுதல் தகவலாய், “மாமா போன வாரமே வந்து காலேஜ் பீஸ் கட்டிட்டாரே அக்கா!” என்றான்.
“யாரும் நமக்கு பிச்சை போட வேண்டியது இல்லை! நமக்கு கைகால் இருக்குல்ல! நான் அலமு அக்காகிட்ட வாங்கித்தரேன். கொண்டு போய் குடுத்துடு. நான் நாளையில இருந்து வண்டி ஓட்டுறேன்” என்றவளை,
“இந்தா பாரு தேனு! நீ செய்யிறது கொஞ்சம் கூட சரியில்லை! என்ன கல்யாணம் ஆனதும் பெரிய மனுசி ஆயிட்டன்னு நினைப்பா?! ஜல்லிக்கரண்டியை எடுத்தேன்னு வையி, கல்யாணம் அனா பொண்ணுன்னு எல்லாம் பார்க்கமாட்டேன்! இப்போவும் வச்சு வெளாசிடுவேன் வெளாசி!” என்று சீறினார் செல்லம்மா.
“ம்மா! கட்டுன புருஷனா இருந்தாலும் அவங்க கையை எதிர்பார்த்து வாழக் கூடாதுன்னு நீதானே சொல்லுவ! உனக்கு மட்டும் ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?!” என்று பதிலுக்குக் கேட்க,
“அதுக்கு கட்டினவன் கூட இருந்து அவனோட வாழ்ந்து காட்டணும்! காசு பணம் சம்பாதிச்சு, அம்மா வீட்டைக் காப்பாத்த கட்டுனவனைத் தூக்கிப் போட்டுட்டு வரக் கூடாது!” என்றார்.
“ஐயோ! மறுபடியும் ஆரம்பிக்காத ம்மா! தயவு செஞ்சு என்னை நிம்மதியாவாச்சும் இருக்க விடு! நானே என் புள்ளைய நல்லபடியா காப்பத்தணுமென்னு ஓடிகிட்டு இருக்கேன்!” என்று அவள் பேச்சுவாக்கில் தான் கர்ப்பமாய் இருப்பதை உளறிவிட,
“என்னடி சொல்ற?! நீ கர்ப்பமா இருக்கியா?! கர்ப்பமா இருக்க இந்த நேரத்துலதான் ஆட்டோ ஓட்டுறியா?! அதனாலதான் உன் புருஷன் உன்னை ஆட்டோ ஓட்ட வேணாம்னு சொல்லி இருப்பார்! இதுக்காகவாடி சண்டை போட்டுட்டு வந்திருக்க! நீ பண்றது கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லை தேனு! கிளம்பு உன் புருஷன் வீட்டுக்கு!” என்று அவர் அவள் கையைப் பற்றி எழுப்ப,
‘ம்! புள்ளைய சாவடிக்கணும்னு சொல்ற அப்பன் ஆட்டோ ஓட்டினா புள்ளைக்கு எதுனா ஆகிடப் போகுதுன்னு கவலைப் படுவாராக்கும்!’ என்று மனதுள் சலித்துக் கொண்டவள்,
“நானும் என் புள்ளையும் உயிரோட இருக்கணும்னா இதோட இதைப் பத்தி ஒருவார்த்தைகூட பேசாதம்மா! தயவு என்னை நிம்மதியா இருக்கவிடு!” என்று அவரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட செல்லம்மா செய்வதறியாது நின்றார்.
மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி எண்ணி நொறுங்கி போனவர், மருமகனின் கைபேசி எண்ணை ரவியிடம் இருந்து வாங்கி அவனுக்கு அழைக்க, அவன் வெளிவேலையாக சென்றிருந்ததால் அவனால் அழைப்பை ஏற்க முடியவில்லை! சிறிது நேரம் கழித்து அவன் ரவி அவனுக்கு அழைத்திருந்ததைப் பார்த்து மீண்டும் அழைக்கும் சமயம் அவள் வீட்டிற்கு வந்துவிட்டிருக்க,