“ஒரு பொண்ணு, ஒரு பையன்! சோ கியூட்! ரெண்டு பேருமே! இந்தாங்க குழந்தைகளைப் பாருங்க” என்று தேனுவிடம் கொடுக்க வந்த செவிலித் தாயிடம்,
“இல்லை!” என்று மறுத்தவள்,
“நான் பிள்ளைகளைப் பார்க்கிறதுக்கு முன்னாடி என் அக்கா அவங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படறேன் சிஸ்டர். வெளில மீனான்னு என் அக்கா இருப்பாங்க. அவங்களையும், என் கணவரையும் கொஞ்சம் கூப்பிடுங்களேன்” என்றாள்.
“ம்!” என்று ஆச்சரியமும், புன்னகையும் நிறைந்த முகத்துடன் வெளியேறியவர்,
“இங்க மீனா யாருங்க. அவங்களை உள்ள கூப்பிட்டாங்க! அப்படியே தேனுவோட கணவரையும்” என,
“என்னாச்சு சிஸ்டர்!” என்று இருவரும் பதறி அவர் அருகே வர,
“பயப்படாதீங்க! அவங்களுக்கு குழந்தைங்க நல்லபடியா பிறந்துட்டாங்க! அவங்களும் நல்லா இருக்காங்க! அவங்கதான் உங்களைக் கூப்பிட சொன்னங்க” எனவும், இருவரும் உள்ளே செல்ல, செவிலியரும் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
மூவரும் உள்ளே வந்ததைப் பார்த்ததும், முகம் முழுக்க புன்னகையுடன், “சிஸ்டர், பெண்குழந்தையை என் அக்காகிட்ட கொடுங்க” என்றாள் தேனு.
செவிலி அழகாய் சிரித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னச்சிசுவை அவர் கையில் கொடுக்க, கைகள் நடுங்க, உடல் சிலிர்க்க, கண்கள் கலங்க, ஒருவித பரவசத்துடன் பிள்ளையைக் கையில் வாங்கிய மீனா, பிள்ளையை உளமார உச்சிமுகர,
“எப்படி இருக்கா அக்கா உங்க லல்லி?!” என்றாள் தேனு முகம் கொள்ளா பூரிப்புடன்.
“ல லல்லி!” என்று மீனா உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருக, தேனுவைப் பார்க்க,
“உங்க லல்லிதான் அக்கா! மாமாகிட்ட கொண்டு போய்க் காண்பிங்க!” என,
“தேனு!” என்று மீனா கண்களில் நீர் பெருக அவளருகே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு வர,
“அக்கா இது அழ வேண்டிய நேரம் இல்லை! உங்க லல்லியோட மறுபிறப்பைக் கொண்டாட வேண்டிய நேரம்! இனி எப்பவும் நீங்க அழவே கூடாது! உங்க பொண்ணு லல்லி உங்ககிட்டயே திரும்ப வந்துட்டா” என,
“தேனு!” என்று அவர் நன்றிப் பெருக்குடன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் சிந்த,
“ப்ச்! இப்போதானேக்கா சொன்னேன்! இனி நீங்க அழவே கூடாது! போங்க, போய் உங்க லல்லியை மாமாகிட்ட கொடுங்க” என்று கண்டிப்புடன் சொல்ல,
“இதோ இதோ போறேன்டா!” என்று தங்கள் லல்லியை கணவனிடம் காட்ட, ஆவலுடன் ஓடினார் மீனா.
இதையெல்லாம் மனம் நெகிழ தூரத்தில் நின்றபடி பார்த்திருந்தவனைக் கண்டு,
“என்ன ஆபிசரே! உங்க பையனைக் கண்டுக்கவே மாட்றீங்க! இதோ பக்கத்துல படுத்துகிட்டு இருக்கார் பாருங்க! வந்து தூக்குங்க” என்று மனைவி குரல் கொடுக்கவும்,
“குடுங்க! குடுங்க!” என்று கன்னத்தைக் காட்ட, அவனும் மறுக்காமல் அவள் கேட்ட பைனை கொடுக்கத் துவங்க, வீல் என்று பெருங்குரலெடுத்துக் கத்தினான் அவர்களின் சீமந்த புத்திரன்.
“அடக் கடவுளே! என்னடா உங்க அப்பா நாலு பைன் கூட கொடுக்கலை அதுக்குள்ள உனக்குப் பொறுக்கலையா?!” என்று தேனு பிள்ளையைச் செல்லமாய் வைய,
அவன் பைன் கொடுப்பதை நிறுத்தியவுடன் அழுகையை நிறுத்தியிருந்தான் அவர்களின் மகன்.
“இதென்னடி உன் ஃபைனுக்கு வந்த சோதனை!” என்று அழகன் சிரிக்க,
“ம்ஹும்! அதெல்லாம் எனக்குத் தெரியாது! ரூல்ஸ் ஆர் ரூல்ஸ்! பைன் கொடுத்துதான் ஆகணும். கொஞ்சம் கொஞ்சமாவாச்சும்!” என்று கண்டிப்புடன் கட்டளையிட்டாள் ஆர்டிஓ ஆபிசரின் அன்பு மனைவி.
லல்லியை வெளியே தூக்கிக் கொண்டு சென்ற மீனா, “என்னங்க லல்லி! நம்ம லல்லி! நம்ம லல்லிங்க! தேனு சொன்னா! நமக்கே நமக்குன்னு தேனு கொடுத்திருக்கா! அத்தை லல்லி அத்தை!” என்று ஆனந்தக் கண்ணீர் பெருக மீனா பிள்ளையை இருவரிடமும் காண்பிக்க, இருவருக்குமே சில நொடிகள் எதுவும் புரியவில்லை. ஆனால் புரிந்த நொடி, அவர்களுக்குள் எல்லையில்லா மகிழ்ச்சி சூழ, லல்லியை ஆசைத் தீரக் கொஞ்சியபடி, தேனு இருந்த அறைக்குச் சென்றனர்.
“தேனு!” என்று குமுதா அவள் அருகே வந்து அவள் கைகளைப் பிடித்துக் கண்ணீர் சிந்த,
“ஆனாலும் நீங்க எல்லோரும் ரொம்ப மோசம்! உங்க லல்லியைப் பார்த்ததும், என் பையனை மறந்துட்டீங்களே!” என்று கோபித்துக் கொள்ள,
“அட என் ராஜாவே! பாட்டி உன்னை மறப்பேனா! நீ இங்க இருக்கியா?!” என்று மகனின் கையில் இருந்த பேரனை அள்ளி அணைத்துக் கொண்டார் எல்லையற்ற சந்தோஷத்துடன்.
தங்கள் வீட்டின் வரங்களாய் வந்த தெய்வங்களை அனைவரும் சீராட்டி பாராட்டிக் கொண்டிருக்க,
வெறுமையாய் இருந்த வீட்டில் இரட்டை ஆனந்தமாய் மனைவி எல்லோருக்குமே சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்ததை எண்ணி,
“என்னடி கைம்மாறு செய்யப் போறேன் உனக்கு?!” என்று அவன் நெஞ்சம் நிறைய காதலுடன் மனைவியிடம் மற்றவர்களுக்கு கேட்கா வண்ணம் மெல்லிய குரலில் கேட்க,
அவளோ, “ம்! அடுத்த வருஷத்துக்குள்ள இன்னொரு குட்டி ஆபிசரை ரெடி பண்ணிக் கொடுங்க போதும்!” என்று கண்ணடித்தாள் குறும்பாய்.
“அடி!” என்று செல்லமாய் மிரட்டியவன்,
“ஒரு குட்டி ஆபீசர் இல்லை, ரெண்டு குட்டி ஆபிசரை ரெடி பண்ணிட்டா போச்சு!” என்று இவனும் கண்ணடித்து கூடுதலாய் காற்றில் முத்தத்தைப் பறக்கவிட்டுச் சொல்ல, அவன் செய்கையில் சட்டென யாரும் பார்க்கிறார்களா, என்று திரும்பிப் பார்த்த தேனுவை,
“நாங்க எதுவும் பார்க்கலை!” என்று சொல்லி மீனா வெளியேற அவரைத் தொடர்ந்து குமுதா, ரகுபதி இருவரும் சிரித்தபடி வெளியேறினர்.
“ச்சோ!! ஏன் ஆபிசரே! இப்படிப் பண்றீங்க! வெட்கமா போச்சு!” என்று அவள் சிணுங்க,
“நீதானடி கேட்ட, அதான் கொடுத்தேன்” என்றவன், மீண்டும் மனைவியின் அருகே வந்து காற்றில் பறக்க விட்ட முத்தத்தை அச்சாரமாகவே பதிக்க, அவன் முத்தத்தின் மொழிகள் அவன் பேசாதா மௌனங்களையும் அவளுக்குப் பேசும் வார்த்தைகளாய் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தன எல்லை கடந்த காதலுடன்…
******
ஆறு வருடங்களுக்குப் பிறகு, “சித்துப்பா… சித்துப்பா…! ஐயம் ரெடி!” என்று ஓடி வந்து காரில் ஏறிய லல்லியை, அப்படியே தூக்கி மடியில் போட்டுக் கொண்டவன்,
“உன் சித்தாவும் தம்பிங்களும் என்ன பண்றாங்க?!” என,
“சித்தா சின்ன தம்பிக்கு டிரஸ் பண்ணிட்டு இருக்காங்க! பெரிய தம்பி, அப்பா ரூம்ல ஏதோ பண்ணிட்டு இருக்கான்” என,
“அப்போ லல்லி குட் கர்ள்தானே சித்துப்பா?!” என்று அவள் கேள்வி எழுப்ப உஷாரனவன்,
“ஹான் குட் கர்ள்தான் ஆனா இன்னிக்கு குட் கர்ள் யாரும் ஐஸ் க்ரீம் சாப்பிடக் கூடாது!” என்று அவள் கேட்கும் முன்பே தடை போட்டவன்,
“ஓடுங்க ஓடுங்க! போய் அம்மா, அப்பா, பாட்டி, சித்தா தம்பிங்க எல்லோரையும் கைபிடிச்சி சீக்கிரம் கூட்டிட்டு வாங்க! லேட்டா போனா உன் ரவி மாமாவும், சுஜி மாமியும் கோச்சுப்பாங்கல்ல!” என்று அவள் கவனத்தை திசை திருப்ப,
“ஹான் தோ! போறேன் சித்துப்பா” என்று ஒரே ஓட்டமாய் ஓடியவள், அனைவரையும் கையோடு அழைத்துக் கொண்டே காருக்குத் திரும்பினாள் நல்ல பிள்ளையாய்.
“எவ்ளோ நேரம் எல்லோரும் காத்துட்டு இருப்பாங்கல்ல!” என்று அவன் தேனுவை முறைக்க,
அதைக் கேட்டு, அவன் மடியில் அமர்ந்திருந்த லல்லி, “ஹஹா!” என்று வாய்பொத்திச் சிரிக்க,
“சொல்லாத லல்லிமா” என்று அவன் கிசுகிசுக்க,
“ம்! சித்துப்பா!” என்றவள்,
“அப்போ ஐஸ் கிரீம்!” என்று ஹஸ்கி வாய்சில் கேட்க,
“ம் ம்! வாங்கித் தரேன்!” என்று வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று அந்த சித்தப்பனுக்கு.
படிப்பே வராது சுற்றிக் கொண்டிருந்த ரவி, படிப்பின் அருமை புரியத் துவங்கிய நாள் முதல் பேரழகனிடம் கேட்டு தனக்கு வராத படிப்பை மாங்கு மாங்கு என்று படிக்க ஆரம்பிக்க நாள் போக்கில் கஷ்டமாய் தெரிந்த படிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அவனுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. ஒருவழியாய் பிகாமில் நன்கு தேர்ச்சி பெற்று வெளியே வந்தவனை பேரழகன் பார்ட் டைம் ஜாப் செய்தவாரே சார்டட் அக்கவுண்ட்ஸ் படிக்குமாறு சொல்ல,
“மாமா என்னால முடியுமா?!” என்று கேட்ட, ரவியிடம்,
“படிப்பே வராதுன்னு நினைச்சிட்டு இருந்த. இப்போ அரியர் வச்சா எல்லா சப்ஜெக்ட்லயும் என்பது பெர்சென்ட் எடுத்து பாசாகி இருக்க! உன்னால முடியும்னு நினைச்சா முடியும். நான் கிளாஸ் சேர்த்து விடறேன்! நீ முயற்சி பண்ணா நல்லாவே படிக்கலாம்!” என்று தன்னம்பிக்கைக் கொடுத்து சேர்த்து விட, இதோ இன்று ஒரு கார்பரேட் கம்பெனியில் நல சம்பளத்திற்கு ஆடிட்டராக வேலை பார்க்கிறான் ரவி.
சுஜியின் அம்மா யாரை வேண்டாம் என்று ஒதுக்கினார்களோ, அவரே செல்லம்மாவிடம் வந்து பேசி மகளுக்காய் ரவியைக் கேட்க, குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து, இதோ இன்று அவர்களது நிச்சயதார்த்தம் வெகு சிறப்பாய் நடைபெற இருந்தது.
“வாங்க வாங்க மாப்ளை! எவ்ளோ நேரமா உங்களுக்காக காத்துகிட்டு இருக்கோம்!” என்று செல்லம்மா மருமகனை பலமாய் வரவேற்ற,
“எல்லாம் இவளாலதான் அத்தை” என்று மனைவியைக் கோர்த்துவிட்டு விட்டு உள்ளே சென்றுவிட்டான் அழகன்.
“இவரை!” என்று அவள் பல்லைக் கடிக்க,
“என்னடி இவ்ளோ நேரம்?! கல்யாணப் பொண்ணு என் மருமகளே ரெடியாகிடுவா போல! நீ ரெடியாகி வர இவ்ளோ நேரமா?!” என்று தேனுவை மட்டும் அவர் திட்டியபடி வரவேற்க,
“இதோ பாரும்மா! வரும்போதே டென்ஷன் ஆக்காதா! காலையில இருந்து இங்க வேலை பார்த்துட்டு நாலு மணிக்குதானே எங்க வீட்டுக்கே போனேன். நான் என்ன உன் மாப்பிள்ளை மாதிரி, ஜம்முன்னு வீட்டுக்குப் போனதும் குளிச்சு ரெடியாகிட்டு கார்ல்ல வந்து உட்கார்ந்துட்டு நொச்சு நொச்சுன்னு ஹார்ன் அடிச்சிட்டு இருக்க முடியுமா! உன் ரெண்டு பேரப் பிள்ளைகளையும் ரெடி பண்ண வேண்டாம்! அவனுங்களை குளிக்க வைக்கவே பெரிய போராட்டம்! இதுல நான் வேற ரெடி ஆகணும்” என்றவள்,
“வர வர உனக்கு பொண்ணு, புள்ளையை விட, மருமகனும், மருமகளும்தான் பெருசா போயிட்டாங்க! இருக்கட்டும் இருக்கட்டும்! எங்க மாமியாரும் என்னைத் தங்கமாதான் பார்த்துக்கறாங்க! இந்த ரவி பயலுக்குக் கல்யாணம் ஆகட்டும் உன் வீட்டுக்கு வரேனா பாரு!” என்று அவள் அம்மாவை மிரட்ட,
“அட கொச்சுகிட்டியா தேனே! நீதானடி நான் பெத்தெடுத்த மொதமுத்து! உன்னை போய் அம்மா நிஜமா திட்டுவேனா?!” என்று கன்னம் பிடித்துக் கொஞ்ச,
“இப்படி ஐஸ் வச்சு வச்சே ஏமாத்துங்க எல்லோரும்!” என்றவள், மடமடவென நிச்சயதார்த்த வேலைகளை எடுத்துப் போட்டு செய்ய, சிறிது நேரத்தில் சுஜியும், ரவியும் அழகாய் மணமக்கள் கோலத்தில் மேடைக்கு அழைத்து வரப்பட, எல்லா சம்பிரதாயங்களும் இனிதே நடைபெறத் துவங்கின.
மீனா, ரகுபதி, குமுதா, மூவரும் மூன்று பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைச் செவ்வேனச் செய்ய, பேரழகன் உணவுப் பந்தியில் எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று கவனிக்கச் சென்றிருந்தான்.
வேணுகோபாலனும், செல்லம்மாவும், சுஜியின் தாய் தந்தையும் மேடையில் நின்று தங்கள் மக்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நலங்கு வைபவத்தை கண்ணார ரசித்துக் கொண்டிருக்க, தேனு அனைவருக்கும் தாம்பூலம் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
எல்லா சம்பிரதாயங்களும் இனிதே நிறைவடைந்து, மாப்பிள்ளையும் பெண்ணும் உணவருந்தச் செல்ல,
“நீயும் வா தேனம்மா! எவ்ளோ நேரம்தான் சாப்பிடாம சுத்திக்கிட்டு இருப்ப!” என்று மனைவியின் கைபிடித்துச் இழுத்துச் சென்றவன்,
மனைவிக்கு இலைப் போட்டு தானே பரிமாற, “மாமா நீங்க ஏன் இதெல்லாம் செய்துகிட்டு!” என்று ரவி தடுக்க,
“ஐயோ மாப்ளை நீங்க உட்காருங்க!” என்று செல்லம்மா அனைவரையும் அமர வைத்து தான் பரிமாறப் போக,
“நீங்க போய் உட்காருங்க சம்மதியம்மா! நான் பரிமாறுறேன்” என்று வந்து நின்றார் சுஜியின் அம்மா.
“பார்த்தியா ரவி! பணம் செய்யுற மாயம்!” என்று சுஜி தன் அம்மாவை பார்த்து ரவியிடம் கிசுகிசுக்க,