பதினெட்டே வயதான ஆண்மகன்தான் என்றாலும், கொஞ்சம் பெரியவனைப் போல்தான் இருப்பான் அப்போதே! அவ்வளவு பெரிய பையன், தனக்காய் மண்டியிட்டு, கண்களில் கண்ணீர் பெருக நிற்பதைக் காணச் சகியாமல், அவர் எழுந்து அமர, அவன் தட்டில் இருந்த  உணவைப் பிசைந்து, அவருக்கு ஊட்டுவதற்கு எடுத்துப் போக, ஒரு வாய் கூட அவன் கொடுத்திருக்கவில்லை! அதற்குள் தட்டைப் பிடுங்கி வீசி இருந்தார் ரகுபதி!
     “என் பிள்ளையைக் கொன்னது போதலைன்னு எங்க எல்லோரையும் கொன்னு இந்த வீட்டு சொத்துக்கெல்லாம் ஒரே ஆண் வாரிசாகப் பார்க்குறியாடா?! கொலைகாரப் பாவி!” என்று ரகுபதி தனக்கிருந்த கோபத்தில் சம்மந்தமே இல்லாமல், அவன் ஏதோ வேண்டுமன்றே லல்லியைக் கொன்றான் என்ற ரீதியில், வார்த்தைகளில் விஷம் தோய்த்து இறக்க, இதற்கு அவன் அன்றே ஜெயிலுக்கே சென்றிருக்கலாம் என்றானது அவனுக்கு!
     அவர் வார்த்தைகளின் வீரியம் தாள முடியாமல் அங்கிருந்து வேகமாய் எழுந்தவன், விடுவிடுவென தன் அறைக்குச் சென்று, தனது ஓரிரு துணிமணிகளை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினான் யாருக்கும் சொல்லாமல். இருந்த மனநிலையில் குமுதாவும் அவன் எங்கு செல்கிறான் என்று கேட்காமல் விட்டுவிட,
     அங்கு உள்ளே மீனா, “நீங்க பேசினது உங்க மனசுக்கே தப்பா தெரியலை! எங்க அண்ணன் பேச்சைக்கேட்டு நீங்க இப்படி பேசுறது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லைங்க! வர்றவங்க போறவங்க ஆயிரம் பேசலாம்! நம்ம வீட்டுப் பிள்ளையைப் பத்தி நம்மளுக்குத் தெரியாதா?! மரணம்கிறது எல்லோருக்கும் வர்றதுதான். ஆனா நம்ம லல்லிக்கு…” என்றவர் தொண்டைக் குழி அடைத்தது.
     கண்களில் கண்ணீர் புரள, “ஏற்கனவே லல்லியை இழந்துட்டோம்! இன்னொரு முறை வாய்தவறியும் தம்பியை அப்படி பேசி அவனையும் இழந்துடாதீங்க!” என்றார் மீனா அண்ணியாய் அல்லாமல் அன்னையாய். 
     இரவு நெடுநேரமாகியும் அவன் திரும்பவில்லை எனும்போதுதான் வீட்டில் இருப்போருக்கு சந்தேகம் எழுந்தது. அவன் கைப்பேசி எண்ணிற்கு அவர்கள் முயற்சித்துப் பார்க்க, அதுவும் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.
     ரகுபதி கோபத்தில் புத்திபிசகி அப்படிப் பேசி விட்டிருந்தாலும், தம்பியைக் காணவில்லை என்றதும் கலங்கித்தான் போய்விட்டார். அந்நேரமே அவர் அவனது இரு நண்பர்களின் வீட்டிற்குப் போய் விசாரிக்க, அவன் தன் கல்லூரியில் படிக்கும் வேறு ஒரு மாணவனின் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிந்தது.
     அந்த முகவரியை வாங்கிக் கொண்டு அவர் அந்நேரமே அங்கும் ஓட, அவரை மேலும் அலைய விடாமல் அவன் அங்குதான் அமர்ந்திருந்தான்.
     “இங்க எதுக்குடா வந்த?! வீட்டுக்குக் கிளம்பு” என்று ரகுபதி எடுத்த எடுப்பிலேயே அதட்டலாய்ச் சொல்ல,
     “எனக்கு எதுவும் வேணாம்” என்றான் ஒற்றை வரியில்!
     “எதுவும் வேணாம்னா?!” என்று அவர் புருவம் நெரிக்க,
     “நீங்க சொன்ன மாதிரி எதுவும் வேணாம்” என்றான் அவர் காலையில் சொன்னதை வைத்து.
     அவன் தான் காலையில் பேசியதை வைத்துதான் அப்படிச் சொல்கிறான் என்று புரிய, “சரி தப்புதான்! நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது! கிளம்பு வீட்டுக்கு!”  என்றார் உடனே தவறை ஒப்புக் கொண்டு.
     “இல்ல! நான் வர” என்று அவன் முடிப்பதற்குள்ளேயே,
     “கிளம்புன்னு சொன்னேன்!” என்று அவர் மிரட்ட,
     “நான் தான் வரலைன்னு சொல்றேன்ல!” என்றான் அவனும் கோபமாய்.
     “என்னடா அவ்வளவு பிடிவாதம் உனக்கு?!” என்று அவர் கை ஓங்கப் போக,  
     “ஐயோ அண்ணா! இருங்க! அவன் வீட்டுக்கு வருவான்” நானே அவன்கிட்ட வந்ததுல இருந்து அதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்” என்ற அவன் நண்பன்,
     “டேய்! அழகா, ஏற்கனவே உங்க வீட்ல எல்லோரும் பாப்பாவ இழந்த வருத்தத்துல இருக்காங்க! இப்போ நீயும் அவங்களை இப்படி வேதனைப் படுத்துறது கொஞ்சம் கூட சரியில்லை!”
     “யாருக்கா இருந்தாலும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்! ஏதோ ஒரு கோபத்துல அப்படிப் பேசிட்டாரு! உன் அண்ணன்தானே! அவருக்கு உன்னைத் திட்ட உரிமை இல்லையா?! அதைவிட உன் அண்ணி! அவங்க உன்மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தா, உன்னை போலீஸ் பிடிக்க வரச்சகூட அப்படிப் பேசி அனுப்பி இருப்பாங்க! அவங்களுக்காக வாச்சும் நீ வீட்டுக்குப் போய்தான் ஆகணும்!” என்றான் பொறுமையாய் எடுத்துக் கூறி!
     அவனுக்கும் இதெல்லாம் புரியத்தான் செய்தது! ஆனாலும் ஏற்கனவே லல்லி விஷயத்தில் அவன் மனம் நொந்து போய் இருக்க, இதில் அண்ணன் கேவலம் சொத்தைக் காரணமாக வைத்து தன்னை இப்படிப் பேசியதில், அதுவும் அண்ணியைக் கொல்லப் பார்க்கிறேன் என்றதை எல்லாம் சாதரணம் விஷயமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை! ஆனாலும் அவன் அண்ணிக்காய் அங்கிருந்து கிளம்பினான்.
     அவன் வீடு திரும்பியதும், குமுதா, “எங்கடா போன?!” என்று அழுகையுடன் ஓடி வர,
     வசந்தி, “டேய்! அழகா! ஏன்டா இப்படிப் பண்ண?! நாங்க எவ்ளோ பயந்துட்டோம் தெரியுமா?!” என்று கட்டிக் கொண்டாள் தம்பியை.
     சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த மீனா என்ன சொல்வாரோ, என்று அவன் பார்க்க, அவர் அவனிடம் நேரடியாய் எதுவும் பேசாமல், “வசந்தி, அவனுக்கு நாம எல்லோரும் முக்கியம்னா இனி இப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான்னு நினைக்கிறேன்” என்று அவனிடம் நேரடியாய் சொல்லாமல் வசந்தியிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட, அவனுக்கு ஏதோ போல் ஆனது!
     அன்றிலிருந்து அவனது துடுக்குத்தனம், வேகம் எல்லாம் ஒழிந்து, அனைவருடனும் ஒரே வீட்டில் இருந்த போதும் தானே தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டான்.
     அன்றிலிருந்து, கல்லூரி நேரம் முடிந்த பிறகு வீட்டில் இல்லாமல் இருக்கவும், தனது செலவுகளைத் தானே பார்த்துக் கொள்ளவும், மாலை நேரம் பகுதி நேர வேலை வாய்ப்பில் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டான்.
     இந்தச் சம்பவம் நடந்தபின், தன் தாயிடம் கூட மனம் விட்டுப் பேசுவதை அவன் நிறுத்திக் கொண்டுவிட, லல்லி இறந்து இல்லாமல் போனாள் என்றாள், இவன் இருந்தும் இல்லாதாவன் போல் ஆனான் வீட்டில்.
     கல்லூரி படிக்கும் போதே நிறைய அரசாங்க வேலைக்கான தேர்வுகளை எழுதத் துவங்கியவன், கல்லூரி முடித்த பின் ஆர்டிஓ ஆபீசருக்கான தேர்வு அறிவிக்கப்ட்டிருப்பதைக் கண்டதும் அதற்கும் விண்ணப்பித்தான். நாடு முழுக்க இருக்க ட்ராவல்ஸ் கம்பெனிகள்ல நடக்குற தில்லுமுல்லை நம்மால சரி செய்ய முடியாது என்றாலும், அட்லீஸ்ட் நம்ம போஸ்டிங் ஆகுற ஏரியாவுலயாச்சும் என் அப்பா மாதிரி ஏமாத்திக்கிட்டு ட்ராவல்ஸ் நடத்துறவங்களை தடை செய்யலாம் இல்லை! என்று எண்ணி.
     இதற்கிடையே பேத்தி இறந்ததற்கு தனது பணத்தாசையும், அலட்சியமுமே காரணம் என்று தன் மனதளவில் உணர்ந்த மனோகர், பேத்தி இறந்த மறுநாளே தனது டிராவல்ஸில் இருந்த அத்தனை பிரச்சனைக்குரிய வண்டிகளையும் சரி செய்ய ஏற்பாடு செய்தார். ஆனாலும் மகன் அன்று முதல் அவரிடம் ஒரு வார்த்தைக் கூட முகம் கொடுத்து பேசாமல் போனதாலும், பேத்தியின் மரணத்திற்கும், மகனின் இந்நிலைக்கும் தானே காரணம் என்பதை அவர் மனசாட்சி அறிந்ததாலும், கவலையில் நோய்வாய்பட்டு படுத்துவிட்டார் சில நாட்களிலேயே.
     இதில் பேரழகனுக்கு வேலை கிடைத்ததும், அந்தச் சாக்கிலாவது இந்த வீட்டை விட்டும் ஊரை விட்டும் போகலாம் என்று எண்ணியவன், வேறு ஏதேனும் ஊரில் தனக்கு போஸ்டிங் கொடுக்குமாறு விண்ணப்பித்திருந்தான் ஆரம்பத்திலேயே.
      அவனால் தினம் தினம் லல்லியைக் கொன்ற அந்த இடத்திலேயே இருந்து கொண்டு அந்தக் காட்சி கண்முன்னே வந்து வந்து அவனை அணுஅணுவாய்க் கொள்வதைத் தாங்கமுடியவில்லை!
     அவன் எதிர்பார்த்தபடியே அவனுக்குச் சென்னையில் போஸ்டிங் கிடைக்க, அதை வீட்டில் தெரிவித்தவன், தான் சென்னை கிளம்புவதாய்ச் சொல்ல, மனோகர் மட்டுமின்றி, குடும்பத்தினர் அனைவரும் அவனைத் தனியாக அனுப்ப முடியாமல் தவித்தனர்.
     இந்த நிலையில், மனோகர் ஓர் இரவில் உறங்கிய பிறகு எழாமலேயே இறந்து போக, அவரும் இறந்து போன அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல், குமுதா தானும் சென்னை வருவதாக அவனிடம் சொல்ல, மீனா,
     “எதுக்கு அத்தை நீங்க அங்க, நாங்க இங்கன்னு! எல்லோருமே சென்னைக்கே போய்டுவோம்” என, ரகுபதிக்கும் அதுவே சரியென்று பட்டது. திருநெல்வேலியில் நடத்திக் கொண்டிருந்த ட்ராவல்சை தங்களது நம்பிக்கைக்குரிய கணக்காளரின் பொறுப்பில் விட்டு விட்டு சென்னையில் புதிதாக ஒரு வீடு வாங்கி அனைவரும் அங்கு குடியேறினர். ரகுபதி அங்கும் தங்களது ட்ராவல்சை விரிவு படுத்த முயன்று இதோ இன்று அவர்களின் ட்ராவல்ஸ் நல்ல பெயர் சொல்லும் விதமாய் வளர்ந்திருந்தது. ஆனால் என்னதான் இடம் மாறிவிட்டாலும், லல்லி இல்லாத அவர்களின் வீட்டில் வெறுமைதான் நிறைந்திருந்தது வருடங்கள் கடந்த பின்னும்…
                                     -மௌனம் மொழி பேசுமா?!