Advertisement

                                                                 

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 5

 

இந்த அவசர உலகத்தில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எனத் தெரியாமலே பாதி நாள்கள் இயந்திரத்தனமாக கரைந்து விடுகிறது.. எஞ்சிய நாட்களில் இளைப்பாறலாம் என்றால் அதற்கும் ஏதோ ஓர் ரூபத்தில் தடை.. ஆனால் இங்கே இந்த கிராமத்தில் !

இன்னும் ஏர் பூட்டி காளை மாட்டைக் கொண்டு உழவு.. இயற்கையை வாழ வைத்து தாமும் வாழ்ந்து தன்னிறைவை அடையும் மக்கள்..

தாத்தாவின் வாயிலாக அனைத்தையும் கூறக் கேட்டவனுக்குள் சொல்ல முடியாத உணர்வு..

அவன் விரும்புவது இந்த வாழ்கையை தானே ! இங்கேயே இப்படியே இருந்து விட மாட்டோமா என்ற எண்ணம் தான் மனம் முழுக்க.. அதனை தாத்தாவிடம் சொல்லவும் செய்தான்..

அத்துவிற்கு அது இயல்பாக அவனது மனதில் எழுந்த ஆசை.. ஆனால் அவருக்கு ?

இதே வார்த்தையைத் தான் வேறு ஒரு சூழ்நிலையில் இவரது மகன் சொல்லிவிட்டு அனைத்தையும் மறந்து மறுத்து இங்கிருந்து சென்றார்.. அத்துவிடமிருந்து வெளிப்பட்ட இந்த வார்த்தைகள் தாத்தாவிற்கு எப்படியொரு நிறைவை அளித்தன என்பது அவருக்கு மட்டுமே தெரியும் !

“ என்ன தாத்தா எதுவுமே சொல்லாம இருக்கீங்க.. ”

அத்து இவ்வளவு பேசுவான் என்று கூறினால் அவனை அறிந்த யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் ஏன் அவனே ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்… ஆனால் இன்றோ தாத்தாவிடம் வளவளக்க ஆரம்பித்தவன் நிறுத்த மாட்டேன் என்கிறான்..

அவருடன் பேசி.. அவரைப் பேச வைத்து இத்தனை நாள் அவர் அனுபவித்த தனிமையை ஓட ஓட விரட்ட எண்ணினான்.. ஆனால் இத்தனை வருடங்களாய் தனிமையால் வாடி வடுவாகிப் போன மனக் காயம் தான் அத்தனை சீக்கிரம் ஆறுமோ ? இல்லை மாயமாய் மறைந்து தான் போகுமா ?

பொழுது போனதே தெரியாமல் இத்தனை நாட்கள் பேசாததை எல்லாம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.. தாத்தா அந்தக் கால மனிதர்.. வருடங்கள் தான் உருண்டோடிவிட்டனவே தவிர அவர் இன்னும் முந்தைய நூற்றாண்டில் வாழும் மனிதரே.. மனதாலும் செயலாலும்..

அத்துவும் கூட இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவனாகிலும் அவன் விரும்பி ஏற்பவை பழைய பாரம்பரியங்களும் ரசனைகளுமே.. இருவருமே ஏறத்தாள ஒரே மாதிரி தான்.. அதனால் தான் என்னவோ சட்டென அத்துவாலும் ஓட்டிக்கொள்ள முடிந்தது..

இதே போல் இன்றைய எல்லா இளம் தலைமுறையினரிடமும் எதிர்பார்த்து விட முடியாது.. அவர்களின் உலகம் அம்மா.. அப்பா.. தாத்தா.. பாட்டி.. சித்தி.. சித்தப்பா.. அத்தை.. மாமா.. அன்பு.. பாசம்.. இதெல்லாமா கொண்டுள்ளது !!

ஆப்பிள்.. ஆண்ட்ராய்ட்.. முகநூல்.. இன்ஸ்டக்ரம்.. வாட்ஸ்ஆப்.. ட்விட்டர்.. டெலக்ரம்.. ஷேர்சாட்.. லைக்ஸ்.. ஸ்டேடஸ்.. என வேறு ட்ரெண்டில் அல்லவா உள்ளது.. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.. காலம்.. காலம் தான் மாறிக் கொண்டிருக்கிறது.. மாற்றிக் கொண்டிருக்கிறது அனைத்தையும் ! அனைவரையும் !

பேச்சினூடே அவனுடைய கடிகாரம் சப்தமிட்டு என்னையும் கவனி என்று சொல்லி அதனைப் பார்த்தான்.. நேரம் சரியாக பன்னிரண்டு மணி..

“ தாத்தா பேசிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல.. வாங்க சாப்பிடலாம்.. இந்த வயசுல இப்படி சாப்பாட்டுல கவனமில்லாம இருந்தா எப்படி ?  ” என கேட்டுக் கொண்டே எழுந்து சமையல் கட்டுப் பக்கம் போனான்..

அவனுக்கெங்கே தெரியப் போகிறது ? தாத்தாவிற்கு தானே தெரியும் அவனும் அவனுடைய பேச்சும் அன்பும் பாசமும் அக்கறையும் அவர் மனதை மட்டுமில்லாது வயிறையும் நிறைத்து விட்டதென.. சொல்லப்போனால் பசி என்ற ஒன்றை அவர் உணரவே இல்லை.. இத்தனைக்கும் எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விடும் பழக்கம் கொண்டவர்..

ஒரு புன்னகையுடன் எழுந்து அத்துவைத் தொடர்ந்தார்..

அவனோ அங்கே அவனுக்கு இருக்கும் உணவைப் பற்றிய அறிவை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்..

பின்னே அவனுக்குத் தெரிந்த காலை உணவு இட்லி, தோசை, பூரி.. இங்கேயோ சிறுதானிய உணவு வகைகள் ராகி களி, கம்மங்கூழ், வரகு பூண்டு கஞ்சி என இன்னும் பற்பல வரிசை கட்டி வைக்கப் பட்டிருக்க.. அதுவும் வெள்ளை, மஞ்சள், கருப்பு, சிகப்பு என பல வர்ணங்களில் ! ஆதலால் தான் அத்து ஆராய்ச்சியைத் துவங்கி விட்டான்.

“ தாத்தா !! இப்போ சாப்பிடறதுக்கு மட்டும் இதெல்லாமா.. யாரு தாத்தா செஞ்சது.. நா வந்தப்றோம் யாரும் வரலையே இங்க.. அப்படின்னா நீங்களே இதெல்லாம் செஞ்சீங்களா ? ” வியப்புடன் கேட்டு வைத்தவனை பார்த்து புன்னகையை உதிர்த்தவர்

“ எப்பயும் எனக்கு நானே சமச்சுக்குவேன்.. முடியாதப்ப மாரி வீட்டுல இருந்து வரும்… மாரி வீடு நம்ம வீட்டுக்கு அந்தப்பக்கம் இருக்கே அதான்… ” என்றார் அருகிலிருக்கும் பனை ஓலையால் வேயப்பட்டிருந்த ஒரு வீட்டைக் காண்பித்து.

“ ம்ம்.. அவரு தான் தாத்தா காலைல என்ன வீடு வரைக்கும் வந்து விட்டுட்டு போனாரு.. நடவு நட்டுட்டு இருக்குறதால அங்க போகணும்னு போயிட்டாரு. ”

“ ம்ம் மாரியும் அவங்க சின்ன அம்மணி குடும்பமும் இங்க தான் கண்ணா இருக்காங்க.. எனக்கு ஒத்தாசையா இருக்குறது அவங்க தான்.. ” என பேச்சு மறுபடியும் ஊர் பக்கம் தாவ சாப்பிட்டு முடித்தனர்..

மதியமும் கடந்திருக்க.. காலையிலிருந்து ஓய்வில்லாமல் இருப்பதாலோ என்னவோ தாத்தா சோர்ந்து இருக்க அவரை வற்புறுத்தி ஒய்வெடுக்க சொல்லிவிட்டு வீட்டை ஒரு முறை சுற்றி வந்தான்..

சிறிது நேரம் பின் பக்கமிருந்த தோட்டத்திற்குள் உலாவியவன் திரும்பி வர, தாத்தா இன்னும் எழுந்த பாடில்லை.. பொழுது போவதற்காக தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு மேல்மாடம் சென்றான்..

கீழே உள்ளதைப் போன்றே அங்கும் வரவேற்பறை, அறைகள்.. பலகணி.. ஊஞ்சல்..

ஊஞ்சலில் அமர்ந்து படிக்கத் தொடங்கியவனை மரங்களின் ஈரக்காற்று வந்து தொட்டு தொட்டு விளையாட.. இவனும் விளையாடிக் களைத்தவன் அப்படியே உறங்கிப் போனான்..

மிகிரன் தன் நகர் வலம் முடிந்து கோட்டைக்குத் திரும்பும் வேளையில் அவன் முகம் பார்க்க காதல் கொண்ட பறவைகள் தம் இன்னிசைக் குரலால் கானம் பாடி அவன் கவனம் ஈர்க்க முயன்றபடி தம் இல்லம் நோக்கிச் செல்ல.. அந்த சத்தத்தில் எழுந்து அமர்ந்தான்..

எழுந்தவன் மெல்ல சோம்பல் முறித்தவாறு மேற்குப் பக்கம் பார்க்க மிகரன் தன் செங்கதிர்களால் வான் மேகத்தை தோற்கச் செய்து கொண்டிருந்தான்.. அவையும் அவன் அழகில் மயங்கி விரும்பியே அவனிடம் தோற்றன..

“ மிதுனுக்கான பெர்பெக்ட் பிளேஸ்…. ” என்றபடி மஞ்சள் வானத்தையும் அதில் கொஞ்சி விளையாடும் வெள்ளை மேகத்தையும் ரசித்துப் பார்த்திருந்தான் அத்து.

மிதுன் மட்டும் இதைப் பார்த்திருந்தால் கேமராவை தூக்கிக்கொண்டு பலவித கோணங்களில் புகைப்படம் எடுத்துத் தள்ளியிருப்பான்.

வெகு நேரம் ஆகிவிட்டதால் மேல்மாடத்தில் இருந்து மெல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான் அத்து..

” ஆஹா !  இந்தக் காட்டின் நடுவே தாவடி போட்டு கொண்டு குதூகலமாய் இருக்கும் வீரர்கள் யார் ? சோழ நாட்டு வீரர்களா ? அல்லது பகைவர் படையைச் சேர்ந்த வீரர்களா ?

இதைப்பற்றி வந்தியதேவன் மிகச் சொற்ப நேரம் தான் சிந்தித்து இருப்பான்.. அந்தச் சிறிய நேரத்தில் முன்னால் சென்ற குதிரைகள் சட்டென நின்றதையும் ஒரு குதிரை பளீர் என திரும்பியதையும் வந்தியத்தேவன் கவனிக்கவில்லை.. திரும்பிய குதிரை முன்னோக்கி வந்து வந்தியத்தேவன் குதிரையை அணுகியது.

அதன் மேல் வந்தவன் வந்தியத்தேவன் பக்கம் சட்டென சாய்ந்து ஓங்கி ஒரு குத்து விட்டான்..

…..

….

…..

இருவருள்ளும் துவந்த யுத்தம் நடந்தது கடோத்கஜனும் இடும்பனும் சண்டையிடுவது போல் போட்டார்கள்.. வேடன் வேடந் தரித்த சிவபெருமானும் அர்ஜுனனும் கட்டிப்புரண்டதைப்போல் புரண்டார்கள்…

திக் கஜங்களில் இரண்டு இடம்பெயர்ந்து ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் அவர்கள் மோதிக் கொண்டார்கள்…

….

….

சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த வீரனுடைய முகத்தை மற்ற வீரர்கள் பார்த்துவிட்டார்கள். “

 

கல்கி புனைந்த பொன்னியின் செல்வனை அவள் வாய்மொழியால் புனைந்து கொண்டிருந்தாள் அவள்.

மூங்கில் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடியவாறு அமர்ந்திருந்த தாத்தாவின் கால்களுக்கு அருகில் அமர்ந்து ஒரு கையால் தாத்தாவின் காலைப் பிடித்து விட்டுக் கொண்டு மறு புறத்தில் இருந்த புத்தகத்தில் விழிகளை பதித்து இருந்தாள்..

அவளது வாய் மொழி வர்ணனை கல்கியின் பொன் எழுத்தை மேலும் ஒரு படி உயர்த்திக்காட்டியது உண்மை.

வந்தியத்தேவன் ஆகவே மாறித்தான் அவனது பகுதியை வாசித்துக் காட்டினாள். ஒரு சமயத்தில் ஆழ்வார்க்கடியான் ஆகவும் வந்தியத்தேவன் ஆகவும் மாறி தன் வர்ணனையை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள் குரல் தந்த பிரமிப்பில் ஆழ்ந்து இருந்த அத்து அங்கு சிலநொடிகள் நிலவிய அமைதி கண்டு இயல்பிற்கு வந்தான்..

அவளோ வாசிப்பை நிறுத்திவிட்டு படபடக்க பக்கங்களைத் திருப்பி கொண்டு இருந்தாள்.

” என்னாச்சும்மா ? ” என மெதுவாக கேட்டார் தாத்தா.

” தாத்தா இந்த புத்தகத்தில் அடுத்த சில பக்கங்களை காணோம்.. ” என்றவாறு மீண்டும் புரட்டினாள்.

” என்னம்மா ஏதாவது மாத்தி வச்சிட்டாங்களா ? “

” ப்ச்.. யாரோ கிழிச்சுட்டாங்க போல தாத்தா.. இனி தொடர்ந்து இதுல படிக்க முடியாது ” என்றாள் கவலையுடன்..

மெல்ல கண் திறந்த தாத்தா,

” சரி விடும்மா.. நீ அடுத்த தடவ டவுனுக்கு போகும் போது இத கொடுத்துவிட்டு மாத்தி எடுத்துட்டு வா ” என்றார்.

அதுவரைக்கும்.. என்ற அவளின் முகம் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று அறியும் ஆவலைத் தெளிவாக அத்துவிற்கு உணர்த்தியது.

தாத்தா சொல்லிக் கொண்டிருந்த சமாதானங்கள் எதுவும் அந்தக் காரிகைக்கு எடுபடவில்லை.

இதையெல்லாம் மேல் படிகளில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவன்..

 

” பொன்னியின் செல்வர் வாழ்க ! வாழ்க ! “

” அன்னிய மன்னரின் காலன் வாழ்க ! “

” எங்கள் இளங்கோ வாழ்க ! “

” சோழ குலத் தோன்றல் வாழ்க ! “

 

என அவள் விட்ட வர்ணனையை தொடர்ந்தபடி கீழே இறங்கிவந்தான் அதுல் ரவிச்சந்திரன்.

 

திடீரென்ற குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் அவள்.. தாத்தாவும் சற்றே வியப்புடன் அவனை நோக்க… இதழில் உறைந்த புன்னகையுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

 

அந்நியன் ஒருவனைக் கண்டதும் மருண்ட மான் விழிகள் தற்போது தாத்தாவிடம் திரும்பின.. அவரும் வியப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்..

தாத்தாவின் அருகில் வந்தவன்,

” என்ன தாத்தா இப்படி ஆச்சர்யமா பாக்குறீங்க ? ” என்றவாறு அவருக்கு மறுபுறம் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தான்.

” நீ இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிப்பியா கண்ணா ? ” என்று தாத்தா இயல்பாக வினவ.. அவரது இயல்பான முகம் கண்டு அருகிலிருந்த காரிகையும் இயல்பானாள்..

” ம்ம்.. படிப்பேன் தாத்தா.. சொல்லப்போனா இந்த மாதிரிதான் அதிகம் விரும்பிப் படிப்பேன்.. ” என்றவாறு எதிரில் இருந்த வனிதையைப் பார்த்தான்.

அவள் வீற்றிருந்த படியே அவனையும் தாத்தாவையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கருவிழிகளை சுழற்றுவது வண்ணத்துப் பூச்சி ஒன்று இங்கும் அங்குமாய் பறப்பது போன்று இருந்தது அத்துவிற்கு.

அத்துவின் பார்வையைத் தொடர்ந்து அவளை கவனித்த தாத்தா..

” என்னமா அப்படி பார்க்குற யார் இது புதுசா வந்திருக்காங்கன்னா.. நான் சொல்லி இருக்கேனே.. என்னோட பேரன்.. ஊர்ல இருந்து காலையில தான் வந்தான் ” என்றார் அவன் தலையை வருடியபடி..

அவர் அறிமுகப்படுத்த.. ஒரே ஒரு நொடி மட்டும் அவள் விழிகளில் வியப்பு பின் மீண்டும் பழையபடி இயல்பு நிலை..

எழுந்தவள், ” சரி தாத்தா நான் போய் அம்மாவுக்கு உதவி பண்றேன் ” என சொல்லிக்கொண்டு எடுத்து வந்திருந்த பொன்னியின் செல்வனுடன் வாயிலை நெருங்கினாள்..

” ஓய் !!  ” என்ற அத்துவின் அழைப்பில் நிற்க..

” அப்போ வேணாமா ? ” என்றதும் திடுக்கிட்டு திரும்ப..

” அடுத்து என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க வேணாமா ” என்றான் குறும்பாக தலையை இடவலமாக அசைத்து..

மூச்சை இழுத்து விட்டவள் மறுப்பாய் தலையசைத்து ஒரு கையில் தாவணியை கால் தடுக்காமல் தூக்கிப் பிடித்து கொண்டு ஜல்.. ஜல்.. என்று கொலுசுகள் ஒலியெழுப்ப ஓடியே விட்டாள்..

 

அவளது செய்கை கண்டு சிரித்தவன்,

” யாரு தாத்தா இது ” என தாத்தாவிடம் திரும்பினான்..

” நம்ம மாரியொட சின்ன அம்மணி பொண்ணுதான்.. ரொம்ப நல்ல பொண்ணு தெனம் சாயங்கால நேரம் நம்ம வீட்டுக்கு வந்துடுவா.. ஏதாவது ஒரு புத்தகம் வாசித்து காட்டுவா.. ராத்திரி நான் தூங்கவும் தா வீட்டுக்கு கிளம்பு வா..

இந்தக் கிழவனுக்கு இங்க இருக்கிற பேச்சு துணை இவ தான் பா.. சரி நீ மேல என்ன பண்ணிட்டு இருந்த ? “

‘ என்னோட தாத்தாவின் இந்த சந்தோஷத்துக்காக, நாளைக்குப் பார்க்கும்போது அந்தப் பொண்ணுக்கு ஒரு நன்றி சொல்லணும்.. ’ என எண்ணிக் கொண்டு இருந்தவனை மீட்டெடுத்தது தாத்தாவின் அழைப்பு.

” ஆ.. என்ன தாத்தா “

” என்னாச்சு கண்ணா ? இங்கே உனக்கு எல்லாம் சவுகரியமா தானே இருக்கு ! ” என்றார் சற்றே கவலையுடன்..

” தாத்தா.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல இப்ப கூட மேல படிச்சுட்டு தான் இருந்தேன்.. அருமையான இடம்.. சுத்தமான காத்து.. ஒரு குட்டித்தூக்கம் போட்டாச்சு.. நீங்க அத நெனச்சு எல்லாம் கவலைப்படாதீங்க.. ” என சமாதானம் செய்தான்.

இரவு இவனது அறைக்குள் ஏதோ எழுதிக் கொண்டிருந்தவன் கொஞ்சும் கொலுசொலி கேட்டு நிமிர்ந்தான். அவள் தான் இரவு உணவு எடுத்து வந்திருப்பாள் போலும் !! சரியாக தாத்தாவும் ‘ அத்து ’ என்று குரல் கொடுக்க.. எழுதுவதை நிறுத்திவிட்டு அத்து அவளிடம் நன்றி சொல்ல வெளியே வர.. அதற்குள் இடத்தை காலி செய்திருந்தாள்..

அவன் இருக்கிறானா என்று பார்வையை ஓட்டியபடி பூனைபோல் பதுங்கி வீட்டினுள் வந்தவள் உணவை வைத்ததும்.. தாத்தாவின் ‘ அத்து ’ என்ற அழைப்பில் உடனே அங்கிருந்து சிறகடித்து பறந்துவிட்டாள். கொலுசோசை வைத்தே அவள் வரவை அவன் அறிந்திருந்தான்.

அட !  அதுக்குள்ள போயிட்டாளா என்றபடி தாத்தாவிடம் சென்றான்.

” என்ன தாத்தா ஏதோ விருந்துக்கு தயார் பண்ண மாதிரி இருக்கு ? “

” அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா நீ வந்திருக்கேன்னு தான் இவ்வளவு செஞ்சிருக்காங்க.. நீ இதெல்லாம் சாப்பிடுவ தானே  ” என சந்தேகமாக கேட்டவரிடம்

” எனக்கு இதெல்லாம் பிடிக்காது தாத்தா.. ” சட்டென மறுத்தான்..

இவனது பதிலால் அவர் முகம் வாட தனது விளையாட்டுத்தனத்தை கைவிட்டவன்

” தாத்தா.. தாத்தா.. எனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னா வேற என்ன பிடிக்கப் போகுது.. ம்ம்ம்.. வாங்க.. வாங்க சாப்பிடலாம் கொஞ்சம் லேட் பண்ணினா நானே முடிச்சிருவேன்.. உங்களுக்கு எதுவும் கிடைக்காது.. “

என எச்சரித்து விட்டு அமர்ந்தவன் உணவை வாயில் போட.. அதன் சுவையில் மூழ்கி கண்களை ஒருமுறை மூடித் திறந்தான்.

” ம்ம்ம்ம்…. ரொம்ம்ம்ப நல்லா இருக்கு !! இதெல்லாம் என்ன தோசை தாத்தா ”

” குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம், சிகப்பு சோளம் அடை கண்ணா.. ” என்று கூறியபடி தாத்தாவும் திருப்தியுடன் உண்ணத் துவங்கினார்..

தாத்தாவின் அறையில் அவர் தூங்கும் வரை பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து தன் அறைக்கு வந்தான். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை.. நித்ரா தேவி ஏனோ அவனுடன் கபடி விளையாடிக் கொண்டிருந்தாள்..

நேரம் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடியதே தவிர அவனுக்கு உறக்கம் வந்தபாடில்லை.. அதீத கவலை.. வருத்தம் அல்லது சந்தோஷம் நம் உறக்கத்தை தொலைத்து விடும். அத்துவிற்கு கூட அது போல தான்..

இன்றைய நாள்.. தாத்தா.. இந்த மலை கிராமம்.. எல்லாமே ஏதோ ஒரு இன்பக் கனவு போலத் தான் அவனுக்கு இருந்தது

” ஸ்ஸ்.. அத்து என்னடா ஆச்சு உனக்கு ! ” என அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டான் விடை தான் கிடைக்கவில்லை.

போர்வையும் தலையணையும் எடுத்துக்கொண்டு மேல் மாடம் சென்றான்…

போர்வையை விரித்து படுத்துக் கொண்டு மேலே பார்க்க அவனுடைய நிலா தோழியைக் காணவில்லை..

அவளுடைய தோழிகளான நட்சத்திரங்களையும் காணவில்லை..

இவனுடன் சண்டை பிடித்துக் கொண்டு கார்மேக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருந்தனர்..

மெல்ல சிரித்து கொண்டவன்..

” சரி சரி.. சாரி.. தாத்தாவை பார்த்த சந்தோஷத்தில உங்களுக்கு குட்நைட் சொல்ல மறந்துட்டேன்.. அதுக்காக இப்படி கண்ணு முன்னாடி வராம கண்ணாமூச்சி ஆடினா எப்படி ? “

ம்ஹூம்.. அவன் மன்னிப்பை ஏற்க விரும்பவில்லை போலும்..

” சரி நீங்க வர்ற வரைக்கும் நானும் முழிச்சுட்டே இருக்கேன் ” இவனும் விட்டபாடில்லை..

 

ராஜ ராஜ சோழன் நான்

எனையாளும் காதல் தேசம் நீ தான்

பூவே.. காதல் தீவே…

மண் மீது சொர்க்கம் வந்து

பெண்ணாக ஆனதே !!

உல்லாச பூமி இங்கு உண்டானதே…

 

யேசுதாஸ் குரல் காற்றில் கலந்து அத்துவை வந்தடைய சட்டென எழுந்து அமர்ந்தான்..

எப்படி மறந்தேன் ? இதை எப்படி மறந்தேன் ? இசையும் நிலவும் நட்சத்திரங்களும் இல்லாமல் அவனது இரவா ? வா வா என்றால் பின் எப்படி உறக்கம் வரும் !!

ஆனால் இங்கு எப்படி இந்தப் பாடல் ? என எழுந்து எட்டிப்பார்த்தான்..

மாலையில் பார்த்தானே அவள்தான் வானொலியை ஒலிக்க விட்டு வீட்டுக்கு வெளிப்புறம் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தாள்..

இந்த பொண்ணு தானா ! என நின்று பார்த்துவிட்டு மீண்டும் வந்து படுக்க, இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர் நிலாத் தோழியும் அவளது தோழிகளும்..

” ஹேய்.. பார்றா உங்களுக்கு கூட பாட்டு வேணுமா.. ம்ம்.. ” என்றவன் குட் நைட் சொல்லி படுக்க உறக்கம் தழுவிக்கொண்டது..

மறுநாள் செங்கதிரோனின் கரங்கள் அவனைத் தொட்டு எழுப்பவே அவனுடன் கைகுலுக்க எழுந்து கொண்டான்..

கீழே வந்து பார்க்க தாத்தா நடைபயிற்சி சென்றிருந்தார். அவனே காபி கலந்து எடுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் அமர்ந்தான்…

” ஹே !! நில்லு.. ”  என்றொரு இனிமையான குரல் அத்துவின் செவிகளைத் தீண்ட.. குரல் வந்த திசையில் அவன் விழிகளைச் சுழற்றினான்.  

நேற்று பார்த்த மாரியின் வீடு விழ.. உதட்டில் புன்னகை பூத்தது..

அவள்தான் ஆட்டுக்குட்டியை துரத்திக்கொண்டு வீட்டைச் சுற்றிலும் ஓடிக் கொண்டிருந்தாள்.. அவள் கைக்கு சிக்காமல் போக்குக் காட்டி ஓடிக்கொண்டிருந்தது.

பிடிக்க முடியாமல் மூச்சு வாங்க வாசலில் நின்றவளிடம் அன்னை ஏதோ கொடுக்க அதை வாங்கிக் கொண்டு அத்து இருந்த வீட்டுப் பக்கம் வந்தாள்..

வந்தவள் இவன் அமர்ந்திருப்பதை கவனித்தும் கவனிக்காதது போல

” தாத்தா.. தாத்தா ” என இல்லாத தாத்தாவை அழைத்தாள்..

‘ இங்கே இவ்வளவு பெரிய உருவம் உக்காந்து இருக்கு.. அது கண்ணுக்கு தெரியல இந்த பொண்ணுக்கு.. இல்லாத தாத்தாவை மைக் பிடிக்காத குறையாக கூப்பிட்டு இருக்கு.. ம்ம்.. பார்க்கலாம் ‘ என்றபடி எனக்கும் காபி மட்டுமே கண்களுக்கு தெரிகிறது என அவனும் எதிரே இருந்த குவளையில் மட்டுமே குறியாய் இருந்தான்.

அவளும் தாத்தாவை அழைத்து பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் இவனிடம் திரும்பினாள்.

” ம்க்கும்.. “

அவன் நிமிர்ந்தான் இல்லை..

” ம்க்… ம்க்கும்.. “

‘ உடனே நிமிரனுமாக்கும்.. ம்ஹும் ’ என்றபடி காபி கப்பை கீழே வைத்துவிட்டு அவளை தவிர எல்லாவற்றையும் பார்த்தான்..

‘ தாத்தாதா….. எங்க தான் போனீங்க.. இந்த அம்மா ஏன்தான் இப்படி பண்றாங்களோ ’ என மற்றவரை மனதினுள் வைதுகொண்டு இருந்தாள்..

கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பிப்பார்க்க.. தாத்தா வந்து கொண்டிருந்தார்.

‘ ச்சு.. தாத்தா இப்படி தப்பான நேரத்தில கரெக்டா எண்ட்ரி கொடுக்கிறீர்களே ‘ என நொந்துகொண்டான் அத்து..

இப்பொழுது நிமிர்ந்து அவளைப் பார்க்க அவளும் இவனை தான் பார்த்திருந்தாள் இதழில் தவழ்ந்த வெற்றிப் புன்னகையுடன்..

இவனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

” அம்மா கொடுத்துவிட்டாங்க ” என்றாள் அவனிடம் மெதுவாக..

அத்து என்னவென்று புருவம் சுருக்கி பார்க்க..

” வரகரிசி பொங்கல்.. “

” இப்பதான் தெரியுதா ” என்றான் கேள்வியாக

புரியாமல் பார்த்தவளிடம்,

” இல்ல.. இப்பதான் இங்கே உட்கார்ந்து இருந்த என்னை தெரியுதான்னு கேட்டேன்.. ”

அவள் சமாளிக்கும் முன்பு தாத்தா வந்து காப்பாற்றினார்..

” என்னம்மா அது கையில ” என்றபடி கதவின் அருகில் அமர்ந்தார்

அவரிடம் பதில் கூறி அவள் உள்ளே சென்று வைத்துவிட்டு வந்தாள்

” தாத்தா காபி கொண்டு வரவா ” என்று காரிகை கேட்க..

” வேணாம்மா நான் குடிச்சிட்டேன் ” என்றவர், ” தம்பி ! உனக்கு கலந்து தர சொல்லவா ” என அத்துவிடம் கேட்க..

” ம்ம்.. சொல்லுங்க தாத்தா.. ” என்றான் அவனும் அவளைப் பார்த்தவாறே.

அவன் அப்படிக் கூறியதும் அவள் திடுக்கிட்டு அவனையும் அவனுக்கு அருகில் இருந்த காபி தம்ளரை மாறி மாறி பார்க்க..

அவன் ‘ என்ன ‘ என்று புருவம் உயர்த்தி கேட்டான்..

ஒன்றும் இல்லை என்று தலையசைத்துச் சென்று காபியுடன் வந்தாள் அவளிடம் பெற்றுக்கொண்டவன் பருகிவிட்டு அமைதியாக கீழே வைத்து விட்டான்..

அவளோ அவன் ஏதும் சொல்வான் என நிற்க பயனில்லை.. தாத்தாவிற்கு சில நேரங்களில் அவள்தான் கலந்து கொடுப்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். மூலிகை இலைகள், இஞ்சி, சுக்கு, ஏலக்காய் என பலவிதங்களில் இருக்கும். குடித்துவிட்டு எப்படி இருந்தது என தாத்தா ரசித்துச் சொல்லுவார்.. அவளுக்கு அதில் ஒரு ஆனந்தம். இவனிடமும் அதை எதிர்பார்த்தால் ?

அமைதியாக உள்ளே திரும்பியவளிடம்,

” காப்பி நல்லா இருக்கு.. அதுவும் நீ ஏதோ இலை போட்டு இருக்கல்ல.. அதோட சாறு நல்லா உள்ளே இறங்கி குளிருக்கு இதமா இருக்கு ” புன்னகையுடன் சொல்ல அவளும் முகம் மலர்ந்தாள்.

” அத்து… நம்ம கிராமத்து மக்கள் எல்லாரும் இன்னிக்கு உன்ன பார்க்க வரதா சொல்லிருக்காங்க நேத்து நீ வந்த செய்தி வயக்காட்டுல இருந்து பரவிடுச்சு போல.. ” என்றார் பேரனிடம்..

” எப்போ வருவாங்க தாத்தா ?? எதுக்கு கேக்குறேன்னா சாயங்காலமா ஊருக்கு கிளம்புனும்.. ” என்றான் அவர் முகம் பார்த்தபடி.

அவன் நினைத்தது போலவே சட்டென வாடிவிட்டது அவரது முகம் இருப்பினும் எதுவும் கூறாமல்,

” கூலிக்கு போனவங்க வர மூன்று மணி ஆகிடும் பரவாயில்லையா ” என்றார்.

” சரி தாத்தா ” என்றவனுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை… தான் ஊருக்குச் சென்ற பிறகு நிச்சயம் அவர் மனம் ஏங்கும் என்பது தெளிவாக புரிந்தது… ஆகினும் அவனுக்கு வேறு வழியில்லை… அலுவலகம் சென்றாகவேண்டும் என்ன செய்வது என யோசனையுடனே அமர்ந்திருந்தான்.

மதியம் அந்த கிராமத்து மக்கள் எல்லோரும் அவனைப் பார்க்க வந்துவிட்டனர் இவனுக்குத்தான் கூச்சமாக இருந்தது.. ஆனால் அவர்களோ அவனுக்கு என தங்கள் வீட்டில் செய்த பலகாரங்களை கொண்டுவந்து கொடுத்து அவனை திக்குமுக்காட வைத்துவிட்டனர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத கள்ளங்கபடமற்ற பரிசுத்தமான அவர்களது அன்பில் உருகித்தான் போனான்.

அது இது என ஊருக்கு கிளம்பும் நேரமும் வந்துவிட்டது.. தாத்தாவின் முகத்தை பார்க்க முடியவில்லை ஜீவனற்று இருந்தது..

அவனது பாக்கிங் முடித்து அவரது அறை நோக்கிச் சென்றான்.. கலங்கிய அவரது விழிகளைக் கண்டதும் இவன் விழிகளும் கலங்கியது.

அமைதியாக அவர் காலடியில் அமர்ந்தவன்,

” தாத்தா ! என் மேல நம்பிக்கை இருக்குதானே.. ” என்றான்..

அவர் கேள்வியாக அவனை ஏறிட

” இனிமே ! உங்கள நிச்சயமா தனியா விடமாட்டேன் தாத்தா இப்ப போறேன் அடுத்த லீவ்ல வரும்போது மிதுனயும் கூட்டிட்டு வரேன் சரியா.. “

அவர் சமாதானம் ஆகவில்லை என்பது புரிந்தது இருப்பினும் தன்னால் எதுவும் செய்ய இயலாது என அறிந்தே இருந்தான்.

” சரி தாத்தா கிளம்புறேன் ” என்று அவன் விழிகளில் இருந்த நீரை மறைக்க சட்டென வெளியேறினான்..

வெளியே மாரி அவனை அழைத்துச் செல்ல தயாராக நின்றார்.. அவரது தங்கையிடமும் சொல்லிக்கொண்டு வந்தவன் ஒருநொடி நின்று அவளைத் தேடினான்.. கண்ணில் தென்படவில்லை.. நேரமாவதை உணர்ந்து அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்..

மாரியிடம், ” ஐயா எவ்வளவு சீக்கிரம் பிரச்சனையை சரிசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் சரி செய்யறேன்.. நான் திரும்ப இங்க வர்ற வரைக்கும் நீங்கதான் தாத்தாவை பாத்துக்கணும்.. ” என்றான் அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு..

அவனது மனநிலையை புரிந்தவர், ” தம்பி ! கவலைப் படாம போய்ட்டு வாங்க பெரியவர நல்லபடியா பாத்துக்கிறோம்.. ஆனால் நீங்க அப்பப்ப வந்து எட்டிப் பார்த்துட்டு போங்க.. வயசான காலத்துல அவருக்கு வேற என்ன ஆசை இருக்கப்போவுது உங்க கூட இருக்கிறதவுட்டா.. ”

அவனுமே அதை உணர்ந்து இருந்ததால் வேறுதுவும் கூறாமல் தலையசைத்தான்..

 

” அப்புறம் அப்பாவை கேட்டதா சொல்லுங்க தம்பி.. எத்தனை வருஷம் ஆச்சு பார்த்து ! “

” சொல்றங்க.. சரிங்க பஸ் வந்துருச்சு ” என்றவன் அவரிடம் விடைபெற்று பேருந்தில் ஏறினான்..

என்னவோ இங்கிருந்து செல்ல துளியளவுகூட விருப்பமில்லை.. இந்த இயற்கையும் அதனுடனான அமைதியான நிறைவான வாழ்வும் இங்கு நிரம்பிக்கிடக்கும் அன்பும் பாசமும் நேசமும் அக்கறையும் எல்லாவற்றிற்கும் மேலான அவனது தாத்தாவும் சேர்ந்து அத்துவிற்கான இந்த ஊரின் பிடித்தத்தை அதிகரிக்கவே செய்தன..

” சரி செய்யணும்… எல்லாத்தையும் சரி செய்யணும்.. ” என்று மனதில் சொல்லிக்கொண்டு பேருந்தின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இசையை தவழவிட்டான்..  

 

மேகம் கடக்கும்..                                                  

Advertisement