Advertisement

                                                                                                         

                             

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 7  

 

சரளைபதியில்…

அந்தப் பொன் மாலைப் பொழுதில்.. வயற்காட்டிலிருந்து வந்தது முதல் தாத்தாவின் வீட்டையே நான்கு முறை சுற்றி பார்த்து வந்துவிட்டாள் அவள்… அத்து அவள் கண்களில் படவேயில்லை..

அவனைப் பற்றி தாத்தாவிடம் கேட்டிருக்கலாம்.. இவள் கேட்டு அவர் தவறாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.. ஆனால் கேற்பதற்கு ஏனோ ஒரு தயக்கம்…

“ ப்ச்.. நேத்து அவர் பொன்னியின் செல்வனைப் பற்றி சொல்லும் போதே கேட்டிருக்கணும்.. அத விட்டு… வர வர நீ பண்றது சரியே இல்ல ” என தன்னைத் தானே திட்டிக் கொண்டு இரவு உணவை எடுத்துக் கொண்டு தாத்தா வீட்டினுள் நுழைந்தாள்.

வீட்டினுள் அவர்கள் இருவரும் இருப்பதற்கான அடையாளமே இருக்கவில்லை..

‘ இந்நேரத்திக்கு எங்க போனாங்க ’ என்றபடி தாத்தா அறைக்குச் செல்ல.. அவர் உள்ளே படுத்திருந்தார்…

தாத்தா.. தாத்தா… என மெல்ல அவரை எழுப்ப…

“ வந்துட்டியா… அம்முணி.. ” என மெல்ல எழுந்து அமர்ந்தார்…

“ ம்ம் ஆமா தாத்தா… சாப்பாடு எடுத்து வெக்கட்டுமா ? ”

அவர் சரி என்றதும் வெளியே வந்தவள் அவனது அறையை பார்த்துக் கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்தாள்..

வந்து அமர்ந்த தாத்தாவின் சோர்ந்த முகம் கண்டு, “ என்ன ஆச்சு தாத்தா.. உடம்புக்கு ஏதும் பண்ணுதா ? ” என்றபடி அவரது நெற்றி கழுத்து தொட்டு பார்க்க காய்ச்சலுக்கு அறிகுறி ஏதுமில்லை..

அவளது அக்கறை கண்டு அவரது அதரங்களில் முளைத்தது மெல்லிய புன்னகை கீற்று..

“ ஒண்ணுமில்ல மா.. இன்னிக்கு கொஞ்சம் சோம்பலா இருக்கு அவ்வளவு தான்… ” என்றார் அவள் தலையை வருடியபடி..

அன்று லேசான மழைத் தூறல் இருந்ததால் அவருக்கு அவ்வாறு இருக்கும் என நினைத்தவள் இரண்டு தட்டுகள் எடுத்து வைத்து உணவைப் பரிமாறினாள்..

ஒரு தட்டை தாத்தாவிடம் கொடுத்துவிட்டு மற்றொன்றை அத்துவிற்காக எடுத்து வைத்தாள்..

அவன் அறையை பார்க்க… சற்றும் அரவமில்லை..

மெதுவாக, “ தாத்தா இன்னும் அவரைக் காணோம்… ” என்றாள் பார்வையை அவன் அறையிலிருந்து விளக்காமல்..

“ யாரமா கேக்குற… ”

“ அதான் தாத்தா… ஊருல இருந்து வந்திருக்காரே… உங்க பேரன்… ”

“ அத்துவா… அவன் நேத்து ராத்திரியே ஊருக்குக் கிளம்பிப் போயிட்டானே.. உன்கிட்ட சொல்லிக்கலையா… ” எனக் கேட்கவும்..

தன்னுள் பரவிய எமாற்றத்தின் சாயலை சட்டென மறைத்து.. “ ஆ.. ஆமா.. தாத்தா நான் தான் மறந்திட்டேன்… ” என சமாளித்து அந்த தட்டில் இருந்த உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்..

அவளுக்குள்ளே சின்னதாக ஒரு போராட்டம்..

என்ன இருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லிச் சென்றிருக்கலாம் என்றது ஒரு மனம்…

தன்னிடம் எதற்கு சொல்ல வேண்டும் ? ஏதோ இரண்டு முறை பார்த்திருப்போமா ? அவ்வளவு தானே ! இதில் என்னவென்று தன்னிடம் வந்து சொல்லிக் கொண்டு போவார் ? என்றது மற்றொரு மனம்..

தலையை உலுக்கிக் கொண்டு உணவில் கவனம் வைத்தாள்..

“ ம்மா.. கோவமா இருந்தா ரெண்டு அடி கூட அடிச்சிருங்க.. ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க… ” என தன் அன்னையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் அதுல்.

ஜெயாவிடம் பேசாமல் மட்டும் அவனால் இருக்க முடியாது… அவனுக்கு கோவம் என்ற ஒன்று வருவது அரிது.. அப்படியே வந்தாலும் தப்பித் தவறி கூட அன்னையிடம் காட்டிவிடமாட்டான்.. அவர் எது சொன்னாலும் பொறுத்துப் போவான்..

மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. அவன் பிஞ்சு நெஞ்சில் பதியப்பட்ட வித்து.. அதையடுத்து தாயில் சிறந்தொரு கோவிலுமில்லை என்ற கொள்கை உடையவன்.. அதனால் தான் அவரின் முன்பு அமர்ந்திருக்கிறான் இப்பொழுது..

“ ம்மா.. அண்ணா எவ்ளோ நேரமா கேட்கிறாங்க.. அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு ? ” என குரல் உயர்த்தினான் மிதுன்.. இளைய சிங்கம் சிலுத்துக்கொண்டு நின்றிருந்தது.

“ மிதுன்… ” என்ற அத்துவின் அழுத்தமான குரலில் அவனை முறைத்து விட்டு எழுந்து சென்றான்..

அவனுக்கு அத்து அளவு பொறுமை எல்லாம் கிடையாது.. அதே சமயம் அவன் அளவு இறங்கி எல்லாம் போகத் தெரியாது அதுவும் தன்னிடம் தவறு இல்லை எனில் நிச்சயம் அதைச் செய்ய மாட்டான்…

கதிர் இல்லத்திலிருந்து வந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது.. அரை மணி நேரம் இவர்களுக்கு இடையே ஓடிய பாசப் படத்தை பார்த்து கடுப்பாகி தான் களத்தில் குதித்தான்.. அவன் எதிர்பாத்தபடியே அத்து இவனை அடக்க.. அட போங்கடா… என எழுந்து சென்றுவிட்டான்..

மிதுன் சென்றதும் மேலும் சில நிமிடங்கள் ஜெயாவிடம் பேசிப்பார்த்தான் அதுல்.. ம்ஹும் அவர் அசைந்தாரில்லை..

அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை… அவரது மகன் அவர் சொல்லுக்கு செவி கொடுக்காது சென்றது அவரை உதாசீனம் செய்தது போல இருந்தது..

அத்து இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு எங்கு செல்லுகிறான் என்பதை தெரிவிக்காமல் சென்றதே அவருக்கு கோபம்.. நிச்சயம் இன்னும் இரு தினங்களுக்காவது இந்தக் கோவம் இருக்கும்..

இனி இவன் செய்வது ஒன்றுமில்லை.. அவர் வரும் போது இறங்கி வரட்டும் என எழுந்து மேல் மேடம் சென்றான்..

 

நேயர்களுக்கு இரவு வணக்கம்… நிகழ்ச்சியில் உங்களுடன் இணைவது ஆர்.ஜே தூரிகா… முதல் பாடலாக ஒலிக்கவிருப்பது…

சுந்தரி கண்ணால் ஒரு சேதி… சொல்லடி இந்நாள் ஒரு வீதி…  தளபதி திரைப்படத்திலிருந்து..

சில்லென்ற சிலிர் காற்றின் இதத்தை அள்ளித் தெளிக்கும் வசந்தம் அவளது குரல்..  

இரண்டு நாட்கள் அவளது இந்தக் குரலைக் கேட்காது நெஞ்சம் தனில்  உண்டாயிருந்த வெற்றிடம் அவளாலே நிரப்பப்பட்டது…

அவனுக்கே அவனைக் குறித்து வியப்பு !.. என்ன இருக்கிறதாம் அந்தக் குரலில் ? அப்படியொரு உருக்கம் ! அத்தனை மயக்கம் ! அது தந்த நிறைவான நித்திரையில் அவன்…

 

நிகழ்ச்சியின் இறுதிப் பாடலாக… எனக்கு பிடித்த பாடல்..  அவள் அப்படித்தான் திரைபடத்திலிருந்து… கண்ணதாசனின் காவிய வரிகளில்… யேசுதாசின் இனிய கீதமாய்..  

 

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை …
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே…   

 

மீண்டும் ஒருமுறை உங்களிடம் வணக்கம் கூறி இருந்து விடைபெறுவது தூரிகா…

நாளைய விடியல் நமக்கானதாக அமையட்டும்…

என்றவாறு போர்டில் கார்டை நகர்த்திவிட்டு.. அவளது செவியிலிருந்த ஹெட் போனை கழற்றி மேஜையின் மீது வைத்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்..

“ ஹலோ… என்ன இன்னும் இடத்த காலி பண்ணாம இருக்க.. கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்.. ” என்றவாறு அவளது அருகில் வந்தமர்ந்தான் சக ஆர்.ஜே  கலியுகத்தையன்..

அவனைப் பார்த்து மென்னகைப் புரிந்தவள், “ நீ வரதுக்காகத் தான் வெயிட்டிங்… என்ன ஆச்சு இன்னிக்காவது ஏதும் அபார்ட்மென்ட் ஒகே ஆச்சா… ”

அவன் மறுப்பாக தலையசைக்க…

“ சரி கவலைப் படாத.. வீட்ல இருக்கறவங்ககிட்ட எடுத்து சொல்லு புரிஞ்சுப்பாங்க.. சீக்கிரமே பார்த்திடலாம்… ” என நம்பிக்கை அளித்தாள்..

இது தான்.. இந்த நம்பிக்கை தான்.. அவளிடம் அவனுக்கு பிடித்தமான ஒன்று.. எப்பொழுதும் எல்லாவற்றையும் நேர்மறையாக.. நல்லவிதத்திலேயே பாவிக்கும் குணம் அவளுடையது..

அடுத்து அவனுடைய நிகழ்ச்சி தான்.. ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிபவன்.. அலுவலகம் முடிந்ததும் ஆர்.ஜே வாக அவதாரம் எடுத்துவிடுவான்..

பாஷனையும் ப்ரோபசனையும் இரு விழிகளாகக் கொண்டவன்..

“ சரி நான் கிளம்புறேன் யுகா…. ” என வெளியேறப் போனவளிடம்..

“ தூரி.. ஒரு.. ஒரு மணி நேரம் வெயிட் பண்றியா.. நான் ஷோ முடிச்சிட்டு உன்னை ட்ராப் பண்றேன் ”

அவள் அந்த இரவு நேரம் தனியாக பயணம் மேற்கொள்வதை அவன் சற்றும் விரும்பியதில்லை.. எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டான்.. அவளது நிகழ்ச்சி நேரத்தை மாற்றச் சொல்லி.. அவள் கேட்டால் தானே !

சரி நானாவது ட்ராப் செய்கிறேன் என்றால் அதற்கும் ஒரு பெரிய நோஓஓஓஓ வரும் அவளிடமிருந்து.. அவனும் சலிக்காமல் தினமும் இந்தக் கேள்வியைக் கேட்டு வைப்பான்.. அவளும் மாறிய பாடில்லை..

“ உன்னோட ஷோ முடிஞ்சு…. நான் போக… எங்கம்மா அதுக்குள்ள அம்மா அவதாரத்தில் இருந்து வேறொரு அவதாரம் எடுத்துடுவாங்க… ” என சிரித்தபடி அவள் எழ.. அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்.

“ சரி.. சரி… நான் பத்திரமா போயிடுவேன்… போனதும் உனக்கு மெசேஜ் பண்றேன் ” என அவன் தலை கலைத்து விளையாடி செல்ல.. புன்னகையுடன் விடை கொடுத்தான்.

இரவு வீடு வர பதினொரு மணிக்கு மேல் ஆகி விட்டது.. ‘ இன்னைக்கு என்ன காத்திருக்கோ ’ என பயந்த படி உள்ளே செல்ல.. அவளது அம்மா கதவைத் திறந்து வைத்து வாசலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார் அவளது வருகைக்காக..

இவளைப் பார்த்ததும் அவரது அகத்திலும் முகத்திலும் நிம்மதியின் சாரல்.. பெருமூச்சுடன் எழுந்து அவர் அறைக்குச் சென்றார்.. இது தினமும் நடக்கும் ஒன்று தான்.. வயதுப் பெண்ணை வெளியில் அனுப்பி விட்டு உறக்கம் வராமல் தவிக்கும் தாயின் நிலை தூரிகாவிற்கும் புரிந்து தான் இருந்தது

இருப்பினும் அவளுடைய வேலை அவள் நேசிக்கும் ஒன்று… யாருக்காகவும் எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை..

எப்பொழுதுமே ஏதேனும் திட்டும் அன்னை இன்று அமைதியாக சென்றதும் இவளுக்கு ஒரு குற்ற உணர்வு.. அவரை ரொம்பத்தான் தவிக்க விடுகிறோமோ என்று..

அந்த சிந்தனைகளில் உழன்றவள் உடை மாற்றி வந்து படுத்து கண்ணயர்ந்துவிட்டாள்.. தனக்காக தன் குறுஞ்செய்திக்காக அங்கு ஒருவன் காத்திருக்கிறான் என்பதை மறந்து..

 

அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே……

 

என்ற மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்துடன் அழகாய் விடிந்தது அன்றைய பொழுது.. துயில் கலைந்து எழுந்தவள் யன்னல் பக்க வழியாக எட்டிப்பார்த்த பங்கயனக்கு காலை வணக்கம் வைத்துவிட்டு அருகிலிருந்த அலைபேசியை எடுத்தாள்

43 அழைப்புகள்… 17 குறுஞ்செய்திகள்… கலியுகத்தையனிடமிருந்து..

‘ கடவுளே !! இதை எப்படி மறந்தேன் ’ என நொந்து கொண்டு அவனுக்கு அழைப்பு விடுக்க முதல் ரிங்லேயே எடுக்கப்பட்டது..

“……………..”

“ சாரி.. சாரி.. யுகா.. மொபைல சைலண்ட் மோடுல இருந்து எடுக்க மறந்துட்டேன்… அம்மா பேசாததால நைட்டு மூட் ஆப்.. அதான் உனக்கு.. ” என அவள் தயங்கி நிறுத்த மறுமுனை துண்டிக்கப்பட்டிருந்தது.

அவனது கோபத்திற்கான அர்த்தம் புரிந்து “ தூரிகா இன்னிக்கு உன்ன தூக்கி பந்தாடாம இருந்தா சரி ” என தன் மடத்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொண்டு அன்னையை சமாதானப்படுத்தச் சென்றாள்.

அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை.. அன்னையை சமாதானம் செய்ய முடிந்த அவளால் அவளது மித்ரனை சமாதானப்படுத்த முடியவில்லை.. காலையில் இருந்து கிடைத்த இடைவெளியில் எல்லாம் அழைத்துப் பார்த்துவிட்டாள்.. கிராதகன்.. எடுக்க மாட்டேன் என்கிறான்.. முகம் சோர்ந்து தான் போனது அவளுக்கு..

மன்னிப்பை வேண்டி குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அலைபேசியை கிடப்பில் போட்டாள்.. தண்ணீர் அருந்துவதற்காக வாட்டர் டாக்டர் அருகில் சென்றவள் அவனது குரல் கேட்டு ஓடிச் சென்றாள் அருகே இருந்த அறைக்கு..

அவனேதான்.. எப்பொழுது வந்தான் ? இது அவனது அலுவலக நேரமல்லவா என யோசித்துக் கொண்டிருக்க.. அவன் அந்த அறையிலிருந்து வெளியேறி இவள் ஒருத்தி அங்கு நிற்பதே தெரியாததுபோல் அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்.

‘ ரொம்பத்தான் பண்றடா ’ என திட்டினாலும் தன் மேல் தான் தவறு என்பதை உணர்ந்து யுகா… யுகா… என அவன் பின்னே ஓடினாள்..

தூரிகா.. உன்னை ப்ரோக்ராம் ஹெட் வர சொன்னாரு உடனே போ என சக ஆர்.ஜே தகவல் தர.. அவனை பின்தொடர்வதை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டு அவரைப் பார்க்கச் சென்றாள்

சிறிது நேரத்தில்..

வணக்கம் நேயர்களே நான் உங்கள் தூரிகா… என்னடா தூரிகா வந்து இருக்கான்னு பாக்குறீங்களா எஸ் மக்களே… இன்னிக்கு இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக உங்களுடன் இணைவது ஆர்.ஜே தூரிகாவாகிய நான் மற்றும் என்னுடைய நண்பர் ஆர்.ஜே கலியுகா என சிரித்தபடி அவனை பார்க்க அவனோ பாரபட்சம் பார்க்காமல் முறைத்துக் கொண்டிருந்தான்

‘ என்ன இன்னைக்கு பையன் இவ்வளவு வெறப்பா இருக்கான்.. இன்னிக்குன்னு பாத்து இவன் கூட கோர்த்து விட்டுட்டாங்களே… இறைவா கூடவே இருந்து காப்பாத்து… ’ என கடவுளுக்கு ரெக்வெஸ்ட் அனுப்பி விட்டு நிகழ்ச்சியில் இணைந்தாள்..

அன்றைய அந்த சிறப்பு நிகழ்ச்சி முடிவதற்குள் அவளுக்கு முடி கொட்டுவது மட்டும் தான் மிச்சம் அந்த அளவிற்கு அவளை டென்ஷன் படுத்திவிட்டான்.. அவன் பேச வேண்டிய தருணங்களில் எல்லாம் புத்தரைப் போல மௌனம் காக்க.. இவள் தான் அவனுக்கும் சேர்த்து பேசி வைத்தாள்..

குரல் வளம் சற்று ஒத்துழைத்திருந்தால் மிமிக்ரி ஆவது செய்திருப்பாள் ஆண்டவன் அந்த வாய்ப்பையும் அவளுக்கு அளிக்கவில்லை.. எப்படியோ நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்து சேர்ந்தாள் காண்டீனிற்கு..

இரண்டு காப்பிகளை வாங்கிக்கொண்டு திரும்பியவள்.. அவன் இருக்கும் இடத்திற்கு வந்து அமர்ந்து ஒன்றை அவன் பக்கம் தள்ள.. அவனோ கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தான்.. தவறு தான்.. ஏதோ தெரியாமல் செய்து விட்டாள்… அதற்காக இப்படியா அலைய விடுவது ?

“ யுகா.. ப்ளீஸ்.. ” என ஆரம்பித்ததும் அவன் எழுந்து சென்று விட.. அந்த உதாசீனம் அவளை பாதித்தது..

எழுந்து சென்றவனை பார்த்திருந்த விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்..

மூன்று ஆண்டுகளாய் தான் இருவருக்கும் பழக்கம்.. இதற்கு முன்பு வேறொரு பண்பலையில் பணியாற்றி விட்டு அப்போதுதான் இங்கு வந்திருந்தாள் தூரிகா.. வந்த முதல்நாளே யுகாவுடன் தான் நிகழ்ச்சி.. அப்போது ஆரம்பித்த நட்பு இன்றுவரை வளர்பிறை போல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது..

யுகாவின் ஊர் திருச்சி… அவனது வேலையின் காரணமாக இங்கு தஞ்சையில் ரூம் எடுத்து தங்கியுள்ளான்.. அதனால் வார நாட்களில் அவள் வீட்டில் தஞ்சம் புகுந்து விடுவான்… அவள் பெற்றோருக்கும் இவர்களது நட்பு பற்றி தெரியுமாதலால்.. அவன் செல்லாதிருந்தாலும் தூரிகாவின் அன்னையிடம் இருந்து ஏன் வரவில்லை என்று அழைப்பு வந்துவிடும்..

இருந்தால் அவனைப் போல ஒரு மித்திரன் இருக்க வேண்டும் என பல பேர் சொல்லும்படி வாழ்பவன்.. ஆனால் யாரிடத்தும் சட்டென பழகி விடமாட்டான்.. தூரிகாவிடம் நட்பு பாராட்டியது இன்று வரை அவனுக்கே ஆச்சரியமான ஒன்றுதான்…

 

சில உறவுகள் நமக்கு புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் அதுவாகவே அழகாக அமைந்துவிடும்.. அப்படிப்பட்ட உறவு தான் இவர்களது..

அவன் எதிர்பாரா வேலையில் எதிர்பார்த்தபடி கிடைத்த அழகு தோழமை அவள்..

விழி மறைத்த விழிநீரை மறைக்க கீழே குனிந்தவள்.. எதிரில் யாரோ அமர்வது தெரிய அவசரமாக தன்னை சரி செய்து கொண்டு நிமிந்தாள்.. வேறு யார் ?  அவனே… கலியுகத்தவனே..

அவளது கலங்கிய விழிகளைக் கண்டவன் தன்னையே கடிந்து கொண்டு

“ சாரி டி ” என்றான் காதை பிடித்தபடி.

எதிரே இருந்த காபி அடுத்த நொடி அவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விட்டிருந்தது..

“ என்ன தூரிமா.. இப்படி பண்ணிட்ட.. புது ஷர்ட் அதுவும் நீ வாங்கிக் கொடுத்தது ” என்றபடி எழுந்து சுத்தம் செய்யச் சென்றான்.. திரும்பி வந்து பார்க்கையில் அவள் இடத்தை காலி செய்திருந்தாள். அவளது துப்பட்டா மட்டுமே இருக்கையில் இருந்தது. அவளும் முகம் கழுவி வர சென்றிருந்தாள்.

அவளது துப்பட்டாவை கையில் எடுத்துவிட்டு இருக்கையில் அமர்ந்துகொண்டு அதிலேயே முகம் துடைக்க… அங்கு வந்தவள் வேகமாக அதை பிடித்து இழுத்தாள்..

“ ப்ச்… இருடி காபி கொட்ட மட்டும் தெரிஞ்சது இல்லை… ” என்றவாறு முகம் சட்டை என ஈரத்தை எல்லாம் துடைத்து விட்டு.. “ துப்பட்டாவை கழட்டி வைக்காதேன்னு சொன்னா கேட்க மாட்டியா ” என்றபடியே அவள் கழுத்தில் போட்டு விட்டான்..

அவளது அக்னி பார்வை எல்லாம் கண்டு அவன் கொண்டதாகவே தெரியவில்லை..

அவள் பேசாமல் கணினியை இயக்க.. அதை அணைத்தவன் “ நியாயத்துக்கு நீ வந்து கெஞ்சனும்.. ஆனால் விதி நா பண்ண வேண்டி இருக்கு.. ” என்றவன்

“ நீ இப்போ கால் பண்ணுவ அப்ப கால் பண்ணுவ னு அட்லீஸ்ட் ஒரு மெசேஜ் ஆவது அனுப்புவன்னு வெயிட் பண்ணுனேன்.. ஏன் தூரிகா இப்படி பண்ணின ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா ” என்ற அவனது குரலில் இருந்த நடுக்கம் அவளையும் அசைத்தது..

என்றும் தகவல் அளிப்பவள் நேற்று ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருக்க.. இவள் வீட்டிற்கு பாதுகாப்பாய் போய்ச் சேர்ந்தாளா எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன்.. நேரம் ஆக ஆக அவளிடம் இருந்து அழைப்பு வராமலிருக்க.. இவனது அழைப்பையும் அவள் ஏற்காமல் இருக்க.. வண்டியை எடுத்துக்கொண்டு அவள் வீட்டிற்கே சென்று விட்டான். யாருடைய அறையிலும் விளக்கு எரியாமல் இருக்கும் போதே அவள் பத்திரமாக வந்துவிட்டாள் என தெரிந்தது.. இல்லை என்றால் அவள் வரும் வரை அவளது அன்னை உறங்காமல் வரவேற்பறையில் காத்திருப்பாரே !! அதன் பின்னரே நிம்மதியுடன் ஒரு பெருமூச்சை விட்டபடி வண்டியை கிளப்பியவன் அவன் அறைக்குத் திரும்பினான். இதெல்லாம் அவளிடம் கூறிக்கொள்ள வில்லை.. தெரிந்தால் இதுக்கும் வருந்துவாள் என்றுதான்.

“ சாரிடா அம்மா.. பேசாததால் மூட் ஆப்.. வேனும்னே பண்ணல ” என்றாள் கண்கலங்க..

“ சரி விடு அதான் பிரச்சினை ஒன்னும் இல்லையே… ஆனா ப்ளீஸ் உன்னோட ஷோ டைம் மாத்து ” என்றதும் அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

“ ஆமா நீ ஏன் ஆபீஸ் போகலை ” என பேச்சை மாற்ற.. அவளின் பிடிவாதம் அறிந்தவன் தானே ! அதுவரை இருந்த இளக்கம் மாறி முகம் இறுகியது..

“ இன்னிக்கு பெருசா ஒரு ஒர்க்கும் இல்ல.. உனக்கும் ஒரு ஹெவி டோஸ் கொடுக்கலாம்னு தோணுச்சு.. அதான் ஹால்ப் டே லீவு சொல்லிட்டு இங்க கெளம்பி வந்துட்டேன் ” என்றதும்

“ டேய் டேய்.. தெரியும்டா உன்ன பத்தி.. என்கிட்ட பேசாம உனக்கும் ஒரு வேலையும் ஓடிருக்காது உடனே வெள்ளை புறாவை பறக்க விட கிளம்பி வந்துட்டே ” என்று மனதில் நினைத்துக்கொண்டு தன் நண்பன் தன் மீது கொண்டுள்ள அன்பு.. பாசம்.. அக்கறை.. கண்டு உள்ளம் நெகிழ்ந்தாள்..

“ இப்படியெல்லாம் பாசமா பார்த்து வைக்காத… நீ என்ன பண்ணினாலும் உனக்கு கொடுக்கற தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது…” என யுகா அவள் தலையில் தட்ட.. அவனிடம்,

“ மிஞ்சி போனா என்ன தண்டனை கொடுப்ப.. ஒரு வாரம் சமைச்சி கொண்டு வரணும் அவ்ளோதானே… அதெல்லாம் சப்பை மேட்டர்… சால்ட் வாட்டர் நமக்கெல்லாம்.. ” என அலட்டிக்கொள்ளாமல் கூறியவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தவன்…

“ இந்த தடவை ஒரு வாரம் இல்லை….. ”  என நிறுத்த…

‘ அப்புறம் ’ என அவள் கேள்வியாக பார்க்க… அதற்குள் அவனை யாரோ அழைக்க எழுந்து சென்று விட்டான்.

 

                    

மேகம் கடக்கும்….                                                                

Advertisement