Advertisement

 

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 4 :

அத்தனை நேரம் கார் மேகக் கூட்டத்தினுள் தன் நட்சத்திரத் தோழிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் சந்திரிகா..

செம்பரிதி தன் பொற்கரணங்களை மெல்ல நீட்டி சோம்பல் முறித்தவாறே கிழக்குத் திசைப் பக்கம் துயில் எழுந்தவுடன்  ‘ அச்சச்சோ…’ என ஒளிந்துகொண்டாள் நிலாப் பெண்ணவள்.. அதனை உணர்ந்தே ரகசியப் புன்னகையுடன் அன்றைய விடியலைத் தொடங்கினான் அவன்..

இவையனைத்தையும் பார்த்து தனக்குள்ளே சிரித்தவாறு அந்த இளவெயில் நேரத்தில் பனியுடன் போர் புரிய முடியாமல் கைகளைத் தேய்த்துக் கொண்டே.. சுற்றியிருந்த பச்சைப் பசேல் வயல்களுக்கு ஒரு வணக்கத்தை வைத்தபடி நடந்து கொண்டிருந்தான் அத்து..

அவனுடைய தாத்தாவின் பூர்வீகம்… கோயம்புத்தூரிலிருந்து வெகு தூரமாய் மேற்கு மலைச் சாரலின் தூரலில் நனைந்து சிலிர்த்து செழித்து வளர்ந்திருந்தது.

அத்துவிற்கு இந்தப் பசுமை புதிதல்ல என்றாலும் இந்தக் குளுமை.. அது தரும் இனிமை.. உள்ளத்தையும் கண்களையும் சேர்த்தே நிறைத்திருந்தது..

அலுவலகம் முடிந்ததும் கிளம்பியவன் கோவை வந்து சேர அதிகாலை ஆகிவிட்டது.. அதன் பிறகு இரண்டு மூன்று சிற்றுந்துகளைப் பிடித்து பூர்விக ஸ்தலம் வர இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பிடித்திருந்தது..

சரளைப்பதி கிராமம்… ம்ஹும்… சரளைப்பதி குக்கிராமம்.. தங்களை அன்புடன் வரவேற்கிறது… இதுவே அத்துவிற்கான வரவேற்பு..

கண்ணகி புகார் நகரை விடுத்து மதுரையில் கால் பதிக்க வரவேண்டாமென குறிப்பதாய் தலை அசைத்ததாம் கொடி..

ஆனால் அத்துவிற்கோ அந்த உறைபனியிலும் சாலையோரமாய் இருந்த கொன்றை மரங்களும் புன்னை மரங்களும் மொட்டவிழ்ந்து மலர்ந்த முகமாய் மலர் தூவி வரவேற்பளித்தன..

அவைகளுக்கும் அவனுடைய இதழ் கடையோரப் புன்னகை அரும்பை பரிசளித்துவிட்டு தன் நடையைத் தொடர்ந்தான் அவன்..

“ என்ன ஊருப்பா சொன்ன.. ” என ஓட்டுனர் ஒருவர் கேட்க..

“ சரளைப்பதி சார்… ” என்றான் ஒருவித தயக்கத்துடன்.. ஏனெனில் கேள்வி கேட்டவர் பார்த்த பார்வை அப்படி.. பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியாவை கேட்பது போல் !

“ அந்த ஊருக்கு இப்போ எல்லாம் பஸ் கிடையாது.. ” என்றதோடு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை துடைக்க ஆரம்பித்தார்..

“ அப்போ பஸ் எப்போ சார்.. ” அவனுக்கு அவன் பிரச்சனை.

கண்ணாடி துடைத்துக் கொண்டிருந்தவர் துடைப்பதை நிறுத்திவிட்டு இவனை மறுபடியும் பார்க்க.. அத்துவிற்கு அதிகாலையிலேயே கண்ணைக் கட்டியது.

பின்னே ஒரு பேருந்து பற்றிய விவரம் தருவதற்கு இத்தனை முறைப்பா !! அத்து என்னவோ எக்ஸாம் ஹாலில் அமர்ந்துகொண்டு சூப்பெர்விசன் வந்த இவரிடமே பிட்டு பேப்பர் கேட்டது போல் அல்லவா பார்த்து வைக்கிறார்.. ஆனால் அவனுக்கெங்கே புரியும் அவர் கஷ்டம்..

அவருக்கு முன்பிருந்த மற்றொரு பேருந்து கிளம்பி கால் மணி நேரம் ஆகியது.. இந்நேரம் கலெக்ச்சன் அள்ளிக் கொண்டு போயிருப்பான்.. அவருக்கு அந்தக் கவலை..

“ தம்பி.. பத்து மணி வாக்குல தான் அந்த ஊருக்கு பஸ்ஸு.. நீ இப்போ.. அதோ அங்க கெளம்பி நிக்குது பாரு பாரி… அது ஏறினா அந்த ஊருக்கு முன்னாடி இருக்குற ஊர் வரைக்கும் போகலாம்… அப்புறமா இறங்கி அஞ்சு கிலோமீட்டர் நடக்கணும்.. ” என பின்னாலிருந்து அவசரத் தகவல் அத்துவிற்க்கு நடத்துனரிடமிருந்து..

“ ரொம்ப நன்றிண்ணா…” என ஓடிச் சென்று தயாராக இருந்த பாரியை தோழமை பிடித்து சரளைப்பதிக்கு முன்னாலிருந்த ஊரில் இறங்கிவிட்டான்.. அதன் பின் தான் இந்த நடைப்பயணம்..

அவன் ஊரைப் போன்று ஏதேனும் ஆள் நடமாட்டம் இருக்குமோ என்று பார்த்தால் கூட்டிலிருந்து இரை தேட புறப்பட்ட காக்கைகளும் கானக் குரலால் தேவ கானம் பாடி வந்த குயில்களைத் தவிர வேறு யாருமே கண்ணில் படவில்லை.

‘ இதுவும் நல்லா தான் இருக்கு ’ என அவனுடைய நவரச மனம் நினைக்கத் தொடங்கியதும் நடை பயணமும் சுகமான ஒன்றாய் !

ஆங்காங்கே பனை ஓலைகளால் வேயப்பட்ட கூரைகளை பார்த்தவுடன் விழிகளில் சுவாரசியம் கூடியது… இதெல்லாம் அவன் புத்தகங்களில் மட்டுமே பார்த்தவை ! படித்தவை !.. இன்று கண் முன் காட்சிகளாய்…

அப்படியே விழிகளை சுழற்ற வயல்வெளிகளில் நடவு நட்டுக் கொண்டிருந்தனர்.. கூடவே நடவுப் பாட்டும்.. அத்தனை அழகிய கவிதையாய் அவன் விழிகளுக்கு.. கேட்கவா வேண்டும் ? அனுதினமும் இயற்கையோடு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவன் அத்து ! இதனைப் பார்த்ததும் கால்கள் தானாகவே வயல் வரப்பு பக்கம் முன்னேறியது..

 

என் கேசத்தை களைந்துவிட்டு ஓடுகிறாள்

என் அனுமதியின்றியே !

யாரவள் என்று நான் தேட..

நாற்றுநடும் பெண்ணோ !!

களை பறிக்கும் பெண்ணோ !!

நெற்கதிர்கள் சலசலக்க..

வயல்வெளியில் தெரிகிறது அவள் பாதச் சுவடு..

அசைந்தாடும் தென்றல் பெண்ணவள்..

வரப்பு அருகே வந்தவன் அவர்களது கவனத்தை கவராமல் நல்ல பிள்ளையாக ஒரு ஓரமாக நின்று ரசிக்கத் தொடங்கினான்.. எதற்கோ நிமிர்ந்த ஒருவர் இவனைப் பார்த்துவிட… சர சர வென அடுத்தடுத்து தலைகள் நிமிர்ந்தன..

‘ யாருய்யா அது ஊருக்குள்ள புதுசா… ’

‘ தெரியலையே… பார்க்க அசலூர்க்காரங்க மாதிரி இருக்கு… ’

‘ அரசாங்க அதிகாரியோ என்னவோ ’

‘ பார்த்தா சினிமா நடிகராட்டம் தெரியல.. ’

‘ எம்ஜியாரு கணக்கா இருக்காப்புல.. ’

பலப்பல குரல்கள்… அதற்குள் நிலத்தின் சொந்தக்காரர் இவனை நோக்கி வந்தார்.. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர் வரும் விதத்தை பார்த்தாலே.. அடி நிச்சயம் அவர்களின் வேலையைக் கெடுத்ததற்கு என்று தான் எண்ணத் தோன்றியது அத்துவிற்கு !

“ வணக்கமுங்க.. தம்பிக்கு எந்த ஊருங்க.. இம்புட்டு நேரமே எங்க ஊருக்கு வந்திருக்கீங்க… ” என அவர் புன்னகையுடன் இரு கரம் குவிக்க.. அத்துவின் மனதில் அவருக்கான இடம் எவரெஸ்ட் உச்சி தான்…

“ வணக்கம் ஐயா.. நா தஞ்சாவூர்ல இருந்து வரேன்… இங்க தான் என்னோட தாத்தா வீடு இருக்கு… ” என நிறுத்த..

“ என்னங்க தம்பி நீங்க…. வர்றதா ஒரு கடுதாசி போட்டு இருந்தா வண்டி ஏதும் அனுப்பி வெச்சுருக்கலாமே.. இத்தன மைல் நடந்தே வந்திருக்கீங்க.. சரி வுடுங்க.. யாரு வீட்டுக்கு வந்திருக்கீங்க..  ”

வயதில் சிறியவனாக இருப்பினும் அவர்கள் அளிக்கும் மரியாதையை எண்ணி மனம் வியக்காமல் இல்லை. அந்த வட்டார மொழிக்கு அப்படி ஒரு வசீகரிக்கும் தன்மை.. பேசுபவரிடத்திலும் இனிமை அதை கேட்போரிடத்திலும் இனிமையைப் பரவச்செய்துவிடும்.. அவரிடம் பேசியதால் என்னவோ அத்துவிற்கும் இப்போது ஓட்டிக் கொண்டது.

மண் வாசத்தின் மணமும் கிராமத்து வாசியின் அக்கறையும் அத்துவிற்கு தித்திப்பாய் இருக்க அவன் தொடர்ந்தான்..

“ இல்லங்க ஐயா.. இது திடீர் பயணம்.. அதான் தகவல் தெரிவிக்க முடியலங்க. ” என்றவன் “ நான் சின்னசாமி தாத்தா வீட்டுக்கு வந்திருக்கேன்ங்க ” என்றதும் எதிரிலிருந்தவரின் முகம் சட்டென மலர்ந்தது.

“ தம்பி பெரியய்யா வூட்டுக்கா வந்திருக்கீங்க…. வாங்க.. வாங்க.. ரொம்ப சந்தோஷம்.. ” என்றவர் “ ஆனா தம்பி.. நீங்க.. ” என இழுக்க

அவர் கேள்வி என்னவாக இருக்கும் என்று யூகித்தவன்..

“ அவரோட பேரன்ங்க… ” என்றான்..

“ ரவி மகனா நீங்க… ஏனுங்க தம்பி இன்னிக்கு தான் தாத்தா வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதுங்களாக்கும்.. பாவமுங்க பெரியவரு.. இந்த வயசுல ஒத்தைல இருந்து கஷ்டப்படுராறுங்க… ”

குற்ற உணர்ச்சியில் முகம் கசங்கி உள்ளம் கலங்க.. ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவன்,

“ இனிமே தனியா விட மாட்டேங்க… ” என்றான் உறுதியாக..

அங்குள்ள ஒருவரை அழைத்து நிலத்தைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு அத்துவை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார்..

வழி முழுவதும் இருந்த மாந்தோப்பு.. புளியந்தோப்பு.. கரும்பு தோட்டம் என எல்லாம் இவனுடைய தாத்தாவினுடையதாம்.. இன்னும் நிறையச் சொன்னார் உடன் வந்தவர்.. தாத்தவைப் பார்க்காமலே அவருக்கான பல பரிமாணங்களை வரைந்து பார்த்துவிட்டான் அத்து..

எப்போதடா அவரைப் பார்ப்போம் என அவன் உடம்பிலுள்ள ஒவ்வோர் செல்லும் கேள்விச் சரங்களால் மாலை தொடுக்க.. அதோ.. இதோ.. என வந்துவிட்டான் அவரது இடத்திற்கு…

வாசலில் சாணம் தெளித்து பூக்களைக் கொண்டு மாக்கோலம் அலங்கரிக்கப்பட்டிருக்க.. நாற்திசையும் சுற்றிலும் எழுப்பப்பட்ட மதில் சுவருக்கு உள்ளே ஒரு கோட்டைப் போல காட்சி கொடுத்தது அந்த வீடு.. பெரிய வீடு என ஊர் மக்களால் அடைமொழி பெற்ற வீடு..

ஊரில் உள்ள மற்ற வீடுகளெல்லாம் பனை ஓலைகளால் வேயப்பட்டிருக்க.. இது மட்டும் கருங்கற்களால் இரண்டு மாடமாய் கட்டப் பட்டிருந்தது.. இவ்வளவு பெரிய வீடா ? என்றிருந்தது அத்துவிற்கு..

வங்கியில் லோ லோ என அலைந்து லோன் வாங்கி அவனுடைய அப்பா கட்டியிருக்கும் வீடெல்லாம் இதன் முன் ஒன்றுமேயில்லை..

“ தம்பி.. ஏனுங்க அங்கையே நின்னுபுட்டீங்க… ” என்றவரின் கேள்வியில் தன் சிந்தனை கலைந்தவன் “ ஒன்னுமில்லீங்க ஐயா.. ” என சிறு புன்னகையுடன் கூறிவிட்டு உள்ளே வந்தான் அவனுடைய கோட்டைக்குள்..

தாத்தவை பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் பதட்டமும் ஒருபக்கம் இருந்தது உண்மை.. என்ன சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது ? அவர் ஏற்றுக் கொள்வாரா ? என பல வித கேள்விக் கணைகள்..

அங்கிருந்த தோட்டக் காரரிடம்,

“ சாமி.. பெரியய்யா உள்ளார இருக்காரா… தம்பி ஐயாவ பாக்க வெகு தூரத்துல இருந்து பிரயாணம் பண்ணி வந்திருக்காங்க.. ” என விசாரித்தார்..

அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவர் அதை விட்டு வேகமாக இவரிடம் வந்தார்..

“ ஐயா.. பெரியய்யா.. காலமர கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்னு கிழக்குப் பக்கம் போனாருங்க.. இப்போ வர்ற நேரம் தானுங்க.. ” என்றார் பவ்யமாக..

“ வாங்க தம்பி.. அப்படி உக்காருவோம்..” என பெரிய வீட்டின் முற்றத்திற்கு அழைத்துச் சென்றார்..

அந்த வீட்டுக்கு வலது புறம் ஒரு தனி வீடும் இருந்தது..

இந்த வீட்டளவு இல்லாவிட்டாலும் அதுவும் பனை ஓலைகளால் வேயப்பட்டு தனி மிடுக்கோடு தான் இருந்தது.. இவன் பார்வை சென்ற இடத்தை கவனித்தவர்..

“ அது நம்ம வூடு தானுங்க.. ” என்றார்..

ஒரு தலையசைப்புடன் அவன் திரும்பிக் கொள்ள அவனுடைய அப்பா அம்மா பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டார்.. பிறகு எழுந்து,

“ தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.. அங்க வயக்காட்டுல வேலை நடந்திட்டு இருக்குறதால நா போகணும்.. ” என தயங்க

“ பரவாயில்ல ஐயா.. நீங்க இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டதுக்கு நன்றி.. நீங்க பாருங்க.. நான் தாத்தா வந்ததும் பாத்துக்கிறேன்..  ” என தயங்கியவரை அனுப்பிவிட்டு தோட்டத்தை ஒருமுறை சுற்றி வந்தான்..

வீட்டின் முன்பிருந்து பார்த்தால் மேற்கு மலைச் சாரல் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்து வசந்தத்தை பொழிந்து கொண்டிருந்தது..

மனம் முழுக்க அத்தனை புத்துணர்ச்சியாய் இருந்தது அத்துவிற்கு.. இதையெல்லாம் விட்டுவிட்டா அப்பா அங்கு அப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும் என்றது மனம் அப்பாவைப் பற்றி அறிந்ததாக..

மீண்டும் முற்றத்தில் வந்து அமர்ந்து கொண்டவனின் விழிகள் கோட்டையின் கதவு திறக்கப்பட அதன் புறம் நகர்ந்தது.

அரக்கு நிறத்தில் ஒரு கம்பளியை சுற்றிக் கொண்டு கைத்தடியின் உதவியுடன் வந்து கொண்டிருந்தார் பெரியவர்.. இவனது தந்தையின் மறுபதிப்பு.. ம்ஹும்.. இவரது மறு பதிப்பு இவன் தந்தை. மிதுன் கூட இவரது சாயல் தான்.. ஆனால் அதுலிடம் ஜெயாவின் சாயல் தான் தெரியும்.

பெரியவரிடம் சென்ற தோட்டக்காரர் அவரிடம் ஏதோ கூற அவரின் விழிகள் இவன் பக்கம்.. அவர் பார்வை தன்னிடம் தான் என்றதும் எழுந்து நின்றான்..

வாயிற் கதவிலிருந்து முற்றம் வரவே சில நிமிடங்கள் பிடித்தது.. வயதின் காரணமாக தளர்ந்து போய் இருந்ததை அவரது தேகத்திலிருந்த சுருக்கங்களே எடுத்துக் கூறின..

அருகே வந்தவருக்கு அடையாளம் தெரியவில்லை..

“ யாருப்பா நீ.. ” என்று கேட்டபடி அங்கே அமர்ந்தார்.. நடைபயின்றதில் சிறிது இளைப்பாற வேண்டி..

பெற்ற பிள்ளையின் பிள்ளையைக் கூட அடையாளம் காண முடியாத நிலையில் அவரை வைத்துள்ளாயே இறைவா ? உழைத்த உழைப்பிற்கு அக்கடா என உக்காரும் வயதல்லவா இது ? இப்போது போய் தனிமை என்னும் தண்டனையைக் கொடுத்து பாவியாகி நிற்கிறோமே ? என உள்ளுக்குள் மருகியவனின் விழிகள் பனிக்க..

“ தா… தாத்தா..” என அழைத்துவிட்டான்..

அவனது அழைப்பில் ஒரு நொடி அவரது முகம் மலர்ந்தது உண்மை.. ஆனால் மறுநொடியே அது நிராசை என்று தோன்ற முகத்தை இயல்பாக்கிக் கொண்டு அவன் முகம் நோக்கினார்..

அவரது காலருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் சில்லிட்டிருந்த அவரது கரங்களை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.. அவனது செய்கைகளை வியப்புடன் பார்த்தாரேயன்றி ஏதும் மொழியவில்லை..

“ உங்க பேரன் தாத்தா… ” சிறிது தவிப்புடன் அவன்..

ஒரு நொடி அவனை கூர்ந்து பார்த்தவர் மெல்ல அவனிடம் இருந்து அவரது கரங்களை உருவ சிறு நெருடல் அத்துவிடம்.. திகைப்புடன் அவரைப் பார்த்திருந்தான்..

விழிகளில் கண்ணீர் முத்துக்கள் கோர்க்கப்பட்டு நடுங்கம் கரத்தினால் அவனது தாடை பற்றி ‘ அ.. அத்து… ’ என தடுமாற அத்துவுமே தடுமாறித்தான் போனான்..

இது போன்ற சூழ்நிலைகளெல்லாம் அவனுக்கு புதிது.. அவனுடைய உலகம் அப்பா, அம்மா, மிதுன் இப்போது கதிர் என இவர்களுடனே இயல்பான அன்புடன் சுருங்கிவிடும்.. அதில் இம்மாதிரியான சொல்ல முடியாத பாசப்பிணைப்பு, உணர்வுப் போராட்டம் எல்லாம் இருந்ததில்லை..

தாத்தாவின் விழிகளிலிருந்து அவரது இத்தனை நாளான மன உருக்கம், உளைச்சல், ஏக்கம் என எல்லாம் கண்ணீராக பெருக்கெடுக்க அத்து அவரது கரங்களுக்குள் முகத்தை புதைத்துக் கொண்டான்..

இரண்டு வாரம் முன்பு தான் இப்படி ஒரு உறவு இருப்பதையே அவன் அறிவான்.. சற்று முன்பு தான் கண்டுள்ளான்.. ஆனால் ஏதோ ஜென்ம ஜென்மமாய் உறவு தொடர்வதைப் போன்ற உணர்வு.. சிறு வயது முதல் பாட்டி தாத்தா பாசத்திற்கு ஏங்கியவனின் ஏக்கம் துணி கொண்டு துடைக்கப்பட்டிருந்தது..

இருவருக்குமே நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள கால அவகாசம் அவசியமாகப் பட்டது. அதன் பின்னோ அங்கே வார்தைகளுக்கு இடமிருக்கவில்லை.. இருவரும் எத்தனை நேரம் அப்படியே உக்கார்ந்திருந்தார்களோ தோட்டக் காரர் வந்து சொல்லிக் கொண்டு போகும் போது தான் இயல்பிற்கு திரும்பினர்..

அத்துவை கனவிலும் கூட அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.. அவனோ இப்படி அதிரடியாக வந்து பத்து வயதைக் குறைத்து வைத்திருந்தான் பெரியவருக்கு..

“ அத்து வாப்பா.. உள்ளார் போகலாம்.. நான் பாரு வெவஸ்தகெட்ட தனமா உன்னை வெளியவே உக்கார வெச்சிருக்கேன் உனக்கு பயண அலுப்பு இருக்கும்னு தெரிஞ்சே.. ” என சொல்லிக் கொண்டே அவனது கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்..

சிறு பிள்ளைகளுக்கு தன்னுடன் விளையாட ஆள் சேரும்போது இப்படித்தான் ஆர்வமாய் ஆரவாரத்துடன் கைப் பிடித்து கூட்டிச் செல்லும்.. தன்னுடைய வரவு காயம் பட்ட தாத்தா மனதிற்கு எந்த அளவு மருந்தாக அமையும் என்பது அவரது குழந்தை போலான குதுகலத்திலிருந்தே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..

வீட்டினுள் பிரவேசிக்க சாம்பிராணியின் நறுமணம் நாசியைத் துளைத்து மனதை நிறைத்தது.. அது ஒரு புது விதமான உணர்வைத் தர ஆழ்ந்த மூச்செடுத்து தன்னுள் நிரப்பிக் கொண்டான்..

விழிகளால் அவ்வில்லத்தை வலம் வர அவனுக்கு இடப்பக்கச் சுவரில் மீனாக்ஷி தேவியின் புகைப்படம் மாட்டப்பட்டு அன்று மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை சாற்றப்பட்டிருந்தது. தாத்தாவின் கையிலிருந்து தனது கையை உருவிக் கொண்டு அவர் முன்பு நின்றான்.. தெய்வக்களை குடிகொண்ட முகம்… வெள்ளை மற்றும் கருப்பு படம் தான்.. அவரது முகத்திலிருந்த புன்னகை இவனுள் ஏதேதோ மாற்றங்களை செய்தது..

‘ இவரை ஒரு முறை பார்க்கக் கூட தனக்குக் கொடுத்து வைக்கவில்லையே….. ’ மனம் புழுங்க மௌனமாய் நின்றான்..

“ மீனாக்ஷி… பார்த்துக்கோ.. நம்ம அத்து நம்மளை தேடி வந்துட்டான்.. நீ சொன்ன மாதிரியே வந்துட்டான்.. ஆனா நீ மட்டும் அவனையும் பார்க்காம என்னையும் கூட்டிட்டு போகாம தனியா தவிக்க விட்டுட்டு போயிட்ட.. ” என்றவரது குரல் தழுதழுக்க தாத்தாவின் கரங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டான்..

நொடிப் பொழுதில் தன்னை சரி செய்து கொண்டவர் “ நீ குளிச்சுட்டு வா.. பின் பக்கமா வெந்நீர் போட்டு வெச்சுருக்கும்… நான் போயி உனக்கு காபி தண்ணி கலக்குறேன் ” என சமையல் கட்டு பக்கம் நகர்ந்தார்..

பாட்டியின் முன்பு நின்று மனதார மன்னிப்பு கேட்டவன் பின்பக்கமாய் சென்றான்.. குளியல் அறை எல்லாம் இருக்கவில்லை.. ஆனால் தடுப்பு போடப்பட்டிருந்தது.. அதனால் எந்த சங்கடமும் இன்றி குளித்து முடித்து வந்தான்..

நேரே பூஜையறை செல்ல கோவிலுக்குள் அடியெடுத்து வைத்ததைப் போல தோற்றம்.. அதனைத் தொடர்ந்த ஒரு சிலிர்ப்பு.. பரவசம்… வண்ண வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை இறைவனுக்கு அழகு சேர்க்க எரிந்து கொண்டிருந்த விளக்கு அந்த அறைக்கே வெளிச்சம் தந்தது..

‘ தாத்தா எப்படி இதெல்லாம் பண்றாரு… ’ அவனுக்குள்ளேயே  கேட்டுக் கொண்டு அவனுக்குத் தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி வணங்கி வெளியே வர அவனை எதிர்கொண்டார் தாத்தா..

ஒரு மென் முறுவலுடன் அவரிடமிருந்து காபியைப் பெற்றுக் கொண்டவன் தனக்கு மட்டும் கலந்திருப்பது கண்டு அவரைப் பார்க்க..

“ உனக்கு மட்டும் தான் அத்து.. நா நேரமே குடிச்சுட்டேன்.. ” என்றபடி அங்கிருந்த ஊஞ்சலில் அமர அத்துவும் அமர்ந்தான்.. அவர்களுக்குள் பேச வேண்டிய விடயம் ஏராளம்.. கேட்க வேண்டிய கேள்விகள் ஏராளம்.. ஆனால் அதை தவிர்த்து அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தனர் இருவரும்..

காபியை ஒரு மிடறு அருந்தியவனின் விழிகள் வியப்பில் விரிய அவனையே பார்த்திருந்தவர்.. “ நம்ம மலைல இருந்து பறிச்சி.. அரைச்சு நேரடியா இங்க வந்தது.. கலப்படம் துளியும் இருக்காது.. ” என்றார்..

“ ரொம்ப நல்லா இருக்கு தாத்தா.. ”

காபி அவனுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று.. இன்று இப்படியொரு மலைக்கிராமத்தில் இயற்கை அன்னையின் மடியில் அமர்ந்து கொண்டு அருந்துவது இன்னும் சுகம்.. அனுபவித்து பருகினான்..

இனி இப்படி ஒரு தருணம் அமையுமோ அமையாதோ !! அதுநாள் வரை தன்னை இறைவன் விட்டு வைத்திருப்பாரோ மாட்டாரோ !! என எண்ணி ஆசை தீர தன் பெயரனை மனதிலும் கண்களிலும் நிரப்பிக் கொண்டிருந்தார் தாத்தா..

மறுபடியும் சிறு பொழுது சிறு யுகமாய் கழிய இருவரும் ஊஞ்சலில் ஆடியபடி அமர்ந்திருந்தனர்.. அத்து தான் மெல்ல ஆரம்பித்தான்..

“ தாத்தா.. முதல்ல நீங்க என்னை மன்னிக்கணும்.. இத்தனை நாளா உங்களைப் பார்க்க வராம இருந்ததுக்கு.. ” என்றான் மெல்லிய குரலில்..

அவன் தலையை மெல்ல வருடியவர்.. “ அதுல உந்தப்பு எதுவுமே இல்ல கண்ணா.. என்னோட கணிப்பு சரிண்ணா நான் போன வாரம் ஊருக்கு வந்த விஷயம் கேள்விப்பட்டு தான் இப்படியொரு தாத்தா இருக்குற விஷயமே உனக்கு தெரிஞ்சிருக்கும்.. சரியா ? ”

வியந்தே போனான் அவரது தெளிவான சிந்தனைகளில்..

வார்த்தைகள் வர மறுத்த நிலையில் மெதுவாக தலையை மட்டும் ஆட்டி வைத்தான்..

“ அப்புறம் என்னப்பா.. இப்ப தான் நீ வந்துட்டியே.. இதுவே எனக்குப் போதும்.. என்ன ஒன்னு மீனாக்ஷிக்கு தான் உன்னைப் பாக்குற கொடுப்பனை இல்லாம போச்சு.. போய் சேந்துட்டா.. ஆனா என் உசுரு போகாம காத்து கிடந்தது உன்னை பார்க்கத்தான்னு நினைக்குறேன்.. இனி சந்தோசமா போவேன்.. ” என்றார் கரகரப்பான குரலில்..

“ தாத்தா என்ன தாத்தா.. இப்போ தான் உங்க முதல் பேரன் உங்களைப் பார்க்க வந்துருக்கேன்.. அதுக்குள்ள சாவு அது இதுன்னு பேசிட்டு… ”

“ எனக்கென்னப்பா வயசு ஆறா.. நூருல இருக்கேன்.. நேரமும் காலமும் கூடி வந்தா போயி சேர வேண்டியது தானே ! ” என்றார் விரக்தியுடன்..

“ ம்ம் நீங்க போயிடுவீங்க.. ஆனா ஏன்டா என் தாத்தாவ என் கண்ணுல காட்டுலன்னு ஒருத்தன் வந்து என் சட்டையை எட்டி பிடிப்பான்.. அவனுக்கு நான் என்ன பதில் சொல்றது.. ” என்றவனை இம்முறை வியப்புடன் பார்ப்பது தாத்தாவின் முறை ஆயிற்று..

சிறு புன்னகையுடன் அவரது வெண் பஞ்சு மீசையை இழுத்து விளையாடியவன் “ தாத்தா.. நான் அத்து.. உங்க முதல் பேரன்.. ரெண்டாவது மிதுன்.. என்னை விட அஞ்சு வயசு சின்னவன்.. என்னை மாதிரி இல்ல.. என்னை விட பாசக்காரன்.. ” என்றான்.

தனக்கு இன்னொரு பேரன் இருப்பதை அறிந்தும் அவனையும் காண மனம் துடியாய் துடித்தது தாத்தாவிற்கு..

“ உன்னை மட்டும் தான் கண்ணா தெரியும்.. உனக்கு மூணு வயசா இருக்கும் போதே எந்த தொடர்பும் இல்லாம போயிடுச்சு.. அதான் மிதுனைப் பத்தி தெரியல.. ” என்றார் வருத்தத்துடன்.

அவர் வருந்துவது பிடிக்காமல், “ அவனுக்கு இன்னும் படிப்பு முடியல தாத்தா.. அதான் அழைச்சிட்டு வர முடியல.. அடுத்த லீவுல ரெண்டு பேருமா வரோம் ” என்றதும் தான் அவர் முகம் தெளிந்தது..

“ சரி தாத்தா.. எனக்கு இந்த ஊரு ரொம்ப பிடிச்சிருக்கு… இதப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.. ” என்றபடி இப்போது தாத்தாவின் மடியில் தலைவைத்து ஊஞ்சலில் படுத்துகொண்டான்.

அவரும் அவனது கேசத்தைக் கோதியபடி ஒவ்வொன்றாய் சொல்ல.. ம்ம்.. ம்ம்.. அப்பறம் தாத்தா.. என்றபடி கதை கேட்கும் மழலையாய் மாறிப் போனான் அத்து.. மூன்று வயது அத்துவாய்த்தான் தெரிந்தான் அவருக்கு.

நெஞ்சம் முழுதிலும் சேர்த்து வைத்திருந்த நேசத்தையெல்லாம் பொழிந்து கொண்டிருந்தார். அத்துவும் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தான்.

 

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு.. அட

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு.. அட

பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு….    

 

மேகம் கடக்கும்..  

                                                                                                                                            

Advertisement