Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 20

 

“ தூரிகா.. ஒரு இடத்துக்கு வரச்சொன்னா அஞ்சு நிமிஷம் லேட்டா போகலாம்.. பத்து நிமிஷம் லேட்டா போகலாம்.. அவ்வளவு ஏன் அரை மணி நேரம் கூட லேட்டா போகலாம்.. ஆனா நீ அஞ்சு மணி நேரம் கழிச்சு போற டி. எல்லாரும் கொலை வெறியில இருக்கப் போறாங்க.. ரெடி டு பேஸ் தெம்… ” என சொல்லிக்கொண்டே அந்த அரங்கிற்குள் நுழைந்தாள்.

அவள் நுழைந்த இடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகாலன் கலையரங்கம்.. அந்த வாரம் முழுக்க அங்கு அவர்களது வானொலி நிலையத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கவிருந்தது.. நேரலையாக அதனை பதிவு செய்வது களத்தில் இருந்து தகவல்களை நிலையத்திற்கு தருவது என ஐந்து ஆர்.ஜேக்கள் அங்கு வந்திருந்தனர். தூரிகாவும் அதில் அடக்கம்.

உள்ளே வந்தவள் கண்ட காட்சியில் சிலையாக நின்றாள்.. சிற்பியாக யுகா..

அவள் கண்ட காட்சி இதுதான்..

அங்கிருந்த அனைத்து ஆர்.ஜேக்களும் உணவருந்திக் கொண்டிருக்க.. விக்ரமும் யுகாவும் அருகருகே அமர்ந்திருந்தது ஒரு அதிர்ச்சி என்றால் அடுத்து விக்ரம் ஏதோ யுகாவின் காதில் சொல்ல.. அவன் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்க.. சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு புரை ஏற.. விக்ரம் அவன் தலையில் தட்டி விட்டு தண்ணீர் எடுத்து கொடுத்தான்.

இருவரும் எந்நேரமும் எதிரும் புதிருமாக முட்டிக்கொண்டு முறைத்துக் கொண்டு நின்று அலுவலகத்தையே அல்லல்பட வைத்தவர்கள்.. இன்று கட்டிப் பிடிக்காத குறையாக கொஞ்சிக் கொண்டு இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள் !!

அவளைப் பார்த்துவிட்ட விக்ரம் யுகாவிடம் கண்காட்ட.. அவன் எழுந்து இவளிடம் வந்தான்.

“ என்னடி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட ” என்றவனிடம்..

“ யார் நீ ” என்றாள்..

அடிப்பாவி என்றெண்ணியவன் கிடைத்த இடைவேளையில் “ அதை நீ தான் சொல்லணும்.. ” வார்த்தைகளில் அழுத்தத்தோடு அதேநேரத்தில் அவளிடம் பார்வையை செலுத்தாமல் சுற்றிலும் பார்த்தபடி.

இவள் பதில் கொடுக்கும் முன் இவளை பார்த்த மற்ற ஆர்.ஜேக்கள் அவள் அருகில் வந்து தாமதமாக வந்ததற்கு வறுத்தெடுக்க ஆரம்பிக்க.. தப்பித்துக் கொண்டு சென்றுவிட்டாள் மேடைக்கு.

பாதியில் நிறுத்திய வேலையை.. அதுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் மீண்டும் அதை தொடரச் சென்றான்.

சாப்பிட்டு முடித்தவன் அவளிடம் சென்றான்.

“ ஏன் இவ்வளவு லேட் ? ”

பதில் இல்லை அவளிடம்..

“ உன்கிட்ட தாண்டி கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாம நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம் ”

‘ பதில் சொல்ல விருப்பமில்லை என்று அர்த்தம் ’ அவள் அல்ல.. உள்ளிருக்கும் யுகாவினது மனசாட்சி. நேரம் காலம் தெரியாமல் கவுன்ட்டர் கொடுக்க அதன் தலையில் கொட்டியவன் அவளிடம் வர.. அதற்குள் அவளைக் காணவில்லை.

தூரத்தில் இரு மாணவிகளிடம் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.

“ இவள ” என்றவன் அவர்கள் அருகே வர..

அந்தப் பெண்களில் ஒருத்தி

“ ஆர்.ஜே யுகாஆஆஆ… ” என்று கூவியதில் இவனே சற்று மிரண்டு போனான்.

“ வாவ் சார் நீங்களும் இங்கதான் இருக்கீங்களா !! எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சார்.. உங்க ஷோவை ஒருநாள் கூட மிஸ் பண்ணினதே இல்லை.. என்ன வாய்ஸ் சார் உங்களது !! சான்சே இல்ல.. கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கும் ” என்றவளின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் கண்டு இவனும் குதூகலம் அடைந்தான்.

தூரிகாவை மறந்து அவளிடம் பேசிக் கொண்டிருக்க.. தூரிகா அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் அருகில் இருந்த இன்னோரு மாணவியும் அவனைத் தான் பார்த்திருந்தாள். அவனை அவளுக்கு தெரியும்.. அவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும்… பேசலாமா ? வேண்டாமா ? என்ற யோசனையோடு அமைதியாக நின்று அவர்களை கவனித்தாள்..

“ சார் ஒரு செல்பி ” என்றதும் அவன் தயங்க..

“ ப்ளீஸ் ப்ளீஸ் ” என்றதும் தூரிகாவை இழுத்து அவர்களுக்கு நடுவில் இவன் அருகில் நிற்க வைத்துக் கொண்டு ஒரு செல்பி எடுத்துக் கொடுக்க.. அவள் விடைபெற்றாள்.

அவளுடன் வந்த பெண்ணும் அவனை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே நகர்ந்து விட்டாள். அவர்கள் சென்றதும் தூரிகாவிடம் திரும்பியவன் அவளது சிவந்த முகத்தை பார்த்து

“ தூரி என்னாச்சு ? ”

அவனை சட்டை செய்யாமல் அவள் நடக்க.. இவன் முழித்து நின்றான்.

“ என்னடா யுகா உனக்கு வந்த சோதனை.. ஏன் எதுக்குன்னு தெரியாமையே இந்த முறை முறைச்சுட்டு போறா.. நம்ம எதுவும் பண்ணலையே ” என அவன் யோசிக்க..

‘ அதை நீ சொல்லக் கூடாது போ போய் அவ கிட்ட கேளு ’ என கொட்டு வாங்கிய மனசாட்சி உள்ளிருந்து கூவியது.

அன்றைய தினம் முழுவதும் அவள் பின்பு சுற்றியதுதான் அவன் வேலை.. சக ஆர்.ஜேக்கள் கழுவி ஊற்றியது எல்லாம் காதில் விழவே இல்லை என்பது போல சுற்றிக் கொண்டிருந்தான்..

மாலை ஏழு மணி அளவில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த தூரிகா அவள் ஸ்கூட்டி பஞ்சராகி நின்றது கண்டதும் தலையில் கை வைத்து ஆடிப்போய் நின்றுவிட்டாள்.

“ அச்சோ தூரி இன்னைக்கு உன் நேரமே சரியில்லை போல.. காலையில தான் பஞ்சராகி ரெண்டு கிலோமீட்டர் நடக்க விட்டுது.. அதுக்குள்ள அடுத்த ரவுண்ட் ஆஹ் ” என புலம்பியவள் யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என சுற்றி முற்றி பார்க்க.. யுகா ஓர் ஓரத்தில் அவன் பல்சரில் அமர்ந்தபடி கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனிடம் சென்று அவன் முதுகில் ஒரு அடி வைக்க..

“ ஸ்ஸ்.. என்னை எதுக்குடி அடிக்கிற ” என்றவாறு திரும்பினான்

“ என் வண்டிய எதுக்குடா பஞ்சர் பண்ணின ”

“ என்ன உன் வண்டி பஞ்சர் ஆஹ் !! அச்சச்சோ நீ எப்படி வீட்டுக்கு போவ தூரி.. நான் ஏதும் ஆட்டோ பிடிச்சு தரவா ? ” என நல்ல பிள்ளையாய் கேட்டு வைத்தவனை இவள் கைப்பையால் மொத்தி எடுக்க..

“ ஆஆ.. வலிக்குதுடி ராட்சஷி.. பார்க்கத்தான் ஆளு இப்படி அடி ஒன்னு ஒன்னும் இடி மாதிரி விழுகுதுடி ” என்றவன் ஓடத் துவங்க..

“ டேய் பிராட் உன்னை பத்தி எனக்கு தெரியாதா நீதான் பஞ்சர் பண்ணி இருப்ப ” என இவளும் துரத்திச் சென்றாள்..

உண்மையும் அதுதான் ஏற்கனவே இரவு நேரங்கள் அவள் தனித்து செல்வதை விரும்பாதவன் அவள் பிடிவாதம் அறிந்து அலுவலகத்திற்குள் நுழையும்போதே வண்டியை பஞ்சர் செய்து விடுவான். பின் இவனே நல்லபிள்ளையாக அவளை வீட்டுக்கு அழைத்து சென்று விடுவான்.

இப்படியே பல நாள் தொடர ஒருநாள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான் அவளிடம்.. ஆனால் அதில் அவளுக்கு கோபம் எல்லாம் இல்லை மாறாக அவன் அன்பில் மனம் நெகிழ்ந்து தான் போனது.

இன்று கூட அவள் எதற்காக கோபித்துக்கொண்டு இருக்கிறாள் என்பது புரியாமல் மண்டை காய்ந்தவன் இறுதியாக அவன் ஆயுதத்தை கையில் எடுத்து விட்டான்..

“ உண்மையைச் சொல்லு விக்ரம் யாரு ? ” அவனின் பின்னால் அமர்ந்திருந்தவள் வினவ.. இவன் வியந்துதான் போனான் அவளது கேள்வியில்..

“ இவ்வளவு கெஸ் பண்ணின நீ அதையும் கெஸ் பண்ணி இருக்கணுமே ” அவளுக்குத் தெரியும் என்று அவனுக்கும் தெரியும்..

“ என்னோட கெஸ் கரெக்ட்னா அவன் உன்னோட அண்ணன் ”

புன்னகையோடு ஒப்புக்கொண்டான்.

“ நான் சொல்லி இருக்கேனே என்னோட விஜி பெரியம்மா.. அவங்க பையன் தான். அம்மா அப்பா ரெண்டு பேருமே வேலைக்கு போனதுனால நான் அதிகம் பெரியம்மா கிட்ட தான் வளர்ந்தேன்.. என்னைவிட அவன் சிக்ஸ் மன்த்ஸ் தான் பெருசு.. சோ ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் தான். ஒன்னாதான் படிச்சோம் ஒன்ன தான் வளர்ந்தோம்.. ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ். உனக்கே தெரியும் நான் யார்கிட்டயும் சட்டுன்னு பழகிடமாட்டேன். எனக்குன்னு இருந்த ஒரே ஃப்ரெண்ட் அவன் தான்..

ஆனா அதெல்லாமே பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வர்ற வரைக்கும் தான்.. நாங்க அப்போ பைனல் இயர் படிச்சிட்டிருந்தோம் அம்மாவோட அப்பா -தாத்தா சொத்தை அப்போதான் பிரிச்சாங்க.. பெரியப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் சோ அவர் நிலத்தை பிளாட் போட்டு விக்கலாம்ன்னு சொல்ல.. விவசாய நிலத்தை விற்க ஒத்துக்க மாட்டேன்னு எங்க அப்பா சொல்ல.. பிரச்சனை பெரிதாகி ரெண்டு குடும்பத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தையே இல்லாம போயிடுச்சு..

பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தும் ஒருத்தர ஒருத்தர் முகம் பார்த்து பேசிக்கல.. என்னைப் பொறுத்தவரைக்கும் அது பெரியவங்க பிரச்சனை அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அதனால நான் எப்பவும் போல அங்க போனேன்.. பேசினேன்.. பெரியப்பா பேசல.. அது எனக்கு பெருசா தெரியல ஆனா இவன்.. இவனும் என் கூட பேசல தூரி..

என்னால அதை அக்சப்ட் பண்ணிக்க முடியலை.. அவன் எப்படி பெரியப்பாக்காக என் கூட பேசாம இருக்கலாம் !! எனக்கு கோபம்.. ஆனாலும் எல்லாத்தையும் அவன் கிட்டயே ஷேர் பண்ணுற எனக்கு அவன்கூட பேசாம இருந்தது நரகமா இருந்துச்சு.. ஒரு வருஷம் கஷ்டப்பட்டு அங்க காலேஜ் படிச்சேன் அதுக்கு அப்புறம் அங்க இருக்க முடியலைன்னு கிளம்பி இங்க வந்துட்டேன் ” என்றவன் பெருவுடையார் கோவிலின் முன் வண்டியை நிறுத்தினான்.

அவனைக் கேள்வியாக பார்த்தவளிடம் “ இன்னைக்கு பிரதோஷம் அதுதான் ” என்றவன் உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே கூட்டமும் இந்த நேரத்தில் பெரிதாக இருக்கவில்லை பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்து விட்டு பிரகதீஸ்வரரை தரிசித்துவிட்டு வெளியே வந்தனர்

“ யுகா.. வா அங்க புல்தரையில் உட்காரலாம் ” என அழைக்க அவளுடன் இணைந்து நடந்தான்.

பௌர்ணமி முடிந்து இரு தினங்களில் ஆகி இருக்க இன்னும் நிலவொளி பிரகாசமாகவே இருந்தது. அந்த விண்மீனைக் காட்டிலும் அவனது பெண்மீண் மிளிர்ந்து கொண்டிருக்க.. அவளது முகத்தை விட்டு கண்களை அகற்ற முடியாமல் தவித்து தான் அமர்ந்திருந்தான் யுகா..

“ தூரிகா ”

“ ம்ம் ” என கோபுரத்தை ரசித்துக் கொண்டிருந்தவள் இவன் புறம் திரும்ப

“ ஐ லவ் யு ”

என்றான் அவள் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்தபடி.

ஏனோ அதற்கு மேலும் அவளிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை அவனால்.. சொல்லியே விட்டான். அவள் பதிலுக்குக் காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை

அவன் தன் காதலைச் சொல்லிய அடுத்த நொடி அவள் விரல் தடங்கள் அவன் கன்னத்தில்..

சத்தியமாய் அவன் இதை எதிர்பார்க்கவில்லை.. அவனது விரல்கள் எரிந்த கன்னத்தை தானாக வருட..

“ யுகாஆஆ.. ”

அவளது அழைப்பில் “ ஆங் ” என கனவில் இருந்து வெளியே வந்திருந்தான்.

ஆம் கனவுதான்.. அவளிடம் சொன்னால் எப்படி இருக்கும் என நினைத்து தான் பார்த்தான்.

“ கூப்பிட்டுட்டு என்ன ஏதோ கனவு கண்டுட்டு இருக்க ”

“ அதுவா.. … ”

‘ என்ன யுகா சொல்லிடுவயா ? ’ – வேறு யார் அவனது பரம எதிரி மனசாட்சிதான்

“ ப்ச்.. ”

“ என்னடா சலிச்சுக்கற ”

இது வேறயா என்றெண்ணியவன்

“ நீயும் படுத்தாதடி ” என்றபடி கைகளை தலைக்கு கொடுத்து தரையில் படுத்துக் கொண்டான்

“ நீயும்னா.. அப்போ வேற யாரு படுத்துறது.. ”

சொல்லிவிடத்தான் ஆசை அவனுக்கும்.. உன் மேல் நான் கொண்ட காதல் என..

ஆனால் வார்த்தைகள் அவனோடு தொண்டைக்குழியில் வார் செய்ய அவனும் தான் என்ன செய்வான்.

சில்லென்ற குளிர் காற்று இதமாய் வருடிச் செல்ல.. பூமித்தாயின் மடியில் படுத்திருந்தவன் அப்படியே கண்ணயர்ந்து விட்டான்.

டங்.. டங்.. என்ற கோவில் மணி ஓசையில் விழித்தவன் நிதர்சனம் உறைத்து எழுந்து அமர்ந்தான்.

அவனருகே இருந்த அவனவளையும் காணவில்லை.. சுற்றும் முற்றும் பார்க்க ஆள் நடமாட்டமே இல்லை.

பதறி எழுந்தவன் “ தூரிகா.. தூரி.. ” என கத்திக்கொண்டே கோவில் முழுக்க சுற்றி வந்து விட்டான் விழிகளில் விழவே இல்லை அவள்.

என்ன என்னவோ எண்ண ஓட்டங்கள் அவன் மனதில் எழுந்து பேரலையாய் அவனை சுழற்றி அடிக்க ஓய்ந்து போய் அமர்ந்து விட்டான்.

சற்று முன்பு இருந்த இதம் முகவரியைத் தொலைத்திருக்க.. பதற்றமும் தவிப்பும் குடிபுகுந்தன அவனுள்.

“ எங்கடி போன ” என அவன் இதயத்திற்குள் பத்திரமாய் இருந்த அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க

“ யுகா ” என அவன் தோள் மேல் கை வைத்தாள்.

“ தூரி ” என விரைந்து எழுந்தவனைப் பார்த்து குழம்பித்தான் போனாள் அவள்.

அத்தனை குளிரிலும் அவன் முகம் வியர்த்து வியர்வை அரும்புகள் பூத்திருக்க..

“ என்னடா ஆச்சு முகமெல்லாம் இப்படி வேர்த்து இருக்கு ?? ஆமா நீ படுத்துட்டு தான இருந்த இப்ப என்ன மண்டிபோட்டு உட்கார்ந்து இருக்க ” என்றவளிடம்

“ எங்க போன ? ” என்றான் இறுகிய முகத்துடன். அவளோ அவனது முகத்தை கவனிக்காமல் “ இங்க பாரு ” என வாங்கிவந்த தலையாட்டி பொம்மையை காண்பிக்க..

பளார்ர்ர்… என அறைந்திருந்தான்.

அவள் கையிலிருந்த தலையாட்டி பொம்மை கீழே விழுந்து சிதறி உயிரை விட்டிருந்தது.

“ அறிவில்ல.. எங்கேயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போக வேண்டியதுதானே ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சுடி.. இப்ப இது இல்லைன்னு எந்த பாப்பா அழுதுச்சு ” என்றவன் பொம்மையை எட்டி உதைக்க.. அடுத்த கணம் இவள் அறைந்திருந்தாள்.. அவள் முகம் சிவந்திருந்தது.

அப்பொழுதுதான் தான் செய்த செயலின் வீரியம் உறைத்தது அவனுக்கு.

விழிகள் அவளிடம் மன்னிப்பை யாசிக்க.. அவளோ கீழே விழுந்திருந்த பொம்மையை எடுத்து பையில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

‘ வாங்குன அடி பத்தலையோ !! இப்படியே மசமசன்னு நிக்காதே.. போடா போய் சமாதானம் பண்ணு. இதைக்கூட நான்தான் சொல்லணும்னா எப்படிடா.. ’ என உள்ளிருந்து அவனது மனசாட்சி இவனது தலையில் தட்ட வேகமாக அவளை நோக்கி ஓடினான்..

அவள் அவனது பல்சர் அருகே நிற்கக் கண்டு “ என்ன கோவிச்சுட்டு போயிடுவான்னு பார்த்தா அங்க போய் நிற்கிறா ” என யோசிக்க..

‘ டேய் இப்ப இந்த ஆராய்ச்சி முக்கியமா !! ’ என்ற மனசாட்சியின் கத்தலில்

“ ஷ்ஷ்.. கத்தாத போறேன் ” என்றவன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க..

‘ டேய்ய்ய் ’

“ இப்ப என்னடா ” சத்தியமாக அந்த மனசாட்சியை டைவர்ஸ் செய்யும் முடிவுக்கு வந்துவிட்டான்.

‘ அவ வாங்கின பொம்மையை உடைக்க தெரிஞ்சது இல்ல.. இப்ப ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிட்டு போய் கொடுத்து அவளை மலை இறக்குடா என்னால முடியல அவ்வ்.. ’ என்ற கதறலில்

“ தேங்க்ஸ் ” என்றவன் டைவர்ஸ் கேன்சல் என முடிவு செய்து இரண்டு அழகான பொம்மைகளை வாங்கிச் சென்றான்..

“ தூரி சாரிடி.. வெரி சாரி.. உன்னை காணோம்னு ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன் நீ பொம்மையோட வந்து நிற்கவும் ரொம்ப கோபம் வந்துடுச்சு கோபத்துல என்ன பண்றதுன்னு தெரியாம தான் பொம்மையை.. ” என்றவன் முடிக்க முடியாமல் அவள் முகம் பார்க்க..

எந்த விளக்கமும் எனக்கு தேவையில்லை என்பதாய் நின்றிருந்தாள். அவளுடைய இந்த கோபம் நிச்சயமாக ஒரு வாரம் நீடிக்கும். ஆனால் அது கூட நியாயமானதுதான்.. அவளுக்கு தலையாட்டி பொம்மைகளின் மீது அத்தனை பிரியம்.. காதல்.. அவளது அறை முழுவதும் விதவிதமான பொம்மைகள் தான் நிறைந்திருக்கும்..

அவ்வளவு ஏன் இந்த மூன்று வருடங்களில் யுகாவே எத்தனை முறை வாங்கி கொடுத்துள்ளான்.. அப்படியிருக்க இன்று அவனே அதை காலால் எட்டி உதைத்து தான் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவளை வீட்டில் இறக்கி விட்டவன் அவள் உள்ளே அழைப்பாள் என்ற நப்பாசையில் நின்றிருக்க.. அவளோ சட்டை செய்யாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

‘ உனக்கே ஓவரா தெரியல.. ’ ஒரு குரல்..

“ வந்துட்டியா.. இப்ப என்ன ”

‘ எனக்கு என்ன நீ தான் ஏதோ பீல் பண்ணிட்டு இருக்க போல ’

“ ப்ச்.. அவ உள்ளவான்னு ஒரு வார்த்தை கூட சொல்லல ” என்றான் அவள் போவதைப் பார்த்துக்கொண்டே..

‘ நீ பண்ணுன வேலைக்கு உள்ள கூப்பிட்டு விருந்து வைப்பா பாரு.. கிளம்பு கிளம்பு இன்னும் கொஞ்ச நேரம் நின்னுட்டு இருந்தா இருக்கிற கோபத்துல எங்க வீட்டுக்கு முன்னாடி சந்தேகப்படும்படியான ஆள் நடமாட்டம் இருக்குனு அவளே போலீஸ்ல பிடித்து கொடுத்திடுவா ’

மனமே இல்லாமல் பல்சரை கிளப்பிச் சென்றான்.

 

மேகம் கடக்கும்…

Advertisement