Advertisement

 

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 2 :

 

சித்திரரதனின் இளங்கதிர்கள் தூரிகையாய் துயில் கொண்டிருந்தவனின் மீது சித்திரம் வரைய… இமைக்கு நோகுமோ என்று மென்மையாய் விழி திறந்து துயில் நீத்தான் அதுல்.

 

துயில் கலைந்து எழுந்தவன் மாடத்திலிருந்து இறங்கி வரவேற்பறை நோக்கி வர.. சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விழுந்து கொண்டிருந்தான் மிதுன்.. அதுலின் பாசக்காரத் தம்பி.

 

ஒரு புன்னகையுடன் அவன் அருகில் சென்று, ” மிதுன்.. மிதுன்.. ” என அவன் தோள்களைப் பற்றி மெல்ல எழுப்ப..

” ஹான்.. அண்ணா… எழுந்துட்டியா.. ” என்றபடியே நேராக சாய்ந்தமர்ந்தான்.

” நீ எப்போ வந்த ?? உன் பைக் இங்க இருக்கே.. எப்படி வந்த.. ”

” இப்போதான் வந்தேன்.. பிரகாஷ் கொண்டு வந்து விட்டுட்டு போனான் “

” ஏன்டா.. என்கிட்ட சொல்லிருந்தா நா வந்து கூட்டிட்டு வந்திருப்பேனே.. “

” அம்மாகிட்ட நேத்து நைட் சொன்னேனே !! அவங்க உன்கிட்ட சொல்லலையா.. ” என்றான் கை மறைவில் கொட்டாவி விட்டவாறு.

அம்மாவா.. என்றவனுக்கு அவர் நேற்று தொடரில் மூழ்கியிருந்தது நினைவிற்கு வர..

” மறந்திருப்பாங்களா இருக்கும்.. சரி நீ போய் தூங்கு.. “

” இந்தா உனக்காக வாங்கிட்டு வந்த ஷர்ட்.. இத கொடுக்கலாம்னு தான் வெயிட்டிங்…  ” என அண்ணன் கைகளில் பார்சலைத் திணித்துவிட்டு அவன் அறைக்கு நகர்ந்தான் மிதுன்.

 

அவனது அன்பு கண்டு அதுலின் அதரங்களில் சிறு புன்னகைப் பூ அதுவாய் மலர்ந்தது.. தன் அறைக்குச் சென்று வேகமாக தயாராகி வந்தான்.

 

மிதுன் அளித்திருந்த வெள்ளை நிறத்தில் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு கட்டங்கள் கொண்டிருந்த அந்த ஓட்டோ ஷர்ட் அதுலிற்கு அற்புதமாய் பொருந்தியிருந்தது.

 

” அம்மா.. இன்னும் ரெடி ஆகலையா ?.. சீக்ரம் மா… ” என்றான் நேரம் பார்த்தவாறு.. இன்று காலையில் ஒரு முக்கியமான மீட்டிங்.. அது குறித்தே இந்த பரபரப்பு..

” என்ன இன்னும் ரெடி ஆகலையா ? எனக்கு ஆண்டவன் ரெண்டு கையும் ரெண்டு காலும் தான் கொடுத்திருக்கான்.. மெதுவாக தான் செய்ய முடியும்.. சீக்கிரம் கிளம்பனும்னா முன்னாடியே சொல்ல வேண்டியது தானே.. ” என பல்லவி பாட ஆரம்பித்து விட்டார் ஜெயா.

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தவன், ” நேரம் ஆச்சும்மா.. நீங்க மெதுவாவே செய்யுங்க அவசரம் வேணாம்.. நான் காண்டீன்ல பாத்துகிறேன்.. ” என வெளியேற..

” அத்து ஒரு நிமிஷம் இரு.. ” என்றவாறு அவன் அருகில் வந்தவர் அவனிடம் ஒரு டம்பளரை நீட்டியபடி, ” புது சட்டையா ” என்று வினவ,

” ஆமாம் மா.. மிதுன் வாங்கிட்டு வந்தது.. ” என்றான் அம்மா அளித்த பாலைப் பருகியவாறே.

அதற்குள் சிறிது மஞ்சள் எடுத்து அவன் காலரில் வைத்த ஜெயா,

” எத்தனை தடவை சொன்னாலும் இந்த பழக்கம் வராதே அண்ணனுக்கும் தம்பிக்கும்.. ” என்றபடி மீண்டும் அடுப்பைக்குள் புகுந்துகொண்டார்.

அவ்வளவு பல்லவியிலும் பால் கலக்கிக் குடுத்த அம்மாவின் அன்பில் நெகிழ்ந்தபடியே வெளியே வந்தான்.

 

காலை நேரத்தில் ஜெயா இப்படித்தான் பரபரப்பாக இருப்பார்.. காலையில் எழுந்ததில் இருந்து அவருக்கும் வேலை சரியாக இருக்கும். எழுந்தவுடன் வீட்டின் முன்பிருந்த பெரிய வாயிலை பெருக்கி.. சாணம் தெளித்து.. மறக்காமல் கோலம் போட்டு அதன் பின் ஒரு குளியல் போட்டு விளக்கேற்றி சமையலறைக்குள் புகுந்தார் என்றால் அதன் பின் ராக்கெட் வேகத்தில் சமையல் முடிக்க வேண்டும்.

 

அத்து, மிதுன் இருவருமே சரியாக எட்டு மணிக்கு கிளம்பியாக வேண்டும். அதற்குள் காலை மதியம் என இரு வேலைகளுக்கும் தனியாக சமைக்க வேண்டும்.. காய்கறி நறுக்கக் கூட உதவிக்கு யாரும் இருக்கமாட்டார்கள். அத்து அவனுக்கு நேரமிருந்தால் வந்து உதவுவான்.

 

அப்படி அரக்கப்பறக்க இருக்கும் போது அம்மா அதை காணோம் இதை காணோம் என்று போய் நின்று வாங்கிக் கட்டிக் கொள்வான் மிதுன்.. பெரும்பாலும் அதுல் சிக்க மாட்டான்..

 

இன்று கூட அத்துவிற்குப் பிடிக்கும் என செய்த வாழைக்காய் பொரியல் கருகி விட்டது.. கூடவே பால் அதன் பங்கிற்கு பொங்கி வழிந்து வேறு அவருக்கு வேலை வைத்துவிட்டது அதனால் தான் அப்படி சிடு சிடு என விழுந்துவிட்டார்..

 

இது அத்துவிற்கும் புரியுமாதலால் அவர் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான்.

 

அலுவலகம் வந்தவனது நேரம் மீட்டிங்.. டாஸ்க்.. இன்டெர்னல் ஆடிட்டிங்.. என சிறகு விரித்து பறக்க காலை உணவு என்பதே மறந்து விட்டது..

‘ போதும் என்னையும் கொஞ்சம் கவனியேன் ‘ என வயிறு கெஞ்ச வேலைகளை ஒதுக்கிவிட்டு காண்டீன் செல்ல அது மூடப்பட்டிருந்தது.

 

” தம்பி.. அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் அதுனால ரெண்டு நாளைக்கு ஊர்ப்பக்கம் போறேன்.. ” என கனகு நேற்று சொல்லியது இப்பொழுது தான் நினைவிற்கு வந்தது..

‘ அத்து… இப்படி சொதப்பிட்டியே…  ‘ என்றவாறு நிற்க

” என்ன அத்து காண்டீன முறைச்சி பார்த்துட்டு நிக்குற ” என்றபடி வந்தான் கதிர்.

” ஆசை பாரு.. சாப்பாட்டுக்கு வழி இல்லாம நின்னுட்டு இருக்கேன் டா.. “

” நண்பா.. உனக்கு ஏன் அந்த நிலைமை ? சொல்.. தனியொருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு பாரதி சொன்னதை நாம செஞ்சே காட்டுவோம்.. சொல்.. ” என போர்க்கொடி தூக்கியவனின் தோளில் தட்டியவன்..

” ஜகத்தை கூட அழிப்ப.. ஆனா உன் சாப்பாட்டுல பங்கு தர மாட்ட.. அப்படித்தானே ! ” என பரிகாசம் செய்தவனிடம்,

 

” அந்த கஷ்டம் என்னோட போகட்டுமேன்னு தான்.. ” என்றான் கதிர் சோகமாக.

” உன் மொபைல் கொஞ்சம் கொடுவேன்..  ” என்றவனிடம் கொடுத்துவிட்டு,

” எதுக்கு மச்சான் ” என்று கேட்டான்.

” ஒண்ணுமில்ல நீ சொன்னதை நிலா கிட்ட சொல்ல தான்.. ” என இயல்பாக கூறி காதில் வைக்க..

” அடேய் ! உனக்கு ஏன் இந்த நல்லெண்ணம்.. கிடைக்குற அந்த சாப்பாடும் கிடைக்காம போகட்டும்னு தானே.. ” என கதிர் விரைந்து கைபேசியை அவனிடம் இருந்து வாங்கிப் பார்த்தான். அதுல் யாரையும் அழைத்திருக்கவில்லை அவன் வெறும் பாவனை மட்டுமே செய்துகொண்டிருந்தான்.

” ஹா ஹா… அந்த பயம் இருக்கட்டும்.. ”         

” இருக்கட்டும்.. இருக்கட்டும்.. லஞ்ச் என்ன பண்றதா உத்தேசம் “

” அதான் டா நானும் யோசிக்குறேன்.. ஞாபகம் இருந்திருந்தா மிதுன் பைக் ஆவது எடுத்திட்டு வந்திருப்பேன் வீட்டுக்கு போயி சாப்பிட்டிருக்கலாம்.. இப்போ பஸ்ல போகணும்.. போயி.. திரும்ப எப்ப வந்து சேருறதுன்னு தெரியல… “

” யோசிக்கவே வேணாம்.. நானும் இன்னிக்கு சாப்பாடு எடுத்திட்டு வரல.. வா போகலாம்.. ” என கதிர் அவனை அழைத்துச் சென்றான்..

 

இருவரும் அவர்கள் அலுவலகத்திலிருந்து சற்று தொலைவிலிருந்த மெஸ் ஒன்றினுள் நுழைந்தனர்..

 

” மச்சான்.. இது ஆந்திரா மெஸ் டா.. பிரியாணி சும்மா கார சாரமா இருக்கும் அவங்க பாணியில.. நானும் நிலாவும் ஒருதரம் வந்திருக்கோம்.. ” என்றவாறு ஒரு மூலையில் இருந்த மேஜையில் அமர்ந்தான் கதிர்.

” ஊருக்குள்ள ஒரு கடை விட்டு வைக்கறது இல்ல.. ” என வம்பிழுக்க.. சர்வர் வந்ததும் ஆர்டர் கொடுத்தனர்.

 

அலுவலகத்தில் இருவரும் வேறு பிரிவு.. அதுல் அக்கௌன்ட்ஸ்.. கதிர் மார்க்கெட்டிங்.. இருப்பினும் இருவரும் ஒரே சமயத்தில் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட நல்ல நட்பு உருவாகியது.

 

கதிருக்கு அத்துவின் ஆர்ப்பாட்டமில்லாத அழகான அமைதியான நேர்த்தியான ரசனையான அவனது வாழ்க்கைமுறை பிடிக்கும்.. அவனுக்குமே அப்படி வாழ ஆசை தான்.. முயற்சி செய்தும் பார்க்கிறான்.. முடியவில்லை.

 

இருவரும் அலுவலகம் சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்க ஆர்டர் செய்யப்பட்ட உணவு வர பேச்சு தடைப்பட்டது.

 

இவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு எதிர் வரிசையில் ஒரு நான்கைந்து பேர் அவர்களுக்குள் சலசலத்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

 

அதிலிருந்த ஒரு குரல் மட்டும் அத்துவிற்குப் பரிச்சயமாய்த் தோன்ற மெல்ல திரும்பிப் பார்த்தான்.. முகத்தைப் பார்த்த போது ஏதும் அறிமுகமில்லை.. ஆனால் அந்தக் குரல் !

 

யோசனையோடு அவளைப் பார்த்திருக்க..

” அத்து ! நீ சைட் கூட அடிப்பியா.. ” வியப்புடன் கேட்டு வைத்தான் கதிர்.

அதிர்ந்து திரும்பியவன்.. ” ச்சீ.. நான் அதெல்லாம் ஒன்னும் பண்ணல.. ” என அவசரமாக மறுக்க..

‘ ச்சீயா.. ‘ என அத்துவை அற்பப் பதரைப் போல பார்த்து வைத்தான் நண்பனவன்.

” ஏண்டா.. அப்படி பார்க்குற.. அதோ அந்த லைட் எல்லோ வித் கிரீன் சல்வார்.. அந்த பொண்ணு வாய்ஸ் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு ” என விளக்கமளித்து விட்டு சாப்பிடத் துவங்கினான்.

 

பின்பு கை கழுவி விட்டு வரும் வழியில் அந்தப் பெண் எதிரில் வந்துகொண்டிருக்க,

” நான் வேணா கேக்கட்டுமா.. ” என்றான் கதிர் குறும்பாக.

” என்னனு “

” அவங்க குரலை நீ எங்கயோ கேட்ட மாதிரி இருக்குன்னு.. ” என்றவன் அவர்கள் அருகில் அவள் வந்ததும், ” எக்ஸ்க்யூஸ் மீ ” என்று அவளை அழைத்தும் விட்டான்.

 

” யெஸ்.. ” என்றவளிடம்

” உங்க ஹான்ட் கீய்.. ” என அவள் தவற விட்டிருந்த கைக்குட்டையை காண்பிக்க

” ஓஹ்.. தான்க் யு.. ” என சிறு புன்னகையை உதிர்த்து அவள் நகர்ந்து கொண்டாள்.

‘ எப்புடி ‘ என்று கதிர் புருவங்களை உயர்த்தி அத்துவை பார்த்துவைக்க..

தலையை இடம் வளமாக அசைத்து, ” அதிகப்ரசங்கி வேலை டா இதெல்லாம்.. ” என்றான் அதுல்.

” எது நான் அவங்களுக்கு உதவினதா.. ஆனாலும் நீ நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்ட.. ” என போலியாய் வருந்த

” நானா ? நீயா ? சரியில்லையே.. எதுக்கும் இந்த வாரம் வீட்டுக்கு வந்து என் தங்கச்சிகிட்ட சொல்லி வைக்கணும் போல.. “

” நண்பா.. இனிமே தெரியாம கூட இந்த தப்பை பண்ணிறமாட்டேன்.. நன்னு ஷமிக்ஷி ஒதளிபெட்டு.. ” என சரணடைந்தான்.

 

பின் அலுவலகம் வந்த இருவரும் அவரவர் அறை நோக்கிச் சென்றுவிட  அடுத்து செய்து முடிக்கவேண்டிய வேலைகள் வரிசை கட்டி நின்றிருந்தது அத்துவிற்கு.

 

அனைத்தையும் முடித்தபோது இருட்டியிருந்தது. அலுவலகம் விட்டு வெளியே வந்த அத்துவை எதிர் கொண்ட கதிர்,

” நண்பா வா.. நான் ட்ராப் பண்றேன்.. நிலா அவங்க அம்மா வீட்டுல தான் இருக்காளாம்.. உன்ன விட்டுட்டு நான் அவளை அப்படியே கூப்பிட்டு போறேன் ” என்று அழைக்க அவனுடன் கிளம்பினான்.

 

அழைத்தது கதிர் என்பதால் மட்டுமே அதுல் ஒப்புக்கொண்டு அவனுடன் சென்றான்.. வேறு ஒருவராயின் நிச்சயம் மறுத்திருப்பான்.

 

இருவரும் பிரதான சாலையில் பயணித்திருக்க.. அதிலிருந்து பிரிந்து ஒரு மண் ரோட்டிற்குள் வந்தவுடன்,

” உங்க வீட்டுல என்ன சொல்றாங்க கதிர் ? ” என்று வினவினான் அதுல்.

 

அவன் எதைப் பற்றி விசாரிக்கிறான் என்றறிந்து, ” ப்ச்.. என்ன சொல்வாங்க.. நிலாவ விட்டுட்டு வந்தா வீட்டுக்குள்ள வான்னு சொல்றாங்க.. ” என்றான் கசப்பாக..

 

நிலா.. கதிரின் மனைவி.. அவர்களது திருமணம்.. காதல் மற்றும் கலவரம் கலந்த ஒன்று..

 

நிலாவின் இல்லமும் அத்துவின் இல்லம் உள்ள தெருவில் தான் உள்ளது. நிலாவும் அத்துவும் ஒரே பள்ளி மற்றும் கல்லூரி என்பதால் நல்ல பழக்கம்.. ஒரு வித சகோதர பாசம் எப்போதும் அவனிடம் உண்டு அவளுக்காக.. அதுபோலவே தான் அவளுக்கும்.

 

” விடுடா.. நிலா வீட்டுல உங்களை ஏத்துகிட்ட மாதிரி சீக்கிரமே உங்க வீட்டுலயும் ஏத்துக்குவாங்க.. ” என சமாதானப் படுத்தினான் அதுல்.

” ம்ம்.. ஆனா அம்மாவ நினைச்சா தான் கஷ்டமா இருக்கு.. எனக்கும் அப்பாவுக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்குறாங்க டா.. ” என்றான் வருத்தமாக..

 

வேறு சாதிப்பெண்ணை காதலிப்பது தெரிந்து கதிரின் வீட்டில் கலகமே வெடித்தது. அவனுடைய அம்மா மென்மையானவர்.. சாதுவானவர்.. மகனுடைய சந்தோசமே தன் சந்தோஷம் என்று நினைப்பவர். ஆனால் அவனுடைய அப்பா அப்படியே நேர் எதிர். அவர் நினைத்ததே நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர்.. அதைவிட தன் கெளரவம் யாருக்காகவும் எவ்விடத்திலும் குறையக்கூடாது என்றெண்ணுபவர்.

 

கதிர் வேறு சாதிப்பெண்ணைக் காதலிப்பது அவரது கௌரவத்திற்கு பேரடியாய் அமைய.. அவனது காதல் விடயம் கேள்வியுற்றதும் அவனை ஒரு துவை துவைத்து விட்டார்.. அதோடு நில்லாமல் நிலா வீட்டிற்குச் சென்று பேசி அங்கொரு பூகம்பத்தையும் கிளப்பி வந்துவிட்டார்.

 

இவ்வாறே முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்க.. பொறுத்தவரை பொறுத்தவன் நிலாவை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டான். அப்பாவும் புரிந்து கொள்வார் என்றெண்ணித்தான் காத்திருந்தான். நிலைமை கைமீறும்போது அவனுக்கும் வேறு வழியில்லாமல் போக.. தன்னை நம்பி வந்த நிலாவைக் கைப்பிடித்துவிட்டான். கதிர், நிலா இருவரிடமும் வேலை இருந்ததால் பணத்திற்கு எந்த கவலையும் இல்லை.. ஆனால் பெற்றவர்களை நினைத்து தான் மனதிற்குக் கவலை.

 

” நீயும் அடிக்கடி அம்மாவ சந்திச்சு பேசு டா.. இருக்கறது ஒரே பையன்.. உனக்காக தான டா அவங்க வாழ்றதே.. ” என அவனுக்கு எடுத்துக் கூறி வர அத்துவின் வீடும் வந்திருந்தது.

” உள்ள வாடா.. ஒரு கப் காபி சாப்பிட்டு போலாம்.. “

” இல்ல நண்பா.. இன்னொரு நாள் வரேன்.. அம்மாவ கேட்டதா சொல்லு.. லேட் ஆச்சுன்னு நிலாக்குட்டி ஆங்ரி மோடில் இருப்பா.. நான் போய் மூட மாத்தணும்.. ” என்றவாறு விடைபெற்றான் கதிர்.

வீட்டினுள்ளே வர..

 

அதுல் வந்தது கூடத் தெரியாமல் மிதுன் அவனது கைப்பேசியை நொண்டிக் கொண்டிருந்தான். மிதுனை விட்டால் பசி தூக்கம் அற்ற முனிவராய் மாறி இருபத்தி நான்கு மணிநேரமும் கைப்பேசியோடு கடும் தவமிருப்பான்.

‘ மிதுன் ‘ என்ற அழுத்தமான அழைப்பில்

” வந்துட்டியான்னா..  ” என்றவாறு அலைபேசியை அனைத்து எறிந்துவிட்டு வந்து அமர்ந்தான்.

அதிசயமாக அப்பா வீட்டிலிருந்தார்..

” அப்பா இன்னிக்கு ரெஸ்டா…  ” என்றவாறு அவர் அருகில் சென்று அமர்ந்தான் அதுல்..

 

அத்துவின் தந்தை ரவிச்சந்திரன்.. செக்யூரிட்டி கார்டாக பணிபுரிந்து வருகிறார். பெரும்பாலும் அவருக்கு இரவு நேரப்பணியே இருக்கும். வாரத்தில் ஞாயிறன்று மட்டுமே இருவரும் பார்த்துக் கொள்ள முடியும். அமைதியான சுபாவம் உடையவர்.. அதுலின் நிதானமும் பொறுமையும் அவரிடமிருந்தே..

 

” ஆமாப்பா.. இன்னிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல.. அதான் லீவு போட்டுட்டேன்.. ” என்றவாறு சோர்வாக சாய்ந்தார் இருக்கையில்.

” என்னாச்சுப்பா.. ஹாஸ்பிடல் ஏதும் போயிட்டு வருவோமா ? மிதுன் அப்பாகிட்ட கேட்டியா ” என அவனிடம் திரும்ப..

” நானும் கூப்பிட்டேன்னா.. அப்பா தான் வர மாட்டேன்னு சொல்லிட்டாரு.. சரி நீ வந்ததும் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.. ” என்றான் மிதுன்.

 

நீலகிரித் தயலத்தின் மணம் அறை முழுதிலும் பரவியிருக்கும் போதே அத்துவிற்கு தெரியும்.. தந்தைக்கு மிதுன் அவனது கைகளால் தலை பிடித்து விட்டிருப்பான் என்று.. இருந்தும் மனம் கேளாமல்,

 

” என்னப்பா.. ஹெல்த் விஷயத்துல ஏன் இவ்வளவு அஜாக்ரதையா இருக்கீங்க.. வேலைக்கு போக வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்குறீங்க ” என கடிந்து கொள்ள.. எப்போதும் போல் ஒரு புன்னகை மட்டுமே அவரிடத்தில் இருந்து வெளிப்பட்டது

 

அத்து குடும்பப் பொறுப்பை சுமக்க ஆரம்பித்ததிலிருந்து அவன் கூறும் ஒன்றுதான் இது.

 

” இப்பயே பொறுப்ப உன் தலைமேல சுமத்த இஷ்டம் இல்லப்பா.. தம்பியையும் நீதான் படிக்க வைக்குற.. வீட்டு லோன் அப்புறம் உன்னோட எஜுகேஷன் லோன் நீ தான் கட்டுற.. இதுல வீட்டுச் சுமையும் உனக்கு தர மனசு வரலப்பா.. இன்னும் கொஞ்ச நாள் தானே மிதுன் வேலைக்கு போனதும் நான் நின்னுக்குறேன்.. ” என்று பதிலளித்தவரைப் பார்த்து மனதே இல்லாமல் தலை அசைத்தான் அன்று.. சிறிது நாட்களில் தந்தையின் இந்த முடிவை மாற்றிவிடலாம் என்றெண்ணி.

 

ஆனால் ரவிச்சந்திரன் இன்றுவரை அவரது முடிவில் உறுதியாய் இருக்கிறார்.

 

இந்த வயதிலும் மகனுக்கு துணை நிற்கவேண்டும் என்று எண்ணுபவரை என்ன சொல்ல !!

 

பெற்றோருக்கு தான் எத்தனை கஷ்டத்தை அனுபவித்தாலும் பரவாயில்லை ஆனால் தன் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணம்.. பிள்ளைகளுக்கு இதற்கு மேலும் பெற்றோரை கஷ்டப்பட விடாமல் அனைத்தையும் தன் மீது போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்.

 

இன்னல்கள் எத்தனை இருப்பினும் அது அனைத்தையும் கடக்க வல்ல சக்தியை அளிப்பது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் உண்மையான நேசமானது மட்டுமே. அந்நேசம் ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் இருந்தால் கஷ்டமென்ன !! கரப்பான் பூச்சியென்ன !! எதுவும் கடந்து போகும்.

 

தந்தையின் அருகில் தரையில் அமர்ந்தவன் இதமாக அவர் கால் பிடித்துவிட்டான். அத்துவைப் பார்த்து மிதுன் மீண்டும் தந்தையின் தலையைப் பிடித்துவிட ஆரம்பிக்க.. ஜெயா சூடான தேநீருடன் வந்தார்.

 

” விடுங்கப்பா.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. அத்து நீ மொதல்ல எழுந்திரு.. மிதுன் என்னடா மறுபடியும் ஆரம்பிக்குறே ” என்று அவர் கூறுவதையெல்லாம் மகன்கள் கேட்கவில்லை..

 

சின்ன மகன் தலை அமுக்கிவிட பெரிய மகன் கால் பிடித்துவிட மனைவி கலந்துகுடுத்த தேநீரை ரசித்து பருகுபவருக்கு இதற்குமேல் வலிகள் இருக்குமா !! அனைத்தும் மாயமாய் மறைந்தது.  

 

சிறிது நேரத்தில் ஜெயா,

” சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம் ” என்றபடி உணவை எடுத்துவைக்கச் செல்ல..

” மா நீங்களும் அப்பாவும் மொதல்ல சாப்பிடுங்க நானும் அண்ணனும் அப்பறம் சாப்பிடறோம் ” என்றான் மிதுன்.

 

பெற்றோரை அமரவைத்து மகன்கள் இருவரும் பரிமாற.. அவர்களுக்கே தெரியாமல் என்றும் உண்ணும் அளவைவிட கொஞ்சம் அதிகமாகவே உட்கொண்டனர் பெற்றோர்.

 

அவர்களது இல்லத்தில் இது அடிக்கடி நடைபெறும் ஒன்றுதான். அப்போதெல்லாம் மனதும் வயிறும் சேர்ந்தே நிறைந்துவிடும் பெற்றோருக்கு.

 

தாய் தந்தையை உறங்கச் சொல்லிவிட்டு தம்பியிடம் திரும்பியவன், ” ஒரு பத்து நிமிஷம் டா.. பிரெஷ் ஆகிட்டு வரேன் ” என எழுந்தான்.

” மறக்காம பால் சூடு பண்ணி குடிச்சிட்டு படுங்கடா ” என்றபடியே ஜெயாவும் உறங்கச்சென்றார்.  

சிறிது நேரத்தில் ஒரு குளியல் போட்டு உடை மாற்றி அத்து வந்துவிட இருவரும் உன்ன ஆரம்பித்தனர்.

வழக்கமாக சலசலப்பின்றி அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மிதுனை ஆராய்ச்சியுடன் பார்த்தான் அத்து.

” மிதுன்.. என்னடா ஆச்சு.. ஏதோ ஆழ்ந்த யோசனைல இருக்க.. “

” ஆ..ஆங்.. ஒண்ணுமில்ல.. அடுத்த ப்ராஜெக்ட் பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்.. ”          

” ஓஹ்.. ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி பண்ணிடீங்களா.. “

மிதுன் விஸ்காம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான்..

” தீம் மட்டும் டிசைட் பண்ணிருக்கோம் அத்து.. இனிமே தான் எழுத ஸ்டார்ட் பண்ணனும்.. “

” ம்ம் ” என கேட்டுக் கொண்டவனுக்கு சட்டென நினைவு வந்து..

” ஹேய்.. கேமரா மிஸ் ஆகிடுச்சுன்னு சொன்ன.. என்ன பண்ணின.. “

” ப்ச்.. கிடைக்கல ண்ணா.. அம்மாகிட்ட அதை சொல்லி இன்னோரு கேமரா வாங்கணும்னு சொன்னேன்.. அதுக்குத் தான் இன்னிக்கு காலைல ஆரம்பிச்ச பூஜை நீ வரப்போ தான் நிறுத்துனாங்க.. நா என்ன வேணும்னா தொலைச்சேன்.. வேணும்னு செஞ்ச மாதிரியே திட்டுறாங்க அத்து.. ” என்றான் மன வருத்தத்துடன்.

” விடுடா.. நீ எதுக்கு அவங்ககிட்ட சொன்ன.. கிடைக்கலன்னா என்கிட்ட சொல்லச் சொல்லிருந்தேனே… “

 

அத்துவின் மாத சம்பளம் அனைத்தும் வீட்டு லோன், எஜுகேஷன் லோன் என்றே சென்றுவிடும்.. அதை அறிந்து கொண்டு மீண்டும் அண்ணனிடம் சென்று நிற்க மிதுன் விரும்பவில்லை. முதலில் இருந்த கேமராவே அதுல் பரிசளித்தது தான்… மீண்டும் போய் நிற்பதா ?

 

அவன் இல்லை என்று சொல்லப்போவதில்லை.. அவனை கஷ்டப்படுத்த மனமில்லை..

 

பார்ட் டைம் வேலை செய்து சேமித்த பணத்தை எல்லாம் மிதுன் தன் அன்னையிடம் கொடுத்து வைத்திருப்பான். அதை இன்று அன்னையிடம் கேட்க.. எதற்கு இவ்வளவு பணம் என்று ஜெயா கேட்டதற்கு மறைக்காமல் உண்மையைச் சொல்லியும் விட்டான்.. அஜாக்கிரதையாய் இருந்தான் என ஜெயாவிடம் வாங்கியும் கட்டிக்கொண்டான்.

 

மிதுன் அமைதியாக உணவில் கவனம் செலுத்த..

” நாளைக்கு என் கார்ட் எடுத்திட்டு போய்க்கோ.. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில எப்பவும் பணத்தை கொண்டு வர முயற்சி பண்ணாத மிதுன்… ” என்றவனது அழுத்தமான குரலில்

” சரிண்ணா.. ” என்று ஒப்புக்கொண்டான்.

 

சாப்பிட்டு முடிந்த இருவரும் மறக்காமல் பால் அருந்திவிட்டு.. சிறிது நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. சரியாக எட்டு ஐம்பது ஆனவுடன் எழுந்து மேல்மாடம் சென்றுவிட்டான் அதுல்.

 

” நேயர்களுக்கு இனிய இரவு வணக்கங்கள்.. மனதிலே ஒரு பாட்டு நிகழ்ச்சிக்காக உங்களுடன் இணைவது உங்கள் தூரிகா…

 

நிகழ்ச்சியின் முதல் பாடலாக ஒலிக்க இருப்பது இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளை கவி பாடும் யேசுதாசின் ‘ ஈரமான ரோஜாவே ‘ ” என்று இரவின் நிசப்தத்தை தென்றலினும் மெதுவாக கிழித்துக் கொண்டு இனிமையாக இசைத்தது அந்தக் குரல்…

 

சட்டென எழுந்து அமர்ந்தான்..

 

‘ நிச்சயம் இது அந்தப் பொண்ணு தான்… ‘ தேனில் தோய்த்து மயிலிறகால் மனதை வருடுவது போன்ற மென்மையான குரல்..

 

கடந்த இரண்டு வருடமாக அவன் மனதில் அழியாது பதிந்திருக்கும் இசைக் குரல்களில் அவளுடையதும் ஒன்று..

 

அவனது இரவுப் பொழுதை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கும் குரல்..

இன்று மதியம் பார்த்த பெண்ணின் குரல்..

 

என்னை பார்த்து ஒரு மேகம்

ஜன்னல் சாத்தி விட்டு போகும்

உன் வாசலில் என்னை கோலமிடு

இல்லைஎன்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே……

தண்ணீரில் மூழ்காது காத்துள்ள பந்து

என்னோடு நீ பாடி வா சிந்து

 

இசையின் சாரலில் சிலிர்த்து நனைந்திருந்தவன் அப்படியே மெல்ல கண்ணயர்ந்தான்.

 

மேகம் கடக்கும்..

Advertisement