Advertisement

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 19

“ என்ன பண்ணிட்டு இருக்க பைரவி ? ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. அத்து அறை வாயிலில் நிற்பது கண்டு அவள் ஆசுவாசம் அடைந்தாள் என்றால் அவளைக் கண்டு அவன் திகைத்து நின்றான்.

பைரவியின் விழிகள் கலங்கியிருக்க.. கன்னங்கள் இரண்டும் பன்னீர் ரோஜாவின் நிறத்தில்..

அவளை அழ வைத்த அருகிலிருந்த வெங்காயக் குவியலை முறைத்தவன் அவளையும் முறைத்து வைத்தான்.

அவனது பார்வை கண்டு அவள் குழம்ப..

“ என்ன பண்ற பைரவி ? ” என்றான் மறுபடியும்.

இம்முறை குரலிலிருந்த மாற்றத்தை தெளிவாய் உணர்ந்தவள் அவன் முகம் காண.. அது விருப்பமின்மையைக் காட்டியது.

அது புரிந்தவளுக்கு அதற்கான காரணம் தான் புலப்படவில்லை. அவன் பதிலுக்காக காத்து இருப்பது கண்டு

“ மட்டன் பிரியாணி செஞ்சு முடிச்சுட்டேன்.. இப்போ கோழி குழம்புக்கு மசாலா அரைச்சுட்டு இருக்கேன் ” என்றவள் ஆட்டுக்கள் பக்கம் திரும்ப

“ அதான் அதை நீ மட்டும் ஏன் செய்யணும் ? ” என்றவனுக்கு என்றுமில்லா கோபம் இன்றைக்கு.

பைரவிக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் கல்லூரி.. ஒருநாள் அவளுக்கென்று துணிதுவைக்க அறையை சுத்தம் செய்ய என்று.. மற்றொரு நாள் அவளை வெளியே அழைத்து வந்து விடுவான் அதுல். இப்படித்தான் அவளது நாட்கள் செல்லும்..

ஒரு வாரம் கதிர் வீடு என்றால் மற்றொரு வாரம் சூர்யா வீடு. இல்லை என்றால் அவனுடைய ‘பழையாறை புத்திரர்கள்’ நாட்டு நலப்பணி மன்றத்திற்கு அழைத்துச் செல்வான். இப்படி இருக்க இந்த வாரம் அனைவரும் கதிர் இல்லத்தில் குழுமியிருந்தனர்.

மிதுன் பைரவியை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்க.. அத்து வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தான். அவன் வேலை முடித்து இங்கு நுழைகையில் கண்ட காட்சிதான் இது.

 

நிலாவும் மிதுனம் கேரம் விளையாட.. கதிர் டிவியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான். சூர்யா நாவல் ஒன்றில் மூழ்கியிருந்தாள். இவன் வந்ததைக் கூட கவனிக்க யாரும் இல்லை. உள்ளே வந்தவனின் விழிகள் பைரவியைத் தேட.. அவளோ வழக்கம்போல் சமையலறையில்..

ஆரம்பம் முதலே அதாவது ஊரிலேயே பைரவி அவனுக்கு என்று ஏதாவது செய்தால் கூட அவனுக்குப் பிடிக்காது.. தாத்தாவிற்கு அவள் உதவி செய்கிறாள் என்றால் அது வேறு விஷயம்.. வயதான மனிதர்.. அவருக்கு இவளுடைய உதவி தேவை அதனால் செய்ய வேண்டும்..

ஆனால் மற்றவர்களுக்கும் ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டும் !! அவனும் பார்த்துக் கொண்டு தானே இருந்தான் பொங்கலுக்கு ஊருக்கு சென்றபோது அவள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்ததை.

இவன் தான் வலியச் சென்று ஏதாவது உதவி செய்வான்.. ஏன் எல்லா வேலைகளையும் உன் தலையில் ஏற்றிக் கொள்கிறாய் அப்படி இருக்காதே என்றால் அவள் அதை உதவி என்று முடித்துவிடுகிறாள். எதற்கும் ஒரு எல்லை உண்டல்லவா !! அதைத்தான் அவளுக்கு புரிய வைக்க முயல்கிறான்.

ம்ஹூம்..

இதோ இன்று கூட அவர்களைப் போல இவளுக்கும் விடுமுறை தானே.. ஆனால் அதை மறந்து இவளை மட்டும் வேலை செய்ய விட்டு அவர்கள் ஓய்வு எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று அவனுக்கு புலப்படவில்லை.

அவள் அமைதியாக வேலையைத் தொடர..

“ நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல பைரவி ”

“ ஏன் இதை நான் செய்யக்கூடாதா ? ”

‘ நான் என்ன கேட்கிறேன் இவள் என்ன கேட்கிறாள் ’ என்று தான் இருந்தது அவனுக்கு

இவளிடம் இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தவன்

“ பைரவி.. இதை செய்யக்கூடாது நான் சொல்லல. ஆனா ஏன் நீ மட்டும் தனியா கஷ்டப்படனும் ? அதோ அங்க நாலு பேர் சாப்பிட்டுட்டு சும்மா தான இருக்காங்க அவங்களையும் கூப்பிட்டு இருக்க வேண்டியதுதானே ” பொறுமையாகவே கேட்டான்.

 

“ இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை ” என்று பதில் வரவும் மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டான்.

நிச்சயம் அத்துவின் செயல் அதுவாகத்தான் இருக்கும் என்றறிந்தவளின்  இதழ்களில் ரகசியப் புன்னகை.

அடுத்து அவள் மசாலா அரைக்க.. இவன் சிக்கன் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

“ ஐயோ என்ன பண்றீங்க நீங்க.. இதெல்லாம் நீங்க எதுக்கு செய்யணும் ஒரு பத்து நிமிஷம் இருந்தா நானே எல்லா வேலையும் முடி…  ” அவளருகே வந்தவன் இதழ்களின் மேல் விரல் வைத்து

“ ஷ்ஷ்.. எதுவும் பேசக்கூடாது. நீ உன் வேலையைப் பாரு என்னைய என் வேலையைப் பார்க்க விடு ” என்றவன் தன் வேலையைத் தொடர.. இவள் இயல்பிற்கு வரத்தான் சில மணித்துளிகள் பிடித்தது.

அவன் என்னவோ மிக இயல்பாகத் தான் இருந்தான். அவளுக்குத் தான் என்னவோ போலிருந்தது. சொல்லத் தெரியவில்லை. ஏதோ புரியாத உணர்வு. இத்தனை நாள் இல்லாமல் இன்று புதிதாக..

ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கியவள் அடுப்பில் வைத்திருந்த பாத்திரத்தை அப்படியே எடுக்க.. அதன் சூடு தாங்காமல் “ ஷ்ஷ்.. ” கைகளை உதறினாள்.. நல்லவேளையாக அவள் அதை தவற விடவில்லை. ஆனால் அவள் விரல்களெல்லாம் காந்தியிருக்க.. அதை அதுல் அறியாதவாறு மறைத்துக்கொண்டு வேதனையோடு நின்றிருந்தாள்.

அவனிடம் மறைக்க முடியுமா.. அவள் கூறிய ஷ்ஷ் அவளுக்கே கேட்டிருக்க வாய்ப்பில்லை ஆனால் அதில் அவன் திரும்பிவிட்டான்.

அவளையும் அவளது இறுக மூடிய விரல்களையும் கண்டவன் ஒரு முறைப்புடன் அவளருகில் வந்து ஒரு ஸ்டூலை இழுத்துப்போட்டு அவளை விடாபிடியாக அமரவைத்து ஐஸ் க்யூப்ஸை அவள் மறுகையில் திணித்துவிட்டு அவனே சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான்..

உண்மையில் அந்த வலி கூட அவளுக்குப் பெரிதாய் தெரியவில்லை.. தன்னால் அவனுக்கும் சிரமம் என்றுதான் வலித்தது. அப்பொழுதாவது நிலா சூர்யா வருவார்களா என்று பார்த்தால் அவர்கள் அசையவே இல்லை.

பைரவிக்கு அழைக்கவும் தயக்கமாக இருந்தது.. இவளே செய்யலாம் என்றால் ஒரே பார்வையில் அவளை அடக்கி அமர வைத்து விட்டான் அதுல்.

எது கேட்டாலும் பதில் இல்லை.. கோபமாக இருக்கிறானாம்.. இவளுக்கு என்ன செய்வது எப்படி பேசுவது என தெரியாமல் அமர்ந்திருந்தாள்.

அனைத்து வேலைகளையும் அவன் முடிக்கவும் நிலா எழுந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“ ஹாய் அண்ணா நீங்க எப்ப வந்தீங்க ? ”

‘ ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட ’ என நினைத்துக் கொண்டவன்

“ ஒரு மணி நேரம் ஆச்சு நிலா ” என்றான்.

பைரவியிடம் வந்தவன் “ கையைக் காட்டு ” என்றதும் இப்பொழுதாவது பேசினானே என்று முகம் மலர்ந்து கையைக் காட்டினாள். காந்திய இடத்தில மருந்திட்டான்..

“ பையு என்ன ஆச்சு ” – நிலா…

“ ஒன்னும் இல்லக்கா.. சூடான பாத்திரத்தை அப்படியே கையில எடுத்துட்டேன் அதுதான் ” என்றாள்.

“ என்ன பைரவி நீ.. இதைக்கூட பார்த்து பண்ண மாட்டியா ? எப்படி சிவந்து போயிருக்கு பாரு.. ரொம்ப வலிக்குதா ? ”

‘ இவ்வளவு அக்கறை இருந்திருந்தால் அவளை மட்டும் ஏன் வேலை செய்ய விட்ட ’ கேட்க வேண்டும் போல் இருந்தது அத்துவிற்கு.. ஆனால் நிலாவிடம் கடிந்து கூட பேசியதில்லை.. இப்பொழுதும் அமைதியாகவே இருந்து விட்டான்.

அவனுடைய அமைதி அந்த நாள் முழுவதும் தொடர.. ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது அனைவருக்கும்.

கதிர் மிதுன் இருவரும் அதுலிடம் கேட்க.. அப்படியெல்லாம் எதுவுமில்லை என முடித்துவிட்டான். ஆனால் அவன் அமைதி எதைக்கொண்டு என பைரவி மட்டுமே அறிவாள். அறிந்தவளோ சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்துப் போய் அமர்ந்திருந்தாள்.

இது அனைத்திற்கும் மேலாக சாப்பிடும் போது அவளால் தொடக்கூட முடியவில்லை.. எப்படி சாப்பிடுவது என யோசித்திருக்க.. அத்துவும் அவளையும் நிலாவையும் தான் கவனித்திருந்தான்.

இப்பொழுதும் நிலாவும் சூர்யாவும் வம்பிழுத்துக் கொண்டு இவளை மறந்திருக்க.. வெறும் சாதத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் பைரவி.

அதுல் எழுந்து சென்று ஸ்பூன் எடுத்து வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னதும்தான் நிலாவும் கவனித்தாள்.

“ சாரி பைரவி.. மறந்துட்டேன் ” என்றாள் வருத்தமாக.

“ பரவாயில்லக்கா ” என்றவளுக்கு ஏனோ உணவு உள்ளிறங்க மறுத்தது.

சாப்பிட்டு விட்டேன் என்பதற்காக அரைகுறையாக சாப்பிட்டு எழுந்து விட்டாள் அத்துவும் சாப்பிட்டுவிட்டு கிளம்புவதாகச் சொன்னான்.

“ அத்து என்னடா இப்பவே கிளம்பி போய் என்ன பண்ண போற ? இரு சாயங்காலம் அரண்மனைக்கு  போயிட்டு பைரவியை ஹாஸ்டல்ல விட்டுட்டு அப்புறமா வருவோம் ” என்றான் கதிர்.

கதிர் இதுதான் விஷயம் என ஓரளவு யோசித்துவிட்டு அது சரியா தவறா இல்லை வேறு எதுவுமா என அத்துவிடம் கேட்க வேண்டும் அதற்காகவே..

“ இல்ல கதிர் கிளம்புறேன்.. பைரவிக்கு ஏதோ வேலை இருக்காம்.. நான் கூட்டிட்டு போய் விட்டுட்டு கிளம்புறேன் ” என்றவன் “ பைரவி ” என அழைத்ததும் ஓடி வந்து அவன்முன் நின்றாள்.

இருவரும் கிளம்பியதும்.. கதிர் சூர்யாவையும் நிலாவையும் பிடிபிடி என பிடித்துக்கொண்டான்.

“ ரெண்டு பேருக்கும் கொஞ்சம் கூட அறிவே இல்ல.. வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை வேலை செய்ய விட்டுட்டு.. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கீங்க.. பாவம் அந்த பொண்ணு அத்தனை வேலை செஞ்சிருக்கு. பத்தாததற்கு கையில வேற புண்ணு. ஏன் அண்ணா எப்படி இருக்கான்னு என்ன நச்சரிச்சயே கேட்டுக்கோ அவனுக்கு பைரவி இவ்வளவு வேலை செஞ்சது பிடிக்கல அத சொல்ல முடியாமல் தான் அவன் போய்ட்டான் ” என்றவனை மிதுன் அமைதிபடுத்த

“ நீயும் தாண்டா.. அவளை கேரம் விளையாட பிடிச்சு உட்கார வச்சுட்டு.. இவளும் இதுதான் சாக்குன்னு அந்தபக்கமே எட்டி பார்க்கல.. என்ன தெரியுமோ தெரியல ஆனா சமைச்சு போட்டா நல்லா சாப்பிட தெரியும் ” என திட்டியவன் வெளியில் சென்று விட்டான். நிலாவிற்கு குற்ற உணர்வில் அழுகையே வந்துவிட மிதுன் தான் சமாதானம் செய்தான்

“ ஏய் குரங்கு. பைரவி உன் ஃப்ரண்ட் தானே அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு அறிவுகூட இல்லை ” என மிதுன் சூர்யாவை திட்ட அவளும் பதிலுக்கு திட்ட போர்க்களமாக மாறியது.

தவறு அங்கிருந்த நால்வரின் பேரிலும் தான் ஆனால் அது முடிந்துபோன ஒன்றல்லவா இனி அடுத்து என்ன செய்வது என யோசித்தவர்களுக்கு என்ன என்றுதான் தெரியவில்லை.

 

பைரவியை அழைத்து வந்தவன் ஒரு பழமுதிர் நிலையத்தில் ஜூஸ் வாங்கி கொடுத்தான் அவளுக்கும் பசியாக இருந்ததினால் மறுப்பு ஏதும் சொல்லாமல் குடித்தாள்.

 

விடுதி வரைக்கும் வந்து விட்டவன் “ பைரவி ” என அழைத்தான்

‘ என்ன ’ என முகம் பார்க்க

அழைத்துவிட்டான் தான் ஆனால் சொல்வதா வேண்டாமா என்ற தயக்கம்..

அத்துவை ஆச்சரியமாக பார்த்தாள் அவள்.. அவள் அறிந்த அத்து அவளிடம் பேச தயங்கியதே கிடையாது மற்றவர்களிடம் எப்படியோ அவளிடம் இயல்பாகத் தான் இருப்பான். அப்படியிருக்க இப்போது என்ன தயக்கம் என்றுதான் பார்த்திருந்தாள்.

பின்பு என்ன நினைத்தானோ “ பார்த்து இருந்துக்கோ பைரவி அடுத்த வாரம் டிக்கெட் போட்டுத் தரேன் ஊருக்கு போயிட்டு வா ” என்றான்.

நிச்சயம் அவன் இதை சொல்வதற்கு தயங்கி இருக்க மாட்டாள் என புரிந்தது அவளுக்கு.. சரியென விடை பெற்றாள்.

ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகளிலேயே அத்துவின் எண்ணத்தை புரிந்து கொண்டாள் அவள்.. அவள் மட்டுமல்ல அனைவருமே.

முதல் வாரம் அவளை ஊருக்கு அனுப்பி வைத்தவன் இரண்டாம் வாரம் அங்கு நடைபெற்ற இயல் இசை நாடக விழாவிற்கு அழைத்து சென்றான்.. அடுத்து இவனது நாட்டுநலப்பணி மன்றம்.. அது இது என அழைத்துச் சென்றதே தவிர மறந்தும் கதிர்.. சூர்யா வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை.

நிலா கதிர் சூர்யா என அனைவருமே மன்னிப்புக் கேட்டும் இவன் முடிவில் உறுதியாக இருந்தான்.

பைரவிக்கோ இவனது செயல் சற்றே அதிகப்படியாகத் தான் தோன்றியது அவளைப் பொறுத்தவரை இது அத்தனை பெரிய விடயமில்லை. அவள் வீடாக நினைத்துத் தான் செய்தாள். அதனால் இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை அவள்.

ஆனால் அத்துவைப் பொருத்த வரையில் அவளது நிலைக்கு அவனே காரணம்.. அவன் தானே அழைத்துச் சென்றான் !! அதனால் தானே அவளுக்குக் கஷ்டம் என்பது அவனது எண்ணம்.

இதில் சூர்யா வேறு காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு அழைத்து விட்டாள்.. இவள்தான் திணறிப் போனாள். என்னதான் சூர்யா நிலா நெருக்கமாக இருந்தாலும் அவர்கள் அனைவருமே அத்துவின் மூலம்தான் அறிமுகம்.. அத்துவைத் தாண்டி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.. செய்யவும் விரும்பவில்லை.

 

இதற்கிடையில் அந்த வாரம் அவளைப் பார்க்க வந்திருந்தான். அவளும் ஒரு முடிவுடன் அவனைச் சந்தித்தாள்.

 

“ பைரவி ஒரு எக்ஸ்போ போட்டு இருக்காங்க போயிட்டு வருவோமா ” என்றவன் அந்த கண்காட்சி பற்றி தெளிவாகக் கூறினான். அது ஓர் ஆண்டிற்கு ஒருமுறை தொல்லியல் துறை சார்பாக நடத்தப்படும் ஒன்று. மறைந்துபோன தமிழர் வரலாற்றை மீண்டும் அகிலம் அறியச் செய்யும் விதமாய் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருக்கும்.

அத்து தவறாமல் கலந்து கொள்வான். பைரவிக்கும் அந்த தகவல்கள் உதவலாம் என்று அவளை அழைத்தான்.

அவளோ அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

‘ இப்போது எதற்கு சம்பந்தமே இல்லாமல் முறைக்கிறா..’ என எண்ணியவன் எண்ணியதை கேட்கவும் செய்தான்.

“ ஏன் உங்களுக்கு அது தெரியாதா ? ”

“ ஷப்பா.. பைரவி.. எப்போதான் எனக்கு பதில் கொடுப்ப ? எப்ப பாரு நான் கேள்வி கேட்டா பதில் கேள்வி தான் ” என சலித்துக் கொள்ள

அவளும் அமைதியாக நின்றாள்.

அவள் ஒற்றை பார்வையிலேயே பொருள் படிப்பவன் இதை மட்டும் படிக்காமலா இருப்பான்.

“ சரி பைரவி இப்ப என்ன பண்ணனும்னு சொல்லு ? ”

“ நீங்க பண்றது சரின்னு உங்களுக்கு தோணுதா ? ”

‘ இது கூட கேள்வி தான் ’ அதை நினைத்து அவன் அதரங்களில் இளநகை..

“ சிரிச்சி சமாளிக்க வேண்டாம் எனக்கு பதில் வேணும் ” என முறுக்கிக் கொண்டவளை பார்த்து மேலும் சிரிக்க.. அவளோ கடுப்பாகி அங்கிருந்து நகர முயன்றாள்.

“ ஹேய் பைரவி இரு இரு ” என அவள் கையை பிடித்து நிறுத்தியவன்

“ நான் பண்றது தப்புனு உனக்கு தோணுதா ? ”

“ ஆமா ”

பட்டென்ற பதிலில் அதிர்ந்து தான் அவளைப் பார்த்திருந்தான்.. அவள் அதை எல்லாம் கண்டு கொள்ளாது

“ உங்களுக்கு என்ன ஆச்சு ? ஏன் ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி ஓவரா பண்றீங்க.. சொல்லப்போனால் என்னைப் பொறுத்தவரை அது ஒரு விஷயமே இல்ல. என்னோட வீடாத்தான் நான் நினைச்சேன்.. செஞ்சேன்.. நீங்கதான் தேவையில்லாம பெருசு படுத்துறீங்க. பாவம் நிலா அக்காவும் சூர்யாவும் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாங்க தெரியுமா !

அவங்கள விட எனக்குத்தான் அது கஷ்டமா இருந்துச்சு.. என்னைப் பொறுத்தவரை தப்பே இல்லாத போது மன்னிப்பு எதற்கு ?

ஆனா அவங்க மன்னிப்பு கேட்டதுக்கு காரணம் நான் இல்ல. நீங்க தான்..

உங்களோட இந்த கோபம் அவங்களை எந்த அளவு பாதிக்கும்ன்னு உங்களுக்கு புரியல.. புரிஞ்சிருந்தா இப்படி பண்ணிட்டு இருக்க மாட்டீங்க.. அப்புறம் என்னை எதுக்கு வாரவாரம் வெளிய கூட்டிட்டு போறீங்க ? வீட்டு நினைப்பு வராமல் இருக்க தானே !

அப்படிப் பார்த்தா இங்கு வந்து ஆறு மாசத்துல எனக்கும் வீட்டு ஞாபகம் பெருசா வரவே இல்ல.. காரணம் நிலாக்கா சூர்யா கதிர் அண்ணா மிதுன் தான் ”

என அவள் பக்கம் பக்கமாக அவனிடம் பேச.. அவன் மனமோ ‘ அப்ப நான் ’ என்ற கேள்வியிலேயே தொக்கி நின்றது.

அவன் அமைதி கண்டு “ நான் சொல்றதை சொல்லிட்டேன் இனி உங்க விருப்பம் ” என்றவளிடம்

“ கிளம்பி வா போகலாம் ”

விழிகள் வியப்பில் விரிய அவனைப் பார்த்தாள். அவன் என்ன என புருவம் உயர்த்த இடவலமாக தலையசைத்துச் சென்று தயாராகி வந்தாள். அடுத்ததாக அவன் அழைத்துச் சென்ற இடம் கண்காட்சி.

‘ அடப்பாவமே.. நான் அவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் இங்கதான் கூட்டிட்டு வந்து இருக்காங்க ’ என முறைக்க

“ நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் அதனால என்னை அப்புறமா முறைச்சுக்கோ.. இப்போ உள்ளே போலாம் ” என அழைத்து சென்றான்.

உள்ளே சென்றவுடன் அத்துவைக் கூட மறந்து அவள் உலகத்தில் நுழைந்து விட்டாள்.

உண்மையில் அத்துவிற்கும் அவள் சொன்னது எல்லாமே தெரிந்தும் புரிந்தும் தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய ! பைரவி விஷயத்தில் அத்து அத்துவாக இல்லை.. அதனால் தான் புதிதாக கோபம்.. அந்த கோபத்தினால் தான் கதிரின் வீட்டுக்கும் செல்லவில்லை அவளையும் அழைத்துச் செல்லவில்லை.

அங்கு வந்து நான்கு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்.. அதுல் இரண்டு முறை அந்த அரங்கை சுற்றிப் பார்த்து வந்துவிட்டான்.. ஆனால் பைரவியைத் தான் காணவில்லை..

ஓர் ஓரத்தில் தரையில் அமர்ந்திருப்பது கண்டு…‘ அங்க என்ன பண்ணுறா ’ என்றபடி அவளருகே வந்தான்..

அவன் வந்து நின்றது கூட தெரியாமல் அவள் எதிரே காட்சி கொடுத்த கல்வெட்டில் கண்பார்வையை பதித்திருந்தாள்.. இரு மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்திற்கு அருகே கிடைத்த சோழர் கால கல்வெட்டு..

ஆதித்த கரிகாலனின் அசாத்திய சரித்திர சாதனைகளை சப்தமிடாமல் சொல்லிக் கொண்டிருந்தது..

அதை படிக்கப் படிக்க அத்துமீறிய புன்னகை அவள் அதரங்களில்…

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அத்துவின் அதரங்களிலும் ஆனந்தத்தின் ஆதாரமாய் முகிழ்நகை… அப்படியே அவளருகே அமர்ந்துவிட்டிருந்தான்..

அப்படியென்ன ஆதித்தனின் மேல் அத்தனை ஆர்வம் அவளுக்கு?? புரியவில்லை அவனுக்கு.. புரியும்.. நிச்சயம் ஒருநாள் அவளது பிரியம் புரியும் !  

மெல்ல திரும்பி பார்த்த பாவையின் பார்வையில் அவன் விழுந்தான்..

“ பசிக்கல ”

“ ம்ஹும்…”

“ ஆனா.. எனக்கு பசிக்குது..” பாவமாக இவன்..

“ அச்சோ.. நேரம் போனதே தெரியல… வாங்க கிளம்பலாம்…”                     

அடுத்ததாக அதுல் அழைத்துச் சென்ற இடம் கதிரின் வீடு தான்.

அந்தநொடி.. பைரவியின் விழிகள் அத்துவைத் தழுவ.. அவனைப் பார்த்த விழிகள் சொன்ன செய்தியை முதன் முதலாக படிக்கத் தோற்றுப்போனான் அதுல்.

படித்திருக்க வேண்டுமோ ??

 

மேகம் கடக்கும்….

 

Advertisement