Advertisement

 

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 1 :

 

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்…

 

யேசுதாசின் மனதை வருடும் ஆழ்ந்த குரல் காற்றினில் கலந்து அவ்வறையில் தவழ்ந்திருக்க அதில் கரைந்தவாறு எதிரே இருந்த கோப்பில் மூழ்கியிருந்தான் அவன்..

 

இசை… அவன் உயிருடன் கலந்து அவனுடன் பயணிக்கும் மற்றொரு ஜீவன்… அதுவும் யேசுதாஸ் அவர்களின் பாடல் என்றால் அத்தனை பிரியம்.. யாருக்கு எதற்கு அடிமையோ என்னவோ அவன் இசைக்கு மீளா அடிமை..

 

அவன் அதுல்.. அதுல் ரவிச்சந்திரன்.. அவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால் எளிமையைப் பின்பற்றுபவன்.. பழகுவதற்கு அன்பானவன்.. மென்மையானவன்.. துளிர் விட்டு முதன் முதலாய் மண்ணிலிருந்து எட்டிப்பார்க்கும் சிறு செடியிலிருந்து பார்வைக்குள் அடங்காது விஸ்தரித்திருக்கும் வானம் வரையில் அனைத்தையும் ரசனையோடு பார்க்கும் கலா ரசிகன் அவன்.

 

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலிருக்கும் இளைஞர்களிடம் இருந்து சற்றே மாறுபட்டவன்…

 

மற்றவருக்கு ரஹ்மான் என்றால்.. இவனுக்கு இளையராஜா..

அவர்களுக்கு பொழுதுபோக்கு சினிமா என்றால்.. இவனுக்கு நாட்டு நலப்பணி மன்றம்..

அவர்களுக்கு அப்பாச்சி பைக் என்றால்.. இவனுக்கு ஹீரோ சைக்கிள்..

அவர்களுக்கு சோசியல் மீடியா… இவனுக்கு புத்தகங்கள்..

 

அதுல் ரவிச்சந்திரனிற்கு இந்த நூற்றாண்டிற்கான சிந்தனைகள் இருந்தாலும் அவன் பழைமையை விரும்பி ஏற்பவன்.. அதிலுள்ள உயிரோட்டத்துடன் ஒன்றி ரசித்திருப்பவன்..

 

அவனது அறையே ம்யூசியும் போல்தான் இருக்கும். அதில் இருப்பவை எல்லாம் அவனது நீண்ட நாள் சேகரிப்புகள். சாண்ட் கிளாக், கிராம போன், பழமையான அரிய புத்தகங்கள், அரசர்கால நாணயங்கள், பண்டைய நாட்டு அஞ்சல் தலைகள் என இன்றைய தலைமுறை அறியாத.. அறியவும் விரும்பாத பல விடயங்கள் அவன் கைவசம் இருக்கும். சிறுவயது முதலே அவனுக்கு இதன் மீதொரு ஆர்வம்.  

 

இதெல்லாம் வைத்து அத்துவிற்கு தொள தொள ஜிப்பாவும் ஜோல்னா பையும் மாட்டிவிட்டு கண்களில் பெரிய லென்ஸுடன் கூடிய சோடாப்பெட்டியும் அணிவித்து புயல் வேகத்தில் கற்பனை குதிரைகளைக் கிளப்பி விடாதீர்கள்.

 

அதுல் எம்.காம் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இருபத்தி ஐந்து வயதே உடைய இளைஞன்.

 

அடர்த்தியான கேசம்.. எப்போதும் அவன் சொல் கேளாமல் அவனது முன்னெற்றியில் வந்து முத்தமிட்டுக் கொண்டே இருக்கும். அடர் புருவங்களுடன் தீர்க்கமான கண்களைப் பெற்றிருப்பவன். ஸ்டைல் என்று கூறிக்கொள்ளும் படியாக பிரெஞ்சு பியர்ட் எல்லாம் அத்துவிற்கு இல்லை.  அவன் எப்போதும் புதர் வளர்ப்பதில்லை..கம்பீரமான மீசை தான் அவனுக்கு அழகு.

 

மீசை முடி கரிய அருகம் புற்கள்

தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்

உன் அருகில் முற்செடியும் அழகாகத் தெரியும்

என்னும் வரிகள் அத்துவிற்கு பொருந்தும்.

இடது கையில் லட்சக்கணக்கில் எல்லாம் இல்லாமல் ஐநூறு ஆயிரம் ரூபாய் மதிப்பை பெரும் ஒரு சொனாட்டா கடிகாரம். பீட்டர் இங்கிலாந்து முழுக்கை சட்டை அதற்கேற்றாற்போல் பேண்ட் என என்றும் நாகரிகமான உடையில் தான் வலம்வருவான். அவனது தோற்றமே அவனிடத்தில் ஒரு நன்மதிப்பை உருவாக்கிவிடும்.

 

கடந்த மூன்று மணி நேரமாக அந்த அக்கௌன்ட்ஸ் பைலில் மூழ்கியிருந்ததால் தலை வலிப்பது போல் இருக்க கோப்பை மூடி வைத்துவிட்டு வெள்ளை நிற பார்மல் ஷர்ட்டை மடித்துவிட்டபடி அவனது அறையின் யன்னல் பக்கம் வந்து நின்றான்…  

 

கதிரவன் மேற்கு திசையில் அஸ்த்தமனத்திற்கு தன்னை தயார் செய்து கொண்டிருக்க.. பள்ளி முடித்து சிறு சிட்டுகள் தம் இல்லம் நோக்கி பறக்கத் துவங்கி இருந்தன..

 

ஆங்காங்கே பாஸ்ட் புட் கடை வைத்திருப்போர் அவர்களது அன்றைய தினக் கணக்கைத் துவங்கி இருந்தனர்.. கைகளில் பிளாஸ்டிக் தட்டுகளை ஏந்தியபடி கூட்டம் கலை கட்டியது. இவையனைத்தும் எப்போதும் அவன் பார்க்கும் ஒன்று தான்..

மஞ்சள் வானமும் அதன் மேலுள்ள கொஞ்சம் ( கொஞ்சும் ) மேகங்களும் அவனுக்கு பிரியமானவை..      

 

ஏனோ இன்று சலுப்பாக இருக்க.. காபி குடித்தால் சற்றே தேவலாம் என்று தோன்ற அறையை விட்டு வெளிவந்து காண்டீன் நோக்கிச் சென்றான்.. இவனது வருகையை எதிர்பார்த்தே இவனுக்காக ஒரு ஸ்பெஷல் காபியை தயாரிப்பதற்காக காத்திருந்தார் காண்டீன் கனகு..

 

இவன் தலை தெரிந்தவுடன் மடமடவென ஒரு தட்டில் சுட சுட பக்கோடாக்களை வைத்து ஸ்டராங் காபியோடு அவன் வழக்கமாக அமரும் இடம் சென்று நின்றார்.

 

அவன் அறையிலிருந்து காண்டீன் பக்கம் தான் ஆனால் எதிர்பட்டவரிடம் சிறு புன்னகை சிறு பேச்சு என வந்து சேர சிறிது நேரம் பிடித்தது..

 

அவனது அலுவலகத்தில் எல்லோருக்குமே அத்துவைப் பிடிக்கும்.. பொதுவாக அக்கௌண்ட்ஸ் செக்ஷன் என்றாலே கொஞ்சம் கெடுபிடியான ஆட்கள் தான் இருப்பார்கள்.. தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் சிறு பிழை செய்தால் கூட போதும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பர்..

 

ஆனால் அத்து அவர்களது தவறை சுட்டிக் காட்டி அடுத்த முறை கவனமாக இருங்கள் என்பதோடு முடித்துக் கொள்வான்.. சிறு தவறுக்கும் தண்டனை என்றிருக்கும் போது அத்தவறைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் தவறு நேருமா என்ன ?? அவனது இந்த அணுகுமுறையினாலேயே தவறு செய்து அவன் முன்பு நின்று விடக்கூடாது என எண்ணுபவர் பலர்..

 

தனது டேபிளுக்கு வந்தவன் தயாராக இருந்த ஆவி பறக்கும் காபியை கண்டதும் முகம் மலர்ந்து ” நன்றிண்ணா.. ” என்றான் கனகுவைப் பார்த்து..

 

” பரவாயில்ல தம்பி.. சாப்பிடுங்க.. ” என நகர்ந்த கனகுவிற்கு அதுலின் மேல் அளவு கடந்த பிரியம்..

 

காரணம் அங்கு வேலை செய்வோர் அனைவர்க்கும் கனகு ஒரு வேலையாள். தாங்கள் அளிக்கும் வேலைகளை செய்வதற்காகவே கனகு பூமியில் ஜனனம் எடுத்துள்ளான் என்ற எண்ணமோ அவர்களுக்கு !! அவர்களது அதிகாரம் அந்த அளவில் இருக்கும். சக மனிதருக்கு மரியாதையை தரத் தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

மனிதர்களால் தான் பிற உயிர்களையும் நேசிக்க முடியும், பாதுகாக்க முடியும், உதவ முடியும் என எண்ணித்தான் இறைவன் ஆறறிவையும் வைத்துப் படைத்தானோ !! ஆனால் இன்றைய மனிதர்களுக்கு சக மனிதனுக்கே உதவ மனமில்லாத போது, பாதுகாக்க முடியாதபோது, நேசிக்க முடியாதபோது, நேரம் ஒதுக்க முடியாதபோது பிற உயிர்கள் எல்லாம் எம்மாத்திரம் !!

 

அந்த அலுவலகத்தில் உள்ள அனைவரும் வயது வித்தியாசம் பாராமல் கனகுவை பெயர் சொல்லி அழைக்க இவன் மட்டும் மரியாதையுடன் அழைப்பான்.. அவ்வகையில் அதுல் மனிதரை மனிதராய் மதிக்கத் தெரிந்தவன்.

 

காபியை பருகிவிட்டு பக்கோடாவை சாப்பிட்டுக் கொண்டே கேண்டீனை வலம் வந்தவன் அதரங்களில் புன்னகை.. காரணம் அங்குள்ள பெரும்பாலானோரின் செயல் தான்..

 

விழிகள் ஸ்மார்ட்போனில் பதிந்திருக்க.. கை அதன் பாட்டிற்கு தட்டில் உள்ளதை எடுத்து கொடுக்க.. வாய் செவ்வனே அதன் வேலையை செய்து கொண்டிருந்தது..

 

தட்டில் என்ன இருந்தது என எடுத்த கைக்கும் தெரியாது.. சாப்பிட்ட வாய்க்கும் தெரியாது.. ஸ்மார்ட்போனின் ஆதிக்கம் அப்படி..

 

இவ்வாறு அதற்கு அடிமையாகி அவர்களின் இயல்பை மறந்து இயற்கையை தொலைத்து இருப்பவர்களைக் கண்டால் இவனுக்கு பாவமாகத்தான் இருக்கும்.. ஆனால் இவனால் மட்டும் என்ன செய்து விட முடியும்..

 

கனகு அவன் அருகில் வர,

 

” அண்ணா இன்னும் மாலைமலர் வரலையா.. “

 

” அச்சோ.. எடுத்துட்டு வர மறந்துட்டேன் தம்பி.. இருங்க எடுத்துட்டு வரேன் ” என நகர்ந்தவரிடம்

 

” அதனாலென்ன நானே வரேன் (அ)ண்ணா.. ” என எழுந்து சென்று வாங்கி வந்தமர்ந்தான்..

 

லைவ் நியூஸ் என மற்றவர் இருக்க.. இவன் காலை மாலை என இருவேளைகளிலும் நாடுவது தினசரி நாளிதழ்களையே.. ஏனோ அவனுக்கு செய்திகளை அச்சுத்தாளில் எழுத்துப் பூர்வமாக படிப்பதில் தான் விருப்பம்.

 

காபிக்கு பயந்து தலைவலி அவனை விட்டு வெகுதூரம் சென்றிருக்க.. அவன் அறையில் மீண்டும் கோப்பில் நுழைந்து கொண்டான்.. அடுத்த வாரத்திலிருந்து ஆடிட்டிங் நடக்கவிருப்பதால் இவனுக்கு சற்றே வேலை அதிகம்.. கோப்பில் மூழ்கியிருந்தவன் தன்னை மறந்திருக்க காவலாளி வந்து நடப்பிற்கு கொண்டுவந்தார்…

 

” தம்பி இன்னிக்கு இங்கேயா தங்கலா ?.. சாப்பாடு வாங்கி வரத் தான் கேட்டேன்.. கனகு ஏதோ வேலையா கிளம்புறதால காண்டீன் க்ளோஸ்.. அதான்… ” என அவர் இழுக்க

 

” ரொம்ப நேரம் ஆகிடுச்சா.. ” என அதுல் தன் கடிகாரம் பார்க்க அது நேரம் சரியாக எட்டு மணி 5 நிமிடம் 3 நொடிகள் எனக் காட்டியது.

” இல்லண்ணா.. இதோ கிளம்பிட்டேன்.. ” என பார்த்துக் கொண்டிருந்த கோப்பை எடுத்து பையினுள் வைத்துக் கொண்டு அவரிடம் விடைபெற்று வந்து சேர்ந்தான் அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு.

 

அவனுடைய நல்ல நேரமோ என்னவோ எப்போதும் தாமதமாக வரும் பேருந்து அன்று சரியாக வந்து அவனை காப்பாற்றியது.

 

வீடு வந்து சேர எட்டே முக்கால்.. வந்தவன் நேராக தனது அறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு.. தொலைகாட்சியில் மூழ்கியிருந்த அம்மாவின் அருகில் வந்து அமர்ந்தான்.

 

” ம்மா டிபன் ரெடியா ?? “

 

” ஒரு அஞ்சு நிமிஷம் இருடா கண்ணா.. ” என்றவருக்கு பார்த்துக் கொண்டிருந்த தொடரில் இருந்து எழ விருப்பமில்லை..

 

பின்னே இருக்காதா மிகத் தீவிரமாய் போய்க் கொண்டிருக்கிறது சீரியல். தொடரும் போட்டவுடன் அம்மா எழுந்துவிடுவார். அதுவரை அம்மாவால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாது.

 

பத்து நிமிடம் பொறுத்தவன் அவரை தொந்தரவு செய்யாமல் எழுந்து சமையலறைக்குச் சென்று பார்த்தான்.. தோசை மாவு மட்டும் இருந்தது.. இன்னும் எதுவும் செய்யவில்லை போல.. அப்பா நைட் ஷிப்ட் கிளம்பியிருந்தார்.. தம்பி கல்லூரி சுற்றுலா சென்றிருந்தான்.. இருப்பது இவர்கள் இருவர் மட்டுமே..

 

பசி வேறு வயிற்றைக் கிள்ள பொடி உபயத்தில் தோசையை உள்ளே தள்ளிவிடலாம் என சுட்டுவிட்டான்.. அந்தோ அவனுக்கு அடுத்த சோதனை.. பொடி பாட்டில் துடைத்து வைக்கப் பட்டிருக்க சர்க்கரை கொண்டு சாப்பிட்டு முடிக்க ஜெயா உள்ளே வந்தார்..

 

” ஏன்டா கொஞ்சம் பொறுத்திருந்தா சட்னி அரைச்சுக் கொடுத்திருப்பேனே.. “

 

” கொஞ்சம் வேலை இருக்கு மா.. அதான்.. நீங்க பாருங்க ” என்று கூறி அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த கோப்பை எடுத்துக் கொண்டு மேல்மாடம் சென்றுவிட்டான்..

 

ஒரு தோசைக்கு அம்மாவிடம் முட்டிக்கொண்டு போகும் ரகமல்ல.. காலையிலிருந்து ஓய்வில்லாமல் உழைப்பவர்தான் அம்மா. மாலை வேலையில் சிறிது நேரம் இப்படி சீரியல் பார்ப்பார். அம்மாக்களுக்கும் ஒய்வு வேண்டுமே அந்த சீரியல் பார்க்கும் அரை மணி நேரத்திலும் ஏன் கை வைப்பானேன். அம்மாவை தொந்தரவு செய்யாமல் அவனே களத்தில் இறங்கிவிட்டான்.

 

அவன் சென்றதும் ஜெயா ஹாட் கேஸை திறந்து பார்க்க.. அதில் அவருக்கும் சேர்த்தே தோசைகள் இருந்தது. மகனை எண்ணி ஒரு புன்னகையோடு தட்டில் இரண்டு தோசைகளை எடுத்துப் போட்டு அமர்ந்தார்.

 

சிறிது நேரத்தில் தனது வேலையே முடித்தவன் கவனத்தை வானொலிப் பக்கம் திருப்பினான்..

 

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா…  

 

இரவின் ஏகாந்தத்தில் இனிமையாய்…. என்றும் போல இன்றும் இசையில் தன்னைத் தொலைத்திருந்தான்…

 

அவனது இரவு நேரம் கருமேகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு விளையாடும் திங்களுடனும் நட்ஷதிரங்களுடனும் ‘ மனதிலே ஒரு பாட்டு ‘ என்ற நிகழ்ச்சியுடன் தான் கழியும்.

 

நிகழ்ச்சி தொடங்கியிருக்க.. வழக்கம் போல் இளையராஜாவும் யேசுதாசும் அவனுக்கு தாலாட்டு பாட நித்ராதேவி ஆனந்தமாய் ஆட்கொண்டுவிட்டாள் அத்துவை.         

 

மேகம் கடக்கும்…                                                                                         

Advertisement