Advertisement

                          

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 6 :

 

காலை 7 மணியளவில் வீட்டினுள் நுழைந்தான் அத்து..

“ அத்து.. ” என்றபடி வந்தான் மிதுன்  அவன் வரவுக்காகவே காத்திருந்தவனாய்..

” என்ன ண்ணா.. நீயும் போன் பண்ணல நான் கூப்பிட்டாலும் ஸ்விச்ட் ஆப்.. ஏன் போன் ஆப் பண்ணி வெச்சிருந்தே !! எதுக்கும் இருக்கட்டும்னு தானே என்னோட  குடுத்தேன்..

ஆசையா தாத்தா கிட்ட பேசலாம்னு இருந்தேன் தெரியுமா !! ” கடைசி வரியை மட்டும் மெதுவாக ஜெயா அறியாதவாறு கேட்டான்.

” சார்ஜ் இல்லடா.. நான் போன இடத்திலும் சார்ஜ் போடா முடியல.. அதான் ஆப் ஆயிடுச்சு.. அப்புறம் அங்க டவர் எல்லாம் இருந்திருக்க வாய்ப்பே இல்ல.. ”

அத்து எங்கு செல்கிறான் என்பதை மிதுனிடம் கூறிக்கொண்டு தான் சென்றான். ரவிச்சந்திரன் அவராகவே கண்டுகொண்டார். ஜெயாவிற்கு தான் இன்னும் இது தெரியாது. இப்போது எதையும் வெளிப்படுத்த முடியாததால் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று அத்துவும் தாத்தா பற்றி எதையும் கூறாமல் இருந்தான்.

மிதுனால் பொறுத்திருக்க முடியவில்லை.. அத்துவையே சுற்றி சுற்றி வந்தான் தாத்தாவை பற்றி அறிந்துகொள்ள..

“ காலேஜ் கிளம்பல ” என்றான் அதுல் அவன் தயாராகாமல் இருப்பதை பார்த்து.

“ இல்லண்ணா… ப்ராஜெக்ட் ஒர்க் போய்ட்டு இருக்கு.. இந்த ஒரு வாரம் அட்டெண்டன்ஸ் இல்ல… ”

தன் குரல் கேட்டும் எட்டிப் பார்க்காமல் இருந்ததை வைத்தே அன்னையின் கோபத்தை அளவிட்டவன்  சமையலறையில் இருந்த அன்னையை காட்டி என்னவென்று மிதுனிடம் விசாரிக்க..

“ நீ போனதிலிருந்து யார் கூடவும் பேசல… ” என்றதும் புருவம் சுருக்கினான்..

தான் சென்ற விஷயத்தை அன்னை அறிந்துகொண்டாரோ என்று தோன்ற,

“ நீங்க யாரும் அவங்ககிட்ட தாத்தா வந்துட்டு போனதைப்பத்தி பேசினீங்களா ? ” என்று வினவினான் அத்து.

 

அவன் மறுப்பாக தலையசைத்து, “ நீ அவங்க கிட்ட சொல்லாம கிளம்பிப்போன இல்ல அந்த கோபம் தான் ” என்றான்..

இவர்கள் இருவரும் ரகசிய பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க.. சமையல் அறையில் பாத்திரம் விழும் சத்தம் நன்றாகவே கேட்டது.

அதுல் ஒரு புன்னகையுடன், “ சரி நான் பிரஷ் ஆகிட்டு வரேன் இன்னைக்கு ஆபிஸ்ல டிராப் பண்ணிடு ” என்று மிதுனிடம் கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

குளித்துமுடித்து அலுவலகத்திற்கு தயாராகி வந்தவன் நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து காலை உணவை தவிர்க்க எண்ணினான் ஆனால் அது மேலும் அம்மாவின் கோபத்துக்கு தூபம் போடுவது போல் ஆகிவிடும் என்பதை அறிந்தவன் அவசரமாக டைனிங் டேபிளில் ஆஜரானான்.

அனைத்தையும் அவனுக்கு எடுத்து வைத்துவிட்டு பரிமாறாமல் நகர்ந்து சென்றவரை தடுத்து நிறுத்தியவன்,

“ ம்மா.. என் மேல கோவமா இருக்கீங்களா ? ”

கோவமா !! கொலைவெறியிலேயே இருப்பார் என்பதை அறிந்தும் நல்ல பிள்ளையாக கேட்டு வைத்தான் அந்த கேள்வியை..

“ ஆமான்னா என்ன பண்றதா உத்தேசம் ” அவனையே ஆழம் பார்த்தார் ஜெயா.

“ சிம்பிள்.. உங்க கோபம் தீரனும்னா என்ன செய்யணும்னு சொன்னா செஞ்சுட்டுப் போறேன் ” என்றான் தோள்களை குலுக்கி..

அவனை ஒருமுறை பார்த்தவர் எதிர்பக்கம் இருந்த கடிகாரத்தை பார்க்க அத்துவும் பார்த்தான்..

நேரம் சரியாக எட்டு மணி 45 நிமிடம் 36 நொடிகள்

இன்னும் கால் மணி நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் அன்னையிடம் சமாதான கொடியை பறக்க விட்டாயிற்று மீதியை இரவு பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தவன் அரக்கப் பறக்க சாப்பிட்டு ஓடினான்..

அலுவலக வாயிலில் இறக்கிவிட்ட மிதுனிடம்,

“ சரிடா பார்த்துப் போ.. அம்மா கிட்ட பேசு.. நானும் சாயந்திரம் வந்து பேசுறேன் ” என்று திரும்ப.. பார்க்கிங் லாட்டிலிருந்து கையசைத்தான் கதிர்.

அவன் வரும்வரை காத்திருந்தவன் அவருடன் பேசிய படியே உள்ளே சென்றான்.

“ நண்பா போன காரியம் என்ன ஆச்சு ? ஆரத்தி எடுத்து வரவேற்பா இல்ல அருவா கம்பு எடுத்து வரவேற்பா ” என கேலி செய்தவனை முதுகில் ஒன்று வைத்தவன்

“ மதியம் லஞ்ச் டைம்ல பார்க்கலாம் அப்போ சொல்றேன் ” என்றவாறு தன் பிரிவிற்குச் செல்ல கதிர் அவனுடைய பிரிவிற்குள் சென்றான்.

இரண்டு நாட்கள் மட்டும்தான் அத்து இல்லை ஆனால் ஏதோ மாதக்கணக்கில் அவன் இல்லாதது போல் குவிந்து கிடந்தன வேலைகள்..

அவனது அறையை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் கதிர்..

“ வாடா ” என்றதோடு அதுல் மீண்டும் வேலையில் மூழ்கி விட அவனது செய்கையில் கடுப்பானவன்,  

“ டேய் உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு.. உடனே அதுக்கு ஒரு எண்டு கார்டு போடு.. ” என்றான் எரிச்சலாக..

“ இப்ப என்னடா ஆச்சு ” என்று கேட்டவாறு நிமிர்ந்து அமர்ந்தான்..

“ என்ன ஆச்சு.. மணி மூணு ஆச்சு ” என அவன் கத்தியதும் தான் இன்னும் சாப்பிடக் கூட இல்லை என்பது நினைவிற்கு வந்தது அத்துவிற்கு.

அவன் வராமல் கதிரும் உணவருந்தியிருக்க மாட்டான் என்று தெரியும்.

“ சாரிடா சாரி… இன்னிக்கு நிறைய ஒர்க்கு காலையிலிருந்து பிரேக் கூட எடுக்கல.. சரி வா ” என எழுந்தான்.

இருவரும் கேண்டீன் வர கனகு அவர்களுக்கான சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வைத்தார்

“ தம்பி ரெண்டு நாளா உங்கள பாக்கவே முடியல ”

“ ரெண்டு நாளா நான் லீவுண்ணா.. இன்னிக்கு தான் வந்தேன்.. ஊருக்கு போகவேண்டிய வேலை இருந்துச்சு அதான்.. ”

“ சரி தம்பி ! சாப்பிடுங்க.. இன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சு.. அங்க பாருங்க எல்லாரும் டீ ப்ரேக் வந்துட்டாங்க ” என்றபடி அவர் நகர இவன் அவசரமாக கதிரைப் பார்த்தான்..

அவனது கோபம் கண்டு,

“ சாரிடா என் டிபார்ட்மெண்ட்ல ரெண்டு மூணு பேரு லாங்க் லீவு அதான் எல்லாம் என் தலை மேல வந்துடுச்சு ” என்றான் தன் நிலையை விளக்கி.

“ நானும் அதைத்தான் சொல்றேன் ஏன் எல்லாம் உன் தலைல எடுத்துக்கிற எல்லாரும் 8 மணி நேரம் வேலை செஞ்சா நீ மட்டும் 10 மணி  நேரம் செய்யற சில சமயம் விடிய விடிய… ஒத்துக்குறேன் இந்த வயசுல தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும்.. ஆனா நீ அளவுக்கு அதிகமாக சுமக்கிற.. ”

அவனும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான் இந்த இரண்டு வருடங்களாக அத்துவை.. நண்பனது அக்கரை அத்துவிற்கு புரியாமல் இல்லை ஆனால் அவனது  நிலைமை அப்படி… ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

“ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா… எனக்கு இருக்கிற என்னோட பொறுப்பை தான் நான் செய்கிறேன்.. அதை ஏன் பாரம்னு எடுக்கணும்.. ” என்று எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் அத்துவைப் போல் இருக்க முடியவில்லை கதிரால்..

அதை உணர்ந்தவன் பேச்சை மாற்றும் பொருட்டு,

“ ஊரு பத்தி எதுவுமே கேட்கல.. ” என்றான்

கதிரும், “ சொல்லுடா.. தாத்தாவ பாத்தியா ? எப்படி இருக்காரு ? உன் மேல கோவம் எதுவும் இருக்கா ? ” என்றான்.

“ என் மேல கோவமா !! அதுவும் அவருக்கு ” என்றவன் ஒரு புன்னகையை உதிர்த்து, “ கதிர்.. தாத்தாவும் சரி அந்த ஊரு சரி ரொம்பவே வித்தியாசமானது டா.. ” என்றவன் தனது இரண்டு நாள் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினான்.

“ நண்பா கேட்கிற எனக்கே அங்க போகணும்.. அந்த இடத்தை பார்க்கணும்.. அங்கேயே வாழனும்னு தோணுதுடா ” என்றான் உள்ளத்தை மறையாது..

“ நிச்சயமா போலாம் டா.. நான் அடுத்த தடவ போகும்போது எல்லாருமே போலாம் நீ நான் நிலா மிதுன்.. ”

“ சரி போகலாம்.. அம்மா அப்பா கிட்ட ஏதாவது பேசுனியா ? அம்மாக்கு நீ எங்க போயிட்டு வந்தது பத்தி தெரியுமா ? ”

“ இல்லடா ”

“ அப்புறம் என்ன சொல்லிட்டு போன ? ”

“ நான் எதுவுமே சொல்லல.. அம்மா ஆபீஸ் விஷயமா வெளில போயிட்டு வந்திருக்கேன்னு நினைச்சிட்டு இருக்காங்க.. அதுவும் எங்கன்னு சொல்லாததால கோபமா இருக்காங்க.. ”

“ ம்ம்… சரி தாத்தாகிட்ட பேசினயா.. எதுனால இப்படி பிரிஞ்சி இருக்காங்கன்னு தெரிஞ்சுதா ? ”

“ ப்ச்.. நான் எதுவுமே கேட்டுக்கல டா.. அவரு அந்த ரெண்டு நாளா எவ்ளோ சந்தோசமா இருந்தாரு தெரியுமா ? அதான் பழசை எல்லாம் கிளரல.. அவரும் அதை தான் நெனச்சிருக்கணும்.. அவரும் என்கிட்ட இதை பத்தி பேசல.. ”

“ ஓஹ் சரி.. வீட்டுல பேசு.. கொஞ்சம் பொறுமையா பேசு டா.. அவங்க பக்கம் என்ன இருக்கோ.. ”

“ என்ன இருந்தாலும் அவங்க பண்ணினது தப்புதான் டா.. உயிரோட இருக்க ஒருத்தங்கள இறந்துட்டதா சொல்ல எப்படி டா மனசு வந்துச்சு.. ”

“ விடு இனி எல்லாத்தையும் சரி செய்ய வேண்டியது உன்னோட உன் தம்பியோட கைலதான் இருக்கு.. ”

“ பார்க்கலாம் ” என்றவன் உணவில் கவனம் செலுத்தினான்..

காண்டீன் விட்டு வெளியேறும்போது,

“ ஆபிஸ் டைம் முடியும்போது நான் கரெக்டா வந்து நிற்பேன். உன்னோட பொறுப்பு.. பருப்பு எல்லாம் தூக்கி வைச்சுட்டு என்கூட வீட்டுக்கு கிளம்புற ” என்று சொல்லியே அனுப்பினான் கதிர்.

சொல்லியபடி சரியாக 5 மணிக்கு அவன் முன்பு நிண்றிருந்தான் கதிர். வேறு வழியில்லாமல் அவனைத் திட்டிக்கொண்டே கிளம்பினான் அதுல்.

“ ஹேய் வீட்டுக்கு போகாம எங்கடா போறோம் ” இருசக்கர வாகனம் பாதை மாறுவது கண்டு அவன் வினவ..

“ வீட்டுக்குத்தான் போறோம் ” என்றான் கதிர்.

“ உன் வீட்டுக்கு என்னடா திடீர்னு ”

“ வந்து பாரு ”

இருவரும் வீடு வந்து சேர.. இவர்களுக்காகவே காத்திருந்த நிலா புன்னகையுடன் வரவேற்றாள்..

“ நிலா எப்படிமா இருக்க ” என நலம் விசாரித்தான் ஒரு அன்பான சகோதரனாக..

“ நல்லா இருக்கேண்ணா.. நீங்க எப்படி இருக்கீங்க ? வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு யாரும் சொல்லிட்டாங்களா ? ” என்று சண்டை போட்டவளை பார்த்து புன்னகைத்தவாறே

“ நான் நல்லா இருக்கேன்.. அப்புறம் நான் வீட்டுக்கு வராததுக்கு முக்கியமான காரணமே… ” என்று அவன் திரும்பி கதிரைப் பார்க்க.. அவனும் இவன் எதுக்கு நம்மள இந்த பார்வை பாக்குறான் என யோசித்து இருக்க..

அவன் மனையாளோ இருவரின் பார்வையை படித்து,

“ கதிர்.. என்ன சொன்னீங்க அண்ணா கிட்ட.. உங்களாலதான் அவர் இங்க வரதில்லையாம் ? எப்படி நீங்க அண்ணாவை இங்க வரவேண்டாம்னு சொல்லலாம் ? என காலரைப் பிடிக்காத குறையாக கேட்டு வைத்தாள்..

நண்பனைப் பார்த்த கதிர், “ சிறப்பா செஞ்சிட்ட நண்பா ” எனவும் அதுல் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

“ நான் சொன்னா கேக்க மாட்டேங்கறா டா உன் தங்கச்சிகிட்ட நீயே சொல்லு ” என்றான் நிலாவை சமாதானப்படுத்த முடியாமல்.

அவனும் சிரித்துக்கொண்டே, “ நிலா.. பையன் பாவம்மா விட்று அவன் ஏதும் சொல்லல.. எனக்குத்தான் ஆபீஸ்ல வொர்க் அதிகம்.. அதான் வர முடியல ” என விளக்கம் கொடுத்தான்.

“ அப்படி மட்டும் இவர் ஏதாவது சொல்லி இருக்கட்டும் ” என்றவள் கையை முறுக்கிக்கொண்டு அடிப்பதற்கு தயாராவது போல் நிற்க.. கதிர் கூலாக அவளைப் பார்த்து கண்ணடிக்க… அதற்கு மேல் அவன் என்ன செய்வான் என தெரியும் என்பதால்,

“ அண்ணா காபி கொண்டுவரேன் ” என வெக்கத்தை மறைத்து உள்ளே ஓடி விட்டாள்.

“ அது ” என கதிரும் நண்பனிடம் பேச ஆரம்பித்தான்.

சற்று நேரத்தில் மிதுன் உள்ளே வர, அங்கு அதுல் இருப்பதை பார்த்து அதிர்ந்தவன்,

“ அண்ணா நீயா ? ”

‘ நீ எங்க இங்க ‘ என அத்துவும் கேள்வியாய் பார்த்துவைக்க..

“ போதும்டா ஷாக் உங்க அண்ணன் தான்.. உள்ள வா ” என மிதுனை வரவேற்றான் கதிர்.

உள்ளிருந்து வந்த நிலா இருவருக்கும் காபி கொடுத்து விட்டு மிதுனிற்குத்  தராமல் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு அமர..

ஆ.. எனத் தேய்த்துக் கொண்டவன், “ எதுக்குடி கொட்டுன ” என கேட்டவுடன்

அதுல், ‘ மிதுன் ’ என அதட்ட..

“ சாரி அத்து.. எதுக்கு அ.. அக்கா என்ன கொட்டுன ”

அவன் வாயிலிருந்து அக்கா வருவேனா என ஆட்டம் காட்டியது. சிறு வயதிலிருந்தே ஒன்றாக விளையாடியவர்கள்.. வளர்ந்தும் அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளி சற்றும் குறையவில்லை.. அதனால்தான் தன்னை விட நிலா பெரியவளாக இருந்தும் மரியாதை கொடுக்க வருவதில்லை மிதுனிற்கு.

ஆனால் திருமணமான உடனேயே அதுல் அவனிடம் சொல்லி விட்டான் இனியும் விளையாட்டுப் பிள்ளை போல் இருக்காமல் அவளுக்கான மரியாதை கொடு என்று..

“ கேட்கல.. இன்னும் கொஞ்சம் சத்தமா கேளு ” என்றாள் நிலா..

பல்லைக் கடித்துக்கொண்டு, “ எதுக்கு அக்கா என்ன கொட்டுன ” என்றான்.

அவனது நிலை பார்த்து சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்தி, “ அதற்கெல்லாமா காரணம் வச்சுருப்பாங்க.. கொட்டனும்னு தோணிச்சு கொட்டினேன்.. ” என தோளை குலுக்கியவளை நங்கு நங்கு என்று கொட்ட வேண்டும் என தோன்றிய ஆசையை அதுலின் இருப்பினால் அடக்கினான்.

“ மிதுன் நீ என்ன இந்தப்பக்கம் ? ” என அண்ணன் வினவ

“ கதிர் மாமாதான் கால் பண்ணி வரச் சொன்னாங்க ” என்றதும் அதுல் தன் நண்பனை பார்த்தான்..

“ நான் எதுக்கு வரச்சொன்னேன்னா.. ” என்று இழுத்து நிறுத்த.. அண்ணனும் தம்பியும் அவனை எதிர்பார்ப்போடு பார்த்தனர்.

“ அது.. எதுக்கு வர சொன்னேனா… ” என்றவன் நிலாவைப் பார்த்து, “ நிலா சொல்லலாமா ? ” என கேட்டான்.

சிரிப்பில் துடித்த உதடுகளை கட்டுப்படுத்தி தலையசைத்தாள்..

“ சொல்லுடா.. ” என அதுலும் ஊக்க

“ சும்மாதாண்டா.. நாம எல்லாரும் இப்படி மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு இல்ல அதான்.. ” என்றதும் அத்து அவனை குமுற.. மிதுன் நிலாவை பழி தீர்த்துக் கொண்டான்..

அதன்பின் பொழுது இனிமையாக நண்பர்களது பேச்சு சிரிப்பு கலகலப்பு என கழிந்தது..

இரவு உணவை முடித்து கிளம்பும்பொழுது மிதுன் நிலாவிடம் சைகையில் ஏதோ கேட்க.. அவள் கதிரை கண்காட்ட.. இவன் மறுப்பாக தலையசைத்தான்.

இவர்களது நாடகத்தைப் பார்த்த கதிர் அதுலிடம் என்னவென்று பார்வையாலே கேட்க அவனுக்கு தெரியாது என்றவுடன், “ நிலா என்ன விஷயம் ” என மனைவியிடம் கேட்டான்

“ என்ன விஷயம் !! ஒண்ணுமே இல்லையே ” என சமாளிக்க.. அவளை முறைத்தான் மிதுன்.

சமாளித்த தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ மிதுன் உனக்கு தெரியாம எதுவும் இருக்காது. சொல்லு.. எதுக்கு இப்ப இந்த மௌன மொழியில் அரங்கேற்றம் நடந்தது ” என்றதும்

“ ஆ.. மாமா.. அது ” என்றவன் அத்துவைப் பார்த்து நிறுத்த..

“ அவனைப் பார்த்து ஏண்டா டைப் அடிக்குற ? ”

“ அதில்ல மாமா.. என்னோட ப்ரோஜெக்ட்க்கு ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கிறேன்.. அதோட ஸ்க்ரிப்ட் நிலாகிட்ட காட்டினேன்.. அதுல அந்த பீமேல் லீட் அவளுக்கு ரொம்ப பிடிச்சது.. ” என அவன் முகம் பார்க்க..

அவன் மேலே சொல் என்பதாய்ப் பார்த்தான்..

“ அவளுக்கு ரொம்ப பிடிச்சதுனால அவளையே ஆக்ட் பண்ண கேட்டேன் அக்கா உங்க கிட்ட கேக்க சொன்னாங்க.. ” என  ஒருவழியாக சொல்லி முடித்து விட்டான்.

அத்து மிதுனை முறைக்க.. கதிரோ நிலாவை பார்வையாலே எரித்தான்..

“ நான் கேட்டதால தான் அவ உங்ககிட்ட கேட்க சொன்னா.. இதுல அக்கா தப்பு எதுவுமே இல்லை மாமா… ” எங்கே நிலாவைத் திட்டி விடுவானோ என்ற பயம் அதனால் தான் தன் பெயரை இழுத்துக் கொண்டான்.

உண்மையில் நிலாவிற்கு தான் அதில் விருப்பம்.. அது ஒரு பெண் காவல்துறை அதிகாரியின் போராட்டத்தை கொண்டு தயாரிக்கவிருக்கும் குறும்படம்.. நிலாவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது அத்தனை ஈர்ப்பு.. அதனால் மிதுனை எப்படியோ பேசி சரி செய்துவிட்டாள்..

ஆனால் கதிரை நினைத்து பயமாக இருந்தது அவன் இதை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று அதற்கு ஏற்றார் போல் இப்பொழுது அவன் முகம் கோபத்தால் சிவந்திருக்க.. முடிவே செய்துவிட்டாள் கதிர் அனுமதிக்கப் போவதில்லை என்று.

“ மிதுன்  நீ என்ன பண்ணிட்டு இருக்க.. யாரைக் கேட்டு நீ இப்படி முடிவு பண்ண ? ” என அத்து கடிந்து கொள்ள.. அவனுக்கு அண்ணனே இப்படி என்றால் இனி கதிர் என்ன சொல்வானோ என்று இருந்தது.

கதிர் எதுவுமே பேசவில்லை.. நிலாவிற்கு உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.. மிதுனை ஏதாவது சொல்லிவிடுவானோ என்று பயந்து அவனை கிளம்ப சொல்லி ஜாடை காட்ட அவன் மறுத்துவிட்டான்.. சரி என்று அத்துவைப் பார்க்க அவன் அவளை முறைத்தான்..

நிலா இன்னிக்கு இந்த கதிரவன் உன்னை சுட்டெரிக்க போவது மட்டும் உறுதி எப்படியாவது எஸ்கேப் ஆகிடனும் என அதிவேகமாக யோசித்தவள்,

“ மிதுன் நான் சொல்லல இப்படித்தான் ஷாக் ஆவாங்கன்னு.. பாரு அதே மாதிரி ரெண்டு பேரும் ஷாக் ஆகிட்டாங்க.. என்றவள் கதிரிடம் திரும்பி,

“ அவன் சும்மா ஒரு பேச்சுக்கு தான் அப்படி கேட்டான்.. அதை சீரியஸா எடுத்துக்கிட்டு இப்படி முறைச்சுகிட்டு நிக்குறீங்க.. அண்ணா நீங்க கூட நம்பிட்டீங்களா என சிரிக்க.. மிதுன் முழித்து வைத்தான்..

“ நான் போற ரூட்ல அப்படியே ஃபாலோ பண்ணி வந்து காப்பாத்துடா ” என மிதுனிடம் முணுமுணுத்தாள்..

அவனும் புரிந்து, “ நிலா சொல்ற மாதிரி தான் ” என ஜிங் ஸாங் அடிக்க.. அடுத்த நொடி கதிரும் அதுலும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

மிதுனம் நிலாவும் முழித்துக் கொண்டு நிற்க.. அவர்கள் வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தனர்..

“ எதுக்கு சிரிக்கிறீங்க.. சொல்லிட்டு சிரிங்க ” என்றாள் கடுப்பான நிலா.

சிரித்து முடித்த பின்னரே கதிர் ஆரம்பித்தான்,

“ என்கிட்ட என்ன பயம் உங்க ரெண்டு பேருக்கும்.. அவ்வளவு தயங்குறீங்க நீங்க கொடுத்த பில்டப்பை பார்த்து நான் நீங்க பெருசா எதுவும் பண்ணிட்டீங்களோன்னு நினைச்சேன் ” என்றான் சிரிப்புடன்.

“ அப்போ உங்களுக்கு ஓகேவா மாமா ” என மிதுனும்

“ உங்களுக்கு ஓகேவா கதிர் ” என நிலாவும் மகிழ்ச்சியுடன் கேட்க

“ டபுள் ஓகே ” என்றான் கதிர்

இருவரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர் மிதுன் அண்ணனைப் பார்க்க அத்துவும் சிரிப்புடன் நின்றிருந்தான்.

“ அத்து ஏன் நீ அப்படி கேட்ட ? ”

“ சும்மா உங்க ரியாக்சன் என்னன்னு தெரிஞ்சுக்க.. ” என்றவன் “ உன்ன பத்தியும் நிலாவை பத்தியும் எங்க ரெண்டு பேருக்குமே தெரியும் அவளுக்கு அந்த ரோல் சூஸ் பண்ணி இருக்கேன்னா நீ யோசிக்காம பண்ணி இருக்க மாட்ட.. அவளும் அவளுக்கான பெஸ்ட தான் சூஸ் பண்ணுவா.. அப்புறம் என்ன ? நண்பா.. நான் சொல்றது சரிதானே ! என கதிரிடம் வினவ

“ 100% ” என்றான் புன்னகையுடன்..

சிறிது நேரம் பேசிவிட்டு அண்ணன் தம்பி இருவரும் விடை பெற்றுக் கிளம்ப.. உள்ளே வந்த நிலா, “ ரொம்ப தேங்க்ஸ் கதிர் ” என அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..

“ தேங்க்ஸ் எல்லாம் தேவையே இல்ல நிலா குட்டி.. நீ ஆசைப் பட்ட விசயத்தை எப்படி நான் வேணாம்னு சொல்லுவேன்.. ம்ம் ” என்றான் அவள் தலைமேல் தன் கன்னத்தைப் பதித்து.

“ அதில்ல கதிர் உங்களுக்கு நடிக்கிறது பிடிக்காதுன்னு தெரியும்.. ஆனா எனக்கு அவனோட ஸ்கிரிப்ட் படிச்சதும் ரொம்ப ஆசை அந்த ரோல் நான் பண்ணணும்னு ஆனா உங்களுக்கு பிடிக்காது அதான் ” என நிறுத்த..

“ நான் எப்பவும் சொல்றது தான் நிலா.. நீ எனக்காக எதுவும் மாத்திக்க வேணாம் உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை செய்.. அதுக்கு என்னோட சப்போர்ட் எப்பவுமே என் நிலா குட்டிக்கு இருக்கும் சரியா.. ”

“ ம்ம்… ” என்றவள் அவனை அணைத்துக் கொண்டாள்..

 

மேகம் கடக்கும்…

 

Advertisement