Advertisement

                                                                   உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 36

 

‘ அகம் கொண்ட ஆதித்தன் ’

புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு.. எல்லாமே !

மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.. ஒரு அழகான புன்னகை அவளுக்காக.. அவனிடமிருந்து.

நிச்சயம் இதை அவள் கனாவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அவனிடம் என்ன கேட்பது.. என்ன சொல்வது எதுவுமே தெரியவில்லை. ஆனால் விழிகளை மட்டும் அவனிடமிருந்து பிரித்தெடுக்க முடியவில்லை.. அவள் சொல்லத் துடித்தவற்றை சத்தமில்லாமல் அவளது நயனங்கள் சொல்லிவிட்டிருந்தன.  

“ வா பன்க்ஷன் முடிஞ்சதும் எல்லாம் பேசிக்கலாம்.. ” என மேடைக்கு அழைத்துப் போனான்.

அன்று அவள் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா.. சற்று முன் கிடைத்த தகவல் அவளுக்கு.

அகம் கொண்ட ஆதித்தன் !

உண்மையில் அவள் அகம் கொண்ட வீரப் புருஷன் தான் ஆதித்த கரிகாலன்.             அவளுக்கு அவன் அறிமுகம் ஒரு கதாப்பாத்திரமாகத்தான்.. அதுவும் கல்கி அவர்களின் காவியம் மூலமாகத் தான்.

அதில் அவர் அவனைப் பற்றியும் அவனது வீர பராக்கிரமங்களையும் பற்றிச் சொல்லியிருக்க.. அந்த வீராதி வீரனின் வீரத்தால் அவனிடம் தோற்று அவன் மீது தீரக் காதல் கொண்டாள் தத்தை !

ஆதித்த கரிகாலன் உயிரோடு இருந்திருந்தால் ! இது தான் அவளது கதையின் சாராம்சம். அத்தனை அழகாய்ச் சித்தரித்திருந்தாள் அவளது காவியத் தலைவனை ! அதை அவளுக்கே அர்ப்பணித்தான் அவளது தலைவன்.

 

ஆதித்தன் விதியாலோ சதியாலோ இறக்காமலிருந்திருந்தால் ?? பழியால் வஞ்சிக்கப்படாமல் இருந்திருந்தால் ? அவன் வீர வாள் ஓய்வெடுத்து உறங்காமலிருந்திருந்தால் ?? சோழ வள நாட்டின் முடி சூட்டிய மன்னனாக இருந்திருந்தால் ? பாரத நாட்டின் புகழ் பெற்ற சக்ரவர்த்தியாக வீற்றிருந்தால் ? அகிலம் ஆளும் அரசனாக அரியாசனத்தை ஆக்கிரமைத்திருந்தால் ?? அவன் அகத்திலும் மங்கை அவள் ஆட்சி புரிந்திருந்தால் ? அவனுக்கும் அவனையொத்த வேங்கை மைந்தன் ஜனித்திருந்தால் ?

இது தான்.. அவளது அகம் கொண்ட ஆதித்தன்..!

கற்பனையில் பல ஆண்டு காலம் அவனை வாழ வைத்து அதைக் கண்டு களிப்புற்றிருந்தாள் அவன் மீது தீராக் காதல் கொண்ட கலியுகக் காதலி..!
நிச்சயம் அவளது எழுதுகோலின் மகிமை அருமை அவள் உணர்ந்து இருந்தாளில்லை.. அதனாலென்ன ? அதோ அவளை வெற்றி பெற வைத்து அவளது புகழில் அவளை விட பெருமிதம் கொண்டு அவளைக் கொண்டாடக் காத்திருக்கிறானே அவளவன்..! அவன் உணர்ந்து கொண்டான்.

மற்றவர்க்கு உணர்த்தவே இந்த ஏற்பாடு.. அவள் சிங்கப்பூர் சென்றிருந்த போது தான் அவளுடைய கதையைப் படிக்க நேர்ந்தது… படிக்க படிக்க.. இவனுள் பிரமிப்பு.. சிலிர்ப்பு.. பரவசம்..

இதுவரை அவன் பார்த்தே இராத.. பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஆதித்த கரிகாலனை அவனுக்குக் காட்டிவிட்டிருந்தாள். சித்தத்தில் சித்தரிக்க வைத்திருந்தாள் அவளது எழுத்து மூலம்.

அத்தனை அழகான பரிசை அவனுக்கு தந்துவிட்டுப் போனவளுக்கு இதை விட வேறு என்ன செய்திட முடியும் ? அகத்தியன் உதவியுடன் பதிப்பித்துவிட்டான்.

புத்தக வெளியீட்டு விழா வரை அவளிடம் எதுவும் சொல்லவில்லை.. யாரையும் சொல்ல விடவில்லை.

இதோ இந்த நிமிடம் அவள் முகத்தில் தெரியும் வியப்பு.. திகைப்பு.. மகிழ்ச்சி.. உவகை.. இன்பம்.. பெருமை.. இதையெல்லாம் தான் பார்க்க விரும்பினான். பார்த்துவிட்டான். அது போதும் அவனுக்கு..!


எல்லாவற்றையும் அவளுக்காகச் செய்துவிட்டு எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் யுகா, கதிருடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தவனை நோக்கி அவள் மனம் கட்டவிழ்ந்து காற்றாற்று வேகமாய் சென்று சரணடைந்தது.

விழாவிற்கு வந்திருந்த மூத்த எழுத்தாளர்கள் மனமாற பாராட்டி வாழ்த்து தெரிவிக்க.. நெகிழ்ந்து போயிருந்தாள்.

“ பைரவி… ” என்ற குரலில் திரும்பியவளிடம்

“ நான் குந்தவி… ” என்றாள் அப்பெண் சிரிப்புடன்.

அவள் விழிகள் வியப்பில் விஸ்தாரிக்க.. “ நான் உங்க குந்தவி இல்ல.. மிசஸ்.பிருத்வி.. ” என்றதும் அவளுக்குப் புரிந்துவிட்டிருந்தது.

அவன் அறிவாள் பிருத்வியை.. அத்து அறிமுகப்படுத்தியுள்ளான்.

பைரவி புன்னகைக்க..

“ பைரவி.. ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருந்த.. அத்து கொடுத்தான் உன் கதையை. சான்சே இல்ல.. என்கிட்ட இருந்த இருபது நாள்ல பத்து தடவைக்கும் மேல படிச்சிட்டேன். ஐ ஃபால் இன் லவ் வித் யுவர் ஒர்க் ”

“ தாங்க்ஸ் அக்கா.. ரொம்ப சந்தோசமா இருக்கு. ”

“ சரி வீட்டுக்கு வா.. நான் சொன்னேன்னு சொல்லு அவன்கிட்ட.. மூணு வருசமா இங்க இருக்க.. கண்ணுலேயே காட்டாம வெச்சிட்டான்.. இன்னிக்கு தான் பார்க்க முடிஞ்சுது ”

அவள் சரியென தலையசைக்க ஆத்மிகா அவ்விடம் வந்தாள்.

“ பைரவி.. சாரி கடமை காத்திருக்கிறது.. நான் கிளம்புறேன்.. உங்களோட மெயில் ஐடி கொடுங்க.. என்னோட ரிவியு கொடுக்க.. ” என பெற்றுக் கொண்டு “ அக்கா போலாமா ? ” என குந்தவியுடன் விடைபெற்றாள்.

பைரவி தனியாக அமர்ந்திருக்க.. தூரிகா வந்தாள்.

“ இன்னும் பையு கிட்ட என்னென்ன வித்தையெல்லாம் ஒளிஞ்சுட்டு இருக்கு.. சொல்லிடு பார்ப்போம்.. ”

“ அக்கா… ” அவள் சிணுங்க

“ சரி விடு நான் அதுல் மாமா கிட்ட கேட்டுக்கிறேன்.. ” என்று அவள் சொல்ல

“ என்ன கேக்கணும் எங்கிட்ட.. ” என்றபடி வந்தான் அத்து.

“ அதுவா மாமா.. என் தங்கச்சி உள்ள ஒளிச்சி வெச்சிருக்க திறமையெல்லாம் என்னன்னு கேட்டுட்டு இருந்தேன். அவ சொல்லல அதான் உங்க கிட்ட கேக்கலாம்னு….  ” என இழுக்க

“ சொல்லிட்டாப் போச்சு.. ” என்றவன் ட்ரிம் செய்யாமல் விட்டுவைத்திருந்த தாடிப் புற்களை வருடியபடி அவளை நோட்டம் விட்டான். அதாகப் பட்டது அவளை சைட் அடித்தான்.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை அவளால்.. “ அம்மா கூப்பிடுறாங்க.. ” என நகர்ந்து விட

“ ஐயம் சோ ப்ரௌட் ஆப் யு மாமா… ” என்றாள் தூரிகா.

‘ எதற்கு ’ என்பதாய் பார்வை வீச

“ விக்ரம் சொன்னாரு.. நீங்க தான் பையுவை மாமாகிட்ட பேசி.. சமாளிச்சு.. இங்க கூட்டிட்டு வந்தீங்களாம்… ஒரு வேளை நீங்க அவ லைப்ல வராம இருந்திருந்தா இந்நேரம் கல்யாணம் பண்ணிகிட்டு நம்ம நாட்டோட ஏதோ ஒரு மூலைல ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திருப்பா..

ஆனா இன்னிக்கு.. இனிமேல ஓவர் ஆல் தமிழ் மக்களுக்கு அவளை ஆதித்தன் மூலமா தெரியும்.. அதுக்கு காரணம் நிச்சயம் நீங்க மட்டும் தான். ”

அவன் அமைதியாக அவளது அம்மாவுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்திருக்க.. தூரிகா சிரிப்புடன் நகர்ந்திருந்தாள்.

அவனும் சிந்தித்திருக்கிறான்.. ஒரு வேளை பைரவி அவன் வாழ்வில் வராமல் போயிருந்தால் ? நிச்சயம் அந்த அன்பு தேவதையை அவன் இழந்திருப்பான்.

அத்தனைக்கும் காரணம் அவனது தாத்தா.. அவள் அவனுக்கு கிடைக்கக் காரணமானவர்.

‘தாத்தா…’ நினைத்ததும் உதிக்கிறது உதட்டில் உவகை… அவன் அப்பாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவரின் அருகில் சென்று அமர்ந்தவன் அவரது கரங்களை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான்.

“ அருமைடா கண்ணா… ” என்றார் புன்னகையுடன்.

“ உங்க செல்ல பேத்திகிட்ட சொல்லுங்க அதை.. நான் எதுவுமே பண்ணல.. சொல்லப் போனா நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். ”

அவர் கேள்விடன் பார்க்க..

“ உண்மை தான் தாத்தா.. அவ எழுதுறதுக்கு முக்கியமான காரணம் நீங்க மட்டும் தான். அவ எழுதினதை படிக்கவும் கேக்கவும் அதைப் பத்தி பேசவும் அவளுக்கிருந்த ஒரே துணை நீங்க மட்டும் தான். தெரிஞ்சோ தெரியாமையோ உங்க பேத்தியோட இந்த வெற்றிக்கு பின்னாடி நீங்க தான் இருக்கீங்க.. ” பெருமையும் பெருமிதமுமாக பேத்தியைப் பார்த்தார் பெரியவர்.

விழா இனிதே நிறைவடைந்து வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் விடைபெற்று இருந்தனர்.

“ பைரவி.. அகத்தியன் ஐயா கிளம்புராரு.. வா ” என அவளை அவரிடம் அழைத்துச் சென்றான்.

“ வாழ்த்துகள் பைரவி.. இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்.. உனது பணி நம் வீரத்தை.. நம் வரலாற்றை.. அதிலுள்ள அவிழ்க்க முடியா முடிச்சுக்களை இந்த உலகிற்கு பறைசாற்றட்டும்.. ” என்றவரின் பாதம் பணிந்து ஆசி பெற்றுக் கொண்டாள்.

“ வாழ்க வளமுடன்.. நான் விடை பெறுகிறேன்.. ” என அவர் விடைபெற்றுச் செல்ல அனைவரும் அத்து வீட்டிற்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது.

“ ஏங்க.. நான் ஹாஸ்டலுக்கு  போறேனே.. ”

“ எதுக்கு ? ”

“ எதுக்குன்னா.. நான் ஹாஸ்டல்ல பெர்மிஷன் வாங்கிட்டு தான் வந்திருக்கேன்.. நான் போகணும் ” என ஐந்து வயது குழந்தையைப் போல அடம் பிடிப்பவளை சிரிப்புடன் பார்த்தான்.

“ ப்ச்.. எதுக்கு சிரிக்குறீங்க.. ”

“ நீ ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க.. ”

“ ஹாஸ்டல்.. ”

“ நான் பெர்மிஷன் வாங்கிட்டேன்… ”

“ எதுக்கு.. எ.. எப்படி ”

“ ம்ம்.. பைரவி பைரவின்ற பொண்ணுக்கு நான் தான் கார்டியன்னு மூணு வருஷம் முன்னாடி எழுதி கொடுத்த நியாபகம்.. உனக்கு எப்படியோ ? ”

அதற்கு மேல் என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியானாள். ஆனால் உள்ளுக்குள் உதறல் எடுத்திருந்தது ஜெயாவை நினைத்து. அதை சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் தவித்துத் தான் போனாள் அம்மங்கை..

“ பைரவி.. ”

“ ம்ம்.. ”

“ உன்னை நான் வீட்டுக்கு கூட்டிட்டு போக காரணமே அம்மா தான். ”

‘ நான் வர மாட்டேன்னு சொல்ல காரணமே உங்க அம்மா தான்.. ’ உள்ளே நினைத்ததை சொல்லவா முடியும். ஆனால் அவன் சொன்னனே ! அவள் அகத்தை அச்சுப் பிசகாமல் படித்துச் சொன்னனே !

“ ப்ச் போங்க.. உங்ககிட்ட இருந்து எதையுமே மறைக்க முடியல.. உண்மையைச் சொல்லுங்க அக்கவுன்ட்ஸ் படிச்சிங்களா இல்ல சைக்கார்டிஸ்ட்க்கு படிச்சிங்களா ?.. ”

“ ஹா ஹா ”

விக்ரம், யுகா, சூர்யா, தூரிகா, நிலா, கதிர் என அனைவரும் வந்துவிட வேறு வழியின்றி கிளம்பினாள்.      

அடுத்த அதிர்ச்சி அன்றைய நாளில்..

ஜெயா அவளை அமர வைத்து சுத்திப் போட்டார். கண் பட்டு விட்டதாம் அவரது மருமகளுக்கு.

‘ நேற்று இல்லாத மாற்றம்… என்னதிது ’ என்பதாய் அவள் பார்வை அத்துவைத் தேட.. அவன் இருந்தால் தானே.

“ நீ போயி டீ போடு.. மாமா சொல்லிகிட்டே இருந்தாங்க.. உன் டீ பத்தி.. இன்னிக்கு நானும் குடிச்சு பாக்குறேன்.. ” என்ற ஜெயாவை வியப்புடன் பார்த்துவிட்டு நகர்ந்தாள்.

அனைவருக்கும் டீ கொடுத்து விட்டு வந்தவளிடம்

“ நீயும் சீக்கிரம் குடி பைரவி.. நாம ரெண்டு பேரும் மார்க்கெட் போயிட்டு வருவோம்.. எல்லாரும் நைட்டு இங்க தான் இருப்பாங்க.. நாம சமையல் வேலையே ஆரம்பிச்சுடலாம்.. இந்தப் பசங்களை நம்பி வீட்ட விட்டுட்டு போயி.. துடைச்சு வெச்சுருக்காங்க.. ஒரு சாமானம் இல்ல.. ” எனச் சொல்லிக் கொண்டு போனவரை விழி விரிய பார்த்திருந்தாள்.

இவர் இப்படிக் கூட பேசுவாரா ? அதுவும் தன்னிடம் ? ஊரிலிருக்கும் போதே அவரது மாற்றம் கண்ணில் பட்டது. ஆனால் கருத்தில் பதியவில்லை.

இதெல்லாம் யாரால் சாத்தியம் ?? அவளின் அன்புக்குரியவன் ஆருயிரானவனைத் தவிர..

‘ எங்க போனாரு.. ’ என்றபடி வெளியே வந்தாள்.

வீட்டின் தோட்டப் பக்கம் சுவரின் மீது சாய்ந்து ஒரு காலை மட்டும் நிலத்தில் ஊன்றி அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவனிடம் வந்தாள்.  

‘ என்ன ’ என்பதாய் அவன் புருவம் உயர்த்த.. ஒன்றுமில்லை என தலையசைத்தவள் அவனைப் போலவே சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.

சிரிப்புடன் அவள் எதிரில் வந்து நின்று ஒரு கையை அவள் தோள் மீது ஊன்றிக் கொண்டான்.. அவள் தட்டி விட.. ‘ ப்ச்.. சும்மாயிரு ’ என்றதும் அவள் அலைபேசியை காட்டி அவன் அதரங்களில் விரல் வைக்க.. அவனும்  அவள் அதரங்களின் மேல் விரல் வைத்து அவளையும் அமைதியாக இருக்கச் சொன்னவன் அடுத்த ஐந்து நிமிடங்களில் அழைப்பை துண்டித்தான்.

இப்போது இரு கைகளையும் அவளின் இரு புறம் சுவரில் ஊன்றி அவளை அணைத்தவாறு நின்று கொள்ள… அவன் சுவாசம் அவள் சுவாசக் காற்றாக மாறி.. சிலிர்ப்பை அறிமுகம் செய்ய.. அவளை மறந்து விழிகளை மூடி நின்றிருந்தவள் சுற்றுப்புறம் உணர்ந்து  அவனது மார்பில் கை வைத்து பின்னுக்குத் தள்ளியபடியே

“ என்ன பண்ணி வெச்சுருக்கீங்க வீட்டை.. எங்க அத்தை புலம்பிட்டு இருக்காங்க.. உங்களை நம்பி விட்டுட்டு போனா இப்படி தான் பொறுப்பே இல்லாம இருப்பீங்களா ? ம்ம்..  ” என மிரட்ட

“ பாருடா.. எனக்கு பொறுப்பில்ல தான்.. ஆனா உனக்கு இருக்கில்ல.. அப்போ உன் அத்தைக்காக இல்லைனாலும் உன் அத்துவுக்காக வாரா வாரம் வீட்டுக்கு வந்து வீட்டை பொறுப்பா பார்த்திருக்கலாமில்ல… அப்படியே என்னையும்.. ” என அவன் அவளது கரங்களை சிறை எடுத்துக் கொண்டு இன்னும் அவளை நெருங்க..

“ அத்தை… அது ” என அவள் டைப் அடிக்க.

“ ஐயோ அம்மா… ” என அவன் தெறிக்க.. அவள் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

‘ உன்னை ’ என அவன் மீண்டும் நெருங்கி வந்து அவளை சிறை எடுத்து காதைத் திருகியவன்..

இளந் தென்றல் இதமாய் தொட்டு இன்னிசை மீட்ட.. அவள் காதில் இருந்த காதணி நர்த்தனம் ஆடிட காதோரம் கவி பாடிய கேசத்தை மெல்ல எடுத்து விட்டு காதல் சொல்லும் அவள் கண்களோடு அவன் கவிதை பேசிட

புன்னகையுடன் அவனைப் பார்த்திருந்தவள் அதிர்ந்து “ அத்தை ” எனச் சொல்ல..

“ ஒரு தடவை ஏமாந்துட்டேன்.. உங்க அத்தை வந்தா வரட்டும்.. அப்படியே பார்த்துட்டு போக சொல்லு.. ”

“ டேய் !! அத்து.. ” என்ற ஜெயாவின் குரலில் திகைத்து

“ கோர்த்துவிட்டுட்டியே பையு… ” என்றபடி திரும்பினான்.

“ இங்க என்னடா பண்ற… ” திகைப்புடன் அவர்.

“ மா… அது.. அது பையு காதுல.. தோடு.. ஜிமிக்கி… ” என உளற

“ எனக்கு ஏற்கனவே காது குத்திட்டாங்க டா… ”

‘ கண்டுபிடிச்சிட்டா கண்டுக்காம போகாம.. கிராஸ் கொஸ்டியன் பண்றீங்களே மா.. ’ எனப் புலம்பியவன்

“ மா.. அப்படியா அப்போ அல்ல காது.. ”

“ ஏன் நீ குத்தவா… ”

“ ம்ம்.. ம்ம்.. ” என அவன் சிரிப்புடன் தலையாட்ட..

“ படவா.. ஓடு.. போய் கார் எடு.. சாமான் வாங்கணும்.. ” என்கவும் அவளிடம் அப்புறமா பார்த்துகிறேன் உன்னை என உதட்டசைவில் சொல்லிச் சென்றான்.

இரவு உணவு முடித்து கதிர், நிலா, சூர்யா மூவரும் அருகிலிருந்த அவர்களின் அம்மா வீட்டிற்கு புறப்பட.. விக்ரம் யுகா, தூரிகாவை இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே இருக்க வைத்தனர்.   

சற்று நேரம் தங்களுக்குள் சிறு வயது முதல் கல்லூரிக் காலம் வரை பகிர்ந்து கொண்டவர்கள் உறங்கச் செல்ல அத்து பைரவியிடம் மேல் மாடம் வரச் சொன்னான்.

அவளோ ஜெயாவைக் காட்டி மறுக்க.. விட்டு விட்டான். அனைவரும் உறங்கச் சென்ற பின் தண்ணீர் எடுக்க வெளியே வந்தவளை கடத்தி விட்டிருந்தான் காதல் கொள்ள..

“ ஹையோ.. மாமா.. என்ன பண்றீங்க.. அத்தை இல்ல வேற யாராவது பார்த்தா.. ப்ளீஸ்.. நாளைக்கு பேசிக்கலாமே.. ” என கெஞ்சியும் அசரவேயில்லை அவன்.

மேல் மேடம் வந்து அவளை இறக்கி விட்டவன் ‘ அங்க பாரு ’ என பூர்ண சந்திரனைக் காட்ட..

“ நிலா.. அதைக் காட்டவா இங்க கூட்டிட்டு வந்தீங்க.. ” என அவள் முறைக்க..

“ இன்னிக்கு பௌர்ணமி.. ” என்று சொல்லி அவன் போய் அம்ர்ந்துவிட்டிருந்தான். சட்டென அவள் முகம் மலர்ந்துவிட்டிருந்தது.

ஒரு முறை.. ஒரேயொரு முறை சொல்லியிருக்கிறாள் அவனிடம். அந்திப் பொழுதின் காவலனை முழுமதி நாளில் காண்பதும்.. மஞ்சள் வானமும் கொஞ்சம் மேகமுமாய் காட்சி கொடுக்கும் ககேசனை காண்பதும் அவளுக்கும் பிடித்தம் என.

உதட்டில் உதயமான உவகையுடன் அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

“ நிலா.. என் முகத்துல இல்ல.. அங்க ” அவள் அவனையே பார்ப்பது கண்டு சொல்ல.. அவள் அப்போதும் திருமகன் திருமுகம் மட்டுமே கண்டு கொண்டிருந்தாள்.

அவனே அவள் முகம் பற்றி திருப்பி விட.. மெல்லிய சிரிப்புடன் திரும்பிக் கொண்டாள். அதன் பின் நிலவுடன் அவள் கதைக்கத் தொடங்கியிருக்க.. விரல்களில் சில்லென்ற குளிர் பரவியது.

அவன் தான் அவளது விரல்களுக்கு மருதாணியிட்டுக் கொண்டிருந்தான். அவன் வீட்டுத் தோட்டத்திலிருந்து பறித்து அரைத்து நிலா சூர்யா தூரிகா மூவரும் வைத்துக் கொண்டிருந்தனர். இவள் ஜெயாவுடன் இருக்க.. பார்வை மட்டும் அவ்வப்போது மருதாணியை தொட்டுச் சென்றது. அவன் அதை பார்த்து விட்டிருக்க வேண்டும்.

“ நான் ஊருக்கு போயி வெச்சுக்கலாம்னு நினைச்சேன்.. ”

“ ஓ.. ” கேட்டுக் கொண்டான்.

“ நான் ஒன்னு கேக்கவா… ” தயக்கத்துடன் அவள் கேட்க..

“ ஒன்னு மட்டுமா ? ”

அவள் விழிகளில் அபிநயம் பிடிக்க.. “ சரி.. சரி கேளு ” என்றான்.

“ நீங்க ஏன் வேலையை விட்டீங்க.. ”

“ ஏன் வேலையை விடுவாங்க.. ”

“ செய்யுற வேலை பிடிக்கலன்னா.. திருப்தி இல்லைனா.. ”

“ ம்ம்.. அதே தான்.. நானும் அதுனால தான் விட்டுட்டேன். ”

அடுத்து அவன் வேறு ஏதும் சொல்வானோ என அவன் முகம் பார்க்க.. அவனோ மருதாணியில் மட்டுமே கவனம் வைத்திருந்தான்.

இரு கைகளுக்கும் வைத்து விட்டவன் கீழிறங்கி அமர்ந்து கொண்டு அவன் மடியில் அவள் பாதங்களை எடுத்து வைக்க..

“ ஹையோ.. என்ன பண்றீங்க.. எழுந்திருங்க முதல்ல.. ” எனப் பதறி பாதத்தை இழுத்துக் கொள்ள முயல..

“ ஷ்ஷ்… ” என அவன் விரல்கள் அவள் அதரம் தீண்ட அட்டென்ஷனில் அமர்ந்து கொண்டாள் சற்று நேரத்திற்கு.

“ எனக்கு உங்களைப் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்.. ” பல நாட்களாக அவளுள் இருக்கும் கேள்வி அது.. கேட்டேவிட்டாள் இன்று.

“ நீ தான் சொன்ன.. ”

“ நானா.. இல்லையே… நான் எப்போ எப்படி ? ”  

“ அது அப்படி தான் ”

“ சொல்லுங்க மாமா…”

“ நீ மாமா சொல்லாத.. அத்து சொல்லு  ”

அவளிடம் சொல்லிப் பார்த்துவிட்டான். ஒரு முறையாவது அவன் பெயரைச் சொல்லி அழைக்கச் சொல்லி.. ம்ஹும்.. மாட்டேன் என்றுவிட்டிருந்தாள்.

“ அதெல்லாம் முடியாது.. நான் எப்படி உங்க பேரை.. ம்ஹும்  ”

“ எப்படியா ? ” என எழுந்தவன் அவளது அதரங்களைச் சுண்டி “ இதோ இந்த உதட்டை அசைச்சு..  அ – த் – து அத்து.. சொல்லிடு ” அவன் அத்தனை ஆசையோடு காத்திருக்க..

த்

தா

ன்

அத்தான்.. என்றாளே பார்க்கலாம்.

“ அப்போ சொல்ல மாட்ட.. ”

“ ம்ஹும்.. ” சிரிப்புடன் தலையசைத்து மறுக்க..

“ நீ சொல்லுவ.. ”

“ ம்ஹும்.. மாட்டேன்.  ”

“ நீ சொல்லுவ.. சொல்ல வைப்பேன். இங்க இருந்து கீழ போறதுக்குள்ள.. ” என்றுவிட்டு அவன் விட்ட வேலையைத் தொடர

“ மாமா ப்ளீஸ் சொல்லுங்களேன்.. ”

“ ம்ஹும்.. ”

“ மாமாஆஆ…..”

“ ம்ம்.. ”

“ சொல்லுவீங்களா ? மாட்டீங்களா ? ”

“ ம்ஹும்… ”            

“ நீங்க சொல்ல வேண்டாம்.. ” என்றுவிட்டு அவள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள சிரிப்புடன் அவளுக்கு மருதாணி வைத்து முடித்தான்.

“ சரி நான் இத கீழ வெச்சிட்டு வரேன்.. ” என்றவன் ஐந்து நிமிடத்தில் திரும்பினான்.

“ அப்புறம் பைரவி.. எப்ப ஊருக்கு கிளம்புற.. ”

“ உங்களுக்கெதுக்கு ”

“ என்ன பையு இப்படிக் கேக்குற ? ”

“ ……. ”

“ சரி எப்போ கல்யாணம் ”

“ நிச்சயம் உங்களுக்கு அழைப்பில்ல.. ” கடுப்புடன் அவள்.

“ ஆமாமா.. எனக்கு அழைச்சு ஏன் ஒரு பத்திரிக்கை வீண் பண்றீங்க.. வேணாம்… நான் முத ஆளா வந்து நிப்பேன்.. ” சிரிப்புடன் அவன்.

காரிகையின் கண்களில் கனல் கக்க..

“ ஆனா நான் உன்னை மாதிரி இல்ல.. என்னோட கல்யாணத்துக்கு முதல் அழைப்பு உனக்கு தான். நீயில்லாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. என் கல்யாணம் உன் கையில.. ” இன்னும் என்ன பேசியிருப்பானோ..

“ மாமாஆ.. ” என அவள் டீ சர்ட்டின் காலரைப் பிடிக்க வர

“ ஹேய் !!.. மருதாணி.. ” சட்டென விலகிவிட்டான்.

“ பேச்சுக்கு கூட அந்த மாதிரி பேசாதீங்க.. ” அவள் கண்களில் கங்கையின் தோற்றம்..

“ ஹே.. பைரவி.. கொஞ்ச நான் சொன்னத தெளிவா யோசிச்சு பாரு.. அப்ப புரியும்.. இதென்ன சின்னபிள்ள மாதிரி.. அழுதுகிட்டு ” என அவள் முகம் ஏந்த

“ ப்ச்.. போங்க ” என விலகி அமர்ந்து கொண்டாள்.

“ என்னைப் பாரு ”

பார்க்க மாட்டேன் என அமர்ந்திருந்தவளின் முன்பு ஒரு புகைப் படத்தை நீட்டினான்.

விழிகளில் இருந்த ஆகாய கங்கை கரைந்து வானவில்லின் வர்ணஜாலம் தற்போது.

“ சொல்ல மாட்டேன்னு சொன்னீங்க.. ம்ம்.. ” புருவம் உயர்த்தியவளிடம்

“ இப்பவும் நான் சொல்லல…. ” என்றுவிட்டு அமர்ந்தான் அவள் அருகே.

“ இந்த போட்டோ… எப்போ கிடைச்சது.. எப்படி ”

“ எப்போ எனக்கு உன்னைப் பிடிக்கும்னு புரிஞ்சுகிட்டேனோ அன்னிக்கு.. கதிர் கிட்ட இருந்து.. ”

“ அதான் எப்போ.. ”

“ உனக்கும் என்னைப் பிடிக்கும்னு எப்போ தெரிஞ்சுதோ அன்னிக்கு.. ”

இதற்கு பிறகும் அவள் கேட்பாள் ?? வாய்க்கு பூட்டு போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அவனோ காதல் கண்டு கொண்ட நாளிற்கு ஒரு முறை சென்று பார்த்து வந்தான். அத்துவிற்கு வரன் பார்த்திருப்பதைப் பற்றி ஜெயா அவனிடம் சொல்லிய தினம்..

அவனுள் ஏகப்பட்ட குழப்பங்கள்.. ஒரே காரணம் தூரிகாவின் அந்தக் குரல். அது தரும் இன்பம்.. இனம் புரியா ஈர்ப்பு.. ஒரு வேளை காதலோ ? அவனுக்கு அப்படியும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. மொத்தமாக தனக்குள் போட்டு குழப்பி குழம்பி கதிர் வீடு வந்து சேர்ந்தான்.

கதிரும் நிலாவும் கன்னியாகுமரி சென்று வந்த போட்டோ ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். கதிர், நிலா, சூர்யா, மிதுன், அத்து, பைரவி.. மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி சென்று வந்திருந்தனர்.

இவனையும் பார்க்க அழைக்க.. இவன் மறுத்துவிட்டு அம்ர்ந்திருந்தான்.

அவனைப் பொறுந்தவரை அவனுடைய முதல் ஆசான் அவனே ! கற்றுக் கொள்வான் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு முறையும் அவனிடத்து இருந்தே ! குழப்பங்களுக்கெல்லாம் விடை தேடுவான் அவனுள்ளே ! கிடைத்துவிடும்.. அன்றும் அதே யுக்தியுடன் தான் அமர்ந்திருந்தான்.

கண்களை மூடி அமர்ந்திருந்தவனுக்குள் காதல் கதகளி ஆடினாள் அவன் காரிகை !

பைரவியா ?? அவளை அந்தப் பார்வை கொண்டு அவன் பார்த்ததே இல்லை.. அப்படியிருக்க.. ஆனால் அவனில் காதல் அதிகாரத்தை புனைந்திருந்தாள் அவள் அவன் அறியாமலே ! அவன் அகராதியிலும் காதல் எனின் பைரவி.. கண்டு கொண்டிருந்தான்.

வேண்டிய விடை கிட்டிவிட கதிருடன் இணைந்தான். அப்போது விழிகளில் விழுந்தது அந்தப் படம்.

கதிர் ஏதோ சொல்லியிருக்க.. அனைவரும் சிரித்திருந்தனர்.. அதில் அத்துவின் ஆர்ப்பாட்டமான அழகான புன்னகையை அகக் கண்ணில் படம் பிடித்தவளை ரகசியமாய் படம் பிடித்திருந்தது மிதுனின் கேமரா..

அவள் விழிகளைப் படித்தான் அவன். அத்துவைப் பார்த்திருந்த அவளது விழிகளில் நிச்சயம் காதல் தான்..

எப்படி உணர்ந்தான் அந்த நிமிடம் என்பது அவனுக்கே அர்த்தமில்லை. அவனது பைரவிக்கும் அவன் மேல் காதலா ? எப்போதிருந்து ? எப்படி சாத்தியமாயிற்று ? இது எதற்குமே அவனிடம் பதில் இருக்கவில்லை.

பதில் கிடைக்கும் போது கிடைக்கட்டும் என புகைப்படத்தை எடுத்துக் கொண்டான்.. கதிர் பார்த்துவிட்டான்..

அவனிடம் மறைக்கும் எண்ணமுமில்லை.. சொல்லிவிட்டிருந்தான்.. அதை வைத்து தான் அவன் அத்துவை ஓட்டிக் கொண்டிருக்க.. அப்போது பார்த்து பைரவி உள்ளே வர.. அதைக் கேட்டு மயங்க.. காரணம் அவனுக்கு தெரியவில்லை எனினும் அவளுக்காகத் தவித்துப் போனான்.

அங்கிருந்து வந்து ஜெயாவிடம் விடயம் சொல்ல..

“ அம்மா கல்யாணத்துக்கு சம்மதம் ” என்றதும் பிரகாசித்த ஜெயாவின் முகம்

அடுத்து அவன் சொன்ன விடயங்களில் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டார். எது நடந்துவிடுமோ என நாளெல்லாம் பயந்தாரோ அதுவே நடந்துவிட்டது,

அவனும் அன்னையின் முகம் பார்த்தபடி அமர்ந்துவிட்டான். எப்படி அவரை சம்மதிக்க வைப்பது பையுவை ஏற்றுக்கொள்ள வைப்பது என்ற யோசனையில் அவன்..

அவள் வந்துவிட்டால் அத்து அவரை விட்டு பிரிந்துவிடுவானோ என்ற கவலையில் ஜெயா..

ஒரு முறை பைரவியை எங்கோ அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொல்லி ஜெயாவுடன் வர மறுத்திருந்தான் அதுல். அது ஒரு சின்ன விஷயம் தான்.. எனினும் அங்குள்ள தாய் மனதில் தன் மகன் தன்னை அவளுக்காகத் தவிர்த்துவிட்டான் என்று தான் பதிவாகியிருந்தது.

இப்பொழுது கூட அவர் அத்துவின் திருமணத்திற்கு எதிர்ப்பு சொல்லப் போவதில்லை.. ஆனாலும் அகத்தின் ஓரம் ஓர் பயம்.. தவிப்பு.

ஆனால் அதெல்லாம் அடுத்து அத்து சொன்னதில் தடையமில்லாமல் தகர்ந்து போயிருந்தது.

“ ம்மா.. பைரவி நம்ம வீட்டுக்கு நல்ல மருமகளா இருப்பாளான்னு தெரியாது.. ஆனா நிச்சயம் நல்ல மகளா இருப்பா.. உங்களுக்கும் அப்பாவுக்கும்.. ”

ஜெயாவின் அகமும் புறமும் அவள் புறம் சாய்ந்துவிட்டது. அடுத்து அவன் திருமணத்தை ஓராண்டு கழித்து வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்ல போர்க்கொடி தூக்கினார். அவனும் அவன் முடிவிலிருந்து இறங்காமல் இருக்க.. இவர் தாத்தாவிடம் சொல்லி பைரவியின் மாமாவிடம் பேசச் சொன்னார்.

மாரிக்கு தன் மருமகள் தன்னுடனே தன் பக்கத்திலேயே இருக்கப் போகிறாள் என்ற மகிழ்ச்சியில் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார். இது எதுவுமே யாருக்குமே தெரியாது. ஜெயா அவருடைய காயை சத்தமில்லாமல் நகர்த்தியிருந்தார். மாரியை வைத்து அத்துவிற்கு நெருக்கடி கொடுக்க நினைத்தார்.

இது ஒருபுறமிருக்க.. அத்துவின் சித்தத்தின் சிந்தனைத் துளிகளிளெல்லாம் அவன் பைரவியின் பிம்பம் தான். வாரம் ஒரு முறை அவளைப் பார்த்துப் பழகியிருந்தவனுக்கு இந்தப் பயணம் சோதனையாக அமைந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருக்கும் என நினைத்தவனுக்கு சட்டென ஒரு சந்தேகம்.. அவனுக்கு தூரிகாவைப் பெண் பார்த்தது பற்றி ஒரு வேளை அவளுக்குத் தெரிந்திருக்குமோ என.

சில நாட்களாக அவள் அவனை மட்டும் தவிர்த்தது இப்போது உறுத்தியது.. அப்படி மட்டும் அவள் அறிந்திருந்தால் அவள் மனம் எப்படித் தவிக்கும்? அவளுக்காக அவன் தவித்தான்.   

கதிரை வைத்து சூர்யாவிடம் இவன் தூரிகாவுடனான திருமணத்திற்கு மறுப்பு சொன்னதை சொல்ல வைத்தான்.  

அவன் யூகம் மிகச்சரியே !

சூர்யா அவளிடம் விடயம் சொல்ல.. அத்தனை நாள் அவனை தவிர்த்து வந்தவள் அவனைப் பார்க்க தவித்தாள்.

அதன் பின்.. அதன் பின் எல்லாமே அவன் வசம்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய.. சில நொடிகள் அவர்கள் காதல் தவழ்ந்து.. அடியெடுத்து வைத்து வந்த பாதையை எண்ணிக் கழிய.. அதற்குமேல் பைரவியால் பொறுமை காக்க முடியவில்லை.. அவள் கைகள் மருதாணி என்னும் விலங்கிட்டிருக்க..

“ இருங்க வர்றேன்.. ” என்று எழுந்து சென்றவள்.. கைகளிலும் காலின் மேற்பரப்பில் இருந்த மருதாணியையும் கழுவிவிட்டு வந்தாள்.

அவளுக்கு மருதாணியின் மீது அத்தனை மையல். மழைவாசமும் மண்வாசமும் போல் மருதாணிவாசமும் மனதை மயக்குமே!    

அவன் அருகில் அமர்ந்து தன் சிவந்த கரங்களை அத்துவிடம் நீட்ட..

“ ரொம்ப அழகா இருக்கு ” என்றான்..

பொதுவாக ஒருவர் மேல் மற்றொருவருக்கு இருக்கும் அன்பை மருதாணியின் சிவப்போடு ஒப்பிடுவார்கள் இங்கு வைத்துவிட்டதே அவளவன் என்பதால் இன்னும் சிவப்பாக இருந்தது.. அதை ரசித்துக்கொண்டே அவன் தோள்மீது சாய்ந்தவள்.. அவன் கைகளை தன்னுடன் பின்னிக்கொண்டு

“ மாமா… ” என்று அழைத்தாள்.

“ ம்ம்ம்.. ”

மெல்ல சொல்ல ஆரம்பித்தாள்.

தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த

– அகநானூறு

சொல்லிவிட்டு அவன் முகம் பார்க்க அத்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தான்.

“ என்ன மாமா யோசனை ”

“ ம்ம்… உன்னை தமிழ் படிக்க வெச்சது தப்போன்னு யோசிக்குறேன்.. ”

அவள் முறைப்புடன் கிள்ள

“ பின்ன என்னடி… நீ எக்ஸாம்க்கு படிச்சதெல்லாம் இங்க வந்து சொல்லிப் பார்த்தா… ”

அவள் தலையில் அடித்துக் கொள்ளச் செல்ல.. அதை தடுத்தவன் அவளது நெற்றியில் முட்டி

“ இப்போ அது என்ன பாட்டுன்னு சொல்லு ” என்றான்.

“ அது அகநானூறு பாட்டுங்க.. சங்க காலத்துல எப்படிக் கல்யாணம் நடந்ததுன்னு சொல்லிருக்காங்க… ” என்றவள் அதன் விளக்கத்தைச் சொல்லத் தொடங்கினாள்.   

வரிசையாக கால்களை நட்டு.. குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பி.. மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு.. மிக அழகாக அலங்கரிப்பார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்து.. புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும். அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்கும்.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட.. மணமகளை நன் நீராட்டுவர். நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடி நின்ற மணமகளிடம் உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமகளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழும்.

 

அவள் சொல்லச் சொல்ல அவன் சித்தத்தில் சித்தரித்திருந்தான் அவர்களது திருமண வைபோகத்தை.

“ நாமளும் அதே மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாமா… ” ஆவல் ஆர்ப்பரிக்க அவள் கேட்க.. ஆனந்தமாய் தலை அசைத்தான் அவளுடையவன்.

ஒரு சில மணித்துளிகள் காற்றின் மொழி மட்டுமே அங்கு கேட்டது.

பையு மெதுவாக ஆரம்பித்தாள்.

“ நீங்க இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க ”

“ நீயே சொல்லு என்ன பண்ணிட்டு இருக்கேன்… ” என்றவாறு அவள் மீது சாய்ந்து அமர்ந்து கொள்ள

“ நான் இத கேக்கல.. வேலையை விட்டுட்டீங்க.. அத்தை மாமா தாத்தா கூட ஊர்ல இருக்காங்க.. நீங்க இங்க என்ன பண்றீங்க ”

“ கண்டிப்பா சொல்லனுமா ”

“ …. ”

“ அப்போ அத்து சொல்லு.. ”

சொல்லிவிடுவாளா என்ன ? மறுபடியும் நிலவிடம் கதை பேசத் தொடங்க..

“ நேரமாகிடுச்சு.. கீழ போலாமா ? ” என்றான்.

சரியென்று அவள் எழுந்து செல்ல..

“ பைரவி.. ” என மென்மையாய் அழைத்தான்.

 

மங்கையவளின் கரம்பிடிக்க கேட்ட போது

வரமொன்று என்னிடம் கேட்டாள் அவள்

மண்ணின் மைந்தனாய் மாறிடச் சொல்லி

எனையே அவளிடம் தந்துவிடப் போகிறேன்

அவள் கேட்டதையா மறுக்கப் போகிறேன்

அவன் முன்பு வந்து நின்றேன்

மண்ணின் மைந்தனாய் ! அவளின் மன்னவனாய் !    

         

“ நானே எழுதினேன்.. எப்படியிருக்கு.. நல்லா இருக்கா ? ” அவன் கேட்க

மறுப்பாக தலையசைத்தாள்.

“ உன் அளவுக்கு எதிர் பார்க்காத.. ”

படியோரம் நின்றவள்.. ஓடி வந்து அத்துவின் ஆகத்தை ஆக்கிரமித்தாள்..

“ ரொம்ப.. ரொம்ப நல்லா இருக்கு அத்து…. ” என்றவள் சற்றே உந்தி அவனது முன்னெற்றியில் தனது முதல் முத்தத்தை பதித்திருந்தாள். வெட்கம் எல்லாம் விசா இல்லாமல் வெளிநாடு சென்றிருந்தது.

அவளது அழைப்பில் அக ஆழிலிருந்து காதல் ஆர்ப்பரிக்க புன்னகையுடன் அணைத்துக் கொண்டான்.

 

மேகம் கடக்கும்..

       

 

                    

     

 

   

Advertisement