அத்தியாயம் 8

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அமுதனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மலர்விழியும் விடாது அமுதனை சீண்டிக் கொண்டு தான் இருக்கின்றாள். அவனோ அவளை ஒரு பொருட்டாக மதிக்காது தன் வேலையை செய்துக்க கொண்டிருந்தான்.

அன்றும் வளமை போல் ஜாகிங் செல்ல வெளியே வந்தவன் மலர்விழியை காணாது “எங்க போய்ட்டா இவ” அவள் வீட்டின் வாயிலையும், காதவையும் பார்க்க அது பூட்டி இருக்கவே! தோளை உலுக்கியவாறு ஜாகிங் செய்தவன் வீடு வரும் போதும் மலர்விழி வெளியே வராது இருக்க, யோசனையாகவே வீட்டினுள் சென்றான்.

வீட்டின் அழைப்பு மணி அடிக்கவே “வந்துட்டா.. இன்னைக்கி என்ன சமைச்சு கொண்டு வந்திருக்கிறாளோ!” முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கதவை திறக்க, அங்கே அந்த ஏரியாவின் காவலாளி நின்றிருந்தார். வாரத்துக்கு ஒரு தடவை வந்து அமுதனிடம் பணம் பெற்றுக் கொண்டு செல்பவர் இன்றும் வந்திருக்க மலர்விழியை காணாது அமுதனின் மனம் ஏமாறியது.

“என்ன அமுதா மூணு மாசமா தொல்லையா இருந்தவ திடிரென்று காணாமல் போனதும் மனசு இப்படி அடிக்குது. விட்டது தொல்லை னு போய் உன் வேலையை பாரு” தலையை உலுக்கியவன் குளிக்கச் சென்றான்.

கடைக்கு செல்ல வண்டியை எடுக்கும் போது சடாரென பிரேக் போட்டவன் மலர்விழியை காணாது “உனக்கு என்னமோ ஆச்சு அமுதா” மனம் கூவ

“எந்த நாளும் அவ குறுக்கால வந்து தொலைக்கிறா பழக்க தோஷத்துல பிரேக் போட்டேன். நீ அடங்கு” மனதை அடக்கியவன் கடைக்கு கிளம்பினான்.

காரணமே இல்லாமல் அமுதனின் கண்கள் அடிக்கடி பாதையை பாத்திருக்க, “சார் சரக்கு எல்லாம் அப்பவே வந்திருச்சு” என்று விட்டு மேனேஜர் செல்ல தன்னையே நொந்து கொண்டான்.

பாதையை பார்த்ததன் காரணம் திடிரென்று மலர்விழி கடைக்குள் நுழைவதனாலையே! அது அவனின் மனம் அறிந்தாலும் தான் எதற்க்காக அவளின் வரவை எதிர்பார்க்கின்றோம் என்று அவனுக்கு புரியவில்லை.

நொடிக்கொருதடவை அலைபேசியை கையில் எடுத்து குறுந்செய்தி ஏதாவது வந்திருக்க என்று பார்க்க, எதுவும் இல்லை. “இந்த தொல்லை இன்னைக்கி எங்க போனா?” என்றெண்ணியவாறே வாட்ஸப்பை திறந்து மலர்விழியின் ப்ரோபைலை பார்வையிட லாஸ்ட் ஒன்லைன் நேரம் இரவு பத்து மணியை காட்டியது.

{வண்டு வந்து கவர்ந்து செல்லாத படி} வண்ணாத்தி வந்து கவர்ந்து செல்லாத படி என் அமுத{னை}தத்தை மொட்டு விரிக்காமல் காக்கும் மலர்{விழி} நான். என்று அவளின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் இருக்க,

“உண்மையிலயே இவளுக்கு கவிதையெல்லாம் எழுத வருமா? இல்ல காபி, பேஸ்ட் டா? நல்லா தான் இருக்கு” மீண்டும் ஒருதடவை படித்துப் பார்த்தான். 

“அடிக்கடி  வாட்ஸாப்ப் மூலம் பாடல்களும், கவிதைகளும், அவளின் புகைப்படங்களும் அவனுக்கு வந்த வண்ணம் இருக்கும், சாப்பிட்டியா? என்ன செய்ற? என்ற கேள்விகளோடு தான் எங்கே இருக்கேன், என்ன செய்து கொண்டு இருக்கின்றேன் என்ற தகவலையும் பகிர்வாள்.  மூன்று மாத காலமாக நடைமுறையில் இருந்த ஒன்று திடிரென்று காணாமல் போக அமுதனுக்கு எதையோ இழந்த உணர்வு. அதை பற்றி ஆராய்ச்சி செய்ய நேரம் கிடைக்காமல் வேலை அவனை இழுத்துக் கொள்ள இரவு பத்து மணியளவில் தான் வீடு திரும்பினான். அவளின் வீடு இருளில் மூழ்கி இருந்தது. யோசனையாகவே குளித்து விட்டு வந்தவன் மலர்விழி ஏதாவது குறுந்செய்தி அனுப்பி இருக்கின்றாளா என்று பார்க்க நேற்று இரவின் பின் அவள் அலைபேசியை பாவித்தே இருக்கவில்லை என்று அது சொன்னது,

“நெட் பக் போட மறந்து இருக்கும்” என்றவாறு பால்கனி பக்கம் வர மலர்விழியின் அறையில் மின்விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் “ஓஹ் வந்துட்டாளா” ஒரு சிறு புன்னகையினூடாகவே சொல்லிக் கொண்டவன் உள்ளே செல்ல பார்க்க கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு மலர்விழியின் வீட்டுக்கு ஓடினான்.

அழைப்பு மணியை வெகுநேரமாக அடித்தும் திறக்கப் படாததால் தன்னுடைய பால்கனியில் இருந்து அவளுடைய மதில் சுவரில் கால்வைத்து இறங்கி குதித்தவன் கதவை பலமாக தட்ட,  தட்டுத் தடுமாறி கதவை திறந்தாள் மலர்விழி.  

அவளோ நன்றாக குடித்திருந்தாள். “ஹேய் அமுதா.. என்ன இந்த பக்கம் என்ன பார்க்க வந்தியா?” குளறியவாறே சிரிக்க,

“குடிகார பாவி இந்த பழக்கமெல்லாம் இருக்கா? தள்ளு என்னத்த போட்டு உடைச்ச” அவளை நகர்த்தியவாறு உள்ளே வந்தவன் பாட்டில்கள் தாறுமாறாக விழுந்து இருப்பதும் உடைந்து சிதறிய பாட்டில்களை கண்டு தலையில் கை வைத்தவன் 

“காசு, பணம் இருந்தா என்ன வேணாலும், பண்ணலாம், எப்படி வேணாலும் வாழலாம், அப்பனும் கண்டுக்காம விட்டுட்டான். பொண்ணு தன் இஷ்டத்துக்கு ஆடுறா. இவ மட்டும் பையனா பொறந்திருந்தா… எத்துனை பொண்ணுங்க வாழ்க நாசமா இருக்குமோ!” வீடு இருக்கும் நிலைமையில் அவளை திட்ட ஆரம்பித்தான்.

“உனக்கு ஓவராகிருச்சு போய் தூங்கு என்றவன் அவளை இழுத்துக் கொண்டு போய் கட்டிலில் கிடத்த

‘அமுதா நீ ரொம்….ப நல்லவன்டா.. அப்படியே என் அம்மா போல”

“பேசாம தூங்கு” அவளை அதட்டியவன் போர்வையையும்  போர்த்தி விட

“ஐ லவ் யு அமுதா…” கண்களை மூடியிருந்தவள் புன்னகைத்தவாறே சொல்ல

“அது மட்டும் தான் குறைச்சல்” அவளை வசைபாடியவன் அறைக் கதவை சாத்தி விட்டு வெளியே வந்து வாசலை சுத்தம் செய்யலானான்.

“இவ்வளவு சாப்பிட்டு இருக்கா? காலைல இருந்தே இதே வேலையா தான் இருந்திருப்பா போல” எல்லாவற்றையும் ஒதுக்கியவனின் கண்ணில் பட்டது அந்த டயரி “ஓஹ்.. மேடத்துக்கு டயரி எழுதுற பழக்கம் கூட இருக்கோ. அப்படி என்னத்த எழுதி இருப்பா.. பாக்கலாமா? வேண்டாமா?” ஒரு மனம் திற என்று சொல்ல மறுமனம்  வேண்டாம் என்றது. போட்டியில் “திற” வெற்றி பெற மெதுவாக டயரியை திறந்தான் அமுதன்.

“என் அன்பு மகளுக்கு ஆயிரம் முத்தங்களுடன் உன் அம்மா அமுதவல்லி” என்றிருக்க

“ஓஹ்.. அவ அம்மா டயறியா” என்றவன் அதை மூடி மேசையின் மீது வைத்தான். அந்த டயரியில் உள்ளதை படித்திருந்தாலாவது அமுதனின் மலர்விழியின் மீதான பார்வை மாறி இருக்கும். விதி யாரை விட்டது.

இன்று மலர்விழியின் அன்னையின் இறந்தநாள். அமெரிக்காவில் இருந்த வரை அநாதை ஆசிரமங்கங்களுக்கு சென்று, குழந்தைகளோடு நாளை கடப்பவள் இந்தியா  வந்த பின் அதுவும் தான் வெறுக்கும் தந்தையுடனும், அத்தையுடனும் கொஞ்சிக் குலாவி கொண்டிருப்பது அன்னைக்கு செய்யும் பெரும் துரோகமாகவே எண்ணினாள் மலர்விழி. அதை தாங்கும் சக்தி அவளின் சிறு இதயத்துக்கு இல்லாததால் நேற்றிரவு நன்றாக குடித்து விட்டு உறங்கியவள் தான். கண் முழிக்கும் போதெல்லாம் குடிக்கலானாள். கடந்த இரண்டு வருடங்களாக இதுதான் இந்த நாளில் நடக்கிறது. இருளில் வாசலுக்கு வர தடுமாறியவள் கைதவறி உடைத்த பாட்டில்களின் சத்தம் கேட்டு தான் அமுதன் வந்தான்.

காலையில் வெகுநேரம் சென்றுதான் கண்விழித்தாள் மலர்விழி ஒரு துண்டுப் பேப்பரில் “காலை உணவு சூடாக இருக்கு, நல்லா சாப்பிட்டு இன்னும் குடி. அமுதன்” என்று எழுதி அவளின் கண்ணில் படும் படி அவளின் அலைபேசியின் கீழ் வைக்கப் பட்டு இருக்க  “இந்த அக்கறையில் மட்டும் குறைச்சலே! இல்ல” முணுமுணுத்தவாறே “தேங்க்ஸ் அமுதா..” என்று அவனுக்கு குறுந்செய்தியை தட்டி விட்டவள் சாப்பிட்டு விட்டே தூக்கத்தை தொடர்ந்தாள்.

அடுத்து வந்த இரண்டு நாளும் காலேஜ் வேலைகள் இழுத்துக் கொள்ள அமுதனை சீண்ட மலர்விழிக்கு நேரம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரத்னவேலின் பி.ஏ. மலர்விழியை வீட்டுக்கு வரும் படி தந்தை சொன்னதாக தகவல் சொல்லி இருந்தார். 

“காலங் காத்தால போன் பண்ணி உடனே அப்பா உங்கள பாக்கணும் என்று மணி அங்கிள் சொன்னாரே என்ன விஷயமாக இருக்கும்” என்ற சிந்தனையினூடாகவே தந்தையை காண வீடு வந்தாள் மலர்விழி.

என்றும் அவ்வீட்டின் முன் கோசம் போட ஒரு கூட்டம் இருக்க, இன்று அனைவரும் டி சாப்பிட்டவாறே தங்களுக்குள் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். 

அன்னை இறந்த பின் ஹாஸ்டல் வாசம் தான். யாரிடமும் ஒட்டப் பிடிக்காமல் ஒதுங்க அவளை சீண்டும் கூட்டம் அதிகரித்தது. அப்படி வம்பு செய்த ஒருவன் அன்னையை பற்றி ஏதோ சொல்லி விட தாறுமாறாக அடித்து அவன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக  இருக்கும் போது மகளை  காக்கவென அமெரிக்கா அனுப்பி வைத்தார் ரத்னவேல். அதன் பின் அங்கேயே படித்து பட்டம் பெற்று பெண்சிங்கமாக ஊர் திரும்பியவள் இரண்டு வருடங்களாகத்தான் காலேஜ் பொறுப்பை பார்த்துக் கொள்கின்றாள்.

அன்னையோடு தான் அந்த வீட்டில் கழித்த ஒவ்வொரு மகிழ்ச்சியான பொழுதையும் நினைத்துப் பார்த்து மகிழ்ந்தவாறே உள்ளே நுழைந்தவள், தந்தை அமர்ந்திருப்பதைக் கண்டு “என்ன இன்னைக்கி கட்ச்சி வேல ஏதும் இல்லையா? வீட்டுல இருக்குறாரு” என்ற கேள்வியை பார்வையில் தேக்கி வைத்தவாறு தந்தையின் பி.ஏ. மணியை ஏறிட்டாள் மலர்விழி.

“என்னமா.. உன்ன பார்க்க அப்பொய்ன்ட்மென்ட் வாங்க வேண்டி இருக்கே! எல்லாரும் உன் அப்பாவை பார்க்க தவம் கிடக்குறாங்க, ஆனா நான் உன்ன பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்” சந்தோசம் பொங்கும் குரலில் மகளை அணைத்து உச்சி முகர்ந்தவாறே! “நல்லா இருக்கியா? பார்த்து எவ்வளவோ நாளாகுது. வீட்டுல தங்க பிடிக்கல ஓகே, கீதா கூட இருக்கலாம்ல”

“ஐயோ டேட் அந்த லேடி ஹிட்லர் கூட என்ன தங்க சொல்லுறீங்களே!” அவர்  இவ்வளவு நேரம் காட்டிய பாசத்தை எல்லாம் ஒதுக்கியவள் கீதாவை பற்றி சொல்லவும் அதை பிடித்துக் கொள்ள

“தனியா தைரியமா  உன் அத்த போலயே இருக்க சந்தோசம். ஆனா அப்படியே இருக்க முடியாதே” பேச்சில் புதிர் போட

“என்ன விஷயம் டேட்” உடனே கேள்விக்கு தாவினாள் மகள்.

“எல்லாம் நல்ல விஷயம் தான் பாப்பா” மணி முந்திக் கொள்ள

“மணி…” என்று அவரை அடக்கிய ரத்னவேல் “கீதாவும் வரட்டும்” என்று மலர்விழியை உபசரிக்கும் வேலையில் இறங்கினார்.

“என்ன அப்பாவும் மகளும் நான் வர வரைக்கும் வைட் பண்ணாம சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றவாறே செல்வத்தோடு உள்ளே நுழைந்தாள் கீதாராணி.

“வா கீதா.. என் பொண்ணு பசி தாங்க மாடல்ல” என்றவாறே எழுந்து தங்கையை வரவேற்றார் ரத்னவேல்.

அவர்களை குரோதமாக பார்த்திருந்த மலர்விழியோ! “உலகத்துல இல்லாத அண்ணன், தங்கை இதுங்கள எப்படி பிரிக்கிறது னு ஒன்னும் புரியல” பெருமூச்சு விட்டவாறே சாப்பாட்டை வாயில் திணித்தாள். 

“என்ன விஷயம் அண்ணா எதுக்கு வீட்டுக்கு வர சொன்ன” கீதாவும் கைக்கடிகாரத்தை பார்த்தவாறு.

“என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம் னு முடிவெடுத்து இருக்கேன்” ரத்னவேல் சொல்லி முடிக்கும் போதே மலர்விழிக்கு புரையேறியது.

“பாத்து, பாத்து” அத்தையும், தந்தையும் அவளை தாங்கி நீர் புகட்ட அது தொண்டையின் உள்ளே இறங்காது இருமாளோடு அவள் சாப்பிட்ட மொத்தமும் வெளியே வந்தது.

“என்னது கல்யாணமா? அதுக்கு இப்போ என்ன அவசரம்” இருமியவாறே மலர்

“உனக்கு இருபத்தி ஆறு முடிஞ்சி இருப்பத்தி ஏழு நடக்குது, கல்யாண யோகம் இருப்பத்தியேழுல தான்னு நம்ம குடும்ப ஜோசியர் சொன்னதுல அமைதியா இருந்தேன். இனியும் லேட் பண்ண முடியாது” ரத்னவேல் சொல்ல

‘என்ன மலர் கல்யாணத்துக்கு மாப்பிள பாக்குறானு சொன்னதுக்கே வாந்தி எடுக்குற?” கீதா கிண்டலடிக்க

“சொன்ன செய்தியே ஷாக் அடிக்கிற செய்திதான். ஆனாலும் உங்க ரெண்டு பேர் கையாலையும் தண்ணி குடிக்க நேர்ந்த கொடும இருக்கே! அதன் வாந்தி வந்தது” மனதுக்குள்ளேயே! பொறுமியவள் அமைதியாக சென்று தன்னை சுத்தம் செய்துக்க கொண்டு வந்தாள்.

“மாப்புள யாரு? என்ன செய்கிறார்?” கீதா வினவ

“இண்டஸ்ட்ரியலிஸ்ட் சாம்பசிவத்தோடு ஒரே பையன், லண்டன் ரிட்டன்” ரத்னவேல் பூரிப்போடு சொல்ல

“புடிச்சாலும் புடிச்ச புளியங்கொம்பா  தான் புடிச்சிருக்கா” கீதாவும் பெருமைப் பட

“என்ன டேட் ரொம்ப பணக்கார இடமா தெரியுது, கல்யாணத்துக்கு பிறகு நாம சொல்லுறத கேப்பாங்களா?”

“என்னமா சொல்லுற?”

‘இல்ல நாம சொல்லுறத கேட்டு கிட்டு இருக்கணும் னா நம்மள விட வசதி குறைஞ்ச இடமா பாத்து கல்யாணம் பண்ணனும். இல்லனா எங்களை ஆட விட்டுடுவாங்கா” தந்தை என்றோ சொன்ன அதே வரிகளை அவருக்கு நியாபகப் படுத்தினாள் மகள்.

“கரெக்ட்டு. நான் என்ன சும்மாவா சொன்னேன் பாப்பாக்கு உடம்பெல்லாம் மூளைன்னு. பொண்ண கட்டிக் கொடுத்தா மாப்புள வீட்டாருக்கு அடங்கி இருக்கணும். அதுவே வசதி கொறஞ்ச இடம் னா அவங்க அடங்கி இருப்பாங்கல்ல. ஆனாலும் நம்ம கீதாம்மா கல்யாணம் காட்ச்சி னு பண்ணி ஒரு பையன பெத்திருந்தா நம்ம பாப்பாவுக்கே கட்டி வச்சி இருக்கலாம்” அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த செல்வம் தன் பாட்டுக்கு புலம்ப

“சபாஷ் செல்வம் அங்கிள்” என்று விசில் அடிக்கணும் போல தோன்றியது மலர்விழிக்கு

ஆனால் கீதாவுக்கு தான் பெற்றேடுத்த பிள்ளைகளை பற்றி நினைவில் இருந்தால் தானே! “செல்வம்..” என்று அவரை அடக்கியவள்

“புரியாம பேசாத மலர். ஒரு பொண்ணு நினச்சா எதுவேனாலும் பண்ணலாம். புருஷன கைக்குள்ள போட தெரியாதா” உதடு வளைத்து கேலிப் புன்னகையை சிந்த அவள் கண்களுக்குள் சரவணகுமாரன் வந்து போனான்.

“என்ன கீதா பழைய நினைவுகளா?” ரத்னவேல் கேக்க தலையை உலுக்கிக் கொண்டவள்

“இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்” என்று விட்டு விடை பெற

“என்னை மீறி நடந்துடுமா?” என்று மனதுக்குள் எண்ணியவாறே பொய்யாய் புன்னகைத்தாள் மலர்.

“மலர் மாப்புள பிசினஸ் விஷயமா சிங்கப்பூர் போய் இருக்குறாரு அடுத்த வாரம் தான் வராரு. அவர் வந்ததும் ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசுங்க” சொல்லி விட்டு ரத்னவேல் எழுந்து செல்ல,

மணி வந்து ஒரு கவரை கொடுத்து விட்டு “மாப்புள போட்டோ, போன் நம்பர், மற்ற எல்லா விவரமும் இருக்கு” என்று விட்டு செல்ல

“இந்த அமுதனை கல்யாணம் பண்ணி இவங்க முகத்துல கரிய பூசணும் னு பாத்தா.. நான் நினைச்சது எதுவும் நடக்காது போல இருக்கே!” தனக்குள் பொறுமியவள் கையில் இருந்த கவரோடு வண்டியில் ஏறி வண்டியை கிளம்பினாள். 

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ரிஷியை எப்படியாவது கண்டு பிடித்து, அவனையே மணந்து, அண்ணனுக்கும், தங்கைக்கும் பாடம் நடாத்த நினைத்துக் கொண்டிருக்க, ரிஷியின் இறப்புச்செய்தி அவளை பலமாக தாக்கியது. வாழ்க்கையில் கல்யாணம் என்பதை சிந்தித்தும் பார்க்காதிருந்தவளுக்கு ரிஷியை போலவே இருக்கும் அமுதனை கண்ட பின் தான் தான் நினைத்தது நடக்க இன்னும் வாய்ப்பிருக்கின்றது என்று முடிவு செய்தாள். ரிஷியின் இறப்புக்கு தன் தந்தைதான் காரணம் என்று அறிந்தால் அவள் அமுதனை ஒருநாளும் நெருங்க முயற்சி செய்திருக்க மாட்டாள்.

ரிஷியாக இருந்திருந்தால் தான் மலர்விழி என்று சொல்லி இருப்பாள், இவன் அமுதன் என்பதால் சொல்லாமல் அணுக, ப்ரதீபனின் மூலம் அறிந்துக் கொண்டு அமுதனும் அவளை தூற்றிக் கொண்டிருக்க, அவனை சீண்டிக் கொண்டிருந்தாள் மலர்.

தன் மனதில் மலர்விழி அடியெடுத்து விட்டாள் என்று அறியாத அமுதன் அன்று நடந்த சம்பவத்தின் பின்னும் மலர் தன்னை நெருங்க விடாது கவனமாக இருந்தான். தன் மனதை அறிந்த பின் மலர்விழியை ஏற்றுக் கொள்வானா? அமுதன்.

கடந்த மூன்று மாதத்தில் ப்ரதீபனின் வாழ்வில் புயல் சுழற்றி அடித்திருக்க, தியாவோடு அவன் உறவில் பெரிய  விரிசல் மாத்திரமல்லாது சீனாப் பெரும் சுவர் இருவருக்கும் நடுவில் கட்டப்பட்டிருக்க, இருவரில் ஒருவரும் இறங்கி வராது தன்னிலையில் பிடிவாதமாக நின்றிருந்தனர்.