அத்தியாயம் 16

கப்பல் போல் ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றதும் சத்யமூர்த்தி எட்டிப் பார்க்க சாருலதா இறங்கி கொண்டிருந்தாள்.

காலேஜில் நடந்தவற்றை வீட்டுக்கு வந்த உடனே அறிந்துக் கொண்டவர் “என்ன பண்ணலாம்? என்றும்  பொறுமையா இருக்கும் படி வீட்டில் உள்ளோரை அமைதி படுத்தி இருக்க சாருலதாவை கண்டு புருவம் சுருக்கினார்.

லதாவோடு அருணும் வர சத்யா அவனை கொள்ளும் வெறியில் இருந்தான். விட்டால் அடித்து விடுவான் என்றிருக்க செல்வராஜே அவனை பொறுமையாக இருக்கும் படி சொல்லி தன் கைப் பிடிக்குள்ளேயே வைத்திருக்க

உள்ளே வந்ததுமில்லாது யார் அனுமதியையும் கேக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள்

“மல்லிகை இங்க வாம்மா” என்று  தெனாவட்டாக அழைக்க ஆண்களுக்கோ என்ன “பொம்பள இவ” என்ற எண்ணமே!

கனகாம்பாளும், குறிஞ்சியும், கோமளவள்ளியும் வெளியே வர மல்லிகை வரவில்லை.

கனகாம்பாளையும் குறிஞ்சியையும், மாறி மாறி பார்த்தவள் “இதுல யாரு என் சம்பந்தி” என்று கேக்க

அப்போ நடந்த அநியாயத்த  இந்த அம்மா கல்யாணமா ஏத்துக்க கிட்டு பேச தான் வந்திருக்காங்களா என்ற எண்ணம் தோன்ற

“மல்லியோட அம்மா நான் தான்” என்று கனகாம்பாள் முன் வர

“இப்படி வந்து உக்காருங்க நான் உங்க கூடத்தான் பேசணும்” என்று சோபாவை கை காட்ட

அங்கே ஆண்கள் மூவர் இருக்க, ஒரு மரியாதைக்காவது அவர்கள் யார் என்று கேக்காமல் தனது பையன் பண்ணது தப்பே இல்லாதது போல் தெனாவட்டாக அமர்ந்து வீட்டாளையே அமரும் படி சொன்ன அவளை என்ன சொல்வது.

அருண் தாலி கட்டின உடனே அருணை விசாரித்தவள் மல்லியை பற்றி அறிந்துக் கொண்டு, அவள் குடும்பத்தை பற்றி விசாரிக்க சத்யதேவை பற்றி ஆஹா, ஒஹோனு புகழ திருப்தியானவள். பெரிதாக ஒன்னும் இல்லாவிட்டாலும் தான் எதிர் பார்த்த படி வரதட்சணை கிடைக்கும் என்று எண்ணி அருணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

கனகாம்பாள் தனது அண்ணனை பார்க்க அவர் அமர்ந்து பேசும் படி செய்கை செய்ய அதை கண்டும் காணாது போல் இருந்தாள் லதா.

“இங்க பாருங்க சம்பந்தியம்மா என் பையன் ஆசைப்பட்டு தாலிய கட்டிட்டான். நடந்தது நடந்து போச்சு அதை மாத்த முடியாது. நடக்க வேண்டியதை பேசுவோமா?” என்று சொன்னவள் தொடர்ந்து

“நான் கோயம்புத்தூர்ல வசதியான குடும்பம் லதா குரூப் ஒப்பி கம்பனி எங்களளுடையது. மூன்று பையன் இவன் மூத்தவன். ஊர்ல பொண்ணும் பார்த்து, சம்பந்தம் பேசி வச்சிருந்தேன், நூறு பவுன் நகை, பாத்திர பண்டம், மாப்பிளைக்கு கார், கல்யாண செலவு மொத்தமா அவங்களே பண்ணுறதா தான் சொன்னாங்க அவங்களே எல்லாம் பண்ணா நம்ம மானம் மரியாதை என்னாவுறது அதனால பாதிய நான் ஏத்துக்கிட்டேன்.  எல்லாம் கூடி வார நேரத்துல இவன் இப்படி பண்ணிட்டான். முதல்லயே சொல்லி இருந்தா முறை படி நடந்திருக்கும்”

அவங்க தாரதா சொன்னதை நீங்க பண்ணிடுங்க அடுத்த முகூர்த்தத்திலேயே, ஊரக் கூட்டி ஜாம் ஜாம்னு கல்யாணத்த மறு படியும் நடத்திடுவோம்” என்று தான் பேச  வந்ததை சொல்ல தனக்கு மல்லி கிடைத்தால் போதும் என்று அன்னையை பற்றி நன்கு அறிந்ததால் அருண் அமைதி காக்க

சத்யதேவ் கை முட்டியை மடக்க,

மற்றவர்கள் கோவத்தில் பொறுமை காக்க,

கோமளவள்ளி எகிறினாள்.

“என்னது வரதட்சணையா? அதுவும் நடந்தது முடிஞ்ச கல்யாணத்துக்கு, உன் பையன் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினா தெரியும் உனக்கு” என்று வள்ளி ஆவேசமாக கத்த

“மொதல்ல அத பண்ணி இருக்கணும் அத விட்டுட்டு வீட்டுக்குள்ள இருந்து அழுது கிட்டு இருக்கீங்க” சாதாரண குரலிலேயே லதா

“நான் சொன்னது சொன்னது தான் உங்க பொண்ண என் பையனோடு வாழ வைக்கணும்னு எண்ணம் இருந்தா வரதட்சனைனு நினைக்காம சீர் செய்வதாக நெனச்சி கொடுங்க. இல்ல தாலிய கழட்டி கொடுங்க. அது ஒன்னும் மஞ்ச கயிறு இல்ல போனா போகட்டும் பொண்ணு கழுத்தில் தொங்கட்டும்ன்னு விட்டுட, அது எங்க குடும்பத்த தாலி.

வாழாவெட்டினு உங்க பொண்ணைத்தான் ஊர் உலகம் சொல்லும் என் பையன இல்ல. முள்ளுமேல சேலை விழுந்தாலும், சேலை மேல முள்ளு விழுந்தாலும் கஷ்டம் என்னமோ சேலைக்குத்தான். அத புரிஞ்சி நடந்து கோங்க. இன்னொரு பொண்ணு இருக்கால்ல அவளை எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க போறீங்க? ஊரு உலகம் என்ன பேசும் கொஞ்சமாவது யோசிச்சு பேசுங்க” என்று கோமளவள்ளிக்கு சொல்வது போல, எங்கே அடித்தால் சரியாக அடி விழும்னு கனகாம்பாளை பார்த்தவாறே கூறியவள்

கோயம்புத்தூர் வந்து எங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சு பாருங்க. அப்பொறம் முடிவு பண்ணுங்க நான் கேட்டது நியாயமா இல்லையானு. அப்போ நாங்க வரோம்” என்றவள் அருணோடு கிளம்பிச் செல்ல  கனகாம்பாள் புலம்ப ஆரம்பித்தார்.

“ஐயோ என் பொண்ணு வாழ்க என்ன ஆகுமோ” என்றவாறே கனகாம்பாள் மயங்கி விழ உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

என்ன செய்வது என்று சத்யதேவ் கலங்க செல்வராஜும், சத்யமூர்த்தியும் பேசி இதற்க்கு ஒரே தீர்வு மல்லியின் திருமணம் என்று முடிவு செய்து சத்யதேவுக்கு சொல்லி விட்டு கோயம்புத்தூர் சென்று அருண் பற்றியும், சாருலதாவின் குடும்பத்தை பற்றியும் விசாரித்தவர்கள் திருப்தியாக திரும்பினார்.  

இரண்டு நாள் கழித்து கனகாம்பாளை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். மல்லிகை அழுத்தவாறே இருக்க அவளோடு சேர்ந்து முல்லையும் அழுதுகொண்டே இருக்க

“ஒன்னா பொறந்ததாலேயோ என்னமோ ஒன்னாவே இருப்பாளுங்க, ஒரே மாதிரியே யோசிப்பாளுங்க ரெண்டு போரையும் ஒரே இடத்துல கட்டிக்க கொடுக்குனும்னு ஆச பட்டேன். இவங்க ரெண்டு பேர் விஷயத்தில மட்டும் நான் நெனச்சது நடக்காமலேயே போகுது” என்று இருவரையும் கட்டிக்க கொண்டு அழ குறிஞ்சியால் அவர்களை தேற்றவே முடியவில்லை.

மரகதம் குடும்பத்தோடு பாரின்னுக்கு சுற்றுலா சென்றிருக்க நடந்தவைகள் அவர்களுக்கு பகிர படவில்லை.  

கல்யாணத்தை பேசி முடிக்கலாம் என்று சாருலதாவின் வீட்டுக்கு செல்வராஜ், சத்யதேவ் உற்பட கனகாம்பாளும், குறிஞ்சி, சத்யமூர்த்தி சென்றிருக்க கோமளவள்ளி மறுத்து விட்டாள்.

அங்கே சென்றவர்களை நல்ல முறையிலேயே வரவேற்றனர் லதாவின் குடும்பத்தினர். அருண் தாலி கட்டியதை மாத்திரம் வீட்டாருக்கு சொல்லி இருந்த சாருலதா வரதட்சணையை பற்றி பேசியதை சொல்லாமல் மறைத்து விட்டாள்.

கல்யாணத்தை பேசி உறுதி படுத்திய பின் மல்லியை பார்க்கவேண்டும் என்று பரமு பாட்டி ஆசைப் பட அவர்களும் குடும்பம் சகிதமாக சென்னை வர அங்கே முல்லையை கண்டவர்கள் வருணுக்கு பேசி முடிக்கலாமா  என்று நேரடியாக கேக்க கனகாம்பாள் மனம் குளிர்ந்து, நடந்தவைகளை மறந்து யாருடனும் கலந்தாலோசிக்காமல் சரி என்று சொல்ல

அருணுக்கு கேட்டது போல் வருணுக்கும் சாருலதா வரதட்சணை கேப்பாள் என்று சத்யதேவுக்கு, சத்யமூர்த்தி சொல்ல ஏற்கனவே அதிக வட்டிக்கு கடன் வாங்கிய இடத்தில் கேட்டு வேறு வழி இல்லாது அன்னையின் சந்தோஷத்துக்காக அதிக வட்டிக்கு வாங்கியவன் கல்யாணத்தை நல்ல முறையில் நடாத்தினான்.

இதை சாருலதா கூட எதிர் பார்க்கவில்லை. அவள் அருணுக்கு வரதட்சணை கேட்டது குடும்பத்தாருக்கு தெரியாததால், வருணுக்கும், முல்லைக்கு வந்த இடத்தில் சம்பந்தம்  பேசி முடிக்க அவர்களின் முன் வரதட்சணையை பற்றி பேச முடியாமல் அமைதி காக்க, அவள் நினைத்ததை விட நல்ல முறையில் சத்யதேவ் கல்யாணத்தை செய்து முடிக்க இன்னும் கேட்டு இருக்கணுமோ என்ற எண்ணமே சாருலதாவுக்கு.

தான் நினைத்தது போல் தனது இரட்டைகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடந்த நிம்மதியில் இருந்தார்  கனகாம்பாள்.

“வட்டிக்கு எடுக்காமல் முருகவேலிடம் கேக்கலாம் என்று செல்வராஜ் சொன்ன போதும், அந்நேரம் முருகவேலின் மேல் இருந்த அதிதிருப்தியால் சத்யதேவ் மறுத்து விட செல்வராஜும் முருகவேலிடம் பேசவில்லை.

இதையறியாத முருகவேல் சத்யதேவ் நல்ல நிலைமைக்கு வந்து விட்டான் என்றே எண்ணினான்.

கல்யாணம் ஆகி இரட்டையர்கள் எந்த ஒரு நல்லது கெட்டதுக்கும் தாய் வீட்டுக்கு வரவில்லை. இப்படியே ஒரு வருடம் செல்ல சாருலதா போன் செய்து கனகாம்பாளை அவசரமாக வரும் படி உத்தரவிடாத குறையாக போனில் சொல்ல என்ன ஏதோ என்று சத்யதேவோடு கிளம்பியவர் சந்தோசமான விஷயமாக இருக்கும் என்று எண்ணினார். ஆனால் அங்கே சென்றவர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சியே!

“வணக்கம் சம்பந்தி”

“வாங்க, வாங்க உக்காருங்க” சிவதாஸ் கனகாம்பாளையும் சத்யதேவையும் அழைத்து அமரச்சொல்ல பரமு பாட்டியும், சிவஞானம் தாத்தாவும் வந்து நலம் விசாரித்தனர். சாருலதாவை காணவில்லை.

“சம்பந்தியம்மா அவசரமாக வர சொல்லி போன் பண்ணி இருந்தாங்க, என்ன விஷயம் ஏதாச்சும் நல்ல விஷயமா?” கனகாம்பாள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே மல்லிகையும் , முல்லையும் உள்ளே இருந்து கனகாம்பாள் பேசியதை கேட்டவாறே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறே வர மற்றவர்கள் யோசனைக்குள்ளானார்கள்.

கனகாம்பாளையும் சத்யதேவையும் வரச்சொல்லிய சாருலதா ஆற மாறவே வந்து சேர்ந்தாள். வந்தவர்களை “வாங்க” என்ற அழைப்பு கூட இல்லாது நேராக விசயத்துக்கு வந்தாள்.

“உங்களுக்கு இரட்டைகள் பிறந்தப்ப குழந்தைகளுக்கு ஏதும் குறை இருப்பதாக டாக்டர் சொன்னாரா?” அடி, நுனி இல்லாத சாருலதாவின் பேச்சு யாருக்கும் புரியவில்லை.

யோசனையாகவே கனகாம்பாள் “இல்லை” என தலையாட்ட சாருலதாவின் மூன்று பசங்களும் வந்து சேர்ந்தனர்.

“அப்போ கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகுது ரெண்டு பேர்ல ஒருத்தருமே உண்டாகள. அதான் கேட்டேன்” என்று அமைதியாக சொல்ல

“என்ன பேச்சு இது” என்ற எண்ணமே அனைவருக்கும்.

அருணும், வருணும் யோசனையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள தருண் பேசினான் “என்னம்மா நீ குழந்தை பெத்துக்கிறது அவங்க அவங்க விருப்பம், கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது, வயசான மாதிரி  கேக்குற”

அவனை முறைத்த சாருலதா “இது உன் அண்ணனுங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம், என்ன செய்யணும்னு எனக்கு தெரியும், உனக்கு நான் ஓவரா செல்லம் கொடுக்குறதால எல்லா விசயத்திலேயும் தலையிடாத” என்றவள் கனகாம்பாளின் பக்கம் திரும்பி

“உங்க பொண்ணுங்க என் பசங்களுக்கு வேணாம் அத்துவிட்டுடலாம்”

“அம்மா” “சம்பந்தி” “லதா” என்று அனைவரினதும் குரல் ஒரே சேர ஒலிக்க

“நாங்க இன்னமும் எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்ல” பேசியது வருண். அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்க்க அருணும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.  

இது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருக்க கனகாம்பாளுக்கு நெஞ்சுவலியே வந்திடும் போல் இருந்தது.  

“ஓஹ் அப்படியா?” சர்வசாதாரணமாக லதா கேட்டாலும் அவள் நன்றாகவே அறிந்ததுதான் அதை அவர்களே சொல்ல வேண்டும் என்பதாலேயே இப்படி பேசினாள்.

“வாழ்க்கையை தொடங்காம இருக்க ஏதாச்சும் முக்கியமான காரணம் இருக்கா?” இந்த கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.

“பாத்தீங்களா? சம்பந்தி என் பசங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி வச்சது அவங்க சந்தோசமா வாழ்ரத்துக்கு, ஆனா அவங்க இன்னும் வாழ்க்கையே ஆரம்பிக்கலயாம். வருமானத்துல குறைச்சலா? இல்ல படிக்கணும்முனு தள்ளி போட்டு இருக்காங்களா? நீங்களே உங்க பொண்ணுங்க கிட்ட கேட்டு சொல்லுங்க. எனக்கு என் பசங்க வாழ்க முக்கியம். நானும் பேரன் பேத்தியை பாக்க வேணாமா?”  சாருலதா மருமகள்களிடம்  கேள்வி கேக்கும் பொறுப்பை பெற்ற அன்னையிடம் கொடுத்து  தான் ஒரு நல்ல மாமியார் என பெயர் எடுத்தாள்.

அருண் பண்ண காரியத்தில் அவன் மேல் வெறுப்பில் இருந்த மல்லிகை.  சாருலதா வரதட்சணை கேட்டதையும், அருண் அமைதியாக இருந்ததாலையும் கல்யாணம் ஆனாலும், அவனிடம் முகம் கொடுத்துக் கூட பேச வில்லை. மல்லிகை தன் அருகில் இருப்பதே போதும் என்று எண்ணிய அருண், அவள் தன்னை புரிந்துக் கொள்ளட்டும் என்று காத்திருக்க

அருண் பண்ணிய காரியத்தால் தன் இரட்டை உடைந்தழுததை பார்த்த முல்லை அருணை வெறுத்தாள். சாருலதாவின் பேச்சால் முழு குடும்பமே இப்படித்தான் என்று கணித்தவளின் சம்மதம் இல்லாமல் வருணோடு திருமணத்தை பண்ணி வைக்க அவனிடமிருந்து ஒதுங்கினாள்.  

முலையை பார்த்த உடனே பிடித்து போனாலும் தன்னிடமிருந்து ஒதுங்கிப் போகிறவளை தன் வழிக்கு கொண்டு வர முடியாமல் தவித்தான் வருண்.

சாருலதாவின் கழுகுக்கு கண்ணுக்கு இவர்களின் ஒட்டாத வாழ்க்கை தெளிவாகவே விழுந்தது. ஒருவருடம் சென்றும் அவர்களிடத்தில் எந்த இணக்கமும் இல்லை என்ற உடன் கனகாம்பாளை அழைத்தது சபையிலே பேசினாள்.

சாருலதாவுக்கு நாசூக்காக பேசி பழக்கமில்லை எல்லாம் அதிரடிதான் அதில் மற்றவர்களின் மனம் காயம் அடைந்தாலும் அதை பற்றி கவலை அடையமாட்டாள். நகத்தால் கிள்ளுவதை கூட கோடாலியால் வெட்டும் ரகம்.

அழுதே விட்டார் கனகாம்பாள். “நான் என்ன பாவம் பண்ணேனோ இப்படி எல்லாம் என் காதுல கேக்க வேண்டி இருக்கே” என்றவர் முல்லையிடம் வந்து

“உன் கிட்ட கேக்காம கல்யாணம் பண்ணதாலயா இப்படி நடந்து  கிட்ட, இல்ல உன் கூட பிறந்தவள் சொல்லி நடந்து கிட்டியா?”

மல்லியிடம் திரும்பி உன் கழுத்துல விருப்பமில்லாம தாலி கட்டிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக இப்படி பண்ணியா? விருப்பம் இல்லனா அன்னைக்கி சம்பந்தி வந்து கேட்டப்போவே தாலிய கழட்டி கொடுத்து இருந்தினா, நான் சந்தோசப் பட்டு இருப்பேன். அன்னைக்கி அமைதியா  இருந்து கல்யாணத்த பண்ணிக்க கிட்டு இந்த குடும்பத்தை பலி வாங்கணும்னு இப்படி பண்ணுறியா?

இரண்டு பேரையும் இழுத்து ஒரு புறம் நிக்க வைத்து ” ரெண்டு பேரும் ஒரே வீட்டுல வாழ போறீங்க, ஒருத்தருக்குகொருத்தர் உறுதுணையா இருப்பீங்க என்று  சந்தோசமா தானே கல்யாணம் பண்ணி வச்சேன். இதுவே நாங்க பாத்து கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இப்படி நடந்து கிட்டு இருப்பீர்களா? என் பையன் எல்லா சீரையும் சரியாதான் செஞ்சான்.  என்ன கொர வச்சேன்?

மல்லியின் பக்கம் திரும்பி உன்மேல ஆச பட்ட ஒரே காரணுத்துக்காக தாலிய கட்டிட்டாரு. நீ ஒதுக்கி வச்சத இன்னைக்கி வர வெளியே சொல்லாம அமைதியா தானே இருக்குறாரு. இதுவே வேற ஒருத்தரா இருந்தா உன் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்குமில்ல? ஏன் யோசிக்க மாட்டேங்குற. அழுதவாறே அவர் பேச இரட்டையர்கள் அமைதி காத்தனர்.  

இவ்வளவு நேரமும் அங்கே நடப்பவைகளை அமைதியாக பாத்திருந்த சத்யதேவ் தங்கைகளின் அருகில் வந்து “இது உங்க வாழ்க, அத சந்தோசமா வாழ்றதும், சிக்கலாக்கிறதும் உங்க கைல தான் இருக்கு. எனக்கு என் அம்மா சந்தோசம் ரொம்ப முக்கியம், அவங்க அழுறத என்னால என்னைக்குமே பக்க முடியாது. பொண்ணுங்களுக்கு கல்யாணத்து பிறகு பொறந்த வீட்டை விட புகுந்த வீடுதான் எல்லாமே. அவங்க மானம், மரியாதை வார மருமக கையிலதான் இருக்கு. நீங்க இங்க வாழுற சந்தோசமான வாழ்க்கைதான் எங்களுக்கு நிம்மதியை தரும். புரிஞ்சி நடந்துக்குவீங்க என்று நம்புறேன். உங்களுக்கு ஏதாச்சும் கஷ்டம்னா? உதவினா அண்ணனா உங்க முன்ன வந்து நிப்பேன்” என்றவன் அவர்களின் கையை தட்டிக் கொடுத்து விட்டு அனைவருக்கும் வணக்கம் வைத்தவன் கனகாம்பாளோடு வெளியேறினான்.

அதன்  பின் கனகாம்பாள் மல்லி முல்லையிடம் போனில் கூட பேசவில்லை. அவர்கள் கருவுற்ற செய்தி கேட்ட பின்னே போய் பார்த்து விட்டு வந்தார். பிரசவத்துக்கு அன்னை வீடு வரவில்லை. முருகவேலை போல் மற்ற இரு மருமகன்களும் மகள்களை தாங்குவதே சந்தோசமாக உணர்ந்தார். முல்லைக்கு ஒரு மகனும் மல்லிகைக்கு ஒரு மகளும் பிறக்கவே போய் பார்த்து விட்டு வந்தவர் வீட்டுக்கு வரும் படி அழைக்க சாருலதாவே பதில் சொன்னாள்.

“உங்க பொண்ணுங்கள என் பொண்ணா பாத்துக்கிறேன்” அனுப்ப மாட்டேன் என்பதை யாராலும்  இப்படி சொல்லி இருக்க முடியாது.

“ஹப்பா…. அவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? செல்வி ஆச்சரியமாக கண்ணை விரித்து கேக்க

“தெரியலையே! நல்லவங்களா இருந்தா நல்லா இருக்கும்” என்று  செல்வியிடம் சொன்னவரின் மனமோ சத்யாவின் திடீர் திருமணத்தை பற்றி சாருலதாவுக்கு   போன் மூலம் சொல்லவென அழைத்த போது அவள் பேசியவைகள் நியாபகத்தில் வந்தது.