அத்தியாயம் 1
முன்னொரு காலத்தில் காட்டுல ஒரு தேவதை எலுமிச்சை நிறத்தோடு, கூந்தல் கால் பாதத்தை விடவும் நீளமாக, பெரிய கண்களோடு, சிவந்த உதடுகளோடும், கொடி இடை கொண்டவளாகவும், கண்ணோட கருவிழி இருக்கில்ல கருவிழி அது காட்டு பச்சை நிறத்தில் இருக்குமாம். ரொம்ப அழகா இருந்தாளாம்.
மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் தன் வசப்படுத்தி காரியம் சாதிப்பாளாம். மரம் செடி, கொடி பூக்கள் கூட அவளுக்கு அடிபணியுமாம். அவளுடைய சிறகுகள் விரிந்தால் அப்படியே மெய்மறந்து மனிதர்கள் அவளிடம் வசப்படுவார்களாம்.
மனிதர்களோட வெற்றுக் கண்களுக்கு தெரியமாட்டாளாம். பௌர்ணமி இரவில் மட்டும் தான் தெரிவாளாம். அதுவும் குறிப்பிட்ட சில பேரோட கண்களுக்கு மட்டும். பௌர்ணமி இரவில் காட்டுக் கோவில்ல பூஜை செய்ய வருவாளாம். அப்போ ஒருத்தர் ரெண்டு பேர் பார்த்திருப்பதாக சொல்வாங்க.
“ஏன் தாத்தா பௌர்ணமி இரவுல ஸ்பெஷல் பீபள் கண்களுக்கு மட்டும் தெரியுறா”
மனிதர்களின் ஆத்மாவை எத்தனையோ வகைகளாக தரம் பிரிப்பாங்க அதுல தூய ஆத்மாவின் கண்களுக்கு மட்டும் தான் தெரிவாளாம்.
“நம்பர் ஒன் னா?”
“ஆ அப்படியும் சொல்லலாம்”
அவ எங்க இருந்து வந்தானு யாருக்கும் தெரியாது. ஆனா வரம் கொடுத்தா கண்டிப்பா நடக்குமாம். மனிதர்களை பார்த்தாவே நல்லவன் யாரு? கெட்டவன் யாருனு கண்டு பிடிப்பாளாம், நல்லவர்களுக்கு தேவதையாகவும், கெட்டவர்களுக்கு ராட்சசியாகவும் தெரிவாளாம்.
ராட்சசி என்ற உடன் கோரப்பற்களோடு, சிவப்பேறிய விழிகளும், திராட்சை நிற தேகம் என்று தப்பாக எடை போடாக கூடாது. கெட்டவங்க வரம் கேட்டா அத அவங்களுக்கு எதிரா திருப்பி விட்டுடுவாளாம்”
“கண்களுக்கு தெரிய மாட்டா னு சொன்னீங்க எப்படி வரம் கொடுப்பா?” தாத்தனையே கேள்வி கேட்டு மடக்கினாள் மதியழகி.
“அமாவாசை நாள்ல எல்லார் கண்களுக்கும் தெரிவாளாம். ஆனா அது பார்க்குறவங்க பார்வையை பொறுத்து தெரிவாளாம்”
“புரியலையே!” கண்களை உருட்டி யோசிக்க
சத்தமாக சிரித்த தாத்தா மருதாச்சலம் “நம்ம மனசால சுத்தமானவங்களா இருந்தா அழகாகவும், கெட்டவங்களா இருந்தா அசிங்கமாகவும் தெரிவாளாம்”
ஆனா அவள யாராவது பாக்கணும்னு அவளே முடிவு பண்ண அவங்க கண்களுக்கு மட்டும் தெரிவாளாம்.
“ஓகே”
“அவ பேரென்ன தாத்தா” ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்த மதியழகி ஆறே வயதான சுட்டிப் பெண்.
“தேவி ருத்ரமாகதேவி. எப்படி இருக்கு பேரு?” தாத்தா கண்ணாடியை உயரத்திக் கேக்க
“சூப்பர்” என்று கை தட்டினாள் மதியழகி.
மேகம் தொடும் மலையோடு அடர்ந்த கானகம் கொடிய விலங்குகள் இருக்கும் என்று அஞ்சி ஒரு பகுதிக்கு மேல் மக்கள் நடமாட மாட்டார்கள். அந்த மலையின் ஒரு பகுதில் இருந்து விழும் குட்டி நீர்வீழ்ச்சி இன்று வரை மனிதர்களால் கண்டறியப்படாத, மனிதர்களின் கால்தடம் பதியப்படாத கண்ணை கவரும் பரந்து விரிந்த புல்தரையையும் கொண்ட பசுமையான தரை.
அந்த நீர்வீழ்ச்சியின் ஒரு பக்கத்தில் வழி இருக்க அது அந்த குன்றினுள் செல்லும் பாதை விரிகிறது. மெதுவாக அடியெடுத்து கற்களை தாண்டி சென்றால் ஒரு குகை போல் தெரிகிறது.
அது குகையல்ல அவளின் வீடு ஆம் ருத்ரமஹாதேவியின் தற்போதைய வசிப்பிடம். அழகிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையும், அணையாமல் எரிந்துக் கொண்டிருக்கும் விளக்கை தவிர அங்கே வேறொன்றுமில்லை.
வானத்து தேவதைகள் காட்டு கோவிலுக்கு ஒன்றாகத்தான் வருகை தந்து கொண்டிருந்தார்கள். இந்த அழகான நீர்வீழ்ச்சியில் குளித்து பூக்களால் நெய்யப்படும் புத்தாடை அணிந்து, தலையிலும் கிரீடம் போல் மலர்வளையம் சூடி, கையில் ஒரு விளக்கோடு கோவிலுக்கு நடந்தே செல்வார்கள்.
அப்படி ஒருநாள் கோவிலில் பூஜை செய்து விட்டு வரும் போது வேகமாக வந்த குதிரை வீரனால் திசைமாறியவள் தான் ருத்ரமகாதேவி.
இன்றோ பௌர்ணமி ருத்ரமாகதேவி காட்டுக் கோவிலுக்கு வருகை தரும் நாள். பௌர்ணமி நிலவின் ஒளியில் அவளின் தேகம் தக தகவென ஜொலிக்க, கண்களின் கருவிலியிலும் அதன் ஒளி பட்டுத் தெறிக்கும். நீண்ட அவள் கூந்தலோ அவள் நடந்து வந்த பாதையின் அடையாளாச் சின்னம். கொடியிடை கொண்ட மங்கையவள் கூந்தலில் சூடியிருக்கும் மலர்களோ தேவலோகத்து மலர்கள். அவளின் கிண்கிணிச் சிரிப்பு சத்தம் கேட்டாலே காளையர்கள் காதல் வயப்படுவார்கள்.
அவளோ பல்லாயிரம் வருடங்களாக அவளின் காதலனுக்காக தவமிருக்கின்றாள். அது அவனை மீண்டும் காதல் கொள்ளவல்ல, அவனை தன் இரு கரங்களாலும் பலி தீர்த்து சாப விமோச்சனம் பெறவே!
ஆனாள் இந்த ஜென்மத்தில் அவன் யாராக பிறப்பான் என்று அவள் அறியவில்லை. தேடித் கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கிருக்க, அதை மானிட பிறவியின் உதவியோடு தான் செய்ய வேண்டியும் இருந்தது.
அதற்க்கு தூய ஆத்மாவை தேடித் பிடிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கிருக்க, அவளின் தரிசனத்துக்காக இந்த காட்டில் பௌர்ணமி இரவில் யார் வருவார்கள்?
“டேய் நிர்மல் என்னடா பண்ணுற? போன் சிக்னல் வேற கிடைக்க மாட்டேங்குது, டார்ச் வேற மின்னுது, உன் கம்பாஸ் வேலை செய்யுதா இல்லையா? இன்னும் எவ்வளவு தூரம் இந்த தூரல்ல நம்ம இடத்துக்கு நடக்க போறோம், பசி வேற உயிர் போகுது” நிர்மலை ஏகத்துக்கும் திட்டிக் கொண்டிருந்தாள் மதியழகி.
தாத்தாவிடம் கற்பனை கதைகளையும், வீரர்களின் சாகச கதைகளையும் கேட்டு வளர்ந்த மதியழகிக்கு அட்வான்சேர் என்றாலே கொள்ளை பிரியம். தனது உயிர் தோழனான நிர்மலுடன் ஹைக்கிங், பைக் ரைடிங், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளில் தான் பங்கேற்ப்பாள்.
ப்ளஸ் டூ பரீட்ச்சையை எழுதி முடித்த இருவரும் ஹைக்கிங் செல்ல இந்த காட்டு பகுதியை தேர்ந்தெடுத்திருக்க, சூரியன் மறைந்த பின் இறங்கியவர்கள் மழை தூரவே திசைமாற கம்பாஸின் உதவியை நாட இந்த கானகத்தின் கோவிலில் உள்ள சக்தியால் காந்த சக்தி வேலை செய்யாமல் போக அது அவர்கள் செல்ல வேண்டிய பாதையில் செலுத்தாது கண்ணாமூச்சு காட்டிக் கொண்டிருந்தது.
தலை கவசத்தில் இருந்த மின் விளக்கும் கண்ணை சிமிட்ட, கும்மிருட்டு, குளிரும், மதியின் பசியை தூண்ட நிர்மலை வசை பாட ஆரம்பித்தாள்.
“நான் மட்டும் என்ன செய்ய? கம்பாஸ் சொல்லுற வழியில் தானே போய் கிட்டு இருக்கேன். எனக்கு மட்டும் பசிக்காதா? குளிர் ஊசியா குத்துது” என்றவன் மெதுவாக அடியெடுத்து வைக்க மதியும் அவனை பின் தொடர்ந்தாள்.
தெய்வ சக்தி இவர்களை கோவிலின் பக்கம் இழுக்க, அப்பக்கம் இவர்கள் நெருங்க, நெருங்க இருவரினதும் தலைக்கவசத்தில் இருந்த மின் விளக்கு பட்டென்று அணைந்தது.
அந்த கும்மிருட்டில் பொர்ணமி வானம் அழகாக காட்ச்சியளித்தாலும் மழை தூரலால் அதை ரசிக்கத்தான் முடியவில்லை.
“என்னடா இது வானம் தெளிவா இருக்கு ஆனா மழை பெய்யுது. ஒரே மர்மமா இருக்கு” மதியழகி யோசனையில் விழ நிர்மலும் யோசனையாகவே முன்னாள் நடந்தான்.
தூர தெரிந்த வெளிச்சத்தில் தங்கள் இருப்பிடம் வந்து விட்டதாக மகிழ்ந்தவர்கள் வேக எட்டு வைத்து நடக்க, வெளிச்சத்தை நெருங்க, நெருங்க அது எரியும் விளக்கு என்று கண்டு கொண்டவர்கள் நடையை நிறுத்தினார்கள்.
“டேய் என்னடா விளக்கு எரியுது. நாம எங்க இருக்கோம்? ஒருவேளை கொள்ளையடிப்பவர்கள், தீவிரவாதிகள் மறைஞ்சிருக்கும் ஏரியாவுக்குள்ள வந்துட்டோமா?” மதியழகியின் குரலில் கிஞ்சத்துக்கும் பயம் என்பதே இல்லாமல் கிசுகிசுப்பாக கேக்க
அந்த இருளிலும் அவளை முறைத்த நிர்மல் “ஏன் இராணுவர் வீரர்கள் கேம்ப் போட்டு இருக்கிறார்கள் என்று சொல்லேன்” என்றவாறு மெதுவாக அடியெடுத்து வைத்தவன் ஒரு புதர்மறைவில் இருந்து அங்கே யார் இருக்கிறார்கள் என்று பார்க்க, மதியும் அவனை தொடர்ந்து வந்து நோட்டமிட்டாள்.
அது ஒரு மண்டபம் அதில் ஒரு பெரிய மரம் மட்டும் கிளை பரப்பி இருக்க, இலைகள் இல்லாமல் வெறுமையாக காட்ச்சியளித்தது.
“ஏண்டா மரத்த சுத்தி நாலு தூண் போட்டு மண்டபம் கட்டி இருக்காங்க, விளக்கு எரியுது, என்ன இடம் டா இது” மதியழகி என்னமோ நிர்மலுக்கு அவளின் எல்லா கேள்விகளுக்கும் விடை தெரியும் போல் கேட்டு வைக்க பல்லை கடிக்கலானான்.
“நான் இங்கதான் பொறந்து, வளர்ந்தேன் பாரு, எல்லாத்தையும் என் கிட்ட கேட்டு கிட்டு. ஏன் நீயே போய் பாரேன்” கடுப்பாக மொழிய மதியோ முன்னேறி இருந்தாள்.
நிர்மலும் அவளை பின் தொடர சுற்றும் முற்றும் பார்த்தவாறே வந்தவர்கள் மரத்தை அடைய
“பட்டுப் போன மரம் போலும் தெரியல” நிர்மல் ஆராய
“ஒரேயடியா எல்லா இலைகளும் உதிர்ந்த எப்படி இருக்குமோ அப்படி இருக்கு” மதியும் இடுப்பில் கைவைத்து சொல்ல்லியவாறே மரத்தை தொட கையை கொண்டு போனவளை ஒரு கற்றை கூந்தல் முடி பின்னால் இழுத்து நிறுத்தியது.
மதி ஒரேயடியாக பின்னால் இழுப்படவும் அதிர்ச்சியாக திரும்பிய நிர்மல் அங்கே ஒரு பெண், அந்த கால இளவரசி போல் காட்ச்சியளித்துக் கொண்டிருக்க தான் காண்பது கனவோ என்று தன் கையையே கிள்ளிக் கொண்டான்.
பின்னால் நகர்ந்து விழாமல் நின்ற மதியோ நிர்மலின் அதிர்ச்சி பார்வையை கண்டு திரும்பிப் பார்க்க அங்கே இருந்த ருத்ரமகாதேவியை கண்டு “வாவ்” என்று கூச்சலிட
“அந்த மரத்தை தொட்டிருந்தால் உன் மரணம் தான் நிகழ்ந்திருக்கும்” கண்ணில் கோபம் எட்டிப் பார்க்க மதியை கடித்தாள்.
மதி அருகில் ஓடி வந்த நிர்மல் “நாம டைம் ட்ராவல் பண்ணி வந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்” குரலில் பயத்தை தேக்கி சொல்ல
அவனை புரியாத பார்வை பார்த்த மதி “நாங்க இந்த காட்டுல ஹைக்கிங் வந்தோம். வழி தவறிட்டோம். நீங்க யாரு? இங்க என்ன செயிரீங்க?” ருத்ரமகாதேவியை நேர் பார்வை பார்த்தவாறே கேக்க
“நான் ருத்ரமகாதேவி, பாதை தவறிய தேவதை” அந்த பச்சை நிற கண்களில் கொஞ்சம் நீர் பெருகின.
அந்த பெயரை கேட்டதும் மதியின் ஆழ் மனதில் சிறு சலனம் “காட்டு கோவிலுக்கு வந்த தேவதை” என்று வாய் விட்டே முணுமுணுக்க
“என்ன உளறுற” என்ற நிர்மலின் கேள்வியையும் தாண்டி
“என்னை பற்றி உனக்கு எப்படி தெரியும்” ருத்ரமகாதேவியின் கேள்வி அம்பாய் பாய்ந்தது.
தன் தாத்தா சொன்ன கதையை சொன்ன மதி “அப்போ நீங்க இன்னும் இங்கே தான் சுத்தி கிட்டு இருக்கீங்களா? ஒரு தேவதை மிஸ்ஸிங் னா வான லோகத்துல தேட மாட்டாங்களா? உலகம் எவ்வளவோ முன்னேறி இருக்கு, ஜி.பி.எஸ் வைத்தே எல்லா இடத்தையும் கண்டு பிடிக்கிறாங்க, உங்களால ஏன் போக முடியல”
“என்னுடைய வழிகாட்டியை தொலைத்து விட்டேன்”
“இன்னுமா கண்டு பிடிக்க முடியல? உங்களுக்கு இருக்குற சக்தியால் கண்டு பிடிக்க முடியாதா?” பதின் வயதில் இருந்த மதியழகி கேள்விகளை அடுக்க
“கடவுள் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுத்து விட மாட்டான். என்னிடம் இருப்பது சிலதே”
ருத்ரமகாதேவியின் கூற்றை ஏற்றுக்கொண்டதாக தலையசைத்த மதி “உங்க கிட்ட வரம் கேட்டா கண்டிப்பா கொடுப்பீங்களாமே!”
“மதி வா இங்க இருந்து போலாம்” நிர்மல் மதியை கிளப்ப முயற்சிக்க
“கொஞ்சம் இருடா. கொடுப்பீர்களா?”
அவளை புன்னகை முகமாக பாத்திருந்த ருத்ரமாதேவி “கேள்” என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக் கொள்ள
“நம்பர் ஒன் நா எல்லாருக்கும் உதவி செய்யணும். டூ அம்மா டாக்டர் ஆக சொல்லுறா, அப்பா இன்ஜினியர், நா எத சூஸ் பண்ணுறது? எதுல போனா என் எதிர் காலம் நல்லா இருக்கும். மூணாவது இந்த காதல் இருக்கில்ல அது உண்மையா ஒருத்தர் மேல வந்து அவர் கூடவே சாகுறவரைக்கும் சந்தோசமா வாழனும். நாலாவது எவ்வளவு சாப்பிட்டாலும் குண்டாக கூடாது. ஐஞ்சாவது நோய், நொடி என்று படுத்த கூடாது. ஆறாவது நான் நினச்சா மழை வரணும், நினச்சா நிக்கணும். வேற….. “
“ஹா ஹா ஹா எல்லாவற்றையும் வரமாக தர முடியாது, ஒன்று மட்டும் கேள்” மதியிடம் சொல்லியவாறே நிர்மலிடம் திரும்பிய ருத்ரமாதேவி “உனக்கு வரம் வேண்டாமா?”
இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பிய நிர்மல் வேண்டும், வேண்டாம் என்று தலையசைக்க, மதி இப்போதைக்கு இரண்டாவதாக கேட்ட வரத்தை தரும் படி கேட்டாள்.
“உனக்கிருக்கும் திறமைக்கு நீ காவல் துறையில் சேர்ந்தால் தான் சரி அத்தோடு உன் முதலாவது வரமும் கிட்டும்” ருத்ரமகாதேவி புன்னகைக்க
“நிஜமாவா அப்போ ஓகே. எப்போதிலிருந்து என் வரம் கை கூடும்”
“அதற்க்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டி இருக்கும்”
“என்ன உதவி?” ஆர்வமாக மதி கேள்வி எழுப்ப
“மதி இதுல எது உள்குத்து இருக்கும் போல வா நாம போலாம்” நிர்மல் மதியின் கையை பிடித்து இழுக்க
“இருடா…” நிர்மலை அடக்கியவாறே ருத்ரமகாதேவியின் பதிலுக்கு காத்திருக்க,
“நான் நகரத்தில் வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன். என்னால் அவர்களோடு பொருந்திப் போக முடியவில்லை. உன்னால் உதவ முடியுமா?”
“பு… இவ்வளவு தானா? கண்டிப்பா பண்ணுறேன். இப்போவே எங்க கூட வாரீங்களா?” கண்கள் மின்ன கேக்க
“இப்போதில்லை இன்னும் ஆயிரத்து இருநூறு நாட்கள் பூஜை செய்ய வேண்டியுள்ளது. பூஜையை முடித்த பின் உன்னை தேடி நானே வருவேன். உனக்கு ஏதாவது ஆபத்தென்றால் என் பெயரை சொல்லி அழைப்பாயாக” என்று அவர்களுக்கு தங்கள் இடம் நோக்கி செல்ல வழியையும் காட்டினாள் ருத்ரமகாதேவி.
தான் பெற்ற வரத்தால் மதியின் தூக்கம் தொலைய போவதை அறியாமல் நிர்மலுடன் நடந்தாள் மதியழகி.