மௌனங்கள் இசைக்கட்டுமே 06

 

மனதின் இறுக்கம் தாளாமல், தனது அலைப்புறுதலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள் சேனா. ஆதிசேஷன் அந்த அறைக்குள் நுழைந்ததைக் கூட உணராமல் அவள் கண்களை மூடியிருக்க, சற்று நேரத்திற்கு முன் செய்தது போலவே அவள் அருகில் வந்து நின்று அவளது நெற்றியைத் தொட்டான் சேஷன்.

தனது இடது கையால் மெல்ல அவள் நெற்றியை வருடிக் கொடுத்தவன் அவளது புருவங்களை மென்மையாக நீவிவிட முற்படும் வேளையில் பட்டென கண்களைத் திறந்து விட்டாள் அவள். கூடவே அவன் கையையும் தனது ஊசி குத்தாத கையால் அவள் விலக்கிவிட, அவளை கண்டிப்புடன் பார்த்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான் சேஷன்.

இந்த முறை இருக்கையில் இல்லாமல், அவளது கட்டிலில் அவளை உரசியபடியே அவன் அமர்ந்து கொள்ள, சேனாவின் பார்வையில் அனல் அடித்தது. ஆனால், அதை குறித்தெல்லாம் கொஞ்சமும் கவலை கொள்ளாமல், மீண்டும் அவள் நெற்றியில் கைவைத்து அவள் உடலின் வெப்பநிலையை சோதித்துப் பார்த்தவன் திருப்தியில்லாமல் அவள் கழுத்தருகே தன் கையைக் கொண்டு செல்ல, பட்டென தட்டிவிட்டாள் மீண்டும்.

முகத்தில் சட்டென ஒட்டிக்கொண்ட புன்னகையுடன் சேஷன் நல்ல பிள்ளையாக அமர்ந்து கொள்ள, “தள்ளி போ. இப்படி உரசாதஎன்றபடி லேசாக நகர்ந்து கொண்டாள் சேனா.

அதற்கும் பதில் கொடுக்காமல் சேஷன் மௌனம் சாதிக்க, “எழுந்திரு. கிளம்பு முதல்லஎன்று எப்போதும்போல் மிரட்டலில் இறங்கினாள் சேனா.

அவள் மிரட்டலை அசட்டை செய்தவனாக, “உன் பிரெண்ட் ஆல்ரெடி கிளம்பிட்டான். என்னையும் துரத்தி விட்டுட்டு தனியா ஜாலி பண்ண போறியாஎன்றான் சேஷன்.

உன்னோட இருக்கறதுக்கு அது பெட்டர். கிளம்புஎன்று மனைவி பதில் கொடுக்க,

பட், நான் கிளம்புறதா இல்லையே. பொண்டாட்டிக்கு உடம்பு முடியாத நேரத்துல அப்படி எல்லாம் விட்டுட்டு போக முடியாதும்மா.”

பொண்டாட்டியாநான் மரண அடிவாங்கி காயப்பட்டு கிடந்த நேரத்திலேயே நீ விட்டுட்டு போனவன் தானே. இப்போ என்ன சினிமா டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்க. ச்சே…” என்று தலையில் அடித்துக் கொண்டே, “நீ சினிமாக்காரன் தான் இல்ல. அதை மறந்துட்டேன்என்று நக்கலடித்தாள் சேனா.

ஏன் சினிமாக்காரன் பொண்டாட்டி குடும்பம்ன்னு வாழக் கூடாதா?”

வாழலாமேஆனா, வருஷத்துக்கு ஒருத்தியோட வாழ நினைக்கக்கூடாது. முதல்ல அமிர்தாஇப்போ அவ செத்துட்டா, சோ நான்நாளைக்கு நானும் செத்துட்டா, இன்னொரு…” என்று அவள் வார்த்தைகள் அமிலம் தெளிக்க, அதன் ஈரம் தாங்காமல் அவள் வாயைப் பொத்திவிட்டான் சேஷன்.

அமிர்தாக்கும் உனக்கும்இல்ல, அமிர்தாக்கும் நம்ம வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சேனாவீணா உன்னையும் கஷ்டப்படுத்தி, என்னையும் சாகடிக்காதடி ப்ளீஸ்.” என்று உணர்ந்து சேஷன் பேச, அவனை புரிந்துகொள்ள மறுத்தாள் அவன் மனைவி.

வெறும் பேச்சுக்கே செத்துடுவியா சேஷா. அப்போ நான் எத்தனை முறை இறந்திருக்கணும்.”

முடிஞ்சதை பேசி இன்னைக்கு வாழ்க்கையை தொலைச்சுட்டு இருக்கோம் சேனாஎன்று சேஷன் வலித்த குரலில் பேச,

உன்னைப்போல சுலபமா கடந்து வர முடியலையே என்னால. ஆனா, ஒருவிதத்துல உனக்கு நன்றி சொல்லணும். உன்னால வலியை மட்டும்தான் உணர்ந்திருக்கேன் நான். வலிக்கும்போது தான் நான் உயிரோட இருக்கறதா பீல் பண்ணுவேன். இந்த நிமிஷம் வரைக்கும் நான் உயிரோட இருக்கேன். நீ கொடுத்த வலி மொத்தத்தையும் அனுபவிச்சுட்டே இருக்கேன். அந்த வகையில என்னை வாழ வைக்கிறதுக்கு நான் உனக்கு நன்றி சொல்லணும். தேங்க்ஸ்என்றாள் சேனா.

சேஷன் முகம் கசங்கியவனாக அமர்ந்துவிட, “இந்த வலி எனக்கு பழகிப்போச்சு சேஷா. என்னை இப்படியே விட்டுடு. இந்த வலி இல்லாம போனா, நான் இருக்கமாட்டேன் போல. நீ கொடுத்த வலி போதும். உன் காதல் வேண்டாம் எனக்கு.” என்று மேலும் பேசினாள் சேனா.

ஆனா, எனக்கு என் சேனா வேணும். என்ன நடந்தாலும் சரி. நானே இல்லாம போற நிலைமை வந்தாலும் எனக்கு நீ வேணும்.” என்று முடிவெடுத்தவனாக  எழுந்து நின்றான் சேஷன்.

யார் இல்லாம போனாலும் நம்மோட இந்த நிலைமை மட்டும் மாறாது சேஷா. நீ இங்கேயிருந்து கிளம்பு. மொத்தமா கிளம்பிடு.”

ஏன் அமெரிக்கா என்ன உன் அப்பா வீட்டு சொத்தா?” என்றவனை பதில்கூறாமல் அவள் பார்த்து வைக்க,

என் வாய் பேசாம இருக்க மாட்டேங்குது. என்ன செய்ய? நான் இந்தியா எல்லாம் கிளம்புறதா இல்ல. நீ எப்போ என்னோட வர்ற?”

நீ எப்போ அடுத்தவங்களை பத்தி யோசிப்ப சேஷா

ஏன் யோசிக்கணும்? எல்லாரையும் யோசிச்சு யோசிச்சு தான் என் வாழ்க்கையை தொலைச்சுட்டு நிற்கிறேன். போதும்இனி என் வாழ்க்கை மட்டும்தான் முக்கியம். யாருக்காகவும் பார்க்கிறதா இல்ல. ஏன் உனக்காகவும் கூட…”

உன்னையெல்லாம் மனுஷனா நினைச்சு உன்னோட பேசிட்டு இருக்கேனே…”

பேசாத. என்னோட வாழ்ந்தா மட்டும் போதும். பேசவே செய்யாத.”

வெளியே போடா.”

என்னோட வாழ ஆயிரம் கண்டிஷன் போடு சேனா. நான் அக்செப்ட் பண்ணிக்கறேன். உன்னை தொடக்கூடாது. உன் பக்கத்துல வரக்கூடாது. என்னோட பேசமாட்டேன்இப்படி எது வேணா சொல்லு. நான் செய்ய தயாரா இருக்கேன். ஆனா, நீ என்கூட வந்தாகணும்.”

உன்னை வெளியே போக சொன்னேன்.”

கண்டிப்பா போக மாட்டேன். அவன் கிளம்பிட்டான். உன் அப்பா வர்ற வரைக்கும் இங்கே இருக்கேன். நீயும் என்கிட்டே பேசி டைம் வேஸ்ட் பண்ணாம என்னை என்ன செய்யலாம் யோசி.” என்றவன் சட்டமாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அலைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டான்.

அப்பா உன்னைப் பார்த்தா கோபப்படுவாங்க சேஷா. ஒழுங்கா கிளம்பிடு. அமுதனும் கண்டிப்பா திரும்ப வருவான்.” என்ற சேனாவின் குரல் காதில் விழாதவன் போல் அவன் அமர்ந்திருக்க,

சேஷா.” என்று அவள் குரல் உயர்த்த,

எனக்கு நல்லாவே காது கேட்கும்என்றான் அதற்குமட்டும்.

திஸ் இஸ் டூ மச் சேஷா.” என்று சேனா அலற,

எது டூ மச். என் பொண்டாட்டி கூட நான் இப்படி உக்கார்ந்துட்டு இருக்கறதா? வரட்டும் உன் அப்பா. அவர்கிட்ட கேட்கிறேன்.”

என் பொறுமையோட அளவு என்னன்னு உனக்கு நல்லா தெரியும் சேஷா. வேண்டாம்கிளம்பிடுஎன்று நிதானமாக சேனா எச்சரிக்க,

என்னை பத்தியும் உனக்கு தெரியுமே சேனா. நீ ரெண்டு வார்த்தை பேசியதும் ரோஷப்பட்டு கிளம்பிப்போக நான் தேனமுதனா?” என்று கேட்டவனை எதுவும் செய்ய முடியாமல் இயலாமையுடன் வெறித்து கொண்டிருந்தாள் சேனா.

கண்ணை மூடி தூங்கு. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு.” என்று நிதானம் தவறாமல் சேஷன் உரைத்திட, அவனைக் காண விரும்பாதவளாக சட்டென பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டாள் சேனா.

 “இவ இப்படியிருக்க மாட்டாளே.” என்று சந்தேகத்துடன் சேஷன் பார்த்த சேஷன் பார்வையைத் திருப்பும் முன்னமே, “உன் சினிமாவை விட்டுடுஎன்று அதிராமல் கூறி அவனை அதிர வைத்தாள் சேனா.

சேஷன் அசையாமல் பார்வையை அவள் மீது பதிக்க, மெல்ல கண்களைத் திறந்தவள், “எதை வேணா செய்யுறதா சொன்ன இல்ல. உன் சினிமாவை விட்டுடு. உன்னோட வாழறதைப் பத்தி யோசிக்கிறேன்.” என்றாள் மீண்டும்.

பைத்தியமா நீ. நம்ம வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன தொடர்பு.?”

அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது. எனக்கு உன் சினிமா பிடிக்கல. விட்டுடுஎன்றாள் நிர்த்தாட்சண்யமாக.

அவனை கொஞ்சமாவது வருத்தப்படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவள் கேட்டது. சேஷன் கலங்கிப் போவான்நிச்சயம் வேதனைப்படுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, மாறாக ஆளை அசரடிக்கும் புன்னகையுடன் அவளை நெருங்கினான் அவன்.

அவளது கட்டிலில் அவள் அருகில் சேஷன் அமர, முன்போலவே நகர்ந்து கொள்ள முயன்றாள் சேனா. ஆனால், இந்த முறை அதற்கு அனுமதி கொடுக்காமல் அவள் இடையில் கையிட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டான் சேஷன்.

என்ன செய்கிறான் இவன்?” என்று சேனா ஒருநொடி அதிர்ச்சியாக, அந்த நொடியை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டவன் அவள் முதுகில் கைகொடுத்து தன்னோடு தூக்கி பிடித்தபடி அணைத்துக் கொண்டான் அவளை.

சேஷாஎன்று அவள் பதட்டமடைய, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவளது தோளில் தலைசாய்த்துக் கொண்டான் சேஷன்.

அத்துடன் நின்றுவிடாமல், மெல்லிய பூங்காற்றாய், மாலைநேர கடல் அலையாய், மெல்லிய பனியின் தூறலாய் அவள் காதோரம் எல்லை மீறினான் அவன். குளிர் தூறலாய் அவளை நிறைத்தது அவன் குரல்.

 

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;

காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ

மானுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!…

 

என்று சேஷன் காற்றாக அவளை களவாட முயல, அவன் பாடலிலும், அதன் பொருளிலும் ஒருநொடி அவளையறியாமல் உருகித்தான் நின்றாள் சேனா. காதலே அறியாத வயதில் அவள் ரசித்து ருசித்த பாரதியின் வரிகள்.

எப்படி லவ் பண்ணியிருக்கார்லஎன்று அவள் அத்தம்மாவிடம் கூறி சிலாகித்துக் கொண்ட வரிகள். அத்தகைய வரிகளை அவளுக்காகவே ஒருவன் மெய்யுருகி பாடுகையில் அவள் மட்டும் உருகாமல் இருப்பாளா என்னஉருகித்தான் நின்றாள் அவளும்.

ஆனாலும், கடந்த கால கசடுகள் நீரின் அடியில் தேங்கி நிற்கும் மண்ணாய் அவளை அரித்தெடுக்கையில் மொத்தமாகவும் அவன் வசமாக முடியவில்லை அவளால். அவன் பாடலை முடித்த கணமே மீண்டும் அவளின் போராட்டம் தொடங்கிவிட, இயல்பாகவே சேஷனை விட்டு விலக முயன்றாள் அவள். சேஷனின் கைகள் அவளுக்கு அனுமதி மறுக்க, “சேஷா ப்ளீஸ்என்று முதன்முறையாக சற்றே மென்மையுடன் அவன் பெயரை உச்சரித்து அவள் இதழ்கள்.

சேஷனின் மனநிலையும் சற்று இதமாகவே இருந்ததால், மென்மை குறையாமல் அவளை விடுவித்தான் அவன்.

தேவசேனா அவனிடம் இருந்து நகர்ந்து அமர, மீண்டும் சேஷன் அவள் கைப்பிடித்த கணம், “தொடாத.” என்று மறுத்தபடி கைகளை பின்னால் இழுத்துக் கொண்டாள் அவள்.

ஏன் தொடக்கூடாது

தொடக்கூடாது அவ்ளோதான். கிளம்பு

என்னோட வாழ சம்மதம் கொடுத்திருக்க சேனா

உன் சினிமாவை விட்டுட சொல்லியிருக்கேன்

ரெண்டுக்கும் அர்த்தம் ஒன்னுதான்.”

நடக்கும்போது பார்க்கலாம். கிளம்புடாஎன்றவளுக்கு முதன்முறையாக சேஷனை குறித்து ஒருவித பயம் எழுந்தது.

“இவனை எதிர்கொள்வது அத்தனை சுலபமில்லையோ…” என்று ஒரு மனம் ஐயம்கொள்ள, “என்னைமீறி என்ன செய்துவிடுவான்” என்று எப்போதும் போல் அவளின் இயல்பான குணம் அவளை ஆறுதல்படுத்தியது.

அதற்கேற்றாற்போல் சேஷனும் அதற்குமேல் அவளை வாட்டாமல் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்துவிட்டான்.

அமைதியாக எழுந்து நின்றவனை சேனா மௌனமாய் பார்த்திருக்க, “ரெஸ்ட் எடு. பார்க்க ரொம்ப சோர்வா தெரியுற.” என்றவன் அவள் யோசிக்கும்முன்பே இயல்பாய் அவள் கன்னம் தட்டி, “தயாரா இரு.” என்று மற்றொரு கன்னத்தில் முத்தமிட்டு அவள் வாய்திறக்கும் முன்பே ஓடிவிட்டான்.

என்னவோ, சேஷன் அந்த அறையை விட்டு வெளியேறவும் தான் சுவாசம் சீரானதைப் போல் உணர்ந்தாள் சேனா. ‘நடந்தது மொத்தமும் கனவுதானோஎன்று உள்ளம் ஐயம் கொள்ள, இல்லை என்று நிரூபித்தது அவன் முத்தத்தின் ஈரம்.

நடந்த நிகழ்வுகளை மனம் நிதானமாக அசைபோட, நிச்சயம் அவன் திரைத்துறையை விட்டு விலகமாட்டான் என்று என்று உறுதி கூறியது அவள் உள்ளம். இன்றைய நிலையை அடைய அவன் இழந்தவையும், அவனின் போராட்டமும் நன்றாக தெரியுமே அவளுக்கு.

அதைக்கொண்டே சேஷன் நிச்சயம் திரைத்துறையை விட்டு விலகமாட்டான் என்று எளிதாக அவனை கடந்துவிட நினைத்தாள் சேனா. அவள் நினைப்பிற்கு ஏற்றபடியே அடுத்தநாள் மாலை விமானத்தில் தான் இந்தியா கிளம்புவதாக சேஷனிடம் இருந்து அவன் கிளம்பிச் சென்ற ஒருமணி நேரத்தில் செய்தி வந்தது.

இவ்வளவுதான் இவன் காதல்என்று மனம் இடித்துரைக்க, சேஷனைப் பற்றிய சிந்தனையை ஒதுக்கிவிட்டு உண்மைக்கும் ஓய்வெடுக்க நினைத்து கண்களை மூடினாள் தேவசேனா. ஆனால், அவளைச் சுற்றியிருந்த ஆண்மக்கள் அன்று அவளை நிம்மதியாக விடுவதில்லை என்று சபதம் செய்திருந்தனர் போலும்.

சரியாக அவள் உறங்க தொடங்கிய ஒருமணி நேரத்தில் அந்த அறைக்கு வந்து சேர்ந்தான் அவள் அண்ணன் சத்யதேவ். என்னவோ, அவன் பொறுமை காற்றில் பறந்துவிட, தங்கையின் காய்ச்சல், அவளது சோர்ந்த முகம் என்று எதுவுமே கண்ணில்படவில்லை அவனுக்கு.

வந்த வேகத்தில் அவள் உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் சேனாவை உலுக்கி எழுப்பியவன், “என்னதான் நினைக்கிற நீ.” என்று கத்திக் கொண்டிருந்தான் அவளிடம்.

சேனா அவன் வரவை அதிர்ச்சியுடன் உள்வாங்கியபடி, அவன் கேள்வியை புறக்கணித்துவிட அதில் இன்னும் ஆத்திரம் கொண்டவனாக, “இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படி உன் வாழ்க்கையை நீயே நாசம் பண்ணுவ சேனா.” என்று மீண்டும் கத்தினான் அவன்.

சேனா அவன் ஆத்திரத்தை கண்டுகொள்ளாமல், “கை வலிக்குது தேவ்என்று அவள் தோளில் இருந்த தேவ்வின் கைகளை தட்டிவிட, “என்ன பதில் சொல்லணும்? எல்லாம் தெரிஞ்சுதானே கிளம்பி வந்திருப்ப. இல்ல, இங்கே வந்த உடனே உன் நண்பன் சொல்லி இருப்பான். சரியா?”

அப்புறம் என்னை வேற ஏன் தனியா கேட்கிற?” என்று அவளும் பொரிந்து தள்ள,

தேனமுதன் மேல எந்த தப்பும் இல்ல சேனா.” என்று அடங்கியவனாக பதில் கொடுத்தான் அண்ணன்.

மொத்த தப்பும் உன்னோடது தேவ். என்னோட தனிப்பட்ட விஷயங்கள் வரைக்கும் அவன்கிட்ட சொன்னது, அவனுக்கு பொய்யா ஒரு நம்பிக்கை கொடுத்தது எல்லாமே உன் தப்பு.” என்று அழுத்தமாக குற்றம் சொன்னாள் தங்கை.