அத்தியாயம் – 3
எப்போதும் போல் அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது ஆராதனாவிற்கு.முதலில் தான் எங்கிருக்கிறோம் என்ற புரியாமல் அலங்க மலங்க விழித்தவளின் பார்வை அருகிருந்தவனை பார்த்ததுமே சகலமும் நினைவிற்கு வர ஒரு சிரிப்புடன் எழுந்து குளியலறை நோக்கிச் சென்றாள்.
குளித்து முடித்து வெளியில் வந்தவள் அவர்கள் அறையில் இருந்து வெளியே வர வெளியே இன்னமும் யாரும் விழித்திருக்கவில்லை. ‘அடடா சீக்கிரம் எழுந்துட்டோம் போலவே, மணி என்ன??’ என்று யோசித்தவள் அவர்கள் அறைக்கு திரும்ப வந்து அவள் கைபேசியை பார்க்க அது அப்போது தான் ஐந்து எனக் காட்டியது.
‘சரி எல்லாரும் எழுந்ததும் வெளிய போவோம்’ என்று எண்ணிக் கொண்டவள் மீண்டும் வந்து கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள். உறங்கும் கணவன் கண்ணில்பட முதல் நாளிரவு அவன் அவளை பேச வைத்ததை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
“பெரிய ஆளு தான் என் வாயாலேயே என் விருப்பத்தை சொல்ல வைச்சுட்டாரே. தூங்கும் போது சிரிச்சா என்னவாம், ச்சே இந்த சிரிச்சா விழுற குழி எப்பவும் விழாதா??”
“இவர் முழிச்சுட்டு பக்கத்துல இருந்தா அதுல கை வைச்சு பார்க்க முடியலையே. இப்போ வைச்சு பார்த்தா தான் என்ன?? ஆனா இப்போ தான் குழி விழவே இல்லையே??” என்று மெதுவாய் வாய்விட்டு கூறியவள் கை வைத்து தான் பார்த்தால் என்ன என்று தோன்ற மெதுவாய் கையை அவனருகே கொண்டு சென்றாள்.
அவன் தூக்கத்தில் அசைவது போலிருக்க சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள். இதுக்கு மேல இங்க இருந்தா சரியா வராது என்று எண்ணியவள் மெதுவாய் கதவை திறந்து வெளியில் வந்தாள்.
திலகவதியும் எழுந்துவிட்டிருந்தார் போலும் வீட்டின் ஒரு அறையில் விளக்கெரிந்துக் கொண்டிருந்தது. சமையலறைக்கு செல்ல அங்கு திலகவதி பாலை காய்ச்சிக் கொண்டிருந்தார்.
“அத்தை” என்று அழைத்தவளை ஒரு திகைப்புடன் திரும்பி பார்த்தார் அவர். “என்ன அத்தை பயந்துட்டீங்களா?? இந்த நேரத்துல யாரு கூப்பிடுறதுன்னு??” என்றவள் அவரை பார்த்து சிரிக்க பதிலுக்கு அவரும் சிரித்தார்.
“ஆமாம்மா இந்த நேரத்துல யாரு நம்மை கூப்பிடுறதுன்னு சட்டுன்னு பயந்துட்டேன். பொம்பிளை பிள்ளைங்க இல்லாத வீடு இல்லையா, நான் மட்டுமா தனியா எழுந்து வேலை செய்வேன். அதான் நீ கூப்பிட்டதும் என்னவோ ஏதோன்னு திரும்பி பார்த்திட்டேன்” என்றார்.
“ஏன் அத்தை நீங்க வீட்டுக்கு வேலைக்கு ஆளு வைச்சிருக்கலாம்ல??” என்றாள் ஆராதனா.
“இல்லைம்மா உங்க மாமாவுக்கு அப்புறம் பெரியவன் சின்னவனுக்கு எல்லாம் நாம வீட்டு ஆளுக சமைச்சா தான் பிடிக்கும். வேலைக்கு ஆளு எல்லாம் எதுக்குன்னு வீட்டுக்கு தேவையான எல்லாமே வாங்கி போட்டிட்டாங்க”
“அத்தை யாருக்கு எப்படி காபி போடணும்னு சொல்லுங்க நான் போடறேன்” என்றவளிடம் “உங்க மாமாக்கு சக்கரை போடவேண்டாம்டா அவருக்கு சுகர் இருக்கு, உன் புருஷன் எழுந்ததும் அவனுக்கு கொடுத்துக்கலாம்”
“சின்னவன் சாப்பிடும் போது தான் காபி குடிப்பான். இப்போ வந்திருக்க விருந்தாளிகளுக்கும் உங்க மாமாக்கும் நமக்கும் மட்டும் கலந்தா போதும்” என்றார்.
“சரிங்கத்தை” என்றவள் அது போலவே கலந்தாள். “ஆனா அத்தை நீங்க சமைக்க வேணும்ன்னா ஆளு வைக்க வேண்டாம். மத்த மேல் வேலைக்கு கூடவா நீங்க வைச்சிருக்க கூடாது??” என்றாள் கேள்வியாய்.
“இல்லைடாம்மா எனக்கு உடம்பு முடியாம போனப்ப நாம வேலைக்கு ஆளுங்க வைச்சோம். பசங்களுக்கும் உங்க மாமாவுக்கும் எதுவும் ஒப்பலை”
“வீட்டில ஆளு வைக்கிறதுக்கு பதில் வெளிய கடையில ட்ரைவாஷ் கொடுப்போம். சாப்பாடு ஹோட்டல்ல வாங்கிக்குவோம்ன்னு கன்னாபின்னான்னு செலவழிக்க ஆரம்பிச்சுட்டாங்க”
“நான் ஒரு மாசம் ஹாஸ்பிட்டல் வாசம் போனதுக்கு இவங்க செலவு இழுத்து வைச்சது தான் மிச்சம். அதான் நானே மூச்சை பிடிச்சுட்டு செஞ்சுடறது, சின்….” என்று ஆரம்பித்தவர் பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
“நான் கஷ்டப்படக் கூடாதுன்னு எல்லாத்துக்கும் ஒரு மெஷினை வாங்கி வைச்சுட்டாங்க. என்ன தான் அந்த மெஷின் வேலை செய்யுதுன்னாலும் நாம தானே அதெல்லாம் பார்த்து ஆன் பண்ணவோ ஆப் பண்ணவோ செய்யணும்”
“விடுங்க அத்தை அதான் இப்போ நாங்க வந்துட்டோம்ல. ஒருத்தருக்கு ரெண்டு பேரா வந்திருக்கோம், இனி நீங்க ரெஸ்ட் எடுங்க அத்தை” என்றதும் ஏனோ அவருக்கு கண்கள் கரித்தது.
அதை கவனிக்காத ஆராதனாவோ “அத்தை இதை நான் கொண்டு போய் கொடுத்திட்டு வரவா??” என்று கேட்க “ஹ்ம்ம் போயிட்டு வாடா” என்றவரின் குரல் மாறுபாட்டை அப்போது தான் உணர்ந்தாள் அவள்.
கையிலிருந்த டிரேயை கீழே வைத்துவிட்டு “அத்தை என்னாச்சு??” என்றவள் அவர் முன்னே சென்று நின்றாள். அவரின் கலங்கிய முகம் ஏதோ செய்ய “அத்தை என்னன்னு சொல்லுங்க, உடம்புக்கு எதுவும் செய்யுதா??” என்றாள் பதட்டமாக.
“எனக்கொண்ணும் இல்லைடாம்மா. நீ பேசினதை கேட்டு எனக்கு வந்த சந்தோஷ கண்ணீர் இது. சரி சரி நீ எதுவும் பீல் பண்ணாதே”
“நானே போய் எல்லார்க்கும் காபி கொடுத்திட்டு வர்றேன்” என்று அங்கிருந்து விலகப்பார்த்தவரை “நான் இருக்கேன்ல அத்தை நானே போய் கொடுத்துக்கறேன்” என்றவள் அவளே எல்லாருக்கும் சென்று காபி கொடுத்துவிட்டு வந்தாள்.
அவள் காபி கொடுத்துவிட்டு வரவும் அவளுக்கு துணைக்கு வந்திருந்த அவளின் உறவின் பெண் அவளருகில் வந்தார். “என்ன ஆராதனா நீயே சீக்கிரம் எழுந்துட்டியா?? நானே எழுப்ப நினைச்சேன்” என்றவர் அருகே வந்து அவள் முகத்தை ஆராய்ந்தார்.
‘ஐயோ இந்த அமுதா அத்தை ஏன் இப்படி பார்த்து வைக்குது’ என்று நினைத்தவள் “ஆமா அத்தை நான் எப்பவும் போல சீக்கிரம் எழுந்துட்டேன். நீங்க பல்லு தேய்ச்சாசா உங்களுக்கு காபி எடுத்து வரவா??” என்று நழுவ பார்த்தாள்.
“நான் என்னைக்கு பால் காபி குடிச்சிருக்கேன், எனக்கு கடுங்காப்பி தானே. அதெல்லாம் இருக்கட்டும் நீ மட்டும் எழுந்துட்ட எங்க உன் சிநேகிதி அவளையும் எழுப்பி விடு”
“யாரும் கேக்குறதுக்குள்ள அவளை சீக்கிரம் எழுப்பி குளிக்க சொல்லு” என்றுவிட்டு அவர் நகரப் போக “அத்தை நீங்களே போய் கூப்பிடுங்களேன்” என்று தயங்கினாள் அவள்.
“இல்லை ஆராதனா நீ போய் கூப்பிடும்மா. நான் போனா அவளுக்கு சங்கடமா இருக்கும் அதான்” என்றுவிட்டு அவர் நகர்ந்தார்.
மீண்டும் சமையலறைக்குள் ஆராதனா நுழைய திலகவதி அவளுக்கு காபியை கொடுத்தார். “அத்தை உங்களுக்கு??” என்றவளிடம் தன் கையில் இருந்த கோப்பையை காட்டினார் அவர்.
“அத்தை என்ன டிபன் செய்யணும்??” என்றவளிடம் “இல்லைடா நாம எதுவும் சமைக்க வேண்டியது இல்லை. ரெண்டு மூணு நாளைக்கு சாப்பாடு வெளிய தான் செய்ய போறோம்”
“இப்போ ஆளுக வந்திடுவாங்க காலை டிபன் எடுத்திட்டு நீ உன் ரூமுக்கு போடா. அனீஷ் எழுந்திட்டா காபி வேணுமான்னு கேட்டு கொடுடா” என்றார்.
“அத்தை யாழினியை…” என்றதும் “ஆமாடா சின்னவளையும் எழுப்பி விட்டுடு நானே சொல்ல நினைச்சேன், நீயே கேட்டுட்ட. கல்யாணத்துக்கு வராதவங்க எல்லாம் இன்னைக்கு வரப்போக இருப்பாங்க சரியா?? என்றவர் “நான் நினைக்க முன்னாடி நீ எல்லாம் சொல்றடா ராஜாத்தி” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் அவர்.
‘அய்யோ அத்தையும் நம்மளையே போக சொல்றாங்களே. நான் என்ன செய்வேன், எனக்கொண்ணுமில்லை நான் போய் கூப்பிடுவேன். அவ எதுவும் சொல்லிட்டா என்ன செய்ய?? பீ ஸ்டடி ஆராதனா தைரியமா போய் கூப்பிடு’ என்று தன்னையே தைரியப்படுத்திக் கொண்டு அந்த அறை வாயிலில் சென்று நின்றாள்.
மிக மெதுவாய் கதவை தட்டியவள் “யாழி, யாழி…” என்றழைக்க உள்ளிருந்து ஒரு சத்தமுமில்லை. சற்று சத்தமாய் அவள் கதவை தட்ட தூக்கக் கலக்கத்துடன் சபரீஷ் எழுந்து வந்து கதவை திறந்தான்.
ஆராதனாவை கண்டதும் மரியாதையாக “சொல்லுங்கண்ணி” என்றதும் ஆராதனா ஆகாசத்தில் மிதந்தாள். ‘என்னது நான் அண்ணியா!!! ஹைய் இது கூட நல்லாயிருக்கே’
‘என்னை விட பெரியவர் என்னை எவ்வளவு மரியாதையா கூப்பிடுறார். ஆரு என்ஜாய்டி’ என்று சந்தோஷித்துக் கொண்டவள் அவனிடம் அதே மரியாதையுடன் “தம்பி யாழியை எழுப்பி விடறீங்களா?? குளிச்சுட்டு கீழே வரச்சொல்லுங்க”
“கல்யாணத்துக்கு வரமுடியாதவங்க எல்லாம் வீட்டுக்கு வருவாங்கன்னு அத்தை சொன்னாங்க” என்று கூற “சரி அண்ணி அவளை எழுப்பி அனுப்பி விடறேன்” என்றான் சபரீஷ்.
சபரீஷிடம் பேசிவிட்டு அடுத்திருந்த அவர்களறைக்குள் நுழைந்தாள் அவள். அவள் உள்ளே நுழையவும் கட்டிலை பார்க்க கட்டிலில் அனீஷை காணவில்லை.
குளியலறையில் இருந்து நீர் விழும் சத்தம் கேட்க அவசரமாய் வெளியில் வந்தவள் அவனுக்காய் காபியை போட்டு எடுத்து சென்றாள். அவன் இன்னமும் வெளியில் வந்திருக்கவில்லை.
காபியை சூடு ஆறாமல் இருக்க மூடி வைத்துவிட்டு காலை வேளையை தரிசிக்க பால்கனிக்கு சென்றாள். சில்லென்ற காற்று முகத்தில் பட அதிகாலை பனிப்பொழுது லேசாய் உடலை வருட மயிர்கூச்செறிந்தது அவளுக்கு.
புடவையை எடுத்து போர்த்துக் கொண்டவள் அந்த குளிரை ரசித்துக் கொண்டு நிற்க பின்னால் வந்து நின்ற அனீஷின் ஈரமான கைகள் அவளை இடையோடு சேர்த்து வளைத்துக் கொள்ள, “ஏன் ஆரா எதுக்கு போர்த்திக்கிற அதான் நான் இருக்கேனே??” என்று குனிந்து அவள் காதுக்கருகில் கூறினான்.
அதில் சிலிர்த்தவள் “என்னங்க இப்படி பண்றீங்க எல்லாரும் பார்க்க போறாங்க” என்று நகரப் போக அவனோ அவளை விடாமல் உள்ளே இழுத்து வந்து சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.
“இங்க யாரும் பார்க்க மாட்டாங்க ஆரா. இப்போ ஓகேவா??” என்றான்.
அப்போது தான் அவள் அவனை பார்க்க குளித்து முடித்து இடுப்பில் கட்டிய துண்டுடன் நிற்க “உங்களுக்கு குளிரலையா?? இப்படி துண்டோட நிக்கறீங்க??” என்றாள்.
“எனக்கு இப்போ குளிர் எடுக்காது, அதான் நீ இப்போ பக்கத்துல இருக்கியே??” என்றவன் அவளை பார்த்து கண்சிமிட்டியவனின் உதடுகள் அவள் உதட்டின் மேல் பதிந்தது. சில நிமிடங்கள் கழித்து அவன் அவளை விடுவித்தான்.
“சரி நீ ஏதோ ஆசைப்பட்டியே அதை எப்போ செய்யப் போறே??” என்று அவன் கேட்க அவளோ என்னவென்பது போல் அவனை பார்த்து விழித்தாள்.
“என்ன முழிக்கிற?? என்னோட சிரிப்பு அவ்வளவு வசீகரமாவா இருக்கு” என்றவன் அவளை பார்த்து சிரித்துவிட்டு “என்ன இந்த கன்னக்குழியில கை வைச்சு பார்க்கணும்னு ஆசைப்பட்ட??”
“இப்போ பேசாமலே நிக்குற??” என்றதும் அவளோ அதிகமாய் அதிர்ந்தாள். ‘அச்சோ நாம பேசினதை எல்லாம் இவர் கேட்டுட்டாரா?? நான் மனசுக்குள்ள தானே பேசினேன். ஆரு ஒருவேளை மனசுக்குள்ள பேசுறேன்னு வாய்விட்டு பேசிட்டியோ??’ என்று அவள் ஆராய்ச்சியில் இறங்கினாள்.
“என்ன ஆரா?? என்ன யோசனை?? நீ மனசுக்குள்ள எல்லாம் பேசலை. என் காதுல விழுற அளவுக்கு கொஞ்சம் சத்தமா தானே பேசினே??” என்றதும் அவளோ அவனை பார்த்து அசடு வழிந்தாள்.
“இல்லை அது வந்து… அது வந்து சும்மா தான் சொன்னேன்” என்றாள்.
“அப்போ நிஜமாவே உனக்கு என்னோட சிரிப்பு பிடிக்கலையா??” என்றான்.
“நான் அப்படி எப்போ சொன்னேன்??”
“அதான் இப்போ சொன்னியே சும்மா சொன்னேன்னு??”
“அச்சோ போங்க” என்று நகரப் போனவளை நகரவிடாமல் அவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன் இப்போது அவள் மேல் விழுந்தான்.
“என்ன பண்ணப் போறீங்க?? எனக்கு வேலை இருக்கு அத்தை தனியா இருப்பாங்க, நான் போகணும்” என்றவள் எழ முயற்சிக்க அவள் முயற்சி எல்லாம் வீண் என்பது போல் அவன் அவளை எழவிடாமல் அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தான்.
அதற்குள் நந்தியாய் வாசல் கதவை யாரோ தட்டும் ஒலி கேட்க அப்போதும் அவளை பிரியமனமில்லாதவனாய் அவன் அவளின் இதழில் தன் இதழால் அழுந்த முத்தமிட்டு எழுந்தான்.
“போய் யாருன்னு பாரு ஆரா, நான் டிரஸ் மாத்தறேன்” என்று நகர்ந்தான் அவன்.
கசங்கியிருந்த புடவையை நீவி விட்டுக் கொண்டவள் கதவை திறக்கவும் அங்கு சபரீஷ் நின்றிருந்தான்.
ஆராதனா அவனை என்னவென்பது போல் பார்க்க அவனோ திறந்திருந்த கதவிடுக்கின் வழியாக அனீஷை கண்களால் தேடுவது தெரிய “உங்க அண்ணாவை கூப்பிடணுமா??” என்றாள்.
அவன் ஆம் என்பதாய் தலையசைக்க “என்னங்க தம்பி வந்திருக்காங்க??” என்று கணவனை பார்த்து கூறியவள் “உள்ள வாங்க தம்பி…” என்றாள் சபரீஷை பார்த்து.
“பரவாயில்லைங்க…” என்றவன் வெளியிலேயே நின்றான்.
அதற்குள் அனீஷ் ஒரு கால் சட்டையை மாட்டிக் கொண்டு துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு வந்தான். “என்ன சபரி?? என்ன விஷயம்டா??” என்றான் தம்பியை பார்த்து.
அவனோ இன்னமும் தயங்கியே நிற்க “என்னடா என்னன்னு சொன்னா தானே தெரியும்??” என்றான் அனீஷ்.
“என்னங்க நான் கீழே போறேன் எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு??” என்று நாசுக்காய் நகர்ந்த ஆராதனாவை இருவருமே நிறுத்தினார்.
“ஆரா நில்லு” என்று அனீஷும். “அண்ணி ப்ளீஸ் ஒரு நிமிஷம்” என்று சபரீஷும்.
“சொல்லுங்க தம்பி” என்று இப்போது அவளும் சபரீஷை பார்க்க “யா… யாழினிக்கு காய்ச்சல் அடிக்குது, அதை சொல்ல தான் வந்தேன், அனீஷ் நீ வந்து கொஞ்சம் என்னன்னு பாரேன்” என்று அவன் முடிக்கவில்லை ஆராதனா யாழினி என்றவாறே அடுத்த அறைக்குள் நுழைந்திருந்தாள்.
அனீஷோ சட்டென்று சபரீஷை உள்ளே இழுத்து “என்னடா திடிர்னு ஜுரம்?? நீ எதுவும் அவளை பயமுறுத்தலையே??” என்றான் கேள்வியாய்.
“டேய் நான் ஏன்டா அவளை பயமுறுத்தப் போறேன். நைட் எல்லாம் நல்லா தான் இருந்தா?? இப்போ தான் அண்ணி சொன்னாங்களேன்னு அவளை எழுப்ப போனேன். பார்த்தா உடம்பு ரொம்ப சூடா இருக்கு?? அதுக்கு நான் என்னடா செய்வேன்” என்று அனீஷை பார்த்து முறைத்தான் சபரீஷ்.
“நீ என்ன செஞ்சு வைச்சேன்னு வந்து பார்த்திட்டு சொல்றேன், நீ உன்னோட ரூம்க்கு போ. நான் வர்றேன்” என்று சபரீஷை பார்த்து கூறிய அனீஷ் மீண்டும் உள்ளே சென்று ஒரு டிஷர்டை எடுத்து மாட்டிக் கொண்டவன் அவனுடைய மெடிக்கல் கிட்டை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்கு விரைந்தான்.
யாழினி இருந்த அறைக்குள் முதலிலேயே சென்றிருந்த ஆராதனா அவளின் நிலை பார்த்து அவள் தலையை சட்டென்று தன் மடியில் தாங்கி “யாழி… யாழி… என்னடி ஆச்சு உனக்கு?? என்னடி செய்யுது??”என்று அவளை உலுக்கினாள்.
சில நிமிடம் கழித்து மெதுவாய் கண் திறந்து பார்த்த யாழினியின் முன் ஆராதனா இருக்கவும் சட்டென்று அவள் மடியினின்று விலகி படுத்தாள் யாழினி. “இந்த ரணகளத்துல கூட ஏன்டி இப்படி செய்யற??” என்று ஆராதனா பொருமவும் சபரீஷ் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
சபரீஷ் உள்ளே நுழைந்த சில நொடிகளில் அனீஷும் உள்ளே வந்தான். யாழினி மெதுவாய் எழ முயற்சி செய்ய ஆராதனாவோ “ஏய் பேசாம படுடி, உடம்பு முடியாதவ இப்போ எதுக்கு எழற” என்று சொல்லி கண்டிக்க யாழினி எதுவும் கேளாதவள் போல் எழ முயற்சி செய்தாள்.
“அதான் அண்ணி சொல்றாங்களே அப்புறம் எதுக்கு எழுந்துக்கற” என்று சிடுசிடுத்தான் சபரீஷ். யாழினியோ “இல்லை வந்து மாமா…” என்று சொல்லி அனீஷை பார்த்தாள்.
அப்போது தான் அனீஷுக்கு புரிந்தது அவள் ஏன் எழ முயற்சி செய்தாள் என்று. “இங்க பாரும்மா நான் உனக்கு மாமா அதெல்லாம் அப்புறம். இப்போ நான் ஒரு டாக்டர் நீ என்னோட பேஷன்ட், அதுனால நீ பேசாம படு…” என்றவன் அவளருகில் வந்து தெர்மாமீட்டரை அவள் வாயில் வைத்துவிட்டு அவள் நாடியை பார்த்தான்.
ஸ்டெத்தை வைத்து பரிசோதித்து முடித்தவன் அவள் ஜீரத்தின் வேகம் அறிய வைத்த தெர்மாமீட்டரை எடுத்து பார்த்துவிட்டு “நூத்தி ரெண்டு இருக்கு ஜுரம்” என்றான்.
“அய்யோ இப்போ என்னங்க பண்ணணும்” என்று கேட்ட ஆராதனாவை பார்த்தவன் “ஒண்ணும் பயமில்லை ஆரா. ஊசி போடுறேன் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடும்” என்றான்.
“ஆமா யாழி உன் தலை ஈரமா இருக்கு. எப்போடி எழுந்து குளிச்ச, ஈரம் காய வைக்காமலேயே படுத்திட்டியா. உனக்கு தான் ஒத்துக்காதே அப்புறம் ஏன்டி அப்படியே படுத்த??” என்ற தோழியை இப்போது யாழினி முறைத்தாள்.
‘இவ எதுக்கு இப்போ என்னை பார்த்து முறைக்கிறா??’ என்று நினைத்த ஆராதனா மீண்டும் யாழினியின் முகத்தை பார்க்க எல்லோரும் யாழினியையே பார்த்தனர்.
“இல்லை எனக்கு நைட் கல்யாண அலுப்புல தூக்கமே வரலை. ஒரே புழுக்கமா இருந்துச்சு அதான் குளிச்சுட்டு வந்து படுத்தேன்” என்றவள் தப்பு செய்த குழந்தையாய் முழித்தாள்.
‘இதை நான் போட்டு கொடுத்திட்டேன்னு தான் என்னை முறைச்சியாடி’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட ஆராதனா இப்போது தோழியை முறைத்தாள்.
யாழினியை காப்பாற்றும் பொருட்டு “இவ சின்ன வயசுல இருந்தே இப்படி தான் தூக்கம் வரலைன்னா எந்நேரமானாலும் ஒரு குளியலை போடுவா” என்று சபரீஷையும் அனீஷையும் பார்த்து சொன்னவள் “ஏன்டி யாழி அதான் உனக்கு சைனஸ் ப்ராப்ளம் இருக்கே??”
“அதை மறந்துட்டு ஏன்டி இப்படி செஞ்சே??” என்று சொன்ன ஆராதனாவை மீண்டும் முறைத்தாள் யாழினி. ‘இப்போ எதுக்கு மறுபடியும் இவ என்னை முறைக்கிறா?? இவளை காப்பாத்த தானே நான் இவ்வளவு நேரம் பேசினேன்’ என்று மீண்டும் யோசனையானாள் ஆராதனா.
“என்ன ஆரா சொல்ற, யாழினிக்கு சைனஸ் இருக்கா??” என்ற அனீஷ் “ஏம்மா யாழினி எத்தனை நாளா உனக்கு சைனஸ் இருக்கு. மாத்திரை எதுவும் எடுத்துக்கறியா??” என்று மருத்துவனாய் விசாரிக்க ஆரம்பித்து அவளுக்கு தேவையான அறிவுரைகள் கூறி மாத்திரையும் கொடுத்தான்.
‘ஐயோ இவ இப்போ முறைச்சது இந்த சைனஸ் மேட்டர் லீக்அவுட் பண்ணிட்டேன்னா?? சாரிடி யாழி என் புருஷன் இவ்வளோ டாக்டரா இருப்பாருன்னு நான் தெரியாம உளறிட்டேன்’ என்று மனதார தோழியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.
“ஆரா… ஆரா…” என்று அவள் காதுக்கருகில் வந்து அனீஷ் கத்தவும் பதறியவள் “என்னங்க??” என்றாள்.
“என்னாச்சு உனக்கு எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்கேன், போய் வெந்நீர் கொண்டு வா. யாழினிக்கு சாப்பிட கஞ்சி போல எதுவும் கொடு. சாப்பிட்டு அவ மாத்திரை போடட்டும்” என்றவன் “சபரீஷ் நீ கொஞ்சம் வா” என்று தம்பியை வெளியே அழைத்து சென்றான்.
அதற்குள் ஆராதனா யாழினி இருந்த அறையை சுத்தம் செய்து திலகவதியிடம் சென்று கட்டிலுக்கு விரிக்க விரிப்பையும் எடுத்து வந்து விரித்து முடிக்கவும் சபரீஷ் வந்து சேர்ந்தான்.
ஆராதனா அவர்கள் அறையை சுத்தம் செய்து வைத்திருப்பதை பார்த்தவன் “அண்ணி நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க??” என்றான் குற்றவுணர்ச்சியாக. “அதுக்கென்ன தம்பி இது நம்ம வீடு தானே. பாவம் யாழிக்கு உடம்பு முடியலை. அவ என்ன செய்வா??”
“அந்த டேபிள் மேல அவளுக்கு குடிக்க கஞ்சி ஆற வைச்சு இருக்கேன். பக்கத்துலையே மாத்திரை இருக்கு பார்த்துக்கோங்க” என்றுவிட்டு யாழினியை பார்த்து தலையசைத்து நகர்ந்தாள் அவள்.
“ஏய் உனக்கு தான் சைனஸ் இருக்கே அப்புறம் எதுக்கு நைட் குளிச்ச அதுவும் தலைக்கு குளிச்சிருக்க, எதுக்கு இப்படி செஞ்சே??” என்று முறைத்தான் சபரீஷ்.
யாழினியோ எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாள். “என்ன நான் கேட்டுட்டே இருக்கேன் பேசாம இருக்க, இந்த அனீஷ் வேற நான் தான் என்னமோ உன்னை கடிச்சு திண்ணுட்டன்னு என்னை பார்த்து நீளமா அட்வைஸ் பண்ணிட்டு போறான்”
“தேவையா எனக்கு இதெல்லாம்?? நீ செஞ்ச தப்புக்கு அவன்கிட்ட ஏச்சு வாங்க வேண்டி இருக்கு. இவ்வளவு பேசறேன் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்றவன் கோபமாய் பார்த்தான் அவளை.
‘எப்படியிருக்கன்னு கூட கேட்க வேண்டாம். உடம்பு சரியில்லாம இருக்காளேன்னு கொஞ்சம் கூட கரிசனம் இல்லாம இப்படி கத்தினா என்னன்னு பதில் பேசுறது’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் யாழினி.
“கஞ்சியை குடிச்சுட்டு மாத்திரை போட்டு படுத்து ரெஸ்ட் எடு. என்ன கேட்டாலும் அமைதியாவே இருந்து என்ன தான் சாதிக்க போறியோ??” என்றவன் குளித்துவிட்டு வந்து அலுவலகம் செல்ல கிளம்பினான்.
அவன் எங்கோ கிளம்புவதை பார்த்தவள் “என்னங்க எங்க கிளம்பிட்டீங்க??” என்று கேட்கவும் சபரீஷ் கண்ணாடி வழியாகவே அவளை பார்த்து முறைத்தான்.
அவளை பார்த்து என்ன தோன்றியதோ அமைதியாகவே “ஆபீஸ் கிளம்பிட்டேன்” என்றான்.
“என்ன இன்னைக்கும் ஆபீஸ்க்கா??” என்றாள்.
“அதென்ன இன்னைக்குமா??”
“இல்லை நான்… என்னை இப்படி தனியா விட்டு கிளம்புறீங்களே??” என்றவளுக்கு கண்ணை கரித்தது. என்ன தான் உற்றார் உறவினர் என்று பலர் இருந்தாலும் அந்த வீட்டிற்கு அவள் அவனை நம்பி மட்டுமே வந்திருக்கிறாள்.
கொண்டவன் துணையில்லாமல் தனியே அதுவும் திருமணமான மறுநாளே அவளை தனியே விட்டு அவன் அலுவலகம் செல்கிறேன் என்று சொன்னால் அவளும் தான் என்ன செய்வாள்.
“இந்த வீட்டில இவ்வளவோ பேர் இருக்காங்க நான் உன்னை தனியா விட்டு போறேன்னு சொல்ற?? இந்த வீட்டில இருக்கவங்க பார்த்தா உனக்கு மனுஷங்களா தெரியலையா??”
“நான் எப்பவும் முந்தானையே பிடிச்சிட்டு திரிய முடியுமா?? எனக்கு வேலை வெட்டின்னு எதுவுமில்லையா??” என்றான் காட்டமாக.
அவன் சொல்லும் போதே அவள் உடல் குலுங்குவதை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ அவளருகே வந்து அமர்ந்தவன் “இன்னைக்கு ஒரு சைட்டு கன்ஸ்ட்ரக்ஷன் முடியுது”
“அதோட கீ எல்லாம் ஹேண்டு ஓவர் பண்ணணும், அதுக்கு நான் போய் தான் ஆகணும். மதியம் சாப்பாடுக்கு வந்திடுவேன், நீ சாப்பிட்டு படு”
“திரும்பவும் எதையாவது இழுத்து வைச்சுட்டு எனக்கு ஏச்சு வாங்கி கொடுக்காதே??” என்றவன் தன்மையாய் தான் பேசினானா?? இல்லை மீண்டும் சிடுசிடுத்தானா?? என்று இப்போது அவளுக்குள் பட்டிமன்றமே நிகழ ஆரம்பித்தது…