அத்தியாயம் – 22
கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’
‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும் அழறாளா??ச்சே என்னடா இது’ என்று மனதிற்குள் சலித்தவன் “என்னாச்சு இப்போ எதுக்கு அழற??” என்றான் சிடுசிடுப்பாய்.
அவன் சிடுசிடுப்பு அவளுக்கு மேலும் அழுகையை கூட்ட விசும்பல் இன்னும் அதிகமாகியது. “நான் தான் உன்னை எதுவுமே சொல்லலையே, உன் பேச்சுக்கே வர்றது இல்லையே அப்புறம் எதுக்கு இப்போ அழற??” என்றவனுக்கு அவள் ஏன் அழுகிறாள் என்ற காரணம் புரியாமல் ஒன்றும் செய்ய முடியாமல் அவளையே பார்த்திருந்தான்.
அவளிடம் இருந்து இன்னமும் எந்த பதிலும் வராததால் எப்போதும் போல் அவனுக்கு கோபம் எட்டிப்பார்த்து அவனை பேச வைத்தது. “இப்போ எதுக்கு அழறன்னு சொல்லிட்டு அழு யாழினி. நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரனாவா தெரியறேன் உனக்கு”
“அன்னைக்கு என்னடான்னா என்னை வெறி பிடிச்சவன் ரேஞ்சுக்கு பேசுற. மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?? எதுவும் செய்யாமலே நம்மை மத்தவங்க குறை சொல்றது எவ்வளவு பெரிய வலின்னு எனக்கும் புரியுது” என்றவனின் குரல் கோபமாய் ஆரம்பித்து வேதனையாய் முடித்து தன்னை பற்றி மனைவிக்கு தெளிவிக்கும் முடிவுடன் தொடர்ந்து பேசியது.
“அண்ணி காணாம போன அன்னைக்கு நான் நடந்துக்கிட்டது தப்பு தான். ஆனா அன்னைக்கு என்னோட மனநிலையே வேற யாழினி. அனீஷ் இதை எப்படி தாங்கிக்க போறான். அண்ணியை நினைச்சு ரொம்ப பீல் பண்ணுவானேன்னு தான் நினைச்சேன்”
“ஒருவேளை உனக்கு தெரிஞ்சிருக்குமான்னு தான் உன்னை கேட்டேன். அப்படி பார்க்காத, நான் கேட்ட விதம் தப்புன்னு எனக்கு தெரியும். அதுக்காக நான் உன் கால்ல வேணா விழறேன், என்னை மன்னிச்சுடு யாழினி”
“எனக்கு தெரியும் என்னோட பேச்சுல செயல்லன்னு நான் உன்னை நெறைய காயப்படுத்தியிருக்கேன். உண்மையா தான் சொல்றேன் யாழும்மா, நிஜமாவே என் தப்பை உணர்ந்து தான் மன்னிப்பு கேட்கறேன் யாழும்மா”
“அன்னைக்கு இதை உன்கிட்ட பேச வந்தப்போ தான் நீ என்னென்னமோ பேசி என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்ட, ஆனா அன்னைக்கு நான் உன்னை அடிச்சதுக்கு எல்லாம் என்னால சாரி கேட்க முடியாது”
“உனக்கு வலிச்சிருந்தா என்னை மன்னிச்சுடு, ஆனா நீ பேசினதை என்னால தாங்க முடியலை. நீ பேசினது தப்பு உன்னை நிறுத்த வழி தெரியாம தான் அடிச்சிட்டேன்”
“நான் இவ்வளவு தூரம் சொல்றேன், இன்னமும் நீ அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம் யாழினி. நீ இப்படி நினைச்சு நினைச்சு அழற அளவுக்கு நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா??” என்றவனின் குரல் இப்போது பாவமாய் அவளை பார்த்து கெஞ்சியது.
யாழினி எதையோ நினைத்து அழுதிருக்க அவள் கணவனோ தான் தான் அவள் அழுகைக்கு காரணம் என்று நினைத்து வருந்துவதை என்னவென்று சொல்லுவாள். அதைவிட அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் உதட்டில் இருந்து வரவில்லை என்பதை நன்றாகவே உணர்ந்தாள் அவள்.
சபரி மாறியிருக்கிறான் என்று தெரியும் இந்தளவுக்கு அவன் மாற்றம் இருக்கும் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவனைஅன்று எவ்வளவு கீழ்த்தரமாய் நினைத்து பேசிவிட்டோம் என்று அவளுக்கு கஷ்டமாய் இருந்தது.
தான் அன்று பேசியதை நினைத்து வருந்தும் கணவனை என்ன சொல்லி தேற்றுவது என்று விழித்தவளுக்கு விழிகளில் கண்ணீர் மேலும் பெருக்கவே அது கண்ணில் இருந்து வழிந்து கொண்டிருந்தது.
‘இவ்வளவு பேசியும் இவளுக்கு புரியவில்லையே’ என்ற ஆதங்கம் மேலெழ சபரி ஒன்றும் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்தான். அப்போது தான் அவன் இறுக்கம் புரிய எட்டி சாவியை திருப்பி வண்டியை அணைத்தவள் சிறுகுழந்தையாய் இருகைகளையும் மாலையாக்கி கணவனின் மார்பில் சாய்ந்தாள்.
சபரி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனைவியை தன்னிடம் இருந்து பிரிக்க முயல அவளோ மேலும் அவனை நெருங்கினாள். அவன் பாடு தான் இப்போது திண்டாட்டமாக இருந்தது.
“யாழும்மா, அதான் சாரி சொல்லிட்டேனேம்மா. இன்னும் ஏன்மா அழற??” என்றான் அவன் சட்டையில் ஈரத்தை உணர்ந்து. மெதுவாய் நிமிர்ந்து அவனை பார்த்தவள் “நான் ஒண்ணும் அதுக்கு அழலை” என்றுவிட்டு மீண்டும் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.
அப்போது ரோட்டில் “இதுக எல்லாம் எங்க இருந்து வருதுங்க, ரொமான்ஸ் பண்ணுறதுக்கு இவங்களுக்கு வேற இடமே கிடைக்கலையா?? இப்படி நடுரோட்டில வண்டியை நிறுத்தி வைச்சுட்டு கொஞ்சிகிட்டு இருக்கறதை பாரு” என்று போற போக்கில் யாரோ சொல்ல விசுக்கென்று நிமிர்ந்தாள் யாழினி.
வேகமாக காரின் கண்ணாடியை இறக்கியவள் எட்டி பார்த்து “அண்ணா நில்லுங்க” என்றாள். யாரை கூப்பிடுகிறாள் இவள் ஒரு வேளை இவளுக்கு தெரிந்தவராய் இருப்பாரோ என்ற எண்ணத்தில் சபரியும் அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்று அமைதியாய் பார்த்தான்.
“என்னம்மா” என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தார்.
“உங்களுக்கு என்ன வந்திச்சு??” என்றாள் மொட்டையாக.
“என்னம்மா கேக்குற?? ஒண்ணும் புரியலை”
“எம் புருஷன் நான் கொஞ்சுறேன் உங்களுக்கு என்னண்ணா வந்திச்சு. நாங்க என்ன உங்க வீட்டுக்கு நடுவுல நின்னுட்டா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தோம். வந்துட்டார் பெரிசா நாட்டாமை பண்ண. நீங்க கிளம்புங்க நாம வீட்டுக்கு போவோம்” என்று சபரியை பார்த்து சொல்ல அவன் அவளை திகைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘இவளை என்னமோ என்று நினைத்தோம். என்னமா வாயாடுகிறாள்’ என்ற எண்ணமே அவனுக்கு. சட்டென்று நினைவு வந்தவனாய் “நாம கோமதி சித்தி வீட்டுக்கு போகணுமே” என்றான்.
“போகலாம், நம்ம வீட்டுக்கு போயிட்டு போகலாம்” என்றாள். அவனும் பதிலேதும் பேசாமல் வண்டியை வீட்டிற்கு செலுத்தினான். வீட்டிற்கு வந்ததும் சபரி எப்படி ஆரம்பிப்பது என்று அமைதியாய் இருக்க கணவன் எதுவுமே கேட்கவில்லை என்று அவள் அமைதியாய் இருந்தாள்.
சபரியால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “யாழினி வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னே, நாம வீட்டுக்கும் வந்தாச்சு. நீ எதுவும் பேசாமலே இருந்தா எப்படிம்மா??”
“அப்பாடா இப்போவாச்சும் உங்களுக்கு கேட்கணும்ன்னு தோணிச்சே” என்றாள் யாழினி.
“ஏன் நான் கேட்டா தான் சொல்லுவியா யாழினி??”
“கேட்காம எப்படி சொல்ல முடியும், இப்போ கேளுங்க நான் ஏன் அழுதேன்னு”
“அதான் நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவேயில்லையே”
“பேச்சை வளர்த்தாம இப்போ ஏன்னு கேளுங்க??” என்றாள் பிடிவாதமாய்.
“சரி ஏன் அழுத??”
“அது வந்து…” என்று ஆரம்பித்தவள் அவள் கடையில் இருந்து வெளியில் வந்த பின்னே நடந்ததை நினைவு கூர்ந்தாள்.
____________________
சபரி தான் பணம் செலுத்திவிட்டு வருவதாக கூற யாழினி கடையில் இருந்து வெளியில் வந்தாள். அங்கு அருகில் இருந்த கடையின் வெளியில் ஒரு பெண் தலையை பிடித்தவாறே அமர்ந்திருந்தாள்.
சட்டென்று எழுந்தவள் ஓங்கரித்து வாந்தி எடுக்கவும் யாழினி அவளின் அருகே சென்றாள். “என்னாச்சுங்க உடம்புக்கு எதுவும் முடியலையா?? தனியா வேற வந்திருக்கீங்க போல, என்னாச்சுங்க??” என்றாள் அப்பெண்ணை தாங்கி பிடித்தவாறே.
பொதுவாக யாழினி இது போன்று யாருக்கும் உதவி எல்லாம் செய்ததில்லை. ஏன் அருகே சென்று ஏன் என்று கூட கேட்டதில்லை. ஒருவேளை அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையோ!! என்னவோ!!
ஏன் என்றால் உடன் வரும் ஆராதனா தான் ஊருக்கு முந்திக்கொண்டு உதவி செய்ய ஓடிவிடுவாளே, அவளுக்கு தான் உதவி செய்வதென்பது அல்வா சாப்பிடுவது போல். இப்போது யாழினிக்கு சகவாசதோஷம் போலும்.
யாழினி கேட்ட கேள்விக்கு அப்பெண் பதிலேதும் கூறாமல் மீண்டும் ஓங்கரிக்க யாழினி அப்பெண்ணை அமர வைத்துவிட்டு காருக்கு சென்று தண்ணீர் பாட்டில் கொண்டு வந்தாள்.
“கொஞ்சம் இதை குடிங்க, அப்படியே முகத்தை கழுவுங்க” என்று கொடுக்க அப்பெண்ணும் முகம் கழுவி கொஞ்சம் நீரை பருகி ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
“இப்போவாச்சும் சொல்லுங்க என்னாச்சு??” என்றாள் யாழினி.
“இது நாலாவது மாசம் எனக்கு அதான் இப்படி தலைசுத்தல் வாந்தின்னு படுத்துது” என்றாள் அப்பெண்.
“அப்போ ஏன் தனியா வந்தீங்க?? துணைக்கு வீட்டு பெரியவங்களோ இல்லை உங்க கணவரையோ அழைச்சுட்டு வந்திருக்க வேண்டியது தானே. இல்லை வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே. எதுக்கு உங்களை இப்படி சிரமப்படுத்திக்கறீங்க??”
“இல்லை வந்து… அது… வீட்டில யாருமில்லை. நானும் அவரும் மட்டும் தான், காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவும் எங்களை ஏத்துக்கலை” என்று சொல்லி முடிக்கும் முன் அப்பெண்ணுக்கு கண்ணில் நீர் அரும்ப ஆரம்பித்தது.
யாழினிக்கு கோபமாக வந்தது, ‘இதற்கு தான் இந்த காதலே வேண்டாம் என்பது, எதற்கு காதலிக்க வேண்டும் இப்படி அவதிப்பட வேண்டும்’ என்று மனதிற்குள் சலித்துக்கொண்டவள் “ஏன் உங்க கணவர் எங்க போனார்?? உங்களை இப்படி தனியா விட்டு” என்று அவள் கேட்கும்போதே கையில் பழச்சாறுடன் இளைஞன் ஒருவன் வந்தான்.
“அவர் வந்திட்டார், எனக்காக தான் ஜூஸ் வாங்க போனார்” என்று கூறவும் யாழினி அவனை பார்த்து “இந்த மாதிரி நேரத்துல இப்படி தனியா விட்டுட்டு போகாதீங்க. அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. அவங்களை கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றவள் போகிற போக்கில் “கூட பெரியவங்க இருந்தா நல்லது” என்றுவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
வண்டியில் அமர்ந்த பின் திரும்பி அந்த பெண்ணை பார்க்க ஏனோ அவளுக்கு ஆராதனாவின் நினைவு வந்தது. ‘இந்த மாதிரி நேரத்தில் இவள் இப்படி தனியாக கிளம்பி சென்றிருக்கிறாளே?? இந்த பெண்ணுக்காவது கணவன் துணை அருகிருக்கிறது’
‘ஆனால் ஆராதனா?? இந்நேரம் என்ன கஷ்டப்படுவாளோ?? இதெல்லாம் இவளுக்கு தேவையா?? இவளை பார்த்துக் கொள்ள இத்தனை பேர் அருகிருந்தும் யாருமற்ற அனாதை போல் தனித்து சென்று என்ன கஷ்டப்படுகிறாளோ??’ என்று நினைக்க நினைக்க மனம் அவளுக்காய் துடிக்க ஆரம்பித்தது.
கண்கள் தானாய் கண்ணீர் சொரிய அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள். யாழினிக்காய் ஆராதனா சிறுவயது முதல் செய்த எல்லாமும் நினைவிற்கு வந்தது. ‘தன்னால் அவளை பார்த்துக் கொள்ள முடியவில்லையே அப்படி என்ன பிடிவாதம் இவளுக்கு’ என்ற கோபமும் இயலாமையும் அழுகையுமாய் அமர்ந்திருந்த வேளையில் தான் சபரி வந்து சேர்ந்தான்.
வந்தவனுக்கு மனைவி தன்னால் தான் அழுகிறாளோ என்றெண்ணி அவன் மனதில் உள்ளதை கொட்ட யாழினிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ‘நாமோ ஆராதனாவை நினைத்து அழுகிறோம், இவர் என்னென்னமோ சொல்கிறாரே’ என்று முதலில் அசுவாரசியமாய் கேட்க ஆரம்பித்தவள் அவன் பேச்சில் தன்னை தொலைத்தாள்.
சில நாட்களாகவே சரியாக பேசாதிருந்த சபரியின் ஒதுக்கம் அவளுக்குள் அவனை பற்றிய நல்ல விதையை தூவி எந்நேரமும் அவனையே நினைக்க வைத்திருந்தது. தான் அன்று பேசியதில் கணவனுக்கு உரைத்துவிட்டதோ!! அதனால் தான் தன்னிடம் பேசாதிருக்கிறானோ!! என்றெல்லாம் யோசித்து குழம்பியிருந்தவளுக்கு இன்றைய அவன் பேச்சு தித்திக்கும் தேனாய் இருந்தது.
முதலில் ஆராதனாவை நினைத்து கவலையில் அழுதவளுக்கு இப்போது கணவனின் பேச்சி சந்தோசம் தாளாமல் கண்ணீர் வந்தது. மனைவி பேசவில்லை என்று அவன் காரை கிளப்ப எக்கி கார் சாவியை திருப்பி அணைத்தவள் அவன் மேல் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
____________________
“நீங்க பேசினது கேட்டு தான் கடைசியா அழுதேன். சந்தோசத்திலே அழுதேன், எனக்கு இப்போ எவ்வளவு சந்தோசம் தெரியுமா?? அதை சொல்ல அந்த நேரத்துல எந்த வார்த்தையும் கிடைக்கலை. அதனால தான் கண்ணீரா வெளிப்படுத்திட்டேன்” என்றாள்.
சபரியோ அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன அதான் எல்லாம் சொல்லிட்டேனே?? இன்னும் என்ன என்னை ஆன்னு பார்த்திட்டு இருக்கீங்க??” என்றாள். சபரியால் ஒன்றை நன்றாக உணர முடிந்தது அது யாழினியின் இயல்பான பேச்சு.
திருமணமாகி இத்தனை நாளில் தன்னிடம் இயல்பாய் இருக்கும் மனைவி அவனுக்கு புதிது, தானாய் வந்து பேசுவதும் அவனை சீண்டி பேசுவதும் இதெல்லாம் முன்பு அவளிடம் இல்லை.
இப்போது தன்னை அவள் முழுதாய் எற்றுக்கொண்டிருக்கிறாள் என்பதை அவள் பேச்சும் செயலும் அவனுக்கு உணர்த்தியது. மனம் கொள்ளா மகிழ்ச்சி உண்டானது அவனுக்கு.
அவனுக்கு இருந்த மகிழ்ச்சியில் மனைவியை இறுக்கி அணைக்க வேண்டும் என்று தோன்றிய கைகளை அடக்க வழி தெரியாது அமர்ந்திருந்தான் சபரி. எங்கே அவளை தொட்டு இதற்காக தான் அப்படி பேசினீர்களா என்று மனைவி கேட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவனுக்கு எழாமலில்லை.
இவன் நினைவிற்கு நேர்மாறாய் அவன் இல்லத்தரசி யோசனை செய்து கொண்டிருந்தாள். ‘என்னாச்சு இவருக்கு, உடம்பு எதுவும் சரியில்லையா?? பொண்டாட்டி வாயை திறந்து இவ்வளவு பேசி இருக்காளேன்னு இல்லாம பார்த்திட்டு பேசாம இருக்கார்’ என்று குமைந்தாள்.
சிறிது நேரம் கழித்து “நாம பங்ஷனுக்கு கிளம்பலாமா யாழும்மா?? நேரமாச்சே சித்தி வேற நமக்காக காத்திருப்பாங்க” என்று எழுந்தான் அவன்.
‘அய்யோ என்னாச்சு இந்த மனுஷனுக்கு இப்படி கொஞ்சம் கூட ரியாக்சனே காட்டாம இருக்காரே. எங்கயாச்சும் விளக்கெண்ணெய் எதுவும் வாங்கி குடிச்சிட்டாரா!!’ என்று மனதிற்குள்ளாக அவனுக்கு கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டாள்.
அதற்கு மேல் அவனிடம் வெளிப்படையாக கேட்க அவளை கூச்சம் தடுக்க “சரிங்ககிளம்புவோம்” என்று அவளும் உடன் எழுந்தாள்.
____________________
“அம்மா ஏன்ம்மா இப்படி என் உயிரை எடுக்கறீங்க!! நான் தான் சொன்னேன்ல அனீஷும் ஆராதனாவும் வெளியூர் போயிருக்காங்கம்மா. அவங்க திரும்பி வந்ததும் நீங்க போய் உங்க ஆசை பொண்ணை கொஞ்சிக்கோங்க” என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல ராஜீவன் தான்.
“அதுக்காக ஒரு போன் கூட பண்ணமாட்டாங்களாம். புள்ளை கூட பேசி எம்புட்டு நாளாச்சு” என்று அங்கலாய்த்தார் ஆராதனாவின் அன்னை.
“ராஜீவா உங்க அம்மா கேக்குறதும் சரி தானே. புள்ளைய ஒரு போனாச்சும் பண்ணச் சொல்லேன்ப்பா, அவகிட்ட பேசி எம்புட்டு நாளாச்சு. உனக்கு மட்டுமே எப்போ பார்த்தாலும் பேசுறாங்க எங்களுக்கும் பேசலாம்ல” என்று வியாக்கியானம் பேசியது அவனின் பெரியம்மா.
“பெரியம்மா நீங்களுமா?? இப்போ என்ன உங்களுக்கு உங்க ஆசை மககிட்ட பேசணும் அவ்வளோ தானே. சரி பேசச் சொல்றேன் போதுமா??”
“ஊருக்கு போயிருக்காங்க, அங்க லைன் சரியா கிடைக்காதேன்னு பார்த்தா விட மாட்டேங்கறீங்களே அக்காவும் தங்கச்சியுமா??”
“ஏம்ப்பா மாசமா இருக்க புள்ளையா பாக்க நாங்க தவியா தவிக்கோம், உனக்கு கிண்டலா கிடக்கு. புள்ளை மாசமா இருக்குன்னு தெரிஞ்சப்போ போய் பார்த்தது எம்புட்டு நாளாச்சு. எம்புள்ளைக்கு வாய்க்கு ருசியா ஆக்கி போடணும்ன்னு ஆசையா இருக்காதா எங்களுக்கு” என்றவரின் கண்கள் இப்போது கண்ணீரை விட ஆரம்பித்தது.
“பிடிவாதம் அப்படியே உங்களை கொண்டு தான் அவளும் பிறந்திருக்கா. நினைச்சது அழுதாச்சும் நீங்க சாதிக்க நினைக்கறீங்க. உங்க பொண்ணும் அப்படியே தான் இருக்க”
“என்னய்யா சொல்லுற பிள்ளைய பார்க்கணும்ன்னு சொன்னது குத்தமா” இப்போது பெரியம்மா அவனை கேட்டார்.
“பெரியம்மா இதென்ன உங்க தங்கச்சி இப்படி கண்ணீர் வடிக்கறாங்க என்னன்னு கேட்க மாட்டீங்களா?? அதைவிட்டு நீங்களுமா?? நீங்க ரெண்டு பேரும் ஒழுங்கா அழாம இருங்க. அப்போ தான் ஆராதனாவை போன் பண்ண சொல்லுவேன்” என்று ஏதேதோ சொல்லி அன்னையையும் அவன் பெரியம்மாவையும் சமாளித்து வீட்டில் இருந்து கிளம்பி வெளியில் வந்தான்.
“ஹுப்” என்று பெருமூச்சு விட்டவனுக்கு இந்த இரண்டு மாதமாக வீட்டில் இருப்பவர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது. இன்றைக்காவது இவர்கள் இருவர் மட்டும் தான் சமயத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கொண்டு அவனை தலையால் தண்ணீர் குடிக்கும் அளவுக்கு கேள்வி கேட்டு துளைத்து விடுவார்.
‘ச்சே எல்லாம் அவளால வந்தது’ என்று திட்டிக்கொண்டவன் அனீஷின் வீட்டில் இருந்து கிளம்பிய தினத்தை நினைவு கூர்ந்தான்.
____________________
அனீஷ் வீட்டில் இருந்து இரவே கிளம்பி விட்டாலும் அவன் உடனே நாகர்கோவிலுக்கு கிளம்பவில்லை. கோவையிலேயே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியவன் ஆராதனாவை எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
இரவெல்லாம் ஏதேதோ யோசித்து அவன் உறங்க நள்ளிரவை கடந்திருக்க காலையில் அவனால் நேரமாய் எழ முடியாமல் போனது. எழுந்து குளித்து அறையை காலி செய்தவன் அப்போது தான் அவன் கைபேசியை பார்க்க புது எண்ணில் இருந்து பத்து மிஸ்ட் கால் வந்திருந்தது.
அதை பார்த்ததும் அவனுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது, ஒருவேளை இது ஆராதனாவாய் இருக்குமோ என்று. உடனே அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள கைகள் துடிக்க இப்போது அவன் கைபேசியே சிணுங்க ஆரம்பித்தது. “ஹலோ” என்றவாறே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான்.
வந்திருந்தது ஏதோ சர்வீஸ் கால், கடுப்பாகி போனை வைக்கவும் மீண்டும் கைபேசி சிணுங்கியது. அசுவாரசியமாகவே எடுத்தவன் இந்த முறையும் ஹலோ என்று கூட சொல்லவில்லை.
“ஹலோ அண்ணா” என்ற குரல் எதிர்முனையில் கேட்கவும் அவனுக்கு பரபரவென்றிருந்தது.
‘அய்யோ இப்போ நான் எங்க இருக்கேன்னு இவ கேட்டா என்ன சொல்றது?? இவ காணாம போனது தெரிஞ்ச மாதிரி சொல்லணுமா!! தெரியாத மாதிரி இருக்கணுமா!!’ என்று புரியாமல் முழிக்க அதற்குள் ஆராதனா அவனை பத்து முறைக்கும் மேல் அண்ணா அண்ணா என்று அழைத்திருந்தாள்.
“சொல்லும்மா எப்படி இருக்க??” என்று வாய் தன்னையறியாமல் கேட்டுவிட்டது.
“நல்லா… நல்லாயிருக்கேன் அண்ணா”
“நீ எங்க இருக்க?? உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே?? இப்போ பேசலாமா??” என்றாள் அவன் அருமை தங்கை.
‘இவளை…’ என்று பற்களை நறநறத்தவனுக்கு அவளை நேரில் கண்டால் ஒரு அறை விடவேண்டும் என்று கோபம் வந்தது. இப்படி தவிக்கவிட்டு யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டாளே என்ற கோபம் அவனுக்கு.
“நான் உன்னை பார்க்க தான் ஊருக்கு வந்தேன்ம்மா ஆராதனா, இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கே வந்திடுறேன், நாம பேசலாம்” என்றான் அவளை போட்டு வாங்கும் விதமாக.
அவன் தங்கையும் அதை கேட்டு பதறி தான் போனாள். “அய்யோ அண்ணா அங்க எல்லாம் போகாதா?? நா… நான் இப்போ அங்க இல்லை” என்றாள்.
“அங்க இல்லைன்னா எங்கம்மா போனீங்க?? நீயும் அனீஷும் எதுவும் வெளியூர் போய் இருக்கீங்களா?? இந்த அனீஷ் கூட ஒரு வார்த்தையும் சொல்லவே இல்லையே??” என்று தொடர்ந்து தன் நடிப்பாற்றலை கொட்டினான் தங்கையிடம்.
“நான் என்னை எதுவும் கேட்காதே?? நான் இப்போ கோயம்புத்தூர்ல இல்லை. வீட்டை விட்டு வந்துட்டேன்” என்றாள் அவன் அருமை தங்கை.
சுள்ளென்று வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “என்ன… என்னம்மா சொல்ற?? யாரு உன்னை என்ன சொன்னாங்க?? அனீஷ் உன்னை எதுவும் சொன்னானா??” என்று குரலை உயர்த்தி பேசியவன் வேண்டுமென்றே அனீஷின் மரியாதையை குறைத்தான்.
குரல் தான் உயர்ந்திருந்ததே தவிர அதில் சற்றும் கோபமோ ஆத்திரமோ இல்லை என்பதை ஆராதனா சாதாரண மனநிலையில் இருந்தால் கண்டு கொண்டிருந்திருப்பாள்.
“அண்ணா அவர் மேல எந்த தப்பும் இல்லை. நீ அவரை மரியாதை இல்லாம பேசாதே” என்று கண்டித்தவளை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே அவனுக்கு புரியவில்லை.
“அப்படின்னா நீ எதுவும் தப்பு செஞ்சியாம்மா?? அதுக்காக உன்னை வீட்டை விட்டு போக சொல்லிட்டாங்களா என்ன??அதெப்படி போக சொல்லலாம், வாயும் வயிறுமா இருக்கற பொண்ணை அனுப்பிடுவாங்களா??” என்று மீண்டும் குரலை உயர்த்தினான்.
“அய்யோ அண்ணா நீ கொஞ்சம் பேசாம இரேன். நான் சொல்றதையும் கேளேன்” என்று நிறுத்தவும் “சரி எதுவும் பேசலை நீயே சொல்லு” என்றான் ராஜீவன்.
“அது வந்து எங்களுக்குள்ள ஒரு சின்ன மனஸ்தாபம் அதான் நான் கொஞ்ச நாள் தள்ளி இருக்கலாம்ன்னு இருக்கேன். உடனே என்ன ஏதுன்னு கேட்டு நச்சரிக்காத, நான் எதையும் சொல்ற மனநிலையில இல்லை” என்று அவள் சொல்லி முடிக்கவும் சிறுது நேரம் எந்த பேச்சும் இல்லாதிருந்தது. “என்னண்ணா எதுவும் சொல்லாம இருக்க?? பேசுண்ணா” என்றாள்.
“இப்போ நான் என்ன பேசணும்ன்னு நீ நினைக்கிற?? நான் எதுவும் கேட்க கூடாதுன்னா எனக்கு எதுக்கு கால் பண்ணே??”
“ஏன் அண்ணா இப்படி பேசுற??”
“வேற எப்படி பேசணும்?? சொல்லு இப்போ எதுக்காக நீ எனக்கு போன் பண்ணே??”
“அது நீ… நீ எனக்காக ஒண்ணு செய்யணும்” என்றாள் தயங்கிக்கொண்டே.
“ஹ்ம்ம் சொல்லு”
“செய்யறேன்னு சொல்லு அண்ணா”
“நீ சொல்லுன்னு சொன்னேன்” என்றான் அவன் பிடிவாதமாய்
“நீங்க யாரும் நான் இங்க இல்லாதப்போ வரவேண்டாம்… அப்புறம்” என்று நிறுத்தினாள்.
“ஹ்ம்ம் அப்புறம்”
“அவர்கிட்ட போய் எதுவும் கேட்க கூடாது” என்று அவள் சொல்ல வந்ததை சொல்லி முடித்தாள்.
“ஹ்ம்ம் அப்புறம் வேற எதுவும் இருக்கா??” என்றவனிடம் “இல்லை” என்றாள்.
“சரி நீ சொல்றதை நான் கேட்கணும்ன்னு என்ன அவசியம் இருக்கு??”
“அண்ணா” என்றாள் அதிர்ந்து. பின் தன்னை சுதாரித்துக்கொண்டு “மாசமா இருக்கற என்னோட இந்த வேண்டுகோளை நீ நிறைவேத்துவன்னு நினைக்கிறேன்” என்று அவனை மடக்கினாள்.
தங்கைக்கு சளைக்காத அண்ணனாயிற்றே அவனும் பதிலுக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டான், இப்போது மீண்டும் வாயடைத்து போனது அவள் தான்.
“சரி நீ சொன்னதை செய்யறேன் என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீ பதில் சொல்லு” என்றான்.
என்ன பெரிதாக கேட்க போகிறான் என்று எண்ணியவள் “சொல்லுண்ணா” என்றாள்.
“நீ இப்போ எங்க இருக்க??” என்றான்.
“அதை தான் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டேனே”
“அப்போ நீ சொன்னதும் என்னால கேட்க முடியாது. நான் இப்பவே உங்க வீட்டுக்கு போறேன். அந்த அனீஷ் சட்டையை பிடிச்சு கேக்குறேன் ஏன் என் தங்கச்சியை வீட்டை விட்டு அனுப்பினேன்னு” என்று போனிலேயே கத்தினான் அவன்.
“அண்ணா அப்படி மட்டும் செஞ்சன்னா அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. இது புருஷன் பொண்டாட்டி பிரச்சனை இதுல நீ வீணா தலையை கொடுக்காதே”
“நான் ஒண்ணும் உங்க புருஷன் பொண்டாட்டி தகராறை பத்தி கேட்கலை. என்னோட தங்கச்சி பத்தி தான் கேட்டுட்டு இருக்கேன்”
“அய்யோ அண்ணா ஏன் இப்படி பேச்சுக்கு பேச்சுன்னு பேசிட்டே இருக்க” என்றாள் சலித்தவாறே.
“பிடிவாதம் பிடிவாதம் அவ்வளவும் பிடிவாதம். என்னை பிளாக்மெயில் பண்ண மாதிரி இப்போ உன் புருஷனையும் கார்னர் பண்ண பார்க்குற அதானே. நீ நினைச்சது சாதிக்கணும் அதுக்காக என்ன வேணாலும் செய்வ அப்படி தானே”
ராஜீவனின் பேச்சில் அவள் முகம் கன்றி போனது. “அண்ணா நீ அங்க போய் எதுவும் கேட்க மாட்ட தானே??”
“எந்த முகத்தை வைச்சுட்டு நான் அங்க போக, நீ செஞ்ச வேலைக்கு அவங்க என்னை கழுத்தை பிடிச்சு வெளிய தான் தள்ளுவாங்க. அதுக்கு தானே இதெல்லாம் செய்யற” என்றதும் அந்த புறத்தில் இருந்து விசும்பல் ஒலி கேட்கவும் பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்து போல் சட்டென்று அடங்கினான்.
‘ச்சே இந்த மாதிரி நேரத்துல போய் நான் இவளை ரொம்ப திட்டிட்டேனே’ என்று அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது. கோபத்தை உள்ளடக்கிக் கொண்டு “அப்படி என்ன அடம் ஆராதனா உனக்கு?? நீ செஞ்சதுக்கு பின்னாடி ஆயிரம் விளக்கம் கொடுத்தாலும் நீ செய்யற தப்பு சரின்னு ஆகாதும்மா”
“அண்ணா நடக்குறதுக்கு நான் பொறுப்பு நீ அதை விட்டுடு. கடைசியா சொல்றேன். என் மேல உனக்கு உண்மையாவே பாசம் இருந்திச்சின்னா நான் கேட்டதை நீ செய். வாயும் வயிறுமா இருக்க பொண்ணு கேக்குறாளேன்னு நினைச்சு செய்” என்று அவனை சென்டிமென்ட்டாக மடக்க பார்த்தாள்.
மீண்டும் பொங்கிய பால் போல் ராஜீவனும் விறைத்தான். “முடியாது என்ன செய்வ?? நம்ம வீட்டில இருக்கவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியாது”
“நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன். நீ எனக்காக செய்வன்னு எனக்கு தெரியும். நான் உன்னை நம்புறேன், இப்போ போனை வைக்குறேன்” என்றுவிட்டு போனை வைக்க போனாள்.
“உனக்கென்ன அவ்வளவு நம்பிக்கை என் மேல, உன் நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியாது” என்றான் ராஜீவன் வீம்பாக.
“நீ கண்டிப்பா எனக்காக செய்வ நான் அதை நம்புறேன். அப்படி உனக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்ன்னா சொல்லிக்கோ, அதுக்கு பிறகு நடக்குற விபரீதத்துக்கு நீ தான் பொறுப்பாவே” என்றாள்.
“என்ன மிரட்டுறியா??”
“இல்லைண்ணா என்னை புரிஞ்சுக்க சொல்றேன், நான் வைக்கறேன். நான் உன்கூட பேசி பேசி களைச்சு போயிட்டேன். என்னால இதுக்கு மேல உன்கிட்ட புரிய வைக்க முடியாது. உன்னை நம்பி தான் போனை வைக்குறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தும் விட்டாள்.
ராஜீவனுக்கு தான் இப்போது என்ன செய்வது என்று மனதை அறுத்தது. நாம எல்லார்கிட்டயும் சொல்லி இவ எதுவும் விபரீதமா செஞ்சுடுவாளோ!! ஒரு நாள் காணாம போயே நம்மை கதிகலங்க வைச்சவ. நாம வீட்டில சொல்லி அதுனால புதுசா எதுவும் வந்திட்டா!!’ என்று யோசித்தவனுக்கு என்ன முடிவெடுக்க என்று புரியவில்லை.
உடனே அனீஷுக்கு அழைத்தான். “சொல்லுங்க ராஜீவ்” என்றான் அவன். “அனீஷ் உங்ககிட்ட பேசணும், நீங்க நேர்ல வர்றீங்களா?? நான் இங்க தான் ப்ரோக் பீல்ட் மால்ல இருக்கேன்” என்றான்.
“நீங்க இன்னும் நாகர்கோவில் போகலையா?? சரி இருக்கட்டும் நான் நேர்ல வந்து பேசிக்கறேன். இன்னும் ஒரு பதினஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்” என்றுவிட்டு சொன்னபடியே கிளம்பி வந்தான் அவன்.
அவனை பார்த்ததும் ஆராதனா பேசியதை அப்படியே சொல்லி முடித்தான் ராஜீவன். “சாரி அனீஷ் தப்பா எடுத்துக்காதீங்க, அவ மட்டும் நேர்ல என்கிட்ட இப்படி பேசியிருக்கணும். நல்லா சப்புன்னு நாலு அறை விட்டிருப்பேன்” என்றான் இன்னமும் கோபம் குறையாத குரலில்.
“எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை அனீஷ், அதான் உங்களை கூப்பிட்டேன். நான் இப்போ என்ன பண்ணணும். உங்க பொண்டாட்டியை நீங்க நல்லா புரிஞ்சு வைச்சு இருக்கீங்க”
“நீங்க சொன்ன மாதிரியே அவ போன் பண்ணா, இப்போ அவ அடுத்து என்ன செய்வான்னு நீங்க யூகிச்சு இருப்பீங்க. நீங்களே சொல்லிடுங்க நான் என்ன பண்ண?? ஊர்ல இருக்கவங்களை நான் எப்படி சமாளிக்க??” என்றான்.
“அதுக்கு தான் உங்க தங்கையே வழி சொல்லிட்டாளே ராஜீவ். நாங்க ரெண்டு பேரும் ஊருக்கு போய் இருக்கோம்ன்னு. அதையே அவங்களுக்கு சொல்லிடுங்க”
“எனக்கு என்னோட ஆஸ்பிட்டல் விஷயமா நார்த் சைடு போக வேண்டி இருந்ததுனால ஆராதனாவையும் என்னோட அப்பா, அம்மாவையும் நான் கூடவே கூட்டிட்டு போய் இருக்கேன்னு சொல்லுங்க”
“அவங்க பாட்டுக்கு இங்க புறப்பட்டு வந்தா நான் என்ன செய்ய??” என்ற ராஜீவனிடம் “இங்க தான் நாங்க இருக்க மாட்டோமே. சபரியும் யாழினியும் மட்டும் தான் இருப்பாங்க போதுமா?? உங்க தங்கை சொன்ன மாதிரி செய்ங்க. அவளை நாம விட்டு தான் பிடிக்கணும்” என்று பதில் கொடுத்தான் அனீஷ்.
“என்கிட்டே அவளோட எதிர்பார்ப்பு என்னன்னு எனக்கு தெரியும். அவளை எப்படி இங்க வரவைக்கறத்துன்னு நான் பார்த்துக்கறேன். ஒரு மூணு நாலு மாசம் எனக்கு டைம் கொடுங்க, சரியா” என்றான்.
“நீங்க என்ன அவ்வளவு பொறுமைசாலி அனீஷ். எனக்கு நிஜமாவே புரியலை அவ பண்ணுறது எனக்கே அவ்வளவு கோபம் வருது. நீங்க ஏன் இப்படி இருக்கீங்க??”
“அவ தான் சின்ன குழந்தையாட்டம் அடம் பிடிக்கறா, குழந்தைங்க அடம் பிடிச்சா அவங்களை விட்டு தானே பிடிப்போம். இதுவும் அப்படி தான், சீக்கிரமே எல்லாம் சரியாகும்” என்றான் அனீஷ். மனதிலோ அடுத்து அவன் செய்ய வேண்டியதை வரிசைப்படுத்திக் கொண்டான்….