அத்தியாயம் – 10
மதுமிதாவிடம் பேசிவிட்டு போனை கீழே வைத்த ஆராதனாவை இப்போது குழப்பமே சூழ்ந்தது. சுனீஷிடம் இப்போது மதுவை பற்றி பேசலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் வேறு வந்தது!!
தற்சமயம் இது குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று எண்ணியவள் அந்த சிந்தனையை சற்று ஒதுக்கினாள். சுனீஷுக்கும் அவன் அண்ணன்களுக்கும் எதனால் பிரச்சனை வந்திருக்கும் என்று அடுத்து யோசிக்க ஆரம்பித்தாள்.
அதுபற்றி சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரிப்பதைவிட வேறு யாரிடம் விசாரிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம் உதித்ததுமே அவளுக்கு மாமியாரின் நினைவே வந்தது.
பிள்ளைகளை அவர் விட்டுக்கொடுத்து பேசமாட்டார் என்று முன்பே அறிந்திருந்தாலும் அவரிடமே கேட்பது என்று முடிவெடுத்தாள். எப்படி அவரை கேள்விகள் கேட்கலாம்?? என்று யோசித்துக் கொண்டே சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்தாள்.
திலகவதி அவளை நோக்கி திரும்பியவர், “என்னடா ஆராம்மா?? என்ன யோசனையில இருக்க??” என்றார். திகைத்து திரும்பியவள் “என்னாச்சு அத்தை?? என்றாள். “என்கிட்ட ஏதோ கேட்கணும்னு தயங்கி நிற்கற மாதிரி தெரியுது, அந்த யோசனையோட பாத்திரத்தை உருட்டிட்டு இருக்க போல, சொல்லுடா என்ன கேட்கணும்?? உனக்கு என்கிட்ட?? என்றார் அவர்.
இப்போது இவரிடம் பேசலாம் இது தான் தகுந்த சந்தர்ப்பம் என்று அவளுக்கு தோன்றியது. யாழினியை சபரீஷ் எங்கோ வெளியே அழைத்து சென்றிருந்தான். வீட்டிலிருப்பது மாமியாரும் மருமகளும் மட்டுமே என்றுணர்ந்து தெம்பானாள்.
“அத்தை சுனீஷுக்கும் இவங்களுக்கும் என்ன பிரச்சனை?? ஏன் சுனீஷ் தம்பி தனியா போய் இருக்காங்க?? என்று அவள் மனதில் கேட்க நினைத்ததை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவரிடம் பட்டென்று கேட்டுவிட்டாள்.
“என்னத்த சொல்றதுடா?? ஒரு ஒருத்தருக்கு ஒரு ஒரு நியாயம். பெரிசா சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லைடா… ஒரு சின்ன கருத்து வேறுபாடு தான் அவங்களுக்குள்ள…”
“பெரியவங்க சொல்றது சின்னவனுக்கு ஒத்து போகலை… சின்னவனோட போக்கு பெரியவங்களுக்கு ஒத்து போகலை… எல்லாம் சரியாகிடும் நீ வாடா நாம போய் தோட்டத்துல பூப்பறிக்கலாம்” என்று பேச்சை மாற்றி அவளை வெளியே அழைத்து சென்றார்.
மாமியார் பேச்சை மாற்றியதும் வேறு வழியில்லாமல் அவளும் அத்துடன் அந்த பேச்சை விட்டு வேறு பேசிக் கொண்டிருந்தாள். இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல் அன்று இரவே கணவனின் மார்பில் சாய்ந்துக் கொண்டு அதே கேள்வியை கேட்டாள்.
அனீஷ் லேசுப்பட்டவனா என்ன அவனும் சாதாரணம் போலவே அவளிடம் பேசி அது பெரிய விஷயம் ஒன்றுமில்லை சின்னதாய் தோன்றிய மாறுபட்ட கருத்து என்பதாய் கூறி அவளை அணைதத்தவன் அதற்கு மேல் அவளை பேசவும் விடவில்லை.
எதற்கு இப்படி எல்லாரிடமும் கேட்டு மல்லுக்கட்டிக் கொண்டு என்று யோசித்தவள் காரணகர்த்தாவிடமே கேட்டுவிடுவது என்று முடிவு செய்து சுனீஷிற்கு போன் செய்தாள்.
போனை காதில் எடுத்து வைத்தவன் “சொல்லுங்க அண்ணி” என்று ஆரம்பித்து பரஸ்பர நலவிசாரிப்புகளை தொடரவும் அவனுக்கு பதில் கொடுத்து முடித்தவள் நேரடியாகவே ஆரம்பித்தாள். “நான் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன் எனக்கு அதுக்கு பதில் வேணும்” என்றாள்.
“சொல்லுங்க அண்ணி” என்றவனிடம் பேசியவளின் பேச்சு சில மணிகளை கடந்து செல்ல பேசி முடித்து ஒருவழியாய் போனை வைத்தவளின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை. ஒரு பெருமூச்சுடன் அவர்கள் அறைக்கு சென்று டிவியை ஆன் செய்து அமர்ந்தாள்.
அப்போது அவளைத் தேடி அறைக்குள் வந்தாள் யாழினி. யாரோ வரும் அரவம் கேட்டு சட்டென்று திரும்பியவள் ஆச்சரியமாக பார்த்தாள். யாழினி தானாக வந்திருக்கிறாளே தன்னை தேடி என்ற ஆச்சரியம் அதில் தொக்கி நின்றது.
“சொல்லு யாழு, என்னைத்தேடி நீயே வந்திருக்க?? என்னடி??” என்றாள் ஆராதனா.
“உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்??” என்றாள் மொட்டையாக.
“என்னடி சொல்ற?? எனக்கு புரியலை!!” என்று விழித்தாள் ஆராதனா.
“புரியாம தான் வேண்டாத வேலை எல்லாம் பார்க்குறியா?? இல்லை புரிஞ்சு தான் செய்யறியா??” என்றாள் மீண்டும் அவள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல்.
“என்ன தான்டி உனக்கு பிரச்சனை?? என்னமோ அதிசயமா பேச வந்திருக்கேன்னு பார்த்தா?? என்னென்னமோ உளறிட்டு இருக்கே?? என்ன வேணும் உனக்கு??” என்று பொரிந்தாள்.
“அண்ணன் தம்பிகளுக்குள்ள ஆயிரம் இருக்கும் நீ எதுக்கு தேவையில்லாம அதுல எல்லாம் தலையிடுற. இன்னைக்கு அவங்க அடிச்சுக்குவாங்க நாளைக்கு அவங்க சேர்ந்துக்குவாங்க, அதையெல்லாம் நீ எதுக்கு ஆராய்ச்சி பண்ணுற??”
‘ஓ இதுக்கு தான் இந்த குதி குதிக்குறாளா??’ என்று நினைத்தவள் “ஆமா அப்படி தான் ஆராய்ச்சி பண்ணுவேன். அதை பத்தி உனக்கென்ன?? நம்ம வீட்டுல இருக்கவங்க ரெண்டு பட்டு இருந்தா அதை சேர்த்து வைக்க நினைக்க மாட்டோமா??”
“நான் அதை தான் செய்ய நினைச்சேன். நான் அப்படி தான் செய்வேன், உனக்கு பிடிக்கலைன்னா நீ பேசாம இரு” என்று பதில் கொடுத்தாள் ஆராதனா.
“நீயெல்லாம் திருந்தவே மாட்டியாடி?? ஏற்கனவே ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறேன்னு சொல்லி ஒரு ஜாதி பிரச்சனையை ஆரம்பிச்சு வைச்ச??அந்த பஞ்சாயத்தே நமக்குள்ள இன்னும் ஓயாம இருக்கு” என்று நொடித்தாள் மற்றவள்.
“ஓ நீ என் கூட பேசாம இருக்க அந்த ஜாதி பிரச்சனை தான் காரணமா?? இல்லை நீ சொல்ல சொல்ல கேட்காம அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தான் காரணமா??” என்று தோழியின் முகத்தை ஏறிட்டாள்.
உண்மையில் யாழினிக்கு ஆராதனா அவள் பேச்சை மீறி ராகினிக்கு திருமணம் செய்து வைத்ததே கோபம். அதனால் தானே ஜாதி பிரச்சனை வேறு கிளம்பியது.
“ஆமாடி நீ என் பேச்சை கேட்காம ராகினிக்கும் சுரேஷ்க்கும் கல்யாணம் பண்ணி வைச்சது எனக்கு பிடிக்கலை. உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை” என்றாள் பதிலுக்கு.
“உனக்கு காதல்ன்னா ஏன்டி இவ்வளவு வெறுப்பு?? காதலிச்சு கல்யாணம் பண்ணுறது அவ்வளவு பாவமா?? உங்கக்கா ஒருதலையா காதலிச்சு அந்த காதல் தோத்து போனதுல கோழைத்தனமா தற்கொலை பண்ணிக்கிட்டா அதுக்கு என்ன பண்ண முடியும்??”
“அதுக்காக காதலே தப்புன்னு சொல்லிடுவியா?? லூசாடி நீ?? என்று தோழிக்கு பதிலுக்கு பதில் கொடுத்தாள் ஆராதனா.
“ஹேய் எங்கக்கா பத்தி எதுக்குடி பேசுற?? அவதான் இப்போ உயிரோட இல்லையே?? அவளை ஏன் பேசுற?? சரியோ தப்போ அவ உயிரை விட்டதுக்கு காரணம் காதல். அதுனால தான் எனக்கு அது பிடிக்கலை”
“நான் காதலே தப்புன்னு சொல்லலை. என்னை சேர்ந்தவங்க அதுனால பாதிக்கப்படுறதை நான் விரும்பலை. அதுனால தான் உன்னையும் எதுவும் செய்ய வேணாம்ன்னு சொன்னேன்”
“உன் கூட சண்டை போட்டேன், ஆனா நீ தான் யார் பேச்சையுமே கேட்காம உன்னிஷ்டப்படி அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சு. அதுக்கு பிறகு எவ்வளவு பஞ்சாயத்து நடந்தது எல்லாம் மறந்து போச்சா உனக்கு??”
“உன்னோட நான் பேசலைன்னு கூட நீ கவலைப்படல. அவங்களுக்கு கல்யாணம் பண்ணுறது தான் உன் முதல் கடமைன்னு செய்து வைச்ச??” என்றவளை இடைமறித்து ஆராதனா பேசினாள்.
“அப்போ நான் உன் பேச்சு கேட்டு ஆடணும்னு சொல்றியா?? நான் இப்படி தான்னு உனக்கு தெரியாதா?? எனக்கு சரின்னு தோணினதை நான் சின்ன வயசுல இருந்து செஞ்சுட்டு தானே இருக்கேன்”
“தப்புன்னு தெரிஞ்சா எதிர்த்தும் இருக்கேன். ராகினிக்கு இப்போ என்ன குறைன்னு நீ நினைக்கிற, சுரேஷ் கூட அவ சந்தோசமா தானே இருக்கா?? அந்த ஜாதி பிரச்சனை கூட இப்போ இல்லையே??”
“அவங்க குடும்பத்துல எல்லாருமே இப்போ ஒண்ணா சேர்ந்துட்டாங்களே?? அப்புறமும் நீ தானேடி வீம்பு பிடிச்சிட்டு என் கூட பேசாம இருக்கே. எத்தனை முறை உன்கிட்ட வந்து பேசியிருப்பேன்” என்றாள் ஆராதனா.
“நீ எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்கோ?? எனக்கு லவ் பிடிக்காதுன்னு நான் எப்பவும் சொல்லலை. என்னை சுத்தி யாரும் தேவையில்லாத பிரச்சனையில மாட்டிக்க கூடாதுன்னு நான் நினைக்கிறேன்”
“எனக்கு நீ முக்கியம், மத்த யார் பத்தியும் எனக்கு கவலையில்லை. உன்னை பத்தி மட்டும் தான் கவலை. நீ தேவையில்லாத விஷயத்துல தலையிட்டு எந்த பிரச்சனையிலையும் மாட்டிக்கறது எனக்கு பிடிக்கலை”
“உன்னால அதை கேட்க முடியாதுன்னா விட்ரு. இனி உன்கிட்ட நான் எதுவுமே சொல்ல மாட்டேன். நீயும் இனி என்கூட பேச முயற்சி பண்ணாதே” என்று கோபமாக முறைத்தாள் யாழினி.
“போடி போ, உன்னிஷ்ட்டப்படியே நீ இரு. நான் இப்படி தான் என்னால என்னை மாத்திக்க முடியாது. உன்னால உன்னை மாத்திக்க முடியாத போது என்னாலயும் முடியாது” என்று சொல்லிவிட்டு திரும்பியவள் அப்படியே நின்றுவிட்டாள்.
மருமகள்கள் இருவரையும் கோவிலுக்கு போக அழைக்க வந்திருந்த திலகவதி உரத்த குரலில் இருவரும் பேசுவதை கேட்டு வாயிலிலேயே நின்றுவிட்டார். ஆராதனா அமைதியாய் இருப்பது கண்டு யோசனையுடன் திரும்பிய யாழினியும் அமைதியானாள்.
திலகவதிக்கு தான் இப்போது எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. இரு மருமகள்களும் ஒருவர் மீது மற்றொருவர் மாறாத அன்புடனே இருப்பதை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை அந்த அன்பினாலே இருவரும் வேறுபட்டு நிற்பதை நினைத்து வருத்தப்படுவதா என்று யோசித்தார்.
முதல் முறையாய் அவருக்கு ஆராதனா குறித்து சற்றே கலக்கமாக இருந்தது. அவள் குணம் பற்றி யாழினி வாய் மொழியாலும் அவளே கூறியிருந்ததை கேட்டிருந்ததாலும் ஏதேதோ எண்ணி சற்றே கலங்கினார்.
ஏதோ ஒன்று நடக்கப் போவதாய் அவர் மனம் கூற ஆரம்பித்தது. ‘கடவுளே எதுவாய் இருந்தாலும் அது நல்லதாய் இருக்க வேண்டும்’ என்று மனதார பிரார்த்தித்த வேளை ஆராதனா வாயை திறந்தாள்.
“அத்தை, நீங்க எப்போ வந்தீங்க??”
“இல்லைடா உங்க ரெண்டு பேரையும் சாரதாம்பாள் கோவிலுக்கு கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சேன். அதான் உங்கட்ட சொல்லி சாயங்காலம் தயாரா இருக்க சொல்லலாம்ன்னு வந்தேன்”
“சரி நீங்க சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பி இருங்க நாம போயிட்டு வந்திடுவோம்” என்று கூறிவிட்டு அவர் எதுவும் கேட்காமலே நாசூக்காய் வெளியேறி சென்றுவிட்டார்.
ஒருவரை ஒருவர் முறைத்த சண்டைக்கோழிகளும் மீண்டும் முறைத்துக் கொண்டு அவர்கள் வேலையை பார்க்கச் சென்றனர்.
____________________
நாட்கள் தன் போக்கில் விரைந்து செல்ல விளையாட்டாய் ஒரு மாதம் சென்றிருந்தது. சுனீஷ் இப்போதெல்லாம் மதுவிடம் அதிக நெருக்கம் காண்பிப்பதாய் அவளுக்கு தோன்றியது.
அவளுக்கு அது பிடித்திருந்தாலும் அவன் எப்போதும் இப்படி தானா?? இல்லை நமக்கு தான் எதுவும் வித்தியாசமாய் தோன்றுகிறதா?? என்ற ஆராய்ச்சியும் அவளுக்கு இருந்தது. அவளின் அன்னை வராத பொழுதுகளில் அவள் வந்து சமைத்து தரும் வேளையில் அவளுக்கு உதவி செய்வதாக சொல்லிக் கொண்டு அவனும் சமையலறையில் வந்து நின்றான்.
ஏனோ உள்ளுக்குள் குறுகுறுப்பாய் உணர்ந்த போதும் அவனை அவளால் தடுக்க முடியவில்லை. வந்தவன் உண்மையிலேயே காயை வெட்டிக் கொடுத்துக்கொண்டு ரசத்திற்கு புளிக்கரைத்துக் கொடுத்து என்று உதவிகள் மட்டுமே புரிந்தான்.
அவனை பற்றி ஒரேடியாய் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறினாள். அவனை பற்றிய எண்ணங்களை ஒதுக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனம் கேட்காமல் அவனையே நினைக்கிறதே என்று மனதோடு மல்லுக்கட்டி பார்த்தவள் முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.
அப்போது சுனீஷிற்கு அழைப்பு வர அதை எடுத்து காதில் வைத்தவன் பேசிய பேச்சுக்கள் அவளை கவலைக் கொள்ள செய்தது. “சரிம்மா… சரி அதான் பண்ணிக்கறேன்னு சொல்றேன்ல”
“இவ்வளவு சீக்கிரம் எல்லாம் பண்ணிக்க முடியாது. அண்ணாக்கு கல்யாணம் பண்ண லேட் ஆனா எனக்கும் அப்படியே ஆகணும்ன்னு என்ன இருக்கு. இப்போ தானே இருபத்தினாலு முடிஞ்சிருக்கு”
“பார்ப்போம்மா, கொஞ்ச நாள் ஆகட்டும். எனக்கும் பிடிக்கணும்ல, சரிம்மா சரி கொஞ்சம் டைம் கொடுங்க. என்னது இன்னைக்கு ஈவினிங் சொல்லணுமா?? அம்மா ப்ளீஸ்ம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க”
“சரி சொல்றேன், நீங்க வைங்க. அதான் சொல்றேன்னு சொல்லிட்டேன்ல வைங்க” என்றுவிட்டு போனை வைத்தவனின் பார்வையை எதிர்நோக்க முடியாமல் ஏதோ வேலை போல் காட்டிக் கொண்டு கீழே குனிந்து எதையோ செய்துக் கொண்டிருந்தாள் மதுமிதா.
“மிது…” என்று மெதுவாய் அழைத்தவனின் அழைப்பு அவள் செவியை எட்டவில்லை. எங்கே அவள் கண்கள் கலங்கி மனம் தான் எதையோ நினைத்து உழன்றுக் கொண்டிருந்ததே, அவள் என்ன செய்வாள்.
“மிது…” என்று சத்தமாய் அழைத்தும் பயனில்லாமல் போக குனிந்து அவள் தோளைத் தட்டினான். அப்போது தான் சுயவுணர்வு பெற்றவள் கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.
“சொல்லுங்க சார்” என்று அவசரமாய் கேட்டவளை பார்த்து முறைத்தான் அவன். “என்ன சார் என்னாச்சு எதுக்கு கூப்பிட்டீங்க?? இப்போ எதுவும் பேசாம முறைச்சு பார்த்தா என்ன அர்த்தம் சார்??” என்று மூச்சுக்கு மூன்னூறு சார் போட்டவளை மீண்டும் முறைத்தான்.
“உன்னை எத்தனை முறை சொன்னாலும் கேட்கவே மாட்டியா?? என்னை சார்ன்னு கூப்பிடாதே மிது. என்னை சுனீஷ்ன்னே கூப்பிடு” என்றான்.
‘ஓ இதுக்கு தான் முறைச்சாரா’ என்று நினைத்தவள் “மறந்திட்டேங்க சாரி” என்றாள். “ஆமா எதுக்கு கூப்பிட்டீங்க??” என்றாள் நினைவு வந்தவளாய்.
“இன்னைக்கு ஈவினிங் நீ ப்ரீயா?? உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“என்… என்ன விஷயம்??” என்றாள்
“என் கல்யாண விஷயமா அம்மா ஒரு முடிவு எடுக்க சொன்னாங்க, எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. என்னோட ப்ரிண்ட்ஸ் எல்லாம் வேற வெளிநாட்டுல இருக்காங்களா??”
“யார்கிட்டயும் நினைச்ச உடனே பேச முடியலை. இங்க எனக்கு இருக்க ஒரே பிரண்ட் நீ தான். அதான் உன்கிட்ட கொஞ்சம் பேசிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்ன்னு இருக்கேன்” என்றான்.
உள்ளூர ஏதோ வலி எடுப்பது போல் இருந்தது அவளுக்கு. எதையும் வெளிக்காட்டாது “சரிங்க பேசலாம், எத்தனை மணிக்கு வரணும்ன்னு சொல்லுங்க. நான் பர்மிசன் போட்டுட்டு வர்றேன்” என்றாள்.
“ஒரு நாலு மணிக்கு நானே உங்க ஹோட்டல்க்கு வர்றேன், சரியா??”
“ஹ்ம்ம்… சரிங்கநான் கிளம்பறேன்” என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவள் ஹோட்டலுக்கு விரைந்தாள். அன்றைய பொழுது அவளுக்கு சரியான பொழுதாக இல்லை.
வேலையிலும் மனம் லயிக்கவில்லை, ஏதோ கடமையாய் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் நெருங்க நெருங்க அடிவயிற்றில் ஒரு பந்து உருண்டது.
மூணரை மணி ஆகியிருந்த வேளை அவள் கைபேசி அழைப்பு விடுக்க எடுத்தவள் “ஹலோ!!!” என்றாள்.
அவள் தங்கை சுஷ்மிதாவின் பள்ளியில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. போனில் பதட்டமாய் பேசியவள் உடனே கிளம்பி வருவதாய் கூறிவிட்டு மேனேஜரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள்.
வெளியில் வந்தவள் அவசரமாய் பேருந்தை பிடித்து தங்கையின் பள்ளிக்கு கிளம்பினாள். அதற்குள் அவள் கைபேசி மீண்டும் அழைக்க அதை எடுத்து பார்த்தவளுக்கு அப்போது தான் சுனீஷின் ஞாபகமே வந்தது.
“ஹலோ சொல்லுங்க” என்றாள்
“எங்க இருக்க மிது?? உன் ஹோட்டல்ல தான் இருக்கேன்” என்றான்.
“சுஷ்மி ஸ்கூல்ல இருந்து போன் வந்திச்சு, நான் இப்போ அங்க தான் போயிட்டு இருக்கேன் பஸ்ல” என்றாள்.
“சரி எங்க இருக்க சொல்லு??” என்று விசாரித்தவனுக்கு அவள் பதில் கூற அடுத்து வந்த நிறுத்தத்தில் அவளை இறங்கி காத்திருக்குமாறு சொன்னவன் ஐந்தே நிமிடத்தில் அங்கு வந்து நின்றான்.
“வண்டியில ஏறு, நானும் வர்றேன்” என்றவன் அவளை பார்க்க அவள் பதட்டம் அவனுக்கு உறைத்தது. “எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற, அவங்க அப்படி என்ன தான் சொன்னாங்க??” என்றான்.
“ஏதோ பிரச்சனைன்னு தெரியுது, அவங்க பேசுனது அப்படி தான் தெரிஞ்சுது. அம்மாவுக்கு தெரியாம என்னை வரச்சொல்லி இருக்காங்கன்னா என்னமோ இருக்குன்னு தானே அர்த்தம்” என்றவளின் பதட்டம் அவனுக்கு புரிந்தது.
“நீ ஒண்ணும் பதட்டப்பட வேண்டாம், அதான் நான் கூட வர்றேன்ல” என்றவன் விரைந்து வண்டியை செலுத்தினான். சுஷ்மிதாவின் பள்ளி வாசலில் சென்று இறங்கவும் மதுமிதா ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
‘எதுக்கு இப்படி ஓடுறாளோ’ என்று எண்ணிக்கொண்டே அவனும் பின்னால் சென்றான். பிரின்சிபாலின் அறையில் அவள் வகுப்பு ஆசிரியையும் இருக்க பதட்டமாய் உள்ளே நுழைந்தவளின் பின்னே நுழைந்தவனை இவன் யார் என்ற ரீதியாய் பார்த்தனர் அங்கிருந்த இருவரும்.
“சொல்லுங்க மிஸ், நா… நான் தான் சுஷ்மியோட அக்கா” என்றாள்.
“ஹ்ம்ம் உட்காருங்க. ஆமா இவர் யாரு இவரை எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க??” என்று அவனை கேள்வியாய் நோக்கிய தலைமை ஆசிரியையை பார்த்து சுனீஷ் அவனாகவே பதிலளித்தான்.
“ஹலோ மேம், நான் சுனீஷ். எஸ்டி ஸ்கூல் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்களே அதோட சேர்மன் நான் தான். இவங்க எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க, என்னோட ரிலேஷன் தான்” என்றான்.
“ஓ உட்காருங்க சார், நான் உங்க ஸ்கூல் பத்தி கேள்விபட்டிருக்கேன்” என்று இப்போது மரியாதையாய் நோக்கினார் தலைமை ஆசிரியை.
“ஹ்ம்ம் அப்புறம் என்ன விஷயமா நீங்க இவங்களை வரச்சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா??” என்று நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் அவன். தலைமை ஆசிரியை வகுப்பு ஆசிரியைக்கு கண்ணைக் காட்ட அவர் கையில் இருந்த ஒரு தாளை இருவருக்கும் பொதுவாய் நீட்டினார்.
பின்னர் அவர் நடந்த விஷயத்தை கூறி முடிக்கவும் சுனீஷ் கையில் இருந்த காகிதத்தை இருவருமாய் அவசரமாய் படித்து முடிக்கவுமே மதுமிதா அழ ஆரம்பித்துவிட்டாள்.
“ஏன் நீங்க இப்போ அழறீங்க?? கொஞ்சம் அழறதை நிறுத்திட்டு நாங்க சொல்ல வர்றதை கேளுங்க” என்று தலைமை ஆசிரியை சொன்னது எதுவும் காதில் ஏறாதவளாய் மேலும் அழ ஆரம்பித்தாள் அவள்.
“எக்ஸ்க்யூஸ் மீ மேம்” என்றவன் “மிது எழுந்திரு நீ போய் வெளிய உட்காரு” என்று அவளை அழைத்து சென்று வெளியில் அமர வைத்துவிட்டு உள்ளே வந்தான்.
“சாரி மேடம் அவங்க கொஞ்சம் எமோஷனல் அதான் அழ ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க என்ன பண்ணலாம்ன்னு நினைக்கறீங்க??” என்றான்…..