அத்தியாயம் – 13
அனீஷ் மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அவன் மனைவி அவன் பேசியதை நினைவு கூர்ந்தாள். ‘ஒருவேளை நாம் தான் தேவையில்லாமல் குழப்புகிறோமோ?? எனக்கென்ன குறை நன்றாகத் தானே பார்த்துக் கொள்கிறார்’
அனீஷ் சொல்வது போல் அவளிடத்தில், அவன் அவளிடம் நடந்து கொள்ளும் முறையில் எதிலுமே அவனை குறை சொல்வதென்பது முடியாது. ஆனாலும் அவளால் இந்த விஷயத்தை சுலபமாய் ஒதுக்கித்தள்ளவே முடியவில்லை.
நம் வீட்டில் ஒரு மூலையில் குப்பைக் கிடக்கிறது, மூலையில் தானே இருக்கிறது என்று விட்டுவிடாமல் அதை சுத்தம் செய்வதில்லையா?? அது போல தானே இதுவும்.
என்ன இப்போது குப்பை இருப்பது அவன் மனதின் ஒரு மூலையில் அதை சரிசெய்வது என் கடமை தானே என்று அவளே கேள்வியுமாய் பதிலுமாய் தனக்குத்தானே கூறி அவளின் எண்ணம் சரியென்பதாய் சமாதானம் செய்துக் கொண்டாள்.
இதில் அவள் செய்த தவறு ஒன்று தான் இதைப்பற்றி அவள் சபரீஷிடம் எதுவும் கேட்டிருக்க வேண்டாம். அது தான் பிரச்சனை இன்னும் தீவிரமாய் மாற காரணமாய் இருந்தது.
அன்று முழுவதும் வெகுவான சிந்தனையில் இருந்தவள் மாலை நேரமாகவே வந்துவிட்ட சபரீஷை கண்டாள். இவரிடம் பேசலாமா?? என்று எண்ணியவள் பேசுவது என்று உடனடியாக முடிவெடுத்து அவன் அறைக்குள் நுழையும் முன் “ஒரு நிமிடம்” என்று சொல்லி நிறுத்தினாள்.
இவனாவது அவள் சொல்வதை புரிந்துக் கொண்டால் நல்லது தானே என்ற எண்ணத்தில் மனதின் எண்ணப்படி அனீஷிடம் பேசியதை அவனிடம் சொல்ல சபரீஷுக்கோ சட்டென்று கோபம் மூண்டது.
அனீஷை தவிர அவன் வேலை விஷயத்தில் யார் தலையிட்டாலும் அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. பேசுவது அண்ணன் மனைவி என்ற எண்ணத்தை மூளைக்குள் பதிய வைத்தவன் அவளுக்கு நிதானமாகவே பதில் கொடுத்தான்.
விளம்பரம் பற்றி எது பேசுவதாய் இருந்தாலும் அனீஷ் தான் முடிவெடுப்பான் என்று அவனை கைக்காட்டினான். ஆனாலும் அவளும் விடாமல் அவனிடம் பேசி அனீஷிடம் புரிய வைக்குமாறு கூறினாள்.
“சாரி என்னால அனீஷ்கிட்ட இதைப்பத்தி பேச முடியாது. ஏன்னா எனக்கும் நீங்க சொல்றதுல எந்த உடன்பாடும் இல்லை. இனிமே நீங்க வேலை விஷயத்துல தலையிட வேண்டாமே” என்று இழுத்து வைத்த பொறுமையுடன் சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவன் அறைக்குள் நுழைந்து விட்டான்.
அப்போது தான் அவனுக்கு சூடாய் காபி எடுத்துக் கொண்டு யாழினி உள்ளே நுழைய அவளிடம் பொரிந்து தள்ளினான் அவன்.“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க??”
“நீயும் அவங்களோட கூட்டு சேர்ந்து என்னை கேள்வி கேட்கப் போறியா?? என் வேலை விஷயத்துல யார் தலையிட்டாலும் எனக்கு பிடிக்காது. சொல்லி வை உன் பிரண்டுகிட்ட”
“நாங்க விளம்பரம் போடுவோம், போடாம இருப்போம். அதை பத்தி முடிவெடுக்க வேண்டியது நாங்க. நீங்க எதுக்கு வந்து அதுல கருத்து சொல்றீங்க. நீயும் என்கிட்ட எதுவும் கேட்க நினைச்சே அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ. அவ்வளவு தான் சொல்லுவேன், உன் பிரண்டுக்கும் சொல்லிடு” என்று கோபமாய் கத்தி முடித்தான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை எதற்காய் இவன் தன்னை திட்டுகிறான் என்று. “என்ன வேணும் உங்களுக்கு?? கொஞ்சம் புரியறமாதிரி பேசறீங்களா??” என்றாள்.
“என்னடி புரியாத மாதிரி நடிக்கிறியா?? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தானே இதை செஞ்சிருப்பீங்க??” என்றான் அவன்.
“கொஞ்சம் நிறுத்தறீங்களா?? இப்போ என்னன்னு சொல்லாம நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க?? முதல்ல நடந்தது என்னன்னு சொல்லுங்க” என்று அவளும் கொஞ்சம் சத்தமாகவே அவனுக்கு பதில் கொடுத்தாள்.
அவன் கோபத்தோடே ஆராதனா அவனிடம் பேசியதை அவளிடம் கொட்டித் தீர்த்தான். அவன் சொல்லி முடிக்கவும் யாழினி ரௌத்திரமாய் அவனை பார்த்தாள்.
‘நான் தானே இவளை பார்த்து கோபப்பட வேண்டும் இவள் ஏன் என்னை முறைக்கிறாள்??’ என்று அவளை கேள்வியாய் பார்த்தான்.
“அவங்க யாரு உங்களுக்கு??” என்றாள்.
“ஏன் உனக்கு தெரியாதா??”
“எனக்கு அவங்க யாருன்னு தெரியும். உங்களுக்கு அவங்க யாருன்னு கேட்டேன்??”
“அனீஷோட வைப்”
“அவங்க உங்களுக்கு என்ன முறை ஆகணும்ன்னு விளங்க கேட்டா தான் சொல்லுவீங்களா??”
“ஏன்டி?? தெரிஞ்சுட்டே கேட்கறியா?? அவங்க எனக்கு அண்ணின்னு உனக்கு தெரியாதா?? இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி கேள்வி எல்லாம்” என்று பொரிந்தான் அவன்.
இரண்டாவது முறையாக ‘டி’ சொல்கிறான் என்பதை குறித்துக் கொண்டாள். “அப்போ நீங்க என்கிட்ட அவளை பத்தி கண்டபடி எப்படி பேசுனீங்க?? அவங்க உங்க அண்ணாவோட மனைவின்னு உங்களுக்கு தெரியாதா??”
“இந்த விஷயம் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சா சந்தோசப்படுவாரா அவர்?? எவ்வளவு வருத்தப்படுவாருன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க” என்று சொல்ல அவனுக்கு சுருக்கென்று தைத்தது. மேலும் மேலும் பேசி அவனை குத்தினாள் அவள்.
“எனக்கு தெரியும் நீங்க உங்க அண்ணாவை ரொம்ப மதிக்கறீங்கன்னு. உங்க அண்ணா சொன்னா எப்படி கேட்டுப்பீங்களோ அப்படி கேட்டிருக்கலாம்ல. இப்படி தான் முகத்தில அடிச்ச மாதிரி பேசுவீங்களா??”
“உங்க அண்ணா வேற?? அண்ணி வேறயா?? ரெண்டு பேரும் ஒண்ணுன்னு உங்களுக்கு புரியலையா??என்ன சொன்னீங்க உங்க விஷயத்துல தேவையில்லாம தலையிடறாங்களா??”
“அவங்க உங்க அண்ணி அம்மா மாதிரி அதனால உங்களுக்கு அறிவுரை சொல்லலாம் தப்பில்லைஇவ்வளவு நேரம் உங்க அண்ணியை பத்தி உங்களுக்கு புரிய வைக்க தான் இதெல்லாம் சொன்னேன்”
“இப்போ என்னோட பிரண்டு பத்தி உங்ககிட்ட பேச வேண்டி இருக்கு. அவளை நீங்க என்னன்னு நினைச்சீங்க?? அவளுக்கு தப்புன்னு தோணுற எந்த விஷயத்தையும் அவ செய்யவே மாட்டா??”
“சரின்னு நினைக்கிறதை, சரியானதை யார் தடுத்தாலும் செய்வா!! என்னை பொறுத்தவரை அவ உங்ககிட்ட சொன்னதுல எந்த தப்புமே இல்லை. பொறுங்க நான் பேசுறதை முழுசா கேளுங்க, அப்புறம் நீங்க பேசலாம்”
“அவளுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும், அவ பண்ணுறது சரியில்லைன்னு சொல்லியிருக்கேன். ஏன் சொல்லியிருக்கேன் அதனால அவ பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சு தான் சொல்லியிருக்கேன்”
“அவ செஞ்சது தப்புன்னு நான் என்னைக்குமே சொல்ல மாட்டேன். அவ நேர்மையானவ, அவளை நீங்க கண்டபடி பேச நான் அனுமதிக்க முடியாது. முக்கியமா என்னோட பிரண்டை நீங்க பேசிட்டு இருக்கறதை பார்த்திட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்”
“உங்க வேலை விஷயத்துல நான் எப்பவும் தலையிடமாட்டேன், முக்கியமா அது சம்மந்தமா உங்களை எந்த கேள்வியும் கேட்க மாட்டேன். ஆனா ஆருவை பத்தி நீங்க பேசினா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்”
சபரீஷுக்கு இவள் இவ்வளவு கோபப்படுவாளா?? தன்னை இவ்வளவு தூரம் எதிர்த்து பேசுவாளா?? என்று ஆயாசமாய் இருந்தது. அவள் கூறியதில் இருந்த உண்மை உரைக்க அனீஷுக்காய் தான் அமைதியாய் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணினான்.
விளம்பரம் பற்றி எண்ணம் அனீஷை போல் அவனுக்கும் தவறென்றே படவில்லை. அந்நேரம் சபரீஷிடம் பேசிய ஆராதனாவிற்கு, தான் இதை பற்றி அவனிடம் பேசியிருக்கக் கூடாது என்று தோன்றியது.
அவர் தன்னைப்பற்றி என்ன நினைப்பார். அனீஷிடம் கூற அவளுக்கு உரிமையிருக்கிறது, ஆனால் சபரீஷை எதிர்ப்பது போல் பேசியது அதிகப்படியாய் தோன்ற அவனிடம் மன்னிப்பு கேட்கவென்று வந்தவள் யாழினியும் அவனும் பேசியதை கேட்டுவிட்டு சமைந்து நின்றாள்.
கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, திலகவதி அவள் பின்னே தோளைத் தட்டியவர் “என்னம்மா ஆராதனா இங்க நின்னுட்டு இருக்க??” என்று கூற “ஒண்ணுமில்லை அத்தை” என்றாள் அவள்.
அவர்கள் அறை வாயிலிலேயே நின்றிருந்த யாழினி வெளியே கேட்ட குரலில் திகைத்து எட்டிப்பார்க்க ஆராதனா கண்களை துடைப்பது தெரிந்தது. திரும்பி சபரீஷை ‘எல்லாம் உங்களால் தான்’ என்பது போல் பார்த்து முறைத்தாள்.
வேகமாய் யாழினியை நோக்கி வந்தவள் “ஒரு நிமிஷம் பேசணும்” என்றாள் பொதுவாய். யாழினிக்கோ தோழியின் நிலை கவலைக்கொள்ள செய்தது. ‘உனக்கு ஏன்டி இந்த வேலை, இதுக்கு தானே எதுவும் வேணாம்ன்னு சொன்னேன்’ என்று மனதோடு பேசிக் கொண்டாள்.
“மன்னிச்சுடுங்க தம்பி, நான் உங்ககிட்ட இப்படி பேசியிருக்கக்கூடாது. என்னமோ சொல்லணும்ன்னு தோணிடுச்சு சொல்லிட்டேன். தப்பு தான்னு புரிஞ்சதும் மன்னிப்பு கேட்க தான் வந்தேன்” என்றவளின் குரல் தழுதழுப்பில் ஒரு நிமிடம் நின்றது.
தன்னை சமாளித்துக்கொண்டு “இனி நான் எப்பவும் இதை பத்தி பேச மாட்டேன். யாழினி அவ பாவம் இதுல அவ எதுவுமே செய்யலை. நீங்க வீணா அவளை சந்தேகப்பட வேண்டாம். அவளுக்கும் இதுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை”
“அவ எப்பவுமே அனாவசியாம எந்த பிரச்சனையும் பண்ணிக்க விரும்ப மாட்டா?? எல்லாரையும் பொறுத்து போறவ, எனக்காக பேசிட்டான்னு தப்பா கோபப்படாதீங்க அவகிட்ட”
“உங்களை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை அவ ரொம்ப விரும்பறா, அதுனால தான் இவ்வளவு தூரம் உங்ககிட்ட சண்டை போடறா?? எனக்கு பிறகு அவ இவ்வளவு உரிமையா உங்ககிட்ட தான் இருக்கா??”
“அவளை நல்லா பார்த்துக்கோங்க!!! எனக்காக அவகிட்ட சண்டை போடவேண்டாம், ப்ளீஸ்… என்னை மன்னிச்சுடுங்க” என்று தனக்காய் பரிந்த தோழிக்காய் சபரீஷிடம் பரிந்து மன்னிப்பு கேட்டாள்.
பின் கண்ணீர் துளிர்க்க தோழியை நெருங்கி வந்தவள் ஏதும் பேசாமலே அவளை ஒரு முறை அணைத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற பின்னே யாழினி யோசிக்க ஆரம்பித்தாள், ‘உண்மையாகவே தான் சபரீஷை விரும்ப ஆரம்பித்துவிட்டோமா?? இவ்வளவு நாளாக தனக்கு அவனை பிடித்திருக்கிறது என்று தானே நினைத்திருந்தாள்’.
‘ஆனால் இவள் ஏதோ சொல்கிறாளே?? அப்படியும் இருக்குமோ??’ என்று எண்ணியவள் சட்டென்று விழி மலர்த்தி எதிரில் இருந்தவனை பார்க்க அவன் பார்வை அவளையே ஆராய்ச்சியுடன் நோக்கியது.
யாழினி அவள் எண்ணத்தை எல்லாம் நிமிடத்தில் ஒதுக்கிவிட்டு அவனை பார்த்து முறைத்தாள். எது எப்படி இருந்த போதும் ஆராதனாவை அவன் மரியாதை இல்லாமல் பேசியதை அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
இவ்வளவு நடந்திருக்கிறது ஆராதனா வந்து மன்னிப்பு கேட்டு செல்கிறாள், இவன் பதிலுக்கு எதுவுமே பேசாமல் இருக்கிறானே என்ற கோபம் அவளுள் எழுந்தது. குறைந்தபட்சம் ஒரு சாரியாவது அவளிடம் கேட்டிருக்கலாம் என்று தோன்றியது.
அவனிடம் எதுவும் பேசாமல் அவள் வெளியே சென்றுவிட்டாள். அப்போது தான் சுயவுணர்வுக்கு வந்த சபரீஷ் சற்றே கூனிக்குறுகிப் போனான்.
சற்று முன் நடந்த களேபரத்தில் அவன் அனீஷுக்கு போன் செய்து சொல்லியிருந்ததை மறந்தே போயிருந்தான். ஆராதனாவிடம் பேசிவிட்டு அவர்கள் அறைக்குள் நுழைந்தவன் அனீஷுக்கு அழைத்து நடந்ததை கூறியிருந்தான்.
அதை மறந்தவனாய் அப்படியே அமர்ந்துவிட்டான். ஆராதனாவிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றினாலும் ஏதோவொரு தயக்கம் வந்து அமைதியாய் இருக்கச் செய்தது.
என்னவென்று சொல்லி மன்னிப்பு கேட்பது என்றே தயங்கினான். அவர்ளை மரியாதையின்மையாக பேசிவிட்டேன் என்று சொல்லியா மன்னிப்பு கேட்க முடியும் என்றெண்ணியவாறே அமர்ந்திருந்தான்.
யாழினி வந்த பின் அவளிடம் சொல்லிவிட்டு அவளையும் அழைத்துச் செல்லலாம் என்று எண்ணியிருக்க அவன் மனையாளோ அவன் மேலிருந்த கோபத்தில் அவர்கள் அறைக்கே வராமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்தாள்.
யாழினி அறைக்கு வந்திருந்தாலாவது நன்றாக இருந்திருக்குமோ?? இல்லை சபரீஷே ஆராதனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டிருக்கலாமோ?? அவன் அனீஷுக்காவது போன் செய்து கூட மன்னிப்பு கேட்டிருக்கலாமோ??
அப்படி கேட்டிருந்தால் அனீஷுக்கும் ஆராதனாவிற்கும் இடைவெளி ஏற்பட்டிருக்காதோ என்னவோ?? நடக்கப் போவதை யார் தடுக்க முடியும். அவரவர் நாவே அவரவருக்கான விதியை எழுதியது.
சபரீஷ் பேசியதும் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த அனீஷுக்கு என்றுமில்லாமல் கோபம் உச்சந்தலைக்கு ஏறியிருந்தது. இதுவரை அவன் அன்னைகூட அவள் தந்தையை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னதில்லை.
ஆனால் இவள் என்னை மட்டுமல்லாமல் சபரீஷையும் வேறு கேள்விகேட்டு வைத்திருக்கிறாளே?? என்றிருந்தது அவனுக்கு. அவன் கோபம் அதிகமாகியதற்கு அதுவும் ஒரு காரணம்.
தான் எவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்து அவளிடம் காலையில் பேசினோம். அதையெல்லாம் மறந்துவிட்டு இவள் எப்படி சபரீஷிடம் பேசலாம் என்றிருந்தது அவனுக்கு. இன்று இதற்கு ஒரு முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று எண்ணினான்.
____________________
வாசலில் அழைப்பு மணி ஒலிக்க அவசரமாய் வந்து கதவை திறந்தான் சுனீஷ். மதுமிதாவின் அன்னை மல்லிகா நின்றிருந்தார். “வாங்க ஆன்ட்டி!!!” என்றழைக்க அவர் உள்ளே நுழைந்தார்.
“என்ன தம்பி போன் பண்ணி வரச்சொன்னீங்க?? எதுவும் முக்கியமான விஷயமா??” என்றார் அவர்.
“நீங்க உள்ள வந்து முதல்ல உட்காருங்க ஆன்ட்டி, பேசுவோம்” என்று கூற அவரும் இருக்கையில் அமர்ந்தார்.
“ஆன்ட்டி நான் நேரடியாவே விஷயத்துக்கு வந்திடறேன். எனக்கு உங்க பொண்ணை பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன், மிது உங்ககிட்ட இதை பத்தி சொன்னாளான்னு தெரியலை”
“அவகிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை, அதான் உங்ககிட்ட சொல்லிடலாம்ன்னு சொல்லிட்டேன்” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவர் ஏதோ பேச வர “ஆன்ட்டி நான் வசதியான வீட்டு பிள்ளை, ஏணி வைச்சாலும் எட்டாது”
“இப்படி காரணமெல்லாம் சொல்லி மறுக்காதீங்க. உண்மையாவே உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னா என் முகத்துக்கு நேரவே நீங்க சொல்லிடலாம்” என்றான்.
“தம்பி இப்படி நீங்க கேட்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. எனக்கு ரொம்பவும் சந்தோசம், ஆனா மது… மதுகிட்ட நான் ஒரு வார்த்தை கேட்கணும். அவகிட்ட பேசாம என்னால உறுதி கொடுக்க முடியாது”
“என் பொண்ணுக்கு உங்களை மாதிரி ஒருத்தர் கிடைச்சா அது அவளுக்கு வரம் தான் தம்பி. ஆனா நீங்க இப்படி திடுதிப்புன்னு கேட்கறீங்களே. உங்க வீட்டில ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா??”
“என் வீட்டில எல்லார்கிட்டயும் சொல்லி அவங்க சம்மதத்தோட தான் வந்து உங்க பொண்ணை கேட்பேன். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் ஆன்ட்டி. அப்புறம் மிதுகிட்ட பேசிட்டு சொல்லுங்க நான் அவசரப்பட மாட்டேன். ஆனா எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க நான் வீட்டில பேசணும்”
மல்லிகா தனக்குள் சிரித்துக்கொண்டார் அவசரமில்லையாம் ஆனால் சீக்கிரம் முடிவை தெரிவிக்க வேண்டுமாம். ஆனால் இந்த பெண் மது ஏன் என்னிடம் இதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. எப்போதும் இப்படி இருக்க மாட்டாளே, வரட்டும் பேசிக் கொள்ளலாம் என்று எண்ணியவர் அவனிடம் விடைபெற்று கிளம்பினார்.
அன்று இரவே மதுவிடம் அவர் பேச அவளோ அனீஷும், சபரீஷும் அன்று நடந்துக் கொண்டதை மனதில் வைத்து, மேலும் சுஷ்மியையும் அவள் அன்னையையும் யோசித்து ஏதேதோ காரணங்கள் சொல்லி அவளுக்கும் விருப்பமில்லை என்று அவனிடம் சொல்லச் சொன்னாள்.
மல்லிகா இருதலைகொள்ளி எறும்பானார், அவருக்கு சுனீஷை போன்று நல்லவன் மகளுக்கு கிடைக்க மாட்டான் என்று தோன்றியது. அதே சமயம் மகளின் விருப்பமும் முக்கியமாக நினைத்தார்.
அவள் கூறும் காரணங்கள் அவரும் யோசித்தே தான் இருந்தார். அவரும் மதுவை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவள் பிடிவாதத்திலேயே இருக்க வேறு வழியில்லாமல் அவர் சுனீஷிடம் மதுவின் விருப்பமின்மையை தெரிவித்துவிட்டார்.
சுனீஷும் அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. இரண்டு நாட்கள் கழித்து பள்ளிக்கு சென்று வந்தவன் மதிய உணவு அருந்த அவள் வேலை பார்த்த ஹோட்டலுக்கு சென்றான்.
அவள் சர்வ் செய்யாத டேபிளாக பார்த்து அதில் சென்று அமர்ந்தான். இவனை பார்த்ததுமே அருகே வர யத்தனித்தவள் அவன் பாராமுகம் காட்டிச் செல்லவும் அப்படியே நின்றுவிட்டாள்.
‘ஏன் இப்படி பேசாம இருக்கார்?? எப்பவும் போல என் கூட நட்பா பேசலாம் தானே எதுக்கு இப்படி செய்யறார்??’ என்று மனதிற்குள் குமைந்தாள். அவன் என்ன சாப்பிடுகிறான் என்று தூர நின்றே கவனித்தாள்.
இப்போதெல்லாம் அவள் அவன் வீட்டிற்கு சென்று சமைக்க செல்வதில்லை. அவள் அன்னை போக முடியாமல் இருந்தால் சுஷ்மி தான் போகிறாள். முதலில் அவனிடம் இருந்து ஒதுங்கியது அவளே இப்போது அவன் ஒதுங்கிப் போகிறான் என்று வருத்தம் வேறு கொண்டாள்.
சாப்பிட்டு பில்லைக் கட்டிவிட்டு அவன் தன் போக்கில் எழுந்துச் சென்றுவிட்டான். இரண்டு நாளாய் தினமும் அங்கு வருவதும் அவள் புறம் திரும்பாமல் சாப்பிட்டு செல்வதுமாகவே இருந்தான்.
‘ஒரு வேளை இவர் நான் அவரை கவனிக்கணும்ன்னே தான் வர்றாரா?? என் மனசு தெரிஞ்சு வேணும்ன்னே என்னை உசுப்பிவிடுறாரோ??’ என்று எண்ணியவள் ‘ச்சே!!! ச்சே!!! இவர் அப்படி செய்ய மாட்டார்’ என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அன்று மாலை சீக்கிரமே வேலை முடிந்து கிளம்பியவள் மனம் சரியில்லாததால் அருகிலிருந்த முருகன் கோவிலுக்கு சென்றாள். கடவுள் தரிசனம் முடிந்து வெளியில் வந்து ஒரு ஓரமாய் அமர்ந்தாள்.
அருகில் யாரோ போனில் பேசுவது கேட்டு அவள் மனம் சஞ்சலம் கொண்டது. ‘இது அவரோட குரல் மாதிரி இருக்கு’ என்று எண்ணியவள் திரும்பி பார்க்க சற்று தள்ளி அவள் நினைத்தது போல சுனீஷ் தான் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.
“கோவில்ல தான்மா இருக்கேன். சாமி கும்பிட்டேன். சரிம்மா… சரி… சரி கண்டிப்பா ஒரு நாள் வர்றேன். வந்து பார்க்கறேன்ம்மா…”
“அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்க தானே. வீட்டில எதுவும் பிரச்சனையில்லையே??”
“சந்தோசம்மா, சரிம்மா வைச்சிடறேன்” என்றுவிட்டு அவன் போனை வைக்கவும் ஆராதனா அவளுக்கு அழைத்தாள்.
“அண்ணி” என்று குதூகலத்துடனே போனை எடுத்தான். “தேங்க்ஸ் அண்ணி… தேங்க்ஸ்… தேங்க்ஸ்…”
“நல்லாயிருக்கேன் அண்ணி, அதை விடுங்க. அது சரியா வராது அண்ணி. சரியா வராது விட்டுடுங்க அண்ணி வேற பேசுங்க”
“அவங்களுக்கு பிடிக்கலைன்னும் போது நாம என்ன செய்ய முடியும்” என்று பேசிக் கொண்டே எழுந்தவன் அப்போது தான் அவளை பார்த்தான். பின் முகத்தை திரும்பிக் கொண்டவன் “அம்மா ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்னு சொன்னாங்க அண்ணி”
“போட்டோ அனுப்பி இருக்காங்க, பொண்ணு பேரு கூட… ஹான்… என்னமோ நல்ல பேராச்சே… ரஞ்சனி… ஹான்… சிவரஞ்சனின்னு சொன்னாங்க அண்ணி”
“அம்மாகிட்ட அந்த பொண்ணையே பார்க்கச் சொல்லிடுங்க. இனி எனக்குன்னு எந்த விருப்பமும் இல்லை அண்ணி. அம்மாக்கு உங்களுக்கு எல்லாம் பிடிச்ச மாதிரியே இருக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” மேலும் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தான்.
மதுவிற்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது. அவனாய் வலிய வந்த போது வேண்டாம் என்று மறுத்தவள் என்பதை மறந்து ‘என்னை மனசுல வைச்சுட்டு யாரை வேணா கட்டிக்குவாரா’
‘எப்படி இவரால இப்படி பேச முடியுது. சட்டுன்னு வேற பொண்ணு பார்க்க சொல்றாரு. எவளோ ரஞ்சனியாம், அதெப்படி நான் இருக்கும் போது அவளை வரவிடுவேன்’ என்று யோசித்தாள்.
‘ச்சே என்ன இது நான் ஏன் இப்படி யோசிக்கிறேன். நான் தானே விருப்பமில்லை என்று சொன்னேன். கடவுளே என்னால் இவரை மறக்க முடியவில்லையே’
‘அந்த ரஞ்சனிக்கு தான் கொடுத்து வைத்திருக்கிறது போல’ என்று சமாதானப்படுத்த முயன்றாலும் மனம் சாந்தமடைய மறுத்தது. நிமிர்ந்து பார்த்தால் அவன் அந்த இடத்திலேயே இல்லை.
அவளும் மெதுவாய் எழுந்து கோவிலை விட்டு வெளியில் வந்தாள். அந்நேரம் அவளின் கைபேசி சிணுங்க எடுத்து பார்த்தவள் புதிய எண் அழைப்பு என்றதும் ஒரு நிமிடம் யோசித்து பின் அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.
“ஹலோ நான் ஆராதனா பேசறேன்” என்றது எதிர்முனை. மதுமிதாவிற்கு பதில் பேச வாயே வரவில்லை. ஏனோ அவள் மேல் கோபம் வந்தது.
“ஹலோ மது ஞாபகமிருக்கா?? நான் சுனீஷோட அண்ணி” என்றாள். இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று எண்ணியவள் “ஞாபகமிருக்கு சொல்லுங்க” என்றாள்.
“எனக்கு உங்கம்மாகிட்ட பேசணும், உன்னோட வீட்டு அட்ரஸ் கொஞ்சம் சொல்லும்மா. அப்படியே உங்கம்மா போன் நம்பர் கொடேன்” என்றாள்.
‘இவங்க எதுக்கு இதெல்லாம் கேட்கறாங்க’ என்று எண்ணியவள் “எதுக்கு இதெல்லாம் கேட்கறீங்க??” என்று கேட்டுவிட்டாள்.
“உன்னை பொண்ணு கேட்க தான், வேற எதுக்கு??” என்றாள் ஆராதனா.
“என்ன?? என்ன சொன்னீங்க?? பொண்ணு கேட்கவா?? அதான் அன்னைக்கே நீங்க கேட்கும் போது எனக்கும் அவருக்கும் இடையில எதுவுமில்லைன்னு சொல்லிட்டேனே??” என்றாள்.
“அதான் நீ அன்னைக்கே சொல்லிட்டியே மது. இப்போ பேசப் போறது சுனீஷ்க்காக இல்லை. என்னோட அண்ணாக்கு, நான் சுனீஷ்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன்”
“அவனும் சரின்னு சொல்லிட்டான். உனக்கு சுனீஷ் மேல மரியாதை மட்டும் தான் இருக்குன்னு சொல்லிட்டியா, அதான் நானும் அதை அப்படியே விட்டுட்டேன்”
“என் அண்ணாக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்காங்க. இதெல்லாம் நான் உன்கிட்ட போய் சொல்லிட்டு இருக்கேன் பாரு, நீ அம்மா நம்பரை எனக்கு மெசெஜ் அனுப்பு”
“உன்னால முடியாதுன்னா நான் சுனீஷ்கிட்ட கேட்டு வாங்கிக்கவா” என்று அவள் பேசவும் மதுவிற்கு அய்யோவென்றிருந்தது.
“அக்கா அது அதெல்லாம் வேணாம். அம்… அம்மாகிட்ட போன் இல்லை, நான் வீட்டுக்கு போனதும் உங்களுக்கு கூப்பிடுறேன்” என்றுவிட்டு போனை வைத்தாள்.
‘இவர் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். பெரிய தேவதாசா?? என்னை நினைச்சுக்கிட்டு எப்படி எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஒத்துக்கிட்டார்’ என்ற கோபம் அவளுக்கு கனன்றது.
இதை அவனிடம் கேட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. வேகமாக நடந்து செல்ல அப்போது தான் அவன் அருகில் இருந்த கடையில் டீ குடித்துவிட்டு ஜீப்பை எடுக்கப் போனான்.
வேக எட்டுக்கள் எடுத்து வைத்தவள் ஜீப்பின் அருகில் வந்து நின்றாள். அவன் பேசுவான் என்று பார்க்க அவனோ அவளை கண்டுக்கொள்ளவே இல்லை. ‘என்னாச்சு இவருக்கு’ என்று நினைத்தவள் எதையும் யோசியாது சட்டென்று ஜீப்பில் ஏறி அவனருகே அமர்ந்தாள்.
திரும்பி அவளை பார்த்தவன் இப்போதும் பேசவில்லை. ‘பேசினா முத்தா உதிர்ந்து போகும்’ என்று நினைத்தவள் “எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், ப்ளீஸ் பொட்டானிக்கல் கார்டன் போங்களேன்” என்றாள் கெஞ்சுவது போல்.
எதுவும் பேசாமல் வண்டியை கார்டனுக்கு விட்டான். அவள் இறங்கியதும் இறங்கியவன் அவன் பாட்டுக்கு உள்ளே நடந்து சென்றான். உடன் வருவான் என்று நினைத்திருக்க அவனோ இவளை விட்டு நடக்கவும் மூச்சு வாங்க ஓடிவந்தவள் அவனுடன் சரியாக நடக்க முயன்றாள்.
“சார் ப்ளீஸ் கொஞ்சம் உட்காரலாமே”
“சார்ன்னு கூப்பிடாதே??” என்றவனை நிம்மதியாக பார்த்தாள், ‘அப்பா இப்போவாச்சும் பேசிட்டாரே’ என்ற சந்தோசம் அவளுக்கு.
அப்போது தான் ஆராதனா பேசியது ஞாபகத்திற்கு வர அவனிடம் “சார் உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. உங்க அண்ணி எனக்கு மாப்பிள்ளை பார்த்தா நீங்க சரின்னு சொல்லுவீங்களா??” என்று பொரிந்தாள்.
“என்ன கேட்டே??” என்றான் அசட்டையாக.
“உங்க அண்ணி எனக்கு போன் பண்ணாங்க. அவங்க அண்ணாக்கு என்னை பெண் கேட்கணும் அதை பத்தி பேசணும்னு உங்ககிட்ட சொன்னாங்களா??” என்றாள்.
‘ஆஹா… அண்ணி ஏதோ வேலை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல, என்னை குழப்பிவிட்ட மாதிரி இவளையும் குழப்பிவிட்டு இருக்காங்க. இப்படியே மெயின்டெயின் பண்ணுவோம்’ என்று எண்ணி “ஆமாம் சொன்னாங்க”
“உங்களால எப்படி சார் அதுக்கு சரின்னு சொல்ல முடிஞ்சுது” என்றவளின் குரல் கரகரத்தது.
“சார்ன்னு கூப்பிடாதேன்னு சொல்றேன்ல” என்றவன் “நான் ஒண்ணும் சரின்னு சொல்லலை உங்க அம்மாகிட்ட பேசட்டுமான்னு கேட்டாங்க அதுக்கு தான் சரின்னு சொன்னேன்”
“எப்படி நீங்க அப்படி சொல்லலாம்??”
“வேற எப்படி சொல்லணும் மிது, நீ என்ன எதிர்பார்க்கற?? என்றான் எதுவும் தெரியாதது போல்.
“சார் அன்னைக்கு… அன்னைக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னீங்க” என்றாள்.
“அதான் உங்கம்மாகிட்ட இஷ்டமில்லைன்னு சொல்லிட்டியே” என்றவன் “மிது மறுபடியும் மறுபடியும் சொல்றேன் சார்ன்னு கூப்பிடாதே. இன்னொரு முறை சார்ன்னு கூப்பிட்டேன்னா எனக்கு கெட்ட கோபம் வந்திரும்” என்றான்.
“அப்படி தான் சார் கூப்பிடுவேன்” என்றாள் அவள் வீம்பாக.
“எனக்கு பிடிக்கலை மிது” என்றான் கோபமாகவே.
“எனக்கு பிடிச்சிருக்கு” என்றாள் அவள்.
‘இவ என்ன சொல்றா??’ என்பது போல் அவளை திரும்பி பார்த்தான்.
“உங்களை சார்ன்னு தான் கூப்பிடுவேன். உங்க… உங்களுக்கு எப்பவும் அடிமையா இருக்க என… எனக்கு பிடிச்சிருக்கு” தட்டுத்தடுமாறி மனதில் உள்ளதை சொல்லி முடித்தாள்.
“புரியற மாதிரி சொல்லு மிது”
“அன்னைக்கு என்னை கேட்டதுக்கு இன்னைக்கு பதில் சொல்றேன்னு உங்களுக்கு புரியலையா சார்” என்று ‘சார்’ என்பதிற்கு அழுத்தம் கொடுத்து சொன்னாள்.
“மிது நிஜமா தான் சொல்றியா?? நாம கல்யாணம் பண்ணிக்கலாம் தானே??”
“நான் பொய் சொல்வேனா??”
“அன்னைக்கு சொன்னியே நான் வேணாம்ன்னு”
“பொய் சொல்லலை உண்மையை மறைச்சேன்னு வைச்சுக்கோங்க” என்றவளின் முகம் கனிந்து வெட்கத்தில் சிவந்தது.
“தேங்க்ஸ் மிது, நீ உன் எண்ணத்தில இருந்து மாறமாட்டியே??”
“ஏன் சார் என் மேல நம்பிக்கையில்லையா??” என்றாள் முகத்தை பாவமாக வைத்து.
“நெறைய இருக்கு மிது, என்னோட கணிப்பு சரின்னா எங்க அண்ணனுங்க அன்னைக்கு உன்கிட்ட நடந்துகிட்டது வைச்சு தான் நீ தள்ளி போனே?? அது மாதிரி திரும்பவும் போகக்கூடாது அதுக்கு தான் கேட்கறேன்”
“போக மாட்டேன் உங்களுக்கு அடிமையா எப்பவும் இருக்க தான் ஆசைப்படுறேன்” என்றாள் தலைகுனிந்தவாறே.
“அடிமைன்னு எல்லாம் சொல்லாதே மிது. நீ வேற நான் வேறன்னு நான் நினைக்கலை”
“உங்களுக்கு பணிவிடை செய்யறதை தான் அப்படி சொன்னேன். மத்தப்படி…” என்றவள் நிறுத்திவிட்டாள்.
“ஹ்ம்ம்… மத்தபடி??”
“நீங்க…”
“ஹ்ம்ம்… நானு…”
“நான்…”
“ஹ்ம்ம் நீ…”
“நீங்களும் நானும் ஒண்ணு தான் போதுமா??” என்றாள்.
“மிது உன் கையை பிடிச்சுக்கவா??” என்றவன் சட்டென்று அவள் வலக்கரத்தை பற்றி தன் இடக்கரத்தில் வைத்து அவன் நெஞ்சோடு வைத்துக் கொண்டான். “சந்தோசமாயிருக்கு மிது, எனக்கு நல்ல பிறந்த நாள் கிப்ட் கொடுத்திட்ட” என்றான் அவன்.
“என்ன இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாளா??” என்றவள் அவன் எதிர்பாராமல் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்….