மும்பையில் ரிஷியின் வீட்டில் கயல் ரிஷியை திட்டிக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? என்ன வேல பண்ணி வச்சிருக்கிறீங்க? சின்ன குழந்தை போல? முதல்ல உங்கள போடணும்” என்றவாறே சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அவனை அடிக்க குச்சி எதுவும் கிடைக்காததால் கட்டிலில் இருந்த தலகணையை அவன் மேல் வீச
அதை லாவகமாக கைப்பற்றியவன் “வார் பேபி உனக்கு திட்டத்தான் தெரியலைனா… அடிக்கக் கூடவா தெரியல… பில்லோவால அடிச்சு என் உயிர் போகப் போகுது” வேண்டுமென்றே சிரித்து மனைவியை சீண்டலானான்.
“இருங்க வரேன்” என்றவள் புடவை முந்தியை இடுப்பில் சொருகிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தவள் கைகளாலையே! அவனை அடிக்க ஆரம்பிக்க
“இங்க, ஆ.. இங்க” என்று திரும்பி திரும்பி அடிகளை வாங்கிக் கொண்டு “அப்பா.. நல்லா மசாஜ் பண்ணி விட்ட வார் பேபி.. செம்மயா இருந்துச்சு”
அவளோ கை வலிக்க அடிகளை கொடுத்து மூச்சு வாங்கி நிற்க அவனோ மசாஜ் என்றதில் மேலும் கடுப்பானவள் அவன் முடியை பிடித்து இழுக்க
“ஐயோ.. வலிக்குது விடு டி.. விடு டி.. ராட்சசி…” என்று கத்த
“அப்படி நான் என்னை டி… பண்ணேன். இப்படி கொடும பண்ணுற?”
“கண்ணை திறந்து நல்லா பாருங்க… எண்ண பண்ணி வச்சிருக்கிறீங்கன்னு புரியும். வர வர ஸ்ரீராமை விட உங்கள மேய்க்கிறது தான் கஷ்டமா இருக்கு”
“நா என்ன மாடா…” முகத்தை சுருக்கியவாறு ரிஷி.
“மாடு கூட நான் சொன்னா கேக்கும் போல ஆனா நான் எது வேணாம் னு சொல்லுறேனோ! இந்த அப்பனும், மகனும் அத மட்டும் பண்ணுங்க. சுவர் பூரா கலர் சாக்கால கிறுக்கி வச்சிருக்கிறீங்க? சுவரை கழுவி கழுவியே! என் முதுகு வலிக்குது. எத்துணை தடவ வேணாம் னு சொல்ல அதான் இன்னைக்கி நல்லா போட்டேன். எங்க அவன்.. சின்ன ரிஷி… அவனையும் நாலு சாத்து சாத்தினா தான் என் கோபம் அடங்கும்”
“வார் பேபி என்னை அடிச்ச நா பொறுத்து கிட்டேன். ஸ்ரீராம் பாவம் சின்ன பையன் அவனை விட்டுடு”
“அவன் உயரத்துக்கு எவ்வளவு கிறுக்க முடியுமோ! அவ்வளவு கிறுக்கி இருக்கான் மீதியெல்லாம் உங்க கைவேலை னு புரியுது. ரூமை பாருங்க கன்றாவியா இருக்கு”
“சரி டி பெயிண்ட் பண்ணிக்கலாம்…” மனைவியை சமாதானப் படுத்த
“கலர் சாக்க ட்ராயிங் புக்குல பாவிக்காம அதென்ன சுவருல கிறுக்குறீங்க? டைலியும் அப்பனும், புள்ளையும் இதையே பண்ணுறீங்க. சரி நம்ம ரூம் தான் னு விட்டா வீடு முழுக்க வரைய ஆரம்பிச்சிட்டீங்க.. சொல்லி சொல்லி பாத்தேன் முடியல. வீடா இது ஆர்ட் களறியா?” இன்னும் கத்தலானாள் விழி.
ரிஷியின் குழந்தை பருவமோ! அன்னையின் கொடுமைகளோடு செல்ல.. இன்று ஸ்ரீராமோடு சேர்ந்து குழந்தையாக மாறி ஸ்ரீராம் செய்யும் அத்தனை சேட்டைகளும் உறுதுணையாகி மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொள்கின்றான்.
ஸ்ரீராமுக்கு விதவிதமான விளையாட்டு பொருட்கள் தேவை படுதோ இல்லையோ ரிஷிக்கு அவை அனைத்தும் தேவைப் பட்டது. கண்ட கண்ட பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்தான். ஸ்ரீராம் காலையில் எழுந்ததிலிருந்து விளையாட்டுப் பொருட்களோடு ரிஷியை தேடி வந்து விடுவான். ரிஷியும் சின்ன சின்ன கார்களை தரையில் உருட்டியும் தள்ளியும் விளையாட ஸ்ரீராமோ அன்னையை விட்டு விட்டு தந்தையின் செல்லமகனாகிப் போனான்.
பசி தூக்கம் மறந்து இருவரும் செய்யும் அட்டகாசம் அமைதியான கயலையே! கோபப் படுத்துமளவுக்கு சென்று கொண்டிருக்க, பொறுத்துப் பார்த்தவள், தன்மையாக சொல்லியும் பார்க்க அவர்களோ அவளை கிஞ்சத்துக்கும் கண்டு கொள்ளாது தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க இன்று சோடா பாட்டிலாக பொங்கி எழுந்து விட்டாள்.
“ஐயோ இவ அடங்க மாட்டா போல இருக்கே” மனதுக்குள் நொந்து கொண்டவன் அவள் திட்டிக் கொண்டிருக்கும் போதே அவளை இழுத்தணைத்து அவளின் உதடுகளை சிறை செய்யலானான்.
கயலின் கையை பிடித்து சுழற்றி அவள் விலகி விடாதவாறு தன்னோடு இறுக்கிக் கொண்டு அவள் திமிரத் திமிர முத்தமிட சற்று நேரத்தில் கணவனோடு பந்தமாக அடங்கிப் போனாள் வார் பேபி.
“ரொம்ப.. ஓவரா பேசுற.. வாய் பேசாத பூச்சி மாதிரி இருந்த என் வார் பேபி வாருக்கு தயாரிக்கிட்டா” என்றவன் மீண்டும் முத்தமிட வர
“ஐயோ ஸ்ரீராம்” என்று ரிஷியை விட்டு விலக முற்பட
“அவன் அப்பவே அத்த கிட்ட ஓடிட்டான். நான் தான் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்”
“எங்க முடிய புடிச்சு இழுத்ததுல தல ஒன்னும் வலிக்கலையே!” கண்கள் கலங்கியவாறு கேக்க
“இல்லடி செல்லம் ஆக்சிடன்ட் ஆன மண்டைனு நீ பயப்படாத ரொம்ப ஸ்ட்ரோங்” என்றவன் தலையை தட்டி சொல்ல
“பொய் சொல்லலையே!”
“இல்லடி.. விட்டா அழுத்துடுவ போல இருக்கே! உண்மையிலயே கோபப் பட்டு தான் திட்டி, அடிச்சியா? இல்ல நடிச்சியா?”
“உங்க மேல எனக்கு கோபம் வர்றதாவது, எல்லாம் சும்மா…” நாக்கை துருத்தி அழகு காட்ட
“சூடு சொரணை இல்ல னு சொல்லு” மீண்டும் அவளை சீண்டினான் ரிஷி.
“இங்க பாருங்க நான் யார் மேலையும் கோபப்படாம இருக்குறது சூடு சொரணை இல்லாம இல்ல, யார் மேல கோபப்படுவோம்? நம்ம சொந்த பந்தங்க கிட்டத்தானே! வார்த்தையை விட்டா.. நாளைக்கு கூடிக்குலாவும் போது மனக் கசப்பு இல்லாம இருக்கணும் இல்ல. அதுக்காகத்தான். சொந்த பந்தத்துக்கே அவ்வளவு யோசிப்பேன் நீங்க என் சரி பாதி எவ்வளவு யோசிப்பேன்”
“பஞ்சு, பஞ்சா பேசுறியே டி பொண்டாட்டி நல்லா தேறிட்ட” கிண்டலாக சொன்னாலும் அவள் தன் மேல் வைத்திருக்கும் காதலைக் கண்டு பெருமிதமடைந்தான் ரிஷி.
இந்த நாலு நாளில் பிரதீப்பின் வாழ்க்கையில் பெரிய மாற்றம். கயல் வந்த பின் பெண்கள் இருக்கும் வீடு எவ்வாறு இருக்கும் என்பதைக் கண்டு கொண்டவன் தியாவும் வீட்டை அவ்வாறே பராமரித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணலானான்.
அவனின் என்னத்துக்கு ஒரு படி மேலையே அவளும் இருந்தாள். காலையிலையே சுப்பிரபாதத்துடனும், சாம்பிராணி வாசத்துடனும் ஆரம்பிக்கும் அவன் நாள். காரம் அதிகம் இல்லாது அவனுக்கு பிடித்தமான உணவுகள். ஆபீஸ் செல்ல வெளியே வரும் போது பின்னாலையே! அறக்க, பறக்க டிபன் பாக்சுடன் ஓடி வரும் மனைவி. இதயத்துக்கு சுகமான தென்றல் போல் அவளின் ஒவ்வொரு செய்கைகளும் இருக்க மனைவியை அணுவணுவாக ரசிக்கலானான்.
மெதுவாக கண்விழித்தவன் மணியை பார்க்க அது ஐஞ்சு எனக்காட்ட இன்னும் கொஞ்சம் நேரம் கண்மூடி தூங்கலாம் என்றவன் தனது நெஞ்சின் மீது தூங்கும் மனைவியை இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.
தியாவின் திட்டப்படி நடுவில் தலையணை வைக்கப் பட அவள் தூங்கிய பின் அதை அகற்றி விடுவான் பிரதீபன். தியாவும் உருண்டு அவன் அருகில் வந்த பின் அவளை அணைத்துக் கொண்டே தூங்கலானான். ஜென்ம ஜென்மமாக ஒன்றாகவே இருந்தது போல் தியா அருகில் இல்லாமல் தூக்கம் கூட வராமல் இருப்பது தான் விந்தை.
“நீ தான் எழுந்து காலையில் எல்லா வேலைகளும் செய்ய வேண்டும்” என்ற பார்வதி பாட்டியின் அறிவுரைப்படி ஊட்டிக் குளிரிலும் அதிகாலையிலையே கண்விழித்து பழகிய தியா ப்ரதீபனின் கைவளைவில் எழுந்துக் கொள்ளும் போது, சுகமான தூக்கம் இன்னும் தொடராக கூடாதா என்று எண்ணுவதற்கு பதிலாக “ஐயோ இவரு கண்ணு முழிச்சா.. திட்ட போறாரு” என்ற வாக்கியத்துடனே! எழுந்து குளித்து விட்டு கீழே செல்வாள். பாவம் தன்னுடைய பலகீனம் என்று நினைத்துக் கொண்டிருப்பவள் அறியவில்லை. கணவன் தான் அவளின் பாதுகாப்பு சுவரை அப்புறப் படுத்தி அவளை நெருங்குகின்றான் என்று.
அன்றும் அதே போல் எழுந்து கீழே சென்றவள் இறைவனை வணங்கி, கணவனுக்காக சமைக்க ஆரம்பித்தாள். ப்ரதீபனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று கயலிடமே வினவ அவளுக்கு தெரிந்ததை சொல்லி இருந்தாள் கயல்.
உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு குளித்து விட்டு வந்தவன் மனைவி தனக்கா எடுத்து வைத்திருக்கும் ட்ரெஸ்ஸையே புன்னகைத்தவாறு அணிந்துக் கொண்டு நகைக்கடைக்கு செல்ல தயாராகி வந்தான் பிரதீபன். அவன் கண்கள் மனைவியை எங்கும் தேடாது நேராக சென்று சாப்பாட்டு மேசையில் அமர்ந்துக் கொண்டான். தியாவும் வந்து அவனுக்கு பரிமாற அவளையே ஓரக்கண்ணால் சைட்டடித்தவன் அமைதியாக சாப்பிடலானான். இது கல்யாணமான நாளிலிருந்தே நடப்பதுதான்.
இருவருக்கிடையில் எந்த பேச்சு வார்த்தையும் இருக்க வில்லை. ப்ரதீபனுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. தியாவுக்கும் என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. பாட்டி சொல்வதை அச்சு பிசகாமல் செய்து கொண்டிருந்தாள்.
அன்று அவள் இட்லிக்கு புதினா சட்னி செய்திருக்க அது ப்ரதீபனுக்கு தொண்டையில் இறங்க வில்லை. பிடிக்காவிட்டாலும் சின்ன வயதில் உன்ன உணவில்லாமல் மயங்கி விழுந்தவனுக்கு உணவின் அருமை தெரியுமாதலால் வாய் பேசாது இரண்டு இட்லிகளை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளியவன் மூன்றாவது இட்லியை அவள் வைக்க போகும் போது “போதும்” என்று எழுந்துக்க கொள்ள அவன் சாப்பிட்ட தட்டை கூடையால் மூடி வைத்தாள் தியா.
கடந்த நான்கு நாட்களாக நடப்பது தான். இன்று கவனித்தவன் “எதுக்கு இப்போ இத பத்திரப் படுத்துகின்றாள்” என்ற யோசனையில் அவளை பார்க்க
அவனின் எண்ணத்தை கணித்தவளாக “இல்ல நீங்க சாப்பிட்ட தட்டுலதான் நானும் சாப்பிடணுமாம் பாட்டி சொன்னாங்க” முகம் சுருங்கியவாறு அவள் சொல்ல அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தாலும், கோபமும் வந்தது.
தட்டை அவனே எடுத்து சென்று கழுவி வைத்தவன் “வேற தட்டுல சாப்பிடு” என்றவன் வாசலை நோக்கி நடந்தான்.
கணவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டால் இருவருக்கிடையில் அன்பும், பாசமும், பிரிக்க முடியாத பந்தம் உருவாகும் என்பது முன்னோர்களின் ஐதீகம். ஆனால் கட்டாய படுத்தி விருப்பமில்லாத ஒன்றை செய்ய வைப்பது கொடுமை. தியாவின் முக சுணக்கத்திலையே அது அவளுக்கு பிடிக்க வில்லை என்று புரிய தட்டை அவனே சென்று கழுவினான்.
அவன் வண்டியின் அருகில் செல்லும் போது என்றும் போல் அறக்கப் பறக்க ஓடி வந்தவள் சாப்பாட்டு கூடையை கையில் கொடுக்க,
“நான் வெளிய சாப்பிட்டுகிறேன் எதுக்கு கஷ்டப் படுற? சமையலுக்கு ஆள் வைக்கவான்னு கேட்டா பாட்டி வேணாம் எங்குறாங்க” வாய் சொன்னாலும் அவனுக்கு என்று மட்டும் உள்ள சொந்தம் மனைவி அவனுக்காக பார்த்துப் பார்த்து செய்வது பிடித்திருந்தது.
“அப்போ இவ ஆசையா செய்யலையா… பாட்டி சொல்லுறதுக்காக கடமைக்காக தான் செய்றாளா?” பிரதீப்பின் மனம் சுணங்கினாலும் தியாவின் பேச்சில் புன்னகைத்தவன்
“பாட்டி என்ன எதிர்பாக்குறாங்கனு எனக்கு புரியுது” என்றவன் அவள் கண்களாளேயே “என்ன” என்று கேக்க அவளை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டவன் “பை டி பொண்டாட்டி” என்றவாறே வண்டியில் ஏறி பறந்தான்.
நொடியில் கணவனின் முத்தத் தாக்குதலில் சிக்குண்ட தியா திகைத்து நின்று விட “திவ்யா வா வந்து சாப்பிடு” என்ற பாட்டியின் குரல் தான் அவளை நடப்புக்கு கொண்டு வந்தது.
வண்டி ஒட்டிக் கொண்டிருந்த ப்ரதீபனுக்கும் தியாவை எவ்வாறு நெருங்குவது என்ற சிந்தனை தான். அவள் தனக்காக பார்த்து பார்த்து செய்வதை அவன் ரசிக்க அவளோ கடமையாக நினைத்து செய்து கொண்டிருக்கின்றாள்.
“இப்படியே விட்டால் கடைசி வரைக்கும் பிரம்மச்சாரியாகத் தான் இருக்க வேண்டி இருக்கும். அதிரடியாக இறங்க வேண்டியது தான்” மனம் கூவ யோசிக்காமல் மனைவியை முத்தமிட்டு திரும்பியும் பார்க்காமல் வந்து விட்டான்.
ப்ரதீபனுக்கு தியாவை பிடித்திருக்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று சொல்வான். அது மனைவி என்ற தனக்கு மட்டுமே இருக்கும் சொந்தம் என்பதால். அதுவே அவளை காதலிக்கின்றாயா என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை. இதுவரை அவன் எந்த பெண்ணிடமும் நெருங்கிப் பழகினதும் இல்லை. மனதளவில் கயல், திலகா மட்டும் தான் அவனுக்கு சொந்தம் என்றிருக்க, அகல்யாவும், சிவரஞ்சனியும் வந்தபின் பெண்களை பற்றிய தவறான எண்ணம் முற்றாக மாறி இருக்க, சட்டென்று தியாவை ஏற்றுக் கொள்ள முடியா விட்டாலும், அவள் தன் மனைவி கடைசி வரையும் இனி வாழ்க்கை அவளோடு தான் என்பதில் உறுதியாக இருந்தான்.
எந்நாளும் சிடுசிடுப்போடு திரியும் தங்களது முதலாளி கடந்த நான்கு நாட்களாய் சிரித்த முகமாக வளம் வருவதைக் கண்டு கடையில் உள்ளவர்களும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவனில்லை. ஆனால் இவையனைத்தும் ரிஷியின் கண்ணில் பட சந்தோசமாக புன்னகைத்தாள் கொண்டான்.
“மாப்புள வண்டிய கொஞ்சம் நிறுத்து” நகைக் கடையில் இருந்து ஒன்றாக இருவரும் கிளம்ப ரிஷி வண்டியை நிறுத்த சொன்னதும் அது ஒரு பூக்கடையாக இருக்க அவனை கேள்வியாக ஏறிட்டான் பிரதீபன்.
“அது வந்து மாப்புள என் பொண்டாட்டிக்கு பூ வாங்கணும்”
“பூவா எதுக்கு” சந்தேகமாக கேட்டான் பிரதீபன்.
“தலைல வைக்கத்தான்”
“அதான் நம்ம தோட்டத்துலையே இருக்கே!”
“அட போடா… உனக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியல. ஒவ்வொரு பொண்ணுக்கும் எதிர்ப்பார்ப்பு நிறைய இருக்கு. அதுவும் புருஷன் கிட்ட நிறையவே இருக்கு. பொண்டாட்டிய கரெக்ட் பண்ண பூவும் அல்வாவும் போதும் னு நீ படிச்சதில்லையா?”
“சுத்தி வளைக்காம விசயத்துக்கு வாடா”
“இந்த ஒரு முழம் பூவை நா வாங்கிட்டு போனா உன் தங்கச்சி முகத்துல எரியும்! பாரு பிரகாசமான பல்பு. அப்படியே மனசு நிறைஞ்சி போகுது” கண்ணுக்கு கயலின் மலர்ந்த முகத்தை கொண்டு வந்து கண்களை மூடி ரிஷி வேறு உலகம் பயணிக்க,
“டேய்… சொல்லுடா…”
“அப்பொறம் என்னையே பூ வைச்சி விட சொல்லுவா அப்பொறம் ரொமான்ஸ் தான்.. ம்….. மீதியெல்லாம் சொல்ல முடியாது நா பூ வாங்க போறேன். உனக்கும் வேணும் நா வாங்கு. வாங்கிக் கொண்டு போய் உன் பொண்டாட்டிக் கிட்ட கொடு அப்புறம் பாரு என்ன நடக்க போகுதுனு”
“உனக்கு எப்படி ட… இதெல்லாம் தெரியும். என் கூடவே தானே இருப்ப”
“இதெல்லாம் சினிமா பாத்தாவது தெரிஞ்சிக்க கிட்டு இருக்கணும். கடவுளா பாத்து என் தம்பிய அனுப்பி இருக்கான். எல்லாம் அவன் அட்வைஸ் தான்”
“கல்யாணம் ஆன நமக்கு தெரியாததெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கான் அவனுக்கு வர போறவ கொடுத்து வச்சவதான்”
இருவரும் அமுதனை பற்றி பேசியவாறே பூ வாங்கிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பு இங்கு அமுதனின் பக்கத்து வீட்டுக்கு குடிவந்தாள் மலர்விழி.