வீட்டுக்குள் வந்த ப்ரதீபனின் கண்கள் மலரை தேட வழக்கமாக இந்த நேரத்தில் அவள் பாட்டியுடன் அமர்ந்திருக்க இன்று அவளைக் காணவில்லை. வழக்கத்துக்கு மாறாக இன்று அவள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை. கண்கள் அவளை அலச உள்ளமும் அவளுக்காக ஏங்க கால்கள் சமையலறையை நோக்கி நடந்தன.
அவன் உள்ளே வந்ததிலிருந்து அவனின் தேடலை புரிந்துக் கொண்ட பார்வதி பாட்டி கண்டும் காணாமல் இருந்தவர் அவன் சமயலறைப் பக்கம் செல்லவும் “பேராண்டி உன் பொண்டாட்டி ராத்திரி அப்படி என்ன வேல பார்த்தான்னே தெரியல அசந்து தூங்குறா, போ.. போய் எழுப்பு” நமட்டு சிரிப்பு சிரித்தவாறே சொல்ல
புன்னகைத்தவன் அவருக்கு பதிலளிக்காமல் படிகளில் ஏறி அறையை அடைய தூங்கிக் கொண்டிருந்த மனைவியை காணவில்லை. எங்கே சென்றிருப்பாள் என்று சிந்திக்க குளியலறையில் சத்தம் கேட்கவே நேற்றிரவு நடந்த கூடலும் நியாபகத்தில் வர மற்றவைகள் பின்னுக்கு சென்று தியா மட்டும் நினைவில் வளம் வர புன்னகைத்தவாறே பால்கனியில் போய் அமர்ந்துக் கொண்டான்.
குளித்து விட்டு வெளியே வந்த தியா கணவன் இருப்பது அறியாமல் அறையிலையே புடவையை மாற்றியவள் மெலிதான அலங்காரமும் செய்து கொண்டு திரும்ப ஒரு கையில்லாத டி ஷர்ட், சோர்ட் அணிந்து பால்கனி கதவில் சாந்து புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தவனைக் காண அவளின் இதயம் படபடவென அடிக்க ஆரம்பித்தது.
இறுகிய தசைகளும், விரிந்த மார்பும், முறுக்கேறிய புஜங்களுமாக கம்பீரம் குறையாமல் ஆளுமையுடன் நின்றிருந்தவனின் தேகமோ தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன் என்று பறை சாற்ற “இவன் என்னவன்” என்று தியாவின் மனம் பெருமை கொள்ள அவனையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் மார்பில் முகம் புதைக்க, அவனை அணைத்துக் கொள்ளும் ஆவல் தோன்றியது.
அவளின் எண்ணப் போக்கை நினைத்து பெண்ணவள் வெட்கம் கொண்டு தலைக் குனிய அவளையே பார்த்திருந்தவன் மெதுவாக அவள் புறம் அடியெடுத்து வைக்க அவள் சூடியிருந்த மல்லிகையின் மனமும் அவனின் நெஞ்சை நிறைக்க, அவளருகில் வந்தவனோ வாசம் பிடிக்க, அவள் அறையினுள் நுழைந்ததிலிருந்து அணுவணுவாக அவளை ரசித்தவனின் உள்ளே பாதி விழித்திருந்த மன்மதனும் அவளின் அருகாமையில் முற்றாக விழித்துக் கொண்டான்.
இதயம் தடதடக்க நின்றிருந்தவளோ! கணவனின் அருகாமையில் கிறங்கி நிற்க அவனின் பார்வை மாற்றத்தைக் கண்டு அவளின் இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. பந்தயக் குதிரை போல் வேகமாக துடிக்கும் இதயத் துடிப்பை கட்டுப் படுத்த வழி தெரியாமல் கன்னங்கள் சூடேற, நானப் பூ முகத்தில் பூக்க பின்னாடி அடியெடுத்து வைக்கலானாள் தியா.
அவனை விட்டு விலகி விடாதவாறு அவளின் இடையோடு சேர்த்து இறுக அணைத்தவன்
“எங்க டி எஸ்கேப்பாக பாக்குற? இப்படி ஆச காட்டி மோசம் செய்யுறதே உனக்கு வேலையா போச்சு”
“யாரு நான்? விட்டுட்டு போய்ட்டாரே! அந்த நல்லவனை எங்கயாச்சும் பாத்தீங்களா?”
“இப்போவாச்சும் நல்லவன்னு ஒத்துக்கிட்டியே”
“நல்லவன் மட்டுமல்ல, முரடன், கோபக்காரன், பிடிவாதக்காரன், கல்நெஞ்சுக்காரன்” அடுக்கிக் கொண்டே போக
“ஹஹஹ… பொண்டாட்டி வாயால இப்படியெல்லாம் பட்டம் கிடைக்குதே குடுத்து வச்சவன் டி நான்”
பிரதீபன் சத்தமாக சிரிக்க வார்த்தையாடிக் கொண்டிருந்தவள் அவன் சிரிப்பில் மயங்கி ரசிக்க
“ஹனிமூன் எங்க போலாம் பேபி டால்?”
“எங்கவேனா போலாம்”
“ம்ம்.. இல்ல நீயே சொல்லு”
தியா யோசிக்க ப்ரதீபனின் அலைபேசி அடித்தது எரிச்சலுடன் திரையை நோக்க அமுதன் என்று வரவும் “கரடி சரியான நேரத்துக்குத்தான் போன் பண்ணுவான்” திட்டிக் கொண்டே அனைக்க போக
அலைபேசியை பிடுங்கிய தியா ஸ்பீக்கர் மூடில் போட்டு விட்டு கணவனின் மடியில் அமர்ந்துக் கொண்டாள்.
மறுபக்கம் அமுதன் மூன்று தடவை “ஹலோ” என்ற பின் தான் பிரதீபன் “சொல்லுடா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே உன் கிட்ட பேசிட்டு வந்தேன். கல்யாணமானவனுக்கு ஆயிரம் வேல இருக்கும் புரிஞ்சிக்கடா” கை தியாவின் இடையை அளவிட வாய் மட்டும் பேசிக் கொண்டிருந்தது
தியா அவனை தடுத்தவாறே புன்னகைக்க அமுதனுக்கு பிரதீபன் சொன்னது புரியவில்லை போலும் “டேய் இந்த மலர்விழி அப்பா கிட்ட பொய் சொல்லுறா டா.. நீ வா உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”
“அதில்லடா நான் அந்த டயரிய படிச்சேன். நீ வா உன் கிட்ட பேசணும். ரிஷியை இதுல கூட்டு சேர்க்க வேணாம்”
“ஏன் டா…. “
“கயல் அவன் வாழ்க்கைல வந்த பிறகு மாறினவன் ஆக்சிடண்ட்டுக்கு பிறகு ரொம்பவே மாறிட்டான். கண்டிப்பா பழிவாங்க போறேன்னு கிளம்பினா தடுப்பான் நீ வா”
“வா வானா எங்க வர சொல்லுற” கடுப்பாகி பிரதீபன் கத்த தியாவுமே ஒரு கணம் பயந்து விட்டாள்.
“மலர் சென்னைக்கு கிளம்புறா…. என்ன அவசரம் னு தெரியல. நானும் போறேன். நீயும் வா” துணிகளை பெட்டியில் அடுக்கியவாறே அமுதன் பதட்டத்தோடு பேசிக் கொண்டிருக்க
“அவ போகட்டும் விடுடா நீ எதுக்கு பதறுற, உனக்குத்தான் அவளை கண்டாலே பிடிக்கலையே”
“என்ன போட்டு வாங்க பாக்குறியா, வந்தா அடி பின்னி எடுத்துடுவேன். இப்போ என்ன தெரியணும் உனக்கு? நான் மலர லவ் பண்ணுறேன்னு தெரியனுமா? ஆமா நான் மலர லவ் பண்ணுறேன்” கோபத்தில் ஒத்துக் கொண்டானா? அல்லது தன் மனதில் உள்ளதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று சொன்னானா? அமுதன் பதட்டமாகவே பேசிக் கொண்டிருக்க
“டேய் நீ அவளை லவ் பண்ணுற, அவளுக்காக துடிக்கிற, நடுவுல நான் எதுக்குடா” மேலும் அவனை வெறுப்பேத்த அமுதன் மலர்விழியை காதலிப்பதாக சொன்னதில் கண்களை அகல விரித்திருந்தாள் தியா.
“வேணாம் பிரதீபா… என்ன வெறுப்பேத்தாத. சொன்னா கேளு”
“டேய் பதறாம வீட்டுக்கு வா உன் கிட்ட பேசணும்” என்றவன் அலைபேசியை துண்டித்திருந்தான்.
“என்னங்க இது அமுதன் அந்த மலர்விழிய லவ் பண்ணுறாரா?”
“நீ எதுக்கு வாய பொளக்குற? என் தங்கச்சிய அவன் லவ் பண்ணுறான்” மேலும் தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தான் பிரதீபன்.
“தங்கச்சியா? இது எப்போதிலிருந்து?” பிரதீபன் ஒரு பெண்ணை தங்கச்சியாக ஏற்றுக் கொண்டான் என்றால் அந்த பெண் நல்லவளாகத்தான் இருக்க வேண்டும் மலர்விழியின் தோற்றமும், பேச்சும் தியாவுக்கு அவள் மீது நல்ல அபிப்ராயத்தை கொடுக்காததால் புரியாது கணவனை ஏறிட
“அமுதன் சென்னை போன உடனே மலர சந்திச்சு இருக்கான். அவனுக்கும் பிடிச்சிருக்கு அவ அந்த மினிஸ்டர் பொண்ணு என்றதும் ஒதுங்கி இருந்தான். அவளும் காதல் னு இவன் பின்னாடிதான் சுத்திக் கிட்டு இருந்தா. திடிரென்று ஒதுங்கியதும் அவ எதுக்கு அமுதனை நெருங்கி வந்தா, எதுக்கு ஒதுங்கி போனா என்ற குழப்பம். அவ கிட்டயே கேக்கலாம் னு அவளை கடத்திட்டோம்”
“என்னது கடத்துனீங்களா?” தியா அதிர்ச்சியாக
“ஆமா அதுக்கென்ன” என்ற பார்வையை வீச எச்சில் கூட்டி விழுங்கினாள் தியா.
“சும்மா கண்ண விரிச்சி வில்லன பாக்குற மாதிரி பார்க்காத. சில விஷயங்களை இப்படித்தான் ஹெண்டல் பண்ணனும். அவளை உக்கார வச்சி கேட்டிருந்தா உண்மையை சொல்லி இருக்க மாட்டா? கடத்தி ரிஷியை போடுவேன், அமுதனை போடுவேன் என்றதும் புள்ள வாயத்தொறந்துட்டா” மெதுவாக சிரித்தான் பிரதீபன்.
கணவனின் மறுபக்கத்தைக் கண்டு திகைத்தவள் அசையாது நிற்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் “இங்க பாரு தியா நான் கோபக்காரன் தான் கொலைகாரன் இல்ல. இதையும் உன் கிட்ட இருந்து மறச்சி இருக்கலாம். எதையுமே! மறைக்க கூடாதென்றுதான் சொல்லிக் கிட்டு இருக்கேன். என்ன நீ முழுசா புரிஞ்சிக்கணும். நான் தப்பான பாதைல போக மாட்டேன். ஆனால் என் குடும்பத்துக்கு ஆபத்தென்றால்? கொலை கூட செய்ய தயங்க மாட்டேன். புரிஞ்சுதா?”
தியாவின் தலை தானாக ஆட, காதல் கொஞ்சும் அவன் குரலில் மயங்கி நின்றவளுக்கு நன்றாகவே புரிந்தது அவனின் உண்மையான கர்ஜனைக் குரல் இதுதானென்று.
“நான் எது பண்ணாலும் அமைதியா இருக்கணும்னு நான் சொல்ல மாட்டேன். உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு, சண்டைபோடு. நீ நீயாகவே இரு. என்ன மாத்தணும்னோ! என் வழில குறிக்கிடணும்னோ! நினைக்காத. ஏன்னா நான் எது பண்ணாலும் அது என் குடும்பத்துக்காக பண்ணதாகத்தான் இருக்கும்.
சின்ன வயசுல என்ன பெத்தவங்களால ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேண்டி ரிஷியும், கயலோட அப்பாவும் இல்லனா நான் என்னவாகி இருப்பேனே தெரியல. ரிஷி அவருக்கு சொந்தம் நான் யாருடி? சொத்தை கூட எனக்கு பாதி ரிஷிக்கு பாதி எழுதிவைச்சாரு அந்த மனிசன்” மனதில் உள்ள ரணத்தையெல்லாம் கக்கலானான் பிரதீபன்.
ஒரு குழந்தையின் குழந்தை பருவம் நன்றாக இல்லையென்றால் என்ன மாதிரி மனிதனாக அவன் உருமாறக் கூடும் என்று அறியாதவல்ல தியா. விழியும் அவளிடம் ப்ரதீபனின் வாழ்க்கையில் நடந்தவைகளை கூறி இருந்தமையால் கணவன் எது செய்தாலும் துணை போகவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அவனுக்கு மருந்தாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“நீங்க என்ன வேணா பண்ணுங்க நான் உங்கள கேள்வி கேக்க மாட்டேன். ஆனா என்ன விட்டுட்டு மட்டும் எங்கயும் போகாதீங்க, எங்க போனாலும் நானும் கூடவே வருவேன்” கெஞ்சினால் வேலைக்காகாது என்று கணவனை முறைத்துக் கொண்டே சொல்ல
“உன் கவலை உனக்கு” ப்ரதீபனின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்த்தது.
“என்ன கிண்டல் பண்ணுறீங்களா? என் புருஷன் கூட நான் இருக்கணும் னு நினைக்கிறது ஒன்னும் சுயநலம் கிடையாது தெரிஞ்சிக்கோங்க”
“ஆமா ஆமா சுயநலம் கிடையாது புருஷனோட நலம் மட்டும் தான். சரி வா என்ன கவனிக்கலாம்”
“அமுதன் வந்து கதவை தட்ட போறாரு”
“ஆமா டி பேபி டால் அந்த கரடி எந்த நேரத்துல ப்ரசன்னமாகுமோ தெரியல. முதல்ல அவனை மலரோட கோர்த்து விட்டு பிஸியாகிடனும். அப்போ தான் நான் நிம்மதியா ரோமன்ஸ் பண்ண முடியும். அவன் வரதுக்குள்ள ஏதாவது பண்ணலாம்” தியாவின் கையை பிடித்து தன் புறம் இழுக்க
“ஐ… நான் குளிச்சு ட்ரெஸ்ஸெல்லாம் மாத்திட்டேன். மறுபடியும் என்னால குளிக்கவெல்லாம் முடியாது” அவனிடமிருந்து தப்பியோடியவாறே தியா
“குளிக்காமலேயே இருடி எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல. இப்போ வா” அவளை பிடிக்க துரத்தினான் பிரதீபன்.
அந்த அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் ஓடியவள் அவனிடம் சிறை பட “வேண்டுமென்றே பண்ணுறியா? இனிமேல் பண்ணுவியா?” என்றவாறே கிச்சுகிச்சுமூட்ட கலகலவென சிரிக்கலானாள் தியா.
அமுதன் வந்து கதவை பலமாக தட்ட “வந்துட்டாரு” தியா சிரிக்க
“இருடி அவனை கவனிச்சிட்டு வந்து உன்ன வச்சிக்கிறேன்” அவளின் கன்னத்தை கடித்து விட்டே நகர
கன்னத்தை தேய்த்தவாறே கணவனை முறைத்தாள் தியா.
“வாடா நல்லவனே! எதுக்கு என் உசுர எடுக்க பாக்குற” உள்ளுக்குள் சிரித்தவாறே பிரதீபன்.
“நீதானே அவளை கூட்டிட்டு வந்த” என்றவனின் பார்வை தியாவின் புறம் திரும்ப
“என் பொண்டாட்டிக்கு எல்லா விஷயமும் தெரியும். நீ மலர லவ் பண்ணுறது உட் பட” என்றவன் கண்சிமிட்டி சிரிக்க அமுதன் முழிக்கலானான்.
அமுதனின் முகம் பார்த்து தியாவுக்கு சிரிப்பாக இருந்தாலும் அடக்கிக் கொண்டவள் “உங்க மனைவியாக போறதால மலர் என் புருஷனுக்கு தங்கச்சி ஆனாளா? இல்ல உங்க மாமா பொண்ணு என்கிறதால தங்கச்சியானாளானு தெரியல. வந்ததுல இருந்தே தங்கச்சி புராணம் பாடுறாரு”
“என்னது தங்கச்சியா? இது எப்போதுல இருந்து. நீ அவளை கூட்டிட்டு வரும் போதே நினச்சேன் இப்படி ஏதாவது வில்லங்கமா முடிவெடுத்திருப்பனு. ஏன் சொத்துல பாதியை எழுதி வையேன் உன் தொங்கச்சிக்கு. அந்த கிரகம் புடிச்ச குடும்பத்தால நாம பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? எதுக்கு நீ அவளை இங்க கூட்டிட்டு வந்து கொஞ்சிக் குலாவுற”
அமுதனின் கோபமெல்லாம் மலர்விழி ரிஷியை காதலித்து விட்டு தன் பின்னால் அலைந்தது மாத்திரமன்றி அவள் மேலையே அவனுக்கு காதல் வந்த சோதனைதான். தன் மேலையே உள்ள கோபத்தை இவ்வாறு வெளிக்காட்டிக் கொண்டிருந்தான்.
“அவளுக்கு இருக்கும் சொத்துல வேணா பாதியை என் பேர்ல எழுதி வைக்க சொல்லலாம்” பிரதீபன் கண்சிமிட்ட அமுதன் முறைத்தான்.
“என்ன இவரு இப்போ தான் லவ் பண்ணுறேன்னு ஒத்துக்கிட்டாரு, அதுக்குள்ள திட்டுறாரு” அமுதனை ஒரு புரியாத பார்வை பார்த்த தியா “நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருங்க நான் குடிக்க ஏதாவது எடுத்துக் கொண்டு வரேன்” என்று நழுவ
“பேபி டால் நாங்க ஆபிஸ் ரூம்லயே போய் பேசுறோம் நீ ஒரு அரைமணித்தியாலம்…. இல்ல வேணாம் ஒன் அவர் கழிச்சே வா…”
“பார்டா பொண்டாட்டிக்கு வச்சிருக்கும் செல்ல பெயரை” அமுதன் அந்த நேரத்திலும் கிண்டலடிக்க
“என் பொண்டாட்டிக்கு நான் பேர் வச்சேன்டா உனக்கு எதுக்கு வயிறு எரியுது. நீ போ பேபி” தியா கணவனை முறைத்தவாறே அகல
“என் கிட்டயே கிளாஸ் எடுத்தவன் என் தலைலயே கை வைக்கிறியா நாயே!” என்றவாறே ப்ரதீபனை அடிக்கத் துரத்தினான் அமுதன்.
“என்ன கிளாஸ் எடுத்து என்ன பிரயோஜனம் மலர்விழி மனசுல என்ன இருக்குனு உன்னால கண்டு பிடிக்க முடியலையே! குருநாதா” என்றவாறே அவனிடமிருந்து தப்பி ஓடினான் பிரதீபன்.
ஒருவாறு இருவரும் மல்லுக்கட்டி மூச்சு வாங்கி நிற்க
“மலர் சென்னைக்கு போற விஷயம் எனக்கு தெரியும். அவ போன் பண்ணா… அவளோட மினிஸ்டர் அப்பா அவளை உடனே பார்க்கணும் வீட்டுக்கு வானு சொல்லி விட்டாராம்”
“அவ இங்க வந்தது தெரிஞ்சி போச்சா? இனிமேல் நாம நிம்மதியா இருக்க முடியாதா?” கோபமாக அமுதன்
“டேய் லூசு… அந்தாளுக்கு தெரியாது, ஏதோ அவளுக்கு வரன் வந்திருக்காம் அதான் சீக்கிரம் வர சொல்லி இருக்கிறார். அத அவ கிட்ட சொல்லாம வர சொல்லி இருக்கிறார்”
“இந்த விஷயம் உனக்கெப்படி தெரியும்?” அமுதனின் புறம் ஒரு விரல் நீட்டியவாறே கேக்க
“மினிஸ்டர் மாமாவும், உங்கம்மாவும் பேசிக்கிட்டாங்க, அத மலர் ஒட்டுக்கேட்டு சொன்னா”
“என்ன உளறுற” கோபமாக அமுதன்
மலர்விழி அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதை விலாவரியாக விளக்கியவன் “அதான் தங்கச்சி சென்னை போறா”
“ரிஷியை லவ் பண்ணுவாளாம், என்ன லவ் பண்ணுறது மாதிரி நடிப்பாளாம், இன்னொருத்தன கல்யாணம் பண்ண போறாளா? அவளை…”
“நீ சரியான லூசுப் பய டா… ரிஷியை அவ சின்ன வயசுல பார்த்ததோடு சரி, அவங்கப்பா முகத்துல கரிய பூசணும்னு தான் ரிஷியை தேடி இருக்கா, நீ போய் சிக்கி இருக்க, சரி அவளால உங்க குடும்பத்துக்கு பிரச்சினை வேணாம் னு ஒதுங்கிட்டா”