உன் நினைவு – 14
காண்டீபமோ – உன் புருவங்கள்..
அம்புகளோ – உனது கருவிழிகள்..
சேலையில் வந்து – என்னை….
சேதாரம் செய்கிறாயடி பெண்ணே ..
வசுமதி திடுகிட்டாள்.. “ அத்தான்.. அது வந்து “ என்று சிவா என்ன கூறுவது என்று தெரியாமல் இழுத்தான்..
“ ம்ம் என்ன அத்தான்.. என்று இழுக்கிறாய் சிவா ?? இவ்வளோ நேரமாக உன் அக்காவை மட்டும் எத்தனை கேள்வி கேட்டாய் இப்பொழுது என்ன பேச்சு வரவில்லையா ? ”
இருவருக்கும் நடுவில் வசுமதி வந்தாள் “ அதெல்லாம் இல்லை அத்தான் சும்மா தான் பேசிக்கொண்டு இருந்தோம்.. நீங்கள் நினைக்கின்ற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை அத்தான் “ என்று மென்று விழுங்கினாள்..
“ உனக்கு தான் பொய் சொல்ல வரவில்லையே மதி, பின் ஏன் இவ்வளோ கஷ்டப்பட்டு பொய் சொல்கிறாய .. விடு மா “ என்று கூறி அவளது கைகளை பற்றியபடி நின்றான்.. “ சிவா, ராம், நீங்கள் இரண்டு பேரும் வசுமதியை கேட்ட எதுவுமே தப்பில்லை..”
“அவள் மேல் இருக்கும் அக்கறையிலும் பாசத்திலும் தான் நீங்கள் இப்படி கேள்வி கேட்டிர்கள் என்று எனக்கு புரிகிறது.. வசுமதியும் தன் மனதில் என்ன இருக்கிறதோ அதை தெளிவாக சொல்லிவிட்டாள்.. அதே மாதிரி நானும் சொல்ல வேண்டாமா “ என்று கூறி பேச்சை நிறுத்தினான்..
இவன் என்ன கூறப்போகிறான் என்பதை அறிய மூவருமே அவன் முகம் பார்த்து நின்றனர்..
“ சிவா நீ லாஸ்ட் டைம் இங்கு வந்துவிட்டு போகும் போது உனக்கு நான் ஒரு ப்ராமிஸ் செய்தேன், மதி மனது கஷ்டபடுகிற மாதிரி இனிமேல் எதுவும் நடக்காது என்று சொன்னேன்.. இப்பொழுதும் சொல்கிறேன, வசுமதியும் நானும் காதலிக்கிறோம் அதில் எந்த மாற்றமும் இல்லை..”
“ எல்லாருக்கும் கல்யாணம் வாழ்க்கையில் ஒரு தடவை தான் நடக்கும்.. அதுமாதிரி எனக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது மதி உடன் மட்டும் தான்…. “ என்று கூறி கொண்டு இருக்கும் பொழுதே வசுமதி அவனை திகைப்பாய் பார்த்தாள்..
அவளை பார்த்து ஒரு புன்னகை புரிந்தவன் மறுபடியும் பேச ஆரம்பித்தான் “ உன் அக்காவை கடைசி வரைக்கும் என்னால் எவ்வளோ முடியுமோ அவ்வளோ சந்தோசமாக பார்த்துக்கொள்வேன்.. இதை நீங்கள் இரண்டு பேரும் நம்பித்தான் ஆகவேண்டும். அவளின் சுக, துக்கம் அனைத்திலும் அவளுக்கு துணையாக இருப்பேன்.. ” என்று கூறி முடித்தான்..
ராமிற்கு புரிந்து விட்டது இதற்குமேல் இதில் தலையிட கூடாது என்று சிரித்தபடி “ ஆல் தி பெஸ்ட் கதிரவன்.. ஆல் தி பெஸ்ட் வசுமதி “ என்றான்.. இருவரும் ஒருமித்த குரலில் “ தேங்க்ஸ் ” என்றனர்..
ஆனால் சிவாவோ சிரித்தபடி “ அதெல்லாம் சரிதான் அத்தான்.. எனக்கு ஓகே.. ஆனால் ஒருவேலை எங்கள் வீட்டில் முடியாது என்று சொன்னால் அப்போ உங்களின் முடிவு என்ன ? ”
கதிரவனும் அவனது கேலியை புரிந்துகொண்டு “ என்ன செய்வது சிவா உன் அக்காவை இங்கு தங்க வைத்த எனக்கு அவளை தூக்கி கொண்டு போய் தாலி கட்ட தெரியாதா என்ன ? ” என்று அவனும் சிரித்தபடி கேட்டான்..
இதை கேட்டது வசுமதி “ அத்தான் “ என்று வாய் பிளந்து நின்றாள்..
“உங்களுக்கு தனி தைரியம் தான் கதிரவன் “ என்றான் ராம்..
சிவாவும் சிரித்தபடி “ ஆம் ராம் அண்ணா, அத்தான் காதலிப்பது நம் வசுமதியை அல்லவா? அப்போ அவருக்கு தனி தைரியம் வேண்டும் தான்.. ஹ்ம்ம் பாவம் அத்தான் உங்கள் வாழ்கை இப்படியா அமையவேண்டும் “ என்று போலியாக கண்ணீர் விட்டான்..
வசுமதி “ டேய் ரொம்ப பேசாதே, வேண்டாம் சொல்லிவிட்டேன் “ என்று மிரட்டினாள்.
ஆனால் சிவா அவளுக்கு பதில் கூறாமல்“ சரி அத்தான்… கல்யாணம் எப்போ ? “ என்று கேட்டான்.
கதிரவனோ “ டேய் சிவா இன்று தான் டா காதலிக்கவே ஆரம்பித்து இருக்கோம். அதற்குள் என்ன ?? ஆனால் கண்டிப்பாய் இன்னும் ஐந்து மாதத்திற்குள் டும் டும் டும் தான் “ என்றான்..
சிவா கதிரவனிடம் சென்று அவன் கைகளை பிடித்தபடி “ ஹ்ம்ம் உங்களை காப்பாற்ற நான் எவ்வளவோ முயற்சி செய்தேன் அத்தான்.. ஆனால் என்ன செய்வது நீங்களே ஒரு குழி தோண்டி அதில் இறங்கி உட்கார்ந்தாகிவிட்டது. ஹ்ம்ம்…. இதற்கு மேல் நான் என்ன செய்ய அத்தான்“ என்று கூறி சிரித்தான்.. கதிரவனும் பதிலுக்கு சிரித்தான்..
“ டேய் .. பேசாமல் போயிவிடு “ என்று வசுமதி முறைத்தாள்..
“ ஹா ஹா சரி சரி நாங்கள் போறோம் நீங்கள் இருவரும் சீக்கிரம் வந்து தூங்க பாருங்கள். சுமதி அக்கா உன்னை நம்பித்தான் அத்தானை ஒப்படைக்கிறேன்.. அவர் கண்களில் ஆனந்த கண்ணீர மட்டும் தான் பார்க்க வேண்டும்“ என்று சிரித்தபடி ராமையும் அழைத்துக்கொண்டு சிவா கீழே சென்று விட்டான்..
அவர்கள் போனதும் வசுமதி “ யப்பாடி .. கொஞ்ச நேரத்தில் என்னை டென்ஷன் ஏற்றிவிட்டார்கள்“ என்றாள் கதிரவன் முகம் பார்த்து..
கதிரவனின் முகம் வசுமதியை பார்த்து கனிந்துவிட்டது.. அதை உணர்ந்த வசுமதி “ என்ன அத்தான் “ என்றாள் சிரித்தபடி.. அவளை இழுத்து தான் மார்பில் சாய்த்து கொண்டான்.. அவளும் அவனிடம் வாகாக சாய்ந்து கொண்டாள்..
“ எப்படி மதி உன்னால் இப்படி இருக்க முடிகிறது.. இத்தனை அன்பா ?? காதலா ?? நம்பிக்கையா ?? எப்படி மதி ? நான் இதற்கெல்லாம் தகுதி ஆனவன் தானா மதிம்மா ” என்றான்.. அவன் குரலில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது..
அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கூறினாள் “ நான் இப்பொழுதும் அதை தான் சொல்கிறேன் அத்தான்.. எனக்கு வேண்டியது எல்லாம் உங்களின் அன்பு மட்டும் தான்.. நான் வேறு எதையுமே எதிர்பார்க்கவில்லை “
“ இ லவ் யு சோ மச் மதி ” என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்..
“ சரி சரி போதும் போதும் ஆரம்பிக்காதிர்கள்” என்று சிரித்தபடி விலகி நின்றாள்..
“ ம்ச்.. என்ன டி ?? ” என்று கூறி மீண்டும் அவளை தான் பக்கம் இழுத்தான்.. அவளும் சிணுங்கியபடி “ சும்மா இருங்கள் அத்தான்.. எப்ப பார் உங்களுக்கு இதே வேலை”
“ அடி பாவி.. எப்ப பாரா ?? நாம் லவ் சொன்னதே இன்று தான்.. அதற்குள் உனக்கு சலிப்பா ??? ”
“ ம்ம் சலிப்பு எதுவும் இல்லை.. உங்களுக்கு சோர்வாய் இருக்குமே” என்று பேச்சை மாற்றினாள்..
அவள் பேச்சை மாற்றுவது புரிந்து கொண்ட கதிரவன் மெல்ல சிரித்தபடி “ அலுப்பெல்லாம் எதுவும் இல்லை மதி.. தூக்கம் வரவில்லை அதான் மேலே வந்தேன்.. பார்த்தால் இங்கு ஒரு விசாரணை போய்கொண்டு இருந்தது.. நானும் அமைதியாக வேடிக்கை பார்த்து நின்றுவிட்டேன் ”
“ அடப்பாவி அத்தான்… இரண்டு பேரும் என்னை மாற்றி மாற்றி கேள்வி கேட்டு இருந்ததை பார்த்தால் உங்களுக்கு வேடிக்கையாய் இருந்ததா? “ என்று கூறியபடியே அவனை தோலில் அடித்தாள்..
“ நோ நோ குட்டச்சி நோ வயலன்ஸ் ” என்றான் கதிரவன்..
“ என்ன குட்டச்சியா ?? என்ன தைரியம் கதிர்.. என்னை பார்த்தால் குட்டையாவாக தெரிகிறேன் ?? அதுசரி நீங்கள் பனைமரம் போல வளர்ந்து இருந்தால் நான் என்ன செய்வது ” என்று அவள் பாட்டுக்கு பஜனை பாட ஆரம்பித்தாள்…
“ ஆகா !!! இப்படி இவளிடம் வந்து மாட்டிக்கிட்டேனே.. சிவா இதை தான் நீ அப்படி மறைமுகமா சொல்லிவிட்டு போனாயா டா ?? டேய் மாப்பிள்ள நான் கொஞ்சம் உன் பேச்சை கேட்டிருக்க வேண்டும் போலவே ” என்று புலம்பினான்..
“ அங்கு என்ன முனுமுனுப்பு ? “ வசுமதி..
“ ஹா !! ஒன்றுமில்லைங்க சின்னம்மா.. “ என்றான் பவ்வியமாக.. அவன் கூறியதை கேட்ட வசுமதி சிரித்துவிட்டாள்
“ என்ன அத்தான் உங்களுக்கும் நான் சின்னம்மாவா ? கடைசியில் உறவு முறையே மாற்றி விடுவீர்கள் போல “ என்று கூறி கலகலவென்று சிரித்தாள்..
“ஆகா அடி மடியில் கை வைக்கிறாளே “ என்று முனங்கினான்..
“என்ன அத்தான் இன்னும் முனுமுனுப்பு?? “ என்று செல்லமாக அதட்டினாள்..
“ ஒன்றும் இல்லை சும்மா நானாய் பேசி பார்த்தேன் மதி ”
“ நீங்களாக பேசிக்கொண்டு இருந்தால் அதற்கு பெயர் வேறு அத்தான் ” இப்படியே மாற்றி மாற்றி இருவரும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சிறிது நேரம் இருந்துவிட்டு உறங்க சென்று விட்டனர்…
அன்னபூரணி குடும்பதிற்கே அந்த நாள் மிகவும் சந்தோசமாக விடிந்தது… வசுமதி மிகவும் மகிழ்ச்சியாக அந்த வீட்டை சுற்றி வந்தாள்.. இத்தனை நாட்கள் இருந்ததை விட இன்று அனைத்துமே அவளுக்கு புதிதாகவும் அழகாகவும் தெரிந்தது…
தனக்கு பிடித்த பாடல் ஒன்றை மெதுவாக பாடிக்கொண்டே அவளது தினசரி வேலைகளை பார்த்தாள்.. ஆனால் அவளது மனமோ எந்த வேலையிலும் ஒன்றவில்லை.. அவளையே அறியாது அவளது அடிமனதில் கதிரவனை பற்றிய சிந்தனைகள் ஒடிக்கொண்டே இருந்தன..
“இப்போ என்ன செய்வான் ?? தோப்புக்கு போய் இருப்பனா ?? ஹ்ம்ம் இல்லை அழகு அண்ணன் கமிஷன் மண்டிக்கு போக வேண்டும் என்று சொன்னாங்களே அங்கு போய் இருப்பானோ? ” என்று நினைத்துக்கொண்டே அன்னபூரணியின் அலமாரியில் துணிகளை அடுக்கி கொண்டிருந்தாள்..
தன் பேத்தியின் முகத்தில் இருக்கும் பொழிவையும் செம்மையையும் பார்க்கும் பொழுது அன்னபூரணிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.. வேண்டும் என்றே வம்பிழுக்க நினைத்தார்..
“ மாமியா மேல் கண்ணு வேல் பருத்தி மேல் கை “ என்று சிரித்தபடி கூறினார்..
வசுமதி “ என்ன??? …. என்ன அம்மாச்சி ஏதாவது சொன்னாயா? ”
“ அதுசரி… இந்த வயசுல கிழடுங்க சொல்லுவது எல்லாம் கேட்குமா ?? யாராவது டார்லிங் டியர் என்று சொன்னால் தான் கேட்கும் ”
“ ஆஹா!! இது என்ன அம்மாச்சி இப்படி சொல்லுது“ என்று எண்ணியவாறே “ என்ன அம்மாச்சி என்ன எதுவானாலும் தெளிவாக சொல் “ என்றாள் மதி..
“ ஹ்ம்ம் தெளிவாக இருந்தால் எல்லாம் தெளிவாக கேட்கும்.. ஆள் மட்டும் இங்கு இருந்து மனது வேறு எங்கேயோ இருந்தால் ஸ்பீக்கர் போட்டு பேசினால் கூட கேட்காது “ என்றார் சிரித்தபடி..
“அடடா உனக்கு இப்ப என்ன வேண்டும் ??” என்றபடி அவரிடம் வந்து மெத்தையில் அமர்ந்தாள்….
“ எனக்கென்ன கண்ணம்மா என் பேரன், பேத்தி எல்லாருக்கும் கல்யாணம் செய்து பார்த்துவிட்டால் என் கடமை நிறைவேறிடும் “ கல்யாணம் என்றதுமே அவள் முகம் லேசாக சிவக்க ஆரம்பித்தது.. ஆனாலும் வெளியே காட்டாமல்
“ போ அம்மாச்சி இப்ப என்ன அவசரம்.. இன்னும் கொஞ்ச நாள் நான் இப்படியே இருக்க ஆசையா இருக்கு “ என்று கூறியபடி அவர் மாடியில் படுத்துக்கொண்டாள்..
“ ஆசையாய் தானே இருக்கும் இருக்கும் “ என்று கூறி சிரித்தார்.. அதே நேரம் கதிரவன் தன் அப்பத்தாவை பார்க்க வந்தான்..
“ என்ன கொஞ்சல் எல்லாம் பலமாக இருக்கு பாட்டிக்கும் பேத்திக்கும் ? “
“ ஏன் நான் என் அம்மாச்சியை கொஞ்ச கூடாதோ ?? அப்படித்தான் கொஞ்சுவேன் உங்களுக்கு என்ன பொறாமை “ என்றாள் வசுமதி…
“ ஆமாமா பொறாமையாக தான் இருக்கும்“ என்று அழுத்தமாக கூறினார் அன்னபூரணி
“ அம்மாச்சியை கொஞ்சும் வயசா டி உனக்கு ” என்று நினைத்தவன் அதை கூறாமல் “ அப்படியா எனக்கு பொறாமையா?? ஹா ஹா இப்ப என்ன செய்விங்க இரண்டு பேரும் “ என்று கூறிக்கொண்டே அவனும் அன்னபூரணியின் இன்னொரு மடியில் தலை சாய்த்து கொண்டான்..
“ என்ன இவன் இப்படி அம்மாச்சியின் முன்னாடியே வந்து இப்படி வம்பு செய்கிறான் “ என்று எண்ணியவள் வேகமாக எழ நினைத்தாள்.. ஆனால் நினைக்க மட்டும் தான் முடிந்தது.. அவளால் எழ முடியவில்லை.. அன்னபூரணி அறியாத வன்னம் கதிரவன் அவளது கைகளை பற்றி இருந்தான்..
“என்ன தைரியம்“ என்று புலம்பியபடி எழவும் முடியாமல் படுக்கவும் முடியாமல் தவித்து அமர்ந்து இருந்தாள்.. இதை அனைத்தையும் கண்டும் காணாதது போல அன்னபூரணி அமர்ந்து வசுமதிக்கும் கதிரவனுக்கும் தலையை தடவி விட்டபடி மனதிற்குள் சிரித்தபடி இருந்தார்..
“ பேராண்டி உன்னை என்னவோ என்று நினைத்தேன் ஆனால் நீ பயங்கரமான ஆள் தான் “ என்று மனதிற்குள் மெச்சினார்.. வசுமதியின் பாடு தான் மிக திண்டாட்டமாக இருந்தது.. கதிரவனின் பேச்சு என்னவோ அவனது அப்பத்தாவிடம் இருந்தாலும் பார்வையும் கையும் வசுமதியிடம் இருந்தது…
அவளால் எதுவும் செய்யவும் முடியவில்லை.. தன் பாட்டி அறியாத வண்ணம் கதிரவனின் கைகளை நறுக்கென்று கில்லி வைத்தாள்.. ஆனால் அவனோ அதே கைகளை பற்றி மெதுவாக முத்தம் பதித்தான்..
“ என்ன நடக்கிறது இங்கே என்று கேட்ட படி “ சிவா வந்தான்..
“சரியான கரடி வேலை பார்க்க மட்டும் எல்லாம் வந்துவிடுவானுங்கள்“ என்று முனங்கியபடி எழுந்தான் கதிரவன்..
“ யப்பாடி “ என்று பெருமூச்சு விட்டாள் வசுமதி..
“ஹா ஹா அத்தான் உங்கள் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுவிட்டது “ என்று கூறியபடி “ சரி சரி இரண்டு பேரும் நகருங்கள் என்ன இது சின்ன பிள்ளை மாதிரி மடியில் படுத்துகிட்டு.. நகரு சுமதி.. எல்லாம் கல்யாணம் செய்து குழந்தை பெரும் வயதில் பாட்டியை கொஞ்கொண்டு “ என்று கூறி கதிரவனையும் வசுமதியும் நகட்டி விட்டு அவன் படுத்துகொண்டான்..
கதிரவன் அவனை பார்த்து “ என்னடா சிவா ஊர் சுற்றி பார்க்வில்கலையா ?? அழகு உடன் ராம் போனானே .. நீ போகவில்லை ?? ”
“ நீங்கள் எதற்கு இத்தனை அக்கறையாய் கேட்கிறிர்கள் என்று தெரியும் அத்தான் “ என்று நினைத்தவாறே “ ஹி ஹி அத்தான்..ஊர் எங்கயும் போய் விடாது.. அது சரி நான் இருக்கும் பொழுதே என்னென்னவோ நடக்கிறது. நான் மட்டும் இல்லை என்றால் என்ன நடக்குமோ “ என்றான் சம்பந்தமே இல்லாமல் பேசுவது போல..
“ என்னடா செல்லப்பா எதற்கு இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாய்.. நீ என்ன சொல்வது ஒன்றும் புரியவில்லை “ என்றார் அன்னபூரணி
“ அடடா அம்மாச்சி உனக்கு புரியவிலை என்றால் என்ன.?? இந்நேரம் புரிய வேண்டியவங்களுக்கு சரியாய் புரிந்து இருக்கும் இல்லையா அத்தான் “
“ டேய்” என்று பல்லை கடித்தான் கதிரவன்.. சிவாவை நாலு போட்டாள் வசுமதி “ சும்மா இரு டா “ என்றவாறு.. இப்படியே அங்கே சிரிப்பும் கும்மாளமுமாக பொழுது நகர்ந்தது..
“அடடா என்ன இவ்வளோ சத்தம் “ என்று கூறியபடி காமாட்சி அங்கே வந்தார்..
“ கதிரவா நீயும் இங்கேயா இருக்காய்? ஆமா இந்நேரம் என்ன வீட்டில் உனக்கு வேலை “ என்று தன் மகனை பார்த்து கேட்டார்..
“ ஏன்மா ஒருத்தன் நிம்மதியாய் கொஞ்ச நேரம் வீட்டில் சும்மா இருக்கிறது பிடிக்கவில்லையா ? ”
காமாட்சி பதில் கூறும்முன், சிவா முந்தி கொண்டான் “ அத்தை இனிமேல் அத்தான் இப்படித்தான்.. நினைத்தால் வெளியே போவார் வீட்டிற்கு வருவார்.. அதையெல்லாம் நாம் கண்டுக்க கூடாது ” என்றான் சிரித்தபடி.. அங்கே சிரிப்பலை பரவியது..
“ சரி சரி உங்கள் பேச்சை கேட்டு சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன்.. இன்று பிரதோஷம் நாம் எல்லாம் சாயங்காலமா மலை மேல் இருக்க சிவன் கோவிலுக்கு போய்விட்டு வரலாம் “ என்றார் காமாட்சி..
“ஐ !! கோவிலுக்கா .. போகலாம் அத்தை “ என்றாள் முதல் ஆளாக வசுமதி..
சிவா “ வசுக்கா பொங்கல் வாங்குவதற்கு அப்படி என்ன அவசரம் ?? “ அவன் இப்படி கூறியதும் கதிரவன் சும்மா இருக்காமல்
“ அப்படி சொல்லு டா சிவா .. நானும் சொல்லி சொல்லி பார்த்துவிட்டேன்.. இனிமேல் கன்பார்மா சிலின்டர் தான் உன் அக்கா “ என்று கூறி சிரித்தான்..
அவ்வளோதான் அவனை முறைத்து விட்டு எதுவும் பேசாமல் சென்று விட்டாள் வசுமதி.. கதிரவனுக்கு தெரியும் அவளது கோவம் எல்லாம் கொஞ்ச நேரத்தில் காணமல் போய்விடும் என்று..
“ தம்பி கதிரவா என்ன இது? “ என்றார் காமட்சி.. பாவம் அவருக்கு ஒவ்வொரு நிமிடமும் பயம் .. இருவருக்குள்ளும் எந்த பிணக்கும் வரகூடாது என்று..
“ சும்மா தான் மா கொஞ்ச நேரத்தில் சரி ஆகிடுவாள் “ என்று கூறி சிவாவையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான்..
மாலை அனைவரும் கோவிலுக்கு தயாரகி கொண்டு இருந்தனர்.. வசுமதிக்கு மனதிற்குள்ளே மிகவும் சந்தோஷம்.. தங்கள் காதலை பகிர்ந்து கொண்ட பின்பு முதல் முறையாக செல்லும் இடம்.. அதுவும் கோவிலுக்கு..
அன்னபூரணி “ என்னால் படி ஏறமுடியாது நீங்கள் அனைவரும் சென்று வாருங்கள் “ என்று கூறிவிட்டார்.. அனைவரும் தயாராகி அமர்ந்து இருந்தனர்.. வசுமதியை தவிற..
“ என்ன செய்துகிட்டு இருக்கா ?? எவ்வளோ நேரம் தான் இவள் இறங்கி வர ? “ என்று மாடியையும் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துகொண்டு இருந்தான் கதிரவன்..
“ எல்லாம் ஒரே வண்டியில் போக முடியாது.. அதனால் இரண்டு வண்டியில் பிரிந்து உட்கார்ந்துக்கலாம் ” என்று மல்லிகாவிடம் கூறி கொண்டு இருந்தார் காமாட்சி.. சிவாவும் ராமும் அழகேசனை நூறு கேள்விகள் கேட்டு கொண்டு இருந்தனர்.. அழகேசன் நினைத்தான்
“ கதிரவா உனக்கு நான் என்னடா செய்தேன்.. இப்படி நீ பார்க்க வேண்டிய வேலை எல்லாம் என்னை பார்க்க வைக்கிறாய்.. நீ ரிலாக்ஸா லவ் பண்ணுவதற்கு நான் தானா கிடைத்தேன். கேள்வி மேலே கேள்வி கேட்டு கொல்லுரானுங்க டா “ என்று மனதில் முனங்கியவாரே கதிரவனை பார்த்தான்..
ஆனால் அவனது பார்வையோ மாடியிலே இருந்தது.. “ அதுசரி இவன் இனிமேல் நம் பக்கம் திரும்ப மாட்டான் “ என்று முடிவு செய்தான் அழகேசன்..
கதிரவனின் பார்வை ஒரு நிமிடம் விரிந்து பின் ஆச்சரியத்தில் மூழ்கி பின் தேன் குடிக்கும் வண்டாக மாறியது..
வசுமதி மாடியில் இருந்து அழகான சந்தன நிற சேலை அணிந்து தன் நீள மூடியை தளர பின்னி அதில் மல்லியும் முல்லையும் கலந்து கட்டிய மலர் சரத்தை சூடி கைகளில் கண்ணாடி வளையல் அணித்து ஒயிலாக இறங்கி வந்தாள்.. முதல் முறையாக அவளை சேலையில் பார்க்கிறான் அல்லவா .. கதிரவன் அவளது அழகில் மெய் மறந்து நின்றே விட்டான்..
கதிரவன் வசுமதியை பார்த்து அப்படியே செய்வது அறியாது நின்று விட்டான்…. அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது.. “அனைவரின் முன்னிலும் இப்படி பார்த்து வைக்கிறான் ? ” என்று நினைத்து கொண்டாள்..
ஆனாலும் அவளது மனம் ஆனந்த கூத்தாடியது… “ என்னவன் ரசிக்காமல் வேறு யாருக்கு இந்த உரிமை உள்ளது ” என்று நினைத்தாள்.. அவளது முகம் செம்மையை சூடிகொண்டது..
மல்லிகாவிற்கு இதை எல்லாம் காண காண கடுப்பாக வந்தது.. “ எத்தனை சீக்கிரம் நாம் திட்டம் தீட்ட வேண்டுமோ அத்தனை நல்லது” என்று எண்ணிக்கொண்டார்..
தான் எப்படி இருக்கிறோம் என்பதை அறியும் விதமாக கதிரவனை பார்த்து தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினாள் வசுமதி.. கதிரவனும் அவளுக்கு பதில் கூறும் விதமாக தன் நெஞ்சை தொட்டு பெரு மூச்சு விட்டான் “ ப்ரீத் டேக்கிங் “ என்று கூறும் விதமாக..
இதை எல்லாம் பார்த்த அழகேசன் இது வேலைக்கு ஆகாது என்று எண்ணி “ சரி சரி எல்லாரும் கிளம்பலாம் வாங்க வாங்க “ என்று அனைவரையும் இழுத்து சென்றான்..
காமாட்சி “ அழகு.. நம்ம எல்லாரும் இந்த பெரிய வண்டியில் போகலாம் “ பின்னால் வருபவர்கள் கதிரவன் வண்டியில் வரட்டும் “ பின்னாடி வந்தது வேறு யாரும் இல்லை கதிரவனும் வசுமதியும் தான்.
அழகேசன் இதை புரிந்து கொண்டு ” நல்ல குடும்பம்டா “ என்று எண்ணியவாறே பெரிய டொயோட்டோவை ஸ்டார்ட் செய்தான்.. கதிரவனும் வசுமதியும் மட்டும் கதிரவனது i10 ல் வரும்படி ஆயிற்று..
“ச்சே இந்த அண்ணி எல்லாம் தெரிந்து தான் இப்படி பேசுகிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை“ என்று முனங்கினார் மல்லிகா.. பொன்மலருக்கோ வசுமதியை கதிரவன் பார்த்த பார்வையே பொறாமையை கிளப்பியது..
இரண்டு வண்டிகளும் ஒன்றாக கிளம்பினர்.. பெரிய வண்டியை அழகேசன் ஓட்டினான்.. அவனது வண்டிக்கு இடம் விட்டு கதிரவன் சற்று மெதுவாக ஓட்டினான்..
“ அத்தான் இப்ப எதற்கு இவ்வளோ மெதுவா ஓட்றீங்க.. சைக்கிளில் போகிறவன் கூட சைடு வாங்கிகொண்டு போகிறான் ? ” என்று கடுபடித்தாள் வசுமதி..
ஆனால் கதிரவனோ இந்த உலகத்தில் இருந்தால் தானே.. விசில் அடித்தபடி வண்டியை மெதுவாக ஓட்டினான்..
“ அத்தான் ” என்று கத்தியே விட்டாள்..
“ என்ன டி இப்ப எதற்கு இப்படி கத்துற ? ”
“ நீங்கள் செய்வதற்கு கத்தாமல் வேறு என்ன செய்வார்களாம் ? ”
“ அட மதி நான் எதுவுமே பண்ணவில்லையே.. இங்கு பார் என் கை கூட ஸ்டீரிங் மேல் தான் இருக்கிறது “ என்றான் அவளை பார்த்து கண் சிமிட்டியபடி..
“ இப்ப நீங்க வேகமாக போக போறிங்கலா இல்லையா ? “
“ முடியாது என்ன டி செய்வ ? ”
“ அழகு அண்ணன்க்கு போன் செய்து வண்டியை நிறுத்த சொல்லி அந்த வண்டியில் ஏறிக்கிறேன். நீங்கள் மெதுவாய் ஊர்ந்துகொண்டு வாங்கள்” என்று போனை எடுத்தாள்..
“ ஏய் மதி “ என்று கூறி அவளது அலைபேசியை பிடுங்கி வைத்தான்..
“ இங்க பாருங்க அத்தான் நீங்க செய்வது கொஞ்சம் கூட சரியில்லை.. எல்லாரும் முன்னட போய்விடாங்க. இது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று புலம்ப ஆரம்பித்தாள்..
அவ்வளோதான் அவன் வண்டியை ஓரமாக நிறுத்தியே விட்டான்.. அவள் அவனை முறைத்தபடி பார்த்தாள்..
“ முறைக்காத டி எல்லாம் உன்னால் தான் “ என்று கூறியபடி அவளது கைகளை பற்றினான்..
“ ஆரம்பிச்சுட்டீங்களா ? நாம் போவது கோவிலுக்கு .. நியாபகம் இருக்கா ?? ஆமா நான் என்ன பண்ணேன் “ என்று அவளது கைகளை உருவி கொண்டாள்..
“ ஹ்ம்ம் நீ என்ன செய்யவில்லை? எல்லாமே நீ செய்ததுதான். சென்னையில் இருந்து வந்து என்னை மயக்கிவிட்ட “ என்றான் சிரித்தபடி..
“ யப்பா சாமி… போதும் வண்டியை கிளப்புங்கள் அத்தான்.. பூஜை கூட முடிந்துவிடும் “
அவன் அசருவதாக இல்லை.. கைகளை கட்டியடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து அமர்ந்து இருந்தான்.. “ சேலையில் வந்து அசத்துற டி “ என்றான் மயக்க குரலில்..
வசுமதிக்குமே அவனது பார்வையை தாங்க முடியவில்லை.. தலை தாழ்த்தி அமர்ந்து இருந்தாள்.. கன்னங்கள் சூடேறுவதை உணர்ந்தாள்.. சரியாக அதேநேரம் கதிரவனின் அலைபேசி அலறியது “ ச்சே மூக்கு வேர்த்துவிடுமே “ என்று கடிந்தபடி போனை எடுத்தான்..
“ என்ன டா ? ”
……
“ வந்துகிட்டு இருக்கோம் “
….
“ உன்னை யார் டா அவ்வளோ வேகமாய் போக சொன்னது?? ”
….
“ சரி சரி அங்கேயே இருங்கள் வந்துவிடுவோம் “ என்று பேசியவாறே வண்டியை வேகமாக கிளப்பினான்.. வசுமதி மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்..
அனைவரும் கோவிலை நோக்கி மெல்ல நடக்க தொடங்கினர். “ அம்மா இந்த அத்தைக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.. அவர்கள் இரண்டு பேரையும் இப்படியா தனியில் இருக்க விடுவது ? ” பொன்மலர்..
“ நீ கொஞ்சம் மெதுவாய் நடந்து வசுமதியோடு சேர்ந்து வா.. நான் முன்னாடி போகிறேன் “ என்று கூறி மல்லிகா காமாட்சியோடு சேர்ந்து விட்டார்..
“ மலரு நீ ஏன் இவ்வளோ மெதுவாய் வர.. வா வா.. பூஜை முடிந்திடும் போல “ என்று அவளையும் இழுத்துக்கொண்டார் காமாட்சி..
அழகு ராம் சிவா மூவரும் முன்னே நடந்தனர், நடுவில் காமாட்சி மல்லிகா பொன்மலர் ஏறினர். இறுதியில் வசுமதியும் கதிரவனும் பேசியபடி படிகளில் ஏறினர்…
“ வாவ் அத்தான் இங்கு இருந்து பார்க்க சூப்பரா இருக்கு .”
“ இன்னும் மேலே ஏறி அந்த பக்கம் பாறையில் உட்கார்ந்து பார்த்தால் இன்னும் நன்றாய் இருக்கும் மதி .. சாமி பார்த்துவிட்டு அங்கு போகலாம் “ என்றான் கதிரவன்..
அனைவரும் எல்லாம் வல்ல இறைவன் முன் நின்று தங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறு வேண்டிக்கொண்டார்.. வசுமதிக்கு மனதில் ஒரு நிறைவும் அமைதியும் பரவுவதை உணர்ந்தாள்.. கண்கள் மூடி மனமுறுகி வேண்டி கொண்டாள் .. கதிரவனும் அப்படியே உணர்ந்தான்… காமாட்சியோ அங்கு வந்த தெரிந்தவர்களிடம் எல்லாம் வசுமதியை அறிமுகம் செய்து வைத்தார்.. அவர் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம் .. பெருமை .. அனைவரும் பிரகாரம் சுற்றி வந்தனர்..
கதிரவன் மற்றும் வசுமதிக்கு தனிமை தர எண்ணி காமாட்சி “ என்ன வசும்மா படி ஏறி வந்தது சோர்வாய் இருக்கா ?? கதிரவா போ போய் வசுமதியை கூட்டிகிட்டு அந்த பாறையில் உட்கார வை.. காற்று நன்றாய் வீசும் “ என்று அவளிடம் ஆரம்பித்து தன் மகனிடம் முடித்தார்..
இதை கண்ட சிவா “ அத்தை எனக்கு கூட வேற்கிறது நானும் போய் உட்காரவா “ என்று சிரித்தபடி கேட்டான்..
“ நீ தானே வா என்னுடன் வா “ என்று அவனை வேறு பக்கம் அழைத்து சென்று விட்டார்..
அனைவரும் அங்கு இருந்த சிறு சிறு பாறைகள் மீது அமர்ந்து இருந்தனர்.. சற்று தள்ளி அமர்ந்து இருந்த கதிரவனும் வசுமதியும் தங்கள் உலகில் மூழ்கி இருந்தனர்.. கற்று அழகாக வீசியது.. அங்கே இருந்து பார்க்க ஊர் மிக அழகாக தெரிந்தது.. வசுமதி அதையெல்லாம் ரசித்தபடி அமர்ந்து இருந்தாள்.. கதிரவன் அவளை ரசித்தபடி அமர்ந்து இருந்தான்.. நேரம் செல்வதே தெரியவில்லை.. சிவா தான் சுற்றி சுற்றி வந்து அனைவரையும் போட்டோ எடுத்து கொண்டு இருந்தான்..
இதை எல்லாம் பொறுக்க முடியாதா மல்லிகா “ அண்ணி கிளம்பலாமா?? நேரம் ஆகிறது வீட்டில் வேலை நிறைய இருக்கே “
“ ம்ம் சரி மல்லிகா கிளம்புவோம் “ காமாட்சி
அனைவரும் படி இறங்கி வந்தனர்… எதிரே ஒரு பெண் வந்தாள் பார்க்க லட்சணமாக இருந்தாள்.. வசுமதியின் வயது தான் இருக்கும்.. அவளது பார்வை எல்லாம் அழகேசன் மீதே படிந்து இருந்தது.. அவனும் அவளை கண்டு திடுக்கிட்டான்.. ஒரு நிமிடத்தில் அவன் முகத்தில் ஆயிரம் மாற்றங்கள்.. ஏக்கம் .. கோவம் .. நேசம் எல்லாம் …
அந்த பெண்ணின் கண்களிலும் கண்ணீர்.. அவளை யாரோ மீனாட்சி என்று அதட்டும் குரல் கேட்டது.. வேகமாக படி ஏறி சென்று விட்டாள் ..
அழகேசணும் தன் முகத்தை நொடி பொழுதில் மாற்றி கொண்டான்… ஆனால் இதை எல்லாம் கவனித்துவிட்டாள் வசுமதி..
அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் பூத்தன …
யார் இந்த பெண் மீனாட்சி ??? அவளுக்கும் அழகேசனுக்கும் என்ன சம்பந்தம் ?? இவர்கள் வாழ்வில் என்ன நடந்து இருக்கும் ????
உன் நினைவு – 15
மனதை காயம் செய்கிறான்..
கண்ணீர் வர செய்கிறான்..
பின்
காதலை உணர்த்துகிறான்…
“ யார் இந்த மீனாட்சி ? அப்பெண்ணிற்கும் அழகு அண்ணனுக்கும் என்ன சம்பந்தம் ? ” இந்த கேள்விகளே வசுமதியை குழம்பி கொண்டு இருந்தன..
“ அவளும் ஏன் அண்ணனை பார்த்த உடனே கண் கலங்கினாள் ?? அழகு அண்ணன் முகமும் ஒன்றும் தெளிவாய் இல்லையே. இரண்டு பேருக்கும் நடுவில் என்ன நடந்து இருக்கும் “ என்ற யோசனையே அவளது மனதை நிறப்பி விட்டது…
“ முதலின் அந்த பெண் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும். பின்ன இவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும் ” என்று முடிவு செய்து கொண்டாள்..
“ முடிவு என்னவோ செய்துவிட்டோம்.. ஆனால் யாரிடம் போய் கேட்பது.. கதிர் அத்தானிற்கு இது பற்றி தெரியுமா தெரியாதா என்று நமக்கு தெரியவில்லையே “ என்று அடுத்த குழம்பம் வந்தது..
“ எதுவானாலும் சரி .. என்ன பிரச்சனை என்று தெரிந்தே ஆக வேண்டும் “ என்று அழகேசனிடம் சென்றாள்..
“ அண்ணா “
“ என்ன மா வசுமதி?? வேலை எதுவும் இல்லையா ?? என்னை தேடி வந்து இருக்க.. இல்லை உன் அத்தான் எங்கே போய் இருக்கான் என்று தெரிய வேண்டுமா ?? “ என்று கிண்டலாக சிரித்தான்..
ஆனால் அவளோ அவனது முகத்தையே கூர்ந்து பார்த்தாள்.. அவனது முகத்திற்கும் அவன் சிரித்த சிரிப்பிற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை.. அவனது கண்களில் ஒரு சோகம் இருப்பதை கண்டாள்..
“என்ன வசும்மா என்ன வேண்டும் ? ”
“ ஹா !! எதுவும் இல்லை அண்ணா… நீங்க வெளிய போகவில்லையா?? வேலை எதுவும் இல்லையா ? ”
“வேலை எல்லாம் நிறைய இருக்கு வசுமதி.. ஆனால் என்னவோ போல் இருந்தது அதான் கதிரவனிடம் மதியத்திற்கு மேல் வருவதாய் சொல்லிவிட்டேன் “
“ ஓ !! சரி அண்ணா உடம்பு எதும் சரி இல்லையா ? “ என்று கேட்டாள் அக்கறையுடன்..
“ உடம்பு எல்லாம் நன்றாய் தான் இருக்கு மா “
“ அப்போ , வேறு எது நன்றாய் இல்லை அண்ணா ? ”
அவன் ஒரு திடுக்கிடலுடன்“ என்ன வசும்மா.. எனக்கென்ன நான் நன்றாய் தான் இருக்கிறேன் “ என்றான் ஒரு சமாளிக்கும் புன்னகையை வீசி..
“அண்ணா உங்கள் பசப்பு எல்லாம் என்னிடம் பலிக்காது “ என்று எண்ணிக்கொண்டே பேச்சை மாற்றினாள் “ ஏன் அண்ணா நேற்று எல்லாரும் கோவிலுக்கு போயிவிட்டு வந்தது மிகவும் நன்றாய் இருந்தது தானே ? ”
அவன் முகம் ஒரு நிமிடம் கருத்தது “ ஆம்… ஆமாம் வசும்மா … நன்றாய் இருந்தது”
“ ஹ்ம்ம் கோவிலுக்கு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் வந்து இருந்தாங்களா ? ”
அவன் பதற்றமாக “ இல்லையே .. இல்லையே வசுமதி .. அப்படி யாரும் வரவில்லையே.. “ என்றான். முகம் வேர்த்து விட்டது.. குரல் நடுங்கியது போல தோன்றியது வசுமதிக்கு..
இப்படியே சிறிது நேரம் வசுமதி அழகேசனிடம் நூல் விட்டு பார்த்தாள்..ஆனால் அவனோ எதற்கும் மசிவது போல இல்லை.. அவனிடம் பேசுவது கல்லில் நார் உரிப்பது போல இருந்தது…
“ என்ன இது இந்த அண்ணா இப்படி பிடிக்குடுக்காமல் இருந்தால் நான் எப்படி கண்டுபிடிப்பது “ என்று யோசித்தாள்..
அவள் இப்படி யோசிக்கும் பொழுதே அழகேசன் “ ஆகா வசுமதிக்கு எதுவும் தெரிந்து இருக்குமோ ?? கதிரவன் எதுவும் சொல்லி இருப்பானோ ?? இல்லை இல்லை அவன் சொல்லி இருக்க மாட்டான்.. பின்ன எப்படி, எப்படி தெரிந்து இருந்தாலும் பரவாயில்லை. நான் மட்டும் உளறிவிட கூடாது “ என்று முடிவு செய்தான்..
“ இது சரி வராது அண்ணனிடம் பேசி பலன் இல்லை வேறு வழி தான் யோசிக்க வேண்டும் “ என்று எண்ணியவள்
“ சரி அண்ணா நீங்க ரெஸ்ட் எடுங்க “ எனக்கூறி சென்று விட்டாள்..
“ யப்பாடி ஒருவழியா கிளம்பிவிட்டாள். இந்த வசுமதி என்னையவே இப்படி வளைத்து வளைத்து கேள்வி கேட்கிறதே கதிரவா உன் நிலைமை என்ன ஆகுமோ?? ”
ஆனால் வசுமதிக்கு இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளாமல் தலையே வெடித்து விடும் போல இருந்தது.. “ அத்தையிடம் கேட்கலாம் என்று நினைத்தால் அத்தைக்கும் இது பற்றி எதுவும் தெரிந்து இருக்காது போலவே.. தெரிந்து இருந்தால் இந்நேரம் நிச்சயம் இதற்கு எதாவது செய்து இருப்பார்கள் “ என்று எண்ணினாள்..
“ சரி நான் ஏன் வேறு யாரிடமும் சென்று கேட்க வேண்டும் கதிர் வரட்டும்.. அவரிடமே கேட்டுக்கொள்கிறேன் “ என்று தன் வேலையை பார்த்து கொண்டு இருந்தாள்..
இப்பொழுது எல்லாம் பொன்மலர் தானாகவே வந்து வசுமதியோடு நன்றாக பேசினாள்.. முதலில் வசுமதி சிறிது தயங்கினாலும் பின் அவளுமே மனதிற்குள் பாவம் என்று எண்ணி மலரிடம் நல்ல முறையில் பேசி வைத்தாள்..
பொன்மலர் “ என்ன வசுமதி என்ன யோசனை ?? என்ன அத்தானை பற்றியா ?? ” என்று கேட்டு மெல்ல சிரித்தாள்..
“ அதெல்லாம் இல்லை மலர் .. சும்மாதான் அப்படியே அம்மா அப்பா பற்றி நினைத்து கொண்டு இருந்தேன் … ” இது வசுமதி..
“ ஆமா… நீ வந்து இரண்டு மாசம் ஆக போகிறது. எப்படித்தான் நீ இப்படி உங்கள் குடும்பத்தை விட்டு இப்படி வந்து இருக்கையோ ? ”
“ ஏன் மலர் இதுவும் என் குடும்பம்தானே.. நான் அது வேறு இது வேறு என்று பிரித்து எதுவும் பார்க்கவில்லை.. சொல்ல போனால் அங்கு இருந்ததைவிட இங்கு தான் நிறைய கற்றுக்கொண்டேன் “ என்றாள் அவளும் மெல்ல சிரித்தபடி..
“ ஹி ஹி அப்படி நான் சொல்ல வரவில்லை வசுமதி அங்கு உனக்கு நிறைய ப்ரிண்ட்ஸ் இருப்பார்கள்.. அவர்களோடு எல்லாம் பேசாமல் எப்படித்தான் இருக்கையோ ? அதை தான் கேட்டேன் ”
“ ப்ரிண்ட்ஸ் நிறைய இருக்கார்கள் தான். ஆனால் பேசாமல் எல்லாம் இல்லை மலர் தினமும் போனில் பேசிட்டு தான் இருக்கேன்.. “
“ ஆமா கேட்க மறந்தே போனேன்.. நீயும் அத்தானும் போட்ட சவால் என்ன ஆனது ? ”
பொன்மலர் இப்படி கேட்ட பிறகு தான் வசுமதிக்கு நியாபகமே வந்தது.. “ அட ஆமாம் மலர் .. நீ சொன்ன பிறகு தான் நியாபகமே வருகிறது. மறந்தே போயிவிட்டேன்.. சவால் அப்படியே தான் இருக்கிறது “
“ எனக்கு தெரியும் வசுமதி நீ மறந்திடுவாய் என்று “
“ ஹா !! உனக்கு என்ன ஜோசியம் பார்க்க தெரியுமா?? அது எப்படி நான் மறப்பேன் என்று உனக்கு தெரியும் ? ”
“ எனக்கு ஜோசியம் பார்க்க எல்லாம் தெரியாது .. ஆனால் அத்தானை பற்றி நன்றாய் தெரியும் “ என்று கூறி வசுமதியின் முகத்தை கூர்ந்து பார்த்தாள் பொன்மலர்.. பொன்மலரை ஒரு புரியாத பார்வை பார்த்தாள் வசுமதி ..
“ என்ன வசுமதி என்னை ஏன் அப்படி பார்க்கிறாய் ? ”
“ இல்லை நீ சொல்லுவது எனக்கு புரியவில்லை அதான் … ”
“ ஹா ஹா… புரியவில்லையா சரி நான் தெளிவாகவே சொல்கிறேன்.. எனக்கு அத்தான் இப்படி தான் செய்வார் என்று முன்னமே தெரியும்.. அதான் உன் வாயாலேயே சவால் விட வைத்து கடைசியில் உன்னையவே மறக்க வைத்துவிட்டார். அத்தான் ஜெயிப்பதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார் “ என்றவள் என்ன வேண்டும் என்று சொல்லும் போது சற்று அழுத்தமாக கூறினாள்..
“ என்னவேண்டும் என்றாலும் என்றால் என்ன அர்த்தம் ? ”
“ அட வசுமதி .. உன்னை பார்க்கும்போது எல்லாம் மனம் கஷ்டமாய் தான் இருக்கு .. நான் என்ன செய்ய ? ” என்றாள் எதுவோ அவளுக்கு பரிதாப படும் குரலில்..
வசுமதியும் மனம் ஒருபுறம் “ அவள் கூறுவதை நம்பாதே “ என்றும் “ அவள் என்ன தான் கூறுகிறாள் என்று பார்க்கலாம் “ என்றும் மாற்றி மாற்றி அவளை குழப்பியது.. அந்த குழப்பத்தை பொன்மலர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டாள்…
ஆனால் வசுமதியோ தன் குழப்பத்தை வெளி காட்டாமல்..” என்ன மலரு என்ன சொல்கிறாய். என்னை பார்த்து ஏன் உனக்கு கஷ்டமாக இருக்கு ? ”
“ ஆமாம் வசுமதி கஷ்டம் தான்.. ஆனால் நான் சொல்வதை எல்லாம் நீ நம்புவாயா என்று தெரியவில்லையே.. இந்நேரம் அத்தான் என்னை பற்றி எங்கள் அம்மாவ பற்றி என்ன எல்லாம் சொல்லி இருக்காரோ தெரியவில்லையே “ என்றாள் கண்ணீர் விடாத குரலில்..
“ இது என்ன இவள் அருகில் இருந்து பார்த்தவள் போல பேசுகிறாளே .. கதிர் என்னிடம் பேசியது எல்லாம் இவளுக்கு எப்படி தெரியும் ..”
மேலும் பொன்மலரே பேசினாள் “ என்ன வசுமதி நீ யோப்பதை பார்த்தால் நான் சொல்வது தான் சரி என்கிற மாதிரி தெரிகிறது … சரி சரி எங்களை பற்றி இப்ப என்ன பேச்சு.. என் கவலை எல்லாம் உன்னை பற்றி தான் வசுமதி “
“ அட இவள் என்னை எண்ணி வருத்தப்படவும் கவலைப்படவும் அப்படி என்ன நான் மிக மோசமான நிலையில் இருக்கிறேன் “ என்று நினைத்தாள் வசுமதி.. தான் நினைத்ததை அவளிடம் கூறவும் செய்தாள்..
வசுமதி நன்றாக குழம்புவாள்.. அவளது மனதை கலைத்து விடலாம் என்று எண்ணி இருந்தாள் பொன்மலர் .. ஆனால் வசுமதியோ அவளிடம் நேரிடையாகவே கேட்கவும் சற்று அதிர்ந்து விட்டாள்..
பின் சமாளித்துக்கொண்டு வசுமதியின் கைகளை பிடித்து “ இங்கு பார் வசுமதி நான் பிறந்ததில் இருந்து இங்கு தான் இருக்கேன்.. அத்தானை சின்ன வயதில் இருந்து பார்த்து வளர்ந்தவள் நான்.. அவர் மேல் உயிராய் இருக்கேன் என்று இங்கு எல்லாருக்கும் தெரியும்.. அப்படி இருக்கிற என்னையவே அத்தான் ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை.. நீ வந்து இங்கு கொஞ்ச நாள் தான் ஆகிறது, உன்மேல் மட்டும் அவருக்கு எப்படி பாசம் நேசம் எல்லாம் இவ்வளோ வருமாம் “ என்று தன் பானத்தை நேராக வசுமதியின் மனதிலே பாய்த்தாள்…
இதை சற்றும் எதிர்பார்கவில்லை வசுமதி.. “ என்ன இவள் இப்படி வெளிபடையாக பேசுகிறாள்.. ஆனால் அத்தான் இவளை பற்றி வேறு அல்லவா சொன்னார். இல்லை இவள் என் மனதை குழப்புகிறாள் “
வசுமதி நேராக பொன்மலரை பார்த்து சிரித்தபடி “ உனக்கு தான் என் மீது எத்தனை அக்கறை மலர்.. உனக்கு இருக்கும் அன்பு அக்கறை கூடவா என் வாழ்கை மீது எனக்கு இல்லாமல் போய்விடும்.. தேங்க்ஸ் மலர்.. நான் போய் மிச்ச வேலையை பார்க்கிறேன் “ என்று கூறி சென்று விட்டாள்..
இத்தனை உறுதியாக பொன்மலரிடம் பேசியபின்னும் வசுமதியின் மனதை எதுவோ உறுத்தி கொண்டே இருந்தது..
ஆனால் பொன்மலரோ மனதில் குதியாட்டம் போட்டாள்.. “ போ போ வசுமதி இப்படி நீ ஒருநாள் இந்த வீட்டை விட்டும் அத்தானை விட்டும் நிச்சயம் போகத்தான் போகிறாய் “ என்று எண்ணினாள்..
வசுமதிக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது.. “ என்ன இத்தனை நாள் இல்லமல் இன்று வந்து இப்படி பேசுகிறாள்.. ஒருவேலை கதிர் இவளை விரும்பவில்லை என்ற ஆதங்கத்தில் பேசுகிறாளா ?? ஆனால் இதை பார்த்தால் ஆதங்கம் போலவும் இல்லையே … இதை பற்றி நான் நினைக்கவே கூடாது “ என்று முடிவு செய்தாள்..
எதை பற்றி சிந்திக்க கூடாது என்று முடிவு செய்கிறோமோ நம் மனம் அதை பற்றித்தான் மீண்டும் மீண்டும் எண்ணும் போல..
“ மலர் சொல்வதும் சரி தானே நான் இங்கு வந்து சிறிது நாட்கள் தான் ஆகிறது.. ஆனால் காதல் முதல் பார்வையில் கூட வந்துவிடுமாமே.. ஒரு வேலை ஒருவேலை சவாலில் ஜெயிப்பதற்காக கூட இப்படி காதல் என்று கூறினானோ ? .. இல்லை இருக்காது அப்படி இருந்தால் அன்று சிவா மற்றும் ராமிடம் கதிர் இத்தனை உறுதியாக பேசி இருக்கமாட்டானே ” என்று அவளது சிந்தனை பலவராக ஓடியது..
“ என் கதிரவனோடு சிறிது அளவு கூட பொய்யை இணைத்து பார்க்க முடியாது. நான் பார்த்தவரைக்கும் அவனிடம் எப்பொழுதுமே ஒரு நேர்மை இருக்கும்.. யாரிடமும் நேராக முகத்தை பார்த்து பேசுவான்.. எந்த ஒளிவு மறைவும் இருக்காது “ என்று தன் மனதை திட படுத்திக்கொண்டாள்..
எந்த வேலையும் அவளால் முழுமனதாக செய்ய முடியவில்லை .. ஏனோ இப்பொழுதே கதிரவனை நேரில் காண வேண்டும் போல தோன்றியது.. அவன் தோலில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது..
“ அத்தான் ப்ளீஸ் வீட்டிற்கு வாருங்களேன் “ என்று மானசீகமாக அவனை அழைத்தாள்..
தன் அறைக்கு சென்று கதிரவனுக்கு போன் செய்தாள்… மணி அடித்து கொண்டே இருந்தது “ அத்தான் ப்ளீஸ் ஒரு நிமிஷம் போன் எடுங்களேன் என்னிடம் பேசுங்கள் அத்தான் “ என்று மனதிற்குள் உரு போட்டாள் ..
அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, சிறிது நேரம் போனையே பார்த்த படி அமர்ந்து விட்டாள்.. ஏனோ மனதில் பாரம் கூடுவது போலவும் தலை வலிப்பது போலவும் உணர்ந்தாள். தனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம் என்று கூறி விட்டு படுத்து விட்டாள்..
கதிரவனுக்கோ அங்கு வேலை நெட்டி முறித்து.. ரைஸ்மில்லில் மிசின் பழுதடைந்து விட்டது அதை சரி செய்பவர் வருவதற்கு நேரம் ஆகி கொண்டே இருந்தது. அப்பொழுதுதான் வசுமதியும் போன் செய்தாள்.. அவன் பிற ஆட்களுடன் பேசியபடி சிறிது டென்சனாக வேலைகளை வேறு ஆட்களுக்கு பிரித்து கொடுத்து கொண்டு இருந்தான். அவளோடு பேசும் சூழ்நிலையும் அப்பொழுது அவனுக்கு இல்லை.. சரி சிறிது நேரம் கழித்து பேசி கொள்ளலாம் என்று எண்ணியவன் வேலை பளுவில் மறந்தே போனான்..
மனதில் இருந்த குழப்பம் உடலுக்கும் அலுப்பை தந்ததோ என்னவோ வசுமதி அடித்து போட்ட மாதிரி தூங்கிவிட்டாள்.. மாலை காமாட்சி தான் அவளை எழுப்பினார் . “ என்ன வசும்மா இப்படி ஒரு தூக்கம். உடம்புக்கு எதுவும் சரியில்லையா டா ?? ” என்று ஆதுரமாக கேட்டார்….
“ இல்லை அத்தை தலை வலிப்பது போல இருந்தது அதான் அப்படியே தூங்கிவிட்டேன் “
“சரி போ கொஞ்சம் பிரெஷ் ஆகிவிட்டு வா.. கீழ வந்து ஏதாவது சாப்பிடு என்ன ?? ”
“ ம்ம் சரி அத்தை “ என்று கூறி முகம் கழுவ சென்று விட்டாள்.. தலை வலி இல்லை ஆனால் மனதில் பழைய உற்சாகம் இல்லை.. ஏனோ ஒரு சோர்வு அவளிடம் குடிகொண்டது..
சாப்பிட்ட படியே வீட்டை ஒரு முறை பார்வையில் அளந்தாள்.. “ இன்னும் அவன் வரவில்லை போல” பின் அனைவரிடமும் எதுவோ பேசினாள்.. ஆனால் அவள் பேச்சில் ஒரு துள்ளல் இல்லை என்பதை அன்னபூரணி உணர்ந்து கொண்டார்..
“ என்ன கண்ணமா இன்னும் தலை வலியா ? ”
“இல்லை அம்மாச்சி..சாப்பிடாமல் தூங்கினேன் அதான் எப்படியோ இருக்கிறது போல “
ஆனால் வசுமதியின் ஒவ்வொரு அசைவையும் பொன்மலர் கவனித்து கொண்டே இருந்தாள்.. மனதிற்குள் அவளே அவளை பாராட்டி கொண்டாள்.. “ பரவாயில்லை மலரு நீ பேசினதை எல்லாம் இந்த வசுமதி உண்மை என்று நம்பிவிட்டால் போல. இனி அத்தான் வரவும் ஒரு சண்டை நிச்சயம் இருக்கும் “
வீட்டிற்குள்ளேயே இருப்பது எப்படியோ இருக்கவும் மேலே மாடிக்கு சென்றாள்.. வானம் கரிய மேகங்களை ஆடைகளாக சூடி அங்கு ங்கே நட்சத்திர போட்டு இட்டு நிலவு மகளை வரவேற்க காத்திருந்தது..
ஆனால் இங்கே வசுமதியோ கதிரவனை வரவேற்க காத்திருந்தாள்.. நட்சத்திரங்களை எல்லாம் பார்த்த படி அமர்ந்து இருந்தாள்.. திடீரென்று மனதில் ஒரு இதம் பரவுவதை உணர்ந்தாள்.. இத்தனை நேரம் இல்லாத ஒரு சுகம்… ஒரு மணம் அவளை வந்தடைந்தது.. ஏதோ ஒரு உந்துதளில் திரும்பி பார்த்தாள்.. அங்கே கதிரவன் அவளையே பார்த்தபடி நின்று இருந்தான்..
“ என்ன மதி வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது?”
ஆனால் வசுமதியோ “ கதிர் “ என்று கூறியபடி அவனிடம் வேகமாக வந்து அவனது மார்பில் சாய்ந்தாள்..
இத்தனை நாள் பழக்கத்தில் கதிரவன் ஒன்றை மட்டும் நன்கு புரிந்து வைத்திருந்தான்.. சாதரணமாக இருக்கும் சமையத்தில் அத்தான் என்று அழைப்பாள் வசுமதி.. ஆனால் சந்தோசமோ , வருத்தமோ , கோவமோ இப்படி அதிக உணர்சிகளின் வெளிப்பாடுகளில் மட்டும்தான் அவளிடம் இருந்து கதிர் என்ற அழைப்பு வரும்..
“ என்ன ஆயிற்று இவளுக்கு ? “ என்று எண்ணியபடியே “ என்ன டா என்ன செல்லம் ?” என வினவினான்.. அவள் பதில் ஏதும் கூறவில்லை.. மேலும் அவனை ஒன்றினாள்…
“ என்ன மதிம்மா என்ன ஆனது என் செல்லக்குட்டிக்கு “
அவள் அவனை நிமிர்ந்து கூட பார்கவில்லை “ ஏன் கதிர் நான் போன் பண்ணும் போது என்னிடம் பேசவில்லை? ”
“ பேச கூடாது என்று எதுவும் இல்லை மதி. எனக்கு அங்கு வேலை சரியாய் இருந்தது.. ரைச்மில்லில் வேறு கொஞ்சம் பிரச்சனை அதான்.. “ என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.. அதற்கும் அவளிடம் எந்த பதிலும் இல்லை..
“ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாள்?? கோவமாக இருப்பது போலவும் தெரியவில்லை.. ஆனாலும் எதுவோ சரியில்லையே.. மதியமும் சாப்பிடாமல் தூங்கிவிட்டாள் என்று அம்மா சொன்னாங்களே.. என்ன நடந்து இருக்கும் ??? “ என்று யோசித்தான்..
பின் மெல்ல அவனே ஆரம்பித்தான் ” என்ன மதிம்மா மதியம் ஏன் சாப்பிடவில்லை ? ” அவன் இப்பொழுது வந்து கொஞ்சி பேசவும் வசுமதிக்கு ஏனோ கோவம் வந்தது..
“ ஆமாமா மதியம் ஏன் சாப்பிடவில்லை என்று ராத்திரி வந்து கேட்டால் போதுமா “
“ ஹே என்னடி மதிகுட்டி நான் இப்போதான் வீட்டிற்கு வந்தேன்.. வந்த உடனே அம்மா சொன்னார்கள். அப்படியே உன்னை பார்க்க வந்துவிட்டேன்“
“ ஓ!!! அப்ப அத்தை சொன்னதினால் என்னை பார்க்க வந்திர்களா ?? அப்படிதானா ? ”
“ என்றும் இல்லாமல் ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்“ என்று யோசித்தவன் “ என்ன மதிம்மா இப்படியெல்லாம் சொல்கிறாய். இப்படியெல்லாம் பேச என் மதிக்கு தெரியாதே? ”
“ ஆமா அதனால் தான் நீங்க என்னை கொஞ்சம் கூட கண்டுகொள்வதே இல்லை “ என்று குற்ற பத்திரிக்கை வாசித்தாள்.
ஆனால் அவனுக்கோ வேலையில் மிகுதியால் வந்த அலுப்பும் , இவள் என்றும் இல்லா திருநாளாய் இன்று இப்படி நடந்துகொள்வதும் சேர்த்து எரிச்சலை தந்தது..
” ஏய் என்னடி.?? நான் என்ன உன்னை கண்டுக்காமல் போய்விட்டேன் ? ” என்று கேட்டான் சற்று கடுப்பாக..
“ ஆமாம் நேற்று கோவிலுக்கு போய்விட்டு ந்ததில் இருந்து என்னிடம் வந்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. இதோ இப்போ உங்களை பார்க்க முடிகிறது. காலையில் போகும் போது கூட ஒரு வார்த்தை சொல்வடது இல்லை.. எங்க போறீங்க.. எங்க இருக்கீங்க.. இதெல்லாம் எதுவும் சொல்வது இல்லை .. சில நேரம் சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வருவதும் இல்லை . போன் செய்தால் எடுப்பதும் இல்லை .. இப்படி இருந்தால் நான் என்னவென்று நினைக்க ? ”
அவன் பதில் எதுவும் கூறாமல் சற்று நேரம் அவளது முகத்தையே கூர்ந்து பார்த்தான்.. பின்
“ என்ன சந்தேகப்படுரியா ? ” என்றான் ஆழ்ந்த குரலில்.. வசுமதியோ இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று சிறிதும் நினைக்கவில்லை.. அதிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்..
“ என்ன டி பதில் சொல்லு .. ஏன் அமைதியாய் இருக்க.. நான் கேட்டால் பதில் சொல்ல வேண்டும் புரிகிறதா ? ” என்று அவளது தோள்களை பற்றினான்.. அவளுக்கு குரலே எழும்பவில்லை
“ அப்படி எல்லாம் எதுவும் இல்லை அத்தான் “
“ பின்ன வேறு எப்படி ? இப்போ நீ கேட்டதற்கு எல்லாம் என்ன அர்த்தம் ?? இது வரை நான் எங்கே போகிறேன் வருகிறேன் என்று அம்மாவிடம் கூட சொன்னது இல்லை.. ஒவ்வொரு இடத்திலும் வேலை நிறைய இருக்கும்.. சிலதுக்கு நான் போவேன் இல்லாவிட்டால் அப்பா போவார் இல்லை அழகு போவான்.. இதை எல்லாம் உன்னிடம் லைவ் காஸ்ட் பண்ணனுமோ ?? ” என்றான் குத்தலாக.. அவள் , அவன் கோவப்படுவான் என்று கொஞ்சம் கூட எதிரபார்கவில்லை..
“ இங்கு பாருங்கள் அத்தான் ஏன் இப்படி பேசுகிறிர்கள்?? நீங்க அத்தையிடம் சொல்லிவிட்டு போங்கள் சொல்லாமல் கூட போங்கள்.. எனக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை.. என்னிடம் நீங்கள் ஏன் எதுவும் சொல்வது இல்லை என்று தான் நான் கேட்கிறேன் ” என்றாள் அழுத்தமாக..
“நான் எதுவும் உங்களை சந்தேகப்படவில்லை கதிர் .. நீங்கள் சாப்பிட்டீர்களா என்று கூட என்னால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. உங்களிடம் பேசவேண்டும் என்று ஆசை படும் நேரத்தில் கூட பேச முடியவில்லை.. அதான் எனக்கு கஷ்டமாய் இருக்கு.. நான் உங்கள் மேல் இருக்க அக்கறையில் தான் கேட்டேன் மத்தபடி வேறு எதுவும் இல்லை அத்தான் “ என்று அழுதே விட்டாள்..
அவளது அழுகை அவனை கரைத்து விட்டது போல.. “ ச்சே நமக்காக தான் பார்க்கிறாள்.. நம்மீது உள்ள அக்கறையினால் வந்த கோவம் “ என்று எண்ணிக்கொண்டன்.. “ ஆனால் இந்த கோவத்திற்கு வேறு காரணமும் இருக்கும் போலையே “ என்று தோன்றியது..
“ சரி சரி அழுகாத மதி.. என் செல்ல குட்டில.. தங்கம்ல.. அழுகாத டி.. ப்ளீஸ் நான் ஏதோ ஒரு டென்ஷன், ஒரு கோவத்தை உன்னிடம் காட்டிவிட்டேன் டி.. அழுகாதே “ என்று சிறுகுழந்தையை சமாதானம் செய்வது போல அவளை சரி செய்தான்..
“ இப்படி கெஞ்சி கொஞ்சி பேசுபவன் ஏன் சவாலுக்காக நம்மை காதலிக்க போகிறான்.. அவன் கொண்டது உண்மையான நேசம்“ என்பதை உணர்ந்தவள் சும்மா இருந்து இருக்கலாம்..
“ சாரி அத்தான் “ என்றாள்..
“ ஏன் டா நான் எதுவும் உன்னை தப்பாக நினைக்கவில்லை மதி செல்லம்.. சாரியெல்லாம் எதற்கு? ”
“ இல்லை அத்தான் நான் தான் ஒரு நிமிஷம் உங்களை தப்பா நினைத்துவிட்டேன் ” என்றாள் விம்மியபடி.. “ ஆமா அத்தான் “ என்று ஆரம்பித்து அன்று காலை பொன்மலர் அவளிடம் பேசியது, இவள் மனம் குழம்பியது , என்று அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தாள்..
ஆனால் இதை அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த கதிரவனுக்கோ மீண்டும் கோவம் தலை தூக்கியது.. தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி தீர்த்து விட்டாள் வசுமதி..
ஆனால் அவன் ஒரு வார்த்தை கூட பதில் பேச வில்லை.. அவன் ஏதாவது பேசுவான் பேசுவான் என்று அவளும் அமைதியாக இருந்தாள். ஆனால் கதிரவனோ எதுவும் பேசாமல் அவளது முகத்தையே பார்த்தபடி இருந்தான்..
“ என்ன அத்தான் அமைதியாய் இருக்கிறீர்கள் ? ”
“ என்ன சொல்ல சொல்கிறாய் ? ”
“ ஏன் அத்தான் கோவமா ?? நான் என் மனதில் இருந்ததை எல்லாம் மறைக்காமல் சொன்னேன் அத்தான் அவ்வளோதான்.. எனக்கு உங்களிடம் இதெல்லாம் ஷேர் பண்ணிக்கணும் போல இருந்தது “
“ நீ எதையும் மறைக்காமல் என்னிடம் ஷேர் பண்ணது எல்லாம் சரிதான்.. ஆனால் ஒரு நிமிஷம் என்னை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்த்தாயா?? என் மனம் என்ன வருத்தப்படும் என்று யோசித்தாயா ? ” என்றான் ஒரு மாதிரி குரலில்..
அவனது குரலின் மாற்றத்தை உணர்ந்தவள் “ இல்லை அத்தான்… “ என்று எதோ கூற வந்தாள்.. அதற்குள் அவனே முந்திகொண்டான்..
“ பேசாதே …. உனக்கு நிஜமாவே என்னை புரியவிலையா ?? இல்லை இங்கு இருந்து அலுத்து போய்விட்டதா ? ”
“ அய்யோ அத்தான் … ”
“ உன்னை பேசாதே என்று சொன்னேன் .. நீ பேசும்போது நான் அமைதியாக கேட்டேன்தானே. இப்போ நான் பேசுவதை கேள் …”
அவள் அமைதியாக அவனது முகம் பார்த்து அவனது வார்த்தைகளுக்காக காத்திருந்தாள்.. “ கேவலம் … உப்பு பெறாத ஒரு சவாலுக்காகநீ என் காதலை சந்தேக பட்டுவிட்டாய் ? என்ன அமைதியாய் நிக்கிறாய் பதில் சொல்லு டி ” என்று அவளை பிடித்து உலுக்கினான்..
முதல் முறையாக அவனது கண்களில் அளவு கடந்த கோவத்தை பார்க்கிறாள்..
“ நான் ஒன்றும் சந்தேகப்படவில்லை.. அப்படி சந்தேக பட்டிருந்தால் நான் ஏன் இதை எல்லாம் உங்களிடம் சொல்ல போகிறேன் ? ” என்று சற்று நிமிர்வுடனே கேட்டாள்.. ஆனால் அவனுக்கோ அதெல்லாம் தலையில் ஏறவில்லை..
“ ஏய் என்ன டி.. திமிராக பதில் சொல்கிறாய் ? ” என்று அவளது தோள்களை இறுக பற்றி தான் புறம் திருப்பினான் ..
அவள் அதிர்ந்தே விட்டாள்.. “ஸ்ஸ்ஸ் வலிக்கிறது அத்தான் “ என்றாள்
“ எனக்கும் தான் டி வலிக்கிறது.. இங்கு “ என்று தான் நெஞ்சை தொட்டு காட்டினான்.. மேலும் அவளை பிடித்து உலுக்கினான்..
“ ஏன் அத்தான் இப்படி முரட்டு தனமாய் நடந்துகொள்கிறீர்கள்? ” என்றாள் கண்ணீர் வடித்தபடி..
“ ஏய் என்ன.. ஆமாம் டி .. நான் முரடன் தான்… கட்டான் தான் .. இப்ப என்ன அதற்கு ?? இஷ்டம் இருந்தால் இங்கு இரு இல்லை மிகவும் கஷ்டமாய் இருந்தால் போ போய் உங்கள் ஊர் சேர் “ என்று அவளது கைகளை உதறினான்..
இதை சற்றும் எதிரபாரதவள் தன் முகத்தை மூடி வெடித்து அழுதாள்… இதை அனைத்தையும் மாடியின் இன்னொரு பக்கம் இருக்கும் படியில் நின்று பொன்மலரும் மல்லிகாவும் பார்த்து புன்னகை பூத்தனர்..
பொன்மலர் “ என்ன மா.. எப்படி என் பிளான் ? ”
“ அடியே மலரு சும்மா சொல்ல கூடாது டி … நான் கூட என்னவோ என்று நினைத்தேன் ஆனால் கலக்கிட்ட போ “ என்று தன் மகளை பாராட்டினார் மல்லிகா..
“ சரி சரி அம்மா கீழ போகலாம்… யாரும் நம்மை பார்த்துவிட போறாங்க “ என்று பொன்மலர் கூறவும் தாயும் மகளும் கீழே சென்றனர்.. அவர்கள் கீழே சென்றதும் கதிரவன் முகத்தில் இப்பொழுது ஒரு வெற்றி புன்னகை தோன்றியது.. ஒரு சிறு இடைவெளியின் பின் வசுமதியை வேகமாக தான் பக்கம் இழுத்து அணைத்து கொஞ்ச தொடங்கினான்..
“ ஹேய் மதி .. மதி குட்டி ப்ளீஸ் டி .. அழாதே .. செல்லம் அழாத டி.. “ என்று கூறி முத்தமழை பொழிந்தான்..
இதை அவள் சிறிதும் எதிர்பாகவில்லை.. “ சிறிது நேரம் முன்பு வார்த்தைகளால் தணல் மழை பொழிந்தது என்ன இப்போ குளிர் நிலவென கொஞ்சுவது என்ன ? ” அவள் குழம்பி போனாள்.. ஆனாலும் அவளது அழுகை நிற்கவில்லை..
“ டி அழாத மதி “ என்று கூறி அவளது கண்ணீரை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தான். அவளுள் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு நடுக்கம் ஓடியது.. அதை இருவருமே உணர்ந்தனர்.. அப்படியே வசுமதியை தன் மார்பில் சாய்த்துகொண்டான்… இப்பொழுதும் அவள் கண்களில் கண்ணீர் வற்றவில்லை..
“ என்ன வார்த்தை கூறி விட்டான்.. இஷ்டம் இருந்தால் இரு .. இல்லை என்றால் போ .. ஆக நான் இருப்பதும் இல்லாமல் போவதும் இவனுக்கு ஒன்று தான் .. எந்த பாதிப்பும் இல்லை “ என்று எண்ணி மறுகினால்..
ஆனால் இதற்கெல்லாம் காரனமானவனோ அவளை நிமிர்த்தி முத்தமிட தொடங்கினான் மீண்டும்.. ஆனால் அவளால் பொறுக்க முடியவில்லை.. அவனை ஒரு தள்ளு பின்னே தள்ளி விட்டாள்..
“ ஹே என்ன டி மதி செல்லம் பிடிக்கவில்லையா ? ” என்று மீண்டும் அவளிடம் வந்தான்..
அவள் அவனை முறைத்தபடி நின்று இருந்தாள்.. “ பேசுவது எல்லாம் பேசி வார்த்தைகளால் என்னை காயப்படுத்திவிட்டு இப்போ என்ன கொஞ்சல் ? ”என்பது போல பார்த்தாள்..
அவளது கண்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவளை இழுத்துக்கொண்டு மாடியின் ஓரமாக நிறுத்தி கீழே காட்டினான்.. கீழே பொன்மலரும் மல்லிகாவும் சிரித்தபடி சென்று கொண்டு இருந்தனர்..