தேவா மருந்துகளின் தயவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் கையைப் பிடித்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கலையரசி. மலர் அழைக்கும்போது பல்லவியின் அருகில் தான் அமர்ந்திருந்தார் கலையரசி. தேவாவின் நிலையைக் கேட்டபின்பு அவரால் வீட்டில் இருக்க முடியாமல் பல்லவியுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார் அவர்.
பல்லவி தேவ்வுக்கும் தகவல் கொடுத்திருக்க, இவர்களுக்கு முன்பே மருத்துவமனையை அடைந்திருந்தான் அவன். அவனுக்கு வேறெதையும்விட தங்கையின் உடல்நிலைபெரிதாக தெரிய, அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் மலர்விழியின் அருகில் தான் சென்று நின்றான்.
“தேவாவுக்கு என்னாச்சு?” என்று அவளை அதட்டலாக தேவ் விசாரிக்க, பதில் கூறாமல் அழுது கொண்டிருந்தாள் மலர்.
“பதில் சொல்லு மலர். ரொம்ப பயமா இருக்குடா” என்ற தேவ் கண்களிலும் கண்ணீர்வழிய,
“எனக்கும் தெரியாதுண்ணா” என்றவள் தனக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் கூறிவிட்டாள் அவனிடம்.
“நீயும் அவ பேச்சைக் கேட்டு என்கிட்டே சொல்லாம மறைச்சுட்டியே மலர். நியாயமா இது. எங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது” என்றவன் பேச முடியாமல் கலங்கி அமர்ந்துவிட, அப்போதுதான் கலையரசியும், பல்லவியும் வந்து சேர்ந்திருந்தனர்.
கலையரசி தேவ்வை கவனிக்காமல் தேவா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்துவிட, தங்கையைப் பார்க்கும் துணிவில்லாமல் தான் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான் அண்ணன்.
கலையரசிக்கும் தேவாவைக் கண்ட நிமிடம், கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் பெருகிட, தேவாவின் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார் அவர்.
அவருக்கு தேவாவைத் தவிர்த்து வேறெதுவும் நினைவில் இல்லை. அவள் கண்விழித்து ஏதாவது பேசினால் தான் அவரது மனம் சற்று அமைதியாகும் என்று தோன்றவும், அசையாமல் அமர்ந்துவிட்டார் அவர்.
ஆனால், தேவ் சேஷா சம்பந்தபட்ட யாரையும் விடுவதாக இல்லையே.
முதல் சில நிமிடங்கள் அழுது, பின் ஒருவழியாக தன்னை எப்படியோ தேற்றிக் கொண்டவன் செய்த முதல் வேலை சேஷனை அங்கிருந்து வெளியேறச் சொன்னதுதான்.
சேஷன் ஏற்கனவே குற்றவுணர்வில் இருந்ததால், பெரிதாக அவனிடம் மல்லுக்கு எல்லாம் நிற்கவில்லை. அவன் கண்ணிலிருந்து மறைந்து மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் சென்று அமர்ந்து கொண்டான். ஆனால், தேவ்வுக்கு அத்துடன் விட மனதில்லை. தங்கை அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவன், அங்கு அமர்ந்திருந்த கலையரசியிடம், “நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புங்க அத்தை” என்றுவிட, அவனை அடிபட்டவராக பார்த்தார் கலையரசி.
“தேவ்” என்று அவர் எழுந்துகொள்ள, “நீங்க எதுவும் பேசவேண்டாம். தேவ் சம்பந்தப்பட்ட யாரும் என் தங்கையை நெருங்க வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன். அவளுக்கு உங்களோட உறவு வேண்டாம். நீங்க வளர்த்ததுக்கு உங்க மகனையும், உங்க சொத்துக்களையும் காப்பாத்தி கொடுத்திருக்காளே… அதோட விட்டுடுங்க அவளை” என்றவன் கலையரசியை கையெடுத்துக் கும்பிட்டுவிட, மனதளவில் பெரிதாக காயப்பட்டு போனார் கலையரசி.
பல்லவி, “தேவ்” என்று கணவனை நெருங்க, “எதுவும் பேசாத லவி” என்று அவளையும் அடக்கிவிட்டான் சத்யதேவ். அவள் செய்வதறியாமல் நிற்க, கலங்கிய கண்களை மறைக்க முயன்றபடியே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார் கலையரசி.
“எங்கே செல்வது?” என்று தெரியாமல் தவித்தவராக, அவர் மருத்துவமனையை விட்டு வெளியேற முற்பட, நிவாஸ் பார்த்துவிட்டான் அவரை.
“எங்கம்மா போறீங்க?” என்று அவன் அருகில் வந்து நிற்க, என்ன சொல்வது என்றுகூட புரியாமல் அழுகையுடன் நின்றார் கலையரசி.
நிவாஸ் சற்றும் தயங்காமல் அவரைக் கைபிடித்து தன்னுடன் அழைத்து சென்று, சேஷாவிடம் நிறுத்தினான். சேஷா அன்னையின் அழுகையில் பதறி எழுந்துவிட, மகனைக் காணவும் இன்னும் அதிகமாக அழுகை வந்தது கலையரசிக்கு.
“அம்மா” என்று மகன் நெருங்க, சேஷனின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு கண்ணீர் வடித்தார் கலையரசி.
“என்னம்மா தேவாவுக்கு எதுவும் ஆகாதும்மா.” என்று அவன் அன்னையை ஆறுதல்படுத்த, கலையரசியிடம் பதில் இல்லை.
“நாம வீட்டுக்கு போவோம் சேஷா” என்று அவர் அழுகையுடன் உரைக்க,
“அவளை இப்படி விட்டுட்டு எப்படிம்மா?” என்று தயங்கினான் சேஷன்.
“தேவ் அவளை நல்லாவே பார்த்துப்பான் சேஷா. நாம போகலாம்” என்றவர் கையோடு மகனை அழைத்துச் சென்றுவிட்டார்.
கலையரசி எப்போதும் இப்படி பிடிவாதம் பிடிப்பவர் இல்லை என்பதால், அமைதியாக அவருடன் சென்றான் சேஷன். ஆனால், மனம் மொத்தமும் தேவா மட்டுமே நிறைந்திருக்க, அவ்வபோது அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கு அழைத்து அவளது நலத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.
கலையரசி வீடு வந்த நிமிடம் தொட்டு பூஜையறையே கதியென கிடக்க, மகன் சேனாவின் அறையைவிட்டு வெளியே வரவில்லை.
அங்கு மருத்துவமனையில் இருந்தவள் அன்று மாலை வேளையில் கண்விழித்து எழ, முதலில் கண்டது கண்ணீர் சுமந்திருந்த தனது அண்ணனின் முகம் தான்.
“ஒன்னும் இல்ல தேவ்” என்று அந்த நிலையிலும் அவள் அண்ணனை ஆறுதல்படுத்த, தங்கையின் கைமீது முகத்தை பதித்து கட்டிலில் தலைசாய்த்துக் கொண்டான் தேவ்.
அவன் கண்ணீர் தேவாவின் கையை ஈரமாக்க, “அழாதடா அண்ணா” என்றாள் தேவா.
“என்கிட்டே ஏன் மறைச்ச தேவா? நான் யார் உனக்கு?” என்று கோபத்துடன் நிமிர்ந்தான் தேவ்.
“நீ பயப்படற அளவுக்கு எதுவும் இல்ல தேவ். பிபி கொஞ்சம் அதிகமா இருக்கு. மார்னிங் டென்ஷன்ல மயங்கிட்டேன் போல.” என்று சாதாரணமாக கூறியவளை அழுத்தமாகப் பார்த்திருந்தான் தேவ்.
“முன்னாடியே தெரியும்தான். ஆனா, பிபி எல்லாம் ஒரு பிரச்சனையா… இதை உன்கிட்ட சொல்லி உன்னையும் டென்ஷன் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்.”
“உனக்கு என்ன வயசாகுது தேவா. இந்த வயசுல பிபி அதுவும் உன்னை மறந்து மயங்கி விழுற அளவுக்கு. உனக்கு தேவையா இதெல்லாம்?” என்று கத்தினான் தேவ்.
“எனக்கென்ன ஆசையா. அதுவா வந்திருக்கு… சும்மா கத்தாத தேவ். தலை வலிக்குது” என்று தங்கை முகம் சுருக்கிட, அதற்குமேல் பேசுவானா தேவ்.
அவன் அமைதியாகவும், “அத்தம்மா எங்கே?” என்றாள் பல்லவியிடம்.
“இவரைக் கேளு. எல்லாரையும் துரத்தியாச்சு. உன் அத்தம்மா, அவங்க பையன், மலர் எல்லாரையும் பேசியே துரத்தி விட்டுட்டார் தேவா. உன் அத்தம்மா பாவம். அழுதுட்டே போனாங்க” என்று பல்லவி போட்டுக் கொடுத்துவிட, இப்போது தேவா அண்ணனை முறைத்தாள்.
“உனக்கு அப்படியென்ன அவசரம்” என்று தேவ் மனைவியைத் திட்ட,
“அவளை ஏன் திட்ற” என்று அதட்டினாள் சேனா.
“உனக்கு அவங்க யாரும் வேண்டாம் தேவா. அப்பாவுக்கு கால் பண்ணிட்டேன். அவரும் கிளம்பிட்டார். நாம அமெரிக்கா கிளம்புவோம். உன் அத்தம்மாவை அவங்க மகன் பார்க்கட்டும்.” என்றுவிட்டான் தேவ்.
“உன்னை யாரு அவர்கிட்ட சொல்ல சொன்னது?அறிவிருக்கா தேவ் உனக்கு” என்று தேவா கடிந்து கொள்ள,
“என்னால உன்னை இப்படியே விட்டுட்டு வேடிக்கை பார்க்க முடியாது தேவா.” என்றான் தேவ்.
தேவசேனா சோர்ந்து போனவளாக கண்களை மூடிக்கொள்ள, “நீ ரெஸ்ட் எடு. நான் கிளம்ப தேவையான ஏற்பாடுகளை பண்றேன்” என்று தேவ் எழுந்து நிற்க, தேவா வாய்திறக்கவில்லை.
அப்போது மட்டுமல்லாமல் அதன்பின் மருத்துவமனையில் இருந்த மொத்த நேரமும் மௌனம் சாதித்தாள் தேவசேனா.
“அவள் என்ன நினைக்கிறாள்” என்பதே புரியாமல் சத்யதேவ் மண்டையை உடைத்துக்கொள்ள, அவனைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அண்ணன் மகனுடன் பொழுதைக் கழித்தாள் தேவா.
அடுத்தநாள் காலையில் தேவ்வுக்கு கொஞ்சமும் குறையாமல், முகம் முழுவதும் பயத்தை சுமந்துகொண்டு அவள் தந்தை பிரபாகரன் வந்து நிற்க, “நல்லா இருக்கேன்பா.” என்ற மகளை மென்மையாக அணைத்துக் கொண்டார் அவர்.
மகளின் கையை இறுக்கமாக பற்றியபடி அமர்ந்து கொண்டு, “என்னோட வந்திடேன் பாப்பா… அப்பாவுக்கு உங்களை விட்டா யாருமே இல்ல தேவா. நீயும் இங்கே சந்தோஷமா இல்லையே. அப்பாவோட வந்திடேன்மா” என்று கெஞ்சலாக அழைத்தார் மனிதர்.
பேசும்போதே அவர் கண்கள் லேசாக கலங்கிவிட, “அவளை ஏன்ப்பா கேட்கறீங்க. அவ நம்மோட வருவா” என்று தேவ் பிடிவாதமாக கூற, அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை தேவா.
“நீ இரு தேவ். நான் தேவாகிட்டே பேசறேன்” என்ற பிரபாகரன், “அப்பாவோட வந்திடு கண்ணம்மா” என்று மீண்டும் அழைக்க,
“யோசிக்கனும்பா… எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்று அப்போதைக்கு முடித்துக் கொண்டாள் மகள்.
அவளுக்கு சேஷனைக் குறித்து கொஞ்சம் யோசனையாக இருந்தது. நிச்சயம் தன்னை இங்கிருந்து செல்ல விடமாட்டான் என்று மனம் நம்பியது. அதுவும் தேவ்வின் வார்த்தைக்காக அவன் தன்னை பார்க்க வராமல் இருப்பது அவன் குணம் இல்லையே என்று அதுவேறு.
‘என்ன செய்ய காத்திருக்கிறானோ?’ என்று யோசனையாகவே அமர்ந்திருந்தாள் சேனா. என்னவோ, நிச்சயம் வருவான் என்று மனம் எதிர்பார்க்க, இந்த முறையும் வழக்கம்போல் அவளுக்கு ஏமாற்றத்தை தான் பரிசாக அளித்தான் ஆதிசேஷன்.
அடுத்த இரண்டு நாட்களில் அவள் வீடு திரும்பிவிட, கலையரசியோ, அவரது மகனோ ஒருமுறைக்கூட வந்து பார்க்கவில்லை அவளை. பிரபாகரன் வேறு விடாமல் அவ்வபோது மகளை கரைத்துக் கொண்டிருக்க, என்ன செய்வதென புரியாமல் குழம்பி நின்றாள் தேவசேனா.
அடுத்த பத்து நாட்களும் இதே நிலை தொடர, இந்த முறை சேஷனின் அலட்சியத்தை ஏற்பதாக இல்லை அவள். அன்று அப்படி உருகிவிட்டு, தனது உடல்நிலை தெரிந்தும் அவன் தன்னை எட்டியும் பாராமல் இருப்பது வேதனைப்படுத்த, “போடா” என்று தானும் அலட்சியமாக கூறிக்கொண்டு தனது தந்தையுடன் புறப்பட தயாராகிவிட்டாள் அவள்.
மகள் வருகிறேன் என்ற நொடி வெகு வேகமாக வேலை செய்ய தொடங்கினார் பிரபாகரன். அவள் அமெரிக்கா கிளம்புவதற்கான அத்தனை வேலைகளையும் அவரே கவனித்துக் கொள்ள, இங்கே இருக்கும் தொழில்களை விடுவதாக இல்லை தேவசேனா.
“நீ இங்கேயே இரு. பிசினெஸ் எல்லாம் மொத்தமா மூடிட்டு கிளம்ப முடியாது. உனக்கு நான் இங்கே இருக்கக்கூடாது அவ்வளவுதானே. நான் போறேன். என்னை பார்க்கணுமா, நீ வந்து பாரு. போதும். இந்த மொத்தமா மூடிட்டு போற வேலையெல்லாம் வேண்டாம்” என்று உறுதியாக அவள் மறுத்துவிட, அவள் அதுவரை ஒப்புக்கொண்டதே பெரிதென்பதால் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டான் சத்யதேவ்.
தேவசேனா மருத்துவமனையில் இருந்து திரும்பியதில் இருந்து இன்னும் மலர்விழி அவள் கண்ணில்படவில்லை என்பதும் யோசனையாகவே இருக்க, அன்று மாலை அவளை சந்திக்க நினைத்தாள் தேவசேனா. அவளிடம் எதுவும் கூறாமல் தேவசேனா நேரே அவள் வீட்டிற்கு சென்று நிற்க, தேவாவை கண்ட நிமிடம் ஓடிவந்து அணைத்து கொண்டாள் மலர்.
“எப்படிடி இருக்க. உன்னை பார்க்கவே விடல தேவ் அண்ணா” என்று மலர் குறை படிக்க,
“அவன் சொன்னா, நீ வராம இருப்பியா”
“நானும் உன் பிரச்சனையை அவர்கிட்ட சொல்லாம மறைச்சது தப்பு தானே.” என்று மலர் முகம் சுருங்க, இதற்குள் வீட்டிற்குள் வந்து அமர்ந்திருந்தனர் இருவரும்.
“நான் சொல்லித்தானே செய்த மலர். அவன் சரியாகிடுவான் விடு.” என, ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டாள் மலர்.
“நான் அமெரிக்கா கிளம்புறேன். இன்னும் ரெண்டு நாள் தான் சென்னையில இருப்பேன்.” என்று தேவா இயல்பாக கூற, ஏனோ சம்பந்தமில்லாமல் சேஷனின் கண்ணீர் ஞாபகம் வந்தது மலர்விழிக்கு.
அவள் பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்க, “என்னாச்சு மலர்” என்று தேவா கேட்க,
“ஒன்னுமில்ல தேவா… எப்போ திரும்பி வருவ?” என்று மலர் சாதாரணமாகவே காட்டிக்கொள்ள,
“அதெல்லாம் இன்னும் முடிவு பண்ணல. இப்போதைக்கு போறேன்.” என்றாள் தேவா.
மலர் எதுவும் கூறாமல் தோழியை அணைத்துக்கொள்ள, தேவாவும் மலர்விழியை கட்டிக்கொண்டாள்.
“நீ ஆபிஸ் போகலையா?” என்று தேவா பேச்சினூடே கேட்க,
“இன்னைக்கு லீவ் சொல்லி இருக்கேன் தேவா. தலைவலி அதிகமா இருந்தது” என்று சமாளித்தாள் மலர்விழி.
“ஓகேடா பார்த்துக்கோ. என்ன விஷயமா இருந்தாலும் எனக்கு ஒரு கால் பண்ணிடு. எதையாவது நினைச்சு பயந்துட்டே இருக்காத.”ஏ ன்று தோழிக்கு அறிவுறுத்தியவள், “சீக்கிரம் நிவாஸை கல்யாணம் பண்ணிக்கோ. அவன் நல்லவன்.” என்றிட, அமைதியாக சிரித்து வைத்தாள் தோழி.
“உனக்கு அங்கே வேலை செய்ய பிடிக்கலைன்னா, அண்ணாகிட்ட சொல்லு. அவன் கம்பெனிக்கே போ.” என்றும் கூறியவள் வெகுநேரம் கழித்தே மலர்விழியின் வீட்டில் இருந்து கிளம்பினாள்.